Monday, September 1, 2025

ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியான முதலாவது கனடாத் தமிழ் நாவல் (மின்னூல்) வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' . ஆங்கில மொழிபெயர்ப்பாக , அச்சில் வெளியான முதலாவது கனடாத் தமிழ் நாவல் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத்ரா றொட்ரிகோ.  இம்மொழி பெயர்ப்பு நூலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று ஸ்கார்பரோ நகரில் நடைபெறவுள்ளது.இது பற்றிய அறிவிப்பினை Tamil Arts Collective விடுத்துள்ளனர். அவ்வழைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "The publication of the 'Prison of Dreams' quintet marks a historic moment in Canadian Tamil literature, as it is the first book length translations of a Tamil novelist  published in Canada." அதாவது 'கனவுச்சிறை’ஐந்து பாகப் புதினத் தொகுப்பு கனடாவில் வெளிவருவது, கனடியத் தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஏனெனில், இது கனடாவில் வெளியிடப்பட்ட முதல் முழுநீளத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பு ஆகும்.' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவகாந்தனின் கனவுச்சிறை மகா  நாவல். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் முக்கிய படைப்பு. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதுதான் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் முழுநீள கனடாத்  தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பா?  அப்படிக்கூறுவதற்கில்லை.  எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'தமிழ் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்துக்கு எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மின்னூற் பதிப்பு ஏறகனவே அமேசன் கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது. 

Saturday, August 30, 2025

இளைஞர்களே! சிந்தியுங்கள்! செயற்படுங்கள்! மாற்றங்களை, ஏற்றங்களை ஏற்படுத்துங்கள்! - நந்திவர்ம பல்லவன் -

[பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள நந்திவர்மப்பல்லவனின் கட்டுரை.]

இந்தப் பதிவு இளைய தலைமுறையினருக்கானது. சமுதாயப் பிரக்ஞை மிக்க, தொலை நோக்குச் சிந்தனை மிக்க இளைய தலைமுறையினருக்கானது. 

தமிழ் இளைஞர்களே!  நீங்கள் செயற்பட வேண்டிய தருணமிது. தமிழ்த் தேசியத்தைப் பற்றிக் கவலைப்பட அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அவர்கள் வழியில் செல்லட்டும். ஆனால் தமிழர்களின் வர்க்க விடுதலை, சமூக விடுதலை பற்றிக் கவலைப்படுவதற்கு , செயற்படுவதற்கு யாருளர்? தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது. வடக்கில் அது போன்ற அமைப்பொன்றும் இல்லை. அத்தகைய மக்கள் விடுதலை  அமைப்பொன்றின் தேவை உள்ள காலகட்டம் இது.  அதன் பெயர் மக்கள் விடுதலை அணி,  மக்கள் விடுதலை அமைப்பு  என்று  கூட இருக்கலாம். இளைஞர்களே1 சிந்தியுங்கள்! இப்பதிவு உங்களில் யாருக்காவது ஒரு பொறியினைத் தட்டி விடுமானால் அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கம்.

நீங்கள் ஒவ்வொருவரும் வாழும் , உங்கள் ஊரில் உள்ள மக்களைப் பாருங்கள். சமூகப் பிரிவுகள் , வர்க்கப்பிரிவுகளாக அவர்கள் பிரிந்து கிடக்கினறார்கள்.  அவர்களின் வர்க்க விடுதலை பற்றி, சமூக விடுதலை பற்றிச் சிந்திப்பவர்கள் யார் இருக்கின்றார்கள்? அவர்களைப் பற்றித் தொலை நோக்குடன் சிந்தியுங்கள். அவர்களில் ஒருவர்தான் நீங்களும். சமூகப்பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கும் நீங்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக ஒன்றிணைந்துதான் இருக்கின்றீர்கள். வர்க்கமாக ஒன்றிணைவதை  உங்களுக்கிடையில் நிலவும் சமூகப் பிரிவுகள் தடுத்து நிற்கின்றன. அதைப் புரிந்து   கொள்ளுங்கள். செயற்படுங்கள்.

நீங்கள் வாழும் கிராமங்களில், ஊர்களில் நீங்கள் இவ்விடயத்தில் இளையவர்களாக ஒன்றிணைந்து பல ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்யலாம்.சமூக, வர்க்கப்பிரிவுகளை  மக்களிடத்தில் எடுத்துரைத்து, அவை நீக்கப்படுவதன் அவசியம் பற்றிய கூட்டங்கள் நடத்தலாம். அடிக்கடி கருத்தரங்குகள் நடத்தலாம், அவை சம்பந்தமான நூல்களை, பத்திரிகைகள் உள்ளடக்கிய நூல் நிலையங்களை அமைக்கலாம். இலாப , நோக்கற்ற அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலமும் இப்பணிகளைச் செய்யலாம்.

நெஞ்சை அள்ளும் 'மதில்கள்' உரையாடல்! அடூர் கோபாலகிருஷ்ணனின் செதுக்கிய திரைமொழி!


அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில், திரைக்கதையில், தயாரிப்பில் வெளியான மதிலுகள் (மதில்கள்) மலையாளத் திரைப்படத்தின் மூலக்கதை எழுத்தாளார் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியது. அவரது சொந்த அனுபவங்களையொட்டி எழுதிய நாவலாகக் கருதப்படுவது 'மதில்கள்' குறுநாவல். 

நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற திரைப்படத்தில் (இயக்கம், நடிப்பும், ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத் திரைப்படம்) பஷீராக  மம்முட்டி நடித்திருப்பார். கதையின் பிரதான பெண் பாத்திரமான நாராயணியை படம் முழுவதும் வெளிப்படுத்த மாட்டார்கள். குரல்தான் அவரை அடையாளப்படுத்தும். குரலுக்குச் சொந்தக்காரி நடிகை K. P. A. C. லலிதா.  இவர் இயக்குநரும், தயாரிப்பாளருமான பரதனின் மனைவி. சாந்தம், அமரம் (இவரது கணவர் பரதன் இயக்கியது) ஆகிய படங்களில் நடித்ததற்காக இரு தடவைகள் இந்திய் அரசின் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மணிரத்தினத்தின் அலைபாயுதே, காற்று வெளியிடை ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை படத்தில் நடிகை ஷாலினியின் தாயாராக் நடித்திருக்கின்றார். இவரது மகன் சிதார்த் பரதனும் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவரை உணர்வுகளின்  இராணி என்பர். அவ்வளவுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பதில் வல்லவர் இவர்.

பஷீர் அரசியல் காரணங்களுக்காகத் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருப்பவர். நாராயணியோ கொலைக்குற்றத்துகாக ஆயுள் தண்டனை பெற்ற கைதி. இருவரையும் சிறைச்சாலை மதில் பிரிக்கின்றது. இருவருக்கிடையிலும் நட்பு , காதலுடன் கூடிய நட்பு மலர்கின்றது. இங்குள்ள காணொளியிலுள்ள உரையாடல் இத்திரைப்படத்தின் முக்கியமான ஒரு பகுதி. அடூர் கோபாலகிருஷ்ணனின் செதுக்கிய திரைமொழிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. 

Friday, August 29, 2025

நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற அடூர் கோபால்கிருஷணனின் மலையாளத் திரைப்படம் 'மதில்கள்'! - வ.ந.கிரிதரன் -


நடிகர் மம்முட்டியின் சிறந்த படங்களிலொன்று 'மதில்கள்' . ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தேர்தெடுத்த இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிப்புக்கான்  25 தேர்வுகளில் ஒன்றாக இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் மம்முட்டியின் நடிப்பும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடூர் கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, இயக்கம் & தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் 1990ற்கான இந்திய மத்திய அரசின் நான்கு விருதுகளை இயக்கம், நடிப்பு , ஒலிப்பதிவு & சிறந்த பிராந்தியத்  திரைப்படம் ஆகியவற்றுக்காகப் பெற்றது. சிறந்த நடிப்புக்காக மம்முட்டிக்கு இப்படத்திற்காகவும், 'ஒரு வடக்கன் வீரகதா'வுக்காகவும் கிடைத்தது. ஒரே நேரத்தில் இவ்விதம் இரு படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்ற ஒரே  நடிகர் மம்முட்டியாக மட்டுமேயிருப்பார்.

இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர் மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீர்.  அது ஒரு குறுநாவல். அவரது சொந்தச் சிறை அனுபவத்தின் அடிப்படையில் உருவான சுயசரிதை நாவலாக அந்நாவல் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுவர்.

கதை இதுதான்: தேசத்துரோகக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற அரசியல் கைதி பஷீர். அங்கிருக்கும்  பெண்களின் சிறையில் கொலைக்குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி நாராயணி.   ஆண்களின் சிறைப்பகுதியையும், பெண்களின் சிறைப்பகுதியையும் பிரிக்கின்றது நெடுமதில்.

(பதிவுகள்.காம்) பேராசிரியர் இரமணிதரன் கந்தையாவின் 'டிஜிட்டல்' ஓவியங்கள் (1) - இலங்கைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள்!

 - பேராசிரியர் க.கைலாசபதி -

ஒஹியோ மாநிலத்திலுள்ள சென்ரல் ஸ்டேட் யுனிவேர்சிடியில் (Central State University) சுற்றுச்சூழல் பொறியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) புகலிடத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இரமணிதரன் கந்தையா, சித்தார்த்த சே குவேரா என்னும் பெயரில் சிறுகதை, கவிதை எழுதி வருபவர். பதிவுகள் இணையத் தளத்தின் ஆரம்பக் காலகட்டத்தில் இடம் பெற்ற விவாதத்தளத்தில் திண்ணை தூங்கி என்னும் பெயரில் விவாதங்கள் பலவற்றில் பங்கு பற்றியவர். 

'டிஜிட்டல்' வடிவில் மெருகூட்டப்பட்ட புகைப்படங்கள்!


- வ.ந.கிரிதரன் -

நண்பர் எழுத்தாளர் இரமணிதரன் கந்தையாவின் டிஜிட்டல் ஓவியங்களில் மனத்தைப் பறிகொடுத்த நான், என் புகைப்படங்களை அனுப்பியதும் , தயங்காமல் உடனடியாக அவற்றையும் மெருக்கூட்டி , டிஜிட்டல் ஓவியங்களாக்கி அனுப்பியிருந்தார். நன்றி இரமணி.
 
எழுத்து (சிறுகதை, கவிதை) , 'டிஜிட்டல் ஓவியம்' எனத் தன் கைவண்ணத்தைக் காட்டி வரும் நண்பர் இரமணிதரன் கந்தையாவுக்கு நன்றியும் , வாழ்த்துகளும்.

Wednesday, August 27, 2025

என் அபிமான நடிகர் விரைவில் பூரண நலத்துடன் மீண்டு வரவேண்டும்! வருவார்!


எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மம்முட்டி. அவரது நடிப்பு நெஞ்சை நிறைப்பது. அண்மைக்காலமாக அவர் உடல் நலமற்று இருப்பதாகவும், தற்போது நலம்டைந்து வருவதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்ற்ன.  எந்த வேடமென்றாலும் சிறப்பாகச் செய்யும் ஆற்றல் மிக்கவர். அவரது குரலும், சிரிப்பும், நடிப்பும் எப்போதும் பார்ப்பவருக்கு இன்பத்தைத் தருவன.  விரைவில் பூரண நலத்துடன் மீண்டும் மம்முட்டி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.  வைக்கம் முகம்மது பஷீரின் குறுநாவலான 'மதிலுகள்' திரைப்படக் காட்சி. மதிலுகள் மம்முட்டிக்குத் நடிப்புக்காகத் தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். மம்முட்டி மூன்று தடவைகள் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்முட்டி CBI துப்பறியும் அதிகாரியாக நடித்திருக்கும் மலையாளத்திரைப்படங்கள் புகழ்பெற்றவை. எனக்கும் அவை மிகவும் பிடிக்கும். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையை விபரிக்கும் திரைப்படத்தில் நடித்ததற்காகவும் இவர் இந்திய மத்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கின்றார். நடிகர்  மம்முட்டி ஆரம்பத்தில் சட்டத்தில் இளங்க்லைப் பட்டம் பெற்று வழக்குரைஞராகப் பணியாற்றி நடிக்க வந்தவர் என்பது இவரைப்பற்றிய இன்னுமொரு தகவல்.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...