* ஓவியம் - AI
குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.
இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.
நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு
நட்பு ஒப்பந்தம் செய்து
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
எண்ணங்கள் எல்லாமே
என்னைச் சுற்றிக் குளிர்காலம்
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.
அடுத்தவருடமாவது
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும்
எண்ணங்களைத் தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.
பல தசாம்சங்களாக நான் டொரோண்டொவில்
வாழ்ந்து வருகின்றேன்.
குளிர்காலங்கள் வருகின்றன.
குளிர்காலங்கள் போகின்றன.
குளிர்காலம் பற்றிய என் மனச்சஞ்சலங்களும்
வருகின்றன.
போகின்றன.
நியதிகள் மாற்ற முடியாதவை என்று
அப்போதெல்லாம் என்னையே நான்
சமாதானப்படுத்திக்கொள்கின்றேன்.
இதைக் குளிர்காலத்துடனான என்
சரணாகதி என்று நீங்கள் கூறக்கூடும்.
அதை நான் மறுத்துரைக்கப்போவதில்லை.
girinav@gmail.com
No comments:
Post a Comment