Saturday, August 16, 2025

இசைக்கு ஏது எல்லை: 'புஞ்சி சமனலி' நெஞ்சங் கவர்ந்த சிங்களப் பாடல்!

பேராசிரியர் சுனில் ஆரியரத்னா

பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவின் இயக்கத்தில்வெளியான திரைப்படம் 'பத்தினி'.   'நாம கடவுள்' புகழ் பூஜா உமாசங்கர் கண்ணகியாக நடித்திருக்கும் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிஙகளத்திரைப்படம். 

பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவைச் (Sunil Ariyaratne)  சிங்களக் கலை,இலக்கிய உலகு நன்கறியும். கவிஞர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதாசிரியர், பாடலாசிரியர் எனச் சிங்களத்திரையுலகில், சின்னத்திரையுலகில் நன்கறியப்பட்ட ஒருவர்.   

காவிய மாந்தர்களை வைத்து இவர் உருவாக்கிய சிங்களத்திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றவை. சிலப்பதிகாரக் கதையை மையமாக வைத்து இவர் எடுத்த சிங்களத்திரைப்படமான 'பத்தினி' பெற்ற வரவேற்பைத்தொடர்ந்து இவர் சித்தார்த்தரின் (புத்தர்) மனைவியான யசோதராவை மையமாக வைத்து உருவாக்கிய Bimba Devi Alias Yashodhara என்னும் திரைப்படமும்  2018இல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

Thursday, August 14, 2025

பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் பதிவுகள் பற்றி வெளியான ஊடகக் குறிப்புகள் சில..


'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் இணைய இதழ். தமிழ் இணைய இதழ்களில்  வெளியாகும் இணைய இதழ்களில் திண்ணை, பதிவுகள், அம்பலம், ஆறாந்திணை ஆகியவை ஆரம்ப காலத்து இணைய இதழ்கள். பதிவுகள் இணைய் இதழின் ஆரம்பக் காலகட்டத்தில்  பதிவுகள் பற்றி ஊடகங்களில் வெளியான குறிப்புகளில் சில இவை.

'பதிவுகள்' பற்றி விகடன்...

ஆனந்த விகடன் ஆவணி 20,2000 இதழில்...

உலகே..உலகே..உடனே வா; காந்தி இருந்திருந்தால்... 

'பதிவுகள்' இணைய இதழில் (http://www.pathivukal.com) மகாத்மா காந்தியின் பேரன் டாக்டர் சாந்தி காந்தியைப் பற்றிக் கடுமையான விமரிசனம் வந்திருக்கிறது. அவர் இருந்திருந்தால் அமெரிக்காவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியின் பக்கம் தான் இருந்திருப்பார் என்று அவர் சொன்னதுதான் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. ஏன்? கட்டுரை  சொல்லும் விளக்கம்- 

"அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான கறுப்பின மக்கள் ஜனநாயகக் கட்சியினையே ஆதரிக்கின்றார்கள். குடியரசுக் கட்சியின் செயற்பாடுகள் இனத்துவேசம் பிடித்தவையெனக் கருதுகின்றார்கள். இம்முறை உப ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 'டிக் செய்னி' தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டலா சிறையிலிருந்து விடுவிக்கப் படுவதற்கு எதிராக அமெரிக்கக் காங்கிரஸில் வாக்களித்தவர். முன்னால் வெள்ளையினச் சிறுபான்மை அரசிற்கெதெராகத் தடைகள் கொண்டு வருவதை பலமுறை எதிர்த்துக் காங்கிரஸில் வாக்களித்தவர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்ஸினைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதியதால்தான் தான் அவ்விதம் வாக்களித்ததாக நாடகமாடுகின்றவர். தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரின் கொள்ளுப் பேரன் , 'தென்னாபிரிக்க மகாத்மா'வின் விடுதலைக்கு எதிராக வாக்களித்தவரின் கட்சிக்காகப் பிரசாரம் செய்வதை என்னவென்பது?"

Wednesday, August 13, 2025

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -


தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வெளியான நாவலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இந்நாவல் விடுக்கும்  முக்கியமான  அறைகூவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்;

1.பஞ்சமர் என்னும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரவினர் தம் சமூக விடுதலைக்காகத் தம்மை அடிமைகளாகத் தொடர்ந்தும் வைத்திருக்கும் சமூகத்தொழில்களைச் செய்வதிலிருந்து வெளிவரவேண்டும்.  அவ்வகையான தொழில்களைக் குறிப்பிட்ட சமூகத்தினர்தாம் செய்ய வேண்டும் என்னும் நிலை மாற வேண்டும். மேனாடுகளில் எவ்விதம் மானுட சமுதாயத்துக்கு வேண்டிய பல் தொழில்களையும் கற்று அவ்வகையான தொழில்களைச் செய்கின்றார்களோ அவ்விதமே அவ்வகையான தொழில்கள் செய்யப்பட வேண்டும்.  இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் சிகை அலங்காரத் தொழிலாளியான முத்தனும், அவனது மனைவியும் தாம் வாழ்ந்த குடிசையிலிருந்து புலம் பெயர்கின்றார்கள். புலம் பெயர்ந்து நாட்டின் இன்னுமொரு பகுதிக்குச் செல்கினறார்கள்.  அவர்கள் சென்றதும் அவர்கள் வாழ்ந்த குடிசை சமூக மாற்றத்தை . விடுதலையை விரும்பும் ஏனைய தமிழ்ச் சமூக இளைஞர்களால் எரிக்கப்படுகின்றது. அந்த எரித்தல் என்பது ஒரு குறியீடு.  'குடிமைத்தொழில் செய்யும் குடிமகன் ஒருவன் வாழுவதற்கு இனி அந்தக் குடிசை அங்கு வேண்டியதில்லைத்தான்' என்று நாவல் முடிகின்றது.

Sunday, August 10, 2025

காலத்தால் அழியாத கானம் - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?


கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. கவிஞரின்  எளிய, இனிய தமிழ் கேட்பவரைக் கிறங்க வைப்பது. இது போல் தெளிவான வசனங்களை உள்ளடக்கிய பாடல்களைத் தற்போது கேட்பது அரிது. மெல்லிசை மன்னர்களின் இசையில் , டி.எம்.எஸ் குரலில், எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில் ஒலிக்கும் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் அலுப்பதில்லை.
 
"ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ"
 
"ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு"
 
"உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு"
 
என் மனத்தைக் கவர்ந்த பாடல் வரிகள். சங்கப்பாடல்கள் பலவற்றில் ஊரெல்லாம் தூங்கையில் தூங்காமல் விழித்திருக்கும் பெண் ஒருத்தியின் உணர்வுகளைக் கவிஞர்கள் பலர் விபரித்திருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு கவிஞர் கண்ணதாசன் ஆணொருவனின் இவ்வித உணர்வுகளை விபரித்திருக்கின்றார். அதுவே சுவைக்கின்றது.
 
அதே சமயம் சங்ககாலப்பாடல்களில் பெண் தூங்காமல் விழித்திருப்பது காதலால், காதற் பிரிவால், பொருள் தேடித் தொலைதூரம் சென்று விட்ட தலைவனின் பிரிவால், ஆனால் இவனோ தன் மக்களின் விடுதலைக்காகப் போராடும் போராளி. தன் இலட்சியப் போராட்டத்தின் காரணமாக இரவில் விழித்திருப்பதும் இவன் வாழ்க்கையாகிப் போனது.  
 
'அழும் நிலவு' அற்புதமான படிமம். நிலவு அழுவதாக எவரும் எழுதி நான் வாசித்ததில்லை.
 
"பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு"
 
இதைவிட விடுதலைப் போராளி ஒருவனின் உணர்வுகளை எவ்விதம் விபரிப்பது?
நான் முதல் பார்த்த எம்ஜிஆர் , ஜெயலலிதா இணைந்து நடித்த படம் மட்டுமல்ல, அவர்களே இணைந்து நடித்த முதல் படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.

நவ இந்தியாவின் குரலாக ஒலிக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்!


உலகப் பொருளாதாரத்தை உருட்டிச் செல்லும், பொருளாதாரரீதியில் வலிமை மிக்க நாடாக, உருமாறியிருக்கும் புதிய  இந்தியாவின் குரலாக ஒலிக்கிறது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் குரல்.

தற்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைக்குக் காரணங்கள் எவை என்பதை ஆராயும் காணொளி.



https://www.youtube.com/watch?v=iLFV8vyR3Tk

இந்தியாவின் வளர்ச்சி , இந்திய , அமேரிக்க உறவும் பற்றி, நன்கு அலசுமொரு காணொளி!


மாறி வரும் உலகில் , வளர்ந்து வரும் இந்தியாவின் நிலையை விளக்கும் தொழில் அதிபர்  எலன் மாஸ்க் ஆற்றுவது போன்ற உரையை வெளிப்படுத்தும் காணொளி.  யாரோ ஒருவர் செயற்கைத்  தொழில் நுட்பம் எலன் மஸ்க் உரையாற்றுவதுபோல் உருவாக்கியிருக்கும் காணொளி போலவே இந்தக் காணொளி  தென்படுகின்றது. ஆனால் தற்போது நிலவும் அரசியற் சூழலை நன்கு அலசும் காணொளி என்பதால் பகிர்ந்துகொள்கின்றேன்.

இந்தியாவின் வளர்ச்சி, தனித்துச் சுயாதீனமாக இயங்கும் நிலை இவையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்தியா மீதான வரி  அதிகரிப்புக்கு உண்மையான காரணம்.  

ஏனைய நாடுகளில் முன்பு போல் அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.  குறிப்பாக இந்தியா அமெரிக்காவுடனான கூட்டுறவை விரும்பும் அதே சமயம் , அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட அதனால் முடியாது என்பதை உணர்ந்ததால் ஏற்பட்ட விரக்தியே ட்ரம்பின் இந்தியா பற்றிய நிலை மாறியதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துரைக்கும் காணொளி.

https://www.youtube.com/watch?v=4QSgjXvJBCM

Saturday, August 9, 2025

எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜனுடனான நேர்காணலொன்று!


அண்மையில் தற்செயலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் நேர்காணலைப் பார்த்தேன். கேட்டேன். சுஜாதா ரங்கராஜன் அவர்களின் பாசாங்குத்தனமற்ற, நேர்மையான, சில சமயங்களில் அப்பாவித்தனமான பதில்கள் இந்நேர்காணலின் முக்கிய அம்சம்.

இந்நேர்காணல் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பன்முக ஆளுமையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாகவிருக்கிறது என்பேன்.

இறுதியாகத் தன் கணவரைப்பற்றிக் கூறுகையில் அவர் சிறந்த மனிதர்,. சிறந்த எழுத்தாளர். சிறந்த கணவர் என்று வரிசைப்படுத்திக் கூறுவார் சுஜாதா ரங்கராஜன். அது இந்நேர்காணலின் உச்சம்.

இந்நேர்காணலின்போது திருமதி சுஜாதா முதுமையின் தாலாட்டில் இருப்பவர். காதல், வாழ்க்கை, இருப்பு பற்றிய இவரது சிந்தனைகள் முதிர்ச்சியானவை. இவரது பதில்களிலிருந்து நான் உணர்வது எழுத்தாளர் சுஜாதாவுக்கும் , இவருக்குமிடையில் நிலவிய காதலை. இருவருமே வெளிப்படையாக வெளிப்படுத்திக்கொள்ளாவிட்டாலும் , நிலவிய அந்தக் காதல்தான் அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்திருக்கின்றது. அந்தக் காதலே திருமதி சுஜாதாவைத் தன் கணவர் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் கூடவே செல்ல வைத்தது. இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து , இணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இன்று தன் கணவரை நினைவு கூர்கையில் கூட (அவரது அசட்டுத்தனங்களையும் உள்ளடக்கி) திருமதி சுஜாதாவால் மகிழ்ச்சியுடன் நினைவு கூர முடிகின்றது. தன் கணவரின் அசட்டுத்தனங்களை எண்ணி அவரால் சிரிக்க முடிகின்றது. அதற்குக் காரணம் அவரது ஆழ்மனத்தில் அவர் கணவர் மேல் அவர் கொண்டிருக்கும் காதல் என்றே நான் உணர்கின்றேன். 

தாமரைச்செல்வியின் 'சுமைகள்'

இன்று எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'சுமைகள்' நாவலின் புதிய பதிப்பு என்னை வந்தடைந்தது.  அதற்காக அவருக்கு என் நன்றி. எழுபதுகளின் இறுதி...