தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை. அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை. குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும். சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க மானுடருக்கும் பிடிக்கும். இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம் வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.
அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் ' 23ஆம் வயதில் பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.
நூலுக்கான முகவுரை கவித்துவமானது. அதில் ஜோதிகுமார் பின்வருமாறு கூறுவார்:
"பாரதியின் சித்திரமானது இன்றுவரை இன்னமும் முழுமையாகத் தீட்டப்பட்டதாக இல்லை. கூடினால் ,அவனது ஆளுமையில் ஒரு இருபத்தைந்து வீதத்தைக் கீறினார்களே தவிர அவனது மொத்த ஆளுமையையும் வெளிப்படுத்தும் ஓவியங்கள் இல்லை எனலாம். அவன்பொறுத்த தகவல்கள் போதாது என்பது ஒருபுறமிருக்க தத்தமது வர்க்க நலன்களின் செல்வாக்குகள் சிதைவினை ஏற்படுத்துவது. மறுபுறம் , பாரதி குறித்த திரைப்படத்தில் இருந்து பல்வேறு ஓவியங்கள் வரை இந்தக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவையே. அவனது ஆளுமையை முற்றாகப் படம் பிடிக்கத்தற்போதுள்ள திரைகள் தாங்கப்போவதில்லை என்பது வெளிப்படை. இனி ஒரு திரையைக் கட்டுவிக்காமல் , பாரதியை முழுமையாக எம்முன் கொண்டுவந்து நிறுத்துவது முடியாத காரியமாகின்றது. இப்பின்னணியில் கைலாசபதியின் பாரதி குறித்த பார்வைகள் விதந்துரைக்கத்தக்கவை. அவரது காலத்தில் சீனி.விஸ்வநாதன் அவர்களின் தேடல்கள் யாவும் வெளிவராதது துரதிஸ்டமே. அபப்டி இருந்திருந்தால் அது தமிழுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகவே இருந்திருக்கும்."
இவ்வாய்வுக் கட்டுரை பினவரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
பகுதி 1 - 'வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் கட்டுரையும்.
பகுதி 2 - இருபத்திநான்காம் வயதில் பாரதி:: ஆன்ம உணர்ந்திறன்
பகுதி 3 - இருபத்திநான்காம் வயதில் பாரதி: பாரதியின் முகங்கள்
பகுதி 4 - இருபத்திநான்காம் வயதில் பாரதி: திலகரின் அரசியலை பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை.
பகுதி 5 - இருபத்திநான்காம் வயதில் பாரதி: பாரதியின் அணுகுமுறை
![]() |
- 'நந்தலாலா' எல். ஜோதிகுமார் - |
'வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் கட்டுரையும்.
மதுரை சேதுபதி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த பாரதியாரின் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனையாக அவர் சுதேசமித்திரன் பத்திராதிபராகப் பணியாற்றச் சென்றதைக் குறிப்பிடுவார் ஜோதிகுமார். பாரதி என்னும் இளைஞனை , அவனது ஆளுமையை இனங்கண்டு , சுதேசமித்திரனில் கொண்டு சேர்க்கின்றார் திரு.ஜி.சுப்ரமணிய ஐயர். இது நாமறிந்த பாரதி என்னும் ஆளுமையை உருவாக்கிய முக்கியமான திருப்புமுனையாக ஜோதிகுமார் கருதுவார்:
"கிட்டத்தட்ட இருபத்திரண்டு வயதே அரும்பியிருக்கக்கூடிய பாரதி என்ற இந்த இளைஞனை இனங்கண்டு, அவனை மதுரை சேதுபதி கல்லூரியிலிருந்து, சென்னை சுதேசமித்திரனிற்கு இட்டுவந்த பெருமை, திரு.ஜி.சுப்ரமணிய ஐயரையே சாரும். மதுரை சேதுபதி கல்லூரியில் தமிழாசிரியனாய் இருந்த இவ் இளைஞன், தனது தமிழாசிரியர் பதவியை விட்டுவிட்டு, விடுதலைப்போர் மோகம் சூழ்ந்த காலத்தில் ஓர் பத்திரிகை தொழிலில் - அதுவும் பதவி இன்னதெனச் சரியாக நிர்ணயிக்கப்படாத ஒரு சூழலில் சென்று சேர தீர்மானம் கொண்டது – அவனது வாழ்வில், அவன் எடுத்து வைத்த முதல் திருப்புமுனை படிகளில் ஒன்றாகின்றது (1904 – நவம்பர்). இம்முடிவு, இவ் இளைஞனை ஒரு பரந்த உலகத்தை நோக்கி உந்தித்தள்ளி இருந்திருக்க வேண்டும். குறுகிய காலத்துள், பல்வேறு திறமைகளால் தன்னை நிரூபித்துவிடும் இவ் இளைஞன், அப்பத்திரிகையின் உபபத்திராதிபராய், சில மாதங்களிலேயே நியமிக்கப்படுகின்றான். திரு.ஜி.சுப்ரமணிய ஐயரின் வியப்பையும், விநோதத்தையும், வாஞ்சையையும், சம்பாதித்துக்கொள்ளும் இப்புதிய இளைஞனை அவர் மிகுந்த பிரியத்துடன் பார்க்கின்றார் - அதிசயத்துடன்."
பாரதியாரின் வாழ்வில் ஜி.சுப்பிரமணிய ஐயரின் பங்களிப்பு முக்கியமானது. மேலும் ஆய்வுக்குரியது.
இக்காலகட்டத்தில் . (1905 செப்டெம்பர் - டிசம்பருக்கும் இடைப்பட்ட காலம்) வெளியான பாரதியின் எழுத்துகளூடு அவரது தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பிற்போக்கு அம்சங்களை, காலனித்துவ அடிமைத்தன மனநிலையை, தேசியச் சிந்தனைகளை ஆராய்வார் ஜோதிகுமார். குறிப்பாக ' 'வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் கட்டுரையும்' பற்றிக் குறிப்பிடுகையில் "இவ் இளைஞன், தமிழர்களின் பின்னடைந்த நாகரிகங்களை வெறுப்பவனாகவும், அதன் உள்ளூர ஓடும் காலனித்துவ அடிமைத்தனத்தைக் கண்டிப்பவனாகவும், இதனையே உள்ளூர மெச்சிக்கொள்ளும் ஆங்கிலேயரின்பால் கடும் விரோதம் பூண்டவனாகவும் இருப்பது அவனின் இளைமைக்காலத்து குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கின்றது (23 வயது). அதாவது சிங்கத்தின் சீற்றத்தைப்போல் இக்குணாதிசயங்கள் இவ் இளைஞனின் உடன்பிறப்பாகின்றன." என்பார் .
இக்காலத்தில் பாரதியார் எழுதிய முக்கிய படைப்புகளாக 'வங்கமே வாழிய' (செப்டம்பர் 1905 –பக்கம் 62), 'எங்கள் நாடு' (24.10.1905), 'வந்தே மாதரம் '(நவம்பர் 1905), 'பாரத குமாரிகள்' (ஜனவரி 1906), 'வேல்ஸ் இளவரசனுக்கு பாரத கண்டதாய் நல்வரவு கூறுதல்' (29.01.1906) ' ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் ஜோதிகுமார் . பங்கிம் சந்திர சாட்டர்ஜீயின், 'ஆனந்தமடம்' நாவலில் இடம் பெறும் வந்தே மாதரம் பாடலை பாரதி மொழிபெயர்த்திர்ப்பது அவரது மொழி பெயர்க்கும் ஆற்றலுடன் அவரது மத்ததுடன் கூடிய தேசிய விடுதலைப்போராட்டச் சிந்தனைகள் மீதான ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றது என்பார். பாரதியார் வந்தே மாதரம் பாடல் பற்றி கூறிய கருத்துகளின் அடிப்படையில் ஜோதிகுமார் பின்வருமாறு குறிப்பிடுவார்:
"இவ்இளைஞனின் மேலே, கூறப்பட்ட கூற்றுக்களில், இரண்டு விடயங்கள் முக்கியத்துவப்படுகின்றன. ஒன்று, மதத்துடன் இணைந்த தேசியத்தை அவன் விதந்துரைப்பது (அல்லது மதத்தைப் புனர்நிர்மாணம் செய்துக்கொள்வது). மற்றது, இவ்இளைஞனின் மொழிப்பெயர்க்கும் லாவகமும், தனிச் சிறப்பும்."
'ஆனந்தமடம்' நாவல் சந்நியாசிகள் சிலர் ஒன்றிணைந்து ஆங்கிலேய, மகம்மதியப் படைகளுக்கு எதிராகப் போராடியதை விபரிக்கும் நாவல். அதில் விபரிக்கப்படும் சந்நியாசிகளில் ஒருவரான பாபாநந்தன் என்பவர் 'வந்தேமாதரம்' என்ற பாடலைப் பாடுவதாக அந்நாவலில் வரும். இப்பாடல் பாரதியாரை ஈர்த்திருக்கின்றது, அந்த வயதில் அவரை அப்பாடல் ஈர்த்திருப்பதன் விளைவே அவரை அப்பாடலைத் தமிழாக்கம் செய்ய வைத்திருக்கின்றது. இது பற்றி ஜோதிகுமாரின் மேற்படி கட்டுரையும் வினாவெழுப்பியிருக்கின்றது:
“ஆனந்தமட” சந்நியாசிகள் முன்னெடுத்த கலகங்களை இவன் வழிமொழிந்து, இந்து புனருத்தாரண நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றானோ என்ற நியாயமான சந்தேகம் இங்கு ஏற்படுவதாகும்."
இவ்விதம் கேள்வி எழுப்பும் ஜோதிகுமார் கலாநிதி கைலாசபதியின் பாரதி பற்றிய கூற்றுகளில் ஒன்றான “தேசபக்தியையே தெய்வபக்தியாக மாற்றிக்கொண்டார்" என்பதைக் குறிப்பிடுகையில் "கைலாசபதி, தனது நூலான இருமகாகவிகளில் இவ்விதம் கூறுவதாகக் கூறுவார். இவ்விடயத்தில் 'இதில், எது தலையானது? தேசபக்தியா அல்லது தெய்வபக்தியா - என்பது தர்க்கம் சார்ந்த ஒன்றாகக் கூட இருக்கலாம்.' என்று குறிப்பிடும் ஜோதிகுமார் ஒரு விடயத்தில் உறுதியாக நிற்கின்றார். அது - பாரதியார் தேசபக்தி, தெய்வபக்தி ஆகிய எண்ணங்களில் ,அவற்றின் வேறுபாடுகளில் , அவற்றைத் தெளிவாகப் பிரித்தறியும் ஆற்றல் மிக்கவராக இருந்திருக்கின்றார் என்பதுதான். 'மேற்படி எண்ணங்களில் உள்ளடங்கும் வேறுபாடுகளை வேறுபடுத்தியும் பிரித்து அறிந்துகொள்ளும் திறனும் இவ் இளைஞனில் அன்றே அடி எடுத்து வைப்பதாக உள்ளது என்பதுவே முக்கியமாகின்றது' என்கின்றார்.
'வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் கட்டுரையும்' என்னும் இம்முதலாம் பகுதியில் ஜோதிகுமார் கவனத்திலெடுத்திருக்கும் இன்னுமொரு முக்கிய விடயம் - பாரயாரின் தாதர்கள் பற்றிய சிந்தனைகள். யார் தாதர்கள்? இதற்கான விடையினை அவர் , கலாநிதி கலைசபதியின் கூற்றினூடு, பின்வருமாறு குறிப்பிடுவார்:
"துரைத்தன உத்தியோகத்தர்களை, 'தாதர்கள்' என்றும், 'சேவகர்கள்' என்றும் அலட்சியமாக (பாரதி) குறிப்பிட்டார் (ஒப்பியல் இலக்கியம் : சிந்துக்குத் தந்தை : பக்கம் 161)".
தாதர்களைப்பற்றிய பாரதியாரின் 'ஒரு பஞ்சாபி மாது' கட்டுரையில் வரும் "இங்கிலாந்து சென்று உயர் பரீட்சை தேறிவருவோர்களிற் பெரும்பாலர் சுதேசபிமானம் சிறுதேனும் இல்லாமல் இத்தேச சனங்கள் ஏதோ தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் போலவும், தாம் ஏதோ இங்கிலாந்து சென்று திரும்பியதும்… தெய்வப்பிறவி எடுத்துவிட்டது போலவும் பாவனை செய்துக்கொண்டு இருப்பதை நாம் கண்டிருக்கின்றோம்'' என்பதைச் சுட்டிக்காட்டும் ஜோதிகுமார் "இவ்வரிகளில் தென்படும், உக்கிரமான விமர்சனமானது காலனித்துவ அடிமைதனத்துக்கு எதிரான வன்மம் கொண்டது என்பது மாத்திரமல்லாமல், இவ்இளைஞனின் ஓர் இருபத்து மூன்று வயதில், இப்படி, ஆழமான ஆங்கிலேய எதிர்புணர்வைக் காட்டுவது அதிலும், தேடிச் சோறு தின்பர்பால் ஆத்திரம் கொள்வது, ஆச்சரியப்படவைப்பது." என்கின்றார்.
அடுத்தது பெண்களின் தாழ்வு நிலை பற்றியும் பாரதியாரின் சிந்தனை அப்பருவத்திலேயே திரும்பியிருக்கின்றது என்பதை அவரது 'பாரதகுமாரிகள்'' கட்டுரை, துளசிபாய் சிறுகதை ஆகியவற்றின் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். துளசிபாய் சிறுகதை மகம்மதிய வீரன் உடன் கட்டை யேறவிருக்கும் இராசபுத்திரப் பெண்ணொருத்தியைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்டதுடன் , அவள் மீதான அவனது காதலையும் விபரிப்பது. இது பற்றிக் குறிப்பிடுகையில் 'பெண் விடுதலையைக் கோரி, உடன்கட்டை ஏறுதலை வெட்கமுற செய்து, இந்து – முஸ்லீம் அன்பை உயர்த்தி கதை எழுத எத்தகைய திராணியை இவ்இளைஞன் அன்று கொண்டிருக்க கூடும் என்பது கேள்வியாகின்றது.' என்கின்றார். அத்துடன் பாரதகுமாரிகள் என்னும் கட்டுரையில் வரும் பாரதியின் "ஆதார சக்திகளாகிய, மாதர்களின் ஹிருதயமும் அவர்களது ஆன்மாவும் இருளடைந்து போக விட்டு விடுவதைக் காட்டிலும் பாதக செயல்வேறில்லை. ஞானகிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது” என்னும் கூற்றினைச் சுட்டிக்காட்டும் ஜோதிகுமார் , "சுருக்கமாகக் கூறினால், "ஞானகிரணங்கள், அவர்களது ஆன்மாவைத் தாக்குமாறு' செய்யும் வகையில் ஓர் எழுத்து உருவாக வேண்டும் என அவன் விரும்புவதாய் உள்ளது. ஆனால் இவ்விருப்பமானது, நிறைவேற்றப்பட வேண்டுமெனில், முதலில், அத்தகைய எழுத்தை உருவாக்கும் ஓர் ஆன்மா உருவாக வேண்டும் என்கின்றது." என்று கூறுவார். அவ்வயதிலேயே பாரதியார் பெண்களின் உயர்நிலைக்குக் குரல் கொடுக்கும் அதே சமயம் , எழுத்தின் நோக்கம் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டும் எனபதையும் உணர்ந்திருந்தார் என்பதையே ஜோதிகுமார் இவ்விதம் சுட்டிக்காட்டுகின்றார்.
அடுத்து இப்பகுதியில் ஜோதிகுமார் கவனத்திலெடுத்திருக்கும் இன்னுமொரு முக்கிய விடயம் - காசி காங்கிரஸில் பாரதியார் பங்கு பற்றும் நிகழ்வாகும். அக்காங்கிரஸ் கூட்டத்தில் பங்கு பற்றும் பாரதியார் திலகரின் தீவிரப் போக்கினால் ஈர்க்கப்படுகின்றார். அதே சமயம் அக்காலகட்டத்தில் காங்கிரஸை வழி நடத்திக்கொண்டிருந்த நெளராஜி போன்றவர்கள் சீர்திருத்தங்களுடன் கூடிய ஆங்கிலேயரின் ஆட்சியை விரும்பியதாகக் கருதப்பட்டது.
இது பற்றி ஜோதிகுமார் 'இது ஒருபுறம் இருக்க நௌரோஜி மக்கள் ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புகளையும் ஆட்சேபித்தார் என்பதும் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி நீடித்தாக வேண்டும் - சிற்சில திருத்தங்களோடு – என அபிப்பராயப்பட்டதும் அவரே என்றும் கூறப்படுவதுண்டு.' என்று குறிப்பிடுவார்.
அதே சமயம் பாரதியாரைச் சுதேசமித்திரனுக்கு அழைத்து வந்தவரான ஜி.சுப்ரமணிய ஐயர் அவர்கள் காசி காங்கிரஸிற்கு (1905) வேல்ஸ் இளவரசரும் பார்வையாளர்களாக பங்கேற்க வேண்டும் எனச் சுதேசம் மித்திரன் பத்திரிகையில் பரிந்துரை செய்கின்றார். அத்துடன் வேல்ஸ் இளவரசர் காசி மகாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதனை ஆதரிக்கின்றார். இவற்றைச் சுட்டிக்காட்டும் ஜோதிகுமார் அச்சமயம் பாரதியார் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தத்தளிக்கின்றார் என்கின்றார். 'இவை அனைத்துமே பாரதி என்ற காட்டாற்றை எத்தகைய இக்கட்டில் தள்ளியிருக்கும் என நிதானிப்பது ஏற்புடையதே' என்கின்றார். அத்துடன் "அதாவது, நௌரோஜின் அரசியல், பாரதி என்ற இவ்இளைஞனுக்கு ஏற்புடையதாய் இருக்க முடியாது என்பது தெளிவு. இவனது அரசியல் ஒரு தீப்பற்றி எரியும் அரசியல். சாதியம் பொறுத்த அவனது எண்ணபாடும், மாதர்கள் பொறுத்த அவனது சிந்தனையும், தாதர்களை அவன் நோக்கிய விதமும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் அவன் காட்டிவரும் அக்கறையும் அவனுள் குமுறும் அரசியலை வெளிக்கொணர்வதாக உள்ளன.'' என்கின்றார்.
மதுரை சேதுபதி கல்லூரியில் ஆசிரியனாகவிருந்த பாரதியை இனங்கண்டு ,அவரைச் சுதேசமித்திரனுக்கு அழைத்து வருகின்றார் ஜி.சுப்பிர்மணிய ஐயர். பாரதியின் திலகர் மீதான ஈர்ப்பு அவரைச் சுதேசமித்திரனிலிருந்து 'இந்தியா' பத்திரிகைக்குக் கொண்டு செல்கின்றது. இவற்றை விபரிக்கும் இப்பகுதி ஜோதிகுமாரின் பாரதி பற்றிய தேடலையு, அவரது தெளிவு மிக்க தர்க்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.
[தொடரும்]
நூல்: 23ஆம் வயதில் பாரதி - எல். ஜோதிகுமார் . பதிப்பகம் - ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் | 23ம் வயதில் பாரதி | விலை: ரூபா 300 | நூலை வாங்க
girinav@gmail.com
No comments:
Post a Comment