Monday, August 25, 2025

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 4 - இறுதிப்பகுதி) வ.ந.கிரிதரன் -


அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும்.  அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும்.  அவற்றை ஆராய்வதற்கு முதல் ஜோதிகுமார் பாரதியாரின் எழுத்தின் நோக்கம், எழுத்தின் தன்மை பற்றிச் சிறிது கவனம் செலுத்துகின்றார். 

பாரதியின் எழுத்தின்  நோக்கமும், தன்மையும்

பாரதியாரின் எழுத்தின் முக்கிய பண்பாக அவதானிக்கக்கூடியது அவரது ஆழமும், எளிமையும் கூடிய மொழி நடை.  உதாரணத்துக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையைக் கூறலாம். பொருள் முதல்வாதம், கருத்து முத்ல்வாதம் பற்றிய தர்க்கமே அதன் அடிநாதம். ஆனால் அதனைக்கண்டடைவது முறையான, தர்க்கமொன்றின் மூலமே சாத்தியம். ஆனால் அவர் அக்கவிதையில் பாவித்துள்ள மொழி நடை என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. அதனால் விளையும் முக்கிய நன்மைக்களிலொன்று - வாசிப்பின் பல்வேறு படி நிலைகளிலுள்ள வாசகர்களாலும் இக்கவிதையை எளிதாக வாசிகக் முடியும். ஆனால் , புரிதல்தான் அவரவர் வாசிக்கும், சிந்திக்கும் திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேறுபடும். 

இவ்விதமாக பாரதியார் தன் எழுத்து நடையைப் பாவித்ததற்கு ஒரு நோக்கம் இருந்ததா என்பது பற்றித்  தன் கவனத்தைச் செலுத்துகின்றார் ஆய்வாளர் ஜோதிகுமார்.  பாரதியாரின் 'பாரதகுமாரிகள்' கட்டுரையையே இதற்கும் ஆதாரமாகக்கொண்டு அவர் பின்வருமாறு கூறுவார்: 

“நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞானக் கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது "

இது பற்றி மேலும் கூறுகையில் "எழுத்தின் நோக்கத்தை, இதைவிட நேர்த்தியாகச் சொல்வது கடினம். இவ் இளவயதில், இவ் இளைஞன் தனது எழுத்தின் நோக்கத்திற்கான மேற்படி தாரக மந்திரத்தை இப்படியாக வரையறுத்துக் கொள்வது மாத்திரம் இல்லாமல், மேற்படி எழுத்தானது மக்களை அதிலும் குறிப்பாக, மாதரைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இவன் நன்கு உணர்வதினை, மேற்படி வரிகள் எமக்கு எடுத்தியம்புவதாக உள்ளன" என்று கூறுவார்.  

பாரதிக்குத் தன் எழுத்துகள் மக்களை, பெண்களைச் சென்று சேர வேண்டும் என்னும் தெளிவான நோக்கம் இருந்தது.  அவ்விதம் சென்றடைந்தாலே அவ்வெழுத்துகளால் பயனுண்டு என்பதில் அவனுக்கு மிகுந்த தெளிவிருந்தது. அதற்காக அவன் அதற்குரிய மொழியினைத் தேடி அடைந்தான். இவ்விதமானதொரு முடிவுக்கே ஜோதிகுமார் வருகின்றார். அவரது முடிவு தர்க்கச்சிறப்பு மிக்க , பாரதி பற்றிய அவரது அவதானிப்புகளில் ஒன்றாக அமைந்துமிருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் அவரது 'இதற்காக, ‘சொல்’ ஒன்றைத் தேடி அலையும் இவ் இளைஞன், இப்பயணத்தின் போது, மக்கள் விரும்பக் கூடிய ‘எளிய பதங்களை’ தேடுவதும் தர்க்கப்பூர்வமாகின்றது.' என்னும் கூற்று.

அத்துடன் அவர் நிற்கவில்லை. பாரதியாரின் மதரீதியிலான அம்சங்களை உள்ளடக்கிய அவரது  எழுத்துகளுக்கும்  ஏதாவது முக்கிய காரணம் இருக்கக் கூடுமோ என்பதிலும் அவரது கவனம் செல்கின்றது.  'வேறு வார்த்தையில் கூறினால், சொல் ஒன்றைத் தேடியும் எளிய பதங்களை நாடியும் நகரக் கூடியவன், மக்களின் தேசப்பற்றை மதப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவிற்கு (அல்லது மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்றும் ஒரு எண்ணக்கருவிற்கு,) இக்காலப்பகுதியில், அதாவது தனது 24ம் வயதில், வந்து சேர்ந்துவிட்டானா என்பதுவே கேள்வியாக உருவெடுக்கின்றது.'என்னும் அவரது இக்கூற்று அதனைத்தான் புலப்படுத்துகின்றது. 

உண்மையில் தேசப்பற்றை மதப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவிற்கு என்பதற்கு மாறாக மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவிற்கு பாரதியார் வந்தாரா என்பதுவே சரியானதொரு கேள்வியாக இருக்கக்கூடுமென்று தென்படுகின்றது. ஏனென்றால் பாரதியார் தன் எழுத்துகளில் மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடியிருக்கின்றார். 'ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி   அலையும் அறிவிலிகள் -- பால் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்   டாமெனல் கேளீரோ?' என்று பாடியிருக்கின்றார்.  'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்' என்று அறைகூவல் விடுக்கின்றார். அறிவே தெய்வம். பிரம்மம் என்பது அவரது தெளிவான நிலைப்பாடு.  இதனால்தான் 'அறிவொன்றே தெய்வமுண்   டாமெனல் கேளீரோ?' என்றும், 'இத்தரை மீதினி லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்!' என்றும் அவரால் பாட முடிகின்றது. 

இவ்விதம் மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவே பாரதியாருக்கிருந்தது என்னும் முடிவுக்கே இறுதியில் ஜோதிகுமாரும் வருகின்றார், அதையே இக்கட்டுரைத்தொடரின் இறுதியாக அவர் வந்தடையும் ' தன்னைச்சுற்றி எழக்கூடிய நான்கு விதமான அழுத்தங்களை ஆழ உணரும் பாரதி, இவற்றுக்கு மத்தியில், திலகரின் அரசியலைக் களமிறக்க வேண்டியதன் அவசியத்தினையும், ஆனால் ஆயிரம் வருஷங்கள் பழைமைவாய்ந்த  ஒரு  சமூகத்தில் தான் பிறந்து வாழநேர்ந்துள்ள யதார்த்தத்தையும், இதற்கொப்ப, மக்களின் மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்ற வேண்டிய தேவைப்பாட்டினையும், நன்கு உணர்ந்து, தன் வியாசத்திற்கு, பிரஞ்ஞையுடன் மதமூலாம் பூசமுனையும், ஒரு  விதிவிலக்கான இளைஞனின் அணுகுமுறையை, எடுத்துரைக்க முனைந்திருந்தோம். இவனது செயற்பாடுகள் அல்லது புரிதல் இலகுவில் ஒருவருக்குக் கைவரக்கூடியதொன்றல்ல என்பது தெளிவு. பல்வேறு நூல்களைக் கற்று, ஆழ சிந்தித்து, தெளிந்து, அதேவேளை மக்களின்பால் அபரிவிதமான பரிவையும் தன்னுள் பெருமளவில் வளர்த்துக்கொள்ளும் ஓர் இளைஞனால் மாத்திரமே இத்தகைய முன்னெடுப்புகள் சாத்தியப்படக் கூடும்.' என்னும் நிலைப்பாடும் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. 

இங்கு ஜோதிகுமார் குறிப்பிடும் நான்கு விதமான அழுத்தங்கள் எவை? அவரே பிறிதோரிடத்தில் பின்வருமாரு  பட்டியலிடுவார்:

"எந்த ஒரு ஆதிக்கச் சக்தியினரின் கழுகுக் கண்களைப் போலவே, ஆங்கில உளவு படையினரின் கழுகுக் கண்கள் பொறுத்த நியாயமான எச்சரிக்கையும், இவனில் அடங்குகின்றது. அதே அளவில், G.சுப்பிரமணிய அய்யர் போன்றோரின் அரசியல் நேசங்களையும் இவன் கணக்கில் எடுத்தாக வேண்டியவனாகின்றான். மொத்தத்தில் :

1. ஜனங்கள் அன்று இன்று இருந்த யதார்த்த நிலை.
2. அவர்களை அணுகி, பயிற்றிப் பல கல்வித் தர வேண்டிய ஒரு நடைமுறை யதார்த்தம்.
3. கூடவே பிரிட்டிசாரின் கழுகுக் கண்கள்.
4.  இதனுடன், அரவணைக்க வேண்டிய ஏனைய ஸ்நேகப்பூர்வ அரசியல் நேசங்கள்.

இவற்றின் மத்தியிலேயே திலகரின் அரசியலும், அன்றைய இந்தியாவில் அரங்கேறுகின்றது. இதன்போது, தனது நிலைப்பாட்டையும், இவ் இளைஞன் தெளிவுப்படுத்த வேண்டிய கடமைக்கு உட்படுத்தப்படுகின்றான்."

இவ்விதமான அழுத்தங்களுக்கு மத்தியில், திலகரின் தீவிரவாதக் கொள்கையினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த பாரதியார் கவனமாகச் செயற்பட வேண்டியிருந்தது.  அதே சமயம் , நாட்டரசியலி மென்போக்கு மிக்க சுப்பிரமணிய ஐயர் போன்ற அரசியல் நேச சக்திகளுக்குத்  தன்னால் இடர்கள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதிலும் எச்சரிக்கையாகவிருக்க வேண்டுமென்பதிலும் அவன் கருத்துடையவனாகவிருந்தான்.  இவ்வழுத்தங்களை நன்கு உணர்ந்திருந்த பாரதியார், 'ஆயிரம் வருஷங்கள் பழைமைவாய்ந்த'  ஒரு  மத ஆதிக்கம் மிக்க சமூகத்தில் தன் கருத்துகளைத் தாக்கத்துடன் செலுத்துவதற்கு எளிமையும், தெளிவும் , ஆழமும் மிக்கதொரு மொழியில், மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்ற வேண்டிய தெளிவான சிந்தனை மிக்கவராகச்  செயற்பட்டார்.  இதுதான் ஆய்வாளர் ஜோதிகுமார் இறுதியாக வந்தடைந்த தெளிவான  முடிவு.  

இதே சமயம் ஆங்கிலேயரின் அரசோ தம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகப் பாரத மக்களை மதரீதியில் பிரித்தாளும் தந்திரத்தைக் கைக்கொண்டு வந்தது. இது பற்றிக் குறிப்பிடும் ஜோதிகுமார் "இந்திய மக்களிடை வளர்ந்துவரக்கூடிய தேசிய உணர்வை, திசைத்திருப்ப அல்லது அதனை இடம்பெயர்த்து, அங்கே, குறுகிய அரசியல் சித்தாந்தத்தை விதைத்துவிட, 1905களில் கர்ஸ்ஸன் பிரபு (வைஸ்ராய்) வங்காள மாகாணத் துண்டிப்பை அமுல்படுத்துகின்றான்: கொழுந்துவிட்டெரியும். இந்தியத் தேசிய உணர்வினை இந்நடைமுறையானது, சிதைத்து, மத அடிப்படையில், மக்களைப் பிரிந்து நிற்கச்செய்துவிடும் என்பது அன்றைய ஆங்கில சக்திகளின் எதிர்பார்ப்பாய் இருந்தது. முஸ்லீம்களாகவும், இந்துக்களாகவும் இந்தியர், கச்சைக்கட்டிக் கொள்வர் என்ற ஓர் எதிர்பார்ப்பின் அடிப்படையில், மேற்படி அரசியல் நகர்வானது, பல்வேறு சமாதானங்களுடன் அன்றைய ஆதிக்கச் சக்தியினரால் நகர்த்தப்பட்டது. " என்று கூறுவார். 


ஆங்கிலேயரின் இத்தந்திரத்தைப் பாரதியார் நன்கு உணர்ந்திருந்தார். இது பற்றிய பாரதியாரின் அணுகுமுறை குறித்து ஆய்வாளர் ஜோதிகுமார் மேலும் தன் ஆய்வில் பின்வருமாறு  விபரித்திருப்பார்:

"பத்திரிக்கைகளின் அரசியல் நோக்கங்கள், அவற்றின் கருத்துருவாக்கங்கள் என்பனவற்றை அவன் மதிப்பிட்டு வைத்துள்ளதைப்போலவே அன்றைய ஆதிக்கச் சக்தியினரின் நரித்தனமிக்க தந்திரம் மிகுந்த நகர்வுகளை, முக்கியமாக, இவ்வாதிக்கச் சக்தியினரின் (நண்பர்கள்) எனப்படுவோர் முன்நகர்த்தும் அரசியலின் ஆழ-அகலங்களை, நன்கு உள்வாங்கி அவற்றை மக்களின் மேடையில் அம்பலப்படுத்துவது தன் கடமை எனக் கருதி நிற்கின்றான் இவ்இளைஞன். ... கைலாசபதி குறிக்கும்; 'உணர்ச்சிப் பிழம்பாகக்' காட்சியளிக்கும் இவன், அதேவேளை, அதனையும் மீறி தேர்ந்த ஒரு அரசியல் ஞானம் கொண்ட அரசியல் வாதியாகவும் காட்சித்தருகின்றான்..... மொத்தத்தில், ஆதிக்கச் சக்தியினரின் அரசியல் நகர்வுகளின் சூட்சுமத்தையும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் அரசியலை மாற்றி கட்டமைக்க முனையும் அடிவருடி பத்திரிகைகளையும், மறுபுறத்தே, ஆங்கில உளவுத்துறையைச் சாந்தப்படுத்த வேண்டிய தேவைப்பாட்டையும், ஆனால் இதன்போது அறிமுகம் செய்யவேண்டிய சிற்சில தத்துவவாதிகளின் பலவீனமிக்கப் பக்கங்களையும் ஒருங்கே உணர்ந்தவனாக, இவ்இளைஞன் காட்சி தருகின்றான் என்பதிலேயே, பாரதி என்ற மகாகவியின், மேதவிலாசம் முளை விடுவதாக இருக்கின்றது."

இவ்விதம் வரலாற்றில் பாரதி என்னும் இளைஞனின் நிலையினை, எந்தப்புள்ளியிலிருந்து அல்லது புள்ளிகளிலிருந்து அவன் செயற்பட்டான் என்பதை வெளிப்படுத்தும் சிறந்ததோர் ஆய்வுக்கட்டுரையே ஜோதிகுமாரின்    'இருபத்து நான்காம் வயதில் பாரதி'  என்னும் நெடுங்கட்டுரை.  இதனையே ஜோதிகுமாரின் இந்நெடுங்கட்டுரையின் இறுதி வரிகளான 'அன்றைய ஆங்கிலேயரின், இஸ்ரேலிய படுகொலைகளை ஒத்த, சாத்திரங்களை தின்று தீர்க்கும், காட்டுமிராண்டி ஆட்சியை, அம்பலப்படுத்தும் போது, வெறுமனே ஒரு அரசியல் கோதாவில் எடுத்தெறிந்து பேசாமல், சட்ட வலுவேறாக்கம் குறித்து வாதிக்க முற்படுவது, இவ்இளைஞன் எத்தகைய ஓர் தளத்தில் இயங்க முற்படுகின்றான் என்பதை கூறுவதாகின்றது. அதாவது, இவனது அரசியலானது, மேலோட்டமான அரசியல் அல்ல என்பதும், அது ஆழமும் நுணுக்கமும் நிறைந்தது, என்பதும் குறிக்கத்தக்கதாகின்றது. இந்தப் புரிதலிலேயே, வரலாற்றின், எப்புள்ளியில் இவ்இளைஞன் நிற்கின்றான் என்ற கேள்வி அணுகப்பட வேண்டியுள்ளது.' என்னும் வரிகளும் புலப்படுத்துகின்றன.

- ' நந்தலாலா' எல். ஜோதிகுமார் -

பாரதியாரின் ஆளுமையின் முக்கிய கூறுகளை அவரது 23, 24 வயதிகளில் தென்பட்டிருக்கின்றன என்பதைத்தான் அக்காலகட்டத்து அவரது எழுத்துகள் புலப்படுத்துகின்றன என்பது ஜோதிகுமார் வந்தடைந்திருக்கும் முடிவு.ம் அதே சமயம் அக்காலகட்டத்தில் 'உணர்ச்சிப் பிழம்பாக'த் சுடர்விட்ட பாரதியின் அவ்வுணர்ச்சியின் வேகம் அவரது பிற்காலத்தில் சிறிது நீர்த்துப்போய்விட்டதா என்னுமொரு கேள்வியும் ஆய்வுக்குரியது என்று என்னுடனான தனிப்பட்ட உரையாடலொன்றில் அவர் கூறியது நினைவுக்கு வருகின்றது.  23, 24 வயதில் பாரதி பற்றி விரிவானதொரு கண்ணோட்டத்தைச் செலுத்திய ஜோதிகுமார் அது பற்றியும் தன் கவனத்தைச் செலுத்தி , இன்னுமொரு விரிவான ஆய்வுக்கட்டுரையொனைத் தருவாரென்று எதிர்பார்ப்போம்.

அதே சமயம் இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்டாமல் இவ்விமர்சனக் குறிப்பு பூர்த்தியாகாது. அது பாரதியார் பற்றிய தேடலையே தன் வாழ்நாட் பணியாகக்கொண்டு , பாரதியார் எழுத்துகளைத்தேடித்  தொகுத்து வெளியிட்ட  திரு. சீனி விசுவநாதன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பு.  அப்பங்களிப்பு இல்லாமல் ஜோதிகுமாரால் இவ்விதமானதொரு விரிவான, தர்க்கச்சிறப்பு , தெளிவு மிக்க நெடுங்கட்டுரையொன்றினைத் தந்திருக்க முடியாது. அதற்க்காக திரு.சீனி விசுவநாதனின் தன்னலங் கருதாத பாரதி பற்றிய தேடல் விதந்துரைக்கப்பட வேண்டியது.

[முற்றும்]

girinav@gmail.com

No comments:

ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியான முதலாவது தமிழ் நாவல் (மின்னூல்) வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' . ஆங்கில மொழிபெயர்ப்பாக , அச்சில் வெளியான முதலாவது தமிழ் நாவல் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத...

பிரபலமான பதிவுகள்