Monday, July 22, 2019

கறுப்பு ஜூலை 1983 பற்றிய நினைவுக்குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -


ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மே 2009, ஜூலை 1983 இரண்டு மாதங்களும் அவர்கள்தம் வரலாற்றைப் புரட்டிப்போட்டு வைத்த மாதங்கள். ஜூலை 1983 அதுவரை இலங்கைத்தமிழர்களுக்கெதிராக வெடித்த இனக்கலவரங்களில் மிகப்பெரிய அழிவுகளையும் , உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்திய கலவரம். ஜே.ஆர்.அரசின் முக்கிய அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் பலர் முன்னின்று நடாத்திய கலவரம். இலங்கைத் தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைச் சுவாலை விட்டெரியச்செய்த கலவரம். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முக்கிய உபகண்ட அரசியற் பிரச்சினைகளிலொன்றாக, சர்வதேச அரசியற் பிரச்சினைகளிலொன்றாக உருமாற்றிய கலவரம். இலட்சக்கணக்கில் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக உலகின் பல்வேறு பகுதிகளையும் நோக்கிப் படையெடுக்க வைத்திட்ட கலவரம். இவ்விதமுருவான இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை பேரழிவுகளுடன் முடிவுக்கு கொண்ட மாதம் மே 2009.

ஜூலை 1983 இனக்கலவரத்தைப்பற்றி கடந்த சில வருடங்களாக முகநூலில் பதிவுகளிட்டிருந்தேன். அவற்றுக்குப் பலர் எதிர்வினைகள் ஆற்றியிருந்தார்கள். தம் அனுபவங்களை, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவற்றை ஆவணப்படுத்த வேண்டுமென்று எண்ணினேன். அவற்றை முக்கியமான எதிர்வினைகளுடன் தொகுத்து என் வலைப்பதிவான 'வ.ந.கிரிதரன் பக்கம்' தளத்தில் இவ்வருட என் நினைவு கூர்தலாகப் பதிவு செய்துள்ளேன். அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

1. 83 'ஜூலை' இலங்கை இனக்கலவர நினைவுகள்.:  இந்தியா அனுப்பிய சிதம்பரம்! (July 22, 2018)

சிதம்பரம் கப்பலை கூகுளில் தேடிப்பார்த்தேன். கப்பலின் படம் வந்தது. இக்கப்பலைத்தான் இலங்கையின் 1983 இனக்கலவரத்தையடுத்து இந்தியா கொழும்பில் தங்கியிருந்த அகதிகளை யாழப்பாணம் கூட்டிச்செல்வதற்காக அனுப்பியிருந்தது. இக்கப்பல் பல நினைவுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாமில் ஆரம்பத்திலிருந்தே தொண்டர்களாக மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் சேவையாற்றினர். தர்மகுலராஜா அவர்களும் அவர்களிலொருவர். இவர் எனக்கு ஒரு வருட 'சீனியர்'. அவர்களில் நானுமொருவனாக இணைந்திருந்தேன். ஏற்கனவே இலங்கை அரசு வழங்கியிருந்த லங்கா ரத்னா போன்ற சரக்குக் கப்பல்களில் அகதிகள் பலரை அனுப்பி வைத்தோம்.

Friday, July 12, 2019

'பதிவுகள்' வாசகர் கடிதங்கள் பகுதி ஒன்று (2000 -2006)



- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், பாவண்ணன், அ.முத்துலிங்கம், கந்தையா ரமணீதரன், நாகரத்தினம் கிருஷ்ணா, புதியமாதவி, மான்ரியால் மைக்கல், முத்துநிலவன், டிசெதமிழன், மருத்துவர் முருகானந்தன், கவிஞர் ஜெயபாலன் , சுமதி ரூபன்,  வெங்கட் சாமிநாதன் ,  லதா ராமகிருஷ்ணன், கே.எஸ்.சிவகுமாரன், என்று இவர்களைப் போன்ற  கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின்கருத்துகளை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களும் இவற்றிலுள்ளன. இவற்றில் சில பல முக்கியமான விவாதங்களையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றைப் பதிவு செய்வதன் அவசியம் கருதி இத்தொகுப்பு பதிவாகின்றது. ஏனைய கடிதங்கள் அடுத்த தொகுப்பில் இடம் பெறும். -

From: SANKAR SUBRAMANIAN
To:
Sent: Thursday, October 12, 2000 4:01 PM
Subject: வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

தேன் மதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிட பாரதி கண்ட கனவை மெய்ப்பிக்கும் அன்புத் தமிழ் ஆசிரியரே. "genom" சாத்தியப் பட்டால் வாழ்க நீவிர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள். உன்னை பெற்ற தமிழ்த்தாய் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருப்பாள். 'வலை விரித்தேன்'. 'பதிவுகள்' கண்டேன். நெஞ்சம் வலையில் படிந்து விட்டது. 'பதிவுகள்' தொடர்ந்து படிப்பேனே. மனதில் பட்டதை சொல்வேனே. மீண்டும் அடுத்த பதிவுகள் பார்த்து எழுதுகிறேன். வாழ்த்துக்கள் ஐயா! வாழ்க நீவிர் பல்லாண்டுகள்.
அன்புடன்
சங்கரன்

Tuesday, July 2, 2019

'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் ஜானின் நூற் தொகுதி!



இலங்கைத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டு ஆண்டுகள் பதினொன்றாகி விட்டன. இந்நிலையில் போராட்டம், அமைப்புகள், தத்துவங்கள் பற்றிய ரகுமான் ஜான் அவர்களின் நூற் தொகுதியொன்று விரைவில் 'வடலி' பதிப்பக வெளியீடாக வெளியாகவுள்ளது. இத்தொகுதியானது மூன்று நூல்களை உள்ளடக்கியதொன்றாகும்.

முன்னாட் போராளிகள் பலர் தம் அனுபவங்களின் அடிப்படையில் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். அவையெல்லாம் அவர்கள் பார்வையில் அவரவர் இயக்கம் பற்றிய அல்லது அவர்களின் தப்பிப்பிழைத்தல் பற்றிய அனுபவங்களாகும்.

இவ்வகையில் தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்', ஐயரின் 'ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்', செழியனின் 'ஒரு போராளியின் நாட்குறிப்பு' போன்றவை முக்கியமானவை. ஆனால் இவையெல்லாம் முன்னாட் போராளிகளின் அனுபவங்களை அதிகமாகக் கூறுபவை. நடந்த தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம், அமைப்புகள், அவற்றின் தத்துவங்கள் பற்றிய விரிவான ஆய்வு நூல்களல்ல. இந்நிலையில் ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி வெளிவரவிருப்பது நல்லதொரு விடயம். ஏனெனில் இத்தொகுதிகள் பின்வரும் தலைப்புகளில் வெளியாகவுள்ளதாகவும் அறிகின்றேன்:

1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.

Sunday, June 30, 2019

டி.எம்.எஸ் பற்றிய காணொளி!

பாடகர் டி.எம்.எஸ் அவர்களின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்காகக் குறிப்பாக எம்ஜிஆருக்காகப் பாடிய பாடல்கள். அன்று கேட்டோம்; இன்றும் கேட்கின்றோம். இனியும் கேட்போம். டி..எம்,எஸ் அவர்கள் எம்ஜிஆர்,, சிவாஜி படங்களில் பாடிய கருத்துள்ள பாடல்களாகட்டும், காதல் பாடல்களாகட்டும் அவை வரலாற்றில் நிலையாக நிலைத்து நிற்கப்போகும் பாடல்கள். அண்மையில் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன் அவர்கள் தனது இசைத்தமிழ் பற்றிய ஆய்வு நூலொன்றில் திரைப்படப்பாடல்களையும் கவனத்திலெடுத்திருந்தது நினைவுக்கு வருகின்றது.

இங்கு பாடகர் டி.எம்.எஸ் அவர்கள் தான் எம்ஜிஆர் நடித்த 'அன்பே வா' திரைப்படத்தில் பாடிய தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவ்வப்போது 'அன்பே வா' பாடல்கள் சிலவற்றையும் தெளிவு மிக்க காணொளிகளாக ஒ(லி)ளிப்பதிவு செய்திருக்கின்றார்கள். கேட்பதற்குச் சுகமாகவுள்ளது. கடந்த காலத்துக்கு எம்மையெல்லாம் இழுத்துச் செல்லும் காணொளி.

இக்காணொளியில் டி.எம்.எஸ் அவர்கள் அரிய தகவல்கள் பலவற்றை எம்முடன் பகிர்ந்துகொள்கின்றார். அவற்றில் என் கவனத்தை ஈர்த்த இரண்டினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

1. அக்காலகட்டத்தில் பாடல்களில் எதிரொலியினை உருவாக்குவதற்கான தொழில் நுட்பமில்லை. எவ்விதம் எம்ஜிஆர் மலைப்பிரதேசத்தில் பாடும் 'புதிய வானம். புதிய பூமி' பாடலுக்கு எதிரொலியைச் சேர்ப்பது என்பதில் அனைவருக்கும் குழப்பம். அப்பொழுது டி.எம்.எஸ் சிறு தந்திரம் மூலம் அக்குழப்பத்தை நிவர்த்தி செய்கின்றார். அது: பாடலைப்பாடும் பொழுது, எதிரொலியாக ஒலிக்க வேண்டிய சொல்லினைப் பாடுகையில் முதல் முறை ஒலிபெருக்கிக்கு அருகில் நின்றும், அடுத்தடுத்த தடவைகள் முறையே ஒலிபெருக்கிக்குத் தூரமாகவும், இன்னும் தூரமாகவும் நின்று பாடுவார். அது அப்பாடலில் அச்சொல் எதிரொலிப்பது போன்ற உணர்வினைத்தரும். அப்பாடலை மீண்டுமொரு முறை கேட்டுப்பாருங்கள் புரிந்து கொள்வீர்கள்.

அஞ்சலி: எழுத்தாளர் திருமலை ஷகி மறைவு.


எழுத்தாளர் திருமலை எம்.ஏ.ஷகியின் மரணச்செய்தியை முகநூல் வாயிலாக அறிந்தேன். கொடுநோயில் வாடி உதிர்ந்திருக்கின்றார். அண்மையில்தான் என் நட்பு வட்டத்தில் இணைந்திருந்ததால் அதிகம் இவரது கவிதைகளை வாசிக்கவில்லை. ஆனால் இவர் பங்கு பற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பார்த்திருக்கின்றேன். பலரும் இவரது கவிதைகளை இவரது மறைவையொட்டி முகநூலில் பகிர்ந்துள்ளார்கள். இருப்பின் நிலையாமை பற்றி பல கவிதைகளை எழுதியிருப்பதை அறிய முடிகின்றது. கவிதைகளுக்கான இவரது செறிவான மொழி இவரது கவித்திறனை வெளிப்படுத்துகின்றது. இவரது இளவயது மறைவு துயர் தருவது. மின்னலைப்போல் ஒளி வீசி மறைந்திட்ட இலக்கிய ஆளுமைகள் வரிசையில் திருமலை ஷகியும் இணைந்துவிட்டார். இவர் தன் எழுத்துகளூடு இனியும் கலை, இலக்கியப் பரப்பில் நிலைத்து நிற்பார். இவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரிலும் பங்குகொள்கின்றேன்.

அவர் நினைவாக அவரது கவிதையொன்று:

அஞ்சலி: முத்தையா சகாதேவன்


முத்தையா சகாதேவன் ஓர் அப்பாவி. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர் , கடந்த 15 வருட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அண்மையில் விடுதலையைக் காணாமலே சிறையில் மரணமானார். நாட்டின் அரசில் அமைப்பானது எவ்விதம் தனி ஒரு மனிதனின் வாழ்வை ஆட்டிப் படைக்கின்றது; சீர்குலைக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் மரணம் இது. தனி மனிதரின் இருப்பானது இவ்விதமான அரசியல் அமைப்பொன்றினால் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் புனைவுகள் பல வெளியாகியுள்ளன. அவற்றில் காப்காவின் 'விசாரண' நாவலும் முக்கியமானது. முத்தையா சகாதேவனின் நிலையும் அத்தகையதுதான். சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணைகளேதுமற்றுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியான இவரது மரணம் தேவையற்றதொன்று. இவரைப்போன்ற பல முத்தையாக்கள் இலங்கைச் சிறைகளில் வாடுகின்றார்கள்.
அரசியல் கைதி எழுத்தாளர் சிவ. ஆரூரனின் 'யாழிசை'!


அண்மையில் பதுளையைச் சேர்ந்த முத்தையா சடகோபன் என்னும் அப்பாவி, அரசியல் கைதி, எவ்விதக் குற்றங்களும் செய்யாத நிலையில், பதினான்கு வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து சிறையில் மரணமடைந்தது யாவரும் அறிந்ததே. இவரது மரணம் இதுவரை விடுதலையாகாமல் சிறைகளில் ஆண்டுக்கணக்காக வாடும் அரசியல் கைதிகள் விடயத்தை மீண்டும் அனைவரின் கவனத்துக்கும் கொண்டுவந்துள்ளது. இலங்கையின் அனைத்துப்பகுதி அரசியல்வாதிகளும், மானுட உரிமை அமைப்புகளும் ஓன்றிணைந்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டிய தருணமிது.
அண்மையில் என்னுடன் முகநூலில் நட்பராக இணைந்ததன் பின்னரே இன்னுமோர் அரசியல் கைதியைப்பற்றி அறிந்துகொண்டேன். இவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி, இவர் ஓர் எழுத்தாளர். சிறையிலிருந்தபடியே இவர் எழுதிய 'யாழிசை' என்னும் நாவலுக்கு இலங்கை அரசின் தேசிய சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. இவர் மொறட்டுவைப்பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரி. இவர்தான் எழுத்தாளர் சிவ. ஆரூரன். இவர் இன்னும் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவரைப்பற்றி , இவரது நாவலான 'யாழிசை' நாவல் பற்றி அறிய வேண்டுபவை பல உள்ளன. இவரது நாவலான 'யாழிசை' பற்றி எழுத்தாளரான மருத்துவர் எம்.கே.முருனானந்தன் எழுதிய முகநூற் பதிவு கீழே:
************************************************************************************************************
அரசியற் கூண்டுப் பறவை சிவ ஆருரன் அவர்களின் நாவல். ‘யாழிசை’ ; போர் தின்ற வாழ்வின் ஒரு முகம்.  - எம்.கே.முருனானந்தன் -

எமது வாழ்வானது போர் தின்ற வாழ்வு. சிலரது வாழ்வு முற்று முழுதாக விழுங்கப்பட்டு காணாமலே போய்விட்டது. வேறு சிலரது கொத்தி குதறிச் சிதைக்கப்பட்டு அழிக்க முடியாத வடுக்களோடு நகர்கிறது. அந்த வாழ்வின் இழப்புகளால் மனம் சோர்ந்து அழுது புலம்பி முன்னகர முடியாது அழுந்தி மாய்பவர்கள் பலர். அவற்றைச் சவால்களாக கொண்டு அதி தீவிர முயற்சிகளுடாக மற்றவர்களுக்கு நாம் சளைத்தலர்கள் அல்ல என துணிச்சலோடு வாழ்ந்து காட்டுபவர்கள் சிலர். இந்த நாவல் அதற்கு ஒரு சான்று.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...