Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஐந்து: கட்டடக்கலை & நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள் _37 - 45 )

37. நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் நகரொன்றின் பிம்பக்' கோட்பாடு பற்றிய புரிதலும்!

நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

நகரொன்றின் பெளதிக யதார்த்தத்திலிருந்து எவ்விதமான மனப்பிம்பங்களை அந்நகரத்து மாந்தர் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது பற்றிய ஆய்வொன்றினை நகர மாந்தர்கள் பலருடனான நேர்காணல்கள் பலவற்றின் மூலம் கண்டறிந்த அவர் அவற்றின் பெறுபேறுகளை அடிப்படையாக வைத்து நகரின் பிம்பம்' (The Image Of the City) என்றொரு நல்லதொரு சிந்தைக்கு விருந்தளிக்கும், மேலும் அதனை விரிவடையவைக்கும் ஆய்வு நூலொன்றினை வெளியிட்டிருந்தார். மேற்படி அவரது ஆய்வானது நகர மாந்தரின் மேற்படி நகர் பற்றிய உளப்பதிவுகள் பற்றிய முக்கியமான பல நவீன கருதுகோள்களுக்கு அடிப்படையாக விளங்குகின்றது. மேலும் நகரொன்றின் உருவம் பற்றிய , அங்கு காணப்படும் கட்டடச் சூழல் அல்லது கட்டடக்கலை எவ்விதம் மேற்படி அந்நகர மாந்தரின் நகர் பற்றிய பிம்பத்திற்குக் காரணமாயிருக்கின்றது பற்றிய புரிதலுக்கு மிகவும் பங்களிப்புச் செய்துள்ளது என்று கூறினால் மிகையான கூற்றல்ல.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி நான்கு (31 -36)

31. மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்!

- இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் வித்துவான் வேந்தனாரின் எழுத்துலகப்பங்களிப்பு முக்கியமானது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு விழாமலர் 548 பக்கங்கங்களைக் கொண்ட விரிவான நூலாக வெளியாகியுள்ளது. அம்மலரில் வெளியான எனது கட்டுரையிது. மலரைச் சிறப்பாக வெளியிட்ட அவரது மகனும், கவிஞரும் , நண்பருமான வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார். வாழ்த்துகிறேன். -

வித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர்  சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக்  கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.

வேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல் கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து  மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.  இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி மூன்று (21 - 30)

21. ஞானம் சஞ்சிகையின் தலையங்கமும், மறுமலர்ச்சிச்சங்கமும், அ.ந.க.வும்...

அண்மையில் கோப்பாய் சிவம் , செல்லத்துரை சுதர்சன் ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளியான 'மறுமலர்ச்சிச் சஞ்சிகைகளின் தொகுப்பு' பற்றிய ஞானம் சஞ்சிகை ஏபரல் மாத இதழின் தலையங்கத்தில் வாழ்த்தியிருக்கின்றது. மேற்படி ஞானம் சஞ்சிகையின் வாழ்த்துச்செய்தி வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள , குறிப்பிடப்படாத விடயங்கள் பற்றிச் சுட்டுக்காட்டுவது முக்கியமென்று எனக்குத் தோன்றுகின்றது.  'அ.செ.மு , வரதர் போன்ற 'ஈழத்து நவீன எழுத்தாளர்களின் இரண்டாவது பரம்பரையினரில் பலர் மறுமலர்ச்சி உருவாக்கிய எழுத்தாளர்களே. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அ.செ.மு போன்றவர்கள் மறுமலர்ச்சி  சஞ்சிகையின் வரவுக்கு முன்னரே ஈழகேசரி மூலம் எழுதத்தொடங்கி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர்கள். அவர்களில் அ.செ.முருகானந்தன், தி.ச.வரதராசன், க.செ.நடராசா, அ.ந.கந்தசாமி, பஞ்சாட்சரசர்மா போன்ற ஐவருமே மறும்லர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்கள். இதனால்தான் இவர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று கூறப்படுகின்றார்களே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையில் எழுதியதனால் அல்ல.

மறுமலர்ச்சிச் சங்கத்திற்குள் பஞ்சாட்சர சர்மாவை இழுத்தவர் அ.ந.கந்தசாமி. பஞ்சாட்சர சர்மாவே தனது கட்டுரைகள் பலவற்றில் தன்னை எழுத்துத்துறையில் ஊக்கப்படுத்தியவராகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் 'பஞ்சாட்சரம்' நூல் முன்னுரையிலும் தன்னை எழுதுமாறு தூண்டிய இருவர்களாக அ.ந.கந்தசாமியையும், பண்டிதர் பொ.கிருஷ்ணபிள்ளையையும் குறிப்பிட்டுள்ளார். அதிலவர் அவர்கள் தன்னை எழுதுமாறு தூண்டித் தன்னம்பிக்கையூட்டி எழுத வைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாட்சர சர்மா அவர்களின் மகனான கோப்பாய் சிவம் அவர்கள் தனது தந்தையின் எழுபதாண்டு வயதினையொட்டி வெளியிட்ட 'பஞ்சாட்ஷரம்' நூலில் , பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு ஏனைய கலை, இலக்கியவாதிகள் எழுதிய கடிதங்களையும் இணைத்துள்ளார். மேற்படி நூலை நூலகம் இணையத்தளத்தில் எழுத்தாளர் கோப்பாய் சிவம் அவர்களின் படைப்புகளுக்கான பக்கத்தில் காணலாம்.

மேலும் மேற்படி நூலிலுள்ள பஞ்சாட்சர சர்மா அவர்களைப்பற்றிய கட்டுரையில் எழுத்தாளர் வரதர் அவர்கள் மறுமலர்ச்சிச்சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்கள் ஐவரென்றும், அவர்களிலொருவராக அ.ந.கந்தசாமியையும் குறிப்பிட்டிருப்பார்.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி இரண்டு (11 - 20)

11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்ள 'தேசிய இலக்கியமும், மரபுப்போராட்டமும்' என்னும் நூல் பற்றியுமான பதிவு!.

இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றைப்பொறுத்தவரையில் முக்கியமான காலகட்டங்களாக 'மறுமலர்ச்சி'க் காலகட்டத்தையும், 'இலங்கை எழுத்தாளர் முற்போக்குக் கழகக்' காலகட்டத்தையும் குறிப்பிடலாம். இலங்கை மண்ணுக்கேயுரிய மண்வாசனை மிக்க தனித்துவம் மிக்க எழுத்துகளைப்படைக்க வேண்டுமென்று 'மறுமலர்ச்சிக்' குழு வழிவந்த இளைஞர்கள் எண்ணினார்கள். ஆனால் அந்நோக்கமே 'தேசிய இலக்கியம்' என்னும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டது. அதனைச் செய்தவர்கள் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் வழிச் செயற்பட்ட எழுத்தாளர்கள் , திறனாய்வாளர்கள். தேசிய இலக்கியம் பற்றிய புரிதலுக்காக எழுத்தாளர் இளங்கீரனின் 'மரகதசம்' சஞ்சிகையில் 'தேசிய இலக்கியம்' பற்றி 'மரகதம் ' சஞ்சிகையில் வெளியான பேராசிரியர் க.கைலாசபதி, ஏ.ஜே.கனகரட்னா, அ.ந.கந்தசாமி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை.

இதனைத்தொடர்ந்து தினகரன் பத்திரிகையில் மரபினைப்பேணிய பண்டிதர்களுக்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களுக்குமிடையில் தலையெடுத்த 'மரபு' பற்றிய விவாதமும் முக்கியமானது. இரு சாராரும் தினகரன் பத்திரிகையில் நடாத்திய விவாதம் இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வு.

'மரகதம்' சஞ்சிகையில் வெளியான 'தேசிய இலக்கியம்' பற்றிய கட்டுரைகளையும், தினகரன் பத்திரிகையில் நிகழ்ந்த மரபு பற்றிய விவாதக் கட்டுரைகள் சிலவற்றையும், வேறு சில கட்டுரைகளையும் தொகுப்பாக்கி வெளியிட்டிருக்கின்றனர் 'சவுத் ஏசியன் புக்ஸ்' (சென்னை) பதிப்பகத்தினர். தொகுத்தவர் எழுத்தாளர் சுபைர் இளங்கீரன். மிகவும் முக்கியமான தொகுப்பு.

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஒன்று (1 - 10)

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'

['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையினை முன்வைத்துக் கட்டுரையொன்றினை மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையில் எழுதியிருக்கின்றேன். 1981 அல்லது 1982ஆம் ஆண்டு வெளிவந்ததாகவிருக்க வேண்டும். அப்பொழுது அதன் ஆசிரியராகவிருந்தவர் பொறியியலாளர் பிரேமச்சந்திரன். எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரனை நான் முதன் முதலில் அறிந்துகொள்ளக் காரணமாகவிருந்ததும் அக்கட்டுரையே. 'நுட்பத்தில்' வெளிவந்த அக்கட்டுரையினை வாசித்துவிட்டு என்னுடன் தொடர்புகொண்டார். அதன் பின்னர் அக்கட்டுரை கைவசமில்லாத காரணத்தால் மீண்டும் 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு' என்னும் தலைப்பில் 'டொராண்டோ'வில் வெளிவந்த 'தாயகம்' (சஞ்சிகை/ பத்திரிகை)யில் எழுதினேன். பின்னர் அக்கட்டுரை 'பதிவுகள்' இணைய இதழிலும், 'திண்ணை' இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது. அக்கட்டுரையினை எழுத்தாளர் (சீர்காழி) தாஜ் தனது வலைப்பதிவான 'தமிழ்ப்பூக்க'ளிலும் மீள்பிரசுரம் செய்து அது பற்றிய தனது கருத்தினையும் பதிவு செய்திருக்கின்றார். பாரதியின் பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 11) அக்கட்டுரை மீண்டும் பதிவுகளில் பாரதியின் நினைவுக்காகவும், ஒரு பதிவுக்காகவும் பிரசுரமாகின்றது. - வ.ந.கி]  தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள்,இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன. 'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்:

"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள்
எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா
வெளிவானிலே நில்லாது சுழன்றோட
நியமஞ் செய்தருள் நாயகன்.."

'மகாசக்தி வாழ்த்து' என்னும் கவிதையில் அவன் கூறுவதோ?

"..விண்டுரைக்க அரிய அரியதாய்
விரிந்த வானவெளியென நின்றனை.
அண்ட கோடிகள் வானிலமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை.
மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை யோசனை கொண்ட
தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே!
நினைக் காளியென்றேத்துவேன்.."

மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள் கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி , அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப் படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும் காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....

Monday, May 20, 2019

(பதிவுகள்.காம்) கனடாத் தமிழ் இலக்கியமும் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையும்! - வ.ந.கிரிதரன் -



கனடாத்தமிழ் இலக்கிய வரலாற்றில் 'புரட்சிப்பாதை' சஞ்சிகைக்குமோரிடமுண்டு.  இதுவொரு கையெழுத்துச் சஞ்சிகை. 'அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம்' என்னும் தாரக மந்திரத்துடன் வெளியான சஞ்சிகை.  'இப்பத்திரிகை வட  அமெரிக்கா வாழ் தமீழீழ மக்கள் விடுதலைக்கழக ஆதரவாளர்களினால் வெளியிடப்பட்டது' என்னும் குறிப்புடன் வெளியானாலும், இதன் அமைப்பின்படி இதனையொரு சஞ்சிகையாகவே கருதலாம் (செய்திக்கடிதமாகவும் கருதலாம். ஆனால் நாவல், கவிதை, கட்டுரை எனப்பல ஆக்கங்கள் வெளியானதால் சஞ்சிகையென்று கருதுவதே பொருத்தமானதென்பதென் கருத்து.). இதன் கனடாத் தொடர்புகளுக்கான முகவரி:  C.P.842, POST OFFICE - AHUNSTIC, MONTREAL, QUEBEC H3L 3P4 என்றும் குறிபிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பதினைந்தாம் திகதி வெளியான இச்சஞ்சிகை  15.09.1984 தொடக்கம் 15.06.1985 வரை பத்து இதழ்கள் வெளியாகியுள்ளன. வெளியான இதழ்கள் எவற்றிலும் ஆசிரியர் குழுவினரின் பெயர்கள் இல்லை.

இளைஞர்கள் பலரின் கூட்டு முயற்சி இது. எனக்குத் தெரிந்து சுந்தரி (கோண்டாவில்)  ,ஜெயந்தி (உரும்பிராய்), நவரஞ்சன், குணபாலன் போன்றோருடன் மேலும் சிலர் இணைந்து இச்சஞ்சிகையினை வெளியிட்டார்கள்.

இதுவோர் அரசிலமைப்பு சார்ந்து வெளியான கையெழுத்துச் சஞ்சிகையென்றாலும், கனடாவில் 1984இல் வெளியான தமிழ்ச் சஞ்சிகையென்றவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இச்சஞ்சிகை கவிதை, கட்டுரை மற்றம் நாவல் & கேலிச்சித்திரம் போன்றவற்றையும் பிரசுரித்ததன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்துள்ளது. கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவலான எனது 'மண்ணின் குரல்' இச்சஞ்சிகையிலேயே தொடராகவும் ஏழு அத்தியாயங்கள்  வரை வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

'புரட்சிப்பாதை'யில் வெளியான ஆக்கங்களின் விபரங்கள் வருமாறு (என்னிடம் இதழ் மூன்றிலிருந்தே  இருப்பதால் அதிலிருந்தே ஆரம்பிக்கின்றேன்) :

Sunday, May 19, 2019

கவிதை: ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -

'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!' என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.

சிறியதிலிருந்து பெரியதுவரை,
மெதுவானதிலிருந்து
விரைவானதுவரை,
அவதானிப்புகள் பறவைகள்
பற்றிய,
அவை பறக்கும் வெளி-நேரம் பற்றிய
அதிக விபரங்களைக்
கற்றுத்தந்துள்ளன.

வித்தியாசமான பறவைகள்
வித்தியாசமாகப் பறக்கின்றன.
வித்தியாசமாக நடந்துகொள்கின்றன.
சில தமது அறிவினைப் பாவிப்பதன்
மூலம், காற்றினூடு வழுக்கிச் செல்கின்றன.
சில பெரிய பறவைகள் காற்றோட்டத்தினைப்
பாவத்து மேல் நோக்கிப் பறக்கின்றன.
பறவை அவதானிப்பு என்னைத்
தத்துவபூர்வமாகச் சிந்திக்குமாறு
உருவாக்கியுள்ளது.
இது என்னிதயத்தை இன்பத்தாலும்,
பேரானந்தத்தாலும் நிறைத்துள்ளது.
தூங்குதல், கூடு கட்டுதல், பெற்றோராகச் செயற்படுதல்,
இவையெல்லாம் என் சிந்தையில்
அவற்றைப் பெருமைக்குரியதாக
உருவாக்கியுள்ளன.
அவற்றின் வாழ்க்கை எளிமையானது; சில செயல்களே
செய்வதற்குள்ளன, ஆனால் அவற்றை
ஒழுங்காகச் செய்கின்றன.
சபதங்கள் மூலமும், உடல்ரீதியான
அசைவுகள் மூலமும்,
அவை சிறப்பாகத் தொடர்புகொள்கின்றன.
களைப்படையாமல், நம்பிக்கை இழக்காமல்,
இரைக்காக அமைதியுடன் காத்திருக்கும்
விலங்குள் நிறைந்த
கொந்தளிக்கும் சூழல்களுக்குள்
அவை தங்கள் இருப்பினைக்
களிப்புடனும் ஆரோக்கியமான
நம்பிக்கையுடனும்
கொண்டு செல்கின்றன.
இந்த அழுத்தங்கள் ,மிகுந்த
'காங்கிரீட்' காட்டினுள்
எங்கள் கூடுகளோ
பொருளியல்ரீதியிலான
ஆசைகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும்
நிறைந்து கிடக்கின்றன.

அவை, பறவைகள், வாழுதல் பற்றி
நிறையவே எனக்குக்
கற்றுத்தந்துள்ளன.
மேலாகவும், கீழாகவும்,
இடமாகவும், வலமாகவும்,
ஆகாயத்தில் உயரமாக,
மிகவும் கீழேயுள்ள நிலத்தைப் பற்றி,
எல்லைகள் பற்றி எந்தவிதக்
கவலைகளுமில்லாமல்
பறக்கும் அவற்றின் ஆற்றல்
என் சிந்தனையை
ஆழமாகவும், அறிவுபூர்வமானதாகவும்
உருவாக்கியுள்ளது.

காலநிலைகள் அவற்றின் இடப்பெயர்தலை
மட்டுமே நிர்ணயிக்கின்றன.
தமது சிறகுகளின் வலிமையுடன்
அவை எங்கு செல்ல விரும்பினாலும்
செல்லலாம்.
ஒருநாள்,
எமது அறிவு அனுமதித்தால்
நாமும் அவைபோல் சிறகடிக்கலாம்.
அல்லது நாம் அவற்றைவிட இன்னும்
விரைவாகப்
பறக்கலாம், அலைகளைப் போல்,
மின்காந்த அலைகளைப் போல்.
அதுவரை,
அவற்றைப் போல் பறப்பதற்கு விரும்புகின்றேன்.
அவற்றைப் போல் காற்றினில் எனது சிறகுகளை
விரிப்பதற்கு விரும்புகின்றேன்.
மிகவும் கீழேயுள்ள பிளவுண்ட நிலங்களிலுள்ள
எல்லைகள பற்றிய, தடுப்புமுகாம்கள்
பற்றிய
எந்தவிதக் கவலைகளுமில்லாமல்,
வானில் உயரத்தில் சிறகடிக்க
விரும்புகின்றேன்.

Poem: A Refugee’s Thoughts On Birds

By V.N.Giritharan

'ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்!' என்னுமிக் கவிதை எனது வலைப்பதிவுக்காக நான் எழுதிய A Refugee’s Thoughts On Birds என்னும் ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. இக்கவிதை 'சிறிலங்கா கார்டியன்' (The Srilanka Guardian) இணைய இதழிலும் பிரசுரமாகியுள்ளது.
  
A Refugee’s Thoughts On Birds  By V.N.Giritharan -

From tiny to very large,
slow to fast,
observations taught me a lot
about birds,
about the space-time where
they gracefully fly.

Different birds fly uniquely;
behave distinctively.
Some use their knowledge to
glide through the air,
while larger ones employ air currents
to ascend skyward.

Bird observation inspires
philosophical thoughts,
filling my heart with happiness and bliss.

Roosting, nesting, and parenting
make them proud
in my thoughts.
Their lives are simple, with few tasks,
done regularly.
Through sounds and physical movements,
they communicate efficiently,
unfazed, tireless,
amid turbulent environments,
where predators wait patiently.

They carry on their existence
happily and optimistically.

In this tension-filled,
stress-filled
concrete jungle,
our nests are filled with materialistic aspirations.

Birds teach me about living.
Their ability to soar up and down,
right and left,
in the vast sky,
without worrying about borders
on lands far below,
expands my thinking, making it broad and wise.

Seasons determine only their migrations.
With the strength of their wings,
they can fly anywhere
they desire.

One day, if our knowledge permits,
we may fly like them;
we may even soar faster than them,
like waves, electromagnetic waves.

Until then,
I wish I could fly like them;
I wish I could spread my wings in the air
like them,
without worrying about borders, detentions
on divided lands far below.

I wish I could fly like them high in the sky.

Courtesy: srilankaguardian.org

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...