நடிகர் மம்முட்டியின் சிறந்த படங்களிலொன்று 'மதில்கள்' . ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தேர்தெடுத்த இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான் 25 தேர்வுகளில் ஒன்றாக இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் மம்முட்டியின் நடிப்பும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, இயக்கம் & தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் 1990ற்கான இந்திய மத்திய அரசின் நான்கு விருதுகளை இயக்கம், நடிப்பு , ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத் திரைப்படம் ஆகியவற்றுக்காகப் பெற்றது. சிறந்த நடிப்புக்காக மம்முட்டிக்கு இப்படத்திற்காகவும், 'ஒரு வடக்கன் வீரகதா'வுக்காகவும் கிடைத்தது. ஒரே நேரத்தில் இவ்விதம் இரு படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்ற ஒரே நடிகர் மம்முட்டியாக மட்டுமேயிருப்பார்.
இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீர். அது ஒரு குறுநாவல். அவரது சொந்தச் சிறை அனுபவத்தின் அடிப்படையில் உருவான சுயசரிதை நாவலாக அந்நாவல் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுவர்.
கதை இதுதான்: தேசத்துரோகக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற அரசியல் கைதி பஷீர். அங்கிருக்கும் பெண்களின் சிறையில் கொலைக்குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி நாராயணி. ஆண்களின் சிறைப்பகுதியையும், பெண்களின் சிறைப்பகுதியையும் பிரிக்கின்றது நெடுமதில்.
- இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் - |
பஷீருக்கும், நாராயணிக்குமிடையில் உரையாடல்கள் மூலம் காதல் மலர்கின்றது. படம் முழுவதும் நாராயணியைக் காட்டவே மாட்டார்கள். அவளது குரல் மட்டுமே கதையை நகர்த்திச் செல்லும். அக்குரலுக்குச் சொந்தக்காரி மலையாள உலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரும், அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கும் நடிகை K. P. A. C. லலிதா. 2022இல் மறைந்து விட்டார். அவரது குரல், அதில் தொனிக்கும் காதல், தாபம் எல்லாம் கேட்பவர் உள்ளங்களைக் கவர்வதுடன் உலுப்பியும் விடக்கூடியவை.
இவ்விதம் மதில்களால் பிரிக்கப்பட்டிருக்கும் காதலர்களின் உரையாடல்கள் மலையாள மொழி தெரியாத தமிழர்களுக்குப் புரியக்கூடியவை. கேட்கும் உள்ளங்களை உருக்கக் கூடியவை. இலக்கியச் சிறப்பு மிக்கவை.
![]() |
- எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் - |
அவர்கள் தாம் வந்து விட்டதை அறிவிக்க சிறு சுள்ளிகளை உயரத்தில் எறிவார்கள். மதிலுக்கு மேலால் அவ்விதம் சுள்ளிகள் எறியப்படுவதை வைத்து அவர்கள் தம் வருகையை அறிந்து கொள்வார்கள். இவ்விதம் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் , காதலிக்கும் அவர்கள் சந்திப்பதற்குத் திட்டம் போடுகின்றார்கள். இவ்விதமாக அவளைச் சந்திப்பதற்குத் தயாராகத் திட்டமிட்டிருக்கும் சமயத்தில் அரசியல் கைதியான பஷீர் , எதிர்பாராதவிதமாக விடுதலை செய்யப்படுகின்றார். அவரை எதிர்பார்த்து வழக்கம்போல் நாராயணி மதிலின் மறு பக்கத்தில் காத்து நிற்கின்றாள். தன் வருகையை பஷீருக்கு அறிவிக்க அவள் எறியும் சுள்ளிகள் மதிலுக்கு மேலால் எழுந்து , எழுந்து தாழ்கின்றன.
எதிர்பாராமல் விடுதலையான பஷீர் , நாராயணியிடம் விடை பெற முடியாமல் , ஆற்றாமையுடன் சிறைச்சாலையை விட்டு நீங்குகின்றார். மதிலுக்கு மேலால் எழுந்து . தாழும் நாராயணி எறியும் சுள்ளிகள் பஷீரை மட்டுமல்ல, படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் இரசிகர்களையும் வாட்டி எடுக்கும். அத்துடன் படம் முடிகின்றது. சொல்லிக்கொள்ளாமல் இடையில் முறியும் காதல் மிகுந்த துயர் மிக்கது. அதுவே இத்திரைப்படத்தின் அடிநாதம்.
படத்தை முழுமையாகப் பாருங்கள். ஒரு தடவை பார்த்ததும் வாழ்நாள் முழுவதும் நினைவுகளில் நின்று , கூட வரும் திரைப்படங்களில் ஒன்று மதில்கள் என்பதைக் காலம் உங்களுக்குப் புரிய வைக்கும்.
இங்குள்ள திரைப்படத்துக்கான போஸ்டரில் மதிலுக்கு அப்பாலிருக்கும் பெண் காட்டப்பட்டிருப்பாள். ஆனால் திரைப்படத்தில் இறுதிவரை அவள் காட்டப்படவே மாட்டாள்.
படத்துக்கான இணைப்பு - https://www.youtube.com/watch?v=mAHteeH_kOo
No comments:
Post a Comment