Tuesday, April 23, 2024

மறக்க முடியாத ஆளுமையாளர் சத்தியமூர்த்தி மாஸ்டர்!


அராலி வடக்கில் வசித்த காலத்தில் எம் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களில் ஒருவர்.  ஆசிரியையான அம்மா மீது மிகுந்த மதிப்பையும், அன்பையும் வைத்திருந்தவர் இவர்.

ஆரம்பத்தில் கட்டுப்பெத்த தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் கற்றவர். அதன் பின் அமெரிக்கா சென்று பட்டப்படிப்பை முடித்தவர். இவ்விதமே நான் அறிந்திருக்கின்றேன். ஊர் திரும்பியவர் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்று அதனையே தன் வாழ்க்கைத்தொழிலாகத் தொடர்ந்தார். சக மானுடர் மீது பேரன்பு கொண்டவர். அனைவரினதும் அன்பினையும் பெற்றவர்.

எனக்கு இவரைப்பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது 1977 ஆம் ஆண்டின் நவம்பர் 30. அன்று ஶ்ரீதர் திரையரங்கில் நண்பர்களுடன்  'தாயைக் காத்த தனயன்' திரைப்படத்தை 'மாட்னி ஷோ'வாகப் பார்த்து மாலை வீடு திரும்பபோது இவர் எனக்காகக் காத்திருந்தார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது வந்த என்னை அரவணைத்தவாறு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவ்விதம் செல்கையில் நான் அதிர்ச்சியடையாத  வகையில் என் அப்பா இறந்த செய்தியினைத் தெரிவித்து என்னை ஆறுதல் படுத்தினார்.

உலகப் புத்தக நாள்


இன்று, ஏப்ரில் 23,  உலகப்புத்தக நாள்.  என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது என் மூச்சு போன்றது.  எனக்கு வாசிக்கத்தொடங்கியதிலிருந்து  ஒவ்வொரு நாளுமே புத்தகநாள்தான். எண்ணிப்பார்க்கின்றேன். வாசிப்பும், யோசிப்பும் அற்று ஒரு  நாள் கூடக் கழிந்ததில்லை.

ஆனால் வாசிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரும்பாலானவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் , புரியாமல் வாழ்கின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த இது போன்ற நாளொன்று அவசியமானது.

மானுடர்கள் வாசிப்பின் அவசியத்தை உணரவேண்டும்.  வாசிப்பு எத்தகையாதகவுமிருக்கலாம், ஆனால் அது தேவையான ஒன்று. புனைவாகவிருக்கலாம், அபுனைவாகவிருக்கலாம், கவிதையாகவிருக்கலாம் , இவ்விதம் எத்துறை சார்ந்ததாகவுமிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

வாசிப்பு சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது. வாசிப்பு இன்பத்தைத்தருகின்றது. வாசிப்பு இருப்புக்கோர் அர்த்தத்தைத் தருகின்றது.

எழுத்து ஒரு கலையாகவிருக்கலாம், தொழில்நுட்ப வழிகாட்டியாகவிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.

புத்தகத்தின் வடிவம் எத்தகையதாகவுமிருக்கலாம். அது அச்சு வடிவிலிருக்கலாம். டிஜிட்டல் வடிவிலுமிருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி அதன் வடிவத்தை மாற்றினாலும், புத்தகம் புத்தகம்தான்.
புத்தகங்களை எந்நாளும் வாசிப்போம்.  புத்துணர்வினை, இன்பத்தினை   அடைவோம். படைப்பாற்றலைப் பெருக்குவோம். சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குவோம். சிந்தனைத் தெளிவை அடைவோம்.
புத்தகங்கள் எம் வழிகாட்டிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள் மட்டுமல்ல, எம் தோழர்களும் கூடத்தான்.

இந்நாளில் நான் இதுவரை வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களை எண்ணிப்பார்க்கின்றேன். அவற்றுக்கு நான் தலை வணங்குகின்றேன். இதுவரை கால என் இருப்பில் என்னுடன் கூடப் பயணித்ததற்காக, என் வாழ்வில் ஓர் அர்த்தம் தந்ததற்காக.

இத்தருணத்தில் இந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.  அவர்கள்  சமூக, பொருளாதார,அரசியல் சவால்களுக்கு மத்தியில் இயங்கியவர்கள். தம் சிந்தனைகளை மானுடர்களின் வளர்ச்சிக்காக, இன்பத்துக்காக எழுத்தில் வடித்து வைத்தவர்கள்.

Monday, April 22, 2024

எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


எழுத்தாளர் க.சட்டநாதனுக்கு இன்று - ஏப்ரில் 22 - பிறந்தநாள்.  இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள். இலங்கைத் தமிழ்  இலக்கியத்தில், உலகத்தமிழ் இலக்கியத்தில் முக்கியமான எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர். சிறுகதை, கவிதை,நாவல் என இவரது இலக்கியப் பங்களிப்பு இருந்தாலும், முக்கியமான பங்களிப்பு இவரது சிறுகதைகளே என்பேன். இவரது சிறுகதைகள் பல தொகுப்புகளாக (மாற்றம் (1980), உலா (1992), சட்டநாதன் கதைகள் (1995), புதியவர்கள்- (2006),  முக்கூடல் - (2010), பொழிவு - (2016), தஞ்சம் (2018)) வெளியாகியுள்ளன.

இவரது கதைகளைப்பற்றி அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் ஏ.ஜே.கனகரத்தினா 'மென்மையான உணர்வுகளை கலை நயத்தோடும் மனித நேயத்தோடும் வெளிப்படுத்துவதில் ஆசிரியர் வெற்றி பெறுவதால், ஈழத்துச் சிறுகதை உலகில் சட்டநாதன் தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளார்' என்று கூறுவார்.

Sunday, April 21, 2024

எம்ஜிஆரின் 'என் தங்கை'


எம்ஜிஆரின் நடிப்பைப் பார்க்கவேண்டுமானால் பார்க்க வேண்டிய திரைப்படம் 'என் தங்கை' அண்ணன் ,தங்கை பாசத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட உணர்ச்சிகரமான கதை. முடிவில் அவலச்சுவை மிகுந்தது.
எம்ஜிஆர் தன் ஆரம்ப காலத்தில் சமூகப்படங்கள் பலவற்றில் நடித்திருக்கின்றார். அந்தமான் கைதி, நாம், என் தங்கை , பணக்காரி அவற்றில் சில. 

Friday, April 19, 2024

எம்ஜிஆருக்கு இளவயதில் அரசியல் போதித்தவர் என்.எஸ்.கே!


    எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடலிது. 'சீர்மேகும் குருபதம்' என்று தொடங்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம் 'சக்கரவர்த்தித் திருமகள்'. ப.நீலகண்டனின் இயக்கத்தில் , ஜி.ராமநாதனின் இசையில், வெளியான இப்பாடலை சீர்காழி கோவிந்தராஜன், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் பாடியிருப்பார்கள. இப்பாடலை எழுதியிருப்பவர் ஒரு நடிகர். இவர் அக்காலகட்டத்தில் பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கின்றார். 'கிளவுன் சுந்தரம்' (‘Clown’ M. S. Sundaram) என்றறியப்பட்டவர். இவரது புகைப்படங்கள் வைத்திருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Wednesday, April 17, 2024

Infowhiz Systems's Services: domain registration, hosting, web design, online security, and email!


இன்ஃபோவிஷ் சிஸ்டம்ஸ் (Infowhiz Systems) domain registration, hosting, web design, online security, and email ஆகிய சேவைகளை நியாயமான விலையில் வழங்குகின்றது. அதன் சேவைகளைப் பாவியுங்கள்! பயனடையுங்கள்!



https://www.infowhizsystems.com/

Tuesday, April 9, 2024

சூரிய கிரகணமும் எம் அந்தர இருப்பும்!


நேற்று நடந்த சூரிய கிரகணம் தற்போதுள்ள சூழலில் மனித வாழ்நாளில் ஒரே தடவையே பார்க்கக் கூடியதொரு வானியல் நிகழ்வு.  எதிர்காலத்தில் மருத்துத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுட வாழ்வைப் பல நூறு வருடங்களுக்கு அதிகரிக்குமென்பது அறிவியல் அறிஞர்களின் நம்பிக்கை. அதுவரை இது முக்கியமானதொரு மானுட வாழ்நாளில் பார்க்க வேண்டியதொரு வானியல் நிகழ்வு.

கணத்துக்குக் கணம் விரிந்துகொண்டிருக்கும் பெரு வெளியில் , பெரு வேகத்துடன் விரைந்து கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றின் அந்தர இருப்பையும், அதில் இருக்கும் எம் இருப்பையும் புரிய வைத்த, உணர வைத்த அற்புதமானதொரு நிகழ்வு.  எமது இருப்பு எவ்வளவு ஆச்சரியமானது. நாமிருக்கும் பூமி விரையும் வேகம் எமக்குத் தெரிவதில்லை. அதை நாம் உணர்வதில்லை. ஆனால் வானில், நம்மைச்சுற்றி எல்லாமே இயங்கிக்கொண்டுதானுள்ளன. ஒரு கணமேனும் ஓய்வற்ற ஓயாத இயக்கங்களுக்குள் இயங்கிக்கொண்டிருக்கினறோம். எல்லாமே ஓய்வற்று இயங்கிக்கொண்டிருக்கின்றன.


இவ்விதமான நிகழ்வுகள் எமக்கு இப்பிரபஞ்சத்தில் எம் இருப்பைப் புரிய வைக்கின்றன. எம்மைப்பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவை பற்றியெல்லாம் சிந்தித்தால், உணர்ந்தால் கணத்துக்குக் கணம் இப்பூமியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இரத்தக்களரிகள், போர்கள், மனித உரிமை மீறல்கள், குற்றச் செயல்களையெல்லாம் நாம் புரிவோமா?

அவ்வகையில் முக்கியமானதொரு வான் நிகழ்வு, அற்புதமானதொரு நிகழ்வு.  பிரபஞ்சத்தின்  நேர்த்தியை, வடிவமைப்பைப் புரிய வைக்கும் சிறு துளியென்றாலும் அச்சிறு துளிக்குள் பொதிந்து  கிடக்கின்றது மானுட சிந்தனைத் தேடலுக்கான  விடையொன்றின்  சிறு துளி.

யாழ்ப்பாணம் போவோமா?

[Disclosure: This post contains Amazon affiliate link. As an Amazon Associate, I earn from qualifying purchases.] https://link.amazon/B0dJT...