அண்மையில் தற்செயலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மனைவி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் நேர்காணலைப் பார்த்தேன். கேட்டேன். சுஜாதா ரங்கராஜன் அவர்களின் பாசாங்குத்தனமற்ற, நேர்மையான, சில சமயங்களில் அப்பாவித்தனமான பதில்கள் இந்நேர்காணலின் முக்கிய அம்சம்.
இந்நேர்காணல் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பன்முக ஆளுமையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாகவிருக்கிறது என்பேன்.
இறுதியாகத் தன் கணவரைப்பற்றிக் கூறுகையில் அவர் சிறந்த மனிதர்,. சிறந்த எழுத்தாளர். சிறந்த கணவர் என்று வரிசைப்படுத்திக் கூறுவார் சுஜாதா ரங்கராஜன். அது இந்நேர்காணலின் உச்சம்.
இந்நேர்காணலின்போது திருமதி சுஜாதா முதுமையின் தாலாட்டில் இருப்பவர். காதல், வாழ்க்கை, இருப்பு பற்றிய இவரது சிந்தனைகள் முதிர்ச்சியானவை. இவரது பதில்களிலிருந்து நான் உணர்வது எழுத்தாளர் சுஜாதாவுக்கும் , இவருக்குமிடையில் நிலவிய காதலை. இருவருமே வெளிப்படையாக வெளிப்படுத்திக்கொள்ளாவிட்டாலும் , நிலவிய அந்தக் காதல்தான் அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைத்திருந்திருக்கின்றது. அந்தக் காதலே திருமதி சுஜாதாவைத் தன் கணவர் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் கூடவே செல்ல வைத்தது. இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து , இணைந்து வாழ்ந்திருக்கின்றார்கள். இன்று தன் கணவரை நினைவு கூர்கையில் கூட (அவரது அசட்டுத்தனங்களையும் உள்ளடக்கி) திருமதி சுஜாதாவால் மகிழ்ச்சியுடன் நினைவு கூர முடிகின்றது. தன் கணவரின் அசட்டுத்தனங்களை எண்ணி அவரால் சிரிக்க முடிகின்றது. அதற்குக் காரணம் அவரது ஆழ்மனத்தில் அவர் கணவர் மேல் அவர் கொண்டிருக்கும் காதல் என்றே நான் உணர்கின்றேன்.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மறைவையடுத்து சுஜாதா அறக்கட்டளை , ஆழி பப்ளிஷர்ஸுடன் இணைந்து , உலகலளாவிய ரீதியில் நடத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில், வட அமெரிக்காவுக்கான சிறந்த கதைக்கான விருது எனக்குக் கிடைத்தது.அதனை , இந்நேர்காணலைக் கேட்கையில் ஒரு கணம் நினைவு கூர்ந்தேன்.
கூடவே நான் வாசித்த சுஜாதா அவர்களின் ஆரம்பக் கால நாவல்களான நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி, நில் கவனி தாக்கு, பதினாலு நாட்கள் மற்றும் ரஞ்சனி, பாலம், ஹோனாலூலு போன்ற சிறுகதைகளையும் நினைவு கூர்ந்தேன். இவற்றில் நில் கவனி தாக்கு, ஹோனாலூலு ஆகியவை தினமணிக்கதிரில் வெளியானவை. அனிதா இளம் மனைவி, பதினாலு நாட்கள், நைலான் கயிறு ஆகியவை குமுதம் சஞ்சிகையிலும், பாலம் விகடனிலும் வெளியானவை.
No comments:
Post a Comment