Friday, August 29, 2025

நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற அடூர் கோபால்கிருஷணனின் மலையாளத் திரைப்படம் 'மதில்கள்'! - வ.ந.கிரிதரன் -


நடிகர் மம்முட்டியின் சிறந்த படங்களிலொன்று 'மதில்கள்' . ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தேர்தெடுத்த இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான்  25 தேர்வுகளில் ஒன்றாக இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் மம்முட்டியின் நடிப்பும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, இயக்கம் & தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் 1990ற்கான இந்திய மத்திய அரசின் நான்கு விருதுகளை இயக்கம், நடிப்பு , ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத்  திரைப்படம் ஆகியவற்றுக்காகப் பெற்றது. சிறந்த நடிப்புக்காக மம்முட்டிக்கு இப்படத்திற்காகவும், 'ஒரு வடக்கன் வீரகதா'வுக்காகவும் கிடைத்தது. ஒரே நேரத்தில் இவ்விதம் இரு படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்ற ஒரே  நடிகர் மம்முட்டியாக மட்டுமேயிருப்பார்.

இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீர்.  அது ஒரு குறுநாவல். அவரது சொந்தச் சிறை அனுபவத்தின் அடிப்படையில் உருவான சுயசரிதை நாவலாக அந்நாவல் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுவர்.

கதை இதுதான்: தேசத்துரோகக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற அரசியல் கைதி பஷீர். அங்கிருக்கும்  பெண்களின் சிறையில் கொலைக்குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி நாராயணி.   ஆண்களின் சிறைப்பகுதியையும், பெண்களின் சிறைப்பகுதியையும் பிரிக்கின்றது நெடுமதில்.

(பதிவுகள்.காம்) பேராசிரியர் இரமணிதரன் கந்தையாவின் 'டிஜிட்டல்' ஓவியங்கள் (1) - இலங்கைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள்!

 - பேராசிரியர் க.கைலாசபதி -

ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இரமணிதரன் கந்தையா, சித்தார்த்த சே குவேரா என்னும் பெயரில் சிறுகதை, கவிதை எழுதி வருபவர். பதிவுகள் இணையத் தளத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இடம் பெற்ற விவாதத்தளத்தில் திண்ணை தூங்கி என்னும் பெயரில் விவாதங்கள் பலவற்றில் பங்கு பற்றியவர். 

'டிஜிட்டல்' வடிவில் மெருகூட்டப்பட்ட புகைப்படங்கள்!


- வ.ந.கிரிதரன் -

நண்பர் எழுத்தாளர் இரமணிதரன் கந்தையாவின் டிஜிட்டல் ஓவியங்களில் மனத்தைப் பறிகொடுத்த நான், என் புகைப்படங்களை அனுப்பியதும் , தயங்காமல் உடனடியாக அவற்றையும் மெருக்கூட்டி , டிஜிட்டல் ஓவியங்களாக்கி அனுப்பியிருந்தார். நன்றி இரமணி.
 
எழுத்து (சிறுகதை, கவிதை) , 'டிஜிட்டல் ஓவியம்' எனத் தன் கைவண்ணத்தைக் காட்டி வரும் நண்பர் இரமணிதரன் கந்தையாவுக்கு நன்றியும் , வாழ்த்துகளும்.

Wednesday, August 27, 2025

என் அபிமான நடிகர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டும்! வருவார்!


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. அவரது நடிப்பு நெஞ்சை நிறைப்பது. அண்மைக்காலமாக அவர் உடல் நலமற்று இருப்பதாகவும், தற்போது நலம்டைந்து வருவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்ற்ன.  எந்த வேடமென்றாலும் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் மிக்கவர். அவரது குரலும், சிரிப்பும், நடிப்பும் எப்போதும் பார்ப்பவருக்கு இன்பத்தைத் தருவன.  விரைவில் பூரண நலத்துடன் மீண்டும் மம்முட்டி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.  வைக்கம் முகம்மது பஷீரின் குறுநாவலான 'மதிலுகள்' திரைப்படக் காட்சி. மதிலுகள் மம்முட்டிக்குத் நடிப்புக்காகத் தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். மம்முட்டி மூன்று தடவைகள் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்முட்டி CBI துப்பறியும் அதிகாரியாக நடித்திருக்கும் மலையாளத்திரைப்படங்கள் புகழ்பெற்றவை. எனக்கும் அவை மிகவும் பிடிக்கும். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தில் நடித்ததற்காகவும் இவர் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கின்றார். நடிகர்  மம்முட்டி ஆரம்பத்தில் சட்டத்தில் இளங்க்லைப் பட்டம் பெற்று வழக்குரைஞராகப் பணியாற்றி நடிக்க வந்தவர் என்பது இவரைப்பற்றிய இன்னுமொரு தகவல்.

Monday, August 25, 2025

கவிதை: குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -



 * ஓவியம் - AI

குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது. 
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள் 
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து  
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு 
வந்து விடுகின்றன.
இவற்றை இம்முறை எவ்விதம் சமாளிக்கப் போகின்றேன்
என்பது பற்றிய எண்ணங்களே 
என் சிந்தையெங்கும் வியாபிக்கத்தொடங்குகின்றன.

நானும்தான் பல தடவைகள் முயற்சி செய்து பார்த்து விட்டேன்,
இம்முறையாவது குளிர்காலத்துடன் ஒரு 
நட்பு ஒப்பந்தம் செய்து 
நிம்மதியாக இருந்து விடுவோமேயென்று.
 எண்ணங்கள் எல்லாமே 
என்னைச் சுற்றிக் குளிர்காலம் 
தன்கரங்களை விரிக்கும் அத்
தருணத்தில் ஓடியொளிந்து விடுகின்றன.

அடுத்தவருடமாவது 
அதனுடன் ஓர் ஐக்கியம் ஏற்பட வேண்டும்.
ஏற்படுமா? என்னும் எண்ண்ங்கள் பெருக,
இம்முறை அதனுடன் நட்பு பாராட்டும் 
எண்ணங்களைத்  தவிர்த்து விடுகின்றேன்.
அதனுடான போருக்கு என்னைத்
தயார்படுத்திக்கொள்கின்றேன்.

'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின் 'இருபத்து நான்காம் வயதில் பாரதி' பற்றி.. (பகுதி 4 - இறுதிப்பகுதி) வ.ந.கிரிதரன் -


அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும்.  அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும்.  அவற்றை ஆராய்வதற்கு முதல் ஜோதிகுமார் பாரதியாரின் எழுத்தின் நோக்கம், எழுத்தின் தன்மை பற்றிச் சிறிது கவனம் செலுத்துகின்றார். 

பாரதியின் எழுத்தின்  நோக்கமும், தன்மையும்

பாரதியாரின் எழுத்தின் முக்கிய பண்பாக அவதானிக்கக்கூடியது அவரது ஆழமும், எளிமையும் கூடிய மொழி நடை.  உதாரணத்துக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையைக் கூறலாம். பொருள் முதல்வாதம், கருத்து முத்ல்வாதம் பற்றிய தர்க்கமே அதன் அடிநாதம். ஆனால் அதனைக்கண்டடைவது முறையான, தர்க்கமொன்றின் மூலமே சாத்தியம். ஆனால் அவர் அக்கவிதையில் பாவித்துள்ள மொழி நடை என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. அதனால் விளையும் முக்கிய நன்மைக்களிலொன்று - வாசிப்பின் பல்வேறு படி நிலைகளிலுள்ள வாசகர்களாலும் இக்கவிதையை எளிதாக வாசிகக் முடியும். ஆனால் , புரிதல்தான் அவரவர் வாசிக்கும், சிந்திக்கும் திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேறுபடும். 

Saturday, August 23, 2025

ஜெயகாந்தனின் 'ஞானரதம்' கவிதை - 'நிழல்'


எழுபதுகளில் வெளியான 'ஞானரதம்' சஞ்சிகையில் வெளியான எழுத்தாளர் ஜெயகாந்தனின் கவிதை இது. இக்கவிதை மீதான என் புரிதல் கீழே:
 

மானுட வாழ்வின் பொருள் மீதான ஆசையினை ஒளியாகக் கவிஞர் சித்திரித்திருக்கக் கூடும். விட்டில்கள் ஒளி நாடிச் சென்று மாய்வதைப்போல் மானுடரும் பொருள் தேடி ,அதில் மூழ்கி மாய்ந்து போகின்றார்.
 
ஆனால், நான் இருப்பின் தன்மையை விளங்கியவன். ஒளிநாடிச் செல்லும் விட்டில் அல்லன். எனக்கு வழி காட்டிட விளக்கு (செல்வம் பெருக்க அறிவுரை கூறும் வழிகாட்டி ) தேவையில்லை. எனக்குத் தேவையெல்லாம் எனக்குப் பின்னால் நீண்டிருக்கும் நிழலைக் காட்டும் விளக்கொன்றே.
 
நிழல் என்பது நிஜம் அல்ல. நிஜம் போல் தெரியும் நான் உண்மையில் என் பின்னால் நீண்டிருக்கும் நிழல் போன்றவன். நிஜமற்ற நிழல் போன்றதுதான் மானுட இருப்பும். நிஜமென்று நாம் நம்பும் மானுட இருப்பும் ஒருவகையில் நிழல்தான். அதனை எனக்கு வெளிக்காட்ட, புரியவைக்கக்கூடிய விளக்குத்தான் (குரு போன்ற வழிகாட்டியே) எனக்குத் தேவை. 
 
இப்படியும் புரிந்து கொள்ளலாம். உங்கள் புரிதல் எப்படியோ? 

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...