![]() |
பேராசிரியர் சுனில் ஆரியரத்னா |
பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவின் இயக்கத்தில்வெளியான திரைப்படம் 'பத்தினி'. 'நாம கடவுள்' புகழ் பூஜா உமாசங்கர் கண்ணகியாக நடித்திருக்கும் சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிஙகளத்திரைப்படம்.
பேராசிரியர் சுனில் ஆரியரத்னாவைச் (Sunil Ariyaratne) சிங்களக் கலை,இலக்கிய உலகு நன்கறியும். கவிஞர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், திரைக்கதாசிரியர், பாடலாசிரியர் எனச் சிங்களத்திரையுலகில், சின்னத்திரையுலகில் நன்கறியப்பட்ட ஒருவர்.
காவிய மாந்தர்களை வைத்து இவர் உருவாக்கிய சிங்களத்திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பையும், வசூலையும் பெற்றவை. சிலப்பதிகாரக் கதையை மையமாக வைத்து இவர் எடுத்த சிங்களத்திரைப்படமான 'பத்தினி' பெற்ற வரவேற்பைத்தொடர்ந்து இவர் சித்தார்த்தரின் (புத்தர்) மனைவியான யசோதராவை மையமாக வைத்து உருவாக்கிய Bimba Devi Alias Yashodhara என்னும் திரைப்படமும் 2018இல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கண்ணகியைத் தெய்வமாகக்கொண்டு வழிபடும் முறை சிங்கள , தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வருவதற்குச் சான்றாகக் கண்ணகி அம்மன் கோவில்கள் உள்ளன. சிங்கள மக்கள் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சேரன் செங்குட்டுவன் எடுத்த கண்ணகிக்கான பத்தினித் தெய்வ விழாவில் இலங்கை மன்னன் முதலாம் கஜபாகுவுன் கலந்து கொண்டதைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது;
"பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து
நித்தல் விழாவணி நிகழ்கென் றேவிப்
பூவும் புகையும் மேவிய விரையும்
தேவந் திகையைச் செய்கென் றருளி
வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவ னின்றோன் முன்னர்
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும் "
(சிலப்பதிகாரம் 151 - 163)
மன்னன் கஜபாகுவே இலங்கையில் கண்ணகித்தெய்வ வழிபாட்டைப் பரப்பியவனாகக் கருதப்படுகின்றான்.
'பத்தினி' படப்பாடல்கள் அனைத்துமே கேட்பதற்கு இனியவை. அவற்றிலொன்று 'புஞ்சி சமனலி. மாதவிக்கு மணிமேகலை மகளாகப்பிறந்ததையொட்டி மாதவியும், தாயும் அதனைச்சிறப்பாகக் கொண்டாடுவதற்காகப் பாடும் பாடல். பாடல் வரிகளை எழுதியிருப்பவர் சுனில் ஆரியரத்தின.
![]() |
நிரோஷா விராஜினி |
பாடகியின் பெயர் நிரோஷா விராஜினி. இப்பாடல்தான் நான் கேட்ட இவரது முதற் பாடல். கேட்டதுமே பிடித்துப்போன பாடல்களிலொன்று. 1973இல் பிறந்த இவர் இசையமைப்பாளரும் கூட. சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகள் பலவற்றைப்பெற்ற சிறந்த சிங்களப்பாடகிகளிலொருவர். சிங்கள, தமிழ், ஹிந்தி உட்படப் பல மொழிகளில் இவர் பாடியுள்ளதாக இவரைப்பற்றிய விக்கிபீடியாக் குறிப்பு கூறுகின்றது.
பாடல்: புஞ்சி சமனலி (Punchi Samanali)
பாடகர்: நிரோஷா விராஜினி (Nirosha Virajini)
இசை: ரோகன் வீரசிங்க (Rohana Weerasinghe)
பாடல் வரிகள்: சுனில் ஆரியரத்தின ( Sunil Ariyarathna)
திரைப்படம்: பத்தினி (Paththini)
https://www.youtube.com/watch?v=kWFZrjI6GDQ
No comments:
Post a Comment