Monday, September 8, 2025

ஓட்டாவாக் (Ottawa) காட்சிகள் - நீண்ட காலம் பதவி வகித்த கனடியப் பிரதமர்?



வில்லியம் லயன் மெகென்சி கிங் (William Lyon Mackenzie King) (1874–1950) நீண்ட காலம், 21 ஆண்டுகள் (1921–1926, 1926–1930, 1935–1948), கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். இவரே முதியோர் பென்சன் (old-age security), வேலையிழந்தோருக்கான காப்பீடு (Unemployment Insurance) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஆவார். இங்குள்ள சிலை இவருடையதுதான் .
ஓட்டாவா செனட் கட்டடத்துக்கு அருகாமையில், வெளியில் அமைந்துள்ள இவரது சிலையே இது. இதற்கு முன் நிற்பவர் வேறு யாருமல்லர். அடியேனே.

ஓட்டாவாக் (Ottawa) காட்சிகள் - படைவீரர்களின் நினைவுச்சின்னம் (1812 - 1815)


ஏழு வீரர்களைக்கொண்ட இந்நினைவுச் சின்னம் கனடா வரலாற்றில் முக்கியத்துவம் மிக்கது. அமெரிக்காவுக்கும் , பிரிட்டிஷ் பேரரசின் கீழிருந்த கனடாவுக்கும் இடையில் நடைபெற்ற போரை நினைவு கூரும்பொருட்டு அமைக்கப்பட்ட சிலை. Triumph Through Diversity (பல்லின மக்களினூடு கிடைத்த வெற்றி). என்னும் தலைப்பில் அமைக்கப்பட்ட சிலை. இந்த யுத்தம் 1812 தொடக்கம் 1815 வரையில் நடைபெற்றது. 
 
கனடியப் படையினர், பிரிட்டிஷ் படையினர், கனடாவின் பூர்விகக் குடிப்போராளிகள் (மேட்டிஸ், பூர்விக முதலாவது தேசப் (First Nations) போர்வீரர் , பிரெஞ்சுக் கனடியப் படைவீரர், ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த தன்னார்வப்போராளிகள், றோயல் கடற்படையினர் எனப் பலர் இணைந்து அமெரிகக ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடினார்கள். இவ்வேழு பிரிவினரையும் நினைவுகூரும் வகையில் , கனடியச் செனட் கட்டடத்துக்கு அண்மையில் வடிவமைக்கப்பட்ட இந்நினைவுச் சின்னத்தில் காணப்படும் , ஏழு வகைப்பிரிவினரையும் நினைவு கூரும் வகையில் ஏழு வீரர்களில் உருவங்கள் இச்சிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

Thursday, September 4, 2025

நிழல்!


நேற்று ஒரு திருமணத்துக்காக, டொரோண்டோ நகரிலிருக்கும் காசாலோமா (Casaloma) சென்றிருந்தபோது அந்தி சாய்ந்து இருள் கவிந்திருந்தது.
 
நிகழ்வு முடிந்து திரும்புகையில் வாகனத்தரிப்பிடத்தில் தற்செயலாக, அங்கிருந்த மின்குமிழ் வெளிச்சத்தில், நான் நின்றிருந்த தரையில் தென்பட்ட என் நிழல் இது.
ஒரு சாய்வில் , சிறிது நீண்டிருந்த நிழலைப் பார்த்ததும் , ஓவியமொன்றைப் பார்க்கும் உணர்வு எனக்கேற்பட்டது. உடனேயே அவ்வனுபவத்தை என் அலைபேசிக் கமராவில் அகப்படுத்திக்கொண்டேன்.
 
எனைவிட்டு என்றும் பிரியாத 
என் உறவே!
இன்றுனைப்பார்த்ததும்
ஒரு கணம் மயங்கினேன்.
 
ஓவியர் ஒருவர்தம் கைவண்ணத்தில்
நிசம் தன்மேல் ஏற்படுத்தப்பட்ட
கற்பனை உணர்வால், 
படைப்பாற்றலால்,
தரையில் கிடக்குமொரு சித்திரமாக
நீண்டிருந்தாய்.
நிழலே நான் நெஞ்சிழந்தேன்.
 
உனைப்பார்த்து ஒரு கணம் சொக்கினேன்.
 
தன் நிழல் கண்டு
தனை மறந்த எழுத்தாளன்
இவன் ஒருவனாகவே
இருக்கக் கூடும்.

காசலோமா (Casa Loma). பற்றிச் சில வரிகள்...


நேற்று ஒரு திருமணத்துக்காக டொரோண்டோவில் பிரபலமான கட்டடங்களில் ஒன்றான 'காசலோமா' சென்றிருந்தேன். குறிப்பிட்ட அளவிளவிலான விருந்தினர்களை உள்ளடக்கிய திருமணம். அப்போது மேற்படி காசாலோமா எடுத்த சில புகைப்படங்கள் இவை.
 
'டொரோண்டோ' மாநகருக்கு வருகை தரும் எவரும் பார்க்கத் தவறாத கட்டடம் காச லோமா (Casa Loma). அரண்மனைபோன்ற பெரியதொரு மாளிகை. உண்மையில் அரண்மனையாகச் செல்வந்தர் ஹென்றி பெல்லட் (Sir Henry Pellatt) என்பவரால் 1911- 1914 காலகட்டத்தில் கட்டப்பட்ட மாளிகை. கோதிக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட இம்மாளிகை டொரோண்டாக் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் முக்கியமானதொரு கட்டடம்.  இக்கட்டடத்தை வடிவமைத்த கட்டடக்கலைஞர் E.J. Lennox .
 
98 அறைகளைக்கொண்ட மாளிகையில் 61 அடி உயரமான பெரிய மண்டபம், இரகசிய நடைபாதைகள், பந்துவீச்சு (bowling) அரங்கம், பணியாட்களர்களுக்கான சுரங்கப்பாதைகள், குதிரைகளைப் பராமரிக்கும் பகுதிகள் முக்கியமானவை.
 
முதலாம் உலக மகாயுத்தத்தைத்தொடர்ந்து , ஹென்றி பெல்லட் நிதிச்சிக்கலில் சிக்கியதால் , அவரால் அரசுக்குக் கட்ட வேண்டிய வருமானவரியைக் கட்ட முடியாமல் போனது. அதனால் அரசு அதனைத் தன் வசமாக்கியது. 
 

அதன்பின் பல வருடங்களாக, ஹொட்டல், கிளப், ஆய்வு நிலையம் எனப் பல்வேறு வழிகளில் பாவிக்கப்பட்டு வந்த இவ்வரண்மனை 2014ஆம் ஆண்டு தொடக்கம் Liberty Entertainment Group என்னும் அமைப்பினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. 
 
தற்போது சுற்றுலாத்தலமாகவும், அருங்காட்சியகமாகவும்ம் , நிகழ்வுகளுக்கான மண்டபமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வருடா வருடம் 650,000 ற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தரும் கட்டடமாக விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
காசலோமா - https://casaloma.ca/

Tuesday, September 2, 2025

எம்ஜிஆரின் உணவு, கல்விக்கான பங்களிப்புகள்!


எம்ஜிஆர் தனியார் பொறியியல் , மருத்துவர் கல்லூரிகளை அனுமதித்தையொட்டி அவரது எதிர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இவர்கள் விமர்சிக்கின்ற அளவுக்குத் தொலைநோக்கு அற்றவர்கள். எம்ஜிஆர் என்னும் மனிதருக்கு இருந்திருக்கும் தொலைநோக்கு இவர்களுக்கு இல்லையென்றே கருத வேண்டியிருக்கின்றது.

எம்ஜிஆர் அனுமதியளித்த தனியார் கல்லூரிகளை உருவாக்கியவர்கள் உழைத்திருக்கலாம். ஆனால் அவற்றை உருவாக்கியவர்கள் அவற்றில் 50 வீத மாணவர்களுக்கான அனுமதியை அரசுக்கு வழங்கினர். இவ்விதம் உருவான க்ல்லூரிகளைத் தமிழக அரசு உருவாக்க வேண்டுமென்றால் அதற்குப் பெருந்தொகை நிதி வருடா வருடம் தேவையாகவிருந்திருக்கும். அது அரசுக்கு மிகுந்த  நிதி நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். அதற்குப் பதில் பல்கலைக்கழக, பள்ளிப்படிப்பற்ற எம்ஜிஆர் , அதன் அனுபவத்தின் வாயிலாகக் கண்டடைந்த முடிவு அரச நிலங்களில் அரசு கல்லூரிகளை அமைப்பதை விட, அவற்றில் தனியார் அமைப்பதற்கு அனுமதி அளிப்பதன் மூலம் அரசின் பாரம் குறைகின்றது.  அதே சமயம் அவ்விதம் உருவாக்கப்படும் கல்லூரிகளில் 50 வீத மாணவர்களுக்கான அனுமதி அரசுக்குக் கிடைக்கின்றது. இது மிகவும் நல்லதொரு முடிவு. மேலும் அதிக அளவில் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் படிக்கும் வாய்ப்பும் ஏற்படுகின்றது.

இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் மலையாளத் திரைப்படப்பாடலொன்று - 'ஒரு நாலு நாளாய் என்னிலுள்ளே தீயாக' !


மலையாளத்திரைப்படங்களில் எனக்குப் பிடித்த ஒரு விடயம் - அது கலைப்படைப்பாக இருக்கட்டும் அல்லது வெகுசனப் படைப்பாக இருக்கட்டும், இயக்குநர்கள் இயல்பாக மானுடர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை உள் வாங்கிக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். அதற்கு நல்லதோர் உதாரணம் இந்தப்பாடல்.

மம்முட்டி, பார்வதி நடித்த 'கார்னிவல்' (1989) திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலிது. 'ஒரு நாலு நாளாய் என்னிலுள்ளே தீயாக' என்னும் இப்பாடல். இப்பாடல் எனக்குப் பிடித்ததற்கு முக்கிய காரணம்?

Monday, September 1, 2025

ஆங்கில மொழிபெயர்ப்பாக வெளியான முதலாவது கனடாத் தமிழ் நாவல் (மின்னூல்) வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' . ஆங்கில மொழிபெயர்ப்பாக , அச்சில் வெளியான முதலாவது கனடாத் தமிழ் நாவல் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர் தேவகாந்தனின் கனவுச்சிறை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு , மாவென்சி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் நேத்ரா றொட்ரிகோ.  இம்மொழி பெயர்ப்பு நூலின் வெளியீடு செப்டெம்பர் 6, 2025 அன்று ஸ்கார்பரோ நகரில் நடைபெறவுள்ளது.இது பற்றிய அறிவிப்பினை Tamil Arts Collective விடுத்துள்ளனர். அவ்வழைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "The publication of the 'Prison of Dreams' quintet marks a historic moment in Canadian Tamil literature, as it is the first book length translations of a Tamil novelist  published in Canada." அதாவது 'கனவுச்சிறை’ஐந்து பாகப் புதினத் தொகுப்பு கனடாவில் வெளிவருவது, கனடியத் தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ஏனெனில், இது கனடாவில் வெளியிடப்பட்ட முதல் முழுநீளத் தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பு ஆகும்.' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவகாந்தனின் கனவுச்சிறை மகா  நாவல். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் முக்கிய படைப்பு. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதுதான் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் முழுநீள கனடாத்  தமிழ்ப் புதின மொழிபெயர்ப்பா?  அப்படிக்கூறுவதற்கில்லை.  எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'தமிழ் நாவல் ஏற்கனவே ஆங்கிலத்துக்கு எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆங்கில மின்னூற் பதிப்பு ஏறகனவே அமேசன் கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகியுள்ளது. 

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...