Thursday, August 14, 2025

பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் பதிவுகள் பற்றி வெளியான ஊடகக் குறிப்புகள் சில..


'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் இணைய இதழ். தமிழ் இணைய இதழ்களில்  வெளியாகும் இணைய இதழ்களில் திண்ணை, பதிவுகள், அம்பலம், ஆறாந்திணை ஆகியவை ஆரம்ப காலத்து இணைய இதழ்கள். பதிவுகள் இணைய் இதழின் ஆரம்பக் காலகட்டத்தில்  பதிவுகள் பற்றி ஊடகங்களில் வெளியான குறிப்புகளில் சில இவை.

'பதிவுகள்' பற்றி விகடன்...

ஆனந்த விகடன் ஆவணி 20,2000 இதழில்...

உலகே..உலகே..உடனே வா; காந்தி இருந்திருந்தால்... 

'பதிவுகள்' இணைய இதழில் (http://www.pathivukal.com) மகாத்மா காந்தியின் பேரன் டாக்டர் சாந்தி காந்தியைப் பற்றிக் கடுமையான விமரிசனம் வந்திருக்கிறது. அவர் இருந்திருந்தால் அமெரிக்காவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சியின் பக்கம் தான் இருந்திருப்பார் என்று அவர் சொன்னதுதான் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது. ஏன்? கட்டுரை  சொல்லும் விளக்கம்- 

"அமெரிக்காவில் வாழும் பெரும்பாலான கறுப்பின மக்கள் ஜனநாயகக் கட்சியினையே ஆதரிக்கின்றார்கள். குடியரசுக் கட்சியின் செயற்பாடுகள் இனத்துவேசம் பிடித்தவையெனக் கருதுகின்றார்கள். இம்முறை உப ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 'டிக் செய்னி' தென்னாபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டலா சிறையிலிருந்து விடுவிக்கப் படுவதற்கு எதிராக அமெரிக்கக் காங்கிரஸில் வாக்களித்தவர். முன்னால் வெள்ளையினச் சிறுபான்மை அரசிற்கெதெராகத் தடைகள் கொண்டு வருவதை பலமுறை எதிர்த்துக் காங்கிரஸில் வாக்களித்தவர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்ஸினைப் பயங்கரவாத இயக்கமாகக் கருதியதால்தான் தான் அவ்விதம் வாக்களித்ததாக நாடகமாடுகின்றவர். தென்னாபிரிக்க மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரின் கொள்ளுப் பேரன் , 'தென்னாபிரிக்க மகாத்மா'வின் விடுதலைக்கு எதிராக வாக்களித்தவரின் கட்சிக்காகப் பிரசாரம் செய்வதை என்னவென்பது?"

'பதிவுகள்' பற்றித் தமிழ் 'கம்யூட்டர்'

[தமிழகத்திலிருந்து கணினித் தொழில் நுட்பம் சம்பந்தமாக மாதமிருமுறை வெளிவரும் பிரபல சஞ்சிகை 'தமிழ் கம்யூட்டர்'. அதன் ஆகஸ்ட் 19- செப்டம்பர் 1, 2002 இதழில் 'பதிவுகள்' பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அதனையே கீழே தந்திருக்கின்றோம்.]

பதிவுகள் என்று ஓர் இணைய இதழ் கனடா நாட்டிலிருந்து மாதமொருமுறை வெளிவருகிறது. இதன் ஆசிரியர் திரு வ.ந.கிரிதரன். அரசியல், அறிவியல், திரைப்படம்,இலக்கியம் என பல பகுதிகளாக இவ்விதழ் அமைக்கப் பட்டுள்ளது. நடப்பு அரசியல் நிலவரங்களைப் பற்றிய கட்டுரைகள் அரசியல் பகுதியில் வெளிவருகின்றன. இக்கட்டுரைகள் நிகழ்வுகளின் பின்னணிச் செய்திகளைத் தாங்கியுள்ளன. அணு ஆற்றலிலிருந்து மின்னாற்றலைப் பெறுவது எப்படி என்பது போன்ற பயனுள்ள அறிவியல் கட்டுரைகள் எளிமையான தமிழில் தரப்பட்டுள்ளன. அதே பகுதியில் ஐன்ஸ்டீனின் அணு ஆயுத அபாயம் குறித்த சிந்தனைகளும் இடம் பெற்றுள்ளன. சிறுகதை, கவிதை, கதை என வெவ்வேறு பகுதிகளில் வழங்கப் படும் இலக்கியப் படைப்புகள் பெரும்பாலும் தமிழர் வாழ்வு நிலையை விவரிப்பதாகவே அமைந்துள்ளன. பிள்ளைகளால் புறக்கணிக்கப் படும் பெற்றோரின் அவதியை படம் பிடிக்கும் ஓரங்க நாடகம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. பதிவுகள் இதழ் கணினி உலகில் வெளிவரும் புதிய செய்திகளையும் வெளியிடுகிறது.

திரைப்படப் பகுதியில், பிப்ரவரி மாதம் வெளியான செய்தியொன்று இதுவரையில் மாற்றப் படாமல் இருக்கிறது. தமிழ் மற்றும் இலக்கிய உலகில் நடைபெறவுள்ள நிகழ்சிகளை முன்னதாக அறிவிக்கும் நிகழ்வுகள் பகுதியிலும் சில பழைய செய்திகள் காணப் படுகின்றன.

இவ்விதழின் பிற பகுதிகளாக இலவச விளம்பரப் பகுதி, வாசகர்களின் கருத்துகளை வழங்கும் வாசகர் ஒலி பகுதி, நூல்களை விறபனை செய்யும் தமிழ் புத்தகசாலை பகுதி ஆகியனவும் இடம் பெறுகின்றன. கனடாவிலிருந்து வரும் இதழ் என்பதால் கனடா தொடர்புள்ள செய்திகளும் நிறைய உள்ளன.

பதிவுகள் இதழை பார்வையிட www.pathivukal.com என்ற முகவரிக்குச் என்று பார்க்கலாம். இத்தளம் இயக்க நேர எழுத்துரு மாற்றம் (Dynamic Fonts)  என்ற பயன்பாட்டில் அமைக்கப் பட்டுள்ளதால் நம்முடைய கணினியில் ஏற்கனவே தமிழ் பாஃண்டுகள் நிறுவப் பட்டிருக்க வேண்டியதில்லை. எனினும் தமிழ் வருவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் முரசு அஞ்சல் எழுத்ததுருவை இத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பார்வையிடலாம்.   - தனா -


 தமிழ் இலக்கியம் 2004 கருத்தரங்கில் பா.ராகவன்! 

கோ. ராஜாராம் நடத்திக்கொண்டிருக்கிற 'திண்ணை' என்கிற மின்னிதழும் வ.ந. கிரிதரனின் 'பதிவுகள்' மின்னிதழும் தொடர்ந்து தீவிரமாக, கட்டுரை இலக்கியத்துக்கு ஆற்றிவரும் பங்கினைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மிகச் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட மாலனின் 'திசைகள்' குறுகிய காலத்தில் செய்திருக்கும் சாதனைகள் பிரமிப்பூட்டுபவை.

- தமிழ் இலக்கியம் 2004 கருத்தரங்கில் வாசிக்கப் பட்ட  எழுத்தாளர் பா.ராகவனின் ஆய்வுக் கட்டுரையில்..
 
பதிவுகள் பற்றி 'காலச்சுவடு'...
 
காலச்சுவடு ஏப்ரல் 2006வணிக நோக்கில்லாத சில இணைய இதழ்களும் உருவாகியுள்ளன.  திண்ணை, தமிழோவியம் வாராவாரமும்,  திசைகள் மாதமொருமுறையும், பதிவுகள், நிலாச்சாரல் ஆகியவை எப்பொழுதெல்லாம் வரமுடியுமோ அப்பொழுதும் வெளிவருகின்றன. இவை அரசியல், சமூகம், இலக்கியம், சினிமா எனப் பல விஷயங்களை விவாதிக்கின்றன. இந்த இதழ்களின் சிறப்பம்சம் இவற்றில் எழுதுபவர்கள் பலரும் இணையத்தில் மட்டுமே எழுதுபவர்கள்.   - 'தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்' - பத்ரி சேஷாத்ரி ( காலச்சுவடு ஏப்ரல் 2006)

பதிவுகள் பற்றி 'கீற்று.காம்'....

மெல்ல இனி தமிழ் சாகும் என்று ஆங்காங்கே சில பஞ்சுத் தலையர்கள் விசனப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னைக்கு ஒப்பிடுகையில் தற்போது தமிழ் இதழ்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் அதிகரித்து உள்ளனர். தமிழகம் தாண்டி. இந்தியா தாண்டிருப்பவர்கள் அச்சிட்ட இதழ்களை பெற்றுக் கொள்ள இதழ்களைவிட அஞ்சல் விலை பன்மடங்காகிப் போய் விடும் நிலையில் இணையத்தை போல் சவுகரியமான ஒர் ஊடகம் வேறு ஏதுமில்லை என்பது சுத்தமான உண்மை.வலைத் தளங்களும், வலைப் பதிவுகளும் நாளுக்கு நாள் றுக்கமாகிப் கொண்டிருக்கிறது. அச்சில் வெளிவரும் முன்னணி இதழ்களும் இணையத்திலும் தங்கள் இதழ்களை வெளியிட்டு வருகின்றன. இணையம் புகுபவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அறிந்த ஒரு மின்னிதழாக "பதிவுகள்' தளத்தை குறிப்பிடலாம். மாத இதழென்ற அறிவிப்போடு அவ்வாறே புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த இணைய இதழின் ஆசிரியர் வ.ந. கிரிதரன் ஆவார். அரசியல் கவிதை, சிறுதை, கட்டுரை நூல் விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல், சினிமா, நாவல், வாதம், ஆகியவைகளோடு உங்கள் நலம், தமிழ் வர்த்தக கையேடு, இலவச வரிவிளம்பரம், நூல் அங்காடி மற்றும் வாசகர் எதிரொலி என பல அடுக்குகளை கொண்டு கனத்துக் கிடக்கிறது இந்தத் தளம்.

உலகத்தின் அனைத்து மூலையிலும் உள்ளழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை பதியும் ஒரு தளம் என்றால் மிகையாகாது. அரசியல் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்க வேண்டிய சிறப்புப் பகுதி சிறப்பான ஆங்கிலக் கட்டுரைகளையும் ஏற்றுகிறார்கள். இளம் எழுத்தாளர்களை ஊக்கப் படுத்தும் வகையில் அவர்களின் படைப்புகளை தக்க ஒவியங்கள்/புகைப்படங்கள் இணைப்புடன் வெளியிடுவது இவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு சான்று. விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் இங்கு புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. இன்று தமிழ் அச்சேடுகளில் எங்கும் காணக் கிடைக்காத அறிவியல் கட்டுரைகளை பதிவுகள் தளத்தில் காணலாம். பதிவுகள் தளத்தின் படைப்புகளை யாரும் எடுத்தாளலாம் என்று பெருந்தன்மையோடு அனுமதித்திருக்கும் நிலையில் அச்சு இதழ்களும் பிற இதழ்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கள் வர்த்தகம் குறித்து இலவசமாக விளம்பரம் செய்து பயன் அடையுங்கள் என்று வாசல் திறந்து வாய்ப்பளித்து உள்ளது இந்த இதழ். தமிழர் விழாக்களை முன்னிட்டு சிறப்பிதழ்களும் புதுப்பிக்கப்படுகின்றன. உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், இலக்கிய மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்களுடன் செய்தி வெளியிடப்படுகிறது. நல்ல திரைப்படங்கள் குறித்து சிறப்பான விமர்சனங்களும் நூல் மதிப்புரைகளும் பாராட்டத் தக்கவைகள். வீண் அரட்டைகளும் விவாதங்களும் இந்த தளத்தில் இல்லை. ஆக்கப் பூர்வமான படைப்புகளை எதிர்பார்க்கும் எவரும் இந்த தளத்தை திறக்கலாம் தங்கள் படைப்புகள் காலத்தால் அழியாமலும் வெகுமக்களால் படிக்கவும் பாராட்டவும் பட வேண்டும் என்று விரும்புவர்கள் உடனடியாக இந்த இணைய இதழை காணுங்கள். பதிவுகள் தளம் காலத்தின் அத்தனை நிகழ்வுகளையும் மிகச் சரியாக பதிவு செய்து வருகிறது. பாராட்டலாம் பார்த்து ருசிக்கலாம். இணைய முகவரி www.pathivugal.com

'பதிவுகள்' பற்றித் 'தென்றல்'....

[தென்றல் வட அமெரிக்கத் தமிழர்களுக்காக C.K.வெங்கட்ராமனால் ஆறாந்திணை / Chennaionline ஸ்தாபனத்துடன் இணைந்து மாதமொருமுறை வெளியிடப்படும் இதழ்.  தென்றல் இதழின் நவம்பர் 2001 இதழில் சரவணனால் பதிவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதையே கீழே காண்கின்றீர்கள்.]

நேரத்தை உபயோகமான முறையில் செலவழிக்க விரும்புபவர்கள் ஒரு முறை பதிவுகள் இணையத் தளத்துக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு வரலாம். அந்த அளவுக்கு பதிவுகளில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தீவிர இலக்கியம் மட்டுமல்லாமல் அத்தனைத் துறைகளிலும் தீவிரம் தெரிகிறது. அரசியல், கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், நிகழ்வுகள், சினிமா, அறிவியல், தமிழ் பத்திரிகைகள், தமிழ் இதழ்கள், தமிழ் இலக்கிய பக்கங்கள், ..எனப் பலதரப்பட்ட விசயங்கள் குறித்தும் இந்த இணையத் தளத்தின் வழியாக அறிந்து கொள்ள முடியும்.கனடா வாழ் தமிழர்களை எல்லாம் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் படியாக கனடா தமிழர்களுக்கான சிறப்புப் பக்கம் ஒன்றும் வடிவமைக்கப் பட்டுள்ளது. தமிழ்ப் புத்தகங்களை விற்பனை செய்வதற்கென்றே புத்தக அங்காடியும் நிறுவப்பட்டுள்ளது.  மேலதிக விபரங்களுக்கு sales@pathivukal.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். பதிவுகள் வழங்குமின்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு. இதுவோர் இலவச சேவையாகும். நிறுவனங்கள் தங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து அவர்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்க உதவி செய்யும் படியாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

தீவிர இலக்கிய விவாதங்களும், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளும், தொடர் நாவல்களும் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன. தற்போது எழுத்தாளர் மைக்கலின் 'ஏழாவது சொர்க்கம்' நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்டுரைகள் அனைத்தும் காரசாரமாக, நெத்தியடி போல் எழுதப் பட்டுள்ளன. மற்ற தமிழிணையத் தளங்கள், தமிழ்ப் பத்திரிகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிமுகப் படுத்தும் பகுதியும் பதிவுகள் இணையத் தளத்தில் இடம் பெற்றிருக்கிறது. அறிவியல் மற்றும் கணினி தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் தற்போதைய நிலைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. வாசகர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வாசகர் எதிரொலி என்ற பக்கம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இணையத் தளத்தை எழுத்தாளர் வ.ந.கிரிதரன் இருந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இணையத்தில் சிற்றிதழ்கள்....

நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு குறிப்பிடத் தக்கது. சிற்றிதழ்கள் வெளியீட்டு, விநியோகச் சிக்கல்களைத் தாண்டி வாழ்வது கடினம் என்ற நிலையில் பெரும்பான்மையானவை கடல் மேல் குமிழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. பொருளீட்டு நோக்கில் செயற்படும் இலக்கியச் செப்பிடு வித்தைகாரார்கள் இடையில் மொழி, சமூகம், இலக்கியம் ப்ற்றிய பொறுப்புணர்வுள்ள எழுத்தாளர்களையும், வாசகர்களையும் இணைக்கும் மையமாமாக இணையம் விளங்கத் தொடங்கி விட்டது. மணிக்கொடு , எழுத்து என்று தொடங்கி, கணையாழி, காலச்சுவடு, சொல் புதிது என்று தொடர்ந்த சிற்றிதழ் மரபு இப்போது இணையத்திலும் படரத் தொடங்கி உள்ளது. வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் திண்ணை, பதிவுகள், என்ற வலையிதழ்களைத் தொடர்ந்து தாய்த் தமிழகத்திலும் சிற்றிதழ்கள் வலையேறத் தொடங்கியிருக்கின்றன...  -மணி.மு.மணிவண்ணன் -'தென்றல்' பெப்ருவரி 2003 இதழில்

K.S.Sivakumaran on Pathivukal...

K.S.Sivakumaran 

While there are more than a dozen websites in Thamil promoting literary and cultural events of the Thamilians in Thamilnadu in India, it is Giritharan's 'Pathivukal' e-zine that gives almost exclusively a comprehensive coverage of the Lankan Thamil literary scene, apart from other subjects like politics. But the accent in 'Pathivukal' is on contemporary Thamil literature including what is produced in India.  - courtesy: Daily News (Sri Lanka)

No comments:

பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் பதிவுகள் பற்றி வெளியான ஊடகக் குறிப்புகள் சில..

'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் இணைய இதழ். தமிழ் இணைய இதழ்களில்  வெளியாகும் இணைய இதழ்களில் திண்ணை, பதிவுகள், அ...

பிரபலமான பதிவுகள்