மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முனைவர்பட்ட ஆய்வுகள் சம்பந்தமாக உருவாக்கியிருந்த கையேடு ஒன்று அண்மைய கூகுள் தேடுதலில் என்னைக் கவர்ந்தது. அதற்கான முகவரி: https://www.msuniv.ac.in/images/academic/PhD/English.pdf
பதினைந்து பக்கங்களைக் கொண்ட அக்கையேட்டின் பக்கம் பதின்மூன்றே என் கவனத்தை ஈர்த்த பக்கம். அது புகலிடக் கற்கைநெறிகளைப்பற்றியது. அது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலிரு பகுதிகளில் புகலிடக்கற்கை நெறி பற்றிய கொள்கை விளக்கங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
Sunday, December 11, 2022
ஆய்வுக்கையேட்டில் வ.ந.கிரிதரனின் An Immigrant நாவல் (குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) !
வாழ்க நீ எம்மான்! - வ.ந.கிரிதரன் -
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்ததினம். என் பால்ய பருவத்தில் என்று என் தந்தையார் பாரதியாரின் முழுக்கவிதைகளும் அடங்கிய தொகுதியை வாங்கித் தந்தாரோ அன்று ஆரம்பித்த பிணைப்பு இன்றுவரை தொடர்கிறது. இவரது கவிதைத்தொகுப்பொன்று எப்பொழுதும் என் மேசையில் அருகில், கண்ணில் படும் தூரத்திலிருக்கும்.
சமுதாயம், அரசியல், தேசிய விடுதலை, வர்க்க விடுதலை, மானுட விடுதலை, இருப்பு பற்றிய தேடல்கள், காதல் போன்ற மானுட உணர்வுகள், இயற்கை , எழுத்து , பெண் உரிமை என்று அனைத்தைப் பற்றியும் இவர் பாடியிருக்கின்றார். அவற்றிலுள்ள புலமை, எளிமை, அனுபவத்தெளிவு இவைதாம் என்னை இவர்பால் ஈர்த்ததற்குக் காரணம். இன்னுமொரு முக்கிய காரணம் - ஆரோக்கிய எண்ணங்களை வெளிப்படும் வரிகள்.
தமிழ் இலக்கிய உலகில் என்னைப்
பாதித்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார். தன் குறுகிய காலத்தில்
இவர் சாதித்தவை ஏராளம். பிரமிக்க வைப்பவை.
எழுத்தாளராக, ஊடகவியலாளராக, பத்திரிகை ஆசிரியராக, தேசிய , மானுட விடுதலைப்போராளியாக, தத்துவவாதியாக இவரது ஆளுமை பன்முகமானது.
ஒரு கடிதம்!
அண்மையில் தமிழகத்தில் அமெரிக்கன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராகவிருக்கும் க.ஆனந்தராஜன் அவர்கள் 'எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற்றி 'நவீனத் தமிழாய்வு; என்னும் பன்னாட்டுக் காலாண்டு ஆய்விதழில் எழுதிய ஆய்வுக்கட்டுரை பற்றி எழுதியிருந்தேன். அது பற்றி அவர் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதிலவர் எனது 'அமெரிக்கா', 'குடிவரவாளன்' ஆகிய இரு நாவல்களை மையமாக வைத்துத் தான் முனைவர் பட்ட ஆய்வு செய்வதாகவும், அமெரிக்கன் கல்லூரியில் எனது அமெரிக்கா நாவல் அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்டத்திலும் உள்ளதாகவும் எழுதியிருந்தார். மகிழ்ச்சி தந்த விடயமிது. அவரது முனைவர் பட்ட ஆய்வு வெற்றியடைய வாழ்த்துகள்.
Friday, December 9, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (15) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 15 - கண்ணம்மா எழுதிய கவிதை!
"கண்ணா, எனக்கொரு கேள்வி அவ்வப்போது நினைவில் வருவதுண்டு."
"கண்ணம்மா, அப்படியென்ன கேள்வி. அது எது பற்றிய கேள்வி?" என்றேன்.
"எல்லாம் எழுத்து பற்றியதுதான். "
"எழுத்து பற்றியதா? எந்த எழுத்து பற்றி நீ கூறுகிறாய் கண்ணம்மா?"
"கண்ணா, உன்னைப்போன்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் பற்றித்தான் கண்ணா? வேறென்ன எழுத்தைப்பற்றி நான் கேட்கப்போகின்றேன்?"
"அப்படியா கண்ணம்மா, சரி கேளடி என் கணமணி."
"எழுத்துக்குக் கட்டாயம் ஒரு நோக்கம் இருக்க வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? கண்ணா?"
"கண்ணம்மா, நீ என்ன கேட்க வருகிறாய் என்பது புரிகிறது., கலை மக்களுக்காகவா அல்லது கலை கலைக்காகவா என்பதைத்தான் நீ எளிமையாக இப்படிக் கேட்கிறாய். காலம் காலமாக கலை, இலக்கிய உலகில் கேட்கப்படும், தர்க்கிக்கப்படும் கேள்விதான். இது பற்றி எப்பொழுதும் கருத்துகள் ஒன்றாக இருப்பதில்லை."
"இவ்விடயத்தில் உன் கருத்தென்ன கண்ணா? அதைச்சொல் முதலில். எனக்கு உன் கருத்துத்தான் முக்கியம் கண்ணா."
'கண்ணம்மா, எனக்கு இவ்வளவுக்கு முக்கியத்துவம் தருவது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப்பொறுத்தவரையில் எழுத்துக்கு நிச்சயம் ஒரு நோக்கமிருக்க வேண்டும். நோக்கமற்ற எழுத்து வாசிப்பதற்கு சுவையாகவிருக்கக்கூடும். ஆனால் சமுதாயப் பயனற்றுப் போய்விடும். ஆனால் அந்த நோக்கம் அந்த எழுத்தின் எழுத்தின் கலைத்துவத்தைச் சீர்குலைத்து விடக்கூடாது என்பதும் என்னைப்பொறுத்த வரையில் மிகவும் முக்கியம்."
"சரி கண்ணா, இன்னுமொரு கேள்வி."
"என்ன கண்ணம்மா? என்ன புதுக்கேள்வி?"
"நோக்கம் ஒரு தீர்வினையும் கூற வேண்டுமா? அல்லது வாசகர்களே அதனை எழுத்திலிருந்து தீர்மானிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டுமா கண்ணா?"
Friday, December 2, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (14) - - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 14 - யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
திரும்பிப்பார்க்கின்றேன். கேட்டவள் என் கண்ணம்மா, மனோரஞ்சிதம்.
"சங்ககாலப் புலவன் ஒருவனின் சிந்தனையைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன் கண்ணம்மா. அவனது அனுபவத்தெளிவு மிகுந்த சிந்தனையின் வீச்சு என்னை எப்போதும் கவருமொன்று. அன்று அவன் சிந்தித்ததை இன்றுள்ள மனிதர்கள் உணர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், உலகம் எவ்விதம் ஒரு குடும்பம் போல் இன்பத்தில் மூழ்கி இனித்திருக்குமென்று எண்ணிகொண்டிருந்தேனடி. என் சிந்தனையை வழக்கம்போல் இடையில் வந்து குலைத்து விட்டாயடி என் செல்லமே."
"உன் சிந்தையில் எப்போதும் நானிருக்க வேண்டும் கண்ணா. எனக்குத் தெரியாமல் வேறு யாரும் இருக்கக் கூடாது கண்ணா."
"கண்ணம்மா, நீ எப்போதும் என் ஆழ்மனத்தில் குடியிருக்கின்றாய். அதிலிருந்து உன்னை நான் விடுவிக்கப் போவதேயில்லை. ஆனால் நான் சிந்திப்பது என் ஆழ்மனத்தாலல்லவே கண்ணம்மா."
"ஆழ்மனத்தில் நானிருக்கிறேன் என்கின்றாய். சிந்திப்பதோ அம்மனத்திலால் அல்ல என்கின்றாய். குழப்புகிறாயே கண்ணா."
"கண்ணம்மா, ஆழ்மனம் வேறு. சிந்திக்கும் புறமனம் , நனவு மனம் வேறு. புறமனத்தால் சிந்திக்கின்றேன்.ஆனால் ஆழ்மனத்தில் எப்போதும் போல் நீ நிறைந்திருக்கின்றாயடி"
'கண்ணா , உன் ஆழ்மனத்தில் மட்டுமல்ல, புறமனத்திலும் நான் தான் எப்போழுதும் நிறைந்திருக்க வேண்டும்." என்று செல்லமாகக் கட்டளையிட்டாள் என் கண்ணம்மா.
Wednesday, November 30, 2022
இன்று என் தந்தை நினைவு நாள்! - வ.ந.கிரிதரன் -
இன்று என் தந்தையார் (நடராஜா நவரத்தினம்) மறைந்த நாள். நேற்றுத்தான் போலிருக்கின்றது. அப்பொழுது எனக்குப் பத்தொன்பது வயது. யாழ் ஶ்ரீதரில் 'மாட்னி ஷோ' (Matinee Show) பார்த்து விட்டு வீடு திரும்பியபோது , அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்தோம், சத்தியமூர்த்தி 'மாஸ்டர்' எனக்காக பஸ் வரும் வரை காத்திருந்து , அப்பா மறைந்த செய்தியினைக் கூறி , அரவணைத்து , ஆறுதல் கூறிச் சென்றது இன்னும் நினைவில் நேற்றுத்தான் நடந்தது போல் நிழலாடுகின்றது.
இன்று தற்செயலாக நண்பர் வரதீஸ்ரவன் 'தாய்க்குப் பின் தாரம்' படத்தில் வரும் 'தந்தையைப் போல் உலகில் தெய்வம் உண்டோ' என்னும் பாடலுக்கான யு டியூப் இணைப்பினை அனுப்பியிருந்தார். அதில் வரும் பின்வரும் வரிகளைக் கேட்டபோது,
தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ
சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
உண்ணாமல் உறங்காமல்"
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த
தந்தை எங்கே
என் தந்தை எங்கே
கண்ணிமை போலே
என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
தந்தை கனலானார் விதி தானா"
குறிப்பாகக் 'காரிருள் போலே பாழான சிதையில்வ் கனலானார் விதி தானா' என்னும் வரிகளைக் கேட்டபோது அவர் சிதையில் தனித்து எரிந்த காட்சி படமாக விரிகின்றது.
Tuesday, November 29, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (13) - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் 13 - நானொரு காலவெளிக்காட்டி வல்லுனன்!
காலவெளிப் பிரபஞ்சம் பற்றிய கண்ணம்மாவுடனான எனது உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது. இயற்கையை இரசிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. நல்ல இலக்கியப் படைப்புகளைப் படிப்பதில் எனக்கு நேரம் தெரிவதில்லை. இருப்பு பற்றிய அறிவியல் பூர்வமான உரையாடல்களிலும் எனக்கு நேரம் தெரிவதில்லை. கண்ணம்மாவுடன் இப்பொழுது நடத்திக்கொண்டிருக்கும் உரையாடலும் இத்தகையதொன்றுதான். இந்த விடயத்தில் அவளும் என் அலைவரிசையில் இருந்தாள். அது எனக்குச் சாதகமாக அமைந்து விட்டது. இவை போன்ற உரையாடல்கள் இல்லையென்றால் இருப்பில் என்ன அர்த்தமிருக்க முடியுமென்றும் சிந்திப்பதுண்டு. அதனால் இவற்றை எப்பொழுதும் வரவேற்பவன். பங்குகொள்பவன்.
கண்ணம்மாவே மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்து இக்கேள்வியினைக் கேட்டாள்:
"கண்ணா, காலவெளிச் சட்டங்களால் ஆன இப்பிரபஞ்சம் பல படத்துண்டுகளால் ஆன திரைச்சித்திரம் போன்ற காலவெளிச் சித்திரம் என்று கூறினாய் அல்லவா?"
"ஓம். கூறினேன் கண்ணம்மா. அதற்கென்ன?'
'கண்ணா, திரைப்படச் சுருளை நாம் முன்னோக்கி இயக்கலாம். அல்லது பின்னோக்கி இயக்கலாம். இல்லையா என் செல்லக்கண்ணா?"
"உண்மைதான் கண்ணம்மா. நீ சொல்வது முற்றிலும் சரியானதுதான் கண்ணம்மா."
யாழ்ப்பாணம் போவோமா?
[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...



