Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி மூன்று (21 - 30)

21. ஞானம் சஞ்சிகையின் தலையங்கமும், மறுமலர்ச்சிச்சங்கமும், அ.ந.க.வும்...

அண்மையில் கோப்பாய் சிவம் , செல்லத்துரை சுதர்சன் ஆகியோரால் தொகுக்கப்பட்டு வெளியான 'மறுமலர்ச்சிச் சஞ்சிகைகளின் தொகுப்பு' பற்றிய ஞானம் சஞ்சிகை ஏபரல் மாத இதழின் தலையங்கத்தில் வாழ்த்தியிருக்கின்றது. மேற்படி ஞானம் சஞ்சிகையின் வாழ்த்துச்செய்தி வரவேற்கத்தக்கது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள , குறிப்பிடப்படாத விடயங்கள் பற்றிச் சுட்டுக்காட்டுவது முக்கியமென்று எனக்குத் தோன்றுகின்றது.  'அ.செ.மு , வரதர் போன்ற 'ஈழத்து நவீன எழுத்தாளர்களின் இரண்டாவது பரம்பரையினரில் பலர் மறுமலர்ச்சி உருவாக்கிய எழுத்தாளர்களே. என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அ.செ.மு போன்றவர்கள் மறுமலர்ச்சி  சஞ்சிகையின் வரவுக்கு முன்னரே ஈழகேசரி மூலம் எழுதத்தொடங்கி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர்கள். அவர்களில் அ.செ.முருகானந்தன், தி.ச.வரதராசன், க.செ.நடராசா, அ.ந.கந்தசாமி, பஞ்சாட்சரசர்மா போன்ற ஐவருமே மறும்லர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்கள். இதனால்தான் இவர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று கூறப்படுகின்றார்களே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையில் எழுதியதனால் அல்ல.

மறுமலர்ச்சிச் சங்கத்திற்குள் பஞ்சாட்சர சர்மாவை இழுத்தவர் அ.ந.கந்தசாமி. பஞ்சாட்சர சர்மாவே தனது கட்டுரைகள் பலவற்றில் தன்னை எழுத்துத்துறையில் ஊக்கப்படுத்தியவராகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் 'பஞ்சாட்சரம்' நூல் முன்னுரையிலும் தன்னை எழுதுமாறு தூண்டிய இருவர்களாக அ.ந.கந்தசாமியையும், பண்டிதர் பொ.கிருஷ்ணபிள்ளையையும் குறிப்பிட்டுள்ளார். அதிலவர் அவர்கள் தன்னை எழுதுமாறு தூண்டித் தன்னம்பிக்கையூட்டி எழுத வைத்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாட்சர சர்மா அவர்களின் மகனான கோப்பாய் சிவம் அவர்கள் தனது தந்தையின் எழுபதாண்டு வயதினையொட்டி வெளியிட்ட 'பஞ்சாட்ஷரம்' நூலில் , பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு ஏனைய கலை, இலக்கியவாதிகள் எழுதிய கடிதங்களையும் இணைத்துள்ளார். மேற்படி நூலை நூலகம் இணையத்தளத்தில் எழுத்தாளர் கோப்பாய் சிவம் அவர்களின் படைப்புகளுக்கான பக்கத்தில் காணலாம்.

மேலும் மேற்படி நூலிலுள்ள பஞ்சாட்சர சர்மா அவர்களைப்பற்றிய கட்டுரையில் எழுத்தாளர் வரதர் அவர்கள் மறுமலர்ச்சிச்சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்கள் ஐவரென்றும், அவர்களிலொருவராக அ.ந.கந்தசாமியையும் குறிப்பிட்டிருப்பார்.


பஞ்சாட்சரம் தொகுப்பு நூலில் பலர் பஞ்சாட்சர சர்மா அவர்களுக்கு எழுதிய கடிதங்களையும் சேர்த்திருக்கின்றார்கள்.  அதிலொன்று அ.ந.க எழுதிய கடிதம்.  அதிலவர் பஞ்சாட்சர சர்மாவை மறுமலர்ச்சிச்சங்கத்தில் இணைந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்திருக்கின்றார். அக்கடிதத்தில் அ.ந.க குறிப்பிட்டுள்ள விடயங்கள் சில வருமாறு:

1. மறுமலர்ச்சிச்சங்கம் அமைக்கப்பட வேண்டுமென்ற அவசியத்தை முதலில் வலியுறுத்தியவர் அ.செ.முருகானந்தன். ஈழகேசரி பத்திரிகையில் அவரது பத்தியான 'பாட்டைசாரியின் குறிப்புக'ளில் இவ்விதம் மறுமலர்ச்சி சங்கத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருக்கின்றார். இதனை அக்கடிதத்தில் அ.ந.க குறிப்பிட்டிருக்கின்றார்.

2 . இவ்விதமாக மறுமலர்ச்சிச்சங்கத்தினை அமைக்கும் முயற்சியில் தனது நண்பர்களான அ.செ.மு.வும், வரதரும் ஈடுபட்டிருப்பதாகவும் , அவர்களுடன் ஒத்துழைத்துச் சங்கத்தை வெற்றியாக்க வேண்டுமென்பது தனது அவாவென்றும் அ.ந.க அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் 'மறுமலர்ச்சிச்சங்கம் மறுமலர்ச்சி இலக்கிய ஆர்வமுள்ள உத்தம ரஸிகர் திருக்கூட்டமாக இருக்க வேண்டும். தாங்கள் அத்தகையார் ஒருவர். எனவே தங்கள் ஒத்துழைப்பை நான் அதிகம் விரும்புகின்றேன்' என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். அக்கடிதம் எழுதப்பட்ட திகதி: 01.06.48. (பஞ்சாட்சர்மா; பக்கம் 169]

மறுமலர்ச்சிச் சஞ்சிகை பற்றியும், குறிப்பாக மறுமலர்ச்சி அமைப்பு பற்றிக் குறிப்பிடும் எவரும் அ.ந.கந்தசாமியைக் குறிப்பிடாது விடுவார்களென்றால் அது வரலாற்றுத்துரோகம். இது போல் இலங்கைத்தமிழர்களின் முற்போக்குச்சங்கம் பற்றிக்குறிப்பிடும் எவரும் அதன் ஆரம்பகர்த்தாக்களான கே.கணேஷ், அ.ந.க பற்றிக்குறிப்பிடாது விடுவதும். இவ்விதமான விடுபடுதல்கள் பற்றி, குறிப்பாக மறுமலர்ச்சி பற்றியும், அதனுடன் தொடர்பானவர்கள் பற்றியும் வெளிவரும் தவறான தகவல்கள் பற்றி மனம் வருந்தியிருப்பார் பஞ்சாட்சர சர்மா அவர்கள் மேற்படி நூலுக்கான தனது முன்னுரையில். [பஞ்சாட்சரம்; பக்கம் Vi and Vii ] இருந்திருந்தால் இப்பொழுதும் வருந்தியிருப்பார்.

மேற்படி ஞானம் சஞ்சிகையின் முன்னுரையினை வாசித்தபொழுது அவ்விதமான மனவருத்தமே ஏற்படுகின்றது. ஞானம் சஞ்சிகையின் தலையங்கத்தில் ஓரிடத்திலாவது அ.ந.க பற்றிக்குறிப்பிட்டிருக்கவில்லை.


22. நாவலர் பண்ணை நினைவுகள்!

ஏற்கனவே 'பதிவுகள்' இதழில் (பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 ) வெளியான இக்கட்டுரை ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. ] 'நாவலர் பார்ம்' எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பண்ணையை உங்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறி. ஆனால் காந்திய அமைப்புடன் பரிச்சயமாயிருந்தவர்களுக்கு இப்பண்ணை மிகவும் பரிச்சயமானதொன்று. இலங்கையின் பிரபல கட்டடக் கலைஞராக விளங்கிய டேவிட் அவர்களினால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இப்பண்ணை முல்லைத் தீவுப் பகுதியில் நெடுங்கேணிப் பகுதியினுள் அடர்ந்த காட்டின் ஒரு கோடியில் அமைந்திருந்தது. இப்பண்ணையைப் பற்றி இப்பொழுது எழுதுவதன் தேவை என்னவென்று நீங்கள் கேட்கலாம். நானும் அதையே தான் என்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டேன். அதன் விளைவு தான் இக்கட்டுரை. இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுபவர்களின் பார்வையிலிருந்து காந்திய அமைப்பு ஒரு போதுமே விடுபட்டு விட முடியாது. அந்த வகையில் காந்திய அமைப்பினால் பராமரிக்கபப்ட்ட பண்ணைகளிலொன்றான இந்நாவலர் பண்ணையுடனான அனுபவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவ்வனுபவங்களை காந்திய அமைப்பு பற்றியதொரு விமர்சனமாக நோக்கலாமென்று பட்டதன் விளைவே இக்கட்டுரை. அத்துடன் ஒரு காலகட்ட அனுபவத்தினைப் பதிவு செய்ய வேண்டிய அவாவின் விளைவாகவும் இக்கட்டுரையினைக் கொள்ளலாம். துரதிருஷ்ட்டவசமாகப் பின்னாளில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளினால் இவ்வமைப்பு ஸ்ரீலங்கா அரசின் கொடிய இனவெறி அரசின் அடக்கு முறைக்குள் சிக்கிச் சிதைந்து போனது.

அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை பட்டப் படிப்பை முடித்துவிட்டு கொழும்பிலுள்ள அரச திணைக்களமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். இச்சமயத்தில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கம் துடிப்பான தமிழ் மக்களின் பிரச்சினையில் ஆர்வமுள்ள சில இளைஞர்களின் கட்டுப் பாட்டில் இருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதாவது முகம் கொடுத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்த இவர்களது கவனம் காந்திய அமைப்பின் மீது திரும்பியது. விளைவு.. நாவலர் பண்ணையை பொறுப்பெடுத்து அங்குள்ள மக்களுக்குத் தேவையானதைச் சிரமதான அடிப்படையில் செய்வதென்று முடிவு செய்யப் பட்டது. இதற்காக ஆர்வமுள்ள மாணவர்கள் வார இறுதியில் வன்னி மாவட்டத்திற்குச் சென்று சிரமதான வேலைகளில் கலந்து கொண்டு பின்னர் ஞாயிறு இரவு புகையிரதத்தில் கொழும்பு திரும்புவார்கள். இச்சிரமமான திட்டம் ஆறு மாதங்கள் வரையில் தொடர்ந்து நடைபெற்றது. இப்பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தினைப் பற்றிச் சிறிது கூறத்தான் வேண்டும். குறைந்த அளவு எண்ணிக்கையில் தமிழ் மாணவர்கள் பயின்று கொண்டிருந்தார்கள். ஈழத்துத் தமிழ் நாடக உலகைப் பற்றி எழுதுபவர்கள் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பை ஒருபோதுமே மறந்து விடமுடியாது. நாடக உலகினை நவீனமயப்படுத்திய பாலேந்திராவினைத் தந்தது இத்தமிழ்ச் சங்கமே. மாவை நித்தியானந்தனை வெளிக்கொணர்ந்ததும் இச்சங்கமே. கண்ணாடி வார்ப்புகள், முகமில்லாத மனிதர்கள்,யுகதர்மம் போன்ற ஏனைய மொழி நாடகங்களுட்பட பல நாடகங்களை மேடையேற்றிப் பெருமை கண்டது இச்சங்கமே. வருடா வருடம் 'நுட்பம்' என்னும் தரமான இதழினையும் வெளியிட்டு வந்தது. 'நுட்பம்' இதழின் ஆசிரியர்களில் ஒருவனாக இருந்த அனுபவமுமுண்டு. தனிச் சிங்களப் பிரதேசத்தில் இயங்கிய போதும் இச்சங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் எத்தனையோ பல நல்ல காரியங்களை செய்துள்ளது.

நெடுங்கேணியிலிருந்து மருதோடை என்ற இடம் வரைதான் பஸ் சேவை இயங்கியது. மருதோடையிலிருந்து நாவலர் பண்ணைக்கு மூன்று மைல்கள் வரை நடந்துதான் செல்ல வேண்டும். அதே சமயம் மருதோடைக்கு அண்மையிலிருந்த காஞ்சிரமொட்டை என்ற இடத்திலிருந்து நாவலர் பண்ணை ஒரு மைல் தொலைவிலிருந்தது. ஆனால் காஞ்சிரமொட்டைக்கும் நாவலர் பண்ணைக்குமிடையில் காடு மண்டிக் கிடந்தது. இந்தக் காட்டினூடு ஒரு பாதை அமைத்து விட்டாலோ நாவலர் பண்ணை வாசிகளுக்குப் பெரிதும் செளகர்யமாகி விடும். நாவலர் பண்ணை விடயத்தில் மேற்படி பாதையினை அமைப்பதென்றும், இங்குள்ளவர்களுக்குக் கிணறுகள் வெட்டிக் கொடுப்பதென்றும் தீர்மானிக்கப் பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றக் கட்டங்கட்டமாக மாணவர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் அனுப்பப்படுவார்கள். அவ்விதம் போவதற்கு மாணவ்ர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் நான் போவதுண்டு. ஆரம்பத்தில் காந்தியம் பற்றியும் காந்தியப் பண்ணைகள் பற்றியும் மாணவர்களுக்குப் போதிய தெளிவு இல்லாமலிருந்தது. கொழும்பில் இரவு மெயிலில் புறப்படும் மாணவர்கள் வவுனியாவில் இறங்கி 'டாக்டர்' இராசசுந்தரம் வீட்டில் தங்கி மறு நாட்காலை அவரது ஜீப்பில் அல்லது பஸ்ஸில் நெடுங்கேணி செல்வது வழக்கம். அப்பொழுது 'டாக்டர்' இராசசுந்தரம் காந்திய அமைப்பின் செயலாளராக ஓய்வு ஒழிச்சலின்றி செயலாற்றிக் கொண்டிருந்தார். நாவலர் பண்ணயைப் போன்ற பல பண்ணைகள் காந்திய அமைப்பினால் வன்னி, மட்டக்களப்புப் பகுதிகளில் பராமரிக்கப் பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். ஒரு முறை 'டாக்டர்' இராசசுந்தரத்துடன் வவுனியாவிலிருந்து நாவலர் பண்ணை செல்லும் வழியில் முழுநேரமும் காந்திய அமைப்பு பற்றியும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதன் அவசியம் பற்றியும் அவர் விபரித்துக் கொண்டு வந்தது இன்னும் ஞாபகத்தில் பசுமையாக நிற்கிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1997ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களினால் அபகரிக்கப்படும் தமிழ்ப் பிரதேசங்கள் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார்கள். எல்லைகளில் தமிழர்கள் சென்று குடியேறுவதன் அவசியம் பற்றி வலியுறுத்துவார்கள். எத்தனை பேர் அங்கு சென்று குடியேறினார்கள் என்பது வேறு விடயம்? அவ்விதம் சென்ற பல இளைஞர்கள் நுளம்புக்கடி தாங்க முடியாமல் திரும்பிய கதைகள் பலவும் கேட்டிருக்கின்றேன். 'பதிவியா' 'சேருவில' என்று தமிழர்கள் இழந்து வரும் தமிழ்ப்பிரதேசங்களின் நிலையினை விரிவாக எடுத்துக் கூறிய 'டாக்டர்' இராசசுந்தரம் தமிழர்களின் எல்லைப்பிரதேசங்களின் பல்வேறு பகுதிகளிலும் திட்டமிட்டவாறு ஏறப்டுத்தப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் காலப்போக்கில் தமிழ்ப் பகுதிகளைச் சுற்றி வளைத்து இடையினுள் தமிழ் மக்களைச் சிறுபான்மையினராகப் பிரித்துவிடும் அபாயம் பற்றி விபரித்தார். இதனை விபரிக்க அவர் கை விரல்களை ஒப்பிட்டார். ஒவ்வொரு விரலையும் தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே வளர்ந்து வரும் சிங்களக் குடியேற்றங்களாகக் கொண்டால் இவ்விரல்களிற்கிடையில் கிடக்கும் பகுதிகளைச் சிறுபான்மையாக்கப்பட்ட மேற்படி அபகரிக்கப்படும் தமிழ்ப் பகுதிகளாகக் கொள்ளலாமெனக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் கிளிநொச்சியில், முழங்காவில் பகுதியிலிருந்த முந்திரிகைத் தோட்டமொன்றில் குடியேற்றப்பட்டிருந்த சிங்களக் குடியேற்றங்கள் காலப்போக்கில் தரக்கூடிய அபாயம் பற்றி அவர் எச்சரித்தார். இவற்றைத் தடுப்பதற்குக் காந்திய அமைப்பினால் ஆழ நடுக்காட்டினுள் உருவாக்கப்பட்ட பண்ணைகளில் குடியேற்றப்படும் தமிழர்கள் காலப்போக்கில் பல்கிப்பெருகி சிங்களக் குடியேற்றங்கள் பரவாவண்ணம் தடுப்பார்கள் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். இவ்விதமான பண்ணைகளில் எத்தனை வடகிழக்குத் தமிழர்கள் சென்று வாழத் துணிந்தார்கள்? துணிந்து வந்தவர்கள் ஏற்கனவே வடகிழக்குத் தமிழர்களினால் ஓரங்கட்டப்பட்ட மலையகத் தமிழர்கள். அவர்களுக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். பின்னாளில் ஸ்ரீலங்கா அரசின் இராணுவ அடக்குமுறை காந்தியப் பண்ணைகளில் பெரிதாக வெடித்த பொழுது வடகிழக்குத் தமிழர்களினால் மலையகத் தமிழர்கள் பலிக்கடாக்களக்கப்பட்டு விட்டார்களென்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதில் ஓரளவு உண்மையில்லாமலுமில்லையென்பதை இப்பொழுது நாம் துயரத்துடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

டாகடர் இராசசுந்தரத்தின் விபரிப்பால் மாணவர்கள் பெரிதும் உற்சாகமடைந்தார்கள். தங்களது பங்களிப்பு ஒருவிதத்தில் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதென்ற நினைவே அதற்குக் காரணம். தங்களது பணி வீணானதொன்றல்ல என்று மகிழ்ச்சியடைந்தார்கள். இது தவிர காந்தியப் பண்ணைகளின் நோக்கம் பற்றியும் அமைப்பு பற்றியும் டாக்டர் விபரித்தார். ஒவ்வொரு பண்ணையைப் பொறுத்தவரையிலும் நடுவில் ஒரு மாதிரிப்பண்ணை அமைந்திருக்கும். இப்பண்ணைக்குப் பொறுப்பாக ஒருவர் இருப்பார். இப்பண்ணையில் ஒரு நியாய விலைக்கடையும் பாலர் பாடசாலையுமிருக்கும். இப்பாலர் பாடசாலையில் கிளிநொச்சி குருகுலத்தில் பயிற்சி பெற்ற பெண்கள் ஆசிரியைகளாகக் கடமையாற்றுவார்கள். இம்மாதிரிப்பண்ணையில் பணியாற்ற அனுமதிப்பதின் மூலம்குடியேற்றவாசிகளுக்கு விவசாய முறைகள் பற்றிப் போதிப்பது அதே சமயம் இக்குடியேற்ற வாசிகள் குடிசைகள் கட்டக் கிடுகு முதலான பொருட்களை வழங்குவது கிணறு வெட்ட உபகரணங்கள் தருவது, மற்றும் இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நியாய விலையில் தருவது, குழந்தைகளுக்குத் 'திரிபோஷா' மா வழங்குவது முதலான பல்வேறு உதவிகளை இம்மாதிரிப்பண்ணை வழங்கியது. குடியேற்றவாசிகளை தமது சொந்தக் கால்களில் நிற்க வைப்பதே இதன் நோக்கமாகவிருந்தது. துரதிருஷ்ட்டவசமாக அநேகமான பண்ணைகளில் பண்ணைப் பொறுப்பாளர்கள் மாதிரிப்பண்ணைகளை இலாபத்தை நோக்காகக் கொண்டு நடத்தினார்கள். இதற்காக நன்கு வேலை செய்யக் கூடியவர்களை மட்டுமே அப்பண்ணைகளில் வேலை செய்ய அனுமதித்தார்கள். இதனால் பல குடியேற்றவாசிகளுக்கு பண்ணைகளில் வேலை செய்து பெறவேண்டிய அனுபவம் கிட்டாமலே போனது. இது மேற்படி பண்ணைகளின் அடிப்படை நோக்கத்திற்கே முரணாக அமைந்து விட்டது. இதே சமயம் தங்களது நல்லதோர் எதிர்காலத்திற்காக வந்து குடியேறிய மலையகத் தமிழர்களின் நிலைமையினைப் பயன்படுத்தி அயற்கிராமங்களிலிருந்த பூர்விகத் தமிழர்கள் சிலர் தங்களது தோட்டங்களில் மேற்படி மலையகத் தமிழர்களைக் கூலிக்கமர்த்திச் சுரண்டவும் செய்தார்கள். நாவலர் பண்ணையைப் பொறுத்த அளவில் சுமார் நாற்பது குடும்பங்கள் வரையில் குடியேறியிருந்தார்கள். எல்லோருமே தங்களது எதிர்காலச் சந்ததியாவது நல்லாயிருக்குமென்ற நம்பிக்கையிலிருந்தார்கள். அவர்களெல்லாம் அவர்களது சந்ததியெல்லாம் இப்பொழுது எங்கிருக்கின்றார்களோ? அவர்களது அப்பாவித்தனமான தோற்றங்களும் அவர்களது கனவுகளும் இப்பொழுதும் நினைத்தால் நெஞ்சினில் வேதனையினைப் பரப்பும்.

நாவலர் பண்ணைக்குப் பொறுப்பாகவிருந்தவர் ஈழத்துக் கபிலர் என சுதந்திரன் வாசகர்களுக்குக் கவிதைகள் மூலம் அறிமுகமான ஒரு முதியவர். வடமராட்சிப் பகுதினைச் சேர்ந்தவர். ஒவ்வொருமுறை நாவலர் பண்னைக்கு செல்லும் போதெல்லாம் பண்ணையில் தான் நாம் தங்குவது வழக்கம். இரவு முழுவதும் எம்மைத் தூங்கவிடாமல் தான் எழுதியிருந்த சிறுகதைகளை மிகவும் உணர்ச்சி பூர்வமாக வாசித்துக் காட்டி எம்மைத் தூங்கவிடாது திணற அடித்து விடுவார் இந்தக் கபிலர். அவரது கதைகளெல்லாம் ஸ்ரீலங்கா அரச படைகள், குண்டர்கள் தமிழ் மக்கள் மேல் அவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் பற்றியே இருக்கும். அவற்றை விபரிக்கும் பொழுது உண்மையாகவே கபிலர் அழுது விடுவார். அப்பொழுது நாமோ இடது சாரித் தத்துவங்களில் மூழ்கியிருந்த சமயம். எங்கெல்ஸின் 'டூரிங்கிற்கு மறுப்பு', மார்கஸ்/எங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, 'வரலாற்றுப் பொருள்முதல்வாதம்/இயக்கவியல் பொருள்முதல்வாதம்' போன்ற நூல்களைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்த காலம். கோர்க்கியின் 'தாய்' நாவலில் மூழ்கிக் கிடந்த காலம். எந்தவிதத் தத்துவார்த்த சிந்தனைகளுமற்று வெறும் உணர்ச்சிகளனடிப்படையில் வடிக்கப்பட்ட கபிலரின் படைப்புகளை அவர் உணர்ச்சி ததும்ப வாசிக்கும் பொழுது அந்த முதியவரின் மனதினைப் புண்படுத்தக் கூடாதென்ற உணர்வில் சகித்துக் கொண்டிருப்போம். சிலர் தூங்கி விடுவார்கள். இறுதியில் கபிலரும் அப்படியே வாசித்துக் கொண்டே தூங்கி விடுவார். இரத்தினபுரி மற்றும் பண்டத்தரிப்பைச் சேர்ந்த சிறுமிகள் இருவர் தொண்டர்களாகப் பணிபுரிந்தார்கள். காஞ்சிரமொட்டைக்கும் நாவலர் பண்ணைக்குமிடையில் காட்டுபாதை அமைப்பதற்காக மரங்களை வெட்டும் சமயங்களிளெல்லாம் இக்குடியேற்றவாசிகள் பெரிதும் ஒத்துழைப்பு தந்தார்கள். இளைஞர்கள் முதியவர்களென்று எங்களுடன் தங்களது பல்வேறுபட்ட அபிலாசைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். விளையாட மைதானமில்லாதது பற்றியும் சனசமூக நிலையமில்லாதது பற்றியும் தங்களது குறைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். ஒரு முறை நாங்கள் காடு வெட்டிக் கொண்டிருந்தபொழுது பண்ணைக்கு ஏதோ விடயமாக ஸ்ரீலங்காப் பொலிசார் வந்த செய்தினை அச்சிறுமிகள் ஓடி வந்து கூறினார்கள். ஏற்கனவே காந்தியப் பண்ணைகளில் படையினரின் கெடுபிடிகள் தொடங்கி விட்டிருந்தன. அச்சிறுமிகள் அச்சமயத்தில் எம்மைக் காப்பாற்றினார்களென்றுதான் கூறவேண்டும். மேலும் அக்குடியேற்றவாசிகளுக்குப் பயனுள்ள வகையில் குடிசைகளை அமைப்பதும் ஒரு திட்டமாகவுமிருந்தது. அதற்காக அப்பண்ணையிலுள்ள ஒவ்வொரு குடியேற்ற வாசியுடனும் நேரடியாகச் சந்தித்து உரையாடி அவர்களது அனுபவங்களை தேவைகளை அவர்கள் பாவித்துக் கொண்டிருந்த குடிசைகளின் அமைப்புகளைப் பற்றியெல்லாம் குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் பின்னாளிலேற்பட்ட அரசியல் நிலைமகளாலும் எண்பத்து மூன்று இனக்கலவரத்தாலும் அதற்கான சாத்தியங்கள் இல்லாதொழிந்து விட்டன. அதே சமயம் நாவலர் பண்ணையில் எமக்கேற்பட்ட அனுபவங்கள் எமக்குப் பெரிதும் பயனாகவே அமைந்தனவென்றுதான் கூறவேண்டும். முதன் முறையாக வறுமைக் கோட்டினுள் வாடும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி மிகவும் நுணுக்கமாக அறியும் வாய்ப்பினை இவ்வனுபவம் தந்ததென்றே கூற வேண்டும். அதே சமயம் காந்திய அமைப்பு பற்றியும் நன்கு அறிந்து கொள்ள மேற்படி அனுபவம் எமக்குக் கை கொடுத்தது. தமிழ் மக்களின் விடுதலையில் தீவிர ஆர்வமுள்ள பலர் பற்றி அறிவதற்கும் மேற்படி அனுபவம் உதவியதென்றும் கூறிக் கொள்ளலாம்.

பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46


23. ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்!

மராத்திய எழுத்தாளரான ஆஷா பகேயின் முக்கியமான நாவல்களிலொன்று 'பூமி' பி.ஆர்.ராஜாராமின் மொழிபெயர்ப்பில் தமிழில் 'சாகித்திய அகாதெமி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆஷா பகேயின் படைப்புகளில் நான் வாசித்த முதலாவது படைப்பு இந்த நாவல்தான். ஏற்கனவே சாகித்திய அகாதெமியினரால் வெளியிட்டப்பட்ட வங்க நாவலான 'நீலகண்டப் பறவையைத்தேடி', 'தகழி சிவசங்கரம்பிளையின்' ஏணிப்படிகள்' மற்றும் 'தோட்டி', சிவராம காரந்தின் 'மண்ணும் மனிதரும்', எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை', எம்.டி.வாசுதேவன் நாயரின் 'காலம்' போன்ற நாவல்களின் வரிசையில் என்னைக்கவர்ந்த இந்திய நாவல்களிலொன்றாக 'பூமி' நாவலும் அமைந்து விட்டது.

இந்த நாவலின் கதையும் வித்தியாசமானது. மராத்திய டாக்டர் ஒருவருக்கும், தமிழ் நர்ஸ் ஒருவருக்கும் மகளாகப்பிறந்தவளே நாவலின் நாயகி. சிறு வயதிலேயே அவள் தந்தையை இழந்து விடுகின்றாள். தாயாரே அவளைக் கண்ணுங்கருத்துமாக வளர்த்து வருகின்றார். நாயகியின் மாணவப்பருவத்திலேயே தாயாரும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகுகின்றது. தாயின் இறுதிக்காலம் மனதை அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்கியமான பகுதிகளில் அதுவுமொன்று. தாயாரும் இறந்து விடவே தனித்து விடப்படும் சிறுமியான நாயகியை அவளது தந்தையின் மராத்தியச் சகோதரி பம்பாய்க்குத் தன்னுடன் அழைத்துபோகின்றாள்.

நாவல் தமிழ்நாடு, பம்பாய் என இரு நகரங்களில் நடைபோடுகிறது. அத்தையுடன் வாழும் தன் இளம் பருவத்தில் பகுதி நேர வேலையாக மறைந்த பேராசிரியர் ஒருவரின் செல்வந்த மனைவிக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண்ணாகவும் வேலை பார்க்கின்றாள். அச்சமயத்தில் பேராசிரியரின் வீட்டு நூலகத்து நூல்களெல்லாம் அவளது இலக்கியப்பசியைத்தீர்த்திட உதவுகின்றன.

மராத்தியக் கலாச்சாரத்தில் வாழும் அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து பெரியவளாகும் நாயகி ஆரம்பத்தில் படிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும், அவளது வாசிப்புப் பழக்கம் அவளுக்குக் கை கொடுக்கிறது. அவளது ஆளுமையினை ஆரோக்கியமான திசையை நோக்கித்தள்ளி விடுகிறது. அதுவே பின்னர் வெற்றிகரமான பெண்ணாகவும் உருமாற்றி விடுகிறது. அவள் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த அச்செல்வந்தப்பெண்ணின் மகனையே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் திருமணமும் செய்து கொள்கிறாள். திருமணத்தின் பின்பு கலாநிதிப்பட்டமும் பெற்று பல்கலைக்கழகவிரிவுரையாளராகப் பணிபுரிகின்றாள்.

அவர்களிருவரின் தாம்பத்தியத்தின் விளைவாக அவர்களுக்கு மகனொருவன் பிறக்கின்றான். இருந்தாலும் கணவன், மனைவியருக்கிடையில் பல்வேறு வகையான உளவியல் பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஒரு கட்டத்தில் கணவனைப்பிரிந்து தனித்து வாழும் அவள் இறுதியில் பணியில் ஓய்வு பெற்றுக்கணவனிடம் திரும்புகின்றாள். அவ்விதம் பிரிந்திருக்கும் காலத்தில் அவளுடன் பணிபுரியும் , நோயாளிக்குழந்தையுடன் வாழும் சக விரிவுரையாளர் ஒருவருடனான அவளது ஆத்மார்த்தமான தொடர்பும் நாவலில் ஆராயப்படுகிறது.

இந்த நாவலின் முக்கிய சிறப்பாக நான் கருதுவது பாத்திரப்படைப்பு. நாவலின் நாயகியான மைதிலியின் பாத்திரப்படைப்பு முழுமையானது. நாவலில் வரும் மராத்திய அத்தையும் அற்புதமான மன இயல்புகள் வாய்க்கப்பட்டவள். இந்நாவலில் வரும் பிரதான பாத்திரங்களெல்லாரும் உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஆளுமைகள் சிறப்பாக அவர்கள்தம் குறை, நிறைகளுடன் வடித்தெடுக்கப்பட்டுள்ளன..

மைதிலி என்னும் பெண்ணின் வாழ்வை விபரிக்கும் நாவல், அவ்வாழ்வில் அவள் அடைந்த அனுபவங்களை, உணர்ச்சிப்போராட்டங்களை (தோல்வியடைந்த அவளது இளமைக்காதலுட்பட), அவளது மண வாழ்வினை, அவ்வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை, தாய்மை ஏற்படுத்தும் மாற்றங்களை ,திருமணத்துக்கப்பாலான உளரீதியிலான உறவினை, மற்றும் அவளது எழுத்துலக இலக்கிய வாழ்வினை எல்லாம் விபரிக்கின்றது.

நல்ல நாவலொன்றின் சிறப்பு அந்த நாவலை வாசிக்கும் ஒருவரை அந்த நாவல் விபரிக்கும் கதாபாத்திரங்களின் வாழ்வினுள் கொண்டசென்று    நிறுத்த வேண்டும். அதன் பின்னர் அந்த வாசகரும் அப்பாத்திரங்கள் வாழும் வாழ்வினில் ஒருவராகி, அப்பாத்திரங்கள் அடையும் பல்வேறு உணர்வுகளுக்குமிடையில் சிக்கி தன்னை மறந்து விட வைத்திட வேண்டும்.  இந்த நாவலும் அத்தகையதே. இந்நாவலின் கதாநாயகி தன் வாழ்வில் அடையும் இன்ப துன்பங்களையெல்லாம் வாசிக்கும் நீங்களும் அடைவீர்கள்.

இந்நாவலின் இன்னுமொரு சிறப்பு இரு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களினூடு பெண்களின் பிரச்சினைகளை ஆராய்வதுதான். ஒருத்தி நவகாலத்து நாயகி மைதிலி. அடுத்தவள் பழைய தலைமுறையினைச்சேர்ந்த அவளது மராத்திய அத்தை.

ஆஷா பகேயின் 'பூமி' நாவலின் நடை மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது. ஆனால் மொழிபெயர்ப்பில் அதிகமாக எதிர்ப்படும் தமிங்கிலிஸினைத் தவிர்த்திருக்கலாமென்று ஏற்படும் உணர்வினைத்தவிர்க்க முடியவில்லை. ஆனால் நூலினை வெளியிட்ட அமைப்பே தன் பெயரைச் 'சாகித்ஹிய அகாதெமி' என்று குறிப்பிடும்போது  எவ்விதம் அவ்வமைப்புக்காக மொழிபெயர்ப்பு செய்யும் எழுத்தாளர் மட்டும் தமிங்கிலிசைத்தவிர்த்திட முடியும் என்றும் எண்ணாமலுமிருக்க முடியவில்லை.


24. விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'!

அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள நாவல் அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் நாவல்களில் முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நாவல்களிலொன்று. மொழியில் எந்தவிதப் புதுமையுமில்லை. தமிழக வெகுசனப் பத்திரிகைகளை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு நன்கு பழகிய மொழிதான். இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவது இது கூறும் பொருளினால்தான். அப்படி எதனைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது? சுருக்கமாகக் கூறப்போனால் உலகமயமாதலுக்குத் தன்னைத் திறந்து விடும் வளர்ந்து வரும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விமர்சிக்கும் நாவலிதுவென்று கூறலாம். இத்தருணத்தில் கறுப்பு 'ஜூலை' 1983யினைத் தொடர்ந்து, உலகின் நானா பக்கங்களையும் நோக்கி, அகதிகளாகக்ப் படையெடுத்த ஈழத்தமிழர்களைப் பற்றி சில விடயங்களை எண்ணிப்பார்ப்பது 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் கூறும் பொருளைப்பொறுத்தவரையில் முக்கியமானது; பயன்மிக்கது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துப் புகுந்த நாடுகள் செல்வச்செழிப்புள்ள, முதலாளித்துவச் சமுதாய அமைப்பைக்கொண்ட மேற்கு நாடுகள். இந்த நாடுகளில் நிலவும் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கும், அதுவரை அவர்கள் வாழ்ந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வித்தியாசம். மேற்கு நாடுகளில் நிலவும் கடனட்டைக் கலாச்சாரம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் புதியது. உலக மயமாதலின் விளைவுகளால சமூக, பொருளியல் சூழல்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்த இந்திய மத்திய வர்க்கத்தினரின் நிலையும், மேற்கு நாடுகளின் பொருளியற் சூழல்களுக்குள் இறக்கி விடப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளின் நிலையும் இந்த வகையில் ஒரே மாதிரியானவை என்று கூறலாம். ஒரு வேலை இருந்தால் , தகுதிக்கு மீறிய கடன் தொகையுள்ள கடனட்டைகளைப் பெற்றபோது , ஆரம்பத்தில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு அது இன்பமளிப்பதாகவேயிருந்தது. அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை கடன் கலாச்சாரத்துள் முற்றாகவே மூழ்கி விட்டது. கடனுக்குக் கார் வேண்டலாம்; கடனுக்கு வீடு வாங்கலாம்; வீட்டுப் பெறுமானத்தின் உபரி மதிப்பிற்குச் சமமாக கடன் எடுக்கும் வசதியினைப் பெறலாம். இவ்விதமாகப் பல 'கடன்' நன்மைகளைச் சுகிக்கலானார்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். இவ்விதமான சமூக, கலாச்சார மாற்றங்களுக்குள்ளாகியவர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல காரணங்களுக்காக, மேற்கு நாடுகளை நோக்கிப் பல்வேறு நாடுகளிலிருந்தும் , வளர்முக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிலிருந்து  சென்ற அனைவருக்கும் பொருந்தும். இவ்விதமாகக் கடனட்டை, கடன் போன்றவற்றின் ஆதிக்கத்தின் கீழ் மக்களைக் கொண்டுவரும் முதலாளித்துவ சமுதாய அமைப்பானது, அதன் பின் அம்மக்களை அதன் பிடிக்குள் கொண்டுவந்து, செக்குமாடுகளாக்கி விடும். உழைப்பது கடன்களைக் கட்டுவதற்கே என்று வாழ்க்கை மாறிவிடும். பெரும்பாலானவர்கள் உதாரணத்துக்கு வாங்கிய வீட்டின் விலையைப்போல் இரு மடங்கு வரையிலான விலையை 25 வருட காலத்து வீட்டுக் கடனுக்குக் கட்டி முடிக்கும்போது அவர்களது வாழ்வின் பெரும்பகுதி முடிந்து விட்டிருக்கும். இவ்விதமான வாழ்க்கையானது குடும்பங்களுக்குள் பல்வேறு வகையான சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றது.

இதே வகையானதொரு நிலையினைத்தான் இந்தியாவில் உலகமயமாக்கலின் விளைவாக உருவான 'பணம் புழங்கும்' நடுத்தர மக்களின் வாழ்க்கையிலும் காணலாம். மேற்கு நாட்டுசமூகக் கலாச்சாரச் சூழலை அப்படியே கொண்டு வந்து, வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடொன்றில் நட்டுவிட்டால் எவ்வகையான விளைவுகள் உருவாகுமோ அவ்வகையான விளைவுகள் அனைத்தும் இங்கும் உருவாகும். அவைதான் 'ராஜீவ்காந்தி சாலை'யிலும் உருவாகின. பணம் புழங்கும் மத்தியதர மக்கள் மில்லின் கணக்கில் உருவானதும், மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்களுக்குப் புதியதொரு சந்தையினை இந்த மாற்றம் திறந்து விட்டது. குறைந்த அளவு ஊதியத்துடன் உழைப்பை வாங்குவதன் மூலம் இலாபத்தை அதிகரித்த மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்கள், இந்த மாற்றத்தால் உருவான புதிய மத்தியதர வர்க்கத்தை மையமாக வைத்துத் தம் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து மேலும் இலாபத்தைச் சம்பாதித்தன. ஒரு கல்லில் இரு மாங்காய்கள். 'கோல்கேற்' பற்பசை , கோர்ன் ஃபிளாக்௶ஸ் சீரியல்கள் தொடக்கம், ஃபோர்ட் வாகங்கள், ஜிஎம் வாகனங்கள் போன்ற வாகனங்கள் தொடக்கம், புதிய சந்தை நிலவும் நாட்டில் பேசப்படும் பன்மொழிகளில் திரைப்படங்களை மிகச்சிறப்பாக 'டப்பிங்' செய்வது தொடக்கம் இலாபத்தை அள்ளிக்குவித்தன மேற்கு நாட்டின் நிறுவனங்கள். 'மாஸ்டர் கார்ட்', 'விசா', 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' என்று அத்தனை கடன் அட்டை நிறுவனங்களும் நுழைந்து விட்டன. பல்வேறு வகையான காப்புறுதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், 'மல்டி லெவல் மார்கட்டிங்'  என்று அனைத்து நிறுவனங்களும் நுழைந்து விட்டன.

மேற்கு நாடுகளின் நிறுவனங்களின் பணியினைக் குறைந்த ஊதியத்தில் செய்வதற்காகப் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பூற்றீசல்களைப் போல் முளைத்தன. இவ்விதமான நிறுவனங்களில் மிகவும் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பார்க்கும் மக்களை மையமாக வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் வலையை விரித்தன. கையில் காசு புழங்கத்தொடங்கியதும் இவ்வகையான நிறுவனங்களில் பணி புரிவோரின் வாழ்க்கை மாறத்தொடங்கியது. மேற்குக் கலாச்சாரம் அவர்களைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து விட்டது. வாகனம் வாங்குவது, கார் வாங்குவது என்பவையே அவர்களது கனவுகளாகின. புதிய சூழல், புதிய வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமல்ல மன அழுத்தத்தினையும் கூடவே கொண்டுவந்து விட்டது. சக்திக்கு மீறிய வகையில் கடன்களைப் பெறும் சூழல் உருவாகியது. கடன்களைப் பெற்று வீடுகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கியவர்களுக்கு, வேலை சிறிது காலம் இல்லாமல் போனால் கூடத் தாங்க முடியாத நிலைதான். வாசலில் நின்று கடன்களை அவர்கள் மேல் திணித்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் இவ்விதமான இக்கட்டான நிலையில், உதவுவதில்லை. பணத்தைத் திருப்பிக் கட்டும்படி நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கும் சூழலுருவாகும். விளைவு? குடும்பங்கள் பிளவுறுதல், தற்கொலைகள், கொலைகள்  என்று பல்வேறு வகையான பக்க விளைவுகள் உருவாகும். இரவினில் தனித்துப் பெண்கள் வேலை செய்யும் சூழல்கள், அவர்களுடன் பணி புரியும் ஆண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தும். வேலையிழத்தல் போன்ற சூழல்கள் உருவாக்கும் பொருளியற் சுமைகள் காரணமாக ஒருவருக்கொருவர் பண உதவிகள் பெறுவது, பின்னர் அதன் காரணமாக ஒருவருக்கொருவர் அநுசரித்து வாழ்வது என்று ஏற்படும் மாற்றங்கள் தம்பதியினரின் குடும்ப வாழ்வினைச் சீரழிக்கின்றன.

இன்னுமொரு விடயத்தையும் இந்நாவல் விமர்சிக்கின்றது. குழந்தைகள் மேல் புரியப்பட்டும் பாலியல் வன்முறைகள் எவ்விதம் அவர்களது வாழ்வினைச் சிதைத்து விடுகின்றன என்பதை நாவலில் வரும் கெளசிக் பாத்திரத்தினூடு ஆசிரியர் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். சிறுவயதில் ஆண் உல்லாசப்பிரயாணிகளினால், முதிய செல்வந்தப் பெண்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் அவன் வளர்ந்ததும் இளம்பெண்களைப் பாலியல்ரீயில் வதைப்பதில் இன்பம் காணுமொரு வெறியனாக உருமாற்றமடைகின்றான். அதன் விளைவாகக் கொலையுண்டும் போகின்றான். சிறு வயதில் அவன் மிக அதிகமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாகியது ஆண் உல்லாசப்பிரயாணிகளால்தான். எனவே அவனது ஆத்திரம் அவ்விதமான ஆண்கள்மேல் ஏற்படாமல் எதற்காகப் பெண்கள் மேல் ஏற்பட வேண்டும் என்றொரு கேள்வி எழுவதையும் தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் விநாயக முருகனின் ராஜீவ்காந்தி சாலை இவ்விதமாக உலகமயமாதலால் அடியோடு மாறுதலடைந்து, ராஜீவ்காந்தி சாலையாக மாறிய சென்னையின் மகாபலிபுரச்சாலையின் மாறுதல்களை விமர்சிக்கின்றது. உண்மையில் உலகமயமாதல் எவ்விதம் செல்வந்த நாடுகளின் இலாபத்திற்காக வளர்முக நாடுகளில் நிலவிடும் இயற்கைச் சூழலினை , விவசாயம் போன்ற தொழில்களை, சிறுவர்த்தகச் செயற்பாடுகளைச் சிதைத்து விடுகின்றது. எவ்விதம் நகர்ப்புறங்களில் செல்வச்செழிப்புள்ள பகுதிகளை உருவாக்கும் அதே சமயம், மிகவும் வறிய மக்களைக்கொண்ட  சேரிகளையும் உருவாக்கி விடுகின்றது. எவ்விதம் பாலியல்ரீயிலான உளவியற் பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின் தீய விளைவுகளை உருவாக்கி விடுகின்றது. இவற்றைப்பற்றியெல்லாம் விமர்சிக்கின்றது. அந்த வகையில் 'ராஜீவ்காந்தி சாலை' ஒரு குறியீடு. உலகமயமாதல் வளர்ந்துவரும், அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றில் ஏற்படுத்தும் சமூக, பொருளியல், கலாச்சார மற்றும் சூழற் பாதிப்புகளை விமர்சிக்குமொரு குறியீட்டு நாவல் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'.

25. அறிஞர் அ.ந.கந்தசாமியின் மலையக இலக்கியப் பங்களிப்பும், சாரல் நாடனின் 'மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்' நூல் பற்றிய குறிப்புகளும்!

சாரல்நாடலின் 'மலைய இலக்கியம் தோற்றமும், வளர்ச்சியும்' என்னும் சிறு நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 'சாரல் வெளியீட்டகம்' (கொட்டகலை, இலங்கை)  வெளியீடாக வெளிவந்த இந்த நூலில் சாரல்நாடன் மலையக இலக்கியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இந்நூலில் மலையக இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பிறபகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் ஓரளவு குறிப்பிட்டுள்ளார் சாரல்நாடன். மலையக இலக்கியத்துக்குப் பிற பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பு பற்றிய விடயத்தில் அவருக்குப் போதிய பரிச்சயமில்லையென்பதை நூல் வெளிப்படுத்துகின்றது.  மலையக மக்கள் பற்றிய நாவல்கள் படைத்த எழுத்தாளர் நந்தி, புலோலியூர் சதாசிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அட்டனின் நடைபெற்ற 'ஏனிந்தப் பெருமூச்சு' கவியரங்கில் பங்குபற்றிய கவிஞர் கந்தவனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மலையகம் பற்றிப் பாடிய வி.கந்தவனம் என்று குறிப்பிடுகின்றார். அட்டன் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எழுத்தாளர் சொக்கன், நவாலியூர் நா.செல்லத்துரை பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆனால் மலையகத் தொழிலாளர்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றிய முக்கியமான ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் ஒருவரைப் பற்றி, மலையக மக்கள் பற்றிக் கவிதைகள், சிறுகதைகள் படைத்த எழுத்தாளரைப் பற்றி , இறப்பதற்கு முன்னர் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய நாவலொன்றினை எழுதிய முக்கியமான எழுத்தாளரைப் பற்றி நூலாசிரியர் சாரல்நாடனுக்குத் தெரியவில்லையென்பது ஆச்சரியத்தைத் தருகின்றது. இவ்விதமான விடுபடுதல்களால் நட்டப்படுவது இவ்விதமான நூல்கள்தாம். இவ்விதமான நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள்தாம். இவ்விதம் சாரல்நாடனின் கண்களில் தென்படாமல் விடுபட்டுப் போன எழுத்தாளர் வேறு யாருமல்லர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமிதான்.

அ.ந.க.வின் மலையக  இலக்கியப் பங்களிப்பு பற்றி எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் அ.ந.க பற்றித் தினகரனில் எழுதிய 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

1. "கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்."

2. "இனிமேல் தான் நான் நாவல் துறையில் அதிக அக்கறை காட்டப் போகின்றேன்" எனக் குறிப்பிட்டார். மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்சிகளை வைத்து 'களனி வெள்ளம்' என்ற நாவலை எழுதிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். 'களனி வெள்ளத்திற்கு' முன்னால் கால வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது. 'நாவல் துறையில் காட்டப்போகும் அதே அக்கறையை உங்கள் உடல் நிலை பற்றியும் காட்டுங்கள்' என்றேன். கடும் நோயின்  பாதிப்புக்கிடையில் அ.ந.க கணிசமான அளவு எழுதியது வியப்புக்குரியது."

3. "தொழிலாளியாக வாழ்ந்த அவரது சொந்த அனுபவமே, அவரது கதைகளுக்கு உயிரூட்டிற்று என்று விமர்சகர்கள் கூறுவது போல் தொழிற்சங்கவாதியாகச்  சிலகாலம் இருந்த அ.ந.க. தோட்டத் தொழிலாளர்களுடன் இரண்டறக் கலந்து அவர்களின் துன்ப, துயர்களை உணர்ந்ததால், தோட்டத் துரைமார்களின் அதிகாரங்களை நேரில் கண்டதால் அவைகளைத் தமது சிறுகதைகளில் தத்ரூபமாகச் சிருஷ்ட்டித்தார் என்றே கூறவேண்டும்."

அ.ந.க.வின் படைப்புகள் பல பல்வேறு சஞ்சிகைகளில், பத்திரிகைகளில் சிதறிக்கிடக்கின்றன. எழுத்தாளர் அகஸ்தியர் தினகரனில் எழுதிய 'அ.ந.க.வும் அ.செ.மு.வும்  அசல் யாழ்ப்பாணிகள்!' என்னும் கட்டுரையில் இருவரினதும் மலையக மக்கள் மீதான பங்களிப்புப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவார்:

"அ.ந.கந்தசாமியின் 'நாயினுங் கடையர்' அவர் காலப் படைப்பாளி அ.செ.முருகானந்தனின் 'காளி முத்துவின் பிரஜா உரிமை' படித்ததுண்டா? அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள். தோட்டக்காட்டார் என்ற மலையகத் தொழிலாளர்களுக்காக இருவரின் பேனா முனைகள் எமது காலத்திற்கு முன்பே போர் முனைகளாயின.  இரு கதைகளும் சான்று."

நூலின் முன்னுரையில் சாரல்நாடன் எழுத்தாளர் அந்தனி ஜீவாவுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார். ஆனால் நூலில் அந்தனி ஜீவாவின் பங்களிப்பு பற்றிய குறிப்புகள் அதிகமில்லை. அவர் வெளியிட்ட 'கொழுந்து' இதழ் பற்றிக் கூட குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.

அ.ந.க தனது இறுதிக்காலத்தில் களனி வெள்ளம் என்றொரு நாவலைத் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக்கொண்டிருந்ததாக அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் குறிப்பிடுவார்.  அ.ந.க.வின் அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83 இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாகவும் செ.க. கூறியதாக ஞாபகம்.

தமிழ்முரசு (சிங்கப்பூர்) 17 ஜூன் 1955 பதிப்பில் அ.ந.க.வின் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய சிறுகதையொன்று வெளியாகியுள்ளது. இதன் பெயர் 'குடும்ப நண்பன் ஜில்'. இதுவரை எங்குமே பேசப்பட்டிராத அ.ந.க.வின் இந்தச் சிறுகதையினைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து 'பதிவுகள்' இணைய இதழே முதன் முதலாகப் பிரசுரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைப் 'பதிவுகள்' இணைய இதழில் வாசிக்கலாம்.

அ.ந.க.வின் (கவீந்திரன் என்னும் புனைபெயரில் எழுதிய) தோட்டத் தொழிலாளர் பற்றிய 'பாரதி' இதழில் வெளிவந்த கவிதை கீழே:

தேயிலைத் தோட்டத்திலே

- அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -

1.
காலையிலே சங்கெழுந்து பம்மும்! "நேரம்
கணக்காச்சு! எழுந்துவா! தூக்கம்போ தும்.
வேலைசெய வேண்டு"மெனச் சொல்லு மஃது!
வேல்விழியாள் உடன்வித்தாள்! துடித்தெழுந்தாள்!
பாலையுண வேண்டுமெனப் பாலகன் தான்
பதறுமன்றோ?என நினைத்தாள் பாய்மேற்பாலன்
காலைமெல வருடினாள் கமலப் பூபோல்
கண்விரித்துக் காலையுதைத் தெழுந்தான் பாலன்!

2.
முகத்தைமெல முத்தமிட்டாள்! ராசா வென்றாள்!
முத்தம்பின் முத்தமிட்டு முறுவலித்தாள்!
அகத்தினிலே அணைகடந்த அன்பின் வெள்ளம்
அமுதமாய் மார்பிடையே சுரக்கவஃதை
அகம் குளிரப் பசிதீர உடல்வளர
அருந்தட்டும் குழந்தையென அணைத்துக் கொள்வாள்!
முகம்மலர வாய்குவித்துச் சிரத்தையோடு
முழித்தவண்ணம் பாலகந்தான் பருகுகின்றான்!

3.
அன்னையுளம் அழகிய பூங்கனவுபல
அரும்பிவரும்! சின்னவந்தப் பாலகன்தான்
மன்னவன்போல் மல்லார்ந்த புயத்தனாகி
மண்ஞ்செய்து மக்கள்பல பெற்று வேண்டும்
பொன்னோடும் பூணோடும் சிறக்க வாழ்வான்!
பொறாமைப்பேய் உறவினரை விழுங்கும் உண்மை!
என்னென்ன நினைவெல்லாம் என்மனத்தே!
எனநினைந்து தன்னுள்தான் வெட்கிக்கொள்வாள்!

4.
பால்குடித்துமுடிய அந்தக் குழந்தை இன்பப்
பசுமுகத்தில் பால்வடியக் கலகலென்று
மால்தீர உளத்துன்ப மாசு ஓட
மனங்குளிரச் சிரித்துத்தன் கையை ஆட்டி
காலையுதைத் திருள் தீரும் காட்சி நல்கும்!
காரிகை மனத்தின்பம் சீறிப் பொங்கும்!
நாலைந்து முத்தமந்த வெறியிற் கொட்டி,
நங்கைதன் வேலைக்குக் கிளம்புகின்றாள்!

5.
பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்!


26... ஷோபாசக்தியின் 'கொரில்லா' பற்றி.....
புகலிடத் தமிழ் இலக்கியத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டதும், அதிகமானவர்களின் கவனத்தைப் பெற்றதுமாக ஷோபாசக்தியின் 'கொரில்லா' நாவலைக் குறிப்பிடலாம். இந்த நாவல் கூறப்பட்ட மொழியினாலும், கூறப்பட்ட விடயங்களினாலும், கூறப்பட்ட முறையினாலும் பலரைக் கவர்ந்திருக்கலாமென நினைக்கின்றேன். கதை சொல்லி பேச்சுத் தமிழைப் பாவித்துக் கொரில்லாவின் கதையினைக் கூறியிருக்கின்றார். இவ்விதமான நடையினை, மொழியினைப் பாவிப்பதிலுள்ள அனுகூலம் இலக்கணம் பற்றியெல்லாம் அதிகம் கவனிக்கத்தேவையில்லை. அவ்விதம் கூறும்போது பாத்திரங்களை அவர் விபரிக்கும் விதம் வாசிப்பவருக்கு ஒருவித இன்பத்தினை எழுப்பும். அதன் காரணமாகவே பலருக்கு இந்த நாவல் பிடித்திருப்பதாக உணர்கின்றேன். பேச்சு வழக்கில் ஒருவருக்கொருவர் உரையாடும்பொழுது 'மசிரை விட்டான் சிங்கன்', 'ஆள் பிலிம் காட்டுறான்' போன்ற வசனங்களைத் தாராளமாகவே பாவிப்பது வழக்கம். அவ்விதமானதொரு நடையில் கொரில்லாவின் கதை விபரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கதையில் ஈழத்து விடுதலைப் போராட்ட நிகழ்வுகள், புகலிட நிகழ்வுகள் ஆகியவை விபரிக்கப்பட்டுள்ளன.

அந்தோனிதாசனின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான மேன்முறையீட்டுக் கடிதத்துடன் நாவல் ஆரம்பமாகின்றது. கொரில்லா காட்டாற்ற ஏசுதாசன், அவனது மகனான கொரில்லா ரொக்கிராஜ் ஆகியோரின் வாழ்க்கை கூறப்படுகின்றது. ஒரு காலத்தில் சண்டியர்களின் ஆதிக்கம் நிலவிய யாழ்ப்பாணக் கிராமங்களில் பின்னர் இயக்கங்களின் வருகை சண்டியர்களின் ஆதிக்கத்தினை ஒழித்து, அதற்குப் பதிலாக இயக்கத்தவர்களின் ஆதிக்கத்தினைக் கொண்டுவருகின்றது. இந்தக் கொரில்லா நாவல் பதிவு செய்யும் விடயங்களில் இதுவுமொன்று. அடுத்தது பொதுவாக இயக்க நடவடிக்கைகளை விபரிக்கும் புனைவுகளில் நா.பாரத்தசாரதியின் புனைகதைகளில் நடமாடும் இலட்சிய மாந்தர்களைப் போல் பாத்திரங்களைச் சித்திரிப்பதுதான் வழக்கம். ஆனால் கொரில்லாவில் வரும் இயக்கத்தவர்களும், இயக்க நடவடிக்கைகளும் மிகவும் யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இயக்கத்தவர்கள் குறை, நிறைகளுடன் நடமாடுகின்றார்கள். அவர்களின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன. சமூக விரோதிகளென்று தாழ்த்தப்பட்டவர்கள் ஆரம்பத்தில் கொல்லப்படுவது, தமிழ் அரசியல்வாதிகள், இயக்கங்கள் எல்லாரும் சாதிய அடிப்படையில் இயங்குவது, சக இயக்கங்களுடனான ஆயுதரீதியிலான முரண்பாடுகள், புகலிடத்தில் தொடரும் அரசியல் படுகொலைகள், புகலிட வாழ்வின் பாதிப்புகளால் சிதைவுறும் லொக்காவின் குடும்பம் (இதனை ஒரு குறியீடாகவே கருதலாம்).

முதல் பகுதியில் அந்தோனிதாசனின் மேன்முறையீடும், அடுத்த பகுதியில் ரொக்கிராஜின் வரலாறும் கூறும் நாவலின் அடுத்த பகுதியில் ரொக்கிராஜும், அந்தோனிதாசனும் ஒருவரே என்று வருகின்றது. ஆனால் கதை சொல்லி யார்? அவருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? கதை சொல்லி செயற்கைக் காலுடன் நாவலில் வருகின்றார். அவர் எவ்விதம் தனது காலொன்றினை இழந்தார்? அதற்கான விடையெதனையும் நாவல் வெளிப்படுத்தவில்லை.

நாவலின் இறுதியில் லொக்கா என்னும் பாத்திரம் படுகொலை செய்யப்பட்டதாக வருகிறது. உடனேயே லொக்கா காவற்துறையினரின் பாதுகாப்பிலிருப்பதும் வருகிறது. அவர் தனது மனைவியை தனது துனிஷிய நண்பனான ரிடாவுடன் பாலியல் உறவு கொள்வதைக் கண்ட ஆத்திரத்தில் படுகொலை செய்துவிடுவதும் விபரிக்கப்படுகின்றது.

இவ்விதமாகச் செல்லும் நாவல் இறுதியில் பாரிசில் சபாலிங்கத்தின் படுகொலையுடன் முடிவடைகின்றது. நாவலின்படி கதை சொல்லியும் , இன்னுமொருவரும் தான் சபாலிங்கத்தைச் சந்திப்பதாக வருகின்றது. மற்றவர் வாசலை மறைத்து நிற்க , சபாலிங்கம் படுகொலை செய்யப்படுவதாக வருகின்றது. அவ்வாறென்றால் கதை சொல்லி யார்? அவரா சபாலிங்கத்தைக் கொன்றார்?

சபாலிங்கத்தின் கொலை நாவலில் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. நாவல் அந்தோனிதாசனெனும், 'கொரில்லா' என்றழைக்கப்படும் ரொக்கிராஜின் கதை. நாவல் முழுவதும் அவனது கதையே விபரிக்கப்படுகிறது. முடிவு மட்டும் சபாலிங்கத்தின் படுகொலையுடன் அமைந்திருக்கின்றது.

ஒருவர் கதை சொல்லும்போது சம்பவங்களை மாறி மாறிக் கூறுவது வழக்கம். உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற 83 இனக்கலவரத்தைப் பற்றிக் கூறும் ஒருவர் 58 கலவரத்து நிகழ்வுகளை இடையில் கூறலாம்; 77 கலவர நிகழ்வுகளை விபரிக்கலாம்; 81 யாழ்நகர் எரிப்பினை நினைவுபடுத்தலாம். மீண்டும் 83ற்கே திரும்பலாம். இது சாதாரணமானதுதான். இதற்காக இவ்விதமான கதை சொல்லலை பின்நவீனத்துவக் கூறென்று கூறலாமா?

இந்நாவலின் தலைப்பு 'கொரில்லா'. நாவல் சண்டியன் கொரில்லாவையும் (Gorilla)  அவனது மகனான 'கெரில்லா'வையும் (guerillaa) பற்றிக் கூறுகின்றது. ஊரவர்களால கெரில்லாவும் கொரில்லாவென்றே அழைக்கப்படுகின்றான். பொதுவாகவே தமிழர்கள் கெரில்லாவையும் கொரில்லா என்றே தவறுதலாக அழைப்பதை வாசித்திருக்கின்றேன்; கேட்டிருக்கின்றேன். நாவலுக்கு எதற்காக ஆசிரியர் கொரில்லா என்று பெயரிட்டார்? கொரில்லா ஒரு குறியீடாகப் பாவிக்கப்பட்டிருந்தால் நாவலில் அது ஆழமாகச் சித்திரிக்கப்படவில்லை என்றே தென்படுகிறது. நாவலில் வரும் பாத்திரங்களிரண்டுக்கு கொரில்லா என்று பெயர் வருவதாலோ, அல்லது அப்பாத்திரங்களிலொன்று கெரில்லாவாக இருப்பதாலோ கொரில்லா என்று நாவலுக்குப் பெயரிட்டிருந்தால் அது ஆழமானதாக எனக்குப் படவில்லை.

கொரில்லா தமிழில் பெற்ற வரவேற்பை ஆங்கில மொழியில் அல்லது ஏனைய மொழிகளில் பெறுமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் தமிழில் பாவிக்கப்பட்ட சுவையான பேச்சு மொழி ஏனைய மொழிகளில் சாதாரண மொழிவழக்காகப் போய்விடுவதால்தான்.

என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தீவுப்பகுதிக் கிராமமொன்றின் மீது ஈழத்துத் தமிழர்களின் போராட்ட அரசியல் ஏற்படுத்திய பாதிப்புகளை விபரிக்கும் சம்பவங்களின் கோவையாகவே கொரில்லா இருக்கிறது.

நாவலின் ஆரம்பத்தில் தொடரும் என்று வருகிறது. பின்னரும் பகுதிகளுக்கிடையில் தொடரும் என்று வருகிறது. இவ்விதம் நாவல் பிரிக்கப்பட்டிருப்பது நாவலின் புதிர்த்தன்மையினை அதிகரிப்பதற்காகவா அல்லது ஏதாவது காத்திரமான காரணமொன்றிற்காகவா என்பது புரியவில்லை.

நாவலில் ஆரம்பத்தில்வரும் அந்தோனிதாசனின் மேன்முறையீட்டுக் கடிதம் மேற்கு நாடுகளில் நிலவும் அகதிகள் பற்றிய சட்டங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றது..

"நான் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட ஆபத்துகளைச் சுட்டிக்காடிய பின்புங்கூட அவற்றிற்கு ஆதாரங்கள் எதையும் நான் தங்களுக்குக் காட்டாதபடியால் அந்த ஆபத்துகள் ஆபத்துகளே இல்லையென்ற முடிவுக்கு நீங்கள் வந்திருப்பது வருத்தத்திற்குரியது. ஐயா எங்கள் நாட்டில் எல்லாம் இராணுவம் ஒரு தமிழரை வெட்டிவிட்டு 'நாங்கள்தான் வெட்டினோம்' என்று ஒரு சான்றிதழை வெட்டப்பட்டவருக்கு வழங்குவதில்லை.' என்ற அக்கடிதத்தில்வரும் வரிகள் மேற்கு நாடுகளில் நிலவும் அகதிகள் பற்றிய நடைமுறைகளை விமர்சிக்கின்றன. இதனால்தான் அகதிகள் அகதிக்கதை கட்ட நிர்ப்பந்தத்துக்குள்ளாகின்றார்கள்.

அண்மையில் கேதரின் பெல்ஸியின் 'பின் அமைப்பியல் மிகச் சுருக்கமான அறிமுகம்' (அழகரசனால் மொழிபெயர்க்கப்பட்ட) நூலில் வரும் 'ஓர் எழுத்து நடை  என்கிற அளவில் சந்தைகளில் இன்று பிரபல்யமாகி, வாசகர்களுக்குச் சுகத்தைக் கொடுத்துப் பெருமளவு லாபம் ஈட்டும் ஒருவகை பின் நவீனத்துவமும் நம்மிடையே இருக்கிறதென லியோதார்த் கூறுகின்றார்.' என்ற வரிகளை வாசித்தபொழுது எனக்கு கொரில்லா நாவலின் நடை ஞாபகத்துக்கு வந்தது எந்தவிதக் காரணமுமற்ற தற்செயலாகவிருக்கலாம்.


27. பிரமிளின் 'காலவெளி': 'கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'
அண்மையில் பிரமிளின் 'வானமற்ற வெளி' (கவிதை பற்றிய கட்டுரைகள்) என்னும் தொகுதியினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழில் புதுக்கவிதையென்றால் படிமங்களுக்குப் பெயர் போன பிரமிளின் கவிதைகளைக் குறிப்பிட யாரும் மறுப்பதில்லை. குறிப்பாக 'பூமித்தோலில் அழகுத் தேமல், பரிதிபுணர்ந்து படரும் விந்து' என்னும் கவிதையினைக் குறிப்பிடாத விமர்சகர்களே இல்லையெனலாம். இத் தொகுதியிலுள்ள கட்டுரைகள் பிரமிளின் எழுத்துச் சிறப்பினைப் புலப்படுத்துவன. அவரது ஆழ்ந்த சிந்தனையினையும், வாசிப்பினையும் கூடவே புலமைத்துவத்துடன் கூடியதொரு கர்வத்தினையும் வெளிப்படுத்துவன. அந்தக் கர்வம் அளவுமீறி சில சமயங்களில் அணையுடைத்துப் போவதுமுண்டு என்பதற்கும் சான்றாக சில கட்டுரைகளில் வரும் கூற்றுக்கள் விளங்குகின்றன. அவ்விதம் கர்வம் அளவு மீறி விடும்போது, 'தனக்கு எல்லாமே தெரியுமென்ற அதிமேதாவித்தனத்தினைக் காட்ட முற்படும்பொழுது'  அதுவே அவர்மேல் எதிர்மறைவான விளவுகளை ஏற்படுத்தி விடுவதற்கு இத்தகைய கூற்றுகள் காரணமாகிவிடுகின்றன. இந்தக் கட்டுரை பிரமிளின் மேற்படி 'வானமற்ற வெளி' நூல் பற்றிய மதிப்புரையோ அல்லது விரிவான் விமரிசனமோ அல்ல. இது பிரமிளின் கவிதைகள் பற்றிய விரிவான விமரிசனமுமல்ல. மேற்படி நூலிலுள்ள சில கருத்துகள் ஏற்படுத்திய என் மன உணர்வுகளின் வெளிப்பாடாகவே இதனைக் குறிப்பிடலாம்.

முதலில் பிரமிளின் 'காலவெளி' பற்றிய கருத்தினைக் கவனிப்போம். 'கண்ணாடிக்குள்ளிருந்து ஒரு பதில்..' என்னும் அவரது கட்டுரையில் பிரமிள் காலவெளி பற்றிய கருத்தினை விமர்சித்து கோ.ராஜாராம் தாமரை இதழில் எழுதிய கட்டுரைக்குப் பதிலடியாக வெளிவந்துள்ள 'காலவெளி' பற்றிய கருத்துகளையே இங்கு பார்க்கப் போகின்றோம். மேற்படி காலவெளி பற்றி 'கட்டுரைகள் பற்றிய குறிப்புகள்..'  பகுதியில் "'காலவெளி' என்று பிரமிள் படைத்த சொல், இன்று பலராலும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு, நிரந்தரம் கொண்டு விட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையில் பிழையானதொரு கூற்று. காலவெளி என்றொரு சொல் பிரமிளால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. ஐன்ஸ்டனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகள் இப்பிரபஞ்சத்தைக் 'காலவெளி'யின் தொடர்ச்சியான வெளிப்பாடாகப் புலப்படுத்தி நிற்கின்றன. இதற்காக அறிமுககப்படுத்தப்பட்ட 'Space-Time' என்பதன் தமிழாக்கமே மேற்படி 'காலவெளி'  என்பதேயல்லாமல் இது பிரமிள் கண்டு பிடித்த புதுச் சொல் என்று கூறுவது தவறானதொரு மிகைப்படுத்தலாகும்.

'கண்ணாடியுள்ளிருந்து' என்ற பிரமிளின் கவிதைத் தொகுதியில் 'காலவெளி' பற்றித் தெரிவிக்கப்பட்ட பிரமிளின் கருத்துக்குப் பதிலடியாக கோ.ராஜாராம் தனது 'தாமரை (ஜூலை 1973)' விமரிசனத்தில் 'வெளியின் மூன்று பரிமாணங்களல்லாமல் நான்காவதாகக் காலம் என்ற ஒன்றைச் சேர்ப்பது சார்புக் கொள்கை. காலமே வெளியென்று எந்த விஞ்ஞானம் சொல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை' என்று தெரிவித்திருந்த கூற்று பிரமிளை மிகவும் அதிகமாகவே பாதித்துள்ளதென்பதற்கு அவரது மேற்படி பதிற் கட்டுரையே சான்று. மேற்படி ராஜாராமின் விமரிசனம் தன் ஞானத்தினையே கொச்சைப்படுத்தி விட்டதாகக் கருதிக் கொண்டு மிகவும் ஆக்ரோசமாகவே தனது தாக்குதலைத் தொடுக்கும்போது ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்ற நிலைக்குப் பிரமிள் தாழ்ந்து விடுவது துரதிருஷ்ட்டமானது. அதன் விளைவாக அவர் 'காலவெளி' பற்றிய கருத்துக்கு வலு சேர்ப்பதாக எண்ணிக் கொண்டு பின்வருமாறு சான்றுகளை முன் வைக்கின்றார்:

"இவரது கவனத்துக்கு Expanding Universe என்ற நூலின் ஆசிரியரும், ஐன்ஸ்டனின் சார்பு நிலைக் கொள்கையைக் கேந்திர கணிதத்தின் மூலம் விளக்கியவருமான Sir Arthur Eddington னின் பின்வரும் வரியைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். 'space and time sink into single shadow'. 'காலமும் வெளியும் ஒற்றை நிழலாக இழைகின்றன'. 'நேற்று நேற்று என்று, இறந்த யுகங்களில், என்றோ ஒரு நாளில் அவிந்த , ஒளிவேகத்தின் மந்தகதி தரும் நிதர்சனத்தில், இன்றும் இருக்கின்றன' என்று E=MC2 என்ற கவிதை குறிப்பிடும்போது, அடுத்தவரியான 'காலமே வெளி' என்ற முடிபுக்கு ஆதாரமாகவே மேற்படி வரிகள் பிறக்கின்றன...."

இங்கு பிரமிள் சேர்.ஆர்தர் எடிங்டனின் வரிகளையே பிழையாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றார். மேற்படி கூற்றில் சேர்.ஆர்தர் எடிங்டன் 'காலமும் வெளியும் ஒற்றை நிழலாக  இழைகின்றன' என்று இரண்டையும் ஒற்றை நிழலாகப் பிரிக்க முடியாமல் நிலவுகின்றன என்ற கருத்துப்படக் கூறியிருக்கிறாரே தவிர ஒருபோதுமே இரண்டுமே ஒன்று என்று கூறவில்லை. உண்மையில் நவீன பெளதிகத்தில் 'காலவெளி'யாலான இப்பிரபஞ்சமானது முப்பரிமாணங்களையுள்ளடக்கிய வெளியையும், ஒற்றைப் பரிமாணமுள்ள காலத்தினையும் ஓரமைப்பாக உள்ளடக்கி 'காலவெளிச் சம்பவங்களின் இடையாறாத தொடர்ச்சியாக'க் (Spacetime continnum) கருதப்படுகிறது. முப்பரிமாண உலக வெளியானது நீள, அகல, உயரம் ஆகிய முப்பரிமாணங்களால் ஆனது. நீளம், அகலம், உயரம் ஆகியவை வேறு வேறான அளவுகளைக் கொண்டிருந்தபோதும் முப்பரிமாண வெளியைப் பொறுத்தவரையில் பிரிக்க முடியாதவை. அதுபோல்தான் அதுவரை காலமும் சுயாதீனமானவையாகக் கருதப்பட்டு வந்த முப்பரிமாண வெளியும், காலமும் சார்பியற் கோட்பாடுகளின் விளைவாக ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி சார்ந்திருப்பவை என்ற உண்மை உணரப்பட்டது. காலமும், வெளியும் வெவ்வேறானவையாக இருந்தபோதிலும், நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமானது 'காலவெளிச் சம்பவ்ங்களின் இடையாறாத தொடர்ச்சியாகப் புரிந்து கொள்ளப்பட்டது சார்பியற் கோட்பாடுகளின் விளைவாகத்தான்.

ஐன்ஸ்டனின் சார்பியல் தத்துவங்களின்படி வெளியும் பொருளைப் போல்தான் கருதப்படுகிறது. சூரியனின் பொருண்மைகாரணமாக அதனருகிலுள்ள வெளி வளைந்துவிடும் தன்மையினால் அதனருகில் செல்லும்போது ஒளி கூட வளைந்து விடுகிறதென்பதை பிரமிள் குறிப்பிடும் சேர்.ஆர்தர் எடிங்டனே சூரிய கிரகணமொன்றை அவதானித்தபொழுது பரிசோதனை வாயிலாக நிறுவி ஐன்ஸ்டனின் சார்பியற கோட்பாடுகளுக்கு மேலும் வலுவினையளித்தவரென்பதைப் பிரமிள் அறியாமல் போனது விந்தையே. பிரமிளே மேற்படி கூற்றின இறுதிப் பகுதியில் கூறிவதுபோல் "..காலமேவெளி என்ற கூற்று கவிக் கூற்றாகவே இங்கு நிகழ்ந்துள்ளது. ஆதாரம் கவிதைக்குள்ளேயே உள்ளதால் இதற்கு இரண்டாம் பட்சமான ஆதாரம்தான் விஞ்ஞான ஆதாரம்." என்று கூறுவதுடன் நின்றிருக்க வேண்டுமேயல்லாமல் விஞ்ஞானரீதியாக அதனை விளக்க முற்பட்டிருக்கக் கூடாது. அவ்விதம் அவர் விளக்காமல் விட்டிருந்தால் 'காலவெளி'பற்றிய கவிஞனொருவனின் சுதந்திரமான இன்னுமொரு விளக்கமாகவும், கற்பனையாகவும் அதனைக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர் அவ்விதம் செய்யாமல் காலவெளி பற்றிய தனது பிழையான புரிதலை நியாயப்படுத்த விளைவதன் மூலம் அக்கவிதைவரிகளின் மேற்படி சிறப்பினை இல்லாமலாக்கி விடுகின்றார். இத்துடன் பிரமிள் விடவில்லை. மேற்படி பதிற் கட்டுரையில் மேலும் கோ.ராஜாராமைத் தனிப்பட்டரீதியில் வம்ப்புக்கிழுக்கவும் செய்கிறார். '..கோ.ராஜாராம் ஒரு M.Sc. என்று நான் கேள்விப்படுவதால், ஆரம்பக்கல்வி சர்டிபிகேட் கூட இல்லாத எனது ஞான சூன்யம் பெருமைப்படும்படி, அவருக்கு மேலும் ஒரு சாமான்ய ஸயன்ஸ் நியூஸைத் தர ஆசைப்படுகிறேன்..' என்று கூறும்போது அவரது கர்வம் எல்லை மீறுவதாகவே கருதவேண்டும். சிறுபிள்ளைத்தனமாகவும் இருக்கிறது.  இங்கு அவரது ஞான சூன்யம் பெருமைப்படுவதற்கு மாறாகச் சிறுமைப்படவே செய்கிறது.

அடுத்ததாக அவர் கோ.ராஜாராமுடன் மோதுவது 'ஜடம்' பற்றிய வார்த்தைப் பிரயோகத்தைப்பற்றி. மேற்படி கவிதையில் 'சக்தி = ஜடம் .ஓளிவேகம்2 என்ற பிரமிளின் சொற்பிரயோகம் பற்றி ராஜாராம் "M என்பது Mass ஆகும். Mass என்பது ஜடமா?' என்று தனது எதிர்வாதத்தில் கேட்டதுதான் பிரமிளின் ஆத்திரத்தை அதிகரித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாகத் தேவையில்லாமல் மீண்டும் ராஜாராமின் கல்வியறிவினைச் சீண்டியபடி பிரமிள் பின்வருமாறு பதிலளித்திருக்கின்றார்: "... அப்படியானால் ஜடம் என்ற பிரயோகம் எதைக் குறிப்பிடுகிறதோ, அதில் பொருண்மை இல்லையா? என்று என் கல்வியறிவின்மை இந்த M.Scயைக் கேட்டுக் கொள்கிறது. அத்தோடு கவிஞன் என்ற வகையில் ஜடம் என்ற வார்த்தையே பொருண்மை என்ற வார்த்தையை விட உடனடித்தொற்றுதலை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்" என்கிறார்.

பொருண்மை அல்லது திணிவு ஆகிய வார்த்தைப் பிரயோகங்கள் கூறும் கருத்துக்கும், ஜடம் என்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசமுண்டு. ஜடமென்றால் உயிரற்ற பொருளென்பதைக் குறிப்பது. உயிரற்ற பொருளான கல் போன்ற ஒன்றிற்கும் பொருண்மை அல்லது திணிவு உண்டு. அதற்காக திணிவு அல்லது பொருண்மையை, பொருண்மை என்ற வார்த்தையை விட உடனடித்தொற்றுதலை வாசகனுக்கு ஜடம் ஏற்படுத்துகிறது என்பதற்காக,  ஜடமென்று வாதிட முனைவது சிறுபிள்ளைத்தனமானது.  கணிதவியலில் பொருண்மை அல்லது திணிவு என்பது ஒருபொருளிலுள்ள பொருளின் அளவைக் குறிப்பது. பொருளும் , அதன் மீதான புவியீர்ப்பு விசையின் தாக்கமும் சேர்ந்ததே நிறையாகக் கருதப்படுவது (W = Mg; இங்கு W என்பது நிறை; M என்பது பொருண்மை அல்லது திணிவு' g என்பது புவீயீர்பபிலான ஆர்முடுகல்). இதற்கு ஆரம்பக் கல்வியறிவே (ஒன்பதாம் வகுப்பிலேயே பிரயோக கணிதம், பெளதிகம் போன்ற பாடங்களில் இதுபற்றிய புரிதல்களேற்பட்டு விடுகின்றன) போதுமானது. இதற்கும் தன் பக்க நியாயத்தை விளக்கப்படுத்துவதற்காக கோ.ராஜாராமின் கல்வியறிவினை இவ்விதம் இழுத்துச் சிறுமைப்பட்டிருக்கத் தேவையில்லை.

இவ்விதமாகப் பிரமிள் தனது 'காலவெளி' மற்றும் 'ஜடம்' போன்ற சொற்பிரயோகங்களுக்கு விளக்கமளிக்காமல் விட்டிருக்கும் பட்சத்தில் அவரது மேற்படி கவிதையினை வாசிக்குமொரு வாசகர் கவிஞன் பிரமிளின் காலவெளி பற்றிய விஞ்ஞானத்திற்கு மாறான அர்த்தத்தினை அவனது கவிதைக்குரிய சிறப்பானதொரு அர்த்தமாகவும் கொண்டிருக்கலாம். பிரமிள் கவிஞனென்ற வகையில் கண்டுகொண்ட அர்த்தங்களாக, கற்பனைகளாக அவற்றைக் கருதிக் கொண்டிருக்கலாம்.அந்தச் சந்தர்ப்பத்தினைப் பிரமிளின் மேற்படி பதிற் கட்டுரையும், விளக்கமும் சீர்குலைத்து விடுகின்றன. அந்த வாய்ப்பையே பிரமிள் கெடுத்துக் கொண்டார் மேற்படி தனது 'அறியாமை'யினால். விஞ்ஞானத்துறையில் படித்த ஒருவரை விடத் தனது புரிதல் மேலென்பதுபோன்றதொரு தொனியில் பிரமிள் விளக்கமளிக்க முற்பட்டதன் மூலம் பிரமிளின் மேற்படி கவிதை தனது கவிதைச் சிறப்பினையே இழந்து சாதாரணமாகி விடுகிறது. அக்கவிதையினை வாசகனொருவன் தன் விருப்பத்துக்குரிய வகையில் புரிந்து கொள்ளலைத் தடுத்துவிடக் காரணமாகிவிடுகிறது பிரமிளின் மேற்படி விடயங்கள் பற்றிய புரிதலும், விளக்கமும்.

28. Jerzey kosinskiயின் Being There!
[ இந்தக் கட்டுரை சுபமங்களா, மார்ச் 1995 இதழில் வெளிவந்த கட்டுரை. 'போலிஸ் அமெரிக்க'ரான எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There பற்றிய அறிமுகக் கட்டுரை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. ஜேர்சி கொசின்ஸ்கியின் இன்னுமொரு புகழ்பெற்ற நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்' (The Painted Birds). இது நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியதொரு படைப்பாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் , யூதச் சிறுவனான ஜேர்சி கொசின்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் அவரடைந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்'. ஜேர்சி கொசின்ஸ்ஜியின் வாழ்வும் தற்கொலையிலேயே முடிந்து போனது சோகமானது. - வ.ந.கி]  அண்மையில் Jerzy kosinski எழுதிய Being There என்ற கைக்கடக்கமான சிறியதொரு நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதற்கொப்ப அளவில் சிறியதானாலும் இந்நாவல் உள்ளடக்கத்தில் கனதியானது. மனிதனைப் பாதிக்கும் நிலைமைகளை ஒருவித கிண்டல் பாணியில் நோக்கி விமர்சிக்கும் வகையிலமைந்த நாவலை 'சட்டயர்' (Satire) என்போம். Being There அந்த வகையான நாவல்களில் குறிப்பிடத்தக்கதொன்று. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் இச்சிறுநாவல் இன்றைய மனிதனைப் பலமாகப் பாதிக்கும் உலக, உள்நாட்டு அரசியல் மற்றும் குறிப்பாகத் தொலைகாட்சி பற்றிப் பலமாகவே விமர்சனத்தை முன்வைக்கின்றது. உருவத்தைப் பொறுத்த வரையில் கிறிஸ்த்தவ தத்துவ சமயநூலான பைபிளினது பாதிப்பு மிக அதிகமாகவே தெரிகின்றது.

கதை இதுதான்: 'தற்செயல்' (Chance) என்ற தோட்டக்காரனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை விவரிப்பதுதான் நாவலின் பிரதானமான பணி. இவனுக்குச் 'சான்ஸ்; என்ற பெயர் வந்ததற்குக் காரணமே பூமியில் இவனது பிறப்பு தற்செயலானது என்பதுதான். இவன் ஒரு முட்டாள். இவனால் எழுதப் படிக்க முடியாது. பொதுவாகத் தன்னுணர்வு, சுய பிரக்ஞை என்பதேயற்றவன். இவன் ஒரு செல்வந்தனின் வீட்டுத் தோட்டகாரனாகப் பல வருடங்களாகப் பணி புரிந்து வருகின்றான். இவனது ஒரே வேலை அச்செல்வந்தனது தோட்டத்தைப் பராமரிப்பதுதான். மிகுதி நேரத்தில் தனக்கென்று ஒதுக்கிய பகுதியில் இருந்தபடி டெலிவிஷனைப் பார்ப்பதுதான். பல வருடங்களாக இவன் அச்செல்வந்தனது வீட்டில் வேலை பார்த்து வந்தபோதும் இவனிற்கென்று இவன் இருந்ததற்கான அத்தாட்சிப் பத்திரங்களோ , ஆளடையாளப் பத்திரங்களோ எதுவுமே இவனிடமில்லை. இவனது இருப்பிற்கான (Being) எதுவித தடயங்களுமே இவனைத் தவிர இவ்வுலகில்லை. திடீரென இவனது முதலாளியான அச்செல்வந்தன் இறந்து விடவே இவனுக்குப் பிரச்சனை உருவாகின்றது. இவன் அவ்வீட்டில் நீண்டகாலம் இருந்ததற்கான எதுவிதத் தடயங்களுமே இல்லாத நிலையில் செல்வந்தனது சட்டத்தரணிகளால் வீட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றான். முதன் முதலாக இவன் அந்தத் தோட்டத்தைவிட்டு ஏனைய மனிதர்கள் வாழும் வெளியுலகுக்கு வருகின்றான். செல்வந்தனால் இவனுக்கு அளிக்கப்பட்ட உயர்ரக ஆடைகள் அணிந்தபடி பார்வைக்கு உயர்குடிக் கனவான் போன்ற தோற்றத்துடன் வெளியுலகில் காலடி எடுத்து வைக்கும் இவனை அமெரிக்க அரசியல் வர்த்தக மட்டத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் சுகவீனமுற்றுப் படுக்கையிலிருக்கும் பிரமுகர் ஒருவரின் மனைவியான 'எலிஸபெத் ஈவ்' (Elizabeth Eve) என்பவள் மோதி விடுகின்றாள். அதற்குப் பிராயச்சித்தமாக இவனை அப்பெண்மணி தனது மாளிகைக்குக் கொண்டு சென்று தனது குடும்ப வைத்தியரின் உதவியுடன் பராமரிக்கின்றாள். இவனது உடையலங்காரத்தைப் பார்த்து இவனை ஓர் உயர்குடிக் கனவானாக எண்ணி விடும் அப்பெண்மணி இவனது பெயரைக் கேட்கும் பொழுது அதற்கு இவன் தனது பெயர் 'சான்ஸ் கார்டினர்' ( சான்ஸ் தோட்டக்காரன்)" எனப் பதிலிறுக்கின்றான். அதனை அப்பெண்மணி Chauncy Gardiner என் விளங்கிக் கொள்கின்றாள். இவ்விதமாகச் Chauncy Gardiner ஆக உருமாறிவிட்ட Chance Gardener அப்பெண்மனியின் உதவியால் அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றான். ஒருமுறை தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்வொன்றில் அமெரிக்க ஜனாதிபதி நாட்டுப் பொருளாதார நிலைமைகளைப் பற்றிக் கேட்ட கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் தோட்டம் தவிர வேறெந்த அறிவுமற்ற முட்டாளான சான்ஸ் தனது தோட்டத்தை எண்ணிக் கொண்டு பதிலிறுக்கின்றான். 'பருவங்கள் மாறிவரும்' என்கின்றான். இதனைப் பொருளாதார நிலைமை மாறும் எனக் கூறுவதாக எண்ணிக் கொண்ட ஜனாதிபதி மகிழ்சியடைகின்றார். இவ்விதமாக Chanuncey Gardinerஐ அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக தொலைக்காட்சி உருமாற்றி விடுகிறது. இவ்விதம் முக்கிய புள்ளியாக உருமாறி விட்ட 'சான்ஸி கார்டின'ரின் நட்பைப் பெற ருஷ்ய தூதரக அதிகாரி முயல்கின்றார். 'சான்ஸி கார்டின'ரின் இருப்பினை உறுதிப்படுத்தும் எந்தவிதப் பத்திரங்களையும் பெற முடியாத தனது உளவுப்படையினர் மேல் சீற்றமுறும் அமெரிக்க ஜனாதிபதி 'சான்ஸி கார்டினர்' சோவியத் உளவாளியாகயிருக்கக் கூடுமோவென ஐயுறுகின்றார். அதே சமயம் 'Chance'ஐப் பல்கலைக்கழகமொன்றின் துணை வேந்தராக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இச்சிறு நாவலிம் பிரதானமான நிகழ்வுகள் இவைதான்.

முதன் முதலில் இச்சிறு நாவலின் உருவமைப்பைச் சமயம் எவ்விதம் பாதித்துள்ளதென்பதைப் பார்ப்போம். விவிலிய நூல் கூறும் படைப்புத் தத்துவத்தின்படி 'படைப்பு' ஏழு நாட்களில் நடைபெறுகின்றது. இந்நாவலும் ஏழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிறித்தவ சமயத் தத்துவப்படி 'ஈடன் பூங்கா'வில் படைக்கப்பட்ட ஆதாமும் , ஏவாள் இருவருக்கும் ஆரம்பத்தில் மரணமற்ற வாழ்க்கைதானிருந்தது. அவர்களைப் படைத்த கர்த்தரின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், பாம்பினால் தூண்டப்பட்ட ஏவாளின் வற்புறுத்தலின்பேரில் ஆதாமும் ஏவாளும் ஈடன் தோட்டத்திலிருக்கும் நன்மை தீமைகளை அறிவிக்கும் விருட்சத்தின் கனியைப் புசிக்கின்றார்கள். அவர்கள் வாழ்க்கையில் பாவ,புண்ணியம் புகுந்து கொள்கிறது. இச்சிறு நாவலில் வரும் பெண்மணிக்கும் பெயர் Eve, Elizabeth. ஈடன் பூங்காவைப் போல் இந்நாவலிலும் ஒரு பூங்கா வருகின்றது. இந்நாவலின் உருவத்தில் சமயத்தின் பங்களிப்பை இவை கூறி நிற்கின்றன.

முழு முட்டாளான Chanceஐ வெற்றிகரமான டி.வி. பேர்சனால்டியாக' தொலைக்காட்சி உருமாற்றி விடுகின்றது. தொலைக்கட்சியில் காட்டப்படும் இவனது உருவத்தைப் பற்றி ஒரு பெண்மணி பின்வருமாறு எண்ணுகின்றாள்:

Manly; Well-Groomed;
Beautiful voice;
Sort of a Gary Grant.
He is not one of these phony idealists.."( பக்கம் 58).

உண்மையில் இவன் ஒரு வடிகட்டின முட்டாள். இதுதான் தொலைக்காட்சியினால் சமுதாயத்தில் ஏற்படுகின்ற பெரிய பாதிப்பு. பொய்யான பிம்பங்களைத் தொலைக்காட்சி உண்மையைப் போல் காட்டி விடுகின்றது. உண்மையாகவே வெளிப்புற உருவை மட்டும் தான் தொலைக்காட்சி வெளிப்படுத்துகிறது. ஆழத்தே புதைந்து கிடக்கும் உண்மையை அது வெளிப்படுத்துவதேயில்லை. உண்மையில் யதார்த்தத்தைத் திரித்துக் காட்டுவதன் மூலம் போலியான வெளிப்பாட்டையே தொலைக்காட்சி உருவாக்குகின்றது. அது மட்டுமல்ல. தொலைக்காட்சி எந்த நிகழ்வையுமே ஒரு பொழுதுபோக்கு என்ற நிலைமைக்குச் சுருக்கி விடுகின்றது. அண்மையில் நடைபெற்ற வளைகுடா யுத்தத்தில் நேசநாடுகள் குண்டுகள் பொழிவதை ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல பார்த்தோமே தவிர, அதன் பின்னாளிருக்கும் மனித அழிவுகளையோ, வேதனையையோ உணர முடியவில்லையே. உண்மையில் இந்நாவல் அமெரிக்க ஜனாதிபதியாக ரீகன் தெரிவாவதற்கு முன்னால்தான் எழுதப்பட்டது. இந்நாவலில் வரும் முட்டாள் தோட்டக்காரனை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் முக்கிய புள்ளியாக எவ்விதம் தொலைக்காட்சி மாற்றி விடுகின்றதோ அந்த நிலைமைதான் ரொனால்ட் ரீகனுக்கும் ஏற்பட்டது என்று சில இலக்கிய விமர்சகர்கள் ஒப்பிடாமலுமில்லை.

அமெரிக்க ஜனாதிபதி, சோவியத் தூதுவர் ஆகிய பாத்திரங்களினூடு அணுவாயுதப் போட்டி பற்றியும், விரயமாகும் பணம் பற்றியும் விமர்சனத்தை முன் வைத்தாலும் இந்நாவலின் பிரதானமான நோக்கம் தொலைக்காட்சியினால் உருத்திரிக்கபப்ட்ட உண்மைகளை உண்மைகளாக ஏற்றுக் கொள்ளூம் சமுதாயமொன்றில் உருவாகக் கூடிய ஆபத்துக்களை எச்சரிக்கை செய்வதே. இத்தகைய முட்டாள்களின் கைகளில் அதிகாரம் அகப்பட்டு விடுவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் முழுமனித இனத்தையே பாதித்து விடும் என்பதைத்தான் மறைமுகமாக இச்சிறுநாவல் உணர்த்தி வைக்கின்றது. ஹெமிங்வேயின் 'கடலும் கிழவனும்', ஆல்பேர்ட் காம்யுவின் 'அந்நியன்' மற்றும் ஸ்டீன் பேக்கின் 'முத்து' போன்று அளவில் சிறியதானாலும் உருவத்திலும், உள்ளடக்கத்திலும் காத்திரமானதொரு நாவல்தான் Being There. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டியதொரு நாவல் என்று கூறினால் அது மிகையில்லை.

நன்றி: சுபமங்களா, மார்ச் 1995 ,பதிவுகள்.காம், திண்ணை.காம்


29. சரத்சந்திரரின் தேவதாஸ் பற்றி...

அண்மையில் மறைந்த எழுத்தாளரும், பிரபல மொழிபெயர்ப்பாளருமான சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில்  வெளியான வங்க நாவல்கள் அல்லது படைப்புகள் எதனையாவது எங்கு கண்டாலும் எடுத்து வாசிக்கத்தவறுவதேயில்லை. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான வங்க நாவலான 'நீல கண்டப்பறவையைத்தேடி ' வாசித்ததிலிருந்து ஆரம்பித்த என் விருப்பங்களில் இதுவுமொன்று. மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில் அற்புதமாக விளங்குபவை இவரது மொழிபெயர்ப்புகள். அதுவே இவரது மொழிபெயர்ப்பின் சிறப்பும் கூட.

இவரைப்போல் இன்னுமொருவர் ஞாபகமும் கூட வருகிறது. எழுபதுகளில் என் மாணவப்பருவத்தில் கா.ஶ்ரீ.ஶ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபல மராட்டிய நாவலாசிரியரான காண்டேகரின் படைப்புகளை ஒரு வித வெறியுடன் தேடிப்பிடித்து வாசித்திருக்கின்றேன். காண்டேகரின் நாவல்களில் வரும் 'வாழ்க்கையென்றால் புயல்' போன்ற வசனங்களை விரும்பி வாசித்த அப்பருவத்து நினைவுகள் இப்பொழுதும் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

அண்மையில் டொராண்டோவிலுள்ள பொதுசன நூலகத்தின் ஸ்கார்பரோ கிளையொன்றில் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான தேவதாஸ் நாவலின் பிரதியொன்றைக்கண்டபோது , அம்மொழிபெயர்ப்பு சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான காரணத்தினால் எடுத்து வாசிக்க விரும்பி இரவல் பெற்று வந்தேன். , 'நல்லநிலம்' பதிப்பக வெளியீடாக வெளீவந்த பிரதி இது.  தேவதாஸ் நாவலை எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான த.நா.குமாரசாமியும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பினை நானின்னும் வாசிக்கவில்லை.

ஏற்கனவே திரைப்படம் மூலம் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான கதை. வாசிப்பதில் அப்படியென்ன பெரிதாக இருக்கப்போகின்றது என்றொரு எண்ணமும் கூட எழுந்தாலும். மொழிபெயர்ப்பாளரின் மேலிருந்த விருப்பு காரணமாக எடுத்து வந்து வாசித்தேன்.

சிறிய நாவல். விரிந்த , ஐந்நூறு பக்கங்களைக்கடந்த பெரிய நாவல்களிலொன்றல்ல. மானுட உளவியல் போராட்டங்களை விரிவாக, பக்கம் பக்கமாக விவரித்துச்சொல்லும் படைப்புமல்ல. எனக்கு அதிகம் பிடித்த இயற்கை வர்ணனைகள் நிறைந்த நாவலுமல்ல. ஆனாலும் வாசித்த பொழுது முக்கியமாக நாவலின் முடிவினை வந்தடைந்த பொழுது நெஞ்சினை அதிர வைத்த படைப்பு சரச்சந்திரரின் தேவதாஸ்.

ஏன் இந்தப்படைப்பு மிகுந்த வரவேற்பினையும், ரோமியோ-யூலியட், லைலா- மஜ்னு , அம்பிகாபதி- அமராவதி வரிசையில் மக்கள் மனதில் நிலையான இடத்தைப்பெற்றது என்று சிந்தனையோடியது.

இந்த நாவலின் சிறப்பு பாத்திரங்களின் உரையாடல்கள், செய்கைகள் மூலம் தூய காதலின் சிறப்பினை வெளிப்படுத்தியிருப்பதுதான். பெரும்பாலும் உண்மையான காதல் என்று பலர் தம் வாழ்வில் அனுபவிக்கும் காதல் உணர்வுகள் உண்மையான காதல் உணர்வுகள் அல்ல என்பதென் கருத்து. பருவத்துக்கிளர்ச்சிகளை, அவற்றின் விளைவுகளை உண்மையான காதலாகப்பலர் கருதி விடுகின்றார்கள் என்று தோன்றுகிறது. அதனால்தான் அவ்விதமான காதல் நிறைவேறாதபோது ஒருவர் மீது ஒருவர் ஆத்திரம் கொள்கின்றார்கள். வஞ்சம் தீர்த்துக்கொள்ள விளைகின்றார்கள். காதல் உண்மையாகவிருப்பின் விளைவு எவ்விதமாகவிருப்பினும் , அவ்விதமான காதல் உணர்வுகளால் பீடிக்கப்படும் ஒவ்வொருவரும் மற்றவரின் நல் வாழ்வுக்காகவே முதலில் வேண்டிக்கொள்வார்கள். அவ்விதமில்லாத எந்தக் காதலும் உண்மையான காதலாக இருக்க முடியாது. இது என் தனிப்பட்ட கருத்து.  இந்நாவலில் வரும் தேவதாஸ்-பார்வதிக்கிடையிலான காதல் அவ்விதமான உண்மையான காதல்.

சிறு வயதிலிருந்தே தேவதாஸ்-பார்வதிக்கிடையில் தொடங்கி வளர்ந்த தூய நட்பு, காதலாகப்பரிணமிக்கின்றது. அவள் அவனை எப்பொழுதுமே 'தேவ் அண்ணா!" என்றே அழைக்கின்றாள். அவன் செய்யும் குறும்புத்தனங்கள், குளப்படிகள் இவற்றால் பாதிக்கப்படும் தருணங்களில் எல்லாம் பெரும்பாலும் அவள் அவற்றை வெளிப்படுத்தி அவனுக்குத்தண்டனை வாங்கிக்கொடுப்பதில்லை. மறைத்து அவனுடன் தொடர்ந்தும் இருப்பதற்கே விரும்புகின்றாள். அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் நண்பர்களாகப்பழகுபவர்கள். இருந்தாலும் தங்கள் பிள்ளைகள் மணம் முடிப்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். சிறு சிறு சமூக ஏற்றத்தாழ்வுகள் அவர்கள் முன்னால் பெரிதாக விரிகின்றன. ஆனால் அவற்றை அவர்கள் உணரும்போது வாழ்க்கைப்போராட்டத்தில் சிக்கி தேவதாஸ்- பார்வதி இருவரின் வாழ்க்கைப்படகுகளும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கத்தொடங்கி விட்டிருந்தன.

அவளுக்குத்திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அவளை மனைவியை இழந்த, அவளையொத்த பருவத்தினரான பிள்ளைகளைக்கொண்ட, செல்வந்தரான , முடியிழந்த , முதியவர் ஒருவருக்கு மணம் முடித்து வைப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தன் மணவாளனாகத் தேவதாசையே எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவளான பார்வதி, ஓரிரவு அவனைச்சென்று சந்திக்கின்றாள். அவனது காலடியில் ஓரிடம் கேட்கின்றாள். அவனுடன் ஓடிவரவும் துணிவுடனிருக்கின்றாள். ஆனால் அவனோ அச்சமயத்தில் அவள் மேல் தான் வைத்திருந்த காதலையும் உணர முடியாத நிலையில் அல்லது வயதிலிருக்கின்றான். தன்னை மறந்து விடும்படியும் , தன்னால் தன் பெற்றோரை மீற முடியாத நிலை பற்றியும் கடிதம் எழுதுகின்றான். ஆனால் தன்னை நன்குணர்ந்து, அவன் அவளிடம் ஓடி வந்தபோது அவளால் அவனை ஏற்க முடியவில்லை. அந்தச்சந்திப்பில் அவர்களுக்கிடையில் வாக்குவாதமும் கூடவே சிறு மோதலும் ஏற்பட்டு விடுகிறது. தன்னை ஏற்றுக்கொள்ளும்படி அவன் அவளிடம் வேண்டுகின்றான். ஆனால்  ஏற்கனவே அவனது மறுப்பாள் பாதிக்கப்பட்ட அவள், அந்த முதியவரையே மணந்து அவரது ஊருக்கே சென்று விடுகின்றாள்.

அதன் பின் தேவதாசின் வாழ்க்கை மாறிவிடுகின்றது. பார்வதியின் இழப்பை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. குடிக்கத் தொடங்குகின்றான்.

பின்னர் தேவதாசின் தந்தையின் மரணத்தின்போது , வந்திருந்த பார்வதியை அவன் சந்திக்கின்றான். அவனது நிலை கண்டு வருந்தும் பார்வதி அவனைத்தன்னுடன் வரும்படி கூறுகின்றாள். குடியைக்கைவிடும்படி சத்தியம் செய்து தர வற்புறுத்துகின்றாள். அவன் கூறுகின்றான்: "ஒன் வார்த்தையை மறக்க மாட்டேன். என்னகைக்கவனிச்சுக்கிறதாலே ஒன் துக்கம் மறையும்னா நான் வருவேன்.  சாகறதுக்கு முன்னாலே கூட எனக்கு ஒன்னோட வார்த்தை ஞாபகமிருக்கும்"

ஆனால் அவ்விதமே அவன் சாகக்கிடக்கும்போது அவளுக்குக் கூறியபடி அவளைக்கடைசி நேரத்திலாவது சந்திப்பதற்காக அவளது வீடு நோக்கிச் செல்கின்றான். அவளது வீட்டு வாசலின் முன்னாலேயே விழுந்து கிடக்கின்றான். இது எதனையுமே அவள் அறியாத நிலையில் சம்பவங்கள் விரைகின்றன. பார்வதிக்கு யாரோ ஒருவன் குடித்து விட்டு விழுந்து கிடக்கின்றான் என்று கதைப்பதைக் கேட்டாலும், அம்மனிதன் தேவதாஸ்தான் என்பது தெரியவில்லை. அவன் இறந்து, யாருமில்லாத நிலையில் எரிக்கப்பட்ட நிலையிலேயே அவளுக்கு அவ்விதம் இறந்தவன் தேவதாஸ், அவள் மனதில் குடியிருக்கும் தேவதாஸ் என்பது தெரியவருகிறது. சித்தப்பிரமை பிடித்தவளைப்போல் அவனைத்தேடி ஓடுகின்றாள். அவளை ஓடிச்சென்று அவளது குடும்பத்தவர்கள், வேலைக்காரர்கள் எல்லாரும் அவளது மயங்கிய உடலைத்தூக்கி வீடு கொண்டு வருகின்றார்கள். அந்தக் காட்சியைச் சரச்சந்திரர் பின்வருமாறு விபரிக்கின்றார்:

"மறுநாள் அவளது மயக்கம் தெளிந்தது. ஆனால் அவள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஒரு வேலைக்காரியை மட்டும் கூப்பிட்டுக்கேட்டாள்: 'ராத்திரியிலே வந்தாரா? ராத்திரிபூரா இருந்தாரா?'

அதன்பிறகு அவள் பேசவேயில்லை."

ஆனால் அதன் பின்னர் அதுவரை மறைவாகவிருந்து தேவதாஸ்-பார்வதி கதையினை , படர்க்கையில் விபரித்துக்கொண்டு வந்த கதாசிரியர் , நேரடியாகவே தலையிட்டுச் சில  வார்த்தைகளை உதிர்க்கின்றார். அதுவரையில் நாவலின் சம்பவங்களினூடு, பாத்திரங்களின் உரையாடல்களினூடு , அவர்களின் வாழ்க்கையினுள் தம்மை மறந்து, அவர்கள்தம் இன்பதுன்பங்களுக்குத்தாமும் ஆட்பட்டுக்கொண்டிருந்த வாசகர்களின் துயரத்தினை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்து விட்டன கதாசிரியர் தலையிட்டு உதிர்க்கும் அவ்வார்த்தைகள். அவ்வார்த்தைகள் இதோ:

"இதன்பிறகு பார்வதிக்கு என்ன ஆயிற்று , அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. இது பற்றி விசாரிக்கவும் விருப்பமில்லை. தேவதாஸை நினைக்கக் கஷ்ட்டமாயிருக்கிறது. இந்தக்கதையைப் படிக்கும் நீங்களும் எங்களைப்போலவே வருத்தப்படலாம். எனினும் எப்போதாவது தேவதாஸைப்போல் அதிருஷ்ங்கெட்ட, தறுதலையான, பாவி எவனையாவது பார்த்தால் அவனுக்காகச் சிறிது பிரார்த்தனை செய்யுங்கள். என்னதான் நேர்ந்தாலும், அவனுக்கு நேர்ந்தமாதிரி சாவு வேறு எவருக்கும் நேர வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யுங்கள். மரணத்தில் மோசமில்லை. ஆனால் சாமும் தறுவாயில் அவனது நெற்றிக்கு ஒரு பரிவு நிறைந்த கையின் ஸ்பரிசம் கிடைக்கட்டும். இரக்கத்தால் ஈரமான , பரிவு மிக்க ஒரு முகத்தைப்பார்த்துக்கொண்டே அவனது வாழ்வு முடியட்டும். யாரோ ஒருவருடைய ஒரு கண்ணீர்த்துளியைப்பார்த்தாவது அவன் இறக்கட்டும்!.."

சரச்சந்திரரின் தேவதாஸ் பல்வேறு பிரிவுகளால் பிரிவு பட்டிருக்கும் மானுடரின் பிரச்சினையை அவற்றுக்கான தீர்வுகளை விரிவாகக்கூறும் நாவலல்ல. ஆனால் சரத்சந்திரர் தேவதாஸ்-பார்வதியின் தூய காதலை விபரிப்பதன் மூலம், அவர்கள் அடைந்த இன்ப துன்பங்களை உயிர்த்துடிப்புடன் எழுத்தில் வடிப்பதன் மூலம், நாவலில் பல விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். மேற்கு வங்கத்தினரின் பிராமண சமுகத்தில் நிலவிய வர்க்கரீதியாக நிலவிய பிரிவுகளை , இவ்விதமான பிரிவுகள் எவ்விதம் தூய்மையான காதல் நிறைவேறுவதைத் தடுக்கிறது என்பதை மற்றும் காதலர்களிடையே ஏற்படும் தேவையற்ற கர்வங்கள் மற்றும் மானுட சமூகத்தில் நிலவும் தேவையற்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் தூய காதலைப்பிரிக்கின்றன என்பதை  வெளிப்படுத்தியிருக்கின்றார். நிர்ப்பந்தங்கள் மூலம் இளம் பெண்ணொருத்தி, முதியவருக்கு மணம் முடித்துக்கொடுக்கப்படும் பொருந்தா மணத்தை எடுத்துரைத்திருக்கின்றார். ஆனால் அவ்விதம் அவளை மணம் முடிக்கும் அந்த முதியவரையும், அவர்தம் பிள்ளைகளையும் கொடியவர்களாக ஆசிரியர் படைத்திருக்கவில்லை. இருந்தாலும் பார்வதி பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக விளங்கியபோதும், மனதினாழத்தே அவள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவளது செயற்பாடுகள் மூலம் நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். வாசிக்கும் வாசகர் ஒவ்வொருவரும் 'தேவதாஸ்-பார்வதி ஒன்று சேர்ந்திருக்க  வேண்டும். குழந்தையைப்போன்ற அவளது வாழ்வு இவ்விதம் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கக்கூடாது. மானுட சமுதாயத்தில் இவ்விதமான முடிவுகளை ஏற்படுத்தும் அனைத்துப்பிரிவுகளும், நடைமுறைகளும் ஒழிக்கப்பட வேண்டும்.' என்று மனப்பூர்வமாக எண்ணிட நாவல் தூண்டுகிறது. அதுதான் சரத்சந்திரரின் 'தேவதாஸ்' அதனை வாசிக்கும் ஒவ்வொருவரிடத்தும் முடிவில் வெளிப்படுத்தும் முக்கிய உணர்வு. அதுவே நாவலின் வெற்றிக்கான முக்கிய காரணங்களிலொன்றும் கூட.

30. 'காவியத்துக்கு ஒரு மஹாகவி!'

காவியத்துக்கு ஒரு மஹாகவி' என்று அழைக்கப்படக்காரணமாக இருந்த காவியம் மஹாகவியின் 'கண்மணியாள் காதை' காவியம். அவலச்சுவை மிக்க காவியம். தீண்டாமைக்கொடுமையினை விபரிக்கும் குறுங்காவியமிது. கவிஞர் 'சடங்கு' என்று 'விவேகி'யில் எழுதிய தனது குறுங்காவியத்தின்  நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியம் 'கண்மணியாள் காதை' . குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. இக்காவியம் முதலில் அன்னை வெளியீட்டகம் (யாழ்ப்பாணம்) என்னும் பதிப்பகத்தால் நவம்பர் 1968இல் நூலாக வெளிவந்தது. மேலும் 'கண்மணியாள் காதை' தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினரால் வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அது பற்றி 'ஈழநாடு' பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த 'தேனி'யின் விமர்சனம்  'காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி' என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி 'கண்மணியாள் காதை'யும் எனக்கு மிகவும் பிடித்த காவியங்களிலொன்று. அதில்வரும் 'கண்மணி', 'செல்லையன்' ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது அதன் பெயரும், பாடு பொருளும், காவியத்தில் வரும் சில கவிதை வரிகளும் சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான 'காரிருள்' காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும்.  அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:

"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!

"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உய்ர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!

---
ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின் றார் தம் நிலத்தினைத் தானே!

--

காவிய நாயகியான கண்மணியாள் பற்றி வரும் வரிகள்:

பெண் ணிருக்கும் அழகை யெல்லாம்
பேணி வைத்த பொற் குடமாம்.
விண்ணவர்க்கும் எட்டாது
விளைந்திருக்கும் நிலத் தமுதாம்.

கண் ணிமிர்த்தி அவள் பார்த்தால்,
கண்டவர்கள் மறப்ப தில்லை.
மண் மிதித்தம் மயில் நடந்தால்,
மண் கூடச் சிலிர்ப்ப துண்டு.

திங்கள் அவள் முகமளவு.
செழுங் கூந்தல் மழை யளவு.
தங்கம் அவள் நிறமளவு.
தயிர் அவளின் மொழியளவு.

கொங்கை இரு செம்பளவு.
கொடி இடையோர் பிடியளவு.
பொங்கும் அவள் அங்கம் ஒரு
பொல்லாத பாம்பளவு!

செல்லையன் தனது வயலில் துலா மிதிக்கின்றான். கண்மணியாளோ நாற்று நடுகின்றாள். அவர்களுக்கிடையில் நிகழும் உரையாடலைக் கீழுள்ள  வரிகள் புலப்படுத்தும்.  செல்லையனுக்கும் , கண்மணியாளுக்குமிடையில் நிலவும் காதலை விபரிக்கும் வரிகள் இவை.

"நாற்றுப் பிடி எடுத்து
நாற்று நட்டு நான் இருக்க,
நாற்றுப் பிடி பிடியில்
நழுவுவது தான் எதற்கு?"

"சேற்றில் சதிர் மிதித்துச்
சின்ன இடை நீ வளைக்க,
நேற்றுச் சிரித்தபடி
நின்றவள் நி னைப்பெனக்கு!"

"நேற்றுச் சிரித்துவிட்டு
நின்றவள் நி னைப்பிருந்தால்,
காற்றிற் பறந்து விடும்
கதை விடுதல் தான் எதற்கு?"

"காற்றில் பறந்து வரும்
காவியத்தோ டாவி செல்ல,
ஏற்றத் துலா நடந்தே
இளைக்கும் உடல் இங்கெனக்கு!"

"ஏற்றத் துலாவினிலே
ஏறி நிற்கும் மன்னவர்க்குச்
சேற்றிற் கிடக்கும் ஒரு
சிறிய மலர் ஏன்? எதற்கு?"

"சேற்றிற் கிடைக்கும் அத்
திரு மலரோ இல்லை யென்றால்,
சோற்றைப் பிற கெதற்கு?
சொல்லடி இப் போதெனக்கு!"

மேற்படி காவியத்தின் முடிவு துயரகரமானது. செல்லையன் ஊர் இளைஞர்களுடன் கூடி, கலட்டியான தரையை உழைப்பால் பண்படுத்தி, அங்கு அவ்வூரின் தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்களைக் குடி அமர்த்துகின்றான். தந்தையின் எதிர்ப்பையும் மீறி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கண்மணியாள்மீது காதல் கொண்டு, அவளையே திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்குகின்றான். இவ்விதமாகக் காதலர்கள் தம் மணவாழ்வைத் தொடங்கும் சமயத்தில் நீண்டகாலமாகக் கண்மணியாளின் அழகில் ஆசை வைத்திருந்த சந்திக்கடை முதலாளி, அடியாட்களை அனுப்பி, செல்லையனைக் கொலை செய்து, கண்மணியாளைக் கவர்ந்து சென்று, தன் ஆசைக்கு இணங்க வைக்க முயல்கின்றான். அப்பொழுது அங்கிருந்து தப்பிச் செல்லும் கண்மணியாளின் நிலையைக் கவிஞர் இவ்விதம் விபரிப்பார்:

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
சேலையின் முன்றானை காற்றினிலே
செல்ல, இடை மின் நுடங்க,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
பால் முகத்தின் மேல் வியர்வை
பாய, விழி நீர் பெருக,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...

இவ்விதம் ஓடுமவள் முத்துமாரியம்மன் ஆலயத்தை அடைகின்றாள்.  அவளுக்கேற்பட்ட அநீதிக்கெதிராகக் கவிஞர் மாரியம்மனிடம் நீதி கேட்கின்றார்.

மாரியம்மன் வாசல் வழி
வந்தாளே கண்மணியாள்.
ஊரின் ஒரு புறத்தே
உறங்கினையோ மாரியம்மா?
நல்லான் ஓர் நல்லவளை
நாடுவது நாத்திகமோ?
எல்லாரும் ஒத்த குலம்
என்று சொன்னால் ஏற்காதோ?

ஏழை இருக்க நிலம்
ஈதலும் ஓர் ஏமாற்றோ?
வேள்வி மறுப்பதுவும்
வேண்டாத வெஞ் செயலோ?
பாழை விளைத்திடுதல்
பாதகமோ, பேசடியே!
கூடி உழைத்தல்
கொடுமை என்றோ கூறுகிறாய்?

ஏடி, முத்து மாரியம்மா,
எடுத்தொரு சொல் சொல்லடியோ!
'மெல்லியலார்' வாழ
விடாயோ பெருமாட்டி?
சொல்லடியே என் தாயே,
சுறுக்காகச் சொல்லடியோ!
புல் லிதழே பிய்ந்து
புயற் காற்றிற் போனது போல்-

ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...

ஓடும் கண்மணியாள் தனது கணவனின் கொலையுண்ட உடலைக் காண்கின்றாள்:

காதலனைக் கண்டு கொண் டாளே!
முலை
மீ த றைந்தாள்; நிலம் மீ து ருண்டாள்.
சிறு
மாது கண் செந் நீர் வழிந் தாளே!
ஒரு
சேதி, கீழ்ப் புற வானில் ஞாயிறு
நீதி காண எழுந்ததே!
இருள்
சாதி போலே போய் ஒ ழிந்ததே!
"ஒளி
வாழ்க!" என்றும், "இருள் வீழ்க!" என்றும்,
கிளை
மீது சேவல் கூவு கின்றதே!

இவ்விதமாகச் செல்லும் மெற்படி குறுங்காவியம் பின்வருமாறு முடியும்:

ஒத்துழைத்தால், ஒன்று பட்டால்,
உயர்வு பல காட்டி நின்றால்,
ஒத்தவர் தாம் யாரும் என்றே
ஒருத்தியின் மேல் அன்பு வைத்தால்,
பித்தரின் கைக் கோடரி போய்ப்
பிளந் தெறிய, நல்லவர்கள்
செத்திடத் தான் வேண்டுவதோ?
செக முடையோர், செப்புவிரே!

இலங்கையிலிருந்து வெளிவந்த தமிழ்க் காப்பியங்களில் மஹாகவியின் 'கண்மணியாள் காதை'க்குமோரிடமுண்டு. இக்காவியத்தை முழுமையாகப்படிக்க விரும்பினால் 'நூலகம்' இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு: http://noolaham.net/project/01/44/44.htm

30. கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்.....

'கரமசோவ் சகோதரர்கள்' தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை 'நியூ செஞ்சுரி புக்ஸ்' பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து 'கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.

நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் ஏன் அவர்கள் குறிப்பிடும் படைப்பாளிகளால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.

மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.

வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள்.

நாவலின் பின்பகுதியில் வரும் தந்தையின் மரணமும் , சந்தர்ப்பசூழ்நிலைகளால் மூத்தமகன் குற்றஞ்சாட்டப்படுவதும், உண்மையில் அக்கொலையின் சூத்திரதாரியான முறைதவறிப்பிறந்த புத்திரன் தற்கொலை செய்வதும், இருந்தும் நீதிமன்றத்தால் மூத்தவன் தண்டிக்கப்படுவதும், அது பற்றி நிகழும் நீதிமன்ற வாதிப்பிரதிவாதங்களும் வாசித்து அனுபவித்து மகிழ வேண்டியவை.

இந்நாவலின் பக்கங்களில் விரியும் மானுடத்தேடல் பற்றிய உரையாடல்கள், எண்ணங்கள், மானுடத்துயரத்திற்கான தீர்வு பற்றிய சிந்தனைகள் (மதமா அல்லது சோசலிசம் போன்ற அரசியல் தீர்வுகளா என்பவை பற்றிய), மானுடத்தின் உணர்வுரீதியிலான இயல்புகள் (நன்மை, தீமை, காதல், காமம் என்பவற்றால் சதா மோதல்களுக்குள்ளாகிக்கொண்டிருக்கும் உணர்வுகள் பற்றிய) பற்றிய தேடல் மிக்க எண்ணங்கள் என விரியுமிந்த நாவலை வாசிப்பதே ஓர் அனுபவம்.

தஸ்தயேவ்ஸ்கியைப்பற்றிக்குறிப்பிடும்போது அவரைப்போல் மனிதரைப்பற்றி இவ்வளவு விரிவாக எழுதியவர் யாருமிலர் என்று குறிப்பிடுவார்கள். அவரது குற்றமும், தண்டனையும், அசடன் மற்றும் கரமசோவ் சகோதரர்கள் ஆகிய நாவல்களைப்படிப்பவர்கள் அக்கூற்று எவ்வளவு தூரம் உண்மையென்பதைப்புரிந்து கொள்வார்கள்.

இந்நாவலை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கின்றேன். அதன் பின்னர் அண்மையில் கவிஞர் புவியரசுவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பிரதியை வாங்கி வைத்துவிட்டு ஒரு சில பக்கங்களை வாசித்துவிட்டு அவ்வளவு ஆர்வமின்றி வைத்திருந்தேன். மீண்டும் அண்மையில் மீண்டும் எடுத்து ஆறுதலாக வாசித்துப்பார்த்தேன். அப்பொழுதுதான் புரிந்துகொண்டேன் எவ்வளவு அற்புதமாக நாவலைத்தமிழில் கவிஞர் புவியரசு தந்திருக்கின்றார் என்பதை. இங்கு நான் நாவலை மூலத்துடன் ஒப்பிட்டு ஆராயவில்லை. தமிழ்ப்படைப்பின் மொழியின் சிறப்பை மையமாக வைத்துக்கூறுகின்றேன். கவிஞர் புவியரசு தமிழில் பாண்டித்தியம் பெற்றவராதலால், தேவையற்ற ஆங்கிலப்பிரயோகம் ஏதுமற்று, இலக்கணச்சிறப்பு மிக்க தமிழில் நாவலைத் தமிழில் வழங்கியிருக்கின்றார். அவரது தமிழில் நாவலை வாசிப்பதும் இன்பமே.

No comments:

தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (1& 2) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: நகரத்து அணில்! மாதவன் தான் வசித்து வந்த கட்டக்காட்டு விருட்சக் கூட்டிலிருந்து  வெளியில் இறங்கினான். எதிரே 'டொரோண்டோ...

பிரபலமான பதிவுகள்