Saturday, March 30, 2024

புலம்பெயர் தமிழ் இலக்கியம்: 'பனியும் பனையும்'


புகலிடத்தமிழ் இலக்கியப்பரப்பில் பல சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இன்றும் வெளியாகிக்கொண்டுள்ளன. இவற்றில் முதலில் வெளியான முக்கிய தொகுதி மித்ர பதிப்பக வெளியீடான 'பனியும் பனையும்'.
எழுத்தாளர்கள் எஸ்.பொ & இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தொகுப்பில் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்கா வரையில் , பல்வேறு நாடுகளில் வாழும் 39 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு.
 
பதிப்பு விபரம்: பனியும் பனையும்;: புலம்பெயர்ந்த 39 கலைஞர்களின் புதுக்கதைகள். இந்திரா பார்த்தசாரதி, எஸ்.பொ. சென்னை 24: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (சென்னை 94: கோகில ஸ்ரீ பிரின்டர்ஸ்) 404 பக்கம். விலை: இந்திய ரூபா 75. அளவு: 18*12 சமீ.

Friday, March 29, 2024

'ஜீவகீதம்' ஜெகசிற்பியன் - ஜீவி - (எழுத்தாளர் ஜீவியின் 'பூவனம்' வலைப்பதிவிலிருந்து)


 
என் பால்ய, பதின்மப் பருவங்களில் என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெகசிற்பியன். கல்கியில் வெளியான இவரது நாவல்களான 'கிளிஞ்சல் கோபுரம்', 'ஜீவகீதம்', 'சொர்க்கத்தின் நிழல்', 'பத்தினிக்கோட்டம்' என்னிடம் பைண்டு செய்யப்பட்ட நிலையிலிருந்தன. இவரது இன்னுமொரு சரித்திர நாவலான 'நந்திவர்மன் காதலி' (ராணிமுத்து பிரசுரமாக வெளியானது) எனக்கு மிகவும் பிடித்த வரலாற்று நாவல்களிலொன்று.
 
எழுத்தாளர் ஜீவி அவர்கள் தனது 'பூவனம்' வலைப்பதிவில் சிறப்பானதொரு ஜெகசிற்பியன் பற்றிய நனவிடை தோய்தலைச் செய்துள்ளார். அதனை நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
 

Wednesday, March 27, 2024

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -


அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்!


மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ' மாநகர் விரிந்து கிடந்தது. தெற்காகத் திரும்பிப் பார்த்தான். தொலைவில் உயர்ந்த கட்டடங்கள் தெரிந்தன. 'கனடா வாத்து'க் கூட்டமொன்று V வடிவில் பறந்துகொண்டிருந்தது. சிட்டுக்குருவிகள் சில கூட்டமாகக் கடுகிச் சிறகடித்து மறைந்தன. அவன் வசித்து வந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகிலிருந்த மேப்பிள் இலை மரமொன்றிலிருந்து மெல்ல மெல்ல இறங்கிய கறுப்பு அணிலொன்று புஸ் புஸ்ஸென்று வளர்ந்திருந்த வாலை ஆட்டியபடி மெல்ல அவனைச் சிறிது நேரம் உற்றுப்பார்த்தது. பின் ஏதோ திருப்தி அடைந்ததுபோல் தன் காரியத்தில் மூழ்கி விட்டது. புல் மண்டிக்கிடந்த தரையில் உனவு தேடும் அதன் வேலையில் மூழ்கிவிட்டது. மாதவன் சிறிது நேரம் அதன் அசைவுகளைப் பார்த்து நின்றான். ஒரு கணம் அந்த அணில் பற்றிய சிந்தனைகள் அவன் சிந்தையில் ஓடின. இந்த அணிலின் இருப்பு எவ்வளவு சிறியது என்று நினைத்துக்கொண்டான். இந்த மரம்,இதனைச் சுற்றியுள்ள சிறு பிரதேசம் .. இவையே இதன் உலகம். மரத்திலுள்ள கூடும், மரத்தைச் சுற்றியுள்ள அயலுமே அதன் உலகம். ஒவ்வொரு நாளும் தன் இருப்புக்காக உணவு தேடுவதே அதன் முக்கிய பணி. அவ்விதம் இருப்பைத்தக்க வைப்பதற்கு முயற்சி செய்கையில் அதனைப் பலியெடுத்துத் தம் இருப்பைத்தக்க வைக்கும் ஏனைய உயிரினங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற அது மிகவும் எசசரிக்கையுடன் இருக்க வேண்டும். பார்வைக்கு மிகவும் எளிமையாகத் தென்படும் அதன் வாழ்க்கை அவ்வளவு எளிதானதில்லை என்று ஒருமுறை தனக்குள் எண்ணிக்கொண்டான் அவன். அந்த எண்ணத்துடன் மீண்டும் அந்த அணில்மேல் பார்வையைத் திருப்பியபொழுது இப்போது அந்த அணில் அவனது இதயத்தை மிக நெருங்கி வந்து விட்டிருந்தது.

கவிஞர் கண்ணதாசன் : நவீன கணியன் பூங்குன்றனார்!


'அதோ அந்த பறவை போல வாழவேண்டும்'

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். எவ்விதம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' உலக மக்களை விளித்துப்பாடப்பட்டதோ அவ்விதமே இப்பாடலையும் எடுக்கலாம். திரைப்படக்கதைக்குப் பொருந்தும் வகையில் வரிகள் இருந்தாலும், இப்பாடல் இவ்வுலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது. 'ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்' என்னும் வரிகள் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும் வரிகளை ஒத்தவை.

எவ்விதம் அந்தப்பறவை சுதந்திரமாகப் பறக்கின்றதோ அவ்விதமே இம்மண்ணின் மக்களும் எவ்விதத்தளைகளுமற்று ,சுதந்திரமாக வாழ வேண்டும். இம்மண்ணின் மாந்தர்கள் வர்க்கம், மதம், மொழி, வர்ணம், இனமென்று பல்வேறு தளைகளால் பூட்டப்பட்டு , அடிமை வாழ்வு வாழ்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். வான் ஒன்று. நாம் வாழும் மண் ஒன்று. இதில் மனிதர் அனைவரும் சுதந்திரமாக விடுதலைக்கீதம் பாடும் நிலை ஏற்பட வேண்டும், அந்த ஒரு கீதமே மாந்தர் பாடும் நிலை வரவேண்டும். தளைகள் எவையுமற்ற, அடக்குமுறைகள் எவையுமற்ற பூரண விடுதலைச்சூழலில் மக்கள் வாழும் நிலை வரவேண்டும்.

Tuesday, March 26, 2024

அன்னை நினைவுகள்!


அன்னையே!
இருப்பில் நீ இருந்த இறுதி நாள்
இன்று உனை நாம்
இழந்த நாளும் கூடத்தான்.
இருப்பின் வடிவம் நீ நீங்கிடினும்
இருக்கின்றாய் எம்மில்
உணர்வாய், உயிரணுவாய் நிறைந்து.
இருக்கின்றவரையில்
இருப்பாய் எம் சிந்தையில்
இன் நினைவுகளாய்.
 
'நவரத்தினம் டீச்சர்' என்று ஊருனை அறியும்.
நமக்கோ பாசமிகு 'அம்மா'.
அம்புலி காட்டி , அதிலிருக்கும் ஆச்சி பற்றி
அன்று நீ அன்னமூட்டிய தருணங்கள்
இன்றும் பசுமையாய் இருக்கின்றன.
 
அவ்வப்போது நீ பாடி
அகம் மகிழ்வித்த பாரதி பாடல்கள்
இன்னும் ஒலித்துக்கொண்டுள்ளன.
 
இரவு நீங்கும் முன எழுந்து
உணவு சமைத்து, பொதிகளாக்கி
உன்னுடன் பாடசாலை கூட்டிச் செல்வாய்.
உன் அரவணைப்பில் நாம் நடந்த
உவகை மிகு நாட்களவை.
 
கண்டிப்பிலும் உன்னால் கோப உணர்வுகளைக்]
காட்ட முடிந்ததில்லை.
கனிவு தவிர எதை நீ காட்டினாய்?
 
பின்னர் வளர்ந்து பெரியவனாகி
பிற தேசம் படிக்கச் சென்று
அவ்வப்போது ஊர் திரும்பி மீள்கையில்
அதிகாலையெழுந்து , உணவு சமைத்து,
அகமகிழ்வுடன் பின்னர் உண்ண
அதனைப் பொதியாக்கித் தருவாய்.
தொடருந்து நிலையம் நோக்கிச் செல்கையில்
தொலைவு நோக்கிச் செல்லும் மகன் நோக்கித்
தொடர்ந்து வரும் உன் பார்வை.
வாசலில் நீ நிற்கும் கோலமும், உன்
வதனத்தில் படர்ந்திருக்கும் மெல்லிய சோகமும்,
அதிகாலை மெல்லிருளில் தலைவிரிக்கும் பனைப்பெண்களின்
சரசரப்பைக் கேட்டுச் செல்லும் என்னை இன்றும்
தொடர்ந்து வரும் விந்தையென்ன!
 
அன்னையே! எம் தெய்வம் நீ!
அன்னையே! எம் உயிர் நீ!
அன்னையே!
இருக்கும் வரை எம்
இருப்பின் வழிகாட்டி நீ.

Sunday, March 24, 2024

காலத்தால் அழியாத கானம்: 'காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது.'


எனக்குப் பிடித்த கவிஞர் உடுமலை நாராயண கவியின் பாடல்களிலொன்று. தேவரின் 'விவசாயி' படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு இசையமைத்திருப்பவர் 'திரையிசைத் திலகம்' கே.வி.மகாதேவன். நடிப்பு - எம்ஜிஆர் & கே.ஆர்.விஜயா. பாடியவர்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலா.
 
காதலர்கள் இருவரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் உரையாடல் இனிக்கின்றது. 'காதில் இனிக்கிறது'. அதனால்தான் கவிதையை இனிக்கும் செவிநுகர் கனிகள் என்றார்கள்.
 

மனத்தில் நிற்கும் மதுரை வீரன்!


1956 தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வெளியான தமிழ்த்திரைப்படம் 'மதுரை வீரன்'. 36 திரையரங்குகளில் 100 நாட்களையும், மதுரை சிந்தாமணியில் 200 நாட்களையும் கடந்து ஓடிப் பெருவெற்றியடைந்த திரைப்படம். எம்ஜிஆரைத் தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக்கிய திரைப்படம் மதுரை வீரன் என்பர் திரையுலக ஆய்வாளர்கள்.   அதுவரை வசூலில் சந்திரலேகா புரிந்திருந்த சாதனையை  மதுரை வீரன் முறியடித்ததாக அறியப்படுகிறது. இத்திரைப்படத்தில் எம்ஜிஆருடன் பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் எனப் பலர் , அந்நாளைய முன்னணி நடிகர்கள், நடித்திருக்கின்றார்கள்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...