Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, April 21, 2018

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -

"The Wanderers Of The Sky And Their Cry Of Melancholy " என்னும் தலைப்பில் நான் எழுதிய ஆங்கிலக் கவிதையின் சிங்கள மொழிபெயர்ப்பு லக்பிம சிங்களத் தினசரியின் ஞாயிற்றுப் பதிப்பில்
http://e-paper.lakbima.lk/…/Apr…/last_22_04_18/manjusawa.pdf  (22.04.2018) வெளியாகியுள்ளது. அக்கவிதை தமிழில் கீழே:

கவிதை: வானத்து நாடோடிகளும், அவர்கள்தம் துயர்மிகு அழுகையும்! - வ.ந.கிரிதரன் -
"படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை எப்பொழுதுமே
என்னிதயத்தை ஆழமாகத் தொடுவன.

காலையிலிருந்து
மழை பலமாகப்
பெய்து கொண்டிருக்கிறது.

மழை.
அகதிகளின் கண்ணீர்.
நாடற்ற வான் நாடோடிகள்,
மேகங்களின்
கண்ணீர்,

வழக்கம்போல்
படுத்திருக்கையில்
இரவுமழைச் சப்தங்கள்
இருண்டவான் காட்சி
இவை என்னிதயத்தை
ஆழமாகத் தொடுகின்றன.

Saturday, April 7, 2018

கவிதை: பருத்தித்துறைக் கடற்கரையில்... சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ | தமிழில் : வ.ந.கிரிதரன் -



சிங்கள மொழியில் தான்  எழுதிய இக்கவிதையினை  ஆங்கில வடிவில் அனுப்பியிருந்தார் கத்யானா அமரசிங்க. அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். அண்மையில் அவரது வடக்குக்கான பயணத்தில் பருத்தித்துறைக்கடற்கரையில் அவரடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக
விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  -



நான் அங்கிருந்தேன் கண்ணீர்த்துளியின் மறு முனையில்
துயரக் காற்றினால் தாக்கப்பட்ட மறுமுனை
ஆழமான நீலக் கடலும் கூட
நெஞ்சை வலிக்கும் கதையினை அமைதியாகக்
கூறும்.
வீசிக்கொண்டிருந்த புயல்கள்
இளம் பறவைகளை அவற்றின்
அன்னையரிடமிருந்து பிரித்திருந்த
நேரமொன்றிருந்தது.

ஓ! நான் இப்பொழுது தனிமையை உணர்கின்றேன்.
இந்த வெறுமையான வானத்தின் கீழ்
நான் கனத்த இதயத்துடன் காத்திருக்கின்றேன்.
தூரத்துக் கனவினில்
தமது தாய் மண்ணிலிருந்து பறந்து சென்ற
எனது வடக்குப் பறவை நண்பர்களின்
சிறகடிப்பினை நான் கேட்கின்றேன்.
அவர்கள் திரும்பி வருவதைக் காண்கின்றேன்
இந்த இனிய ஆனால் இன்னும் தூரத்துக் கனவினில்

புகைப்படம் உதவி: கத்யானா அமரசிங்க

Kathyana Amarasinghe: kathaish@gmail.com

ngiri2704@rogers.com

Wednesday, March 21, 2018

கவிதை: பரிணாமம் - வ.ந.கிரிதரன் -















ஒரு காலத்தில் நான் தேசியவாதியாகவிருந்தேன்.
ஆண்ட பரம்பரையின் பெருமைகளில் மனதொன்றிக்
கற்பனைகளில் மூழ்கியிருந்தேன்.
பின்னுமோர் சமயம் நான் இடதுசாரித்தேசியவாதியானேன்.
தேசியம் கலந்த புரட்சியில் மனதொன்றியிருந்தேன்.
பின்னர் நான் மானுட வாதியானேன்.
'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும்
என் மூதாதையின் அன்றைய நோக்கில்
வியந்து கிடந்தேன்.
இன்று நானோர் பிரபஞ்சவாதி.
எதனையும் பிரபஞ்ச நோக்கில் வைத்து
அணுகுகின்றேன்.
தேசியத்தை, மார்க்சியத்தை, மானுடநோக்கினை
அவற்றின் நிலையில் வைத்து அணுகுகின்றேன்.
பிரபஞ்ச நோக்கில், மானுட நோக்கில்,
வைத்து அனைத்தையும் அணுகுகின்றேன்.
ஒரு சமயம் முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாக
அணுகினேன். இன்றோ?
நட்புரீதியில் அவற்றைக் கையாள்கின்றேன்.
இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டாதீர்கள்!
கிணற்றுக்குள்ளிருந்து கத்தும் நுணல்களாக இருக்காதீர்கள்.
வெளியில் வாருங்கள்!
விரிந்து கிடக்கும் நீல வானைப் பாருங்கள். ஆங்கு
கொட்டிக் கிடக்கும் நட்சத்திரக் குவியல்களைப் பாருங்கள்.
வெளியினூடு அதி வேகங்களில் விரையும்
சுடர்க்கூட்டங்களைப் பாருங்கள்.
'காலவெளி'யின் மாயா ஜாலங்களைப் பாருங்கள். அவற்றில்
மனத்தைப் பறிகொடுங்கள்.
பிரமாண்டமானதொரு வெளியில் விரையுமொரு வாயுக் குமிழிக்குள்
வளைய வரும் இருப்பைப் பாருங்கள்.
வெளியில் வாருங்கள். விரிந்து கிடக்கும் வானைத்தைப்போல
உங்கள் மனமும் விரிவதை அறிவீர்கள்.
புரிந்துகொள்வீர்கள்.

















ngiri2704@rogers.com

Monday, February 19, 2018

கவிதை: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! - வ.நகிரிதரன் -

- வ.ந.கிரிதரன் -
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எப்பொழுதுமே இறுதி வெற்றி
உனக்குத்தான்.
எப்பொழுதுமே உன்காட்டில்
மழைதான். அதற்காக
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்
பேரவாவன்று.பின்
உனைப் புரிதல்தான்.

ஓரெல்லையினை
ஒளிச்சுடருனக்குத்
தந்துவிடும் பொருளறிந்த
எனக்கு
அவ்வெல்லையினை மீறிடும்
ஆற்றலும், பக்குவமும்
உண்டு; புரியுமா?

கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்... - - வ.ந.கிரிதரன் -

- அண்மையில் முகநூலில் எனது கவிதையான 'நள்யாமப்பொழுதொன்றில்...' கவிதையினை பதிவு செய்திருந்தேன். அது பற்றி நிகழ்ந்த சிறு கருத்துப்பரிமாறல்கள் சுவையானவை. வாசகர்களுக்கும் பயனுள்ளவையாக அமையுமென்று கருதி இங்கும் பதிவிடுகின்றேன். -

கவிதை 'நள்யாமப்பொழுதொன்றில்..

சொல்லவிந்து, ஊர் துஞ்சும்
நள்யாமப்பொழுதுகளில்
விசும்பு நீந்தி ஆங்கு
நீந்தி விளையாடிடும் விண்மீன்கள்தம்
வனப்பில் எனை மறக்கும்
தருணங்களில்,
இராப்பட்சிகள் குறிப்பாக
ஆந்தைகள் சிந்தனைச்சிறகடிக்கும்.
கூரிய அவைதம் பெருங்கண்
விரித்து
இரை தேடி இரவு முழுக்கப்
பறந்து திரியும்.
ஆந்தைகளுக்குப் போட்டியாக
அவ்வப்போது நத்துக்களும்
குரல் கொடுக்கும்.
மீன்களே! உங்கள் நீச்சலின் காரணத்தை
விளக்குவீரா?
ஆந்தைகளே! நத்துகளே! உங்கள்
இருப்பின் காரணத்தை எனக்கும்
சிறிது பகர்வீரா?
இரவுவான் வியக்கும் பண்பு
தந்தாய்! எந்தையே
இத்தருணத்தில் உனை நான்
என்
நினைவில் வைக்கின்றேன்.

'திண்ணை'க் கவிதைகள் மூன்று! - வ.ந.கிரிதரன் -

'திண்ணை' இணைய இதழில் முன்பு வெளியாகிய கவிதைகள் இவை. என்னை எப்பொழுதுமே நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் உருவான மானுட இருப்பும், இதற்கும் மேலான உயிரினங்களின் சாத்தியம் பற்றிய சிந்தனைகளும், எம் இருப்பின் முப்பரிமாண எல்லையும் , காலவெளி பற்றிய புரிதல்களும் அவற்றின் மீதான சிந்தனையும், இயற்கையின் பேரழகும், படைக்கப்பட்டுள்ள ஏனைய உயிரினங்களின் படைப்புச்சிறப்பும் கவரும் விடயங்கள். எம் இருப்பு '"வெறுமைக்குள் விரியும் திண்ம இருப்பு.". நாமோ 'பரிமாண விலங்குகள் தாங்கும் அடிமைகள்'. அவை பற்றிச் சிந்திப்பதிலுள்ள இன்பம் எனக்கு வேறெவற்றிலுமில்லையென்பேன். ஆழநடுக்காட்டில் பல்லாண்டுகள் தனித்து விடப்பட்டாலும் கூட என்னால் இவை பற்றித் தொடர்ச்சியாகச் சிந்தித்துக்கொண்டேயிருக்க முடியும். 'என்று வருமந்த ஆற்றல்?', 'காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! மற்றும்' 'மழையைச் சுகித்தல்! ஆகிய கவிதைகளிலும் என் இந்த உளப்பாங்கினை நீங்கள் கண்டிட முடியும்.

1. என்று வருமந்த ஆற்றல்? - வ.ந.கிரிதரன்

நள்ளிரவுக் கருமை;
மூழ்கிக் கிடக்குமுலகு; தண்ணொளி
பாய்ச்சும் நிலவு; ‘கெக்க’லித்துச்
சிரிக்கும் சுடரு.

விரிவான் விரிவெளி.
‘புதிர் நிறை காலவெளி.

வெறுமைக்குள் விரியும்
திண்ம இருப்பு.

பரிமாண விலங்குகள்
தாங்கும் அடிமை.

பன்முறையெனினும்
மீறி வியப்பதற்கெதுவுண்டு.

படியளக்கும் படைத்தவரே!
படைத்ததேன்? பகர்வீரா?

அறிவுத்தாகம் மிகுந்த
அலைவு; தாகசாந்திதான்
எப்போது?
அலையெனப் பரவும்
நிலை வரும் வரையிலா?
என்று வருமந்த
நிலை? அன்றி
‘அதிவெளி’ கடக்கும்
ஆற்றல் வரும் வரையிலா?
என்று வருமந்த
ஆற்றல்?


 நன்றி: திண்ணை - http://puthu.thinnai.com/?p=3648

Sunday, February 18, 2018

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்' - வ.ந.கிரிதரன் -

- 'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' இதழ் பன்னாட்டிதழாக மலர்ந்திருக்கின்றது. இச்சிறப்பிதழில் எனது கவிதையான 'காலவெளிப்பயணியின்  நெடும் பயணம்' கவிதை வெளியாகியுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -

என் வெப்ப மண்ணை, மேல் விரியும்
இரவுவானை, சுடரை, நிலவை
நான் நீங்கியது நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவசை போடுமொரு
மாடுமாகினேன்.
ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கானுயிராயுமாகினேன்.

முடிவற்ற நெடும் பயணம்!

தங்குதற்கும், ஆறுதற்கும்
தருணங்களற்ற நெடும் பயணம்!

என்று முடியும்? எங்கு முடியும்?

நம்பிக்கையினை
நானின்னும் இழக்கவில்லை.
வழிச்சோலைகள், நீர்நிலைகள்
துருவப்பாலை வசங்களாயின.
பேய்த்தேரெனவே போயின.
இருந்தும் சிந்தையின்னும்
இழக்கவில்லை நான்.

காலவெளிக் குழந்தை நான்
கண்ட கனவுகள்
நனவிடைதோய்தற் துளிகளாயின.
துருவப்பாலை ஒட்டகம் நான்.
இன்றோ சுடர் தேடுமொரு
துருவத்துப் பரதேசி!

அந்தமிலாவிருப்பு
நம்பிக்கைக் கனவுகள்
மிகப்பயணிக்குமொரு
காலவெளிப்பயணி
நான். பயணிக்கின்றேன்.
பயணிக்கின்றேன். பயணிக்கின்றேன்.


- 'மகாகவி' (திசம்பர் 2017 - பன்னாட்டுச் சிறப்பிதழ்)  சஞ்சிகையில் ..-
ngiri2704@rogers..com

நன்றி: பதிவுகள்.காம்







Saturday, February 17, 2018

கவிதை: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

அண்மையில் முகநுலில் இலக்கியத்திருட்டு பற்றியொரு பதிவிட்டிருந்தேன். அதற்கு எதிர் வினையாற்றியிருந்த பிரபல கலை இலக்கிய விமர்சகரும், எனது மதிப்புக்குரியவருமான இந்திரன் (தமிழ்நாடு) அவர்கள் பினவருமாறு கூறியிருந்தார் " Indran Rajendran நல்ல குதிரையைத்தான் திருட முடியும்...உங்களுடையது நொண்டி குதிரையல்ல என்று தெரிகிறது...விடுங்கள்...". நன்றி திரு இந்திரன் அவர்களே. அதன் பாதிப்பிது.

குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.
நானொரு குதிரை வளர்ப்பாளன்.
வியாபாரியல்லன்.
நாணயமான குதிரை வளர்ப்பாளன்..
என்னிடம் நல்ல குதிரைகள் பல உள்ளன.
இருப்பவை அனைத்துமே நல்லவைதாம்.
ஆனால் அவை நொண்டிக்குதிரைகளல்ல.
என்னிடமுள்ள குதிரைகள் அனைத்துமே
 என் பிரியத்துக்குரியவை.
அவற்றில் வேறுபாடு நான் பார்பபதில்லை.
நான் நொண்டிக்குதிரைகளை வளர்ப்பவனோ,
விற்பவனோ அல்லன்.
இருந்தும் குதிரைத் திருடர்களே!
உங்களின் தொல்லை
 அதிகமாகிவிட்டது.
குதிரைத் திருடர்களே! கவனம்.
திருடிய குதிரைகளை வெகு சாமர்த்தியமாக
 உங்கள் மந்தையில் கலந்து
 விடுவதில் பலே கில்லாடிகள் நீங்கள்.
என்னிடம் நீங்கள் திருடிய அல்லது
 திருடப் போகும் குதிரைகள்
 நிச்சயம் நொண்டிக்குதிரைகளல்ல.
ஆனால் அவை நல்லவை.
வல்லவையும் கூடத்தான்.
ஆனால் அவை முரட்டுக் குதிரைகள்.
முட்டி மோதவும் தயங்காத
 முரட்டுக் குதிரைகள்.

ngiri2704@ரrogers.com

முள்ளிவாய்க்கால் கஞ்சி!

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் மனித அழிவைத் தந்த யுத்தம் முடிவுக்கு வந்த தினம் மே 18. யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கழிந்து விட்டன...

பிரபலமான பதிவுகள்