அவ்வப்போது நூல்களுக்கு நான் எழுதிய அணிந்துரைகள் இவை.
1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி' (பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு) நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய அணிந்துரை.
2. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலுக்கு எழுதிய அணிந்துரை.
3. 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில் தமிழினி ஜெயக்குமாரனின் நூலுக்கு எழுதிய அணிந்துரை. சிவகாமி பதிப்பக வெளியீடு.
4. தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' (அறிவியற் சிறுகதைகள்) தொகுப்புக்காக எழுதிய அணிந்துரை.
5. நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய அணிந்துரை. 'விஜே பப்ளிகேஷன்ஸ்' வெளியீடு.
6. எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்' நூலுக்கு எழுதிய அணிந்துரை.
7. மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' (பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியானது) நாவலுக்கு எழுதிய அணிந்துரை.
1. காத்யானா அமரசிங்ஹவின் 'தரணி'!
அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப். இவரும் இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளில் , மொழிபெயர்ப்பு உட்பட, காத்திரமான பங்களிப்பைச் செய்து வருபவர். ஏற்கனவே பல நூல்களை, ஆக்கங்களைச் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார். இந்நாவலின் மொழிபெயர்ப்பும் இவரது மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த படைப்புகளிலொன்றாக அமைந்துள்ளதென்பதை வாசிக்கும் எவரும் உணர்ந்துகொள்ளலாம்.
கத்யானா அமரசிங்ஹவின் 'தரணி' நாவலானது கருவினைச் சுருக்கமாகக் கூறுவதாயின் துலன்யா என்னும் பெண்ணொருத்தியின் வாழ்வு பற்றிய , அவளைப்பல்வகைகளில் பாதித்த ஆளுமைகளைப்பற்றிய அவளது எண்ணங்களின் தொகுப்பாகக் கூறலாம். அடிப்படையில் தூய காதல் உணர்வுகளை மையமாக வைத்துப் பின்னப்பட்ட நாவலென்றும் கூறலாம். இந்நாவலில் நடமாடும் முக்கிய பாத்திரங்களின் காதலை விபரிக்கும் நாவலென்றும் கூறலாம். அப்பாத்திரங்களின் காதல் உணர்வுகளை துலன்யாவின் எண்ணங்கள் வாயியலாகக் கதாசிரியர் விபரித்துச் செல்வதுடன், துலன்யாவின் காதல் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றார். இவ்விதம் மானுடக் காதலை மையமாக வைத்துப்புனையப்பட்ட நாவலென்றவுடன் இந்நாவலை அன்றாடம் வெகுசனப் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளியாகும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய காதல் கதைகளிலொன்றாக எண்ணிவிடாதீர்கள். தூய்மையான மானுடக் காதலை விபரிக்கும் அதே சமயம் , இந்நாவலானது பல்வகைகளில் சிறந்து விளங்குவதை வாசிக்கும் எவரும் உணர்ந்துகொள்வர். படைப்புத்திறமை, பாத்திரப்படைப்பு, மொழி மற்றும் கூறும் பொருள் என்பவற்றில் இந்நாவல் சிறந்து விளங்குகின்றது.
கதாசிரியரின் படைப்புத்திறனை இந்நாவலானது கட்டமைக்கப்பட்டுள்ள கதைப்பின்னல் வெளிப்படுத்துகின்றது. நாவலின் பிரதான பாத்திரமான துலன்யா வாசிக்கும் எவரும் மறக்க முடியாத வகையில் நாவலில் உலா வருகின்றாள். குழந்தைப்பருவத்திலிருந்தே அவள் வாழ்க்கை ஏனைய குழந்தைகளிலிருந்து ஒருவிதத்தில் வேறுபட்டதாகவும் அமைந்திருக்கின்றது. அவள் அடிக்கடி பகற் கனவுகள் காணுகின்றாள். அவ்விதம் காண்கையில் அக்கனவுகளில் நடமாடும் மாந்தர்களும் அவள் நிஜவாழ்வில் பின்னிப்பிணைந்து விடுகின்றார்கள். கனவுலக மாந்தர்கள் சிலருடன் அவள் உரையாடுகின்றாள். உணர்வுகளைப்பரிமாறிக்கொள்கின்றாள். சிறு வயதில் தனிமையில் தன் துணிப்பொம்மையைத் சிநேகிதியாக வைத்து உரையாடி வளரும் அவள் பின்னர் தன் கனவுலகத்து மனிதர்களுடனும் அவ்விதமே உறவாடி வருகின்றாள். அதே சமயம் அவள் சாதாரண பெண்ணாகவும் அன்றாட வாழ்வினைக் கொண்டு நடத்தக் கூடிய ஒருவளாகவும் வாழ்ந்து வருகின்றாள். அவளது தனிமையை நாடிய போக்கும் , கனவுலக மனிதர்களுடன் உரையாடி , உறவாடும் போக்கும் அவளது பிரியத்துக்குரிய உறவினர்கள் மத்தியில் அவளையிட்டுக் கவலையை ஏற்படுத்துகின்றது. அவளுக்கு உளவியல்ரீதியிலான பிரச்சினை இருக்கின்றதோ என்னும் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றது. அவளை உளவியல் வைத்தியரைக்காண அழைத்துச் செல்கின்றார்கள். அவளோ அவர்கள் தனக்கு எதுவுமில்லாதநிலையில் தன்னை உளவியற்பாதிப்புக்குள்ளாகிய ஒருவளாக கருதி நடத்துவதாக ஆத்திரம் கொள்கின்றாள். உண்மையில் துலன்யா களங்கமற்ற அற்புதமான பெண்மணி. அவள் தன் நாட்டின் சக மாந்தர்களை மானுடர்களாக எண்ணியே அவர்களுடன் உறவாடுகின்றாள். எங்காவது அவர்களை அவள் மத, மொழி , இனரீதியாகப் பிரித்துபார்க்காத ஒருவளாகவே வாழ்ந்து வருபவள். அவ்விதமான ஒருவள் தன் கதையினை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றாள். தன் கதையைக் கேட்கும் வாசகர்கள் தன்னைப்பற்றி எடைபோடுங்கள் என்று வேண்டிக்கொள்கின்றாள். இவ்விதமே நாவல் ஆரம்பமாகின்றது. இவ்விதமாகத் தன் கதையைக் கூறத்தொடங்கும் துலன்யா பின்வருமாறு கூறத்தொடங்குவாள்:"நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், என்னைக்குறித்த அவர்களது கருத்துகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, நான் முன் வைக்கும் இந்தக் கதையை மிகவும் கவனமாக வாசிக்கும்படி மாத்திரமே. எனது வாழ்க்கையை மிகவும் பாதித்த ஆண்களினதும், பெண்களினதும் ஊடாக இந்தக் கதை பின்னப்பட்டிருக்கின்றது."
இந்நாவலானது துலன்யா என்னும் பெண்ணின் வாழ்வை, அவளைப் பாதித்த மானுட ஆளுமைகளைப்பற்றி விபரிப்பதாகும். இவ்விதமாக ஆரம்பத்திலேயே நாவல் கூறப்போகும் விடயம் முற்றாகப் புரிந்து விடுகின்றது. அவ்விதமிருந்தும் நாவலைப்படிக்க வாசகர்களைத்தூண்டும் வகையில் நாவல் படைக்கப்பட்டுள்ளது; கட்டமைக்கப்பட்டுள்ளது.
பாத்திரப்படைப்பிலும் இந்நாவல் தனித்துவம் மிக்கதாக விளங்குவதுடன், பாத்திரங்களை உயிர்த்துடிப்புடன் படைப்பதிலும் ஆசிரியர் வெற்றிபெற்றுள்ளார். இந்நாவலைப்படித்து முடிந்ததும் ஒருவரைக்கூட என்னால் மறக்கமுடியவில்லை. பாத்திரங்கள் அனைவரையும் என்னால் எவ்விதச் சிரமங்களுமில்லாமல் நினைவுக்குக் கொண்டுவர முடிகின்றது. அது ஒன்றே பாத்திரப்படைப்பின் வெற்றியை வெளிப்படுத்துகின்றது. இந்நாவலில் துலன்யா விபரிக்கும் மானுட ஆளுமைகளில் முக்கியமானவர்கள் அவளது அம்மா, அம்மம்மா, அக்கா, பெரியண்ணன், ரஞ்சித் அண்ணன், ரவீந்திரன், ஜெயகாந்தன், வர்ணிகா மற்றும் ராஜினி. இவர்களுடன் மனநல மருத்துவன் வனசிங்ஹ. இவர்கள் அனைவருமே நாவலை வாசித்து முடிந்த பின்னரும் வாசிக்கும் வாசகர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றார்கள்.
பெரியண்ணன் வாழ்க்கையின் அடித்தட்டு மானுடர்களின் நல்வாழ்வுக்காகப்போராடும் புரட்சிகர சிந்தனைகள் மிக்க மனிதர். அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டு வதைகளுக்குள்ளாக்ப்பட்டு நடைப்பிணமாக விடுதலையாகின்றார். அதன் பின்னர் அவரது வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவேயில்லை. வீட்டிலிருந்து நீங்கி வாழ்க்கையைத் தொடங்கும் அவர் ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்கின்றார். அவரது நண்பனான தமிழனான ரவீந்திரனோ வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்படுகின்றான். இறுதியில் எரியுண்ட நிலையில் அவனது உடல்தான் எஞ்சுகின்றது. அவன் மேல் துலன்யாவின் அக்கா உயிரையே வைத்திருக்கின்றாள். அவனும் அவளையே காதலிப்பதாகத் துலன்யாவும் எண்ணுகின்றாள். ஆனால் நாவலின் இறுதியில்தான் தெரிய வருகின்றது அவன் விரும்பியது அவளது அக்காவையல்ல. அவளைத்தான் என்று. இதற்கிடையில் அவளது திருமணம் நடைபெறாது அவளது வயதும் ஏறிக்கொண்டே செல்கின்றது. இச்சூழலில் அவளது வாழ்வில் எதிர்ப்படுகின்றான் ஜெயகாந்தன். நாட்டின் அரசியற் சூழல் காரணமாக நாட்டை விட்டு இங்கிலாந்துக்கு அகதியாகச் சென்று அங்கு வாழ்க்கைப்போராட்டத்தில் ஈடுபட்டு, நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் திரும்புவன். வயது முதிர்ந்தவன். அவன் மீது அவள் காதல் வயப்படுகின்றாள். ஆனால் அவனோ இயக்கப்போராளியான ராஜினியின் மீது காதலை வைத்திருப்பவன். யுத்தச்சூழலில்காணாமல் போன தனது காதலி என்றாவது திரும்பிவருவாள் என்று நம்புபவன். அவனும் வாழ்க்கைப்போராட்டத்தின் விளைவாக மீண்டும் இங்கிலாந்து திரும்புகின்றான். இந்நிலையில் திருமண வயதினைக் கடந்தும் கன்னியாகவே வாழும் துலன்யாவுக்கு எப்படியாவது திருமணம் முடித்து வைக்க் அவளது தாயார் விரும்புகின்றாள். அவளது உறவினனான வர்ணிகாவை அவளுக்குக் கட்டி வைக்கின்றான். வர்ணிகாவும் முதிர்ச்சியடைந்த மனத்தை உடையவன். துலன்யாவுக்கு ஜெயகாந்தன் மீதான காதலை உணர்ந்தவன். இருந்தும் அவளை மனப்பூர்வமாக ஏற்று மனைவியாக்கிக்கொள்பவன். கள்ளங்கபடமற்ற துலன்யாவுக்கு ஏற்ற கணவன் அவன். தூய்மையான உள்ளம் அவனுடையது. இவ்விதமாகச் செல்லும்கதையோட்டத்தில் ராஜினியைத் தன் கனவுலகத்தோழியாக உருவகித்துத் துலன்யா உரையாடுகின்றாள்; உறவாடுகின்றாள்.
இவ்விதம் பாத்திரப்படைப்பில் தனித்துவம்மிக்கதாக விளங்கும் நாவலின் மொழியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இயற்கையை, சக மானுடரைப்பற்றிய துலன்யாவின் எண்ணங்களை வெளிப்படுத்தும் நாவலின் மொழிநடை நாவலின் சிறப்புக்கு முக்கிய காரணங்களிலொன்று. வாசகர்தம் இதயங்களை வருடிச்செல்லும் நடை. பாத்திரங்களின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் மொழி. உதாரணங்களாகப் பின்வரும் பந்திகளைக் குறிப்பிடலாம்:
"வயலைத் தாண்டி ஒரு பசும் புல் நிலம். அதையும் தாண்டி ஒரு பற்றைக்காடு. தொலைவில் நீல மலைத்தொடர் வரைக்கும் விரிந்து செல்லும் இப்பூமியின் தரிசனமானது அதிகாலை வேளைகளில் பனிப்புகாரால் மூடியிருப்பதைக் காணலாம். அன்று , அசோக மரத்தினருகே வாங்கில் அமர்ந்திருந்த நான் அச்சத்தில் உறைந்து போய், அறுவடைக்குப்பிறகு பாழடைந்து பொயிருந்த வயல்வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சிறு பராயத்தில் அவ்விடத்தில் , அதே பலகை வாங்கில் அமர்ந்திருந்த நானும், அக்காவும் , பெரியண்ணனும் ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். தோட்டத்தின் இடதுபக்க மூலையிலிருந்து தோன்றும் அவை முற்றத்தினூடாக ஆகாயத்தின் ஏகாந்தத்தைக் குலைத்தவாறு பறந்துய் சென்று தூரமலைத்தொடரில் ஒளிந்துகொளளும். அவை அவ்வாறு பறந்துசென்று எங்கே தங்கிக்கொள்ளும் என நான் பல தடவைகள் சிந்தித்திருக்கின்றேன். பால்ய வயதில், இரவில் ஆகாயத்தில் உதித்திருக்கும் நட்சத்திரக் கூட்டங்களை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்ததுவும் இவ்விடத்திலிருந்துதான். பெரியண்ணன் பெருங்கரடி, சிறு கரடி விண்மீன் தொகுதிகளை வேறுபடுத்தி அறிந்துகொள்ளும் விதத்தை எனக்கும், அக்காவுக்கும் கற்றுத்தந்தார்." [பக்கங்கள் 8 & 9]
இவ்விதமாகப்பெரியண்ணன் வாழ்ந்தபோது தன் வாழ்வினை விபரிக்கும் துலன்யா அவர் தன் வாழ்வை முடித்துக்கொண்டதும் அதன்பின்னரான தனது வாழ்வினைப் பின்வருமாறு விபரிக்கின்றார்:\
"இராக்கால வானத்தை நான் பார்த்துக்கொண்டிருந்த போதிலும் , ஏனைய நாட்களைப்பஓல் பெருங்கரடி விண்மீன் கூட்டத்தை அடையாளம் காண என்னால் இயலாதிருந்தது. நட்சத்திரக் கூட்டங்கள் தெளிவற்றதாக ஓன்றின் மேலொன்றென ஒழுங்கற்று உதித்திருப்பதாக எனக்குத்தென்பட்டது. இருண்ட வானத்தில் நட்சத்திரங்கள் ஒளி மங்கியிருப்பதைப்பார்த்தவாறிருந்தேன்." [பக்கம் 23]
இவ்விதமாகப் படைப்புத்திறமை, பாத்திரப்படைப்பு, மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கூறும் பொருளிலும் தனித்துவம் மிக்கதாக விளங்குகின்றது. அத்துடன் நாட்டின் சமூக, அரசியற் சூழல்கள் எவ்விதம் மக்கள்தம் வாழ்வினைப்பாதித்துள்ளன என்பதையும் வெளிப்படுத்துகின்றது. எழுதுவதன் மூலம் சமூக, அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஜெயகாந்தன், மக்கள் மீதான அரசின் மானுட உரிமை மீறல்களால் ஆயுதத்தைக் கையிலெடுக்கும் பெண் போராளியான ராஜினி, அவர்களுக்கிடையில் நிலவும் காதலை, உள்ளக் குமுறல்களை விபரிக்கும் நாவல் அதே நாட்டுச்சூழல் எவ்விதம் அவர்கள்தம் வாழ்வினைச் சீரழித்து விடுகின்றது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. அவர்களை மட்டுமல்ல பெரியண்ணனின் முடிவுக்கும், ரவீந்திரனின் முடிவுக்கும் நாட்டில் நிலவும் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல்கள்தாம் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இவர்கள் அனைவர்தம் வாழ்வியற் பிரச்சினைகளை, சவால்களை மானுடர்தம் பிரச்சினைகளாக அணுகுவதில் வெற்றியடைந்துள்ளார் கதாசிரியர். நாவலை வாசித்து முடிக்கையில் எதற்காக இந்நாட்டு மானுடர்கள்தம் வாழ்வு இவ்விதம் சிதைந்து போக வேண்டும்? எதற்காக இவர்களுக்கிடையிலான காதல் உணர்வுகள் இவ்விதமான வலிகளுக்கு, வதைகளுக்குள்ளாக வேண்டும்? என்று இந்நாட்டு மானுடர்கள்தம் வாழ்வில் பூரண மகிழ்ச்சி நிறையும்? எதற்காக இந்நாட்டு மனிதர்கள் அந்நிய நாடுகளில் அகதிகளாக அலைய வேண்டும்? என்று அடக்குமுறைகள் அனைத்தும் நீங்கி இந்நாட்டு மானுடர்கள் அமைதியான , அன்புமயமான வாழ்க்கையினை இன, மத, மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகளற்று வாழும் நிலை உருவாகும்?
ஒருவகையில் இந்நாவலின் மாந்தர்கள் அனைவரும் குறியீடுகள். நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் பிரச்சினைகளை விபரிக்கும் குறியீடுகள் அவர்கள். இவ்விதமாகச் சீர்குலைந்திருக்கும் மண்ணில் அமைதியும், நல்லிணக்கமும் மலர வேண்டுமானால் எவ்விதம் முடியும்? அதற்கான பதிலையும் நாவலே முன்வைத்துமுள்ளது நாவலின் பிரதான பாத்திரமான துலன்யாவின் வடிவில். கள்ளங்கபடமற்ற துலன்யா எவ்விதம் சக மானுடர்களை மானுடர்களாக ஏற்றுக்கொண்டு காதலிக்கின்றாளோ? அவர்கள் மேல் அன்பு வைக்கின்றாளோ? நட்பு வைக்கின்றாளோ? அவ்விதமே வையுங்கள் என்று மறைமுகமாகக் கூறுமொரு குறியீடுதான் துலன்யா பாத்திரம்.
தரணி என்றால் பூமி. இந்நாவலின் தலைப்பு எதனால் தரணி என்று எண்ணிப்பார்த்தேன். சமூக, அரசியல் மட்டும் பொருளியற்பிரச்சினைகளால் மத, மொழி, மற்றும் இனப்பிளவுகளால் பற்றியெரிந்துகொண்டிருக்கின்றது இத் தரணி. இவற்றுக்கெல்லாம் உண்மையான தீர்வு சக மானுடர்கள் மீதான நிபந்தனையற்ற பூரணமான தூய அன்பே! துலன்யாவின் சக மானுடர் மீதான் தூய அன்பு அதனையே மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றது.
2. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து இன்று முற்றாக மெளனிக்கப்பட்டுவிட்டது. அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம், இலங்கையை ஆண்ட அரசுகளின் இனவாதக்கொள்கைகளாலும், காலத்துக்குக்காலம் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளினாலும், அரசுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரங்களினாலும் தனிநாட்டுபோராட்டமாக பரிணாமடைந்ததன் விளைவே ஈழ்த்தமிழர்களால் குறிப்பாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான ஆயுதப்போராட்டமாகும். இவ்விதமாகப்பரிணாமடைந்த விடுதலைப்போராட்டமானது மிகவும் குறுகிய காலத்தில் பல்வேறு குழுக்களாக வீங்கி வெடித்ததற்கு முக்கிய காரணி இந்திரா காந்தி தலைமையிலான பாரத அரசாகும். ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கியவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிளவுண்டு மோதிக்கொண்டதன் விளைவாக விடுதலைப்புலிகள் பலம்பொருந்திய ஆயுத அமைப்பாக உருவெடுத்தார்கள். இறுதியில் அவர்கள் ஆயுதங்களை மெளனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் யுத்தத்தில் பலியானார்கள்; காணாமல் போனார்கள். சரண்டைந்த பின் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்ப்பட்டார்கள். பலர் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்கள். இவ்விதமானதொரு சூழலில் இன்று பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் தமது கடந்த கால அனுபவங்களைப்பதிவு செய்து வருகின்றார்கள். இவ்வகையான பதிவுகள் அபுனைவுகளாக, புனைவுகளாக என வெவ்வேறு வடிவங்களில் வெளிவருவதைக்காணக்கூடியதாகவுள்ளது. இவர்கள் தாம் சேர்ந்திருந்த அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் இயங்கியவர்கள். சிலர் அடிமட்டப்போராளியாக இருந்தார்கள். சிலர் அவ்விதமிருந்து இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக மாறியவர்கள். சிலர் மாற்று இயக்கங்களினால் சிறைப்பிடிக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு தப்பியவர்கள்; இன்னும் சிலர் தாம் சார்ந்திருந்த அமைப்புகளில் நிலவிய உள் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்விதமான முன்னாள் போராளிகளின் சுய பரிசோதனைகள் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதை நிர்ணையிப்பதற்கு இவை போன்ற போராளிகளின் அனுபவங்களை உள்ளடக்கிய நூல்கள் பல வரவேண்டும். இன்றுதான் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து விட்டதே இனியும் எதற்கு இவை பற்றி ஆராய வேண்டிய தேவை என்று சிலர் குதர்க்கக்கேள்வி கேட்கலாம். ஆனால் இத்தகைய அனுபவப்பதிவேடுகளின் முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவிய ஈழதமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் பற்றிய ஆவணப்படுத்தலில்தான் தங்கியுள்ளது. இவ்விதமான அனுபவப்பதிவேடுகள்தாம் ஆயுதம் தாங்கிப்போராடிய ஈழத்தமிழர்களின் விடுதலை அமைப்புகள் பற்றிய புரிதல்களை, அவற்றின் ஆக்கபூர்வமான , எதிர்மறையான செயற்பாடுகளை விளக்கி நிற்கும் வரலாற்றின் ஆவணப்பதிவுகள்.
சிலர் இவ்விதமான விடுதலை அமைப்புகளில் இணைந்து இயங்கிய காரணத்தினால் அவ்வமைப்புகளிலிருந்த மிகவும் சாதாரணபோராளிகளும் தம் அனுபவங்களைப்பதிவு செய்வது அவசியம்தானா? அதனால் ஏதும் பயனுண்டா? என்று கேள்விகணைகளைத்தொடுக்கலாம். அதற்கான் பதில் அமைப்பொன்றின் சாதாரண போராளியிலிருந்து மிகவும் முக்கியமான போராளி வரையில் இவ்விதமான அனுபவப்பதிவுகளை ஆவணப்படுத்துவது மிகவும் அவசியம். அதுமட்டுமல்ல அமைப்புகளில் இல்லாத பொதுமக்கள் கூட அக்காலகட்டத்தில் தாம் அறிந்த , தாம் புரிந்த அமைப்புகள் சார்ந்த செயற்பாடுகளைப் பதிவு செய்ய வேண்டும். அவ்விதமான பதிவுகளும் ஈழத்தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் பற்றிய விரிவான, ஆழமான புரிதல்களுக்கு அவசியமானவையென்பதென் கருத்து.
இந்த வகையில்தான் எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' அனுபவப்பதிவுகளின் முக்கியத்துவமுமுள்ளது. இவர் தனது பதிவுகளை சரிநிகர் பத்திரிகையில் , ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்படுவதற்குப்பல வருடங்களின் முன்னரே புனைபெயரில் பதிவு செய்தவர். அந்த அனுபவப்பதிவுகள்தாம் இப்பொழுது நூலாக வெளிவருகின்றது.
இப்பதிவுகள் மூலம் எல்லாளனைப்பற்றிய பன்முகப்புரிதல்களை அடைய முடிகின்றது. அவர் கோப்பாயைச்சேர்ந்த ஒரு கிறிஸ்தவர். அவர் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைச்சேர்ந்தவராக இருந்தபோதும் அவரது பெற்றோர் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்களையே வைக்கும் பண்பு வாய்த்தவர்கள். அதனால் அவர்கள் எல்லாருக்கும் தமிழ்ப்பெயர்களே வைக்கப்படுகின்றன. எல்லாளனின் ஆரம்பக்கட்ட வாழ்வு ஆலயத்துடன் சார்ந்தே ஆரம்பிக்கின்றது. மதரீதியிலான அவரது செயற்பாடுகள் அவரை வாலிபர் சங்கம் , ஆலய நிர்வாகம் போன்றவற்றில் செயற்பட உதவுகின்றன.
எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ் புனித பரியோவன் கல்லூரி நிர்வாகம் ஆண்டுக்கான கட்டணத்தை மாதா மாதம் கட்ட அனுமதித்து அவரை உயர்கல்வி கற்பதற்கு அனுமதித்தபோதும் அக்காலகட்டத்தில் அதிபராக இருந்தவர் அனுமதிக்கவில்லை. அதன் காரணமாக அவர் யாழ் மத்திய கல்லூரியில் தனது உயர் கல்வியினைக்கற்கத்தொடங்கினார். பின்னர் பட்டயக்கணக்காளர் பாடத்திட்டத்தைப்படிக்க எண்ணுகின்றார்.
இவ்விதம் அவரது மாணவப்பருவம் தொடருகின்றது. அதன் விளைவாக அவர் ஈழப்பொது மாணவர் மன்றம் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். 1983இல் தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் இவர் செயற்பட்ட கோப்பாய்க்கிறிஸ்தவ ஆலயத்துக்குக்குருவாக வருகின்றார். ஏன் அவரைச் சிங்களக்கிறிஸ்தவர்களோ, குருமார்களோ, 'பிஷப்'போ பாதுகாக்கத்தவறினார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அவர்களது செயற்பாடுகள் அவருக்கு அதிருப்தியினைத்தருகின்றன. இதன் விளைவாக தென்னிலங்கையிலிருந்து சிங்கள 'பிஷப்' கோப்பாய் வரும்போது ஆலயத்தின் வாசலில் கறுப்புக்கொடி காட்டி வரவேற்கின்றார். அவ்விதம் சிங்களவர்கள் செயற்பட்டதற்கு இனவெறியே காரணமாக இவருக்குத்தென்படுகின்றது. இவ்விதமாகத்தொடரும் வாழ்வில் மதம் பற்றிய பல கேள்விகள் அவருக்கு எழுகின்றன.
அதே சமயம் அவரது தந்தையாரின் தமிழரசுக்கட்சியுடனான தொடர்பு காரணமாகவும் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவற்றுடனான அவரது தொடர்புகள், பரமேஸ்வரன் போன்றோருடனான தொடர்புகள் , 1983 இனக்கலவரம், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அரசின் அடக்குமுறைகள் எல்லாம் மெல்ல மெல்ல அவரைத் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தினுள் இழுத்து விடுகின்றன. அதன் விளைவாகத் தமீழீழ ஈழ விடுதலை இயக்கத்துடன் ரஞ்சித் என்னும் இயக்கப்பெயரில் போராளியாக இணைந்துகொள்கின்றார்.
இவ்விதமாகத்தனது சுயவரலாற்றை விபரிக்கும் எல்லாளன் தான் ஏன் தமீழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், அவ்விதம் சேர்ந்தவருக்குத் தமிழகத்து முகாம்களில் ஏற்பட்ட அனுபவங்கள், அவரது இயக்கத்தின் உள்முரண்பாடுகள் ஏற்படுத்திய மனித உரிமை மீறல்கள் ஏமாற்றத்தினையே தருகின்றன. இவற்றின் விளைவாக, ஏன் தான் ஆர்வத்துடன் சேர்ந்து இயங்கிய அமைப்பிலிருந்து விலக வேண்டி ஏற்பட்டது, அவ்விதம் விலகியபோது தமிழகத்தில் அடைந்த அனுபவங்கள், அன்றாட வாழ்வினைக்கொண்டு நடாத்திட முடியாது அடைந்த சிரமங்கள், அச்சமயங்களில் ஏனைய இயக்கங்களிலிருந்து விலகி வந்த போராளிகளுடனான அனுபவங்கள் எனத்தன் போராளியாகச்செயற்பட்ட போராட்ட அனுபவங்களை எந்தவிதப்பாசாங்குகளுமற்றுத் தனது பார்வையில் பதிவு செய்திருக்கின்றார்.
இவ்விதமான இந்த அனுபவங்களின் பதிவுகள் முக்கியமானவை. அதே சமயம் ஒன்றினையும் நாம் முக்கியமாக மனதிலிருத்த வேண்டும். எல்லாளளின் அவர் சார்ந்த அமைப்பின் மீதான அனுபவங்களின் சுய விமர்சனப்பதிவுகளான இவை, அவரது அக்காலகட்டத்து வாழ்வு பற்றிய சுய விமர்சனப்பதிவுகளுமாகும் என்பதுதான் அது. ஆனால் இவ்விதமான போராளி ஒருவரின் பதிவுகள் இவற்றையெல்லாம் மீறி முக்கியத்துவம் பெறுவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துப் போராட்ட அனுபவங்களை, வரலாற்றினை ஆவணப்படுத்துவதில்தாம். ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் ஆயுதபோராட்ட வரலாற்றின் உண்மையான வரலாற்றினை எழுதுவதற்கு, அறிவதற்கு இது போன்ற பதிவுகளை அக்காலகட்டத்தில் இயங்கிய பல்வேறு அமைப்புகளிலிருந்து இயங்கியவர்கள் வெளிப்படுத்துதல் அவசியமானதும் முக்கியமானதுமாகும். அதே சமயம் ஒரு போராளி எவ்விதம் உருவாகுகின்றார்? அவர் உருவாகுவதற்கு எவ்விதம் அவர் வாழ்ந்த சமூக, அரசியல் மற்றும் குடும்பச்சூழல்கள் காரணிகளாக விளங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் அனுபவப்பதிவுகளாகவும் இவை விளங்குகின்றன. அந்த வகையில் முக்கியத்துவம் பெறும் எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' என்னுமிவ்வனுபவப்பதிவுகளின் தொகுப்பும் முக்கியமானதோர் ஆவணப்பதிவாகும்..
3. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
['போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தலைப்பில் அண்மையில் மறைந்த தமிழினி ஜெயக்குமாரனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றினை, அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் உதவியுடன், சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தத்தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரை.]
தமிழினி விடுதலைப்புலிகளின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். 'பதிவுகள்' இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் ஈழத்துத்தமிழ் இலக்கிய வானில் கணப்பொழுதில் ஒளி தந்து மறையும் மின்னலைப்போல் , தன் குறுகிய வாழ்வினுள் ஒளிர்ந்து மறைந்தவர் தமிழினி. இவரது படைப்புகள் குறைவாக இருந்தபோதிலும், அவை நூலுருப்பெற வேண்டியதவசியம். தமிழினியின் கவிதைகளைத்தொகுத்து சிறு தொகுப்பாக வெளிக்கொணர முனைந்திருக்கும் அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் இந்த முயற்சியானது மிகவும் பாராட்டுதற்குரியதும், பயனுள்ளதுமாகும். முக்கியமானதொரு தொகுப்பாக விளங்கப்போகும் தொகுப்பிது என்றும் கூறலாம்.
தமிழினி அண்மைக்காலமாகத்தான் எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தினாரா? உண்மையில் அவர் கடந்த காலத்திலும் பல்வேறு பெயர்களில் அவர் எழுதியிருப்பதை அவரே ஒருமுறை தன் முகநூலில் பகிர்ந்திருக்கின்றார். அவரது 'மழைக்கால் இரவு' சிறுகதையின் வரிகளிலிருந்து 'யுத்தம்' என்றொரு கவிதையினை உருவாக்கிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்திருந்தேன். அது பற்றித் தன் முகநூலில் கருத்துத்தெரிவித்திருந்தபோது தன் கடந்த காலத்து இலக்கிய முயற்சிகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
இதிலிருந்து அவர் தனது பாடசாலைக்காலத்திலிருந்தே எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்திருப்பதை அறிய முடிகின்றது. ஆனால் அவர் தான் கதைகள் சிலவற்றையே எழுதியிருந்ததாகக்குறிப்பிட்டிருக்கின்றார். கவிதைகள் எதனையும் முன்னர் எழுதியதாகக் குறிப்பிடவில்லை. இத்தகைய சூழலில் அண்மைக்காலமாக அவர் எழுதிய கவிதைகளையே அவரது கவிதைகளாகக்கொள்வதில் தவறேதுமிருப்பதாக நான் கருதவில்லை. அவற்றின் அடிப்படையில் அவரது இக்கவிதைத்தொகுப்பில் உள்ளடங்கியிருக்கும் அவரது கவிதைகளைப்பற்றி சிறிது சிந்திப்பதே என் நோக்கம்.
தமிழினியின் கவிதைகள் பல்வேறு விடயங்களுக்காக குறிப்பாக ஆயுதம் தாங்கிப்போராடிய ஒரு பெண் போராளியின் அனுபவங்களின் , சிந்தனைகளின் வெளிப்பாடுகள் என்னும் வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கவிதைகள் கடந்த காலப்போர்க்கால அனுபவங்களை, சக போராளிகளுடனான அனுபவங்களை, போருக்குப் பிந்திய அனுபவங்களை விபரிக்கும் ஆவணங்களாக விளங்குவதால் முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கவிதைகள் தற்காலச் சூழலிலிருந்து கொண்டு , கடந்த கால போராட்ட நிகழ்வுகளைச் சுயபரிசோதனைக்குள்ளாக்குவதால் முக்கியம் பெறுகின்றன. இந்தக்கவிதைகள் அவற்றில் பாவிக்கப்பட்டிருக்கும் படிமங்களுக்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
தமிழினியின் கவிதைகளில் முக்கியமான கவிதையாக நான் கருதுவது 'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.... ' என்னும் கவிதையினைத்தான். இந்தக் கவிதையினைத்தன் முகநூலில் பதிவு செய்திருந்த தமிழினி கவிதைக்கு எந்தவிதத்தலைப்புமில்லாமலேதான் பிரசுரித்திருந்தார். இது பற்றிய குறிப்பினை எழுதிப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தபோது இக்கவிதைக்கு 'அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்.... ' என்று தலைப்பினையிட்டிருந்தேன். கவிதை அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்து .நிகழ்வுகளை விபரிக்கின்றது யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. கவிதையின் ஆரம்பம் நன்றாக வந்திருக்கின்றது. கவிதையின் முதல் பகுதியே முழுக்கவிதையினதும் கூறு பொருளை நிர்ணயித்து விடுகிறது.
'போருக்குப் புதல்வரைத் தந்த
தாயாக வானம்
அழுது கொண்டேயிருந்தது'
என்று ஆரம்பமாகின்றது. அம்பகாமப்பெருங்காட்டில் யுத்தம் நடைபெறும் மழை பொழியும் இரவு. மழையை வானத்தாயின் அழுகையாக உவமையாக்கியிருக்கின்றார் கவிஞர். வானத்தாய் ஏன் அழுகின்றாள்? போருக்குத்தன் புதல்வர்களைத்தந்து விட்டதற்காகத்தான் அழுகின்றாள். யுத்தம் நடைபெறும் சமயம் கானகம் வெடியோசையால் அதிர்வுறுகின்றது. அவ்வதிர்வினால் ,மருண்ட யானைக்கூட்டங்கள் குடி பெயர்ந்தலைகின்றன. இடம் விட்டு இடம் மாறி நகரும் இருண்ட மேகங்களும் வெடியதிர்வுகளால் குடி பெயர்ந்தலையும் யானைக்கூட்டங்களாகக் கவிஞருக்குத்தென்படுகின்றன. இங்கு யானைக்கூட்டங்களின் இடப்பெயர்வினை வெறும் உவமையாகவும் கருதலாம். அத்துடன் உண்மையாகவே அவ்விதம் நடைபெறும் யுத்தத்தினால் யானைக்கூட்டங்கள் இடம் பெறுவதாகவும், அவ்விதமாக அவை இடம் பெயர்வதைப்போல் இடம் பெயரும் மேகக்கூட்டங்கள் உள்ளதாகவும் கவிஞர் கருதுவதாகவும் கருதலாம். மழை பொழியும் யுத்தம் நடக்கும் இருண்ட இரவு அச்சத்தினைத்தருவது. அந்த இரவானது அம்பகாமப்பெருங்காட்டில் நடைபெறும் யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்துவது. ஏற்கனவே அந்த இரவானது பகலை விழுங்கித்தீர்த்திருக்கின்றது. இருந்தும் அதன் பசி அடங்கவில்லை. யுத்தத்தின் பேரொலியானது பகலை விழுங்கித்தீர்த்த இரவின் கர்ஜனையாகப் பயமுறுத்துகிறது கவிஞரை. மேலும் 'காதலுறச் செய்யும் / கானகத்தின் வனப்பை / கடைவாயில் செருகிய / வெற்றிலைக் குதப்பலாக / சப்பிக்கொண்டிருந்தது / 'யுத்தம்.
கவிதையின் இந்த முதற் பகுதியினைப்படிக்கும்போதே சங்ககாலக்கவிதையொன்றின் தாக்கம் பலமாகவே இருப்பதை உணர முடிகின்றது. சங்கக்கவிதைகளில் இயற்கையாக மையமாக வைத்தே, ஐம்பெருந்திணைகளை மையமாக வைத்தே கவிதைகள் பின்னப்பட்டிருக்கும். அவ்விதமானதோர் உணர்வே மேற்படி கவிதையின் ஆரம்பப்பகுதியை வாசிக்கும்போதெழுகின்றது. அம்பகாமப்பெருங்காட்டை மையமாக வைத்தே கவிதை பின்னப்பட்டிருக்கின்றது.
மேலும் தமிழினியின் மொழி அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்துகிறது. மரபுக்கவிதையின் அம்சங்களான எதுகை, மோனை போன்றவற்றையும் சீர்களில் அளவாகப்பாவித்திருக்கின்றார். உதாரணத்துக்கு மோனைகளாக போருக்கு / புதல்வரை, தந்த / தாயாக, பகலை / பயங்கரமாயிருந்தது, பெருங்காட்டின் / போர்க்களத்தில் போன்றவற்றைக்குறிப்பிடலாம். எதுகைகளாக வெடியதிர்வுகளின் / குடி பெயர்ந்தலையும், இருண்ட / மருண்டு போன்றவற்றைக்குறிப்பிடலாம். இவையெல்லாம் சேர்ந்துதான் கவிதை வரிகளைக் கவித்துவமுள்ளவையாக மாற்றுகின்றன.
அடுத்துவரும் வரிகள் கவிதையின் முக்கியமான வரிகள். அவை:
மீளாப் பயணம் சென்ற தோழி
விடைபெறக் கை பற்றி
திணித்துச் சென்ற கடதாசி
செய்தி சொன்னது..
காலமாவதற்காக காத்திருக்கும்
அம்மாவின் ஆத்மா
கடைக் குட்டியவளின்
கையாலே ஒரு துளி
உயிர்த் தண்ணிக்காகத்
துடிக்கிறதாம்.
போராளியான தோழியோ போர்க்களத்தில் மீளாப்பயணம் சென்று விட்டாள். அதற்கு முன்னர் அவள் விடைபெறுகையில் தன் தோழியான கவிஞரிடம் கடிதமொன்றினைத்தந்து விட்டே செல்கின்றாள். மரணப்படுக்கையில் கிடக்கும் அவளது தோழியின் தாயாரைப்பற்றிய கடிதமது. அத்தாயின் கடைக்குட்டியான மீளாப்பயணம் சென்றுவிட்ட தோழியின் கையால் ஒரு துளித்தண்ணீருக்காகத்துடிக்கிறது அந்தத்தாயின் மனது. அதனைத்தான் விபரிக்கின்றது அந்தக்கடிதம். அந்தத்துளித்தண்ணீரைக் கவிஞர் 'உயிர்த்தண்ணி' என்று கூறுகின்றார். ஏனென்றால் உயிர் போகக்கிடக்கும் அந்தத்தாயின் உயிர் அதற்காகவே, அந்தத்துளித்தண்ணீருக்காகவே துடிப்பதால்.'உயிர்த்தண்ணி'யாகின்றது.
போருக்குத்தன் புதல்வியைத்தந்த அன்னை அவள். இவளைப்போன்ற அன்னையர் பலர். அவர்களைப்பற்றித்தான் கவிதை கூறப்போகின்றது என்பதற்காகவே போலும் ஆரம்பத்திலேயே கவிஞர் 'போருக்குப் புதல்வரைத் தந்த / தாயாக வானம் /அழுது கொண்டேயிருந்தது' என்று குறிப்பாகக்கூறினார்போலும். இவ்விதமாகக்கவிதையின் பிரதான கூறுபொருளினை ஆரம்பத்திலேயே குறிப்பாகக்கவிதை கூறி நிற்பதால் அதுவே கவிதையின் சிறப்புமிகு அம்சங்களிலொன்றாக ஆகிவிடுகின்றது. அதற்குப்பின்னரான கவிதையின் பகுதிகள் கவிஞரின் தோழியின் இழப்பு ஏற்படுத்திய உணர்வுகளை, போர் பற்றிய கவிஞரின் விமர்சனத்தை எடுத்தியம்புகின்றன.
தமிழினியின் இன்னுமொரு முக்கியமான கவிதை 'நஸ்ரியா'. தமிழினியின் முகநூல் பக்கத்தில் வெளியான 'நஸ்ரியா' என்னுமிந்தக் கவிதைக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அகதிகளாக முஸ்லீம் மக்கள் யாழ் மாவ்வட்டத்திலிருந்து வெளியேறியதைப் பதிவு செய்கிறது. அதே சமயம் அவ்விதமான வெளியேற்றத்துக்குக் காரணமான அமைப்பின் முன்னாள் போராளியொருவரின் இன்றைய மனநிலையினையும், அன்று அகதியாகச்சென்ற முஸ்லீம் சமூகத்தின் வாரிசுகளிலொருவரின் எண்ணங்களையும், இருவருக்கிடையிலான மானுட நேயம் மிக்க நட்பினையும் பதிவு செய்கின்றது. அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் இலங்கையின் சிறுபான்மையின மக்களனைவரும் ஒன்றிணைந்து தம் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய இன்றுள்ள சூழலில், கடந்த கால வரலாற்றின் கசப்பான பக்கங்கள் தலையிட்டு அவ்விதமான ஒற்றுமையினைக் குலைத்து விடும் அபாயமுள்ளதொரு சூழலில்,சிறுபான்மையின மக்கள் மத்தியில் புரிதுணர்வினையும், நல்லெண்ணத்தினையும் ஏற்படுத்துவதற்கு எழுத்தாளர்களின் இதுபோன்ற தம் மீதான சுய பரிசோதனை மிக்க படைப்புகளின் முக்கியத்துவமும் அதிகரிக்கின்றது.
இக்கவிதையில் எனக்குபிடித்த சில வரிகள் வருமாறு:
"மூளையின் மடிப்புகளில்
கேள்விப் பாம்புகள்
நெளிந்து நெளிந்து
பதில்களைத் தேடிப்
பசியோடு துடிக்கின்றன"
'கேள்விப்பாம்புகள்' நல்லதொரு உருவகத்திலுருவான படிமம். 'நினைவு ஆணிகள்' இன்னுமொரு சிறந்த உருவகத்திலுருவான படிமம்.
கவிதை பின்வருமாறு முடிகின்றது.
"நீரடித்து
நீர் விலகாதெனில்
உன்னையும்
என்னையும்
எப்படி விலக்கலாம்?"
நீரானது ஒன்றுடனொன்று அடிபட்டுச் சென்றாலும் ஒன்றாகக் கலந்து விடுகிறது. நீரினைப் பிரிக்க முடியாது. அது போன்றதுதான் நம்மிருவருக்குமிடையிலான நட்பும், உறவும். யாராலும் பிரிக்கப்பட முடியாதது என்று முடிகிறது கவிதை. கவிஞரின் படைப்புச் சிறப்பினை வெளிப்படுத்தும் வரிகள்.
தமிழினியின் குறுங்கவிதையொன்று துளி -01 என்னும் தலைப்பில் அவரது முகநூலில் வெளியாகியுள்ளது. . கவிதை இதுதான்:
காலநதிக்கரையில்
எஞ்சிக்கிடக்கிறது
இத்துப்போனவொரு வாழ்க்கை.
இடைவிடாது கொட்டிக்கொண்டிருக்கும்
விசத்தேள்களாக நினைவுகள்
குடைவதால் நெஞ்சினில்
நீங்காத மரணவலி.
"சாகத்தானே போனதுகள்.
சாகாமல் ஏன் வந்ததுகள்."
குறுக்குக்கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகிக்கனக்கிறது
போராடப்போன மனம்.
இதுதான் அந்தக்குறுங்கவிதை. கடந்த கால நினைவுகள் வாட்டும் மனநிலையினை, யுத்தம் மெளனிக்கப்பட்டதற்குப்பின்னர் முன்னாள் போராளிகளைப்புறக்கணிக்கும் சமூகத்தின் மனநிலை ஏற்படுத்தும் வலியினை இவையெல்லாம் கவிஞரை வேதனைப்படுத்துகிறது. நீங்காத மரண வலியாக வாட்டுகிறது. அந்த வலியினை வெளிப்படுத்தும் வார்த்தைகள்: நினைவுகள் விசத்தேள்களாக்கொட்டுகின்றன. போராடப்புறப்பட்ட மனது பிணமாகிக்கனக்கிறது.
கவிதையென்பது உணர்வின் வெளிப்பாடு. ஆழமனத்தில் குடிகொண்டிருக்கும் வேதனை வார்த்தைகளில் வெளிப்படுகிறது. கவிதையில் உண்மை இருப்பதால் சுடுகிறது. வலி தெரிகிறது. கூடவே மானுடரின் சுயநலமும் தெரிகிறது. போராடப்புறப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் தம் கடந்த கால அனுபவங்களைப்பல்வேறு வழிகளில் பதிவு செய்து வருகின்றார்கள். தமிழினி இங்கு தன் நிகழ்கால அனுபவத்தைக் கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஈழத்துத்தமிழ் இலக்கியத்திலிருந்து வெளியான முக்கியமான கவிதைகளிலொன்றாகத் தமிழினியின் இந்தக் குறுங்கவிதையும் இடம் பெறப்போகின்றது. அதற்குக்காரணம் அது கூறும் பொருள். ஒரு முன்னாள் போராளியின், சமூகத்தால் அவமதிப்புக்குள்ளாகியிருக்கும் இன்றைய மனநிலையினை, அதனாலேற்படும் வேதனையினைப் பதிவு செய்திருப்பதால் இக்கவிதையின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது.
கவிதையில் சொற்களும் அழகாக வந்து விழுந்திருக்கின்றன. கொட்டும் நினைவுகளை விசத்தேள்களுக்கு உவமையாக்கியிருப்பது நன்கு பொருந்துகிறது. விசத்தேள் நினைவுகளென்று உருவகித்திருந்தாலும் சொற் சிக்கனம் மிகுந்து படிமத்தில் இன்னும் சிறப்புற்றிருக்கும். இந்தக் கவிதைக்குத் தமிழினி தலைப்பினை வைக்கவில்லை. துளி -01 என்று மட்டுமே வைத்திருக்கின்றார். கவிதையின் தலைப்பாகப் போராடப்போன மனது என்று வைக்கலாமென்று படுகின்றது. அண்மையில் நான் வாசித்த கவிதைகளில் என் மனதினைப்பாதித்த கவிதைகளில் இதுவுமொன்றென்பேன்.
'கட்டைகளை நெருக்கி பக்கவாட்டில் அடுக்கி விட்டது போல்' படுத்திருக்கும் கைதிகளின் நிலையினை, இரவிலும் கண்ணைப்பறிக்கும் ஒளிவெள்ளத்தில் தூங்க வேண்டிய நிலையினை, போதைக்கடிமையாகிய பெண் கைதிகளுடன் வாழ வேண்டிய நிலையினை, உணவுக்காக, குளிப்பதற்காகச் சிறையினுள் அடையும் சிரமங்களை விபரிக்கும் கவிதை 'வெலிக்கடைச்சிறை'. ஒருவகையில் சிறை வாழ்க்கையினைப் படம் பிடிக்கும் ஆவணக்கவிதையாக இதனைக்கருதலாம். இந்தக்கவிதை பின்வருமாறு முடிவுறுகிறது:
கை வீசி நடக்கிறது
காலம்.
அதன் கால்களில் ஒட்டிய துகள்களாய்
மனித வாழ்க்கை-
ஒட்டுவதும், உதிர்வதுமாய்.
தமிழினியின் படிமங்கள் சிறப்பானவை. படைப்புத்திறன் மிக்கவை. இங்கு கை வீசி நடக்கும் காலம், கால்களையும், கைகளையும் கொண்டவொரு உயிராக மனதில் விரிகிறது. மனித வாழ்க்கையோ அதன் கால்களில் ஒட்டிய துகள்களா ஒட்டுவதும், உதிர்வதுமாக இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் காலமோ கைகளை வீசி நடந்து கொண்டிருக்கின்றது.
காலத்தின் பல்வகைப்பண்புகளைத் தன் வாழ்க்கையினூடு விபரிக்கும் கவிதை 'போரடிக்கும் கருவி'. இந்தக்கவிதையினை வாசிப்பவர்களுக்கு முதல் எழும் கேள்வி இங்கு தமிழினி குறிப்பிடும் போரடிக்கும் கருவி என்பதுதான் என்ன? நான் நேரடியான அறுவடை செய்யப்பட்ட நெற்பயிரிலிருந்து நெல்லினை பிரித்து எடுப்பதற்காகக் காளை மாடுகளைக்கொண்டு அல்லது உழவு இயந்திரங்களைக்கொண்டு மிதிப்பார்கள். ஒரு காலத்தில் தமிழர்கள் ஆனை கொண்டு போரடித்ததாக வரலாறுண்டு. இக்கவிதையில் தமிழினி தன்னையொரு போரடிக்கும் கருவியாகக்காண்கின்றார். காலமானது ஒரு சமயம் மெளனமாகவிருக்கச்செய்கிறது. இன்னுமொரு சமயம் பகைக்கச்செய்கிறது. பிறிதொரு சமயமோ சிநேகிக்கச்செய்கிறது. இங்கு தமிழினியின் வாழ்க்கையின் அடிப்படையில் பகைக்க என்பது இரு இனங்களுக்குமிடையில் நிலவிய பகை காரணமாக வெடித்த போராட்டத்தினையும், சிநேகிக்க என்பது சமாதான முயற்சிகளை, யுத்த நிறுத்தங்கள் போன்றவற்றையும், மெளனமாக இருக்க என்பது யுத்தம் முடிவுற்ற பின்னர், சிறை வைக்கப்பட்டு விடுதலையான பின்னர் மெளனமாகவிருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அவரது நிலையினையும் குறிப்பாகக் குறிப்பதாகக் கருதலாம். போரடிக்கும் கருவியானது எவ்விதம் நெல்லினையும், தாளினையும் பிரித்தெடுக்கின்றதோ, அவ்விதமே காலமும் தன்னை அவ்விதமானதொரு கருவியாக வைத்து, பல்வகைக்காலச்சூழல்களையும் எதிர்கொள்வதற்கு அவற்றை நேர்த்தியாகக் கையாண்டு, நகர்த்திச்செல்கிறது. போரடிக்கும் கருவி நெல்லையும் , தாளினையும் பிரிக்கிறது. இங்கு இருப்பில் எதிர்படும் பல்வகைக்காலத்தின் நிலைகளையும் ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு தான் தான் அவற்றின் தன்மையினை உணர்ந்து, அவற்றின் விளைவாக உருவாகும் நன்மை, தீமைகளைப்பிரித்துணர்ந்து நடைபயின்றிட வேண்டும். இந்தக் காரணத்தினால்தான் தன்னைக் காலம் ஒரு போரடிக்கும் கருவியாகப் பாவிக்கின்றது என்கின்றார் கவிஞர். காலமானது மானுடரைப்போரடிக்கும் கருவிகளாக வைத்து, இருப்புப் பயிர் விளைச்சலை எதிர்கொள்கின்றது என்பதுதான் கவிஞரின் எண்ணமாக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது. இங்கும் போரடிக்கும் கருவு ஒரு படிமம். காலத்தின் கைகளில் இயங்கும் மானுடர் பற்றிய வித்தியாசமானதொரு படிமம்.
காலம் , வெளி எல்லாமே சார்ப்பானது என்றார் ஐன்ஸ்டைன் தனது புகழ்பெற்ற சார்பியல் கோட்பாடுகளில். தமிழினியின் 'உத்தரிக்கும் இரவு' கவிதையும் காலத்தின் சார்புத்தன்மையினை இன்னுமோர் கோணத்தில் வெளிப்படுத்துகிறது. ஆறுதலாக, ஆடி, ஆடி நகர்ந்து செல்லும் சரக்கு ரயிலாக நீண்டு செல்கிறது இரவு. இரவினை ஆடி, ஆடி, ஊர்ந்து செல்லும் சரக்கு ரயிலாகக் கவிஞர் உணருகின்றார். நல்லதொரு படிமம்.
"கடைசிக் கையிருப்பும்
முடிந்து போன
அந்தரிப்பில்
மூட மறுக்கின்றன
உறக்கமற்ற விழிகள்"
தூங்க முடியாமல் உறக்கமற்றுத்தவிக்கின்றன விழிகள். ஏன்? கடைசிக் கையிருப்பும் முடிந்து போன அந்தரிப்பில் உறக்கமற்றுத் தவிக்கின்றன விழிகள். முடிந்து போன கடைசிக் கையிருப்பாக , முடிந்து போன ஆயுதப்போரினையும் ஒரு விதத்தில் கருதலாம் தானே. எல்லாமே முடிவுற்ற நிலையிலும், ஒரு வித நப்பாசையில் தீர்ந்து போன சக்கரை டப்பாவைப் பிறாண்டுவதுபோல், இன்னும் மீதமிருக்கும் கனவுகளை பிறாண்டுகிறது தவித்த மனது. இவ்விதமான இறந்த கால நினைவுகள் புழுக்களாக மூளையினைத்தின்னுகின்றன, இவ்விதமான தூக்கமற்ற இரவுகளைக்கடப்பதே பெரும் பாடாகவிருக்கிறது கவிஞருக்கு. இவ்விதமான நினைவுகளால் ஓரிரவைக் கடப்பது கூட, ஒரு மாமாங்கத்தினைக் கடப்பதுபோல் வலிக்கிறது.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான பின்னர் முன்னாள் போராளிகள் பலரின் மனநிலையும் இவ்விதமாகத்தானிருக்கும்.
இன்னுமொரு தமிழினியின் கவிதையினையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகவிருக்குமென எண்ணுகின்றேன். அதனை அவர் கவிதையாக எழுதியிருக்கவில்லை. அவரது 'மழைக்கால இரவு' என்னும் சிறுகதையில் அவர் பாவித்திருந்த கவித்தும் மிக்க வரிகளைத்தனியாகப்பிரித்தெடுத்து 'யுத்தம்' என்பதை விபரிக்கும் நல்லதொரு கவிதையாக அவ்வரிகள் விளங்குகின்றன என்று 'பதிவுகள்' இணைய இதழில் எழுதியிருந்தேன். அதனை அவர் தனது முகநூலில் குறிப்பிட்டு "‘மழைக்கால இரவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையிலிருந்து அர்த்தம்பொதிந்த அருமையான கவிதையொன்றினை கிரிதரன் நவரத்னம் யாத்திருக்கிறார்." என்று எழுதியிருந்தார். அந்த வகையில் அதனையும் தமிழினியின் நல்லதொரு 'யுத்தம்' பற்றிய கவிதையாக நான் காணுகின்றேன்.
இந்தச்சிறுகதையின் இறுதியில் வரும் வரிகள் அழகானதொரு கவிதையாக அமைந்திருக்கின்றன. 'பசியடங்காத பூதம்' போல் மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம். உவமையில் வெளிப்படும் நல்லதொரு படிமம் இது. எவ்வளவு பேரைக்கொன்றொழித்தும் யுத்தமென்ற பூதத்தின் பசி அடங்கவில்லை. கண் முன்னால் நிணமும், குருதியும் கடை வாயில் ஒழுகக்காட்சிதரும் பூதமாக யுத்தம் விசுவரூபமெடுத்து நிற்கிறது.
கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.
மேலுள்ள வரிகளுடன் சிறுகதையின் மேலும் சிறுகதையின் சில வரிகளையும் சேர்த்து விட்டால் யுத்தம் என்றொரு முழுமையான கவிதை கிடைக்கின்றது.
யுத்தம்!
போரில் ஈடுபட்டு மரித்துப்
போன
இராணுவத்தினரதும், போராளிகளினதும்
சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு
கிடந்ததை என் கண்களால் கண்டேன்.
பகைமை, விரோதம், கொலைவெறி
இவைகளெதுவுமே
அப்போது அந்த முகங்களில்
தென்படவில்லை.
உயிர் போகும் தருணத்தின்
கடைசி வலி மட்டும்
அந்த முகங்களில் எஞ்சியிருந்தது
கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.
இக்கவிதை யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் கவிஞரின் மானுட நேயத்தினையும் வெளிப்படுத்துகிறது. போரில் மரித்துப்போன இராணுவத்தினரின், போராளிகளின் சடலங்கள் ஒன்றின் மேலொன்றாகப் புரண்டு கிடப்பதைக்கவிஞர் பார்க்கின்றார். அச்சமயம் அவருக்கு பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதனையுமே அப்போது அம்முகங்களில் காண முடியவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலியினை மட்டுமே அம்முகங்களில் காண முடிகிறது. சிறிது நேரத்துக்கு முன்பு ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுடன் மோதி உயிர் விட்டவர்கள் அவர்கள். ஆனால் மடிந்த அவர்தம் முகங்களில் அவை எவற்றையுமே காண முடியவில்லை. இவ்விதம் கூறுவதற்குக் கவிஞரைத்தூண்டிய மானுட நேயம் சிறப்புக்குரியது.
இவ்விதமாகத் தமிழினியின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தவிர்க்க முடியாதவை. தமிழினியின் போராட்ட அனுபவங்களை, ஆழ்ந்த வாசிப்பினை, ஆழமான சிந்தனையினை வெளிப்படுத்தும் கவிதைகளின் முக்கியமான இன்னுமொரு சிறப்பு: அவரோ ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் ராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். இருந்தும் அவரது கவிதைகள் பிரச்சார வாடையற்று சிறந்து விளங்குகின்றன. யுத்த களத்து நிலைமைகளை விபரிக்கையில், சக போராளிகளின் உளவியலை, போர்ச்செயற்பாடுகளை விபரிக்கையில், பொருத்தமான படிமங்களுடன், சிறப்பான மொழியுடன் அவற்றைப் பிரச்சார வாடையெதுவுமற்று விபரித்திருக்கின்றார். இதனால்தான் அவரது கவிதைகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்குகின்றன.
4. எழுத்தாளர் பொன் குலேந்திரனின் அறிவியற் புனைவுகள் பற்றி....
[ பொன் குலேந்திரனின் 'காலம்' தொகுப்பு.- தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எழுத்தாளர் பொன் குலேந்திரனின் 'காலம்' - அறிவியற் சிறுகதைகள் - தொகுப்புக்காக நான் எழுதிய அணிந்துரை இது. ]
அறிவியல் புனைகதை (Science Fiction) என்றால் அறியப்பட்ட அறிவியல் தகவல்கள் , உண்மைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் அல்லது சம காலத்தில் நடக்க் இருப்பதை எதிர்வு கூறி, அதனடிப்படையில் படைக்கப்படும் புனைவு என்றுதான் பொதுவாக அறியப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணங்கள், ஏனைய கிரக உயிரினங்கள், பிரம்மாண்டமான விண்வெளித்தொலைவுகளைக் கடப்பதற்கான வழிவகைகள், புதிர் நிறைந்த விண்வெளி அதிசயங்கள் (கருந்துளைகள் போன்ற) , பல்பரிமாண உயிரினங்கள், மானுடரின் எதிர்கால நிலை, நமது பூமியின் எதிர்கால நிலை, இவ்விதமான விடயங்களைக் கருப்பொருளாகக்கொண்டு படைக்கப்படும் புனைகதைகளையே அறிவியல் புனைகதைகள் என்போம். சமகால அறிவியல் உண்மைகளை விபரித்தலைக் கருப்பொருளாகக் கொண்ட புனைகதைகளை அவ்வகையான புனைகதைகளாகக் கருதுவதில்லை. ஆனால் அறிவியல் விடயங்களை மையமாக வைத்துப் புனையப்பட்டவையாதலால் அவையும் அறிவியல் புனைகதைகளே என்று அத்தகைய புனைகதைகளைப் படைத்த எழுத்தாளர் ஒருவர் வாதாடினால் அவருடைய தர்க்கத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வகையில் பொன் குலேந்திரன் அவர்களின் இத்தொகுதியிலுள்ள புனைகதைகளையும் அறிவியல் கதைகளாகக் கொண்டு இத்தொகுதிக்கதைகளைபற்றிச் சிறிது நோக்குவோம்.
பொன் குலேந்திரன் அவர்கள் ஒரு பௌதிகவியல் பட்டதாரி. அத்துடன் தொலை தொடர்புப் பொறியியலாளரும் கூட. அவரது பரந்த அறிவியல் உண்மைகளைப்பற்றிய அறிவு பிரமிக்க வைக்கின்றது. அவரது பன்முகப்பட்ட சுய தேடலை, சுய வாசிப்பை அது வெளிப்படுத்துகின்றது. தான் அறிந்ததை, உணர்ந்ததை சிறு சிறு கதைகளாக அழகாகப்புனைந்துள்ளார் அவர். அது அவரது எழுத்துத்திறனைப் புலப்படுத்துகின்றது.
இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளைப் பொறுத்தவரையில் மூன்று வகையான பிரதான பண்புகளை அவதானிக்க முடிகின்றது. முதலாவது வகைப் புனைகதைகள் பொதுவாக அறிவியல் கதைகள் என்று கூறப்படும் கதைகள். அடுத்தவகைப்பண்பாக சமகால அறிவியல் உண்மைகளை விபரிக்கும் கதைகள். மூன்றாவது வகைப்பண்பாக ஆசிரியரின் மத மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை ஆங்காங்கே வெளிப்படுத்தும் கதைகள். இவ்விதமாக முப்பண்புகளை வெளிப்படுத்தும் கதைகளில் பல ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.
குலேந்திரன் அவர்களின் முன்னுரையில் அவர் கூறியிருப்பதும் மேற்படி என் அவதானம் சரியென்பதையே எடுத்துக்காட்டுகின்றது. "இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல விஞ்ஞான தத்துவங்களையும் ஆராச்சிகளையும் கருவாகக் கொண்டவை." என்றும் "மூடநம்பிகைகளுக்கு அறிவியல் விளக்கம் கொடுகிறது கதைகள் 19, ,20" என்றும் அவர் குறிப்பிடுவதையே குறிப்பிடுகின்றேன்.
தொகுப்பின் முதலாவது கதையான 'காலம்' கருந்துளைக்கான பயணத்தைப்பற்றிக் கூறும் கதை. அப்பயணத்தினூடு கருந்துளைகள் பற்றிய தகவல்களையும் கதை உள்ளடக்கியுள்ளது. கருந்துளைக்குக்குப் பயணிப்பதைப்பற்றிய கனவினை உள்ளடக்கிய கதை. கருந்துளை பற்றி , அவை எவ்வாறு உருவாகுகின்றன என்பது பற்றியெல்லாம் தகவல்களைத் தநதாலும் , கதையிலுள்ளதைப்போல் கருந்துளைக்கு அருகில் பயணிக்க முடியாது. கருந்துளை ஒரு கிரகம் அல்ல. அது ஈர்ப்புச் சக்தி மிகவும் அதிகமான 'காலவெளி'ப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. கடும் ஈர்ப்பு விசை காரணமாக அதனை அண்மிக்கும் அனைத்துமே ஓவ்வொரு பக்கம் இழுபட்டு உருக்குலைந்து இல்லாமலாகி விடும். ஆனால் இக்கதை சிறுவன் ஒருவனின் கனவின் விபரிப்பால் நடைபெறுவதால் கனவில் இவையெல்லாம் சாத்தியம் தானே என்று ஆசிரியர் கூறி விளக்கமளிக்கலாம். அவ்விதமளித்தால் நாமும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் கனவுகளில் நிஜ வாழ்வில் நடக்க முடியாத சம்பவங்கள் தோன்றுவதொன்றும் அதிசயமல்லவே. ஆனால் அச்சிறுவனின் கருந்துளைக்கான அக்கனவுப்பயணம் , நடைமுறைச்சிக்கல்களைத்தீர்த்து இன்னுமொரு வழியில் கருந்துளைகளுக்கான பயணங்களை எதிர்காலத்தில் நிஜமாக்கிட எதிர்வு கூறுமொரு தீர்க்கதரிசனமாகக் கருதலாம். நேற்றைய கனவுகள் இன்றைய சாதனைகளல்லவா.
இக்கதை ஆசிரியரின் பாரம்பரிய விடயங்களிலான நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துகின்றது. மகன் தந்தையிடன் தனது விண்வெளிப்பயணக் கனவு சாத்தியமாகுமா என்று கேட்கின்றான். அதற்குத் தந்தை 'அகஸ்தியா. உன் கனவு நனவாகுமா என்பதை நாம் நாடி சாஸ்திரக்காரனிடம் கேட்டு விடுவோமே' என்று பதிலிறுக்கின்றார்.
இக்கதையை இத்தொகுப்பின் மாதிரிக் கதைகளிலொன்றாகக் குறிப்பிடலாம். பொதுவான அறிவியல் கதைகளிலுள்ளதைப்போல் விண்வெளிப்பயணத்தைப்பற்றி பேசுகின்றது. அதுவும் கருந்துளைக்கான விண்வெளிப்பயணத்தைப்பற்றி. அடுத்தது இக்கதை கருந்துளைகள் பற்றிய அறிவியல் தகவல்களை வழங்குகின்றது. அடுத்தது இக்கதை ஆசிரியரின் நாடி சாத்திரம் போன்றவற்றிலுள்ள ஈடிபாட்டினையும் வெளிப்படுத்துகின்றது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட மூன்று வகையான பண்புகளையும் இக்கதை வெளிப்படுத்துவதாலேயே தொகுப்பின் மாதிரிக்கதைகளிலொன்றாக இதனைக் குறிப்பிட்டேன்.
பொதுவாக அறிவியல் புனைகதைகள் என்னும் நோக்கில் புனையப்பட்ட கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதையாக 'விநோதன்' கதையினைக் குறிப்பிடுவேன். விநோதன் தொகுப்பின் மிகச்சிறந்த அறிவியற் கதையென்பேன். படைப்புத்திறனும் மிக்க சிறப்பான அறிவியல் கதையாக இதனைக் கூறுவேன். கதை இதுதான்: கிறிஸ்தவனான ஜெயன் வானியற்பியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற அறிவியல் அறிஞன். வேற்றுலகத்து உயிரினங்கள் பற்றிய ஆய்வில் மூழ்கியிருப்பவன். அவனது மனைவி ஓர் இந்து. திறமையான 'புறோகிறாமர்'. வேற்றுலகங்களிலிருந்து வரும் சமிக்ஞைகளைப் பகுத்தாராய்ந்திடக்கூடிய 'புறோகிறா'மொன்றினை எழுதியவள். அவர்களிருவரும் மணம் புரிந்து கலிபோர்னியாவில் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறக்கும் மகன் விநோதமான தோற்றம் மிக்கவன். குட்டையான கால், கைகளுள்ளவன். பெரிய விழிகள், அகலமான நெற்றி, கூர்மையான காதுகள், குறைந்த தலைமயிர், முதிர்ச்சியான முகவாகு என விநோதமான தோற்றமுள்ளவன். பிறந்தபோது சில மணி நேரம் அழாத குழந்தை அவன். ஆனால் அவனது மூளை மட்டும் அபரிதமான வளர்ச்சியடைந்திருந்தது. ஒருமுறை தாய் வேற்றுலகச் சமிக்ஞைகளைப் பகுத்தாரய்வதற்காக எழுதிய 'புறோகிறாம்' வேலை செய்யவில்லை. அதனைத்திருத்தி வேலை செய்யுமாறு செய்கின்றான் இந்த விநோதமானவன். அதனைக்கொண்டு சமிக்ஞயொன்றினை வாசித்தபோது ஜெயனும், லக்சுமியும் திகைத்தே போனார்கள்.அதுதான் இக்கதையின் முடிவும் கூட. அச்சமிக்ஞையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
"'உங்கள் ஆராச்சிக்கு உதவ ஒருவனை உலகுக்கு அனுப்பியுள்ளோம்;. கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில மாதங்களில் அவன் உதவியுடன் எம்முடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்' என்றது செய்தி.". அப்படியானால் அந்த விநோதமான குழந்தை வேற்றுலக வாசிகளால் பூமிக்கு அனுப்பப்பட்ட குழந்தையா? ஆம் விநோதன் வேற்றுலக வாசிகள் பூமிக்கு அனுப்பிய குழந்தையேதான்.
இச்சிறுகதை சிறந்த அறிவியல் புனைகதை. நன்கு திட்டமிட்ட, சிந்தைக்கினிக்கக்கூடிய கற்பனை. அந்தக் கற்பனை ஆசிரியரின் படைப்புத்திறனைப் புலப்படுத்துகின்றது. படைப்புத்திறன் மிக்க இது போன்ற அறிவியல் புனைவுகளையே நூலாசிரியர் பொன். குலேந்திரனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கின்றேன். நல்லதோர் அறிவியற் புனைவுக்கு மாதிரியாகத் தொகுப்பிலுள்ள சிறந்த கதையாக இதனையே எவ்விதத்தயக்கமுமில்லாமல் அடித்துக் கூறுவேன்.
இன்னுமொரு கதையான 'சக்தி மாற்றம்' கதையும் கவனத்தை ஈர்க்குமொரு கதை. இக்கதையின் பிரதான பாத்திரமான இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற விஸ்வா பற்றி நூலில் இவ்விதம் விபரிக்கப்பட்டுள்ளது:
"விஸ்வா பௌதிகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சக்தி மாற்றத்தைப்பற்றி ஆராச்சி செய்தவர். அறிவியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் ஈடுபாடுள்ளவர். உயிர் வாழும் எந்த ஜீவனுக்கும் உடல், ஆன்மா என்பது இரு முக்கிய அம்சங்களாகும். உடல். அழிந்தாலும் ஆன்மா அழியாது. ஊடலானது இறப்பின் போது செயல் இழந்துவிடுகிறது. ஆனால் ஆன்மா என்ற சக்தியானது, சக்தி மாற்றத்தினால் மறுபிறவி மூலம் வேறு புது உடலுக்குள் புகுந்துவிடுகிறது. இந்தத் தத்துவத்தை கருவாகக் கொண்டே அவரது ஆராச்சியிருந்தது."
சக்தி மாற்றத்தைப்பற்றிக் குறிப்பிடுகையில் ஆசிரியர் ஐன்ஸ்டைனின் புகழ்பெற்ற சூத்திரமான E=M.C.C பற்றிக்குறிப்பிடுகையில் "இதன் படி ஒவ்வொரு பொருளோடு தொடர்புள்ள சக்தியுண்டு. சக்தியில் மாற்றம் ஏற்படும் போது திடப்பொருள் மாறுகிறது. ஓவ்வொரு பொளுக்கும் சக்தியோடு இணைந்த இயற்கையான அலை அதிர்வுண்டு.: என்று கூறுகின்றார். நானறிந்த வரையில் மேற்படி சூத்திரம் பொருளின் உள்ளிருக்கும் சக்தியை அப்பொருளை அழித்து உருவாக்குவதைப்பற்றிக் கூறுகின்றது. ஆனால் ஆசிரியர் குறிப்பிடும் உடல் என்பதும் ஆத்மா என்பதும் வேறு வேறானவை. உடல் அழிந்தாலும், ஆன்மா அழியாது. ஆனால் ஐன்ஸ்டைனின் சூத்திரம் பொருளை அழித்துப்பெறும் சக்தியைபற்றிக் கூறுகின்றது. இக்கதை கூறும் விடயமும் சுவாரசியமானது. இறந்த பூனையொன்றின் உடலுக்குள் எலியொன்றின் உயிர்ச்சக்தியைச் செலுத்தியபோது, உயிர்த்தெழும் பூனையானது பூனையில் இயல்புகளுடனேயே செயற்படுகின்றது. எலியின் இயல்புகளுடன் அல்ல. இச்சிறுகதையில் சித்தர்களின் அறிவியல் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து மதக்கோட்பாடுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இக்கதை பூரணமான அறிவியற் கதையென்னும் வரைவிலக்கணத்துக்குள் வருவதைத்தடுத்து விடுகின்றது. இருந்தாலும் இதுவும் இத்தொகுப்பில் காணப்படும் மூவகைப் பண்புகளையும் பிரதிபலிக்கும் புனைகதையாகக் குறிப்பிடலாம். கூடவே ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் கதையாகவும் குறிப்பிடலாம். எலியின் உயிர்ச்சக்தி பூனையின் உடலுக்குள் சென்றதும் பூனையின் இயல்புடன் செயற்படுகின்றது என்னும் ஆசிரியரின் கற்பனை உண்மையில் கதையின் படைப்புத்திறனை வெளிப்படுத்துகின்றது.
தொகுப்பிலுள்ள இன்னுமொரு கதை 'மலடி' . தேவனும் அபிராமியும் கணவன் மனைவி. அவர்களுக்குக் குழந்தையில்லை. உண்மைக்காரணம் கண்வன் தேவனிலுள்ள குறைபாடே. அவனது விந்து குழந்தைகள் உருவாவதற்கான சக்தியை இழந்து விட்டது. தேவனின் நண்பன் டாக்டர் சந்திரன் புகழ்பெற்ற மகப்பெற்று வைத்தியன். அவன் இதற்கு ஒரு வழி சொல்கின்றான். அதன்படி இன்னுமொருவரின் யாரென்று அறியாத ஒருவரின் விந்தினை அபிராமியின் கருப்பையில் செலுத்துவதன் மூலம் குழந்தையை உருவாக்கலாம் என்னும் நவீனத்தொழில் நுட்பத்தினைப் பாவித்து அவர்களுக்குக் குழந்தையை வழங்க முடியுமென்கின்றான். கணவன் மனைவி இருவரும் அதற்கு சம்மதிக்கின்றனர். அவ்விதமான கருக்கட்டல் மூலம் அபிராமி குழந்தை பெறுகின்றாள். கர்ப்பமாகவிருந்த தன் காதல் மனைவியை ஏற்கனவே இழந்தவன் டாக்டர் சந்திரன். அவன் தன் சொத்துக்களையெல்லாம் அந்தக் குழந்தைக்கு எழுதி வைத்து விட்டுச் செல்வதுடன் கதை முடிகின்றது. அந்தக் குழந்தைக்குரிய விந்தை வழங்கியவன் அவனே என மறைமுகமாக ஆசிரியர் எடுத்துக்கூறி அதனை வாசகரின் கற்பனைக்கே விட்டு விடுகின்றார். இதுவும் ஆசிரியரின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் சிறுகதை. இக்கதை குழந்தை பெறுவது சம்பந்தமாக நடைமுறையிலிருக்கும் அறிவியல் உண்மையினை வெளிப்படுத்தும் கதை, ஆனால் வழமையான அறிவியல் கதை என்னும் அர்த்தத்தில்ல. அறிவியல் தகவலை எடுத்துக்கூறும் கதையென்பதற்கு அப்பால் இது நல்லதொரு சிறுகதை.
'வைரஸ்' என்றொரு கதை. நிறுவனத்தில் கணினியிலுள்ள 'வைர'ஸை அழிப்பதில் வெற்றியடைந்த கதையின் நாயகன் ஆஸ்பத்திரியில் நிஜ 'வைரஸா'ல் பீடிக்கப்பட்டிருக்கும் தந்தையைக் கடவுள் துணையுடன் காக்கச் செல்வதாக முடிகின்றது. அறிவியல் கதையின் முடிவில் இவ்விதம் கடவுள் நம்பிக்கையுடன் முடிவது சற்று நெருடலாகவுள்ளது. ஆனால் இவ்விதம் விஞ்ஞானத்துடன் மெய்ஞானத்து ஈடுபாட்டையும் தன் அறிவியல் கதைகளில் வெளிப்படுத்துவது எழுத்தாளர் குலேந்திரனின் இயல்பாக இருப்பதைத் தொகுதியின் ஏனைய கதைகள் பலவும் வெளிப்படுத்துவதால் ஆச்சரியத்தைத் தரவில்லை.
'அல்செய்மார் ஆராச்சி' என்னும் கதை ஸ்டெம்செல் மாற்று மருத்துவச்சிகிச்சை மூலம் அல்செய்மார் நோயினை நீக்குவது பற்றி எடுத்துரைக்கின்றது. 'மனஇறுக்கம்' என்னுமொரு கதையில் இவ்விதக் குறைபாடால் பாதிக்கப்பட்ட சிறுவனொருவன் இசைத்துறையில் மிகுந்த திறமையுள்ளவனாக விளங்குகின்றான். ஒலி அலைகள் மூலம் எதிர்காலத்தில் இந்நோயைத்தீர்க்க முடியுமா என்று இக்கதை ஆராய்கிறது. 'தோட்டா' என்னும் கதை சுடப்படும் ஒருவரை 48 மணி நேரம் உறைய வைக்கும் துப்பாக்கித்தோட்டாவின் கண்டுபிடிப்பைப் பற்றியும், தமிழரின் ஆயுதப்போராட்டத்தில் போர்க்களமொன்றில் அதன் பாவிப்பையும் பற்றிக் கற்பனையையோட்டுகின்றது. 'கிரகவாசி' என்னும் கதை இந்து மதம், கைலை மலையின் சிறப்புகள், இந்து மதம் போன்றவை வேற்றினக் கிரக வாசிகளின் விளையாட்டோ என்று சிந்தனையை வித்தியாசமான கோணத்திலோட்டுகின்றது. இவ்விதமான வித்தியாசமான ஆசிரியரின் கற்பனை வியக்க வைக்கின்றது. இக்கற்பனைகளை இன்னும் சிறிது விரிவாக அறிவியற் பார்வையில் அணுகிக் கதைகளை உருவாக்கியிருக்கலாமோ என்றொரு எண்ணமும் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை.
பல கதைகளில் ஆசிரியர் கதாபாத்திரங்களை ஆரம்பத்தில் அறிமுகம் செய்கின்றதை அவதானிக்க முடிகின்றது. ஒரு கதையில் அவ்விதமிருக்கலாம். பல கதைகளில் அவ்வாறிருக்கத்தேவையில்லை. கதைகளினூடு கதாபாத்திரங்களின் பின்னணியைப்புரிந்துகொள்ளும் வகையில் கதைகளை அமைப்பதே நல்லதென்பதென் எண்ணம். கதாசிரியர் எதிர்காலத்தில் இதனைக் கவனத்திலெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கிரகணம், கொல்லி வாய்ப் பிசாசு , தூமகேது போன்ற, கதைகள் அறிவியல்ரீதியில் நிலவும் மூடநம்பிக்கைகளை அணுகுகின்றன. விளக்கமும் தருகின்றன. கொல்லி வாய்ப் பிசாசு கதையில் கொல்லி வாயுப் பிசாசு என்பதையும் விளக்கத்துடன் சேர்த்திருக்கலாம். கொல்லி வாயுப் பிசாசே மருவி கொல்லி வாய்ப்பிசாசாக வந்திருக்க வேண்டும். கிரகணத்தில் அமாவாசை நேரத்தில் பிறந்த மகனுக்குப் பரிகாரம் செய்ய வேண்டுமென்ற சோதிடர்களின் ஆலோசனையை முற்போக்குச் சிந்தனைகள் மிக்க மனைவியின் ஆலோசனைக்கேற்பப் புறக்கணிக்கின்றார் இரத்தினக்கல் வியாபாரியான சின்னத்தம்பி. பரிகாரம் செய்யாததால் மகனுக்கு எதுவும் ஆகவில்லையென்றும், இரத்தினக்கல் வியாபாரத்தில் அவனுக்கு நன்மையே கிட்டுகின்றது என்னும் வகையில் கதை முடிகின்றது. தூமகேது கதையில் தற்செயலாக நடைபெறும் காட்டுத்தீ மக்களின் தூமகேது பற்றிய நம்பிக்கையை வலுப்படுத்துகின்றது என்றாலும் அது உண்மையல்ல என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் வகையில் அறிவியல் விளக்கத்துடன் கதையை முடிக்கின்றார் ஆசிரியர்.
மொத்தத்தில் படைப்புத்திறன் மிக்க கற்பனைகளுடன் ஆசிரியர் கதைகள் பலவற்றை ஆசிரியர் படைத்திருந்த போதிலும் தேவைக்கு அதிகமாக ஆன்மிகத்தை அறிவியலுக்குள் புகுத்தி விட்டாரோ என்றொரு எண்ணமும் கூடவே தோன்றுவதைத்தவிர்க்க முடியவில்லை. அறிவியல் கதைகளில் ஆன்மீகத்தைக் கலப்பதாகவிருந்தால் தொட்டுக்கொள்ளப் பாவிக்கும் ஊறுகாயைப்போல் பாவிப்பதுடன் , அப்பாவிப்பு அறிவியல்ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் வகையில் , வெறும் ஆய்வுகளற்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் அல்லாமல் இருப்பது அவசியம் . இத்தொகுப்பிலுள்ள சில கதைகள் ஆசிரியரின் மத, பார்ம்பரிய நம்பிக்கைகளின் பாதிப்பினை வெளிப்படுத்தினாலும் கொல்லி வாய்ப்பிசாசு , தூமகேது போன்ற கதைகளில் மூட நம்பிக்கைகளுக்கெதிராக அறிவியல்ரீதியிலான அணுகுமுறையினையும் ஆசிரியர் கையாண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. வரவேற்கத்தக்கது. இதனையும் ஆசிரியர் கவனத்திலெடுத்து இன்னும் சிறப்பான கதைகளை எதிர்காலத்தில் தருவாரென்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவ்வளவுக்கு அறிவியல் தகவல்கள் , வித்தியாசமான அறிவியல் கற்பனைகள், கனவுகள் எல்லாம் நிறைந்திருக்கும் கதைகளைக்கொண்டதாகத் தொகுப்பு இருக்கின்றது. இன்னுமொன்றினையும் தொகுப்பிலுள்ள கதைகள் வெளிப்படுத்துகின்றன. அது ஆசிரியரின் சுவையான மொழிப்பிரயோகம். கதைகளைச் சரளமாகச் சுவையாகக்கூறிச்செல்கின்றார். இது வாசகர்களைக் கதைகளுடன் ஒனறிணைந்து பயணிப்பதை இலகுவாக்குகின்றது. மொத்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப்போல் தொகுப்பின் கதைகள் மூவகைப் பண்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுடன் சிந்தனையையும் தூண்டும் வகையிலும் அமைந்திருக்கின்றன. கூடவே படைப்புத்திறனை வெளிப்படுத்துவனவாகவுமுள்ளன. வாழ்த்துகள்.
5. சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்!
சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை
நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அனைத்துமே அவரது சங்க நூல்கள் மீதான பன்முக, ஆழ்ந்த வாசிப்பினையும் அவற்றை ஆழமாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் திறமையினையும் வெளிப்படுத்துவை. உதாரணத்துக்கு இத்தொகுப்பிலுள்ள சில கட்டுரைகளை இந்த நோக்கில் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.
'சங்க இலக்கியக் களவியற் பாடல்கள் வெளிக்கொணரும் அம்பலும் அலரும்' என்னும் கட்டுரை சங்ககாலத்தமிழர்கள் வாழ்வில் காதலைச் சமூகம் அங்கீகரித்திருந்ததை இக்கட்டுரை விபரிக்கும். காதல் வயப்பட்டிருக்கும் தலைவனும், தலைவியும் களவாகச் சந்திப்பதையும் , அதற்காகச் சில கட்டுப்பாடுகளைச் சமூகம் விதித்திருந்ததையும் கட்டுரை மேலும் விபரிக்கும். இவ்விதம் காதலர்கள் பிறருக்குத்தெரியாதவாறு களவாகச் சந்திப்பதைக் 'களவு' என்று அழைத்தனர். பகலில் தலைவனும் , தலைவியும் சந்திக்குமிடத்தைப் 'பகற்குறி'யென்றும், இரவில் சந்திப்பதை 'இரவுக்குறி'யென்றும் அழைத்தனர். இவ்விதம் சந்திக்கும்போது எவ்விதம் எங்கு சந்திக்க வேண்டுமென்பதையும் , அவ்விதம் சந்திக்குமிடங்கள் எவ்விதம் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதையும் அக்காலத்தமிழர்கள் சில நிபந்தனைக்களுக்குள்ளாக்கியிருந்தனர். அவற்றை மேற்படி கட்டுரையில் கட்டுரையாளர் பின்வருமாறு கூறுவார்:
"தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது குறியிடம் அமைத்துக் கூடுவர். பகலிற் கூடுமிடம் 'பகற்குறி' என்றும், இரவிற் கூடுமிடம் 'இரவுக்குறி' என்றும் கூறுவர்.
'குறியெனப் படுவது இரவினும் பகலினும், அறியக் கிளந்த ஆற்ற தென்ப.' –(பொருள். 128)
இரவுக்குறிக்குரிய இடமானது, இல்லத்துக்கு அண்மித்ததாகவும் அவர்கள் பேசுவதை வீட்டிலுள்ளோர் கேட்குமாறு அமைந்ததாகவும் இருக்க வேண்டுமென்று சூத்திரம் கூறும்
'இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாஅக் காலை யான.' – (129)
, பகற்குறிக்குரிய இடமானது மதிலின் புறத்தே அமையுமென்றும், அவ்விடம் தலைவிக்கு நன்றாகத் தெரிந்த இடமாகவும் அமைய வேண்டுமென்றும் கூறுவர்.
'பகற்புணர் களனே புறனென மொழிப
, அவளறி வுணர வருவழி யான.' – (பொருள். 130)"
இவ்விதம் ஆரம்பிக்கும் கட்டுரை, அம்பல் பற்றிய அலர் பற்றிய வரைவிலக்கணங்களை எடுத்துக்கூறி, காதற் களவு பற்றிய , தொல்காப்பிய, அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, குறுந்தொகை, திருக்குறள், நாலடியார் என் பல நூல்களை ஆதாரங்களாக்கி ஆய்வுக்கண்ணோட்டத்துடன் விபரிக்கிறது.
இது போல் பெண்களின் குணவியல்புகளைப்பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் அவரது ஆய்வுச்சிறப்பினை வெளிப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு பண்டைய தமிழரின் இலக்கிய நூல்கள் பெண்களின் நால்வகைப்பண்புகளாக அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்று வகைப்படுத்தியிருப்பதை அனைவரும் அறிவர். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் பெண்களின் மூவகைப்பண்புகளாக அச்சம், மடம் , நாணம் ஆகியவையே குறிப்பிடப்படுகின்றன. நான்காவது குணமாகிய பயிர்ப்பு என்னும் குணம் பற்றி பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப்புலவரின் 'நளவெண்பா' நூலே முதன் முதலில் குறிப்பிடுகின்றது என்பதைச்சுட்டிக்காட்டுகின்றார் தனது 'மகளிர் மாண்பை மேம்படுத்திச்
சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியர்' என்னும் கட்டுரையில்.
இவ்விதமே தொகுப்பிலுள்ள கட்டுரைகளொவ்வொன்றுமுள்ளதைக்காணலாம். ஓவ்வொரு கட்டுரையின் முடிவிலும் நிறைவுரை அல்லது முடிவுரை என்னும் பகுதியைக்காணலாம். இம்முடிவுரை அல்லது நிறைவுரை பகுதியில் கட்டுரையின் சாரம் சுருக்கமாகக்கூறப்படுகிறது. இவ்விதமாகக் கட்டுரைகளை ஆசிரியர் அமைத்திருப்பதன் முக்கியமான காரணம் ஆசிரியர் இவ்விதமான கட்டுரைகளை எழுதியதன் முக்கிய நோக்கங்களிலொன்றினால்தான். அந்த நோக்கம் சாதாரண வாசகர்களையும் தொல்காப்பியம் முதலான சங்க இலக்கியங்கள் மிகவும் எளிய, இலகுவான நடையில் கூறப்படுவதன் மூலம் சென்றடைய வேண்டுமென்பதுதான்.
நுணாவிலூராரின் சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய தெளிந்த இலகு நடை!
தொல்காப்பியம் என்றாலே சாதாரண மக்களுக்கெல்லாம் புரியாததொரு இலக்கண நூலென்று பலர் நினைத்து விடுகின்றார்கள். ஆனால் அது தவறு. தொல்காப்பியம் மக்களுக்காக எழுதப்பட்ட நூல். அந்நூல் எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்குப் புரியக்கூடிய வகையில் எழுதப்பட்ட நூல் தொல்காப்பியம். இன்று அக்காலகட்டத்து மொழி நடை கடினமானதாகவிருப்பினும், அக்காலகட்டத்தைப்பொறுத்தவரையில் எளிதான நடையிலேயே தொல்காப்பியம் எழுதப்பட்டுள்ளது என்பது ஆசிரியரின் எண்ணம். இதனை ஏற்கக்கூடியதாகவுள்ளது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட நூல்களின் மொழி நடை இன்று வாசிக்கும்போது சிரமமாகவிருக்கிறதல்லவா. ஆனால் அன்று மக்களுக்குப் புரியக்கூடிய மொழியில் இருந்திருக்குமல்லவா. ஆசிரியரின் இவ்வெண்ணத்தை அவரது 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' நூலின் அவரது 'நுழையுமுன் என் உரை' என்னும் குறிப்பின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
"தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல் என்று கூறப்பட்டாலும் அந்நூல் ஓர் இலக்கிய நூலுமாகும். அதில் நிறைந்த இலக்கியங்கள் பொதிந்துள்ளன. அதிலுள்ள சூத்திரங்கள் சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை என்றும் , அவை பண்டிதர் பரம்பரைக்குரியனவென்றும் கூறி எட்ட நிற்போர் பலர். ஆனால் தொல்காப்பியம் எழுந்த காலத்தை நாம் நோக்க வேண்டும். அன்று தமிழ்மொழி சிறப்புற்றிருந்தது. அக்கால மக்களுக்கு அன்று அவை புரிந்திருக்க வேண்டும். ஏனெனில் தொல்காப்பியம் மக்களுக்காக எழுதப்பட்ட நூல், ஆனால் இன்றுள்ளோருக்கு இச்சூத்திரங்கள் கடினமானவையே.
சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இலகு தமிழில் எழுதுவதே என் நூலின் நோக்காகும். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மையப்படுத்தியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. "( நூல்: தொல்காப்பியத்துளிகள்..', பக்கம் xxi)
மேற்படி ஆசிரியரின் கூற்று ஏற்கனவே வெளியான அவரது நூலான 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' என்னும் நூலுக்கான ஆசிரியரின் கூற்றாகும். அது இந்நூலிலுள்ள கட்டுரைகளுக்கும் பொருந்தும்.
பொதுவாகவே ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதுபோல் 'தொல்காப்பியமா?' என்று தொலைவில் ஒதுங்குவோரே பலர். அவர்களைப்பொறுத்தவரையில் தொல்காப்பியம் கடின நடையிலமைந்த இலக்கணச்சூத்திரங்களை உள்ளடக்கிய நூல். ஆனால் தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல இலக்கிய நூலும் கூட என்னும் தன் கருத்தினை தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மையமாக வைத்து ஆசிரியர் படைத்திருக்கும் ஆய்வுக்கட்டுரைகள் நிரூபிக்கின்றன. இடைச்சங்க காலத்தைச்சேர்ந்த தொல்காப்பியத்தின் பொருளதிகாரமும் ஏனைய கடைச்சங்ககாலத்தமிழ் நூல்களும் அக்காலகட்டத்தமிழ் மக்களின் சமூக வாழ்வை , அவர்கள் கைப்பிடித்து ஒழுகிய சமூகப்பண்புகளை, அவர்களது காதல் வாழ்க்கையினை, பெண்களுக்குச் சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையினை, எவ்விதம் அன்று தமிழ் மக்கள் நிலப்பிரிவுகளுக்கேற்ப வாழ்ந்தார்கள் என்பதை, அவர்களுக்கிடையில் நிலவிய பழக்க வழக்கங்களை, பொழுது போக்குகளை, அவர்கள் அணிந்த அணிகலன்களை, அவர்கள் உண்டு மகிழ்ந்த உணவு வகைகளை, விளையாடி இன்புற்ற விளையாட்டுகளை, நகர அமைப்பு முறையினை, வாழ்ந்த பல்வகை விலங்கினங்களை, பறவைகளை, விருட்சங்களை, பண்டைத்தமிழரின் திருமணச் செயற்பாடுகளை, வாழ்வின் வழிகாட்டலுக்காக அறிவுறுத்திய நல்வழிக்கூற்றுகளை, அவர்களது அறிவியற் சிறப்பினை, பெண்களின் குணநலன்களை என்று பல விடயங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றை ஆசிரியரின் தொல்காப்பியம் உட்பட ஏனைய கடைச்சங்க நூல்கள் மீதான புலமை இந்நூலிலுள்ள கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்துகின்றது.
இந்நூலிலுள்ள கட்டுரைகள் ஆசிரியரின் இவ்வகைக்கட்டுரைகளைப் படைப்பதற்கான முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுகின்றன. மிகவும் கடினமானவையாக இன்று வாழும் மக்களுக்குத்தென்படும் சங்ககாலத்தமிழ் நூல்கள் கூறும் விடயங்கள் மூலம் அக்காலகட்டத்தமிழர்கள்தம் வாழ்வினை, பண்பாடுகளை, சமூக அமைப்பினை, நகர அமைப்பினை எனப்பல்வகை விடயங்களை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டுமென்பது ஆசிரியரின் அவா. அந்த அவரது நோக்கம் நிறைவேறுவதற்கு அந்நூல்களையெல்லாம் நன்கு வாசித்து அவை கூறும் பொருளின் சாரத்தை அறிந்திருக்க வேண்டும். அதனை அவரது தொடர்ச்சியான சுயவாசிப்புடன் கூடிய சங்கத்தமிழ் இலக்கியங்கள் மீதான புலமை சாத்தியமாக்கியிருக்கின்றது. இவ்விதம் தான் அறிந்த விடயத்தை சாதாரண மக்களிடத்தே எடுத்துச்செல்வதற்கு அவரது தெளிந்த இலகுவான மொழி நடை உதவியிருக்கின்றது. தன் ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக்கித்தன் எழுத்துகள் மூலம் சாதனை படைக்கும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள் தொடர்ந்தும் தான் சுவைத்த சங்கத்தமிழ் நூல்கள் கூறும் பொருளினை மையமாக வைத்து, கட்டுரைகள் பலவற்றைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் மொழி நடையில் எழுத வேண்டும்; எழுதுவார் என்றே நம்புகின்றோம். அவரது இலக்கியச்செயற்பாடுகள் சிறப்புடன் மேலும் தொடர்ந்திட வாழ்த்துகிறோம்.
6. எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் இலக்கியத் தராசு 'தராசு முனைகள்' பற்றி...
- எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்' நூலுக்கு எழுதிய அணிந்துரை. -
எழுத்தாளர் சிறீ சிறீஸ்கந்தராஜாவின் 'தராசு முனைகள்' என்னும் நூல் மதிப்புரைகளின் தொகுப்பினை வாசித்தேன். பதினைந்து எழுத்தாளர்களின் பல் வகைப்பட்ட நூல்களைப்பற்றிய மதிப்புரைகள். சுருக்கமான ஆனால் தெளிவான, கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு போன்ற இலக்கியத்தின் பன்முக வெளிப்பாடுகள் பற்றிய ஆசிரியரின் தெளிவான புரிதல்களின் அடிப்படையில் உருவான மதிப்புரைகள். மதிப்புரைக்காக எடுத்துக்கொண்ட நூல்கள் ஆணாதிக்கம், பணம் ஏற்படுத்தும் அவலங்கள், தாயகத்தின் அவலங்களை, இருப்பின் தன்மை, முதிர்கன்னி, விதவைகள் துயர்,, தாய்மை, சீதனம், காதல், பிரிவு, தீண்டாமை. இனவாதம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, நல்லிணக்கம் எனப்பலவற்றைப்பற்றிப் பேசுகின்றன. இத்தொகுப்பு நூலை வாசித்தபோது நான் அவதானித்த முக்கியமான விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்.
நூலாசிரியரின் இலக்கியம் பற்றிய எண்ணங்களைக் கட்டுரைகள் பலவற்றில் காணலாம். நூலாசிரியரின் 'என்னுரை'யில் அவர் கவிதை பற்றிக் கூறுகையில் ''கவிதையின் மிக உயர்ந்த பண்பு உண்ர்வுதான். வடிவம் எதுவாக இருக்கலாம் ஆனால் அது ஏதோ ஒரு இரசத்தைப் பேசவேண்டும். காதல், அன்பு, சோகம் , பாசம் , பரிவு , வீரம், விடுதலை எதுவாகவும் இருக்கலாம். ' என்று கூறுகின்றார். கவிதை பற்றிய தெளிவான கருத்து. கவிதையின் மிக முக்கியமான பண்பே அது வெளிப்படுத்தும் உணர்வுதான். கவிதையொன்று எது பற்றியதாக இருந்தாலும் அதன் சிறப்பு, வெற்றியென்பது அது வெளிப்படுத்தும் உணர்விலேயே தங்கியுள்ளது என்பதில் எனக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இதன் அடிப்படையில் கவிதைகளை எடைபோடும் நூலாசிரியர் அவற்றை அவற்றின் ஏனைய முக்கிய கூறுகளான சொல்லாட்சி, பாடுபொருள் போன்றவற்றையும் உள்வாங்கியே எடைபோடுகின்றார் என்பதை நூலிலுள்ள மதிப்புரைகள் வெளிப்படுத்துகின்றன.
இது போல் எழுத்தாளர் சுதாகரியின் 'அரங்க அலைகள்' ஆறு நாடகங்களின் தொகுப்பு. தொகுப்பு நூல் பற்றிய மதிப்புரை நாடகம் பற்றிய நூலாசிரியரின் நாடகம் பற்றிய புரிதலையும் எமக்கு எடுத்துரைக்கின்றது. நாடக வழக்கு பற்றிய தொல்காப்பியர் கூற்றுகளின் அடிப்படையில் , அவற்றை அளவுகோல்களாகக் கொண்டு இந்நாடகப்பிரதியை எடை போடுகின்றார்.
இதுபோலவே எழுத்தாளர் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளான 'என்றாவது ஒருநாள்' எழுத்தாளர் ஹென்று லாசனின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புக் கதைகள். இச்சிறு மதிப்புரையே மொழிபெயர்ப்பு பற்றிய, மொழியாக்கம் பற்றிய , அவற்றின் பிரிவுகள் பற்றிய தெளிவானதொரு கட்டுரையாகவுமிருக்கின்றது.
இவ்விதம் கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு எனப்பல்வகை நூல்களை எடைபோடும் நூலாசிரியர் இலக்கியத்தின் அவ்வகைகள் பற்றிய தெளிவான புரிதல்களுடன் அவற்றை எடைபோடுவதை நன்கு அவதானிக்க முடிகின்றது. இது இம்மதிப்புரைகளின் தொகுப்பில் நான் அவதானிக்கும் முக்கியமான பண்புகளிலிலொன்று.
அடுத்த முக்கியமான பண்பாக, சிறப்பாக நான் கருதுவது அவர் இம்மதிப்புரைகளை எழுதப்பாவித்துள்ள மொழி. கவித்துவம் மிக்கதொரு மொழியில் அவர் இவற்றை எழுதியுள்ளார். அவ்வகையில் இவை ஏனைய பொதுவாக எழுதப்படும் மதிப்புரைகளிலிருந்தும் வேறுபடுகின்றன. இக்கவித்துவம் மிக்க மொழி இம்மதிப்புரைகளையே கவிதைகளாக்கி எம் வாசிப்புக்குச் சுவை சேர்க்கின்றன. உதாரணங்கள் சிலவற்றை இங்கு தருவது பொருத்தமானது. எழுத்தாளர் மாலினி மாலாவின் 'அர்த்தமுள்ள மெளனம்' பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
' எனது முதல் வாசிப்பில் எடை போட்டேன். எடுகோள் தவறானால், எடையும் தவறாகும். தராசு பிழைத்தால் தங்கத்தின் தரம் , எடை எல்லாமே பிழையாகும் என்பதனை எனது இரண்டாவது வாசிப்பின்போது உணர்ந்து கொண்டேன்' இவ்வரிகளைக் கீழுள்ளவாறெழுதினால் அவையொரு கவிதை வரிகளாகி விடுகின்றன.
' எனது முதல் வாசிப்பில்
எடை போட்டேன்.
எடுகோள் தவறானால்,
எடையும் தவறாகும்.
தராசு பிழைத்தால்
தங்கத்தின்
தரம் , எடை
எல்லாமே பிழையாகும்
என்பதனை
எனது இரண்டாவது வாசிப்பின்போது
உணர்ந்து கொண்டேன்'
எழுத்தாளர் மணிமேகலையின் 'தாயுமானவன்' நூல் பற்றிய மதிப்புரையில் பின்வருமாறு கூறுவார் (வரிகளைப் பிரித்து கவிதை வடிவில் தந்துள்ளேன்):
'போர் கிழித்த தேசம்தான் எமது தேசம்.
புன்னகை இழந்த முகங்கள்தான் எமது மக்கள்.
இருந்த போதும்
இந்த
மண்ணின் மணமும் மாறவில்லை.
மக்களின் மனமும் சோரவில்லை'
இவ்விதம் கவித்துவமொழியில் மதிப்புரைகள் அமைந்திருப்பது இத்தொகுப்பு நூலின் இன்னுமொரு முக்கியமான சிறப்பு ,பண்பு என்பேன்.
அடுத்த முக்கியமான பண்பாக நான் கருதுவது மதிப்புரைகளின் அளவு. சுருக்கமான ஆனால் தெளிவான மதிப்புரைகள். மதிப்புரைகள் அனைத்தும் சுருங்கக் கூறி விளங்க வைப்பவை. மதிப்புரைகள் அனைத்தும் தேவையற்ற அலட்டல்கள் தவிர்த்து நேரடியாக எடுத்துக்கொண்ட நூல் பற்றிய எண்ணங்களை முன் வைக்கின்றன.
இவை மூன்றும் இம்மதிப்புரைகளின் தொகுப்பு நூலின் முக்கிய பண்புகளாக எனக்குத் தோன்றுகின்றன. இம்மதிப்புரைகளின் தொகுப்புக்கு ஆசிரியர் வைத்த தலைப்பும் பொருத்தமான தலைப்பாகவே உணர்கின்றேன். 'தராசு முனைகள்' - தலைப்பு பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர் 'தராசு முனை என்றும் நீதி வழுவாத தீர்ப்புகளையே இங்கே வழங்கியிருக்கின்றது என்ற சுய நினைவோடு இத்தால் உறுதி கூறுகிறேன்' என்று கூறுகின்றார். தராசுகள் பொருட்களை எடைபோடுவன. இத்தராசோ இலக்கியத்தை எடை போடுகின்றது. நியாயமாகவே எடை போடுகின்ற்து.
7. மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' பற்றிய குறிப்புகள்!
['பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்த மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுனனின் 'வேர் மறந்த தளிர்கள்' நாவலுக்கு எழுதிய அணிந்துரை. நூலாசிரியர் இந்நாவலை எழுதிய சில ஆண்டுகளில் மறைந்து விட்டார். நூல் வெளியானதோ இல்லையோ தெரியவில்லை.]
ஓரிலக்கியப் படைப்பென்பது எவ்வகையானதாகவிருக்க வேண்டும் என்பது பற்றிப் பல்வேறு கருத்துகளுண்டு. கலை மக்களுக்காக என்றும் , கலை கருத்துக்காகவென்றும் அன்றிலிருந்து இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கும் தர்க்கம் முடிந்தபாடில்லை. இது இனியும் தொடரும். என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு பாணிகளில் படைக்கபபடும் படைப்புகள் அனைத்துமே பல்வேறு படிநிலைகளில் இருக்கும் வாசகர்களுக்கேற்ப படைக்கப்படுகின்றன. அந்த வகையில் அவற்றின் தேவையும் எப்பொழுதுமிருக்கும். குழந்தைகளுக்காகப் படைக்கப்படும் குழந்தை இலக்கியத்தின் தேவையினை யாரும் மறுப்பதில்லை. அது போலவே ஜனரஞ்சக இலக்கியத்துக்கும், தீவிர இலக்கியத்துக்குமான அவசியமுண்டு. என்னை எப்பொழுதும் ஆச்சரியப்பட வைக்குமொரு விடயமென்னவென்றால், சிறுவர் இலக்கியம், ஜனரஞ்சக இலக்கியம் என்று படிப்படியாக வளர்ந்து பின்னர் தீவிரமான இலக்கியத்தினுள் பிரவேசித்துப் படைப்புகளை வழங்கும் பல படைப்பாளிகள் தாம் கடந்து வந்த படிகளை ஒதுக்கிவிடும் வகையில் கருத்துகளைத் தெரிவிப்பதுதான். எல்லா வகையான படைப்புகளின் தேவை மிகவும் அவசியமென்று கருதுபவன் நான். படைப்புகள் எந்த வகையான 'இஸங்களை'ப் பின்பற்றினாலும், அவை மானுட இருப்பைத்தான் தம் பாணியில் கூறுகின்றன. ஒரு நவீன ஓவியம் ஓர் உழைப்பாளியின் நிலையினை யதார்த்தவாதப் பாணியில் வெளிப்படுத்தலாம்; மிகையதார்த்தவாதப் பாணியில் வெளிப்படுத்தலாம்; கியூபிசப் பாணியில் வெளிப்படுத்தலாம். பாணி எதுவாக இருந்தாலும் அவை வெளிப்படுத்துவது ஓர் உழைப்பாளியின் நிலையினைத்தான். அதுபோல்தான் இலக்கியப் படைப்புகள் விடயத்திலும் , அவை எந்தப் பாணியில் இருந்தாலும் கூறும் பொருள் ஒன்றாகவிருக்கலாம். அவற்றை உள்வாங்கும் வாசகர்களின் படிநிலைக்கேற்ப படைப்புகளின் தேவையுமிருக்கும். அந்த வகையில் அவை முக்கியத்துவமுடையன.
என்னைப் பொறுத்தவரையில் நான் அனைத்து வகையிலான படைப்புகளையும் விரும்பிப் படிப்பேன். எல்லா வகைகளிலும் பிடித்தவையுமுள்ளன; பிடிக்காதவையுமுள்ளன. படைப்புகள் எவ்வகையினதாகவிருந்தாலும், அவை வாசிக்கும்போது வாசிப்பவர் நெஞ்சில் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியமானது. எனக்குத் தனிப்பட்டரீதியில் நெஞ்சில் புத்துணர்ச்சியினை, இருப்பில் நம்பிக்கையினை வெளிப்படுத்தும் படைப்புகள், இயற்கையை, மானுடர் சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளை வெளிப்படுத்தும் படைப்புகள், இருப்பு பற்றிய சிந்தனையைத் தூண்டும் படைப்புகள் இது போன்ற படைப்புகள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் சிந்தனைத் தெளிவு மிக்க மகாகவி பாரதியின் எழுத்து எப்பொழுதுமே என்னைக் கவரும். ஈழத்து எழுத்தாளர் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) துள்ளுதமிழ் நடை மிகவும் பிடிக்கும். தத்தயேவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், எமிலி சோலா, கு.அழகிரிசாமி, எம்.டி.வாசுதேவன் நாயர், அதீன் பந்த்யோபாத்யாய, தகழி சிவசங்கரன்பிள்ளை, பொற்றேகாட், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சிவராம் காரந்த் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் பிடிக்கும்.
வே.ம.அருச்சுனன் – மலேசியாஇலக்கியப்படைப்புகள் பற்றி இவ்விதமான எண்ணங்கள் கொண்டவன் நான். இந்த அடிப்படையில் எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் 'வேர் மறந்த தளிர்கள்' படித்தபொழுது என் சிந்தையிலுதித்த எண்ணங்களிவை. முதலில் இந்த நாவல் பல தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறது. நாவல் கூறும் கதை இதுதான்: கதையின் நாயகன் பார்த்திபன். நல்ல பதவியில் இருக்கும் பெற்றோரின் ஒரே செல்லப்பிள்ளை. படித்து வளர்ந்து, நல்ல பணியில் இருப்பவன். போதை வஸ்து பாவிக்கும் நண்பர்களின் சகவாசத்தால் சீரழிந்து, மது போதைக்கு அடிமையாகி, சிறைசென்று திருந்தி மீண்டு வருகின்றான். வருபவனுக்கு முன்னர் பெண் கொடுக்கத் தயாராகவிருந்த உறவினர்கள் எல்லாரும் , சிறை சென்று மீண்டவனுக்குப் பெண் கொடுக்கத் தயங்குகின்றார்கள். இறுதியில் நண்பன் கோமகனின் உதவியால் அநாதை விடுதியொன்றிலிருந்து நல்லதொரு பெண் அவனுக்கு மனைவியாகக் கிடைக்கின்றாள். இதுதான் நாவலின் பிரதான கதைக்களம். நாவல் சரளமானதொரு நடையில் சுகமாகப் பயணிக்கிறது. கதை பின்வருமாறு முடிகிறது:
'மனிதன் எப்படி எப்படியெல்லாமோ வாழநினைக்கிறான். ஆனால், நம்மைப் படைத்த இறைவன், இப்படித்தான் வாழவேண்டு என்று நியதியை ஒவ்வொரு மனிதனுக்கும் நீதியாக அமைத்துக் கொடுக்கிறான்! இன்னாருக்கு இப்படிதான் வாழ்வு அமையும் என்பது ஆண்டவன் கட்டளை. இறைவன் கொடுத்ததை மனிதன் தடுக்க முடியாது! இதை உணர்ந்து நடக்கும் மனிதன் எந்நாளும் மகிழ்வுடன் வாழ்கிறான்! இதோ, ஆண்டவன் ஆசியுடன் புதுவாழ்வை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கிவிட்ட அன்பு மகன் பார்த்திபன் மருமகள் தமிழரசி ஆகியோரைப் பெற்றோர் தினகரன் அம்பிகை தம்பதியினர் பூரிப்புடன் பார்க்கின்றனர்! அவர்கள் மட்டுமா பூரிப்புடன் இருக்கின்றனர்? புதுமணத் தம்பதியினரை வாழ்த்த வந்த அணைத்து நல்லுள்ளங்களின் முகங்களிலும் பூரிப்பு நிறைந்து காணப்படுகிறது! பார்த்திபன் புத்துணர்ச்சியோடு தன் புது மனைவியின் கரங்களை இனிதாகப் பற்றியவாறு வானமே எல்லையாக வாழ்ந்து காட்ட பவிசுடன் நடந்து செல்கிறான்! தங்கள் உதிரத்தில் உதித்த மகன், இல்லறத்தில் நல்லறம் காண இறைவனின் ஆசிக்காகப் பெற்றோர் தங்களின் இருகரங்களையும் கூப்பி இறைவனிடம் மனதார இறைஞ்சுகின்றனர். அப்போது அவர்களின் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்பி வழிகிறது!'
இறை நம்பிக்கை மிக்கவர் என்பதை இது காட்டுகிறது. அது அவரது தனிப்பட்ட உரிமை. தன் எண்ணத்தை நாவலின் முடிவில் தெரிவிக்கின்றார். டால்ஸ்டாய், தத்தயேவ்ஸ்கி போன்ற மாபெரும் படைப்பாளிகள் கூடத் தமது படைப்புக்களின் இறுதியில் மதமே அனைத்துக்கும் தீர்வு என்று முடித்திருப்பார்கள். ஆனால் அவர்களின் அந்தக் கருத்தை வலியுறுத்தும் முடிவுகளைக் கொண்டு அவர்களது படைப்புகள் அளவிடப்படுவதில்லை. நாவலின் கதைப்பின்னல், நடை, பாத்திரப்படைப்பு, உரையாடல், பாத்திரங்களின் சிந்தனை விபரிப்பு என்று பல்வேறு விடயங்கள் காரணமாக அவர்களது படைப்புகள் சிறந்து விளங்குகின்றன. அந்த வகையில்தான் நானும் ஆசிரியரின் முடிவில் பிரதிபலிக்கும் மதம் பற்றிய அவரது சிந்தனையை மட்டும் வைத்துக்கொண்டு இந்த நாவலினை அணுகவில்லை.
நாவலில் என்னைக் கவர்ந்த விடயங்களாக நான் கருதுபவை: நாவல் தெரிவிக்கும் மலேசியத் தமிழர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், உயர்ந்த சிந்தனைகளை வலியுறுத்தும் அமைப்புகள், மானுடர்கள் , அம்மானுடர்களின் செயற்பாடுகள் மற்றும் அவ்வப்போது வெளிப்படும் நாவலாசிரியரின் சூழல் பாதுகாப்பு போன்றவற்றைப் பற்றிய எண்ணங்கள் போன்றவையே ஆகும். முதலில் நாவல் கூறும் மலேசியத் தமிழர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பார்ப்போம். அவை:
1. பார்த்திபனின் தாயான அம்பிகையின் பெற்றோர் இருவரும் கிள்ளான் பட்டணத்திற்கு அருகிலிருக்கும் மிட்லண்ஸ் தோட்டத் தொழிலாளர்கள். அப்பா அரிகிருஷ்ணன் ‘டிராக்டர்’ ஓட்டுனராகவும் அம்மா இருசம்மாள் வெளிக்காட்டு வேலை செய்யும் சாதாரண தொழிலாளியாகவும் பணி புரிகின்றார்கள். இவர்களினூடு அன்றைய காலகட்டத்து இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நிலை நாவலில் விபரிக்கப்படுகின்றது.
2. வார இறுதியில் தோட்டத் தொழிலாளர்கள் நாய்களுடன் பன்றி வேட்டைக்குச் செல்வது குறிப்பிடப்பட்டுள்ளது.
3. சிலாங்கூர் மாநிலம் பற்றியும், தமிழர்கள் அதிகமாக வாழும் 'காப்பார்' பட்டணம் பற்றியும் கூறப்படும் தகவல்கள். 'அறுபதாம் ஆண்டுகளில்,ஆளும் பாரிசான் கட்சியைச் சேர்ந்த ‘தொழிலாளர் அமைச்சர்’ டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தொடங்கி இன்றைய ‘மக்கள் கூட்டணி’ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக வீற்றிருக்கும் மாணிக்கவாசகம் வரையில் அதுவே இன்றுவரை நடைமுறையாகும்!' என்கின்றார் நாவலாசிரியர்.
4. 1941 ஆம் ஆண்டு ஐரோப்பிய தோட்ட முதலாளிகள் இந்தியத் தொழிலாளர்களுக்கு இழைத்த கொடுமைகள்,அநீதிகளை எதிர்த்து கிள்ளான் வட்டாரத்தில் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம்; மற்றும் முல்லை வேலை நிறுத்தம்தான் மலாயா வரலாற்றிலேயே மிகப் பெரிய வேலை நிறுத்தமாக இருந்துள்ளது. சமுகச் சீர்திருத்தவாதியான ஆர்.எச்.நாதன் தலைமையில் ஏறக்குறைய 15,000 முதல் 20,000 வரையிலான தோட்டத் தொழிலாளர்கள் இதில் பங்கு கொண்டுள்ளனர். கோலாசிலாங்கூர் மற்றும் பத்தாங் பெர்ஜுந்தை வட்டாரங்களில் உள்ள தோட்டங்களில் இருந்து சைக்கிள்கள் மூலம் கிள்ளானுக்கு வந்த தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்டு ஆதரவைத் தெரிவித்தனர்.
5. கிள்ளான், பந்திங், போர்ட்ஸ்வெட்டன்ஹாம், பத்துதீகா, மோரிப், லாசிலாங்கூர், ப்பார், பந்திங், ரவாங், குவாங், பத்துஆராங், கோலாலம்ர், தஞ்சோங்மாலிம், ஆகிய இடங்களில் தொழிலாளர்களுக்கும், போலீசாருக்குமிடையிலேற்பட்ட கடுமையான கைகலப்பு. இந்தியத் தொழிலாளரை அடக்க இந்தியத் துருப்புகளையே பிரிட்டிஷார் ஏவிய விபரம்;. பதினான்கு அம்சக் கோரிக்கையை ஒரு வாரகால அவகாசத்தில் ஏற்குமாறு அரசாங்கத்திற்கும், தோட்ட முதலாளிகளுக்கும் தொழிலாளர் தலைவர்கள் அனுப்பிய விபரம்.
6. மலேசியாவில் பிறந்திருந்தும் பிரஜா உரிமை இல்லாத தமிழர்கள் சொந்த நாட்டிலேயே நாடற்ற அகதிகளாக இருப்பது பற்றியும், அதன் காரணமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் நாவல் கூறுகிறது.
7. பிறப்புக்கான அத்தாட்சிப் பத்திரமில்லாத காரணத்தால் குழந்தைகளால் பள்ளி செல்ல முடியவில்லை; குழந்தைகள், தோட்டப்புறத்திலும் தனியார் நிலத்திலும் ஒட்டுக் குடும்பம் நடத்தும் யாதொரு வசதிகளும் இல்லாதத் தமிழ்ப்பள்ளிகளில் கல்வி கற்கும் தமிழ்க்குழந்தைகள் எதிர்நோக்கும் சிரமங்கள் பற்றியும் நாவல் குறிப்பிடுகிறது.
8. 1969 மே 13 நடைபெற்ற ‘கறுப்பு தினம்’ என்று கூறப்படும் இனக்கலவரம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
9. பிறப்புப் பத்திரம் இல்லாததால் பாடசாலை சேர முடியாது, கல்வி கற்க முடியாதிருக்கும் குழந்தைகள் நிலை, தோட்டப்பகுதிகளில் ஒட்டுக் குடும்பம் நடாத்தப்படும் வசதிகளற்ற தமிழ்ப்பள்ளிகள் பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளன.
10. இங்கிலாந்திடமிருந்து ஆகஸ்ட் 31, 1957 அன்று மலேசியா சுதந்திரமடைந்தது. அது பற்றி நாவலில் 'அவர்கள் இந்நாட்டைவிட்டு வெளியேறிய போது, அவர்களால் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் உரிய அரசியல் பொருளாதார,சமூக,கல்வி, சமய,மற்றும் இதர உரிமைகளைப் புதிய மலாயா அரசியலமைப்புச் சாசனத்தில் முழுமையாக உறுதிப்படுத்தாமல் சென்றுவிட்டதால் இந்தியர்கள் இன்று பல துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது 'காலனி'களாகவிருந்த நாடுகளிலிருந்து செல்லும்போது ஒன்றாகவிருந்த இந்தியாவைத் பாகிஸ்தான், இந்தியா என்று இரு பகுதிகளாகத் துண்டாடிவிட்டுச் சென்றார்கள். இன்றுவரையில் இருநாடுகளும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. இலங்கையை நீங்கியபோது, சிறுபான்மையினருக்கு மலேசியாவில் நடைபெற்றதுபோல் அரசியல் சாசனத்தில் உரிமைகளுக்கு உரிய உத்தரவாதமெதுவும் செய்யாமல் நீங்கினார்கள். விளைவு 'பேர்கர்கள்' ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தார்கள். இன்றுவரை ஈழத்தமிழர்கள் உரிமைப் போராட்டம் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற முப்பது வருட யுத்தத்தின்போது 40,000ற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பல ஆயிரக்கணக்கில் காணாமல் போனார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பெருமளவில் இலங்கையின் படையினரால் புரியப்பட்டன. இலங்கை அரசுக்கெதிரான யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் சபை வரையில் எதிரொலிக்கின்றன. இந்த விடயத்தில் மலேசியத் தமிழர்களின் நிலையும் ஒருவிதத்தில் ஈழத்துத் தமிழர்களின், குறிப்பாக மலையகத்தமிழர்களின் நிலையுடன் ஒத்திருப்பதை நாவலில் குறிப்பிடப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விதமான மலேசியத் தமிழர் வாழ்வில் நடைபெற்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை நாவல் பகிர்கின்றது. இது நாவலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றது.
இவ்விதமாக மலேசியத் தமிழர்களின் அரசியல் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தும் நாவலினை ஆசிரியர் தனது இலட்சிய வேட்கையினைப் பூர்த்தி செய்யும் வகையில் பாத்திரங்களை உருவாக்கிப் படைத்துள்ளார். பார்த்திபனின் தாயாரின் சித்தப்பா அறிவுமதி, அம்பிகையின் முதலாம் வகுப்பு ஆசிரியை திருமதி அழகம்மா, பட்டணத்தில் தனது சொந்த நிலத்தில் 'அன்பு இல்லம்' என்னும் அநாதை விடுதி நடாத்தும் ரீத்தா அம்மையார் ஆகிய பாத்திரங்களின் வாயிலாகத் தனது சமுதாய மேம்பாட்டுக்கான கருத்துகளை ஆசிரியர் முன்வைக்கின்றார். உதாரணமாகச் சித்தப்பா அறிவுமதி தனது சகோதரரின் புதல்வியான அம்பிகைக்கு கல்வி, தொடக்கம் சகல உதவிகளையும் வழங்கி உதவுகின்றார். நூல்களை வாங்கி எழுத்தாளர்களை ஆதரிக்கின்றார். ஆசிரியை அழகம்மாவோ சிறப்பாக, பொறுப்பாகக் கற்பித்து மாணவர்கள் தம்நிலையில் உயர உதவுகின்றார்.
இவற்றுடன் ஆசிரியர் இன்னுமொரு விடயத்தையும் பார்த்திபன் என்னும் பாத்திரத்திக்கு ஏற்பட்ட நிலையினூடு வெளிப்படுத்துவார். சந்தர்ப்ப சூழ்நிலையால் போதை மருந்துக்கு அடிமையாகிச் சிறைசென்று, மீண்டுவரும் பார்த்திபனை அவனது உறவினர்களே ஒதுக்குகின்றனர்.அது பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் 'ஒரு முறை எதிர்ப்பாராமல் செய்துவிட்ட தவற்றுக்கு மன்னிப்பே கிடையாதா? மனிதன் திருந்துவதற்கு வாய்பே தராத மனிதர்கள் என்ன மனிதர்கள்? சந்தர்ப்பச் சுழ்நிலை ஒரு நல்ல மனிதனையும் கெட்டவனாக்கிவிடலாம் அல்லவா?' என்று கேள்வி எழுப்புவார்.
முன்பே குறிப்பிட்டதுபோல் நூலாசிரியர் மேற்படி 'வேர் மறந்த தளிர்கள்' நாவலினைத் தனது சமுதாய முன்னேற்றத்துக்குரியதொரு சாதனாமாகவே படைத்துள்ளார். தனது கருத்தான மலேசியத் தமிழர்களின் முன்னேற்றத்தை வலியுறுத்துவதற்காக இந்நாவலை ஆசிரியர் படைத்துள்ளார். அதே சமயம் மலேசியத் தமிழர்களின் அரசியல் வரலாற்றுத் தகவல்களையும் நாவல் வெளிப்படுத்திக் கேள்விகள் எழுப்பும்வகையில் கதைப்பின்னலை, மிகவும் சரளமானதொரு நடையில் அமைத்துள்ள ஆசிரியரின் முயற்சி வெற்றியளித்துள்ளதென்பதையே நாவலை வாசித்து முடிக்கும் சமயத்தில் உணரமுடிகின்றது. அத்துடன் மலேசியத் தமிழர்கள் பற்றிய நல்லதொரு புரிதலையும் நாவல் ஏற்படுத்துகிறது. ஆவணமாகவும் விளங்குகின்றது. இவ்விதமாகக் கூறும் பொருளின் அடிப்படையில் நாவல் முக்கியத்துவமுள்ளதாகவிருக்கிறது.
ngiri2704@rogers.com
No comments:
Post a Comment