Saturday, August 2, 2025

ஒரு பதிவுக்காக - கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது எட்டுக் கட்டுரைகள் - வ.ந.கிரிதரன் -


 

கணையாழி சஞ்சிகைக்குத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானதோரிடமுண்டு. நீண்ட காலமாக வெளிவரும் சஞ்சிகை, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தையடுத்து , தற்போது இணைய இதழாக வெளிவருகின்றது. 

ஒரு காலத்தில் கணையாழி சஞ்சிகையில் என் எழுத்துகள் வெளிவருவாமா என்று நினைத்திருந்தேன். ஆனால் தமிழகத்திலிருந்து வெளியாகும் சஞ்சிகைகளில் கணையாழியில் மட்டுமே எனது எழுத்துகள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியளிப்பது. 

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகள்:

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன்
2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். 
3.  கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்
4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)
5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்- 
6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -
7.  கணையாழி செப்டம்பர் 2017:  கட்டுரை - 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -
8. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயிஓன் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -
9. கணையாழி மார்ச் 2020: விநாயக முருகனின் 'ராஜிவ்காந்தி சாலை'
10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் "காலவெளி": கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
11. கணையாழி மே 2020: 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற் காதல் பற்றி..'
12. கணையாழி ஜனவரி 2022: பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!


* கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு நூலில் எனது ' அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்' &  'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் ' ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

கணையாழி சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகளில் எட்டுக் கட்டுரைகள் கீழே:

1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!
2. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்'
3.  நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -
4. வானியற்பியற் கட்டுரை : அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்
5. ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!
7. பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
8.  பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...


1. பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனைகள்!

என்னை தனது எழுத்துகளால் ஆட்கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். தனது குறுகிய வாழ்வில் அவரால் எவ்விதம் இவ்விதம் சிந்திக்க  முடிந்தது? செயற்பட  முடிந்தது? எழுத முடிந்தது ? என்று நான் அடிக்கடி வியந்துகொள்வதுண்டு. தனது குறுகிய வாழ்வில் கவிதை, கட்டுரை, புனைகதை என்று அவர் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. அந்நியராதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டின் விடுதலைக்காக, வாழ்ந்த மண்ணில் நிலவிய தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், மூட நம்பிக்கைகள் போன்ற சமூகச் சீரழிவுகளுகெதிராக, சுற்றியிருக்கும் இயற்கைக்காக, வாழும் சக உயிர்களுக்காக  அவரது எழுத்துகள் குரலெழுப்பின. பல்வகைப்பட்ட மானுடரின் உணர்வுகளையும் அவரது கவிதைகள் வெளிப்படுத்தின. தான் வாழ்ந்த காலத்தை மீறிய அவரது சிந்தனையை , அவற்றில் காணப்படும் தெளிவினை அவரது எழுத்துகள் வெளிப்படுத்தின. அத்துடன் சிந்திப்பதுடன் நின்று விடாமல் அதற்கேற்ப நிஜ வாழ்விலும் செயற்பட்டவரும் கூட.  இவ்விதமாகப் பல்வேறு விடயங்களைப்பற்றிச் சிந்தித்த அவரது சிந்தனை மானுட இருப்பு பற்றியும் சிந்தித்தது. இருப்பு பற்றிய சிந்தனைகள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புமொன்று. அக்கேள்விகளெல்லாம் அவருக்கும் ஏற்பட்டன. அக்கேள்விகளுக்கான விடைகளையும் அவர் தர்க்கரீதியாகச் சிந்தித்தார். அச்சிந்தனைப்போராட்டங்களை வெளிப்படுத்தும் அவரது முக்கியமான கவிதையாக  'உலகத்தை நோக்கி வினவுதல்' என்னும் கவிதையைக்  குறிப்பிடலாம். 

தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. ‘இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை ‘ என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் ‘கருத்து முதல்வாதிகள் ‘. இவர்கள் ‘சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது ‘ என்றும், ‘இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு ‘ என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல ‘இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே ‘ என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் ‘பொருள் முதல்வாதம் ‘ எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் ‘பொருள்முதல்வாதிகள் ‘ எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி ‘ஆன்மா நிலையானது, அழிவற்றது ‘ என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே ‘. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் ‘அப்படி எதுவுமில்லை ‘ என்கின்றார்கள். ‘இவ்வியற்கையில் ஏற்பட்ட பாிணாம மாற்றங்களே உயிாினங்கள் உருவாகக் காரணம் ‘ என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். பாரதியாரையும் இந்தத்தத்துவக் குழப்பம் விட்டு வைக்கவில்லையென்பதைத்தான் மேற்படி 'உலகத்தை வினவுதல்' கவிதை வெளிப்படுத்துகின்றது. 

 

‘..நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ ?
பலதோற்ற மயக்கங்களோ ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?
வானகமே! இளவெயிலே! மரச்செறிவே! நீங்களெல்லாம் கானலின் நீரோ ?
வெறுங் காட்சிப் பிழைதானோ ?
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதினால்
நானுமோர் கனவோ ? இந்த ஞாலமும் பொய்தானோ ?
காலமென்ற ஒரு நினைவும்
காட்சியென்ற பல நினைவும்
கோலமும் பொய்களோ ?
அங்கு குணங்களும் பொய்களோ ?.. 


‘இவ்விதமாகக் ‘காண்பவை , கருதுபவை  யாவுமே பொய்யோ ' எனக் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவும் பாரதியார் மேழுள்ள கவிதையின் இறுதியில் பின்வருமாறு முடிக்கின்றார்.

‘..சோலையிலே மரங்களெல்லாம்
தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ ?
இதைச் சொல்லொடு சேர்ப்பீரோ ?
காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ ?
காண்பதுவே உறுதி கண்டோம்.
காண்பதல்லால் உறுதியில்லை.'

ஆரம்பத்தில் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவிய பாரதியார் இறுதியில் பொருள் முதல்வாதியாக முடிக்கின்றார். அதனால் தான் கருத்து முதல்வாதிகளைப் போல் ‘காண்பதெல்லாம் மாயை ‘யென்று முடிக்காமல் ‘காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம் ‘ என்று முடிக்கின்றார். ஆனால் அத்துடன் அவரது சிந்தனைக்குழப்பம், தேடல் முடிவுக்கு  வந்துவிடவில்லை. இவ்விரு போக்குகளையும் ஏற்றுக்கொண்டு அதற்கொரு தீர்வினையும் அவர் முன் வைக்கின்றார். கவிதையின் இறுதியில் 

'காண்பது சக்தியாம்.
இந்தக் காட்சி நித்தியமாம்.' என்று கூறுவார்.

சக்திக்கும், பொருளுக்குமிடையில் ஒரு தொடர்பினை அவர் ஏற்படுத்தி வைக்கின்றார். சக்தியும், பொருளும்  ஒன்று என்கின்றார்.  நவீன விஞ்ஞானம் கூறுவதும் அதைத்தானே.   அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சக்திக்கும் , பொருளுக்குமான சூத்திரம் கூறுவதும் அதைத்தானே. 

இவ்விதமாக பாரதியார் தனிக் கருத்து முதல்வாதியாகவும் இல்லாமல், தனிப் பொருள்முதல்வாதியாகவுமில்லாமல் , கருத்து முதல்வாதத்திற்கும் பொருள் முதல்வாதத்திற்குமிடையில் ஒருவித இணக்கமான போக்கினை, சமரசப் போக்கினைக் கைக்கொள்பவராகக் காணப்படுகின்றார். உண்மையில் பாரதி ‘அல்லா ‘, ‘மகாசக்தி வாழ்த்து ‘ மற்றும் பல பக்திப் பாடல்களின் அடிப்படையில் கருத்துமுதல்வாதியாகத் தென்பட்டாலும், ‘உலகத்தை வினவுதல் ‘ என்ற கவிதையினூடாக நோக்கும் போது மேலே கூறப்பட்டதைப் போல் இருவிதமான தத்துவவியற் போக்குகளுக்குமிடையில் ஒரு சமரசம் செய்பவராகவே தென்படுகின்றார்.  பாரதியாரிடம் காணப்படும் இத்தகைய முரண்பாடுகளெல்லாம் அவரது ஆர்வமிக்க, உலகை அறியும் நோக்கு மிக்க மனப் போக்குகளின் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. இத்தகைய போக்கினையே அவரது ‘சுயசாிதை ‘ என்ற கவிதையின் பின்வரும் வாிகளும் புலப்படுத்துகின்றன.

‘..மாயை பொய்யென முற்றிலும் கண்டனன்.
மற்றுமிந்த பிரமத்தினியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்.
தன்னுடை அறிவினுக்கு புலப்படலின்றியே
தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச்
செம்மையென்று மனத்திடை கொள்வதாம்
தீய பக்தியியற்கை வாய்ந்திலேன்.
சிறுது காலம் பொறுத்தினுங் காண்பமே.. ‘


மாயை பொய்யெனக் கூறும் பாரதியார் ‘பிரமத்தின் இயல்பினை அறிய இன்னும் அருள் பெறவில்லை ‘ என்று கூறும் பாரதியார், அறிவிற்கு புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாத பாரதியார், அத்தகைய அறிவு நிலையினை அடையும் வரை பொறுப்பேன் என்கின்றார். இவ்விதமாக பாரதியாரின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவரது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவரது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.

நன்றி: கணையாழி ஜனவரி 2022

2. தமிழ்நதியின் 'பார்த்தீனியம்'

கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் (2019) இதழில் வெளியாகியுள்ள தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவல் பற்றிய என் விமர்சனக் கட்டுரை. -

அண்மையில் வெளியான தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.

நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது 'எனக்காகக் காத்து நிற்பீர்களா?' என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.

நாட்டின் அரசியல் சூழல் மாறுகின்றது.  அமைதி காக்கும் படையினர் என்ற போர்வையில் இந்தியா தன் படைகளை இலங்கைக்கு அனுப்புகின்றது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அமைதிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்கள், அக்காலகட்டத்தில் நடைபெற்ற ஏனைய இயக்கங்களுக்கும் , புலிகளுக்குமிடையிலான மோதல்கள் (வடக்கில் நிகழ்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனான  மோதல்கள், வன்னியில் நிகழ்ந்த தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகத்துடனான மோதல்கள்) விடுதலைப்புலிகளின் பார்வையில் விபரிக்கப்படுகின்றன.  அக்காலகட்டத்தில் நடைபெற்ற இந்திய அமைதிப்படையினர் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்றவற்றைப்பற்றி நாவல் எடுத்துரைக்கின்றது. மோதல்களினால், சிங்கள இனவாதிகளின் தாக்குதல்களினால் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்லும் வானதியின் குடும்பத்தினரின் நிலையும் நாவலில் விபரிக்கப்படுகின்றது.
 
தமிழ்நதிநாவலின் இறுதி வானதியின் காதல் எவ்விதம் முறிவடைக்கின்றது என்பதை விபரிப்பதுடன் முடிவுறுகின்றது. ஆரம்பத்தில் இயக்கத்தில் செல்லும்போது தனக்காகக் காத்திருக்க முடியுமா என்று வானதியிடம் கேட்டு, அவளது சம்மதத்தைப்பெறும் பரணி, இயக்கத்திலிருந்து விலகி அவளைத்தேடி வருகின்றான். அவனுக்காகவே அதுவரையில் காத்திருக்கும் வானதி அவனுடன் இணைந்து தன் வாழ்வினை ஆரம்பித்திருப்பாள் என்றுதான் பலர் எண்ணக்கூடும். ஆனால் .. நடந்தது வேறு. நாவலின் இடையில் ஒருமுறை பல சிரமங்களுக்குள்ளாகிப்போராளியாகச் செயற்படும் பரணியைச்சந்திக்கச் செல்லும் வானதியிடம் அவன் இனிமேல் இவ்விதம் தன்னை வந்து சந்திக்க வேண்டாமென்று கூறி அனுப்பி விடுகின்றான்.

மீண்டும் இயக்கத்தை விட்டு விலகி, அவளிடம் வந்து மீண்டும் அவள் மீதான தன் காதலைப் பரணி யாசிக்கும்போது , அவள் மறுத்து விடுகின்றாள். காரணம் அவன் மீண்டும் நிலைமை மாறினால், இயக்கத்துக்குத்திரும்பக்கூடும்,  தான் மிகுந்த சிரமங்களுடன் அவனைச்சந்திக்கச்சென்றபோது அவன் தன்னை மீண்டும் வந்து சந்திக்க வேண்டாமென்று கூறியது போன்ற காரணங்களினால் அவனது காதலை ஏற்க அவள் மறுத்து விடுகின்றாள். அவளது உணர்வுகளை நாவலாசிரியர் பின்வருமாறு விபரித்திருப்பார்:

"நான் நாய்க்குட்டி போல உங்களைத்தேடி வர வர என்னிட்டை இருந்து நீங்கள் விலகி விலகிப்போனீங்கள். இனி இஞ்சை வரவேண்டாம் எண்டு  கொஞ்சங்கூட இரக்கமில்லாமச் சொன்னீங்கள். கடைசியா ஈச்சங்குளத்திலை வைச்சு நீங்கள் சொன்னதும் அதைத்தான் ஒரு கட்டத்திலை ஏதோ மனசுக்குள்ள விட்டுப்போச்சு. இப்ப இயக்கத்தை விட்டிட்டு வந்து வாவெண்டு கூப்பிடுறீங்கள். பிறகு இயக்கம் உங்களை வாவெண்டு கூப்பிடேக்கை என்னை விட்டிட்டுப் போவீங்கள். விலகிப் போகவும் நெருங்கி வரவும் உங்களாலை முடியிற மாதிரி என்னாலை முடியேல்லை"

வானதியின் உணர்வுகள் உண்மையிலேயே காதலா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும், வகையில் அமைந்திருக்கின்றன நாவலின் இறுதியில் அவள் நடந்துகொள்ளும் முறை.

போராளியாகச் செயற்படும் ஒருவனைச்சந்திக்கச்செல்லும்போது அப்போராளி அவ்விதம் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என்பது இயல்பானது. ஆனால் அதே சமயம் போராடுவதற்காக அனைத்தையும் விட்டுச்செல்லும் போராளியொருவன், தனக்காகத் தான் விரும்பும், தன்னை விரும்பும் ஒருத்தியைக் காத்து நிற்கச்சொல்வதும் இயல்பானதா என்றால் சிறிது சந்தேகமே. பரணியின் மீதுள்ள காதலால் அவனுக்காகக் காத்து நிற்கும் வானதி, அவன் மிகவும் இலகுவாக அவளை நாடி வரும்போது அவனை நிராகரிக்கின்றாள். ஆனால் நாவலின் ஆரம்பத்தில் அவன் எல்லாவற்றையும் துறந்து போராடப்போகும்போது அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதிமொழி அளிக்கின்றாள். உண்மையில் நாவலின் இறுதியில் அவனை அற்பக் காரணங்களுக்காக நிராகரிக்கும் வானதி, ஆரம்பத்தில் அவன் உறுதிமொழி கேட்கும்போது , 'நீங்களோ எல்லாவற்றையும் துறந்து போராடப்போகின்றீர்கள். உங்கள் வாழ்வோ நிரந்தரமற்றது. உங்களுக்காக நான் எவ்விதம் காத்து நிற்பது?' என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்.

சுருக்கமாகக்கூறப்போனால் பரணி, வானதி ஆகிய இருவருக்கிடையிலான நிறைவேறாத காதலை விபரிப்பதுதான் பார்த்தீனியத்தின் பிரதான கதை. அதனூடு, தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் இயக்கப்பயிற்சிகள் (ராதா, பொன்னம்மான் ஆகியோரிடம் பெறும் பயிற்சிகள்), அக்காலகட்டத்தில் பரணி விடுதலைப்புலிகளின் தலைவருடன் உரையாடுவது, தலைவரின் காதல் திருமணம், பின்னர் இந்தியப்படையினர் இலங்கையில் நடாத்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், அக்காலகட்டத்தில் பிற இயக்கங்களுடன் நடைபெற்ற மோதல்கள், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், இந்தியப்படையினர் அங்கு நடாத்திய மனித உரிமை அத்து மீறல்கள், படுகொலைகள் இவற்றையெல்லாம் விபரித்துச்செல்வதுதான் பார்த்தீனியம் நாவலின் பிரதான நோக்கம்.

தமிழ்நதியின் பார்த்தீனியம்நாவலின் இறுதியில் , இந்தியப்படையினர் நாட்டை விட்டுத்திரும்பிச்செல்கையில் தன் சார்பில் கட்டி அமைத்த 'தமிழ் தேசிய இராணுவ'த்துக்காக இளைஞர்களைச்சேர்ப்பதைப்பற்றியும் நாவல் விபரிக்கின்றது. அவ்விதம் சேர்க்கப்பட்ட தீண்டாமைக்கொடுமையினால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகத்து இளைஞன் ஒருவனைப்பற்றியும் நாவல் விபரிக்கின்றது. தீண்டாமையினால் அவன் பாதிக்கப்பட்டபோது அவன் அடைந்த உணர்வுகளை விபரிப்பதற்குப் பதில், அவன் அதற்காகப் பழி வாங்குவதற்காக தமிழ்த் தேசிய இராணுவத்தில் சேர்வதாகவும், ஆனால் அவனது ஆசைகள் நிறைவேறுவதற்கு முன்னால், பிஸ்டல் குழுவினரால் சுட்டுக்கொல்லப்படுவதாகவும் நாவல் விபரிக்கின்றது. இவ்விதம் தீண்டாமைக்கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட இளைஞனொருவனின் கதை கூறப்பட்டு அவன் முடிவு துரோகியாக முடிக்கப்பட்டிருப்பதை நாவல் தவிர்த்திருக்கலாம் என்ற உணர்வே வாசிக்கும்போது ஏற்பட்டது. அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டிலும் ஜான் மாஸ்ட்டரும் இது பற்றிக்குறிப்பிடும்போது தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவராக வரும் பாத்திரம் இறுதியில் தீயவராகக் காட்டப்பட்டிருபதைத்தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. எனக்கும் அவரது கூற்றில் உடன்பாடே. ஏற்கனவே சமூகத்தில் பாதிப்புக்குள்ளாகிய சமூகமொன்றின் நிலை பற்றிய எதிர்மறையான எண்ணங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அவ்விதமான பாத்திரப்படைப்பு அமைந்து விடலாம். அந்த இளைஞன் தீண்டாமைக்கொடுமைகளினால் அடைந்த உளவியல்ரீதியிலான பாதிப்புகளைப் போதிய அளவு விபரிக்காமல், அவனது உணர்வுகள் நாவலில் விபரிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மேலும் இந்தப்பாத்திரமானது அதன் மீது நடத்தைப்படுகொலை செய்து விட்டு, அதனை நியாயப்படுத்தச்சுட்டுக்கொல்லப்படுவதைப்போன்று அமைக்கப்பட்டிருப்பதாகவே வாசிக்கும் ஒருவருக்குத்தெரியும். எதிர்காலத்தில் இந்தப்பாத்திரப்படைப்பு மிகுந்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பப்போகின்றது. இதுபோல் நாவலில் இயக்க மோதல்கள் விபரிக்கப்படும் விதமும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தும் சாத்தியங்களுள்ளன.

இவைு 'பார்த்தீனியம்' மீதான என் முதற்கட்ட வாசிப்பின் எண்ணப்பதிவுகள். எதிர்காலத்தில் அதன் மீதான விரிவான வாசிப்பின் பின்னர் மீண்டும் விரிவாக என் கருத்துகளைத்தெரிவிப்பேன்.

நன்றி: கணையாழி அக்டோபர் 2019, பதிவுகள்

3.  நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! -

 அண்மையில் மறைந்த விஞ்ஞானப் புனைகதையுலகில் முக்கிய படைப்பாளியாக விளங்கிய ஆர்தர் சி. கிளார்க்கை ஒருமுறை என் வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் வாழ்க்கைச் சரித்திரத்தில் அதுவொரு முக்கிய சந்திப்பாகவும் அமைந்து விட்டது. மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலைப் பட்டப்படிப்பினை முடித்துப் அதற்குரிய சான்றிதழினை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பெற்றது அவரது கைகளிலிருந்துதான். அவர்தான் அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்தார். அவரது நினைவாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.-  இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புனைகதையுலகில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான மூலவர்களாக மூவர் குறிப்பிடப்படுவார்கள். ஒருவர் ஐசக் அசிமோவ். ரஷிய நாட்டவர். அடுத்தவர் அமெரிக்கரான ரொபேட் ஏ றெய்ன்லெய்ன். இவர் மிசூரியைச் சேர்ந்தவர். அடுத்தவர் ஆர்தர் சி.கிளார்க். இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்.

ஆர்தர் சி. கிளார்க் ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அண்மையில் மறையும் வரையில் இலங்கையில் வசித்து வந்தாலும் அவர் பிறந்தது இங்கிலாந்திலுள்ள 'மைன்ஹெட்' என்னுமிடத்தில்தான். 1917இல் பிறந்த அவர் இலண்டனிலுள்ள 'கிங் காலேஜ்'ஜில் இயற்பியல் மற்றும் கணித்தில் தனது பட்டப்படிப்பினை முதற்பிரிவுச் சித்தியுடன் நிறைவு செய்தவர். மிகவும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானப் புனை கதை எழுத்தாளராக விளங்கிய கிளார்க் ஒரு விஞ்ஞானியும் கூடத்தான். தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்களின் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்தின் பிதாமகரே இவரேதான். ஏனெனில் பூமிக்கான தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்கள் பற்றிய கோட்பாட்டினை அன்றைய காலத்தில், நாற்பதுகளிலேயே, எதிர்வு கூறியவர் இவர். மேலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராகவும் இவர் பணிபுரிந்திருக்கின்றார்.

விஞ்ஞானப் புனைகதையுலகின் முக்கியமான படைப்பாளியான ஆர்த்ர் சி. கிளார்க்கின் படைப்புகள் மானுட இனத்தைப் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொண்டிருப்பவை. அவரது படைப்புகள் அவற்றின் தெளிவுக்காகவும், கற்பனை வளமை மிக்க எதிர்வு கூறல்களுக்கும் பிரசித்தி பெற்றவை. ஏற்கனவே கிடைக்கப்பெற்ற அறிவியற் தகவல்களின் அடிப்படையில், அறிவுபூர்வமான, புதிய கண்டுபிடிப்புகளை எதிர்வு கூறின அவை. அத்தகையதொரு கண்டுபிடிப்பே மேற்படி 'பூமிக்கான தகவல் பரிமாற்றத்திற்குரிய செயற்கைக் கிரகமெ'ன்பதும். இப்பிரபஞ்சத்தில் மானுடர் எப்படியும் தப்பிப் பிழைத்து விடுவார்களென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையினைப் புலப்படுத்தும் படைப்புகளை அவர் படைத்தார். மானுடர்கள் ஒருகாலத்தில் அழிந்து விடுவார்களென்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. சகலபிரச்சினைகளுக்கும் மத்தியில் அவர்கள் எப்படியும் தப்பிப் பிழைத்து விடுவார்களென்று அவர் உறுதியாக நம்பினார். அவர்கள் எப்படியும் தப்பிப் பிழைப்பதற்குரிய வழியொன்றினை கண்டு பிடித்து விடுவார்களென்பதில் அவருக்குத் திடமான நம்பிக்கையிருந்தது. அத்துடன் அவர் மானுடர் மட்டும்தான் இப்பிரபஞ்சத்தின் ஒரேயொரு நுண்ணறிவுமிக்க, புத்திசாதுரியம் மிக்க உயிரினமென்றும் நம்பவில்லை. பரந்து, விரிந்து கிடக்குமிந்தப் பிரபஞ்சத்தில், நம்மைப்போன்ற புத்திசாதுரியம் மிக்க உயிரினங்கள் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சாத்தியங்களை அவர் திடமாகவே நம்பினார். இத்தகைய காரணங்களினால் மானுடரின் எதிர்காலம் பற்றிய ஆக்கபூர்வமான நம்பிக்கை, தெளிவு, கற்பனை வளமிக்க அறிவுபூர்வமான எதிர்வு கூறல்கள், இவையே அவரது படைப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களாக விளங்குகின்றன.

அவரது 'பிள்ளைப் பிராயத்தின் முடிவு' ( Childhood's End) என்னும் விஞ்ஞானப் புனைகதையானது மானுடர் உளரீதியில் இன்னுமொரு தளத்துக்குப் (Over Mind) வளர்ச்சியுறுவதை விபரிக்கும். அவரது 'பிள்ளைப் பிராயத்தின் முடிவு' ( Childhood's End) என்னும் விஞ்ஞானப் புனைகதையானது மானுடர் உளரீதியில் இன்னுமொரு தளத்துக்குப் (Over Mind) வளர்ச்சியுறுவதை விபரிக்கும். 'பூமியொளி' (Earth Light) என்னும் 1951இல் வெளியான அவரது குறுநாவல் மானுட இனமானது தன்னைத்தானே அழித்துக் கொள்ளாதென்ற நம்பிக்கையினை வெளிப்படுத்தும்.. அன்றைய காலகட்டத்தில் வெளியான இவரது 'த சென்டினல்'  The Sentinel) இன்னுமொரு புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைகதையாகும். இது 1996இல் சந்திரனுக்குப் பயணிக்கும் வில்சனென்னும் நிலவியல் அறிஞரொருவரின் பயணத்தை அவரது கூற்றில் வெளிப்படுத்துமொரு புனைவாகும். சந்திரனில் வேற்றுலகத்து உயிரினமொன்றினால் பூமியில் மானுடர் தோன்றுவதற்குப் முன்பே அமைக்கப்பட்டிருந்த படிகத்திலான 'பிரமிட்'டினைப்பற்றி விபரிக்கும். மேற்படி படிகப் பிரமிட்டானது பூமியிலுள்ள ஒருவரால் அங்கு அமைக்கப்பட்டிருக்கக் கூடுமென்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட வில்சன் பின்னர் தன்னைப் போல் சந்திரனுக்கு முன்னர் பயணித்த வேற்றுலகத்து உயிரொன்றின் வேலையே அதுவென்று நம்பிக்கை கொள்கின்றார். மேற்படி 'படிகப் பிரமிட்டா'னது மானுடருக்கும், வேற்றுலகத்து வாசிகளுக்குமிடையில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய சந்திப்பொன்றினை எதிர்வு கூறுமொரு குறியீடாகவே கருதப்படுகிறது. மேலும் அந்தப் பிரமிட்டின் அமைப்பானது அவ்வகை உயிரினமொன்றினால் அமைக்கப்பட்டதொரு எசசரிக்கைக் கருவியே. அதனைக் கண்டு பிடிக்கும் உயிரினத்தைப் பற்றிய தகவல்களை அந்த வேற்றுலகத்துவாசிகளுக்கு அறிவிப்பதற்காக மேற்படி 'சென்டினல்' என்னும் அந்தப் படிகப் பிரமிட்டானது சந்திரனில் அமைக்கப்பட்டிருந்தது. இது போன்று மில்லியன் கணக்கில் இத்தகைய படிகப் பிரமிட்டுகள் பிரபஞ்சமெங்கும் அந்த வேற்றுலக வாசிகளினால் அமைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று மேற்படி புனைகதையில் ஆர்தர் சி கிளார்க் விபரிக்கின்றார். மேற்படி 'படிகப் பிரமிட்டி'னை மேற்படி வேற்றுலகவாசிகள் பூமியில் அமைக்காமல் சந்திரனில் எதற்காக அமைத்திருக்க வேண்டும்? அதற்குமொரு தர்க்கரீதியிலான காரணமொன்றினைக் கிளார்க் முன்வைக்கின்றார். சந்திரனை அடைவதற்கு பூமியில் வசிக்கும் மானுடர் வெற்றிடத்துடன் சூழ்ந்த விண்வெளியினைக் கடக்கும் வல்லமை பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஆற்றல் மிக்க இனமொன்றினால்தான் மேற்படி 'படிகப்பிரமிட்டி'னைக் கண்டுபிடிக்க முடியும்? அத்தகைய அறிவுள்ள உயிரினங்களுடன்தான் மேற்படி வேற்றுலகத்து வாசிகள் தொடர்பு கொள்ள விரும்பியிருக்க வேண்டும். மானுடர் அதனை அறியும்பொருட்டுத்தான் அதனைப் பூமியில் அமைக்காது சந்திரனில் அமைத்திருக்கவேண்டும். மேற்படி விஞ்ஞானப் புனைவு கிளார்க்கின் மானுடரின் தப்பிப் பிழைத்தலுக்கான ஆற்றலினையும், நுண்ணறிவு மிக்க வேற்றுலகத்துவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் பற்றியும், அததகைய உயிரினங்களுடனான தகவல் பரிமாற்றத்திற்கான சாத்தியம் பற்றிய அவரது அசைக்க முடியாத நம்பிக்கையினையும் வெளிப்படுத்துமொரு அறிவியற் புனைவாகும்.
 
மேலும் மேற்படி 'படிகப்பிரமிட்' பற்றிய சிந்தனை கிளார்க்கின் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அறிவுபூர்வமாகப் புனையப்படும் அவரது கற்பனையாற்றலினையும் புலப்படுத்துகிறது. எவ்விதம் பிரமிட்டானது பூமியில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்து, காலவெள்ளத்தில் மூழ்கிப் போன எகிப்திய நாகரிகத்தைப் பறைசாற்றுகிறதோ அவ்வாறே மேற்படி 'படிகப்பிரமிட்டும்' சந்திரனில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் மேற்படி 'படிகப்பிரமிட்'டானது 'சென்டினல்' (Sentnal) என்று அழைக்கப்படுகிறது. 'சென்டினல்' என்றால் அதற்கு அவதானிப்பவர் என்றொரு அர்த்தமும் உண்டு. தம்மையொத்த அறிவுபூர்வமான உயிரினமொன்றின வருகைக்காகக் காத்து நிற்கும், அவதானித்து நிற்கும் அந்தப் 'படிகப்பிரமிட்'டுக்கு 'சென்டினல்' என்னும் பெயர் நன்கு பொருத்தமானதே.
 
மேலுமொரு விடயத்தினையும் மேற்படி 'சென்டினல்' என்னும் விஞ்ஞானப் புனைகதை வெளிப்படுத்துகிறது. அது சந்திரனில் மனிதரால் காலடியெடுத்து வைக்கமுடியுமென்ற, சந்திரப் பயணத்துக்கான சாத்தியம் பற்றிய, அவரது நம்பிக்கைதானது. மேற்படி கதை எழுதப்பட்டது 1951இல். ஆனால் உண்மையிலேயே மனிதர் சந்திரனில் காலடியெடுத்து வைத்தது 1969இல். மேற்படி மானுடரின் எதிர்காலச் சாத்தியப்பாடுகள் பற்றிய நம்பிக்கையானது கிளார்க்கின் படைப்புகளில் காணப்படும் முக்கியமானதொரு அம்சமென்று விமர்சகர்கள் பலர் விதந்துரைத்திருக்கின்றார்கள்.

இவ்விதமான மானுடர் பற்றி, வேற்றுலகத்துவாசிகள் பற்றிய நம்பிக்கையினைக் கிளார்க் பெற்றது எவ்விதம்? இதற்கு அவரது 'பிரமிப்பூட்டும் நாட்கள்' (Astounding Days) என்னும் சுயசரிதை நூல் விடை பகர்கிறது. மேற்படி நூலில் தனது பதின்மூன்று வயதில் தான் முதன்முதலாக முதலாவது விஞ்ஞானப் புனைவுச் சஞ்சிகையொன்றினை வாசித்ததாகவும், அன்றிலிருந்து தனது வாழ்க்கை அடியோடு மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். தற்பொழுது 'அனலாக்' (Analog) என்று வெளிவரும் விஞ்ஞானப் புனைவுச் சஞ்சிகையானது அக்காலகட்டத்தில் 'பிரமிப்பூட்டும் உயர்தர விஞ்ஞானக் கதைகள்' ( Astounding Stories of Super Science) என்னும் பெயரில் வெளிவந்து கொண்டிருந்தது. அச்சஞ்சிகையே கிளார்க்கின் வாழ்க்கையினை அடியோடு மாற்றிய மேற்படி சஞ்சிகையாகும். தனது சுயசரிதையில் கிளார்க் மேறபடி சஞ்சிகை எவ்விதம் அவரது 'டீன்' வயதுப் பருவத்தில் அவர்மேல் ஆதிக்கம் செலுத்தியதென்பதை விபரிப்பார். மேற்படி சஞ்சிகையின் முதலாவது ஆசிரியத் தலையங்கத்தில் 'நாளை பிரமிப்பூட்டும் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. உங்களது குழந்தைகள் அல்லது அவர்களின் குழந்தைகள் சந்திரனுக்கான பயணத்தை மேற்கொள்வார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டும் கிளார்க் அவை மிகவும் நம்பிக்கையான் சொற்களென்பார். உண்மையில் 1930இல் வாழ்ந்தவர்களின் பிள்ளைகளே சந்திரனில் காலடியெடுத்து வைத்தார்களென்பார்.
 
ஆர்தர் சி. கிளார்க்கின் மேற்படி விஞ்ஞானச் சஞ்சிகையுனான சிறுவயதுத் தொடர்பும், வாசிக்கும் பழக்கமுமே மானுடரின் எதிர்காலம் பற்றிய, நுண்ணறிவுமிக்க வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் பற்றிய நம்பிக்கையினை அவருக்கேற்படுத்தின. அதுவே அவரது படைப்புகள் பலவற்றில் காணப்படும் முக்கியமான அம்சங்களிலொன்றாக விளங்குவதற்குக் காரணம். அதே சமயம் தெளிவும், எளிமையும், ஆழமும் மற்றும் அறிவுபூர்வமான கற்பனைச் சிறப்பும் அவரது படைப்புகளில் விரவிக் கிடப்பதற்கு முக்கியமான காரணங்களாக அவரது வாசிப்புப் பழக்கம், கல்விப் பின்புலம், மற்றும் அவரது தொழில்ரீதியிலான அனுபவங்களே காரணங்களெனக் குறிப்பிடலாம். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப, மேற்படி 'சென்டினல்' விஞ்ஞானப் புனைகதையானது அவரது படைப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இன்னுமொரு விடயத்திற்கும் மேற்படி புனைகதையானது அடிப்படையாக விளங்குகின்றது. ஆர்தர் சி. கிளார்க்கென்றால் ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற '2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி' என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் ஞாபகம் அனைவருக்குமே வராமல் போகாது. ஸ்ரான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படத்திற்கு குப்ரிக்குடன் இணைந்து திரைப்பட வசனமெழுதியவர் கிளார்க். 'சென்டினல்' என்னும் மேற்படி புனைகதையினை இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் வேண்டுகோளின்பேரில் விரிவாக்கி உருவாக்கிய நாவலே '2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி'. திரைப்படம் நாவல் வெளிவருவதற்கு முன்னர் வெளிவந்தாலும் நாவல் திரைப்படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே கிளார்க்கால் எழுதி முடிக்கப்பட்ட் விட்டது. ஆயினும் அந்நாவல் உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கேயென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவரது வேண்டுகோளின்பேரில்தான் கிளார்க் அந்நாவலை எழுதினார். அதற்கான பெயர் கூட ஸ்டான்லி குப்ரிக்கினால் வைக்கப்பட்டதாகக் கிளார்க் கூறியுள்ளார். 
 
மானுடரின் தப்பிப் பிழைக்கும் ஆற்றல் மிக்க எதிர்காலம், நுண்ணறிவு மிக்க வேற்றுலக வாசிகள் இருப்பதற்கான சாத்தியம் போன்றவற்றில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை , அறிவுபூர்வமான வளமான கற்பனையாற்றல், தெளிவு, எளிமை மற்றும் ஆழம் ஆகியவற்றைப் புலப்படுத்தும் விஞ்ஞானப் புனைகதைகளுக்காகவும் , அறிவுபூர்வமான எதிர்வு கூறல்களுக்காகவும் ஆர்தர் சி. கிளார்க் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார். அந்த நம்பிக்கையினால்தான் அவர் மக்களின் விண்வெளிப்பயணம் விரைவில் சாத்தியமாகுமென்றும், அப்பொழுது சாதாரண மக்கள் சந்திரனுக்கு மட்டுமல்ல அதற்கப்பாலும் இலகுவாகப் பயணிப்பார்களென்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே சாத்தியமாகியுள்ள அவரது எதிர்வு கூறல்கள் பலவற்றைப் போலவே இந்த நம்பிக்கை மிக்க எதிர்வு கூறலும் சாத்தியமாகிவருவதையே தற்போதைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

மூலம்: பதிவுகள் ஏப்ரல் 2008; இதழ் 100, கணையாழி, அம்ருதா

4. வானியற்பியற் கட்டுரை : அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்

நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசு கிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.

சரி. அப்படி இந்தச் சார்பியற் தத்துவம் அப்படி என்னதான் கூறிவிடுகின்றது? விடை மிகவும் சுலபம். 'நேரம்', 'வெளி' பற்றிய கருதுகோள்களை , அதாவது இதுவரை காலம் 'வெளி', 'நேரம்' பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை, சார்பியற் தத்துவம் அடியோடு மாற்றியமைத்து விடுகின்றது. அதே சமயம் 'பொருள்' , 'சக்தி', 'புவியீர்ப்பு', பற்றியும் புதிய கருது கோள்களை முன்வைக்கின்றது. இச் சார்பியற் தத்துவக் கோட்பாடுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. சிறப்புச் சார்பியற் தத்துவம் (Special Theory of Relativity)
2. பொதுச் சார்பியற் தத்துவம் (General Theory of Relativity)


இவற்றில் 'சிறப்புச் சார்பியற்' தத்துவம் இதுவரை நிலவி வந்த 'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகளை அடியோடு மாற்றியமைத்து விடுகின்றதென்றால், பொதுச் சார்பியற் தத்துவமோ புவியீர்ப்பு பற்றிய கோட்பாட்டை மாற்றியமைத்து விடுகின்றது. 'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகள்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவி வந்த அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளைப் பரிசீலனைக்குட்படுத்தியவர்கள் கலிலியோவும் , சேர். ஜசக் நியூட்டனுமே. ஆனால் வெளி, நேரம் பற்றிய இவர்கள் யாவரினதும் கோட்பாடுகள் ஒன்றாகவேயிருந்தன. வெளியையும், நேரத்தையும் சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்பும் அடையாத சுயாதீனமானவைகளாகவே (absolute) இவர்கள் கருதினார்கள். சாதாரண மனித வாழ்வின் அனுபவங்களிலிருந்தே இவர்களும் வெளி, நேரம் பற்றிய கோட்பாடுகளை வகுத்திருந்தார்கள்.

எங்கும் எல்லையற்று விரிந்து பரந்து கிடப்பதுதான் வெளி. 'எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளி வானிலே..' என்று பாரதி பாடியதைப் போல் எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது வெளி. இந்த வெளியில் தான் சூரியன், கிரகங்கள் மற்றும் பல்வேறுபட்ட பொருட்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இயக்கங்கள் இந்த வெளியைப் பாதிப்பதில்லை. அது தன்பாட்டில் வியாபித்துக் கிடக்கின்றது. இவ்வாறுதான் நியூட்டன் வரையிலான் விஞ்ஞானிகள் கருதினார்கள். இது போன்றுதான் 'நேரமும்' சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்புமற்று தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருப்பதாகப் பெள்தீக விஞ்ஞானிகள் கருதினார்கள்.

சிறப்புச் சார்பியற் தத்துவமும்,  வெளியும், நேரமும்...

இவ்விதம் சுயாதீனமாகக் கருத்தப்பட்டு வந்த 'வெளி'யோ 'நேர'மோ உண்மையில் சுயாதீனமானவையல்ல. அவையும் சுற்றி வர நிகழும் இயக்கங்களால் பாதிப்புறுபவையே, சார்பானவையே என்பதை ஜன்ஸ்டைன் 'சிறப்புச் சார்பியற் தத்துவம்' மூலம் வெளிக்காட்டினார். உதாரணமாக நேரத்தை எடுத்துக் கொண்டால்.. வேகமானது நேரத்துடன் மாறுதல் அடைகின்றது. ஒளி வேகத்தில் செல்லும் ராக்கட்டில் ஒரு மனிதனையும், பூமியில் நிற்கும் ஒருவனையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே 'சீக்கோ' கடிகாரங்களைக் கைகளிலே கட்டியிருக்கின்றார்கள். இவர்கள் இருவரது கடிகாரங்களும் நேரம் சுயாதீனமானதாகவிருந்தால் ஒரே நேரத்தைக் காட்ட வேண்டும். ஆனால் நேரம் சார்பானதாகவிருப்பதால் , இருவரது கடிகாரங்களும் இரு வேறு நேரங்களையுமே காட்டும். உண்மையில் வேகம் கூடக்கூட நேரம் மாறுவதும் குறையவே தொடங்கும். ஒளிவேகத்தில் செல்லும் ராக்கட்டில் இருப்பவனிற்கு அவனிற்குச் சார்பாக ஒரு மணித்தியாலம் சென்றிருக்கும். அதே சமயம் பூமியிலிருப்பவனிற்கோ பல நூறு வருடங்கள் சென்றிருக்கும். இவ்விதம் நேரமானது வேகத்துடன் மாறுவது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை.

இதற்காக விஞ்ஞானிகள் இரும்பு அணுக்கருக்களுடன் காமாக் கதிர்களை இரு வேறு உயரங்களில் மோதவிட்டுப் பார்த்தார்கள். உயரத்தில் நேரம் வேகமாகச் செயற்படுகின்ற காரணத்தால் காமாக் கதிர்களை உறுஞ்சும் இரும்பு அணுக்கருக்களின் போக்கு வித்தியாசப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.


வெளியும், பொருளும்..
இதுபோல் தான் சுயாதீனமாகக் கருதப்பட்டு வந்த வெளி (space) கூட நேரம் போல் பாதிப்படைகின்றது. ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் , அதன் பொருண்மை கூடக் கூட அப்பொருளானது தன்னைச் சுற்றியிருக்கும் வெளியை வளைக்கத் தொடங்கிவிடுகின்றது. 'வெளியை'யாவது வளைப்பதாவது.. வளைப்பதற்கு வெளியென்ன ஒரு பொருளா?.." என நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால் இவ்விதம் வெளியைப் பொருளின் பொருண்மை வளைப்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.

புதன் கிரகமானது சூரியனைச் சுற்றி வரும் ஒழுக்கில் ஒரு சிறு வித்தியாசம் இருந்து வந்தது. இந்த வித்தியாசத்தின் காரணத்தை நியூட்டனின்கோட்பாடுகளினால் விளக்க முடியவில்லை. ஜன்ஸ்டைனின் சார்பியற் கணித சூத்திரங்களோ இவ்வித ஒழுக்கில் காணப்படும் மாற்றத்திற்குக் காரணம் சூரியன் அதனைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்து விடுவதே என்பதை எடுத்துக் காட்டின. இது பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த வானியல் அறிஞரான சேர். ஆர்தர் எடிங்டனால் சூரிய கிரகணமொன்றை அவதானித்த பொழுது நிரூபிக்கப் பட்டது.

பொதுச் சார்பியற் தத்துவமும் புவியீர்ப்பும்...

புவியீர்ப்பைப் பொறுத்தவரையில் நியூட்டன் அதனை ஒரு விசையாகவே கருதினார். ஆனால் ஜன்ஸ்டனின் 'பொதுச் சார்பியற் தத்துவமோ' சூரியன் தன்னைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்து விடுகின்றதன் காரணமே பூமியினைச் சூரியனைச் சுற்ற வைத்து விடுகின்றதென்பதை எடுத்துக் காட்டியது.

இவ்விதமாக அரிஸ்ட்டாடிலின் கோட்பாடுகளையே ஆட்டங் காண வைத்த நியூட்டனின் கோட்பாடுகளையே ஆட்டங் காணவைத்து விட்டன ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகள். சாதாரண மனித அனுபவங்களிற்கப்பாற்பட்டு சம்பவங்கள் நடைபெறும் போதே ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகளைப் பூரணமாக உணர முடியும். மிகப் பிரமாண்டமான வேகத்தில் செல்லும் போதே நேரம் மாறுவதை இலகுவாக அவதானிக்க முடியும். அதனை , அம்மாற்றத்தினை. சாதாரண மனித சக்திக்குட்பட்ட வேகத்தில் அவதானிக்க முடியாது. ஏனென்றால்.. மாற்றம் அவ்வளவு சிறியதாக இருந்து விடுகின்றது.

மேலும் வெளியையும் நேரத்தையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்ப்பதையும் சார்பியற் கோட்பாடுகள் எதிர்க்கின்றன. 'வெளிநேரச்' (spacetime) சம்பவங்களின் தொகுப்பாகவே உண்மையில் , ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகள் விளக்கு¢கின்றன. இவ்விதமாக இப்பிரபஞ்சத்தை உண்மையில் தெளிவாகத் துல்லியமாகச் , சரியாக மேற்படி ஜன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள் விளக்கி வைக்கின்றன.

உசாத்துணை நூல்கள்:

1. 'A Brief History Of Time' By Stephen Hawkings
2. 'Black Holes and Baby Universes' By Stephen Hawkings
3. 'Relatively Speaking' By Eric Chaisson
4. 'Relativity' By Albert Einstein
5. 'Stephen Hawking : quest for a theory of every thing' By Kitty Fergusson


-நன்றி: கணையாழி February 1997- வீரகேசரி,  பதிவுகள், திண்ணை
 

5. ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!  

!மராத்திய எழுத்தாளரான ஆஷா பகேயின் முக்கியமான நாவல்களிலொன்று 'பூமி' பி.ஆர்.ராஜாராமின் மொழிபெயர்ப்பில் தமிழில் 'சாகித்திய அகாதெமி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆஷா பகேயின் படைப்புகளில் நான் வாசித்த முதலாவது படைப்பு இந்த நாவல்தான். ஏற்கனவே சாகித்திய அகாதெமியினரால் வெளியிட்டப்பட்ட வங்க நாவலான 'நீலகண்டப் பறவையைத்தேடி', 'தகழி சிவசங்கரம்பிளையின்' ஏணிப்படிகள்' மற்றும் 'தோட்டி', சிவராம காரந்தின் 'மண்ணும் மனிதரும்', எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை', எம்.டி.வாசுதேவன் நாயரின் 'காலம்' போன்ற நாவல்களின் வரிசையில் என்னைக்கவர்ந்த இந்திய நாவல்களிலொன்றாக 'பூமி' நாவலும் அமைந்து விட்டது.

இந்த நாவலின் கதையும் வித்தியாசமானது. மராத்திய டாக்டர் ஒருவருக்கும், தமிழ் நர்ஸ் ஒருவருக்கும் மகளாகப்பிறந்தவளே நாவலின் நாயகி. சிறு வயதிலேயே அவள் தந்தையை இழந்து விடுகின்றாள். தாயாரே அவளைக் கண்ணுங்கருத்துமாக வளர்த்து வருகின்றார். நாயகியின் மாணவப்பருவத்திலேயே தாயாரும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகுகின்றது. தாயின் இறுதிக்காலம் மனதை அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்கியமான பகுதிகளில் அதுவுமொன்று. தாயாரும் இறந்து விடவே தனித்து விடப்படும் சிறுமியான நாயகியை அவளது தந்தையின் மராத்தியச் சகோதரி பம்பாய்க்குத் தன்னுடன் அழைத்துபோகின்றாள்.

நாவல் தமிழ்நாடு, பம்பாய் என இரு நகரங்களில் நடைபோடுகிறது. அத்தையுடன் வாழும் தன் இளம் பருவத்தில் பகுதி நேர வேலையாக மறைந்த பேராசிரியர் ஒருவரின் செல்வந்த மனைவிக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண்ணாகவும் வேலை பார்க்கின்றாள். அச்சமயத்தில் பேராசிரியரின் வீட்டு நூலகத்து நூல்களெல்லாம் அவளது இலக்கியப்பசியைத்தீர்த்திட உதவுகின்றன.

மராத்தியக் கலாச்சாரத்தில் வாழும் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து பெரியவளாகும் நாயகி ஆரம்பத்தில் படிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும், அவளது வாசிப்புப் பழக்கம் அவளுக்குக் கை கொடுக்கிறது. அவளது ஆளுமையினை ஆரோக்கியமான திசையை நோக்கித்தள்ளி விடுகிறது. அதுவே பின்னர் வெற்றிகரமான பெண்ணாகவும் உருமாற்றி விடுகிறது. அவள் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த அச்செல்வந்தப்பெண்ணின் மகனையே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் திருமணமும் செய்து கொள்கிறாள். திருமணத்தின் பின்பு கலாநிதிப்பட்டமும் பெற்று பல்கலைக்கழகவிரிவுரையாளராகப் பணிபுரிகின்றாள்.

அவர்களிருவரின் தாம்பத்தியத்தின் விளைவாக அவர்களுக்கு மகனொருவன் பிறக்கின்றான். இருந்தாலும் கணவன், மனைவியருக்கிடையில் பல்வேறு வகையான உளவியல் பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஒரு கட்டத்தில் கணவனைப்பிரிந்து தனித்து வாழும் அவள் இறுதியில் பணியில் ஓய்வு பெற்றுக்கணவனிடம் திரும்புகின்றாள். அவ்விதம் பிரிந்திருக்கும் காலத்தில் அவளுடன் பணிபுரியும் , நோயாளிக்குழந்தையுடன் வாழும் சக விரிவுரையாளர் ஒருவருடனான அவளது ஆத்மார்த்தமான தொடர்பும் நாவலில் ஆராயப்படுகிறது.

இந்த நாவலின் முக்கிய சிறப்பாக நான் கருதுவது பாத்திரப்படைப்பு. நாவலின் நாயகியான மைதிலியின் பாத்திரப்படைப்பு முழுமையானது. நாவலில் வரும் மராத்திய அத்தையும் அற்புதமான மன இயல்புகள் வாய்க்கப்பட்டவள். இந்நாவலில் வரும் பிரதான பாத்திரங்களெல்லாரும் உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஆளுமைகள் சிறப்பாக அவர்கள்தம் குறை, நிறைகளுடன் வடித்தெடுக்கப்பட்டுள்ளன.

மைதிலி என்னும் பெண்ணின் வாழ்வை விபரிக்கும் நாவல், அவ்வாழ்வில் அவள் அடைந்த அனுபவங்களை, உணர்ச்சிப்போராட்டங்களை (தோல்வியடைந்த அவளது இளமைக்காதலுட்பட), அவளது மண வாழ்வினை, அவ்வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை, தாய்மை ஏற்படுத்தும் மாற்றங்களை ,திருமணத்துக்கப்பாலான உளரீதியிலான உறவினை, மற்றும் அவளது எழுத்துலக இலக்கிய வாழ்வினை எல்லாம் விபரிக்கின்றது.

நல்ல நாவலொன்றின் சிறப்பு அந்த நாவலை வாசிக்கும் ஒருவரை அந்த நாவல் விபரிக்கும் கதாபாத்திரங்களின் வாழ்வினுள் கொண்டசென்று    நிறுத்த வேண்டும். அதன் பின்னர் அந்த வாசகரும் அப்பாத்திரங்கள் வாழும் வாழ்வினில் ஒருவராகி, அப்பாத்திரங்கள் அடையும் பல்வேறு உணர்வுகளுக்குமிடையில் சிக்கி தன்னை மறந்து விட வைத்திட வேண்டும்.  இந்த நாவலும் அத்தகையதே. இந்நாவலின் கதாநாயகி தன் வாழ்வில் அடையும் இன்ப துன்பங்களையெல்லாம் வாசிக்கும் நீங்களும் அடைவீர்கள்.

இந்நாவலின் இன்னுமொரு சிறப்பு இரு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களினூடு பெண்களின் பிரச்சினைகளை ஆராய்வதுதான். ஒருத்தி நவகாலத்து நாயகி மைதிலி. அடுத்தவள் பழைய தலைமுறையினைச்சேர்ந்த அவளது மராத்திய அத்தை.

ஆஷா பகேயின் 'பூமி' நாவலின் நடை மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது. ஆனால் மொழிபெயர்ப்பில் அதிகமாக எதிர்ப்படும் தமிங்கிலிஸினைத் தவிர்த்திருக்கலாமென்று ஏற்படும் உணர்வினைத்தவிர்க்க முடியவில்லை. ஆனால் நூலினை வெளியிட்ட அமைப்பே தன் பெயரைச் 'சாகித்ஹிய அகாதெமி' என்று குறிப்பிடும்போது  எவ்விதம் அவ்வமைப்புக்காக மொழிபெயர்ப்பு செய்யும் எழுத்தாளர் மட்டும் தமிங்கிலிசைத்தவிர்த்திட முடியும் என்றும் எண்ணாமலுமிருக்க முடியவில்லை.

நன்றி: கணையாழி நவம்பர் 2019 -, பதிவுகள்

6.  விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'! -

அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள நாவல் அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் நாவல்களில் முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நாவல்களிலொன்று. மொழியில் எந்தவிதப் புதுமையுமில்லை. தமிழக வெகுசனப் பத்திரிகைகளை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு நன்கு பழகிய மொழிதான். இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவது இது கூறும் பொருளினால்தான். அப்படி எதனைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது? சுருக்கமாகக் கூறப்போனால் உலகமயமாதலுக்குத் தன்னைத் திறந்து விடும் வளர்ந்து வரும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விமர்சிக்கும் நாவலிதுவென்று கூறலாம். இத்தருணத்தில் கறுப்பு 'ஜூலை' 1983யினைத் தொடர்ந்து, உலகின் நானா பக்கங்களையும் நோக்கி, அகதிகளாகக்ப் படையெடுத்த ஈழத்தமிழர்களைப் பற்றி சில விடயங்களை எண்ணிப்பார்ப்பது 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் கூறும் பொருளைப்பொறுத்தவரையில் முக்கியமானது; பயன்மிக்கது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துப் புகுந்த நாடுகள் செல்வச்செழிப்புள்ள, முதலாளித்துவச் சமுதாய அமைப்பைக்கொண்ட மேற்கு நாடுகள். இந்த நாடுகளில் நிலவும் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கும், அதுவரை அவர்கள் வாழ்ந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வித்தியாசம். மேற்கு நாடுகளில் நிலவும் கடனட்டைக் கலாச்சாரம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் புதியது. உலக மயமாதலின் விளைவுகளால சமூக, பொருளியல் சூழல்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்த இந்திய மத்திய வர்க்கத்தினரின் நிலையும், மேற்கு நாடுகளின் பொருளியற் சூழல்களுக்குள் இறக்கி விடப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளின் நிலையும் இந்த வகையில் ஒரே மாதிரியானவை என்று கூறலாம். ஒரு வேலை இருந்தால் , தகுதிக்கு மீறிய கடன் தொகையுள்ள கடனட்டைகளைப் பெற்றபோது , ஆரம்பத்தில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு அது இன்பமளிப்பதாகவேயிருந்தது. அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை கடன் கலாச்சாரத்துள் முற்றாகவே மூழ்கி விட்டது. கடனுக்குக் கார் வேண்டலாம்; கடனுக்கு வீடு வாங்கலாம்; வீட்டுப் பெறுமானத்தின் உபரி மதிப்பிற்குச் சமமாக கடன் எடுக்கும் வசதியினைப் பெறலாம். இவ்விதமாகப் பல 'கடன்' நன்மைகளைச் சுகிக்கலானார்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். இவ்விதமான சமூக, கலாச்சார மாற்றங்களுக்குள்ளாகியவர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல காரணங்களுக்காக, மேற்கு நாடுகளை நோக்கிப் பல்வேறு நாடுகளிலிருந்தும் , வளர்முக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிலிருந்து  சென்ற அனைவருக்கும் பொருந்தும். இவ்விதமாகக் கடனட்டை, கடன் போன்றவற்றின் ஆதிக்கத்தின் கீழ் மக்களைக் கொண்டுவரும் முதலாளித்துவ சமுதாய அமைப்பானது, அதன் பின் அம்மக்களை அதன் பிடிக்குள் கொண்டுவந்து, செக்குமாடுகளாக்கி விடும். உழைப்பது கடன்களைக் கட்டுவதற்கே என்று வாழ்க்கை மாறிவிடும். பெரும்பாலானவர்கள் உதாரணத்துக்கு வாங்கிய வீட்டின் விலையைப்போல் இரு மடங்கு வரையிலான விலையை 25 வருட காலத்து வீட்டுக் கடனுக்குக் கட்டி முடிக்கும்போது அவர்களது வாழ்வின் பெரும்பகுதி முடிந்து விட்டிருக்கும். இவ்விதமான வாழ்க்கையானது குடும்பங்களுக்குள் பல்வேறு வகையான சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றது.

இதே வகையானதொரு நிலையினைத்தான் இந்தியாவில் உலகமயமாக்கலின் விளைவாக உருவான 'பணம் புழங்கும்' நடுத்தர மக்களின் வாழ்க்கையிலும் காணலாம். மேற்கு நாட்டுசமூகக் கலாச்சாரச் சூழலை அப்படியே கொண்டு வந்து, வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடொன்றில் நட்டுவிட்டால் எவ்வகையான விளைவுகள் உருவாகுமோ அவ்வகையான விளைவுகள் அனைத்தும் இங்கும் உருவாகும். அவைதான் 'ராஜீவ்காந்தி சாலை'யிலும் உருவாகின. பணம் புழங்கும் மத்தியதர மக்கள் மில்லின் கணக்கில் உருவானதும், மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்களுக்குப் புதியதொரு சந்தையினை இந்த மாற்றம் திறந்து விட்டது. குறைந்த அளவு ஊதியத்துடன் உழைப்பை வாங்குவதன் மூலம் இலாபத்தை அதிகரித்த மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்கள், இந்த மாற்றத்தால் உருவான புதிய மத்தியதர வர்க்கத்தை மையமாக வைத்துத் தம் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து மேலும் இலாபத்தைச் சம்பாதித்தன. ஒரு கல்லில் இரு மாங்காய்கள். 'கோல்கேற்' பற்பசை , கோர்ன் ஃபிளாக்௶ஸ் சீரியல்கள் தொடக்கம், ஃபோர்ட் வாகங்கள், ஜிஎம் வாகனங்கள் போன்ற வாகனங்கள் தொடக்கம், புதிய சந்தை நிலவும் நாட்டில் பேசப்படும் பன்மொழிகளில் திரைப்படங்களை மிகச்சிறப்பாக 'டப்பிங்' செய்வது தொடக்கம் இலாபத்தை அள்ளிக்குவித்தன மேற்கு நாட்டின் நிறுவனங்கள். 'மாஸ்டர் கார்ட்', 'விசா', 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' என்று அத்தனை கடன் அட்டை நிறுவனங்களும் நுழைந்து விட்டன. பல்வேறு வகையான காப்புறுதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், 'மல்டி லெவல் மார்கட்டிங்'  என்று அனைத்து நிறுவனங்களும் நுழைந்து விட்டன.

மேற்கு நாடுகளின் நிறுவனங்களின் பணியினைக் குறைந்த ஊதியத்தில் செய்வதற்காகப் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பூற்றீசல்களைப் போல் முளைத்தன. இவ்விதமான நிறுவனங்களில் மிகவும் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பார்க்கும் மக்களை மையமாக வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் வலையை விரித்தன. கையில் காசு புழங்கத்தொடங்கியதும் இவ்வகையான நிறுவனங்களில் பணி புரிவோரின் வாழ்க்கை மாறத்தொடங்கியது. மேற்குக் கலாச்சாரம் அவர்களைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து விட்டது. வாகனம் வாங்குவது, கார் வாங்குவது என்பவையே அவர்களது கனவுகளாகின. புதிய சூழல், புதிய வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமல்ல மன அழுத்தத்தினையும் கூடவே கொண்டுவந்து விட்டது. சக்திக்கு மீறிய வகையில் கடன்களைப் பெறும் சூழல் உருவாகியது. கடன்களைப் பெற்று வீடுகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கியவர்களுக்கு, வேலை சிறிது காலம் இல்லாமல் போனால் கூடத் தாங்க முடியாத நிலைதான். வாசலில் நின்று கடன்களை அவர்கள் மேல் திணித்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் இவ்விதமான இக்கட்டான நிலையில், உதவுவதில்லை. பணத்தைத் திருப்பிக் கட்டும்படி நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கும் சூழலுருவாகும். விளைவு? குடும்பங்கள் பிளவுறுதல், தற்கொலைகள், கொலைகள்  என்று பல்வேறு வகையான பக்க விளைவுகள் உருவாகும். இரவினில் தனித்துப் பெண்கள் வேலை செய்யும் சூழல்கள், அவர்களுடன் பணி புரியும் ஆண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தும். வேலையிழத்தல் போன்ற சூழல்கள் உருவாக்கும் பொருளியற் சுமைகள் காரணமாக ஒருவருக்கொருவர் பண உதவிகள் பெறுவது, பின்னர் அதன் காரணமாக ஒருவருக்கொருவர் அநுசரித்து வாழ்வது என்று ஏற்படும் மாற்றங்கள் தம்பதியினரின் குடும்ப வாழ்வினைச் சீரழிக்கின்றன.

இன்னுமொரு விடயத்தையும் இந்நாவல் விமர்சிக்கின்றது. குழந்தைகள் மேல் புரியப்பட்டும் பாலியல் வன்முறைகள் எவ்விதம் அவர்களது வாழ்வினைச் சிதைத்து விடுகின்றன என்பதை நாவலில் வரும் கெளசிக் பாத்திரத்தினூடு ஆசிரியர் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். சிறுவயதில் ஆண் உல்லாசப்பிரயாணிகளினால், முதிய செல்வந்தப் பெண்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் அவன் வளர்ந்ததும் இளம்பெண்களைப் பாலியல்ரீயில் வதைப்பதில் இன்பம் காணுமொரு வெறியனாக உருமாற்றமடைகின்றான். அதன் விளைவாகக் கொலையுண்டும் போகின்றான். சிறு வயதில் அவன் மிக அதிகமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாகியது ஆண் உல்லாசப்பிரயாணிகளால்தான். எனவே அவனது ஆத்திரம் அவ்விதமான ஆண்கள்மேல் ஏற்படாமல் எதற்காகப் பெண்கள் மேல் ஏற்பட வேண்டும் என்றொரு கேள்வி எழுவதையும் தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் விநாயக முருகனின் ராஜீவ்காந்தி சாலை இவ்விதமாக உலகமயமாதலால் அடியோடு மாறுதலடைந்து, ராஜீவ்காந்தி சாலையாக மாறிய சென்னையின் மகாபலிபுரச்சாலையின் மாறுதல்களை விமர்சிக்கின்றது. உண்மையில் உலகமயமாதல் எவ்விதம் செல்வந்த நாடுகளின் இலாபத்திற்காக வளர்முக நாடுகளில் நிலவிடும் இயற்கைச் சூழலினை , விவசாயம் போன்ற தொழில்களை, சிறுவர்த்தகச் செயற்பாடுகளைச் சிதைத்து விடுகின்றது. எவ்விதம் நகர்ப்புறங்களில் செல்வச்செழிப்புள்ள பகுதிகளை உருவாக்கும் அதே சமயம், மிகவும் வறிய மக்களைக்கொண்ட  சேரிகளையும் உருவாக்கி விடுகின்றது. எவ்விதம் பாலியல்ரீயிலான உளவியற் பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின் தீய விளைவுகளை உருவாக்கி விடுகின்றது. இவற்றைப்பற்றியெல்லாம் விமர்சிக்கின்றது. அந்த வகையில் 'ராஜீவ்காந்தி சாலை' ஒரு குறியீடு. உலகமயமாதல் வளர்ந்துவரும், அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றில் ஏற்படுத்தும் சமூக, பொருளியல், கலாச்சார மற்றும் சூழற் பாதிப்புகளை விமர்சிக்குமொரு குறியீட்டு நாவல் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'

கணையாழி மார்ச் 2020, பதிவுகள்

7. பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'

அண்மையில் பிரமிளின் 'வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழில் புதுக்கவிதையென்றால் படிமங்களுக்குப் பெயர் போன பிரமிளின் கவிதைகளைக் குறிப்பிட யாரும் மறுப்பதில்லை. குறிப்பாக 'பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து' என்னும் கவிதையினைக் குறிப்பிடாத விமர்சகர்களே இல்லையெனலாம். இத் தொகுதியிலுள்ள கட்டுரைகள் பிரமிளின் எழுத்துச் சிறப்பினைப் புலப்படுத்துவன. அவரது ஆழ்ந்த சிந்தனையினையும், வாசிப்பினையும் கூடவே புலமைத்துவத்துடன் கூடியதொரு கர்வத்தினையும் வெளிப்படுத்துவன. அந்தக் கர்வம் அளவுமீறி சில சமயங்களில் அணையுடைத்துப் போவதுமுண்டு என்பதற்கும் சான்றாக சில கட்டுரைகளில் வரும் கூற்றுக்கள் விளங்குகின்றன. அவ்விதம் கர்வம் அளவு மீறி விடும்போது, 'தனக்கு எல்லாமே தெரியுமென்ற அதிமேதாவித்தனத்தினைக் காட்ட முற்படும்பொழுது'  அதுவே அவர்மேல் எதிர்மறைவான விளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கு இத்தகைய கூற்றுகள் காரணமாகிவிடுகின்றன. இந்தக் கட்டுரை பிரமிளின் மேற்படி 'வானமற்ற வெளி' நூல் பற்றிய மதிப்புரையோ அல்லது விரிவான் விமரிசனமோ அல்ல. இது பிரமிளின் கவிதைகள் பற்றிய விரிவான விமரிசனமுமல்ல. மேற்படி நூலிலுள்ள சில கருத்துகள் ஏற்படுத்திய என் மன உணர்வுகளின் வெளிப்பாடாகவே இதனைக் குறிப்பிடலாம்.

முதலில் பிரமிளின் 'காலவெளி' பற்றிய கருத்தினைக் கவனிப்போம். 'கண்ணாடிக்குள்ளிருந்து ஒரு பதில்..' என்னும் அவரது கட்டுரையில் பிரமிள் காலவெளி பற்றிய கருத்தினை விமர்சித்து கோ.ராஜாராம் தாமரை இதழில் எழுதிய கட்டுரைக்குப் பதிலடியாக வெளிவந்துள்ள 'காலவெளி' பற்றிய கருத்துகளையே இங்கு பார்க்கப் போகின்றோம். மேற்படி காலவெளி பற்றி 'கட்டுரைகள் பற்றிய குறிப்புகள்..'  பகுதியில் "'காலவெளி' என்று பிரமிள் படைத்த சொல், இன்று பலராலும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு, நிரந்தரம் கொண்டு விட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையில் பிழையானதொரு கூற்று. காலவெளி என்றொரு சொல் பிரமிளால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. ஐன்ஸ்டனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகள் இப்பிரபஞ்சத்தைக் 'காலவெளி'யின் தொடர்ச்சியான வெளிப்பாடாகப் புலப்படுத்தி நிற்கின்றன. இதற்காக அறிமுககப்படுத்தப்பட்ட 'Space-Time' என்பதன் தமிழாக்கமே மேற்படி 'காலவெளி'  என்பதேயல்லாமல் இது பிரமிள் கண்டு பிடித்த புதுச் சொல் என்று கூறுவது தவறானதொரு மிகைப்படுத்தலாகும்.

'கண்ணாடியுள்ளிருந்து' என்ற பிரமிளின் கவிதைத் தொகுதியில் 'காலவெளி' பற்றித் தெரிவிக்கப்பட்ட பிரமிளின் கருத்துக்குப் பதிலடியாக கோ.ராஜாராம் தனது 'தாமரை (ஜூலை 1973)' விமரிசனத்தில் 'வெளியின் மூன்று பரிமாணங்களல்லாமல் நான்காவதாகக் காலம் என்ற ஒன்றைச் சேர்ப்பது சார்புக் கொள்கை. காலமே வெளியென்று எந்த விஞ்ஞானம் சொல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை' என்று தெரிவித்திருந்த கூற்று பிரமிளை மிகவும் அதிகமாகவே பாதித்துள்ளதென்பதற்கு அவரது மேற்படி பதிற் கட்டுரையே சான்று. மேற்படி ராஜாராமின் விமரிசனம் தன் ஞானத்தினையே கொச்சைப்படுத்தி விட்டதாகக் கருதிக் கொண்டு மிகவும் ஆக்ரோசமாகவே தனது தாக்குதலைத் தொடுக்கும்போது ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற நிலைக்குப் பிரமிள் தாழ்ந்து விடுவது துரதிருஷ்ட்டமானது. அதன் விளைவாக அவர் 'காலவெளி' பற்றிய கருத்துக்கு வலு சேர்ப்பதாக எண்ணிக் கொண்டு பின்வருமாறு சான்றுகளை முன் வைக்கின்றார்:

"இவரது கவனத்துக்கு Expanding Universe என்ற நூலின் ஆசிரியரும், ஐன்ஸ்டனின் சார்பு நிலைக் கொள்கையைக் கேந்திர கணிதத்தின் மூலம் விளக்கியவருமான Sir Arthur Eddington னின் பின்வரும் வரியைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். 'space and time sink into single shadow'. 'காலமும் வெளியும் ஒற்றை நிழலாக இழைகின்றன'. 'நேற்று நேற்று என்று, இறந்த யுகங்களில், என்றோ ஒரு நாளில் அவிந்த , ஒளிவேகத்தின் மந்தகதி தரும் நிதர்சனத்தில், இன்றும் இருக்கின்றன' என்று E=MC2 என்ற கவிதை குறிப்பிடும்போது, அடுத்தவரியான 'காலமே வெளி' என்ற முடிபுக்கு ஆதாரமாகவே மேற்படி வரிகள் பிறக்கின்றன...."

இங்கு பிரமிள் சேர்.ஆர்தர் எடிங்டனின் வரிகளையே பிழையாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றார். மேற்படி கூற்றில் சேர்.ஆர்தர் எடிங்டன் 'காலமும் வெளியும் ஒற்றை நிழலாக  இழைகின்றன' என்று இரண்டையும் ஒற்றை நிழலாகப் பிரிக்க முடியாமல் நிலவுகின்றன என்ற கருத்துப்படக் கூறியிருக்கிறாரே தவிர ஒருபோதுமே இரண்டுமே ஒன்று என்று கூறவில்லை. உண்மையில் நவீன பெளதிகத்தில் 'காலவெளி'யாலான இப்பிரபஞ்சமானது முப்பரிமாணங்களையுள்ளடக்கிய வெளியையும், ஒற்றைப் பரிமாணமுள்ள காலத்தினையும் ஓரமைப்பாக உள்ளடக்கி 'காலவெளிச் சம்பவங்களின் இடையாறாத தொடர்ச்சியாக'க் (Spacetime continnum) கருதப்படுகிறது. முப்பரிமாண உலக வெளியானது நீள, அகல, உயரம் ஆகிய முப்பரிமாணங்களால் ஆனது. நீளம், அகலம், உயரம் ஆகியவை வேறு வேறான அளவுகளைக் கொண்டிருந்தபோதும் முப்பரிமாண வெளியைப் பொறுத்தவரையில் பிரிக்க முடியாதவை. அதுபோல்தான் அதுவரை காலமும் சுயாதீனமானவையாகக் கருதப்பட்டு வந்த முப்பரிமாண வெளியும், காலமும் சார்பியற் கோட்பாடுகளின் விளைவாக ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி சார்ந்திருப்பவை என்ற உண்மை உணரப்பட்டது. காலமும், வெளியும் வெவ்வேறானவையாக இருந்தபோதிலும், நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமானது 'காலவெளிச் சம்பவ்ங்களின் இடையாறாத தொடர்ச்சியாகப் புரிந்து கொள்ளப்பட்டது சார்பியற் கோட்பாடுகளின் விளைவாகத்தான்.

ஐன்ஸ்டனின் சார்பியல் தத்துவங்களின்படி வெளியும் பொருளைப் போல்தான் கருதப்படுகிறது. சூரியனின் பொருண்மைகாரணமாக அதனருகிலுள்ள வெளி வளைந்துவிடும் தன்மையினால் அதனருகில் செல்லும்போது ஒளி கூட வளைந்து விடுகிறதென்பதை பிரமிள் குறிப்பிடும் சேர்.ஆர்தர் எடிங்டனே சூரிய கிரகணமொன்றை அவதானித்தபொழுது பரிசோதனை வாயிலாக நிறுவி ஐன்ஸ்டனின் சார்பியற கோட்பாடுகளுக்கு மேலும் வலுவினையளித்தவரென்பதைப் பிரமிள் அறியாமல் போனது விந்தையே. பிரமிளே மேற்படி கூற்றின இறுதிப் பகுதியில் கூறிவதுபோல் "..காலமேவெளி என்ற கூற்று கவிக் கூற்றாகவே இங்கு நிகழ்ந்துள்ளது. ஆதாரம் கவிதைக்குள்ளேயே உள்ளதால் இதற்கு இரண்டாம் பட்சமான ஆதாரம்தான் விஞ்ஞான ஆதாரம்." என்று கூறுவதுடன் நின்றிருக்க வேண்டுமேயல்லாமல் விஞ்ஞானரீதியாக அதனை விளக்க முற்பட்டிருக்கக் கூடாது. அவ்விதம் அவர் விளக்காமல் விட்டிருந்தால் 'காலவெளி'பற்றிய கவிஞனொருவனின் சுதந்திரமான இன்னுமொரு விளக்கமாகவும், கற்பனையாகவும் அதனைக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அவ்விதம் செய்யாமல் காலவெளி பற்றிய தனது பிழையான புரிதலை நியாயப்படுத்த விளைவதன் மூலம் அக்கவிதைவரிகளின் மேற்படி சிறப்பினை இல்லாமலாக்கி விடுகின்றார். இத்துடன் பிரமிள் விடவில்லை. மேற்படி பதிற் கட்டுரையில் மேலும் கோ.ராஜாராமைத் தனிப்பட்டரீதியில் வம்ப்புக்கிழுக்கவும் செய்கிறார். '..கோ.ராஜாராம் ஒரு M.Sc. என்று நான் கேள்விப்படுவதால், ஆரம்பக்கல்வி சர்டிபிகேட் கூட இல்லாத எனது ஞான சூன்யம் பெருமைப்படும்படி, அவருக்கு மேலும் ஒரு சாமான்ய ஸயன்ஸ் நியூஸைத் தர ஆசைப்படுகிறேன்..' என்று கூறும்போது அவரது கர்வம் எல்லை மீறுவதாகவே கருதவேண்டும். சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கிறது.  இங்கு அவரது ஞான சூன்யம் பெருமைப்படுவதற்கு மாறாகச் சிறுமைப்படவே செய்கிறது.

அடுத்ததாக அவர் கோ.ராஜாராமுடன் மோதுவது 'ஜடம்' பற்றிய வார்த்தைப் பிரயோகத்தைப்பற்றி. மேற்படி கவிதையில் 'சக்தி = ஜடம் .ஓளிவேகம்2 என்ற பிரமிளின் சொற்பிரயோகம் பற்றி ராஜாராம் "M என்பது Mass ஆகும். Mass என்பது ஜடமா?' என்று தனது எதிர்வாதத்தில் கேட்டதுதான் பிரமிளின் ஆத்திரத்தை அதிகரித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாகத் தேவையில்லாமல் மீண்டும் ராஜாராமின் கல்வியறிவினைச் சீண்டியபடி பிரமிள் பின்வருமாறு பதிலளித்திருக்கின்றார்: "... அப்படியானால் ஜடம் என்ற பிரயோகம் எதைக் குறிப்பிடுகிறதோ, அதில் பொருண்மை இல்லையா? என்று என் கல்வியறிவின்மை இந்த M.Scயைக் கேட்டுக் கொள்கிறது. அத்தோடு கவிஞன் என்ற வகையில் ஜடம் என்ற வார்த்தையே பொருண்மை என்ற வார்த்தையை விட உடனடித்தொற்றுதலை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்" என்கிறார்.

பொருண்மை அல்லது திணிவு ஆகிய வார்த்தைப் பிரயோகங்கள் கூறும் கருத்துக்கும், ஜடம் என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசமுண்டு. ஜடமென்றால் உயிரற்ற பொருளென்பதைக் குறிப்பது. உயிரற்ற பொருளான கல் போன்ற ஒன்றிற்கும் பொருண்மை அல்லது திணிவு உண்டு. அதற்காக திணிவு அல்லது பொருண்மையை, பொருண்மை என்ற வார்த்தையை விட உடனடித்தொற்றுதலை வாசகனுக்கு ஜடம் ஏற்படுத்துகிறது என்பதற்காக,  ஜடமென்று வாதிட முனைவது சிறுபிள்ளைத்தனமானது.  கணிதவியலில் பொருண்மை அல்லது திணிவு என்பது ஒருபொருளிலுள்ள பொருளின் அளவைக் குறிப்பது. பொருளும் , அதன் மீதான புவியீர்ப்பு விசையின் தாக்கமும் சேர்ந்ததே நிறையாகக் கருதப்படுவது (W = Mg; இங்கு W என்பது நிறை; M என்பது பொருண்மை அல்லது திணிவு' g என்பது புவீயீர்பபிலான ஆர்முடுகல்). இதற்கு ஆரம்பக் கல்வியறிவே (ஒன்பதாம் வகுப்பிலேயே பிரயோக கணிதம், பெளதிகம் போன்ற பாடங்களில் இதுபற்றிய புரிதல்களேற்பட்டு விடுகின்றன) போதுமானது. இதற்கும் தன் பக்க நியாயத்தை விளக்கப்படுத்துவதற்காக கோ.ராஜாராமின் கல்வியறிவினை இவ்விதம் இழுத்துச் சிறுமைப்பட்டிருக்கத் தேவையில்லை.

இவ்விதமாகப் பிரமிள் தனது 'காலவெளி' மற்றும் 'ஜடம்' போன்ற சொற்பிரயோகங்களுக்கு விளக்கமளிக்காமல் விட்டிருக்கும் பட்சத்தில் அவரது மேற்படி கவிதையினை வாசிக்குமொரு வாசகர் கவிஞன் பிரமிளின் காலவெளி பற்றிய விஞ்ஞானத்திற்கு மாறான அர்த்தத்தினை அவனது கவிதைக்குரிய சிறப்பானதொரு அர்த்தமாகவும் கொண்டிருக்கலாம். பிரமிள் கவிஞனென்ற வகையில் கண்டுகொண்ட அர்த்தங்களாக, கற்பனைகளாக அவற்றைக் கருதிக் கொண்டிருக்கலாம்.அந்தச் சந்தர்ப்பத்தினைப் பிரமிளின் மேற்படி பதிற் கட்டுரையும், விளக்கமும் சீர்குலைத்து விடுகின்றன. அந்த வாய்ப்பையே பிரமிள் கெடுத்துக் கொண்டார் மேற்படி தனது 'அறியாமை'யினால். விஞ்ஞானத்துறையில் படித்த ஒருவரை விடத் தனது புரிதல் மேலென்பதுபோன்றதொரு தொனியில் பிரமிள் விளக்கமளிக்க முற்பட்டதன் மூலம் பிரமிளின் மேற்படி கவிதை தனது கவிதைச் சிறப்பினையே இழந்து சாதாரணமாகி விடுகிறது. அக்கவிதையினை வாசகனொருவன் தன் விருப்பத்துக்குரிய வகையில் புரிந்து கொள்ளலைத் தடுத்துவிடக் காரணமாகிவிடுகிறது பிரமிளின் மேற்படி விடயங்கள் பற்றிய புரிதலும், விளக்கமும்.

கணையாழி ஏப்ரில் 2020,  பதிவுகள்

8.  பாரதியாரின் சுயசரிதை, மற்றும் அவரது முதற் காதல் பற்றி...  

மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விபரிக்கின்றது. நிறைவேறாத பிள்ளைக்காதல் அதாவது மானுடரின் முதற் காதல், அவரது ஆங்கிலக்கல்வி கற்றல், அவரது திருமணம் மற்றும் அவரது தந்தை வியாபாரத்தில் நொடிந்துபோய் வறுமையுறல்போன்ற விடயங்களைக்கவிதை விபரிக்கின்றது ஆனால் இந்த வாழ்வே இவ்விதமானதொரு கனவுதான் என்பதை அவர் நன்கு புரிந்திருக்கின்றார். ஆனால் அதற்காக அவர் வாழ்விலிருந்து ஓடி, ஒதுங்கிப்போய் விட்டவரா?

இவ்விதமாக இழந்தவை பற்றியெல்லாம் விபரிக்கும் அவர், ஆரம்பத்தில் 'உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி லுங்கன வாகும்' என்று கூறும் அவர்,  தன் கவிதையின் இறுதியில் உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவி னுங்கன வாகும்' என்று மானுட வாழ்வே ஒரு கனவு என்பார். ஆனால் அதற்காக , அதனை நினைத்து , நினைத்து வருந்துவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'இதற்குநான் பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்? பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில் சிந்தை செய்தெவன் செத்திடு வானடா' என்று கூறித் தன் சுயசரிதையினை முடிப்பார்.

இந்தச்சிந்தனை அவருக்கு இருந்ததனால்தான் அவர் மானுட வாழ்வே ஒரு கனவு என்று வருந்தி, ஒதுங்கி, ஓர் ஓரத்தே ஒடுங்கிக்குடங்கி இருந்து விடாமல், இயன்ற மட்டும் நூல்களை வாசிப்பதில் , இருப்பை அறிவதில், இருப்பில் நிறைந்து கிடக்கும் வறுமை, தீண்டாமை, அடிமைத்தனம், வர்க்க வேறுபாடுகள், மத வேறுபாடுகள், பெண் அடிமைத்தனம் எனப் பல்வேறு சீர்கேடுகளையும் சீரமைக்க வேண்டுமென்று சிந்தித்தார். அந்த அவரது பரந்து பட்ட சிந்தனைகளே கவிதைகளாக, கட்டுரைகளாக, வசன கவிதைகளாக, கதைகளாக , மொழிபெயர்ப்புகளாக என்று பல்வேறு வடிவங்களில் உருப்பெற்றன. அவ்விதம் உருப்பெற்றதால்தான் அவை இன்னும் மானுடர்க்கு அரிய பலவகைகளிலும் பயனுள்ளவையாக விளங்கி வருகின்றன. இன்னும் பல் ஆயிரம் வருடங்களுக்கு அவ்விதமே அவை இருக்கும்.

இந்தச்சுயசரிதையில் ஆரம்பத்தில் அவர் தன்னைப்பற்றிக்கூறியுள்ள கீழுள்ள வரிகள் என்னைக் கவர்ந்தன. அவை:

"வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
சரத மன்றெனல் யானும் அறிகுவேன்;
பாழ்க டந்த பரனிலை யென்றவர்
பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை;
ஊழ் கடந்து வருவதும் ஒண்றுண்டோ ?
உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்

மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே."


வாழ்வு முற்றுங் கனவெனக்கூறிய மறையோர் கூற்று பிழையன்று காண் என்கின்றார். ஆனால் 'பாழ்கடந்த பரனிலை யென்றவர் பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை' என்கின்றார். மேலும் 'உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்' என்கின்றார். மேலும் மாயை பொய்யென்பதை முற்றும் கண்ட தான் பிரம்மத்தின் இயல்பினை ஆயும் வகையிலான நல்லருளைப்பெறவில்லை என்கின்றார்.  அதே நேரத்தில் தேசத்தில் உள்ளவர்கள் கூறும் சொற்கள் தன்னுடைய அறிவினுக்குப் புலப்படவில்லையென்றால் அவற்றைச் 'செம்மை யென்று மனத்திடைக்கொள்ளும்' 'தீய பக்தி இயற்கையும்' வாய்த்தவனல்லன் தான் என்றும் கூறுகின்றார். அறிவினுக்குச் சரியென்று படாத ஒன்றை, அறிவினுக்குப் புலப்படாத ஒன்றினை, வெறும் பக்தியின் அடிப்படையில் தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறும் பாரதியார் அவ்விதமான பக்தியைத் 'தீய பக்தி'  என்றும் கூறுகின்றார். 'சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே' என்கின்றார்.

மாயை விடயத்தில் பாரதியார் மிகவும் தெளிவான நிலைப்பாடினைக்கொண்டிருந்தார்.  அதனால்தான் அவர் இக்கவிதையிலும் 'மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்' என்று கூறுகின்றார். அவரது இந்த நிலைப்பாட்டினை அவரது வேறு கவிதைகளிலும் காண முடியும். உதாரணமாக 'மாயையைப் பழித்தல்' என்னும் கவிதையைக்கூறலாம். அதிலவர் 'யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே! உன்றன் போர்க்கஞ்சுவேனோ, பொடியாக்குவேனுன்னை மாயையே' என்று கூறுவது அதனால்தான்.

பாரதியாரின் பால்ய காலத்தில் அவரையொத்த சிறுவர்கள் எல்லாரும் ஆடியும், பாடியும், ஓடியும் விளையாடிக்கொண்டிருக்கையில் , பாரதியாரால் மட்டும் தந்தையின் கண்டிப்பு அஞ்சி அவ்விதம் அச்சிறார்களைப்போல், அவர்களோடு ஆடிப்பாடிட முடியவில்லை. அதனால் தனிமையில் , தோழ்மையின்று அவர் வருந்தினார். அதனைத் தனது சுயசரிதையில் பாரதியார் பின்வருமாறு கூறுவார்:

ஆண்டோ ர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் '
ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும்
என்னோ டொத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்,
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
தோழ் மைபிறி தின்றி வருந்தினேன்.


பாரதியார் தன் சுயசரிதைக் கவிதையில் விரிவாகவே தன் பிள்ளைக்காதல் அனுபவங்களை விபரித்திருக்கின்றார். பாரதியாருக்குக் காதல் பற்றி, பெண்கள் பற்றி உயர்ந்த எண்னமுண்டு, இதனால்தான் காதலின் சிறப்பைப்பற்றி, பெண்களின் உயர்வைபற்றியெல்லாம் அவரால் சிந்திக்க முடிந்தது.

அவற்றை மையமாக வைத்துக் கவிதைகள் பலவற்றை எழுத முடிந்தது. ஆனால் அவரை அந்த முதற் காதல் மிகவும் அதிகமாகவே பாதித்திருப்பதை அது பற்றி விரிவாகவே அவர் எழுதுயிருந்த கவிதை வரிகள் மூலம் அறிய முடிகின்றது. நீரெடுப்பதற்காக, நித்திலப்புன்னகை வீசி அவள் வரும் அழகினை, அவளுக்காகக் காத்திருந்து அவளழகைக் கண்டு அவளழகில் களித்திடும் மனப்போக்கினை எல்லாம் அவர் விரிவாகவே விபரித்திருக்கின்றார் தன 'சுயசரிதை'யின் 'பிள்ளைக்காதல்' என்னும் பகுதியில்:

"நீரெ டுத்து வருவதற் கவள், மணி
நித்தி லப்புன் நகைசுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தொறும் 
வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையியற் சாரர்கள்
தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்"

"காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேளைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக்
கோத்த சிந்தனையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்;
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயிரெய்துவேன்"


ஆனால் அவரது முதற்காதலான இந்தப் பிள்ளைக்காதல் தோல்வியிலேயே முடிந்தது. பத்து வயதில் அவர் நெஞ்சை ஒருத்தி ஆட்கொண்டாள். ஆனால் அவரது தந்தையோ பன்னிரண்டு வயதில் தான் பார்த்த பெண்ணொருத்தியை அவருக்கு மணம் செய்து வைத்தார். அதனைப்பாரதியார் மேற்படி 'சுயசரிதை' கவிதையில் பின்வருமாறு விபரிப்பார்:

"ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கோர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்."

இவ்விதமாகத் தான் காதலித்த பெண்ணை இழந்து, இன்னுமொருத்தியை மணம் செய்தபோதும், ஏற்கனவே தான் இன்னுமொரு பெண்ணிடம் கொண்டிருந்த காதல்தான் நிற்க வேண்டுமெனத்தான் தான் ஒருபோது தன் உள்ளத்திலெ எண்ணியவனல்லன் என்றும் கவிஞர் கூறுகின்றார்:

"மற்றோர் பெண்ணை மணஞ்செய்த போழுதுமுன்
மாத ராளிடைக் கொண்டதோர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்'

இவ்விதம் ஒருத்தியை நினைத்திருக்கையில், இன்னொருத்தியை மணப்பது தவறென்றாலும், அதனை எடுத்துத் தந்தையிட கூறும் திறனிலலாயினேன் என்று கூறும் பாரதி, சுவாலைவிட்டு எரியும் காதல் தழலானது எவ்வளவு தூரம் தன் உள்ளத்தை எரித்துள்ளதென்பதையும் தான் கண்டிலேன் என்கின்றார்.

இவ்விதம் இந்தச் 'சுயசரிதை' கவிதையின் மூலம் பாரதியாரின் தனிப்பட்ட வாழ்க்கை , அது பற்றிய உணர்வுகள் பலவற்றை அறிய முடிகின்றது. அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் மிக்க கவிதையாக மிளிர்கிறது .

கணையாழி மே 2020:, பதிவுகள்

ngiri2704@rogers.com

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்