Saturday, August 23, 2025

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 2) - இருபத்திநான்காம் வயதில் பாரதி: ஆன்ம உணர்ந்திறன் வ.ந.கிரிதரன் -


இருபத்திநான்காம் வயதில் பாரதி: ஆன்ம உணர்ந்திறன்


இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் 'மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.'  என்று குறிப்பிடுகின்ரார்.  இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. அது - ஜோதிகுமார் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதுதான். மார்க்சியவாதிகள் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்பதில்லை. அவர்கள் பொருள்முதல்வாதிகள்.  ஆன்மா என்று ஒன்றிருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை.  உண்மையில் ஆன்மா என்று இங்கு ஜோதிகுமார் கருதுவது எதனை?

ஆன்மா என்று ஜோதிகுமார் கருதுவது , பொருள்முதல்வாதிகள் கருதுவது போல் , உடலிலிருந்து தனித்து இயங்குமொன்றினை அல்ல , மாறாகச் சிந்தையைத்தான். அதனைத்தான் இந்நெடுங்கட்டுரையில் மூன்றாம் ப்குதியில் வரும் இவ்வரி புலப்படுத்துகின்றது: "ஓன்று அவனது ஆன்மாவில் (சிந்தையில்) தட்டுப்படக் கூடிய முரண்''

இங்கு பாரதியார் ஆன்மாவுக்கு இன்னுமோர் அர்த்தமாகச்  சிந்தை என்று கருதுவதையும் அறிய முடிகின்றது.  சிந்தை என்பது மார்க்சியவாதிகளின் கருத்துப்படி பொருள்வயமான மூளையின் செயற்பாடு. மூளையில்லையேல் சிந்தையில்லை என்பது அவர்கள் கருத்து.மாறாகக் கருத்துமுதல்வாதிகளோ ஆன்மா என்பது உடலிலிருந்து வேறானது என்று கருதுவர்.இப்பகுதியில் பாரதியார் மதம், கடவுள் பற்றிய தேடல்கள் விரிவாக ஆராயப்படுகின்றன.  கடவுள்கள் பலர் இருப்பதை விவேகானந்தரைப் போல் பாரதியும் நிராகரிக்கின்றான்.  பாரதியார் மீதான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விரிவாக ஆராயப்படுகின்றது.  பிரம்மம் என்னும் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படை . அதே சமயம் இவ்விதமான கடவுள், மதம் பற்றிய தேடல்கள் மானுட சமுதாயத்திலிருந்து விலகி,  தனித்து , தவங்களில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது. அது அங்கிருந்து இறங்கி வந்து மக்களுடன் கலந்து நிகழ்வதாக இருக்க வேண்டுமென்பது பாரதியின் நிலைப்பாடு.  இதனை அவர் எவ்வாறு வந்தடைந்தார்?

இது பற்றிய தனது தேடலில் ஜோதிகுமார் , பாரதியாரின் மேற்படி கடவுள், மதம் பற்றிய நிலைப்பாட்டுக்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் காரணமாக அமைந்திருந்தன என்பதை விவேகானந்தர் பற்றிய பாரதியாரின் கட்டுரை வரிகளையே ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டுவதன் மூலம் எடுத்துக் காட்டுகின்றார். அதே சமயம் விவேகானந்தரின் தாக்கம் பலமாக இருந்தபோதும், இவ்விதமான சிந்தனைகள்  பாரதிக்கு விவேகானந்தரைச் சந்திப்பதற்கு முன்னரே இருந்துள்ளது என்பதை அவரது மலையாள நம்பூதிரிகளுக்கிடையிலான சீர்திருத்தம் பற்றிய எழுத்துகளூடு சுட்டிக்காட்டுகின்றார்.

விவேகானந்தர் பற்றிய கட்டுரையில் பாரதியார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“18ம் வயதில் நரேந்திரர் (விவேகானந்தர்) பி.ஏ பரீட்சை தேறினார். 12 வயதான உடனே நரேந்திரர் கடவுளர் அநேகர் என்ற கொள்கையை நம்பாமல் நிறுத்திவிட்டார். .."இந்த ஜகத்திலே ‘பிரமத்தை யொழிய வேறொன்றுமில்லை’ யென்ற பெருங்கொள்கையை உலகத்தாருக்கு எடுத்துப்போதனை செய்யவந்த இம்மஹான், "

அத்துடன் , விவேகானந்தரின், வாழ்க்கை தரிசனம் குறித்து பின்வருமாறு கூறுகின்றான், இவ்இளைஞன் எனக் குறிப்பிட்டு,  விவேகானந்தர் பற்றிய பாரதியின் பின்வரும் கூற்றினை எடுத்துக்காட்டுகின்றார் ஜோதிகுமார் : “பிரம கள்ளுண்டு… பல இடங்களில் யாத்திரை புரிந்து… இமயமலைக்கு சென்று… வாழ்ந்து… இதற்கப்பால் லேகோபாகாரம் செய்ய வேண்டும் எனத் திருவருள் இவருக்கு உண்டாகிவிட்டது… இந்திய தேசத்தில் ஆண்களெல்லாம்… சரீர பலம், மனோ பலம், ஞான பலம் என்ற மூன்றுமல்லாது அற்ப வாழ்க்கையை வாழ்கின்றார்கள்… அதன் பேரில் இமயமலை சாரலில் இருந்து இந்த மகாரிஷி இறங்கி வந்து… பல இடங்களில் சுற்றிவிட்டு… சென்னை வந்து சேர்ந்தார்…”

இந்திய ஆண்கள் சரீர பலம், மனோ பலம், ஞான பலம் அற்று வாழ்கின்றார்கள். அவர்கள்தம் வாழ்க்கையை  உயர்த்த வேண்டுமென்ற எண்ணத்துடன் சுவாமி விவேகானந்தர் இமயமலைச் சாரலிலிருந்து கீழிறங்கி மக்களை நோக்கி வ்ருகின்றார். இது இளைஞான பாரதியாரை ஈர்க்கின்றது. இவர்கள் இருவரினதும் இவ்விதமான எண்ணப்போக்குக்குக் காரணம் இருவருமே மானுடரின் அடித்தளமாய் இருக்கும் மதத்தினை உய்ர்த்த வேண்டுமென்ற நோக்கமே என்கின்றார் ஜோதிகுமார்:

"இப்பின்னணியில், பாரதி முயன்றது எதனை என்பது கேள்வியாகின்றது. இருவருமே மனிதனை மாத்திரமன்றி, அதனது அடித்தளமாய் அன்று இருந்திருக்கக்கூடிய, மதத்தினையும் நிமிர்த்த முற்படுகின்றார்கள் எனக் கூறுவதே பொருத்தமானது."

மதம் பற்றிய , கடவுள் பற்றிய பாரதியாரின் தேடலை , அதனால் விளைந்த அவனது சிந்தை மாற்றங்களை 'ஆன்ம உணர்திறன்' என்னும் இப்பகுதியில் ஆராயும் ஜோதிகுமார் , கட்டுரையின் இறுதியில் இறுதியில் அக்காலகட்டத்து மாதரின் நிலை பற்றிய  பாரதியாரின் எண்ணங்களையும் குறிப்பிடுகின்றார். குறிப்பாக மிகவும் ஆக்ரோசமாகப் பெண்களை உடன் கட்டையேற்றும் பழக்கத்தைக்கண்டிக்கும் பாரதியின் எழுத்துகளைக் குறிப்பிடுகின்றார். 'மாதர் கோரிக்கைகள்' என்று இவ்வுப பிரிவுக்குத் தலைப்புமிட்டிருக்கின்றார்.

பஞ்சாபியிலுள்ள மாரிப்பூர் என்ற ஊரில், 1905களில் நடந்தேறிய, சதி தகனம் பற்றிய அவனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதாக ' சக்கரவர்த்தினி'யில் பாரதியார் எழுதிய பின்வரும் கூற்று அமைந்திருக்கின்றது:

“…அவள் முகத்திலே துணி ஒன்றைக் கொண்டு மூடினதின் பேரில் அவளது கழுத்துவரை வரட்டிகளை அடுக்கி, நெருப்பைக் கொளுத்திவிட்டு, அந்நெருப்பிலே மூடபக்தி கொண்ட மகாபாதக மிருக ஜனங்கள், எண்ணெய், நெய் முதலியவற்றைக் கொண்டு சொரிந்தார்கள்… மத்தளங்கள் அடித்தும், ராம் ராம் என்று கூக்குரலிட்டும் அவளது அழுகை குரல் வெளியே கேளாதப்படித் தடுத்துவிட… (அவள்)… சிறிது நேரத்துக்கெல்லாம் சாம்பராகிவிட்டாள்....... “20 வயது கன்னிகையை ஆவலுடன் கொளுத்தி பாத்துவிட்டு, தமது நீச உயிர்களுக்கு, கஷ்டம் வரும்போது பொய் ஓலமிடுகின்ற இந்த ஈனர்களை கோட்டார் இலேசாக விடமாட்டார்களென்று நம்புகின்றோம்…” (பக்கம்:192).

பாரதியாரின் இக்கோபம் அவரது கோபத்தை மட்டுமல்ல, மேற்படி பெண்ணின் படுகொலைக்கு அடிப்படைக்காரணமான  அன்று நிலவிய  மத நிலையினையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது  என்பது ஜோதிகுமாரின் முடிவு. அத்துடன் நிவேதித்தாவுடனான சந்திப்பும் பாரதியாரின் பெண்கள் நிலை பற்றிய எண்ணங்களுக்குக் காரணமாகக் கருதப்படுகின்றதென்று  குறிப்பிடும் ஜோதிகுமார் , கூடவே , பாரதியார் அச்சந்திப்புக்கு முன்ரே எழுதிய 'துளசிபாய்' சிறுகதையும் சதி தகனத்தை வன்மையாகச் சாடுகின்றது என்றும் கூறுகினறார். இது பாரதியாருக்கு நிவேதித்தாவுடனான சந்திப்புக்கு முன்னிருந்தே பெண்கள் நிலை பற்றிய தெளிவான புரிதல் இருந்துள்ளதாக ஜோதிகுமார் நம்புவதை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது.

[தொடரும்]

girinav@gmail.com

No comments:

ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியான முதலாவது தமிழ் நாவல் (மின்னூல்) வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' . ஆங்கில மொழிபெயர்ப்பாக , அச்சில் வெளியான முதலாவது தமிழ் நாவல் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத...

பிரபலமான பதிவுகள்