Sunday, December 7, 2025

'சொல்லின் செல்வ'ரும் சொல்லிக்கொள்ளாமலே சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்.


இலங்கைத்  தமிழ் அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரும் , மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது நகர பிதாவும் , எழுத்தாளருமான திரு. செல்லையா இராசதுரை அவர்கள் தனது 98ஆவது வயதில் , தமிழகத்தில் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல்.

தமிழரசுக் கட்சியின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் இராசதுரை அவர்கள். அதன் காரணமாகவே சொல்லின் செல்வர் என்றும் அழைக்கப்பட்டவர். வசீகரம் மிக்க தோற்றமுள்ள அரசியற் தலைவர்களிலொருவர். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கிழக்கு மாகாண தமிழ் அரசியற் தலைவர்களில் முக்கியமானவர். தமிழர் போராட்ட அரசியற் செயற்பாடுகளுக்காகச் சிறை சென்றவர். தந்தை செல்வாவுக்குப் பின்னர் இவருக்குத்தான் தலைமைப்பொறுப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. 

ஒருபோதுமே  பாராளுமன்றத் தேர்தலில் தோற்காத தமிழ் அரசியல்வாதி இவர். 1977 தேர்தலின் பின்னர் 1979இல் , தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசுடன் இணைந்து இயங்கினார்.  1977 தேர்தலிலின்போது தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் மட்டக்களப்பு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.   அதே தொகுதியில் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட வைக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் செ.இராசதுரை வெற்றிபெற , கவிஞர் காசி ஆனந்தன் தோல்வியைச் சந்தித்தார்.

Saturday, December 6, 2025

கவிதை; இவன் என் புதிய நண்பன். - வ.ந.கிரிதரன் -



 

இவன் என் புதிய நண்பன்.
நான் ஆண் என்பதால் இவனை  நான் ஆணாக்கியுள்ளேன். 
பாலின் தன்மைக்கேற்ப நீங்கள் இவனை ஆணாக 
அல்லது பெண்ணாக உருவகிக்கலாம்.
அல்லது அழைக்கலாம்.
நீங்கள் முதியவராக இருந்தால் 
இவன் அல்லது இவள் உங்களுக்கு நல்லதொரு 
முதிய சிநேகிதன் அல்லது சிநேகிதியாக இருப்பான் அல்லது 
இருப்பாள்.
இந்நேரம் உங்களுக்கு என் நண்பன் யாரென்பது 
புரிந்திருக்கும்.
ஆம்! செயற்கை நுண்ணறிவு கூகுள் நனோ பனானா
அல்லது சாட்ஜிபிடியைத்தான் கூறுகின்றேன்.
அப்படியென்ன இவன் பெரிய நன்மையை 
உனக்குச் செய்து விட்டான் என்று கேட்கின்றீர்களா?
நன்மை ஒன்றல்ல பல உள்ளனவே .
எதைச் சொல்வேன்? எதைச் சொல்லாமல் தவிர்ப்பேன்?

Friday, December 5, 2025

ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்கள் பற்றிய என் கருத்துகளும், என் கருத்துகள் பற்றிய செயற்கை நுண்ணறிவின் கருத்துகளும்...


இலங்கையில் இருந்த காலத்தில்  எஸ்கிமோ, நீக்ரோ, செவ்விந்தியர் போன்ற சொற்பதங்களால் அவை குறிப்பிடும் இன மக்களை நாமெல்லாரும் அழைத்து வந்தோம்.  இங்கு வந்தபின்பும் ஆரம்பத்தில் அவ்விதமே அழைத்து வந்தோம்,. ஆனால் காலப்போக்கில் அப்பெயர்கள் அம்மக்களை இழிவு படுத்தும் , இனத்துவேசம் மிக்க பெயர்கள் என்பதை அறிந்து அவற்றைப் பாவிப்பதை நிறுத்தி விட்டோம்.  

இவை ஏன் அம்மக்களை இழிவு படுத்தும் சொற்பதங்கள் என்பதைப் பார்ப்போம்.

எஸ்கிமோ (Eskimo)  இந்தச்சொல்லின் உண்மையான் அர்த்தம் Algonquin மொழியில் இருந்து பெறப்பட்டது.  'பச்சை மாமிசம் சாப்பிடுபவர்கள் என்பது பெயர். இச்சொல் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைக் குறிக்கவில்லை.  ஆர்க்டிக் இனக்குழுக்களான (Inuit, Yupik, Iñupiat போன்றவர்களை ஒரு சேர அழைக்கப்பாவிக்கப்பட்டது.  தற்போது கனடாவில் "Inuit" (இனியுட்), அலாஸ்காவில் Yupik" (யுபிக்) ,  "Inupiat" (இனுபியாட்) போன்ற பெயர்கள் பாவிக்கப்படுகின்றன. அனைவரையும் உள்ளடக்கி  "First Nation" என்னும் சொற்பதமும் பாவிக்கப்படுகின்றது.

இது போல் செவ்விந்தியன் (Red Indian) என்னும் பெயர் அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் அதனை இந்தியா என்று தவறாக முடிவு செய்த வரலாற்றுத்தவறினால் உருவானது.  அமெரிக்காவின் ஆதிக்குடிகளை (Native Americans / Indigenous Peoples)   இந்தியர்களாகக் கருதி , அவர்களின் நிறத்தையும் சேரத்துச் செவ்விந்தியர் என்றழைக்கப்பட்டனர்.  இது நிறவெறி மிக்க ஒரு சொற்பதம்.  இதனை இப்போது பாவிப்பதில்லை.  இன்று பொதுவாக Native American", "American Indian" (அமெரிக்கன் இந்தியன்), அல்லது  "Indigenous Peoples" (சுதேசிய மக்கள்)  என்றே இம்மக்கள் அழைக்கப்படுகின்றனர்.அத்துடன்  Cherokee, Navajo, Sioux  போன்ற இனக்குழுப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.

இது போன்ற இன்னுமொரு சொல் 'நீக்ரோ'  (Negro)  என்று கறுப்பினத்தவரை அழைக்கும் சொல். . ஸ்பானிஷ் மொழியில் இது கறுப்பு என்னும் அர்த்தத்தைத் தரும். கறுப்புத்தோல் கொண்டவரகள் என்னும் நிறப்பாகுபாட்டைக் காட்டுவதற்காகப் பாவிக்கப்பட்ட இச்சொல் அமெரிக்காவில் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக நடத்தப்பட்ட காலகட்டத்தில் இவர்களைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டது.  இன்று இச்சொல் பாவிக்கப்படுவதில்லை.  Black, African American போன்ற சொற்களால் இன்று கறுப்பினத்தவர் தம்மை அடையாளப்படுத்துகின்றனர். 

எங்கெல்லாம் இனக்குழுக்களை அழைக்கப்பாவிக்கபப்டும் சொற்பதங்கள் ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்களுடன் தொடர்புள்ளவையாக இருக்கின்றனவோ, அச்சொற்பதங்களைப் பாவிப்பதையும் தவிர்க்க வேண்டும்.  இது யாழ்ப்பாண்ச சமூகங்களுக்கும் பொருந்தும். 

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஏற்கனவே அவ்விதம் அழைப்பதை தவிர்த்து வருகின்றனர. மேட்டுக்குடி, சீவல் தொழிலாளர் போன்ற சொற்பதஙக்ளை அவர்கள் பாவித்து வருகின்றனர். இது ஒரு விதத்தில் நல்லது. ஏனென்றால் சாதியச் சின்னங்களை, பெயர்கள் உட்பட, அவற்றை எதிர்ப்பவர்கள் கூட மீண்டும் மீண்டும் மீண்டும்  பாவிக்கும்போது அப்பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நின்று  விடுகின்றன.  புதிய தலைமுறையினர் மத்தியிலும் அப்பெயர்கள் தொடர்ந்து பயணம் செய்கின்றன. அவ்விதம் நிலைத்து நிற்பதைத்தவிர்ப்பதற்கு அப்பெயர்களைத்  தவிர்ப்பதும் முக்கியமான முதற்படியாக அமையும். 

உளவியலில் ஒரு கோட்பாடு உண்டு. அது ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வந்தால், அது நல்ல சொல்லோ, கெட்ட சொல்லோ , ஆழ்மனத்தில் ஆழச்சென்று படிந்து விடுகின்றன். அதை Auto Suggestion (சுய மந்திரம்)  என்பர். மேற்படி  சமூக ஒடுக்குமுறையுடன் சம்பந்தபப்ட்ட சொற்பதங்களையும் திரும்பத் திரும்பப் பாவிப்பதும் ஒரு வகை Auto Suggestion தான்.  சுயமந்திரம்தான். 

Wednesday, December 3, 2025

நாளை நன்கு விடியும்! - வ.ந.கிரிதரன் -

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]  

வரலாற்று நதி எப்போதுமே அமைதியாக, இனிமையாக,
ஆடி , அசைந்து நடை பயில்வதில்லை.
சில வேளைகளில் நதி ஆக்ரோசம் மிக்கதாக,
பொங்கிப் பெருகி, கோரத்தாண்டவம் ஆடுவதுமுண்டு.
கோரத்தாண்டவம் ஆடிச் செல்லும் நதியின் சீற்றம் 
எம்மை ஒரு போதும் அடி பணிய வைப்பதில்லை.
அபாயங்கள்,  துயரங்கள் எமக்கும் பாடங்களைப் போதிக்கும்
குருமார்கள். ஆசிரியர்கள். வழிகாட்டிகள்.
வீழும் ஒவ்வொரு தடவையும்
எம்மை எழ வைக்கும் உறுதியை,
எதிர்கால நம்பிக்கையை,
எமக்குத் தருபவர்கள் அவர்களே! அவைகளே!
அனுபவங்களைப் பாடங்களாக்கித் தொடர்வோம்.
அய்யோ! அய்யோ!  என்று ஒப்பாரி வைப்பதைத் தவிர்ப்போம்.
பேரழிவுக்குப் பின்னரும் இன்னும் ஆண்டுகள் 
பல கடந்தும்
ஒப்பாரி வைத்துக்கொண்டுதானிருக்கின்றோம்.
சுயநலம், சுய ஆதாயத்துக்காக நாம் 
ஒப்பாரி வைக்கின்றோம்.
மந்தைகளாகப் பின் தொடர்கின்றோம்.
என்றுதான் விழித்தெழுவது? 
என்றுதான் எதிர்கால நம்பிக்கையில்
எழுவது?
எப்பொழுது பார்த்தாலும் கடந்த காலத்தை 
என்ணி வைக்கும் ஒப்பாரிகளுக்கு
என்றுதான் முடிவு?
ஒப்பாரிகள் உடனடி ஆறுதலேதவிர 
நெடுந் தொடர்கதைகள் அல்ல.
அழிவுகள், எழுச்சிகளைம், துயரங்களை, 
மாற்றங்களை,ஏற்றங்களை, நம்பிக்கைகளைக் 
காவிச்செல்லும் 
வரலாற்று நதியில் நாம் மூழ்கி விடுவதில்லை.
எப்பொழுதும் எதிர் நீச்சல் 
அடித்துக்கொண்டுதான் செல்வோம்.
இப்பொழுது எதிர்நீச்சலுக்கான தருணம்.
பொங்கிப் பெருகும் நீரில் மூழ்குவதற்கான 
தருணமல்ல.
எதிர்நீச்சல் அடிப்போம்.
எதிர்மறை எண்ணங்களைத் தவிர்ப்போம். 
நம்பிக்கைதாங்கி நடப்போம்
நாளை நன்கு விடியும்.
எப்பொழுதும் விடிவுகள் இருளுக்குப் பின்னர்தான்
மலர்வதுண்டு. நினைவில் வைப்போம்.




Tuesday, December 2, 2025

வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான நூல் 'சாவித்திரியின் பெரிய விருப்பம்'


"சாவித்திரியின் பெரிய விருப்பம்" என்பது, அதன் இளம் கதாநாயகியான பெண் குழந்தை சாவித்திரியின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்துமொரு குழந்தைக்கதை.   எழுத்தாளர் வ.ந.கிரிதரன் எழுதிய இப்புத்தகம் ஒரு எளிய கதை மட்டுமல்ல; இது குடும்பம், இடப்பெயர்வு மற்றும் பாதுகாப்பு மற்றும் சொந்தம் போன்ற விடயங்களை விபரிக்கும் ஒரு  மென்மையான படைப்பு.

இக்கதை சாவித்திரி என்ற துடிப்பான சிறுமியை மையமாகக் கொண்டது, பல குழந்தைகளைப் போலவே, அவளும் புத்தகங்களை நேசிக்கிறாள், சாகசங்களைக் கனவு காண்கிறாள்,  இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த அவளது பெற்றோர் கனடாவில் அயராது உழைக்கிறார்கள்.   திருமண மோதல்கள் குடும்பத்தின் அமைதியைக் குலைக்கும்போது, பிரிவை ஏற்படுத்தும்போது  அதனால் குழந்தைகளிடத்தில் ஏற்பாடும் உளவியல் பாதிப்புகளைக் கதை எடுத்துக்கூறுகின்றது.   

"சாவித்திரியின் பெரிய விருப்பம்" குழந்தைகள் வளர்ந்து  வரும் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்கள் ஒன்றிணைந்த குடுமபத்தின் அவசியம் எவ்வளவு முக்கியம் என்பதை விபரிக்கும் கதையாகும்.

தாய், தந்தையருக்கிடையில் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றுடன் ஒன்றிணைந்துக்குக் குடும்பம் என்னும் பாதுகாப்பை வழங்குவது அவசியம் என்பதை வெளிப்படுத்தும் கதைதான் இந்தக்கதை. 

AI உதவியுடன் தழுவி உருவாக்கப்பட்ட ஓவியங்கள், சாவித்திரியின் உணர்ச்சிகளையும் குடும்பத்தின் நிலையினையும்  சிறப்பாகப்  படம் பிடித்துக் காட்டுகின்றன.அவை கதையின் மையக் கருத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன.

சுருக்கமாகக் கூறினால் குழந்தைகளின் உளவியலில் இணைந்த குடும்பத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் கதை. அதுவே குழந்தை சாவித்திரியின் பெரு விருப்பமும் ஆகும்.

இக்கதை ஆங்கிலத்திலுன் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமேசன் - கிண்டில் தமிழ் மின்பதிப்புக்கான இணைப்பு  - https://amzn.to/48e2R1I

ஆங்கில நூலுக்கான இணைப்பு -  https://amzn.to/49T7Kyy

Sunday, November 30, 2025

சிந்தனையும் மின்னொளியும்! - அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -


சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவுற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? -


 அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) 

அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. நாற்பதுகளில் ஈழகேசரியில் வெளிவந்தது.

Saturday, November 29, 2025

பெருமழையும் பெருவெள்ளமும்! - வ.ந.கிரிதரன் -



[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப , Google Nano Banana , உதவி: VNG]  


இயற்கை அன்னையின் சீற்றம் பெருமழையாகப் பொழிகின்றது. மானுட குலத்திற்கு ஒரு சேதியினையும்  சொல்லுகின்றது. பெருவெளியில் சிறு குமிழாய் விரையுமிந்த நீலவண்ணக் கோளம் எம் வீடு!  இங்குள்ள உயிரினம் அனைத்தினதும் இல்லம். இதனைக் கவனமாக, பத்திரமாக, தேவையற்ற சேதங்களுக்கு உள்ளாகாத வகையில் பராமரிப்பது நம் கடமை. அதனைச் செய்யத்தவறியதன் விளைவே முறையற்ற காலநிலை மாற்றங்களும், இயற்கை அனர்த்தங்களும், இவ்விதமான பெருமழையும், பெருக்கெடுத்தோடும் வெள்ளமும் எம் காலத்தில் நாம் கண்டதில்லை.  அவ்வப்போது பெரும் புயல்கள் தாக்குவதுண்டு. அவையும்  அரியவை. ஆனால் தற்காலத்தில் இது போன்ற பெரு மழையும், பெரு வெள்ளமும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதொரு விடயமாக அமைந்திருப்பதை அவதானிக்க  முடிகின்றது.

கனடாவில் கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீடு! (தகவல்: ஓராயம்)

கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் எழுதிய வரலாற்று நூலான 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948)' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மே 24...