கவிஞர் கண்ணதாசனின் சிறந்த திரைப்படப்பாடல்களிலொன்று. கவிஞரின் எளிய, இனிய தமிழ் கேட்பவரைக் கிறங்க வைப்பது. இது போல் தெளிவான வசனங்களை உள்ளடக்கிய பாடல்களைத் தற்போது கேட்பது அரிது. மெல்லிசை மன்னர்களின் இசையில் , டி.எம்.எஸ் குரலில், எம்ஜிஆர் , ஜெயலலிதா நடிப்பில் ஒலிக்கும் பாடலை எத்தனை தரம் கேட்டாலும் அலுப்பதில்லை.
"ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ"
"ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு"
"உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு"
என் மனத்தைக் கவர்ந்த பாடல் வரிகள். சங்கப்பாடல்கள் பலவற்றில் ஊரெல்லாம் தூங்கையில் தூங்காமல் விழித்திருக்கும் பெண் ஒருத்தியின் உணர்வுகளைக் கவிஞர்கள் பலர் விபரித்திருப்பதைக் காணலாம். ஆனால் இங்கு கவிஞர் கண்ணதாசன் ஆணொருவனின் இவ்வித உணர்வுகளை விபரித்திருக்கின்றார். அதுவே சுவைக்கின்றது.
அதே
சமயம் சங்ககாலப்பாடல்களில் பெண் தூங்காமல் விழித்திருப்பது காதலால், காதற்
பிரிவால், பொருள் தேடித் தொலைதூரம் சென்று விட்ட தலைவனின் பிரிவால், ஆனால்
இவனோ தன் மக்களின் விடுதலைக்காகப் போராடும் போராளி. தன் இலட்சியப்
போராட்டத்தின் காரணமாக இரவில் விழித்திருப்பதும் இவன் வாழ்க்கையாகிப்
போனது.
'அழும் நிலவு' அற்புதமான படிமம். நிலவு அழுவதாக எவரும் எழுதி நான் வாசித்ததில்லை.
"பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு"
இதைவிட விடுதலைப் போராளி ஒருவனின் உணர்வுகளை எவ்விதம் விபரிப்பது?
நான் முதல் பார்த்த எம்ஜிஆர் , ஜெயலலிதா இணைந்து நடித்த படம் மட்டுமல்ல, அவர்களே இணைந்து நடித்த முதல் படமும் ஆயிரத்தில் ஒருவன்தான்.
No comments:
Post a Comment