![]() |
| எழுத்தாளர் கல்கி |
தமிழின் காத்திரமான படைப்பாளிகள் பலரின் வாழ்க்கையில் நிச்சயம் கல்கியின் எழுத்துகளுக்கும் ஓரிடமுண்டு. அவற்றினூடு வளர்ந்தவர்கள் அவர்கள்.
கல்கியின் தெளிந்த ஆற்றொழுக்கு நடையும், கலந்திருக்கும் நகைச்சுவையும் நெஞ்சை வருடிச் செல்பவை. எங்களுக்கு முந்திய தலைமுறையைக் கவர்ந்த நாவல் எங்களைக் கவர்ந்தது. அதற்குப் பின் அடுத்தடுத்த தலைமுறையினரையும் கவர்ந்தது. என் குழந்தைகள் கூட மிகவும் விரும்பிப்பார்த்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 & பொன்னியின் செல்வன் 2.
கல்கியின் பெயருக்குக் காரணம் என்ன என்பதை அப்பா அப்பொழுதே கூறியிருந்தார். தன் மனைவி கல்யாணியின் முதலிரு எழுத்துகளையும், தன் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து கல்கி என்று தன் புனைபெயரை வைத்தார் என்று அவர் கூறியது இன்னும் நினைவிலுண்டு, ஆனால் அப்படியொரு கதை அக்காலத்து இலக்கியச் சூழலில் நிலவியது. அதில் உண்மை இல்லை என்பதை இப்போது அறிகின்றேன். கல்கி அவர்கள் தமிழ் அறிஞர் வி.கல்யாணசுந்தரத்தின் பெயரின் முதலிரு எழுத்துகளையும் தன் பெயரின் முதல் எழுத்துடன் சேர்த்து 'கல்கி' என்ற புனைபெயரை வைத்ததாக தற்போது அறிகின்றேன்.
கல்கி இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகச் சிறைவாசம் அனுபவித்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் பிள்ளைகளும் எழுத்தாளர்கள்தாம். புதல்வர் கி.ராஜேந்திரனின் தொடர்கதைகளில் 'போர்முனை' எனக்கு மிகவும் பிடித்த நாவல். அது வெளியானபோது நான் வாசிக்கத் தொடங்கியிருக்கவில்லை. பின்னர் வாசிக்கத் தொடங்கியதும் , 'பைண்டு' செய்யப்பட்ட வடிவில் வாசிக்கக் கிடைத்தது. புதல்வி ஆனந்தியின் 'மலைச்சாரல் மாதவி' நாவலையும் அவ்வித வடிவில் வாசித்திருக்கின்றேன். பேத்தி சீதா ரவியும் எழுத்தாளர்தான்.
கல்கியின் தியாகபூமி, அலைஓசை , சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு புகழ்பெற்ற பிற படைப்புகள். அவரது இறுதி நாவல் அமரதாரா. அது முடிவதற்குள் கல்கி மறைந்து விட்டதால், நாவலைப் புதல்வி ஆனந்தி தொடர்ந்து எழுதி முடித்து வைத்தார். அரும்புகள் என்னும் நாவல் அவர் மறைவுக்குப் பின்னர் ,பல வருடங்கள் கழித்து கண்டெடுக்கப்பட்டு, கல்கியில் தொடராக வெளிவந்ததாக நினைவு. நான் வாசிக்கவில்லை.
தியாகபூமி நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டபோதே , ஆனந்த விகடனில் திரைப்படக் காட்சிகளுடன் தொடராக வெளிவந்ததாக அப்பா கூறுவார். அதனை அக்காலகட்ட வாசகர்கள் மிகவும் விரும்பி வாசித்ததாகவும் , பெண்கள் பிரச்சனையை அக்காலத்திலேயே துணிந்து தன் நாவலில் கையாண்டார் அப்பாவின் கூற்றுகளிலிருந்து முதன் முதலில் அறிந்து கொண்டேன். அதனை ஆனந்த விகடனை வெளியிட்ட எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி ஸ்டுடியோவே தயாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்கியின் சமூக நாவல்களின் அடிநாதமாக இந்திய தேசிய விடுதலைப்போராட்டம், காந்தியக் கருத்துகள் ஆகியவை இருக்கும். இந்திய தேசிய விடுதலைச் சூழல் தனி மனிதர்களின் வாழ்க்கையை எவ்விதமெல்லாம் பாதித்தது என்பதைக் கல்கியின் சமூக நாவல்கள் எடுத்துக் காட்டினால், அவரது வரலாற்று நாவல்கள் பண்டைத் தமிழரின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துரைத்தன எனலாம்.
'அலையோசை' நாவலே முதன் முதலில் இந்திய அரசின் தமிழுக்கான சாகித்திய விருது பெற்ற முதல் நாவல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்கிக்குப் பின் உருவான தமிழ்ப் புனைவுகளில் குறிப்பாக வரலாற்று நாவல்கள், சமூக நாவல்களில் அவரது தாக்கம் பெரிதாக இருந்தது என்பதைத் திறனாய்வாளர்கள் மறுக்க மாட்டார்கள்.

No comments:
Post a Comment