கவிஞர் கந்தவனம் அவர்கள் 10.2.1995 வெளியான 'தாயகம்' சஞ்சிகையில் 'ஹைக்கூக் கவிதைகள்' என்றொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். முனைவர் நிர்மலா சுரேஷ் முனைவர் பட்டத்திற்காக , சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு 'ஹைக்கூக் கவிதைகள்' என்னும் பொருளில் அளித்த ஆய்வுக்கட்டுரையைத் தழுவி, கட்டுரையின் பெரும்பகுதி எழுதப்பட்டதாகக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கின்றார் கவிஞர்.)
ஹைக்கூக் கவிதைகள் பற்றிக் கவிஞர் கூறியுள்ள முக்கிய கருத்துகள் வருமாறு:
| கவிஞர் கந்தவனம் |
அளவால் ஹைக்கூ 5 - 7 - 5 அசைகளைக் கொண்ட மூன்று வரிக் கவிதை. ஆயின் அதன் பொருள் தோண்டத் தோண்டத் தூண்டும் தங்கச் சுரங்கத்தைப் போன்றது... இவ்வித விளக்கப்பாட்டுக்குக் ஹைக்கூக் கவிதையை வளர்த்தெடுத்த பெருமை பாஷோ, பூசன் , ஐசா, ஷிகி போன்ற கவிஞர்களுக்குரியது.
ஹைக்கு ஏறத்தாழ நானூறு ஆண்டுகால வரலாறு கொண்டது. மாரிடாகே (1473 - 1459) , சோகன் (1465 - 1553) ஆகிய இருவரையும் ஹைக்கூவின் முன்னோடிகள் என் ஆய்வாளர் கருதுவர். பாஷோவே (1644 - 1694) மகத்தான ஹைக்கூ ஆசிரியர் என்று போற்றப்படுகின்றார்.
'கவிதை ஆழமான உணர்வுகளோடு , இதயத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும்' என்ற கருத்துடைய பாஷோவின் கவிதைகளில் இயற்கை விளையாடும், நகைச்சுவை இழையோடும், தத்துவமும் மர்மச் சுழியோடும்.
தமிழ் மக்களுக்குக் ஹைக்கூவை அறிமுகம் செய்து வைத்த பெருமை பாரதியாருக்கு உரியது. எழுபது வருடங்களுக்கு முன்னரே சுதேசமித்திரன் பத்திரிகையில் ஹைக்கூ வடிவம் பற்றி அவர் கட்டுரை எழுதியிருக்கின்றார்.
ஹைக்கூவைப் புதுக்கவிதை என்று தமிழ்நாட்டில் பலர் கருதுகின்றனர். இக்கருத்துத் தவறானதாகும். புதுக்கவிதை முளை விடத்தொடங்குவதற்கு முன்னரே ஹைக்கூ யப்பானில் பூக்கத்தொடங்கிவிட்டது. தமிழில் புதுக்கவிதை வளரத்தொடங்கியதன்பிம் ஹைக்கூ பாடப்பட்டதால் அதுவும் புதுக்கவிதை எனப் பலர் கருத நேர்ந்தது. புதுக்கவிதையின் சில உத்திகள் ஹைக்கூவில் இருப்பது உண்மை. ஆனால் , ஹைக்கூவின் பார்வை, அனுபவம், அணுகுமுறை, பின்புலம் , உத்திகள் என்பன தனித்துவம் வாய்ந்தவை. அது வெறும் உணர்ச்சிப்படைப்பன்று. எந்தக் கொள்கைக்கும் கட்டுப்பட்டதுமன்று."
இக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் பாஷோவின் இரு ஹைக்கூக் கவிதைகளைக் குறிப்பிட்டிருக்கின்றார். அவற்றிலொன்று பற்றிய அவரது விளக்கம்:
"விடியல் ஒளி
வெள்ளி நிறச் சிறுமீன்
ஓர் அங்குல வெண்மை.
இந்தக் கவிதையின் தலைப்பு 'நிறத்தின் அடர்த்தி' என்பது. அதிகாலையில் கடற்கரையில் நிற்கின்றார் கவிஞர். வெள்ளைச் சிறுமீன் ஒன்று மேலெழுந்து விழுகின்றது. கணப்பொழுதில் நடந்த இந்நிகழ்ச்சியைக் கவிஞர் படம் பிடிக்கின்றார். செநிறப் பின்னணியில் மீனின் பாய்ச்சல் மின்னல் கீற்றைப் போல் பளிச்சிடுகின்றது. 'ஓர் அங்குல வெண்மை' எனக்கூறி வெண்மையின் அடர்த்தியை பிரகாசத்தை வெளிப்படுத்துகின்றார்."
ஒரு கவிதையை வாசிப்பவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து கொள்வது இயல்பு. கவிதையின் சிறப்பும் அதுதான். நான் இக்கவிதையை புரிந்து கொண்டது இவ்விதம்தான்:
அதிகாலையில் கதிரவன் இன்னும் தலைகாட்டியிருக்காத பொழுதில் மெல்லிய கருக்கிருளில் உலகம் மூழ்கிக்கிடக்கும். அச்சமயத்தில் அடிவானில் வெள்ளி முளைத்திருக்கும். தொலைவில் தெரியும் வெள்ளி நிற அந்த விண்மீன் , ஒரு சிறு மீனைப்போல் கவிஞருக்குத் தோன்றுகின்றது. விடியல் ஒளியின் , விடியல் நிறத்தின் அடர்த்தி அதுதான்.
இவ்விதம் நான் புரிந்து கொள்கின்றேன். தமிழனாக நான் இவ்விதம் புரிந்து கொள்கின்றேன். நிச்சயம் யப்பானியரான கவிஞர் பாஷோ இவ்விதம் நினைத்து எழுதியிருக்க மாட்டார். தமிழனாக நான் இவ்விதம் புரிந்து கொள்வதற்கு உரிய காரணங்கள் வருமாறு:
தமிழில் நட்சத்திரத்தை விண்மீன் என்றும் அழைக்கின்றோம். அதிகாலையில் கிழக்கில் தென்படும் விடிவெள்ளி நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானதுதான். வெள்ளி, விண்மீன் இவையெல்லாம் தமிழ்ச்சொற்கள். இவற்றின் அடிப்படையில் வெள்ளி, மீன் , விடியல் எல்லாம் எனக்கு விடிவெள்ளையை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் நான் இவ்விதம் சிந்தித்தேன். புரிந்து கொண்டேன். ஆக, தமிழ் மொழி பெயர்ப்புத்தான் எனக்கு இவ்விதப் புரிதலைத் தந்திருக்கின்றது. உண்மையில் எனக்கு யப்பானிய மொழி தெரிந்திருந்து , அம்மொழியில் இக்கவிதையை வாசித்திருந்தால் நிச்சயம் இன்னுமொரு கோணத்தில் இக்கவிதையை அணுகியிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம்.


No comments:
Post a Comment