Saturday, August 30, 2025

நெஞ்சை அள்ளும் 'மதில்கள்' உரையாடல்! அடூர் கோபாலகிருஷ்ணனின் செதுக்கிய திரைமொழி!


அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில், திரைக்கதையில், தயாரிப்பில் வெளியான மதிலுகள் (மதில்கள்) மலையாளத் திரைப்படத்தின் மூலக்கதை எழுத்தாளார் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியது. அவரது சொந்த அனுபவங்களையொட்டி எழுதிய நாவலாகக் கருதப்படுவது 'மதில்கள்' குறுநாவல். 

நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற திரைப்படத்தில் (இயக்கம், நடிப்பும், ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத் திரைப்படம்) பஷீராக  மம்முட்டி நடித்திருப்பார். கதையின் பிரதான பெண் பாத்திரமான நாராயணியை படம் முழுவதும் வெளிப்படுத்த மாட்டார்கள். குரல்தான் அவரை அடையாளப்படுத்தும். குரலுக்குச் சொந்தக்காரி நடிகை K. P. A. C. லலிதா.  இவர் இயக்குநரும், தயாரிப்பாளருமான பரதனின் மனைவி. சாந்தம், அமரம் (இவரது கணவர் பரதன் இயக்கியது) ஆகிய படங்களில் நடித்ததற்காக இரு தடவைகள் இந்திய் அரசின் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மணிரத்தினத்தின் அலைபாயுதே, காற்று வெளியிடை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியின் தாயாராக் நடித்திருக்கின்றார். இவரது மகன் சிதார்த் பரதனும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவரை உணர்வுகளின்  இராணி என்பர். அவ்வளவுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பதில் வல்லவர் இவர்.

பஷீர் அரசியல் காரணங்களுக்காகத் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பவர். நாராயணியோ கொலைக்குற்றத்துகாக ஆயுள் தண்டனை பெற்ற கைதி. இருவரையும் சிறைச்சாலை மதில் பிரிக்கின்றது. இருவருக்கிடையிலும் நட்பு , காதலுடன் கூடிய நட்பு மலர்கின்றது. இங்குள்ள காணொளியிலுள்ள உரையாடல் இத்திரைப்படத்தின் முக்கியமான ஒரு பகுதி. அடூர் கோபாலகிருஷ்ணனின் செதுக்கிய திரைமொழிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. மலையாள மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலுள்ள நெருக்கத்தை எனக்கு உணர்த்தியது  இந்த உரையாடல். இவ்வுரையாடல் அனைத்தையும் ஆங்கில உப தலைப்புகள் இல்லாமலேயே என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. பண்டைத்தமிழ் அல்லவா மலையாளம். நெருக்கம் இல்லாமலா இருக்கும்.

இந்த உரையாடலை முழுமையாகக் கேட்டுப் பாருங்கள். ஒரு தடவை கேட்டாலும் , இவ்வுரையாடலும், காட்சியும் நிச்சயம் உங்கள் வாழ்நாள்  முழுவதும் கூட வரும். உரையாட்ல, குரல்களில் தொனிக்கும் உணர்வுகள், நடிப்பு, ஒலிப்பதிவு இவையெல்லாமே அதற்கு முக்கிய காரணங்கள்.


இத்திரைப்படத்தைப் பார்த்ததிலிருந்து முதலில் நினைவுக்கு வருவது இந்த உரையாடல்தான்.

"பேரு பறைச்செல்லோ"

"நாராயணி"

"சுந்தரமாய பெயரு"

"வயசு?"

"இருபத்திரண்டு"

"சுந்தரமாய வயசு"

இத்திரைப்படத்தில் நடிப்புக்காக மம்முட்டிக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. நிச்ச்யம் நாராயணியாக நடித்திருக்கும்  K. P. A. C. லலிதாஇன் நடிக்கும் குரலுக்கும் ஒரு விருது கொடுத்திருகக் வேண்டும். 

உரையாடலைக் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=4aFhSDunru4

No comments:

பைந்தமிழ்ச் சாரலின் மெய்நிகர் நிகழ்வு - 'எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் எழுத்துலகம்'

- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி -   *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி - வ.ந.கி இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்க...

பிரபலமான பதிவுகள்