இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் பாரதியின் மூன்று முரண்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவையாவன்; அவனது சிந்தையில் காணப்படும் முரண், அவன் அரசியலில் தென்படும் முரண், அவன் எழுத்தில் புலப்படும் முரண். இவ்விதம் ஆரம்பமாகும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் தொடர்ந்து இம்முரண்கள் பற்றி விரிவாகத் தர்க்கம் செய்வார் என்றே வாசிக்கும் எவரும் உணர்வர், ஆனால் 'இம்முரண்கள் ஒவ்வொன்றும் , தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப விவாதிக்கப்படுவது விரும்பத்தக்கது' என்பதுடன் மேலும் அம்முரண்கள் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விடுகின்றார் ஜோதிகுமார். 'இதன் காரணத்தினாலேயே ,இக்கட்டுரைத்தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன' என்றும் கூறுகின்றார். இம்முரண்களைப்பற்றி விரிவாகத் தர்க்கத்தைத் தொடர்ந்திருந்தால் அது மிகவும் பயனுடையதாகவிருந்திருக்கும். பாரதியின் முரண்கள் எல்லாம் அவனது தேடலையும், வளர்ச்சியையும் , அவ்வளர்ச்சியினூடு அவனிடம் ஏற்பட்ட முதிர்ச்சியினையும், தெளிவினையும் வெளிப்படுத்துவதாக அத்தர்க்கம் அமைந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பத்தைத் தவற் விட்டுவிட்டார் ஜோதிகுமார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் , விரிவாக இம்முரண்கள் பற்றிய தர்க்கத்தை அவர் தொடர்வார் என்று எதிர்பார்ப்போம்.அடுத்து அவர் கவனம் 24 வயது இளைஞனான பாரதியின் மானுட இருப்பு, மரணம், சிறை, ஆங்கிலேயரின் மத ரீதியிலான பிரித்தாளும் தந்திரம், மிதவாதப் போக்கில் செயற்பட்டுக்கொண்டிருந்த இந்திய காங்கிரஸின் அம்மிதவாதப் போக்கிற்கு எதிரான விமர்சனங்கள், அவன் மீதான திலகரின் தீவிரவாதப் போக்கின் தாக்கங்கள், அக்கால உலக அரசியலில் அவனுக்கிருந்த் அறிவு, தெளிவு, ருஷய புரட்சியின் அடித்தளம் பற்றிய புரிதல் போன்றவற்றில் திரும்பி விடுகிறது. அவை பற்றிய விபரிப்புகளிலும், கேள்விகளிலும் மூழ்கி விடுகின்றது. இவை பல தகவல்களை அறிமுகப்படுத்தவும் செய்கின்றன.
உதாரணமாக அந்தமானில் அப்போது அமைக்கப்படடிருந்த செலூலர் சிறைக்கூடம் பற்றிய தகவல் முக்கியத்துவம் மிக்கது. இந்திய தேசிய விடுதலைப்போரில் குதித்த போராளிகளை அடைத்து வைப்பதற்காகக் கட்டப்பட்ட சிறைக்கூடம் அது. மதப்பிரிவுகளை வைத்து மக்களைப் பிரித்தாளும் தந்திரத்தை ஆங்கிலேயரின் அரசு அரசியலில் மட்டுமல்ல , சிறைக்கூடக் கட்டமைப்பிலும் கையாள்கிறது. இது பற்றிக் குறிப்பிடுகையில் "இருவேறு மதக் குழுக்களுக்கிடையே ,நிலவக்கூடிய வேறுபாடுகளை, தூபமிட்டு வளர்க்கும் இச்செய்முறையை , சிறையிலும் ஆங்கிலேயர் பின்பற்றுகின்றனர்' என்று குறிப்பிடும் ஜோதிகுமார் மலையகத்திலும் ஆங்கிலேயர்களால் சாதிரீதியாக அமைக்கப்பட்டன லயன்கள் என்று சுட்ட்டிக்காட்டவும் செய்கின்றார். இது முக்கியமானதோர் அவதானிப்பு.
அத்துடன் ஆங்கிலேயரின் இவ்விதமான பிரித்தாளும் தந்திரமானது 'பொதுவில் ஆதிக்கச்சகதிகளின் நகர்வுகள் நுண் அரசியல் திட்டங்களுடன் முன் கூட்டியே , ஆழச் சிந்திக்கபப்ட்டு அமுல்படுத்தப்படுவது என்பதைக் கூறியே ஆகவேண்டும்' என்று சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை.
இன்னுமோரிடத்தில் மானுட வாழ்வு பற்றிய பாரதியின் சிந்தனை மானுடக் காதல் பற்றியும் கவனத்திலெடுக்கத்தவறவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதுடன், அதனை கார்க்கியின் 'ஒரே முத்தம்' சிறுகதையுடன் ஒப்பிட்டு 'உலகச் சுமையைச் சுமப்பதற்கு இரண்டு ஜீவன்கள் ஒன்றிணைவது முக்கியமென்பதுடன், இவ்வுறவானது சிறப்பான , விதிவிலக்கான ஓர் உறவு என்ற ரீதியிலும் முக்கியத்துவப்படவே செய்கிறது என்றும் குறிப்பிடுவார் ஜோதிகுமார். அத்துடன் 'இந்தியச் சுதந்திரப் போர் , தன் தீச் சுவாலையை வீசி எரிய ஆரம்பித்துள்ள இவ்வேளையில் காதலைப்பற்றிக் கதைக்க வரும் இவ்விளைஞ்ன அத்தீயிலிருந்து அந்நியப்படாமல் அதன் முளைகளை, தன் எழுத்துகளில் தேக்கித்தர முற்படுகின்றான்' என்றும் கூறுவார்.
பாரதியார் மானுடக் காதல் மீது எத்தகைய கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதற்கு அவனது கவிதைகள் பலவும் சான்று. 'காதல் காதல் காதல்,. காதல் போயில் சாதல்'' என்னும் அவனது குயில்பாட்டு வரிகள் நினைவுக்கு வருவதுடன் அவனை ஆட்டி வைத்த முதற்காதலும், அது பற்றிய அவனது கவிதை வரிகளும் நினைவுக்கு வருகின்றன. அதே சமயம் காதல் போன்ற மானுடத் தனிமனித உணர்வுகளைப் பாடிய பாரதி அவற்றிலேயே மூழ்கிப்போய்விடவில்லை. தான் வாழ்ந்த மானுட சமுதாயத்தின் மானுட, வர்க்க, தேசிய, சமூக (மாதர் விடுதலையுட்பட) விடுதலைபற்றிய சமூக, அரசியற் செயற்பாடுகளை எழுத்திலும், வாழ்விலும் தொடர்ந்தான் என்பது முக்கியமானது, அதுவே அவனது வாழ்வின் , எழுத்தின் முக்க்யமானதோர் அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவனது எழுத்தில் , வாழ்வில் காணப்படும் முரண்பாடுகள் எல்லாம் அவனது தேடலின் , வளர்ச்சியின் அறிகுறிகளே.
[தொடரும்]
girinav@gmail.com
No comments:
Post a Comment