மானுடராகிய நாம் பல்வகை உணர்வுகளுக்கும் உட்பட்டவர்கள். எப்பொழுதுமே தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் அல்லர். நகைச்சுவையைக் கேட்டுச் சிரிப்பவர்கள்; நல்ல கலையை இரசிப்பவர்கள். நல்ல நூல்களைச் சுவைப்பவர்கள்.
நல்ல நூல்கள், நல்ல கலைகள் என்னும்போது அவற்றிலும் பல பிரிவுகளுள்ளன. உதாரணத்துக்கு நூல்களை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் அம்மா தூக்கி வைத்து, சந்திரனைக் காட்டிக் கதை கூறிச் சாப்பிட வைத்ததிலிருந்து கதைகளுடனான எம் தொடர்பு ஆரம்பமாகின்றது. பின்னர் குழந்தை இலக்கியப்படைப்புகள் (அம்புலிமாமா, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் , சிறுவர் பகுதிகள், குழந்தைப்பாடல்கள் போன்ற) , வெகுசன இலக்கியப்படைப்புகள் என்று வளர்ச்சியடைந்து பின்னர் பல்வகை தீவிர இலக்கியப்போக்குகளை உள்ளடக்கிய தீவிர வாசிப்புக்கு வந்தடைகின்றோம். இதனால்தான் எல்லாவகை இலக்கியங்களுக்கும் மானுட வாழ்வின் வளர்ச்சிப்படியில் , வாசிப்பின் வளர்ச்சிப்படியில் இடமுண்டு.


