Thursday, July 11, 2024

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி உரையாற்றியிருந்தால்...


எழுத்தாளர் அ.ந.கந்தசாமி  மனக்கண் நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் அந்நாவலை அவரது நண்பர் எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் இலங்கை வானொலியில் தொடர் நாடகமாக்கி ஒலிபரப்பினார். மனக்கண் நாவல் பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் தொடராக வெளியானது. மனக்கண் நாவல் தொடராக வெளியானபோது அமரர் ஓவியர் மூர்த்தியின் அழகான ஓவியங்களுடன் வெளியாகியது. நாவலின் முடிவில் அ.ந.க எழுதிய முடிவுரை சிறப்பானதோர் ஆய்வுக்கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளிலொன்று. ஓவியர் மனக்கண் நாவலுக்குத் தீட்டிய ஓவியங்கள் சிலவற்றையும், அ.ந.க மனக்கண்  நாவலுக்கு எழுதிய முடிவுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அ.ந.க மேற்படி முடிவுரையில் கூறிய  கருத்துகளின் சில வரிகளையே இங்குள்ள காணொளியில் பேசுகின்றார். அவர் தனது 44ஆவது  வயதில் மறைந்து போனது துர்ப்பாக்கியமானது. அக்காலகட்டத்தில் இன்றுள்ளதுபோல் அலைபேசியே, ஒலி, ஒளிப்பதிவு கருவிகளோ சாதாரணமாகப் பழக்கத்தில் இல்லை. எனவே அவர் பேசுவதைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் இருந்து பேசியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற என் அவாவின் விளைவே இக்காணொளி.

என் ஆரம்ப காலக் கவிதை முயற்சிகளும் வீரகேசரி, சிந்தாமணி & தினகரன் அமைத்துத்தந்த கவிதைக் களங்களும்!

மானுட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முன் நிற்பது கவிதையே. அதற்கு நிகர் வேறெதுவுமில்லை. குறைந்த வரிகளில் உணர்வுகள் எவையாயினும் அவற்றை வெளிப்படுத்தக் கவிதைகளால்தாம் முடியும். என்னைப்பொறுத்தவரையில் என் கவனம் பதின்ம வயதுகளில் கவிதையின் பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அப்பருவத்துக்குரிய உணர்வுகளுக்குக் கவிதை வரிகள் வடிகால்களாகவிருந்தன. அடுத்து எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள்  மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. கவிதைகளில் அவற்றைக் குறைந்த வரிகளில் வெளிப்படுத்த முடிந்தன. என் எழுத்துகளில்  கவிதைகளுட்பட , நீங்கள் இம்மூவகைப்பண்புகளையும் காணமுடியும்.  இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம்.

இருப்பு பற்றிய என் ஆரம்ப காலக் கவிதையொன்று!


இங்குள்ள தோற்றத்தில் நானிருந்த வேளையிலே , 'ஆத்மாவின் கேள்வியொன்று என்னும் தலைப்பில், எண்பதுகளில் எழுதிய கவிதை வரிகள் இவை.. 16.11.1980இல்  வெளியான வீரகேசரி வாரவெளியீட்டின் உரைவீச்சுப் பகுதியில் பிரசுரமான கவிதை. 
 
 அக்காலகட்டத்தில் வெகுசனப் பத்திரிகைகள் , சஞ்சிகைகள் கவிதையின் புது வடிவமான புதுக்கவிதையின் பக்கம் தம் பார்வையைச் செலுத்தியிருந்தன. வீரகேசரி தனது வாரவெளியீட்டில் 'உரைவீச்சு' ,சிந்தாமணி 'மணிக்கவிதை' , தினகரன் 'கவிதைச் சோலை' என்னும் பெயர்களில் இவ்வகைக் கவிதைகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தன.

Wednesday, July 10, 2024

கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -



இங்கு எனது அண்மையில் முகநூலில் வெளியான கண்ணம்மாக் கவிதையின் சில வரிகளைச் செயற்கை நுண்ணறிவு எவ்விதம் கையாள்கின்றதென்பதைக் காட்டும் காணொளி இது. சில இடங்களில் செயற்கை நுண்ணறிவு தடுமாறி விட்டது. குறிப்பாக காலவெளிப்புள் என்பதில் வல்லினம் மிகும், அதில் செயற்கை நுண்ணறிவு தடுமாறி விட்டது.
 
'பல்'லென்று முறுவலித்தாய் என்பதிலும் தடுமாற்றம் கண்டேன். வ.ந.கிரிதரனை வி.என்.கிரிதரன் என்று மாற்றியதிலும் தடுமாற்றம் கண்டேன். இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு உண்மையில் என்னைப் பிரமிக்க வைத்துத்தான் விட்டது. 
 
என் சொந்தக் குரலை விட தமிழகத் தமிழரின் 'டப்'பிங் குரலும் சுவைக்கத்தான் செய்கின்றது. மோகனுக்கு சுரேந்தர் என்றால் வி.என்.ஜிக்கு Hedra'வின் Ryan!
முழுக்கவிதை வரிகளும் கீழே:
 
கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - 
 
கண்ணம்மா!
காலவெளிப்புள்!
ஆம்! நீ ஒரு புள்தான் என்றேன்.
காலவெளிபுள்தான் என்றேன்.

கவிதை: எழுக அதிமானுடா! - வ.ந.கிரிதரன் -


'எழுக அதிமானுடா!' என்னும் இக்கவிதையை எண்பதுகளில் என் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். தாயகம் (கனடா) பத்திரிகையில் முதன் முதலில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் பிரசுரமானது. எனது 'எழுக அதிமானுடா' , 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்புகளிலும் வெளியானது. எண்பதுகளில் எழுதிய கவிதையின் வரிகளை அக்காலத் தோற்றத்தில் வாசித்தால் எப்படியிருக்கும்? இப்படியிருக்கும்.

எழுக அதிமானுடா!

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட்' சுவர்கள்!
கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில்
மயங்கிக் கிடக்கும்
இட வெளிகள்.

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் கூறுவதென்ன?


ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் வெளி, நேரம் மற்றும் ஒளி வேகம்  பற்றிக் கூறுவதென்ன?

வெளி, நேரம் இரண்டும் சுயாதீனமானவை அல்ல. சுற்றிவர நிகழும் இயக்கங்களால் பாதிக்கப்படுபவை. சார்பானவை. இப்பிரபஞ்சத்தில் ஒளிவேகம் மட்டுமே சார்பற்ற ஒன்று. கால, வெளி இரண்டு பிரிக்கப்பட முடியாதவை. காலவெளி என்றே அவை எப்பொழுதும் இணைந்திருக்கும்.

கவிதை: எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -


நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும்  என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.

'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு' என்னுமிக் கவிதை எண்பதுகளின் ஆரம்பத்தில் என் குறிப்பேடொன்றில் முதன் முதலில் எழுதப்பட்டது. கனடாவிலிருந்து  வெளியான தாயகம் பத்திரிகையில் வெளியானது. பின்னர் எனது கவிதைத்தொகுதிகளான எழுக அதிமானுடா, ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் ஆகிய தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன்  -

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
‘காலத்தின் மாய ‘ வேடங்கள்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...