Sunday, June 2, 2019

வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் பகுதி ஆறு : அறிவியற் கட்டுரைகள் (46 - 50)

46. ஆறுதலற்று விரையும் அண்டப் பொருட்கள்! பிரபஞ்ச வடிவம் பற்றிய புரிதல்கள்!

இரவு நேரங்களில் அண்ணாந்து விரிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கணக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை உபகிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றையும் மனதிலே ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செக்கனும் பிரமாண்டமானதொரு வேகத்தில் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றின் சிறியதொரு கோணத்தில் விரைந்து கொண்டிருக்கும் சிறியதொரு கோளொன்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதே அது. நெஞ்சினைப் பிரமிக்க வைத்து விடுகின்றதல்லவா! அப்படியானால் நம்மால் ஏனிந்த வேகத்தை உணர முடியவில்லை? மூடியதொரு புகையிரதத்தினுள் இருக்குமொருவருக்கு எவ்விதம் புகையிரதம் வேகமாகச் செல்வது தெரியாதோ அது போன்றதொரு நிலையில் தான் எம்முடைய நிலையும். பூமியைச் சுற்றிப் படர்ந்திருக்கும் வாயு மண்டலம்தான் எம்மை மூடிய புகையிரத்தைனைப் போல் இக்கோளினை வைத்திருக்கின்றது. அதனால் தான் எம்மால் எமது வேகத்தைக் கூட உணர முடியாமலிருக்கின்றது. இன்னும் ஒரு காரணம் - எம்மைச் சுற்றியுள்ள சுடர்களுக்கும், கிரகங்களுக்குமிடையிலான தொலைவு மிக மிக அதிகமானது. இத் தொலைவும் எமது வேகத்தினை உணரமுடியாதிருப்பதற்கு இன்னுமொரு காரணம். புகைவண்டியினுள் விரையும் ஒருவருக்கு அருகில் தெரியும் காட்சிகள் வேகமாகச் செல்வது போலும், மிகத் தொலைவிலுள்ள காட்சிகள் ஆறுதலாக அசைவது போலவும் தெரிவதற்கு அடிப்படைக் காரணம் தொலைவு தான்.

இவ்விதம் எல்லையற்றுப் பரந்து கிடக்கும் இப்பிரபஞ்சம் பற்றி அறிவதன மூலம் மனிதர்கள் தம் பிறப்பின் காரணத்தின் சூத்திரத்தை அறிவதற்கு முயன்று கொண்டிருக்கின்றார்கள். அரிஸ்டாட்டில், கலிலியோ, நியூட்டன் , ஐன்ஸ்டைனென்று பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன. வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகையில்தான் 'அலெக்ஸாண்டர் பிரிட்மென்'னுடைய (Alexander Friedman) (1920) பிரபஞ்சம் பற்றிய கருத்துகளையும் பார்க்க வேண்டும். ஐன்ஸ்டைனின் கணித சூத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பிரிட்மான் பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய கோட்பாடுகளை விபரித்தார். அலெக்ஸாண்டர் பிரிட்மான் பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்தார். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியை வளைக்கும் தன்மை படைத்தது. எனவே இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அளவு பற்றி ஆராய்ந்த பிரிட்மான் 'இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் மொத்த அளவானது இப்பிரபஞ்சத்திற்கு ஒரு வடிவினை, உருவ அமைப்பினை உருவாக்கும் அளவுக்குப் போதுமானது' என எடுத்துக் காட்டினார்.

இவரது கருத்துப்படி பிரபஞ்சத்தின் உருவ அமைப்பானது மூன்று விதமாகக் காணப்படுவதற்குச் சாத்தியமுள்ளது. இவற்றை அவர் முறையே 'மூடிய பிரபஞ்சம்', 'திறந்த பிரபஞ்சம்', 'தட்டையான பிரபஞ்சம்' என மூன்றாகப் பிரித்தார். 'மூடிய பிரபஞ்சம்' என்றாலென்ன? அது எப்படியிருக்கும்? மூடிய பிரபஞ்சத்திற்கு உதாரணமாக ஒரு கோளத்தின் அமைப்பையே குறிக்கலாம். கோளமொன்றின் வடிவம் எவ்விதம் வளைந்து காணப்படுகிறதோ அவ்விதமே இப்பிரபஞ்சமும் வளைந்து மூடிய நிலையில் இருப்பதற்குச் சாத்தியங்களுள்ளன. உண்மையில் ஒருவர் இவ்வகையான மூடிய பிரபஞ்சத்தில் நேர் கோட்டில் பயணம் செய்வாரென்றால் மீண்டும் தனது தொடக்க இடத்துக்கே வந்து விடுவார். இவ்வகையான நிலையினை நமது பூமியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை மிகவும் இலகுவாக விளங்கி விடும். உதாரணமாகப் பூமியின் மேற்பரப்பில் ஓரிடத்திலிருந்து பயணத்தைத் தொடங்குமொருவர் நேராக நடந்து செல்வாரேயானல் மீண்டும் தனது தொடக்குப் புள்ளிக்கே வந்து விடுவாரல்லவா? அது போல் தான் 'மூடிய பிரபஞ்சத்தி'னுள் பயணிப்பவரின் நிலையும்.

பிரபஞ்சத்தின் உருவ அமைப்பு பற்றிய அடுத்தவகை 'திறந்த வகைப் பிரபஞ்சம்' ஆகும். குதிரையொன்றின் முதுகில் அமர்ந்து செல்லப் பாவிக்கபப்டும் 'சேணம்' போல் அதனது அமைப்பிருக்கும். இவ்வகையான 'திறந்த பிரபஞ்ச'த்திற்கு முடிவென்பதேயில்லை. இவ்வகையான பிரபஞ்சத்தில் ஓரிடத்தில் பயணத்தைத் தொடங்குபவர் நேராகச் செல்லும் பட்சத்தில் கூட மீண்டும் தனது தொடக்க இடத்துக்குத் திரும்புவதேயில்லை. போனவர் போனவரே.

மூன்றாவது வகையான பிரபஞ்சத்தின் வடிவைத் 'தட்டை'யானதெனக் குறிப்பிட்டோமல்லவா? உண்மையில் இவ்வகையான பிரபஞ்ச வடிவ அமைப்பானது மூடிய வடிவ அமைப்புக்கும், திறந்த வடிவ அமைப்புக்கும் இடைப்பட்ட வகையிலான வடிவ அமைப்பினச் சேர்ந்தது. இவ்வகையான வடிவை முடிவற்று நீண்டிருக்கும் மேசை ஒன்றின் மேற்பரப்புக்கு ஒப்பிடலாம்.

பிரபஞ்சத்தின் வடிவ அமைப்பினை அறிவதற்குரிய இன்னுமொரு வழி இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அடர்த்தியினை அறிவதாகும். இவ் அடர்த்தியின் அளவுக்கேற்ப பிரபஞ்சம் மூடியதா, திறந்ததா அல்லது தட்டையானதா என அறிந்து கொள்ள முடியும். ஒரு கன சதுர மீற்றரில் மூன்று பொருள் அணுக்களிருப்பதைப் பிரபஞ்சத்தின் பொதுவான அடர்த்தியாகக் கணித்திருக்கின்றார்கள். இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் அடர்த்தியானது மேற்குறிப்பிடப்பட்ட பொதுவான அடர்த்தியிலும் கூடியதாகவிருப்பின் நமது பிரபஞ்சமானது 'மூடிய பிரபஞ்சமாக'விருக்கும். குறைவாகவிருந்தால் 'திறந்த வகைப் பிரபஞ்சமாகவும்', ஒரே அளவாகவிருந்தால் 'தட்டையான பிரபஞ்ச'மாகவுமிருக்கும்.

ஆனால் இதுவரையிலான ஆய்வுகளின்படி கண்டுபிடிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பொருள் அடர்த்தி மிகமிகச் சிறியதாகத்தானிருக்கிறது. நம் கண் முன்னால் விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சத்தின் பொருள் அடர்த்தி , பொருட் செறிவு இவ்வளவு சிறியதா? நம்பவே முடியவில்லையல்லவா? பெளதிக வானியல் அறிஞர்களாலும் இதனை நம்பத்தான் முடியவில்லை. அதனால் தான் அவர்கள் இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளின் பெரும்பான்மையான பகுதி நமது கண்களுக்குப் புலப்படாத வகையில் இன்னுமொரு வடிவிலிருக்க வேண்டுமென நம்புகின்றார்கள். இவ்வகையான பொருளினை 'இருண்ட பொருள்' (Dark Matter) என அவர்கள் பெயரிட்டு
ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள். அப்படியானால் இவ்வகையான கரும்பொருள் எங்கே ஒளிந்துள்ளது? இவ்வகையான பொருள் ஒளிந்திருக்கச் சாத்தியமான இடங்களில் ஒன்று 'கருந்துளை'கள் (Black Holes)அல்லது 'கரும் ஈர்ப்பு மையங்க'ளாகும். இத்தகைய கருந்துளைகளிலிருந்து ஒளியே வெளியேறுவதில்லை என்பதனால், இவற்றினுள் ஒளிந்திருக்கும் பொருளின் அளவை அறிவது கூடத் தற்போதைய நிலைமையில் சிரமமாகத் தானிருக்கின்றது.

இவ்விதமாக நமது பிரபஞ்சத்தின் வடிவம் பற்றியும், அதன் வடிவம் இங்கு காணப்படும் பொருளின் அடர்த்தி பற்றியும், அது சம்பந்தமாகத் தொடரும் ஆய்வு பற்றியும் பார்த்தோம். இதே சமயம் நமது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய ஆய்வுகளும் தொடரத்தான் செய்கின்றன.

தற்போது நிலவும் கோட்பாடுகளின்படி மிகப் பிரபல்யமாக விளங்கும் கோட்பாடு 'பெரு வெடிப்புக்' (Big Bang) கோட்பாடு என அழைக்கப்படுகிறது. இதன்படி இப்பிரபஞ்சமானது ஆரம்பத்தில் ஓரிடத்தில் குவிந்திருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் அதனுள் நிலவிய ஈர்ப்புச் சக்தியின் அளவுன் அதிகரித்து, வெப்பநிலை உயர்ந்து வெடித்திருக்க வேண்டும். அவ்வெடிப்பிலிருந்து உருவானதே தற்போது காணப்படும் இப்பிரபஞ்சம் என விளக்குகிறது இக்கோட்பாடு. நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் இக்கோட்பட்டிற்குச் சாதகமாகவேயிருக்கின்றன. இதற்கு ஆதாரமாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.

உதாரணமாக 'இப்பிரபஞ்சமானது பெருவெடிப்பின் மூலம் உருவாகியிருக்கும் பட்சத்தில் ஆரம்பத்தில் அவ்வெடிப்புடன் சேர்ந்து வெளியான பெருமளவு கதிரியக்கம் இன்றும் கூட மிகக் குறைந்த அளவிலேனும் பரவியிருக்க வேண்டும்' என ரஷ்ய விஞ்ஞானியான ஜோர்ஜ் கமாவ் என்பவர் கருதினார். இதனை 'பின்னணிக் கதிரியக்கம்' (Background Radiation) என அழைத்தார்கள். இது 1965ஆம் ஆண்டில், அமெரிக்காவின் நியுஜேர்ஸி மாநிலத்தில் அமைந்துள்ள 'பெல்' ஆய்வுக்கூடத்தில் 'ஆர்னோ பென்ஷியாஸ்' (Arno Penzias) மற்றும் ரொபேர்ட் வில்சன்' (Robert Wilson) ஆகியோரால் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு ஆதாரமான இன்னுமொரு விடயம் என்னவென்றால்..அதுதான் நமது பிரபஞ்சத்தின் விரியும் தன்மை. நமது பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் விரிந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையினை அமெரிக்க வானியல் அறிஞரான 'எட்வின் ஹபிள்' என்பவர் கண்டு பிடித்தார். இதன்படி விரியும் பிரபஞ்சத்தின் வேகம் கண்டு பிடிக்கப்பட்டது. அவ்வேகத்திலிருந்து இப்பிரபஞ்சமானது சுமார் 15 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஓரிடத்தில் குவிந்து செறிந்திருக்க வேண்டுமென்பதும் அறியப்பட்டுள்ளது. இக்கண்டு பிடிப்பு பெருவெடிப்புக் கோட்பாட்டிற்கு ஆதரவாகவுள்ளது. அதே சமயம் நம் மனதில் பல கேள்விகள் எழாமலில்லை. அப்படியானால் இவ்விதமான பொருட்களெல்லாம் ஆரம்பத்தில் எவ்விதம் உருவாகின? பெருவெடிப்புக்கு முன்னர் இருந்ததென்ன? நமது பிரபஞ்சம் போன்று வேறும் பல்கோடிப் பிரபஞ்சங்கள் தமது பாதைகளில் விரிந்து கொண்டிருக்கின்றனவா? அப்படியானால் இன்னுமொரு விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமொன்றுடன் நமது பிரபஞ்சம் மோதுவதற்குச் சாத்தியங்களுண்டா? இவ்விதம் பலப் பல வினாக்கள் எழுகின்றன அல்லவா?

'பெருவெடிப்புக்' கோட்பாடு போல் இப்பிரபஞ்சம் பற்றிய வேறு சில கோட்பாடுகளும் நிலவத்தான் செய்கின்றன. அவற்றிலொன்றுதான் 'உறுதி நிலைக்' கோட்பாடு. இக்கோட்பாட்டினை 1948இல் பிரிட்டிஷ் வானவியல் அறிஞரான 'பிரட் ஹொய்ல்' (Fred Hoyle) மற்றும் ஆஸ்திரியர்களான 'தோமஸ் கோல்ட்' (Thomas Gold) மற்றும் 'ஹெர்மன் பாண்டி' (Hermann Bondi) என்பவர்கள் முன் வைத்தனர். இப்பிரபஞ்சமானது தற்போது எவ்விதம் காணப்படுகிறதோ அவ்விதமே இது வரை காலமும் இருந்து வந்துள்ளது. இனியும் இருக்கும். இந்நிலையில் இதன் தோற்றம் பற்றியெல்லாம் கவலைப் படுவதில் அர்த்தமேயில்லை. ஏனெனில் இப்பிரபஞ்சமானது எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. இதற்கு ஆரம்பமேயில்லை. இக்கோட்பாடு பிரபஞ்சம் விரியும் தன்மையினை ஒத்துக் கொள்கிறது. ஆனால் பிரபஞ்சம் விரிவதால் அடர்த்தி குறைகிறது என்பதை இக்கோட்பாடு ஏற்றுக் கொள்ளவில்லை. இக்கோட்பாட்டின்படி வெற்றிடத்திலிருந்து எந்நேரமும் பொருளானது உற்பத்தியாகிக் கொண்டேயிருப்பதால், விரிவடைந்த போதும், பிரபஞ்சத்தின் அடர்த்தி குறைவதேயில்லை. ஆனால் இக்கோட்பாட்டினால் 'பின்னணிக் கதிரியக்க'த்தினை விளங்கப்படுத்த முடியவில்லை.

இன்னுமொரு சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெளதிக/வானியல் அறிஞரான 'ஹான்ஸ் அல்வென்'(Hannes Alfven) என்பவரின் கருத்துப்படி நமது பிரபஞ்சமானது இன்னுமொரு மாபெரும் பிரபஞ்சமொன்றின் சிறு பகுதியொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் விளைவுதான். இவரது கணிப்பின்படி நமது பிரபஞ்சமானது சம அளவிலான பொருளையும் எதிர்ப்பொருளினையும் கொண்டுள்ளதாகவிருக்க வேண்டும். பொருளுக்கும் எதிர்ப்பொருளுக்கும் இடையிலான மோதலின் விளைவாக உருவான பெருவெடிப்பே நம் பிரபஞ்சத்தின் விரிவுக்குக் காரணம். இவ்விதமாக பொருளும் எதிர்ப்பொருளும் ஒன்றுடனொன்று மோதும் போது அவை முற்றாக அழிந்து (Annihilation) விடுகின்றன. அவ்விதம் அழியும் போது புரோட்டான்களும், இலத்திரன்களும் உருவாகின்றன. இதனால் அழிவு நடைபெறும் இடத்திற்கண்மையில் விரைவான அதிகரிப்பு (Rapid Expansion) ஏற்படுகின்றது. ஆனால் இவ்விதம் 'அழிவு' (Annihilation) ஏற்படும் போது கட்டாயம் காமாக் கதிர்கள் உருவாகியிருக்க வேண்டும். அவற்றை மிக இலகுவாகக் காமாத் தூரதரிசினிகளால் (Gamma Telescope) அவதானிக்கக் கூடியதாகவிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான அவதானிப்பெதனையும் இதுவரையில் அறியமுடியவில்லையென்பது 'ஹான்ஸ் அல்வென்'வின் கோட்பாட்டிற்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலொன்று. இதற்கு 'ஹான்ஸ் அல்வென்' 'நாமிருக்கும் பொருட்குமிழியானது அவதானிக்கப் படக்கூடிய பிரபஞ்சத்திலும் அதிகமாயிருப்பதே இதற்குக் காரணம்' என்றொரு வாதத்தை முன்வைத்தார். அவ்விதமாயின் இவ்வாதம் இன்னுமொரு எதிர்வாதத்தினை முன் வைத்துவிடும் அபாயமிருக்கிறது. அது 'இக்கோட்பாடு எதிர்வு கூறும் பிரபஞ்ச அமைப்பினை அவதானிக்க முடியாதென்றால் அதனை பரிசோதிப்பதெவ்விதம்' என்பதுதான் அது.

பிரிட்டிஷ் பெளதிகவியல்/வானியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் (Stephen Hawking) கருத்து என்னவென்றால்...நமது பிரபஞ்சத்தின் இருப்பானது மூடிய நேர வளையத்தை ஒத்தது. இவரது கருத்துப்படி பெருவெடிப்பில் உருவாகும் பிரபஞ்சமானது இறுதியில் ஒரு குறிப்பிட்ட நிலையில், அதாவது பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகமானது அதியுயர் நிலையினை அடைந்ததும் அதுவரையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த நேரமானது பின்னோக்கி செல்லத் தொடங்கும். எதுவரை இவ்விதமாக நேரமானது பின்னோக்கிச் செல்லுமென்றால் இன்னுமொரு பெருவெடிப்பு ஏற்படும் வரையில்தான். அதன் பின்னர் நேரமானது மீண்டும் முன்னோக்கி நகரத் தொடங்கும். இவ்விதமாக இப்பிரபஞ்சமானது மீண்டும் மீண்டும் வெடித்துக் கொண்டேயிருக்கும். உண்மையில் இத்தகைய பிரபஞ்சத்தில் வசிக்கும் ஒருவருக்கு நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடத் தெரியாது. ஏனெனில் அவரால் நேரம் முன்னோக்கிச் செல்வதாக மட்டும் தான் உணர முடியும். உண்மையில் தற்போது நேரம் முன்னோக்கிச் செல்கிறதா அல்லது பின்னோக்கிச் செல்கிறதா என்பது கூடச் சரியாகத் தெரியாது. இவ்விதமாக இருக்கிறது ஸ்டீபன் ஹார்கின்ஸ்ஸின் சிந்தனையின் போக்கு. இன்னும் சில கோட்பாடுகளோ ஆரம்பத்தில் ஒரு பெரு வெடிப்பல்ல பல பெருவெடிப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிவிக்கின்றன.

[இக்கட்டுரையின் மூலப் பிரதி 5/4/1992 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளி வந்தது.தற்போது ஒரு சில மாற்றங்களுடன் பதிவுகளில் வெளிவருகிறது

மீள்பிரசுரம்:  ஆகஸ்ட் 2007; இதழ் 92.

47. பிரபஞ்சத்து மாயங்கள்! 'கரும் ஈர்ப்பு மையங்கள்'!

சாதாரண மனிதரிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' என மொழி பெயர்ப்பதே மிகவும் பொருத்தமாகவிருக்குமெனக் கருதுகின்றேன். ஏனெனில் இவை மிகவும் ஈர்ப்புச் சக்தி மிக்கவை. ஒளிக்கதிர்களையே வெளியேற முடியாத அளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையான இவற்றை கரும் ஈர்ப்பு மையங்களென அழைப்பதே சரியென்றெனக்குப் படுவதால் இவை இனி கரும் ஈர்ப்பு மையங்கள் என்றே அழைக்கப் படும்.  ஒளிக்கதிர்களையே தப்பியோட விடாது சிறைப்பிடித்துவிடுமளவிற்கு ஈர்ப்புச் சக்தி மிக்கவையாக இவை இருப்பதால் இவை மிகவும் விந்தையானவை. இரகசியமானவை. புதிரானவை. இவற்றை நேரடியாகப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களால் தாங்கள் கண்டதை எமக்குத் தெரிவிப்பதற்குக் கூட முடியாது. ஊகங்கள், பக்க விளைவுகள் இவற்றைக் கொண்டு மட்டும் தான் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள, அனுமானித்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.  கரும் ஈர்ப்பு மையங்கள் உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களே. விண்ணில் நாம் காணும் நட்சத்திரங்களை அவற்றின் திணிவினை சூரியனின் திணிவுடன் ஒப்பிட்டுப் பிரிக்க முடியும். இவ்விதம் பெறப்படும் திணிவு சூரிய திணிவு (Solar Mass) என அழைக்கப் படும்.நட்சத்திரங்களின் திணிவானது ஒரு குறிப்பிட்ட சூரியத் திணிவிலும் அதிகாக இருக்கும் பொழுது அந் நட்சத்திரம் கரும் ஈர்ப்பு மையமாக உருவாகும் வாய்ப்பு உண்டு. இத்திணிவுக்கும் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானிகளிலொருவரான சந்திரசேகருக்கும் மிக முக்கியமானதொரு தொடர்பு உண்டு. அதுவென்ன என்பதை இக்கட்டுரையின் இறுதியில் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஐன்ஸ்டனின் பொதுச் சார்பியற் கோட்பாடானது (General Theory Of Relativity) இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை எதிர்வு கூறிய போதும் , சுமார் 200 வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயரொருவரும் பிரெஞ்சுக்காரரொருவரும் இத்தகைய பொருட்கள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கூறியுள்ளார்களென்பதும் வியப்பிற்குரியது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோன் மைக்கல் என்பவரால் 1783 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகவும் ஈர்ப்புச் சக்தி கூடிய நட்சத்திரங்கள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோன் மைக்கலின் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்ட சில வருடங்களின் பின்னர் பிரெஞ்சு விஞ்ஞானியான 'மார்கிள் டி லாப்பிளாஸ் ' என்பவர் தான் எழுதிய 'இவ்வுலகின் அமைப்பு முறை ' பற்றிய நூலிலும் இது போன்ற கருதுகோள்களை முன்வைத்திருந்தாரென அறியக் கிடக்கின்றது. ஆனால் ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாடே முதன் முதலாகக் கணிதச் சூத்திரங்கள் அடிப்படையில் கரும் ஈர்ப்பு மையங்கள் பற்றித் தற்போது அறியப் பட்ட அர்த்தத்தில் எதிர்வு கூறின. உண்மையில் ஐன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகளுக்குக் கிடைத்த இன்னுமொரு வெற்றியென்றே இதனைக் கூறலாம். அதே சமயம் 'வெளி ', 'நேரம் ' என்பவை சுயாதீனமற்றவை. சார்பானவை என்பதை முதன் முதலாக ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் கோட்பாடு இவ்வுலகிற்கறிவித்ததும் குறிப்பிடத் தக்கது.

ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியற் கோட்பாட்டின்படி மிகமிக அதிகமான ஈர்ப்புச் சக்தி மிக்க நட்சத்திரங்கள் தம்மைச் சுற்றியுள்ள வெளியினை அதிகமாக வளைத்து விடுகின்றன. இவ்வளைவிற்குள் அகப்படும் எவற்றையும் அவை உறுஞ்சி ஏப்பம் விட்டு விடுகின்றன. மிகவும் சிக்கலான விசயம் என்னவென்றால், சாதாரண மனித அனுபவத்தைக் கொண்டு வெளி வளைகிறதென்பதைக் கற்பனை செய்து பார்ப்பதே சிரமமாக நம்ப முடியாததாகவிருக்கின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையங்களைக் கூடக் கண்ணால் பார்க்க முடியாத நிலைமையிருக்கையில், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் கரும் ஈர்ப்பு மையங்கள் வெளியினை வளைப்பதை எப்படி நம்புவது ?

நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் பரந்து காணப்படும் தூசு, வாயு, ஆகியன ஒன்று சேர்வதன் விளைவாக உருவாகின்றன. இவ்விதமாகத் தம்மிடையிலான ஈர்ப்புச் சக்தியின் விளைவாக ஒன்று சேரும் வாயு அணுக்களில் சுய அசைவு பெருமளவு காணப்படும். இதனால் ஐதரசன் அணுக்கள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்ளத் தொடங்கும். இறுதியில் இவ்விதம் மோதிக் கொள்ளூம் ஐதரசன் அணுக்களிடையில் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க மோதலின் விளைவாக அவை அழிந்து ஹீலியம் அணுக்களை அவை உருவாக்கும். இவ்விதம் ஐதரசன் அணுக்களின் அழிந்து ஹீலியம் அணுக்கள் உருவாகும் போது ஐதரசன் அணுக்களின் திணிவினொரு பகுதி சக்தியாக மாறுகின்றது. இச்சக்தி மிகவும் அதிகமானது. பொருளானது அழிந்து உருவாகும் சக்தியின் அளவு எத்தனையோ கோடிக்கணக்கான யூல்களிலிருக்கும். இதனையே ஐன்ஸ்டைனின் மிகவும் புகழ் பெற்ற சூத்திரமான E = MC ^2 நிரூபிக்கின்றது. சிறிய திணிஅவு கூட ஒளி வேகத்தின் வர்க்கத்தினால் பெருக்கப் படுவதன் காரணமாக மிகவும் அதிகமான அளவிலிருந்து விடுகின்றது. இத்தகைய தாக்கங்களே ஐதரசன் குண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன. உண்மையில் நட்சத்திரங்களை மாபெரும் ஐதரசன் குண்டுகளென்று கூடக் கூறலாம்.

இவ்விதமாக நட்சத்திரங்களில் சக்தி வெளிப்படும் போது உருவாகும் வெளிப்புறம் நோக்கிய அமுக்கமும், அவற்றின் அணுக்களிற்கிடையில் காணப்படும் உட்புறம் நோக்கிய ஈர்ப்புச் சக்தியும் ஒன்றினையொன்று ஈடு படுத்துவதால் நட்சத்திரங்கள் நீண்ட காலத்திற்கு நிலையாக ஒளிரும் ஆற்றலினைப் பெறுகின்றன. நட்சத்திரங்களின் திணிவிற்கேற்ப மேற்படி சுடர்களின் ஒளிரும் காலகட்டமும் வேறுபடுகின்றன. திணிவு கூடிய நட்சத்திரங்கள் அவற்றில் காணப்படும் ஈர்ப்புச் சக்தியின் அதிக அளவு காரணமாகக் கூடிய தாக்குதல் வேகத்தினைக் கொண்டிருப்பதால் விரைவில் எரிந்து விடுகின்றன. நமது சூரியனைப் பொறுத்தவரையில் இவ்விதம் நிலையாக இருக்கக் கூடிய காலகட்டம் சுமார் பத்து பில்லியன் வருடங்கள். ஏற்கனவே ஐந்து பில்லியன் வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும் ஐந்து பில்லியன் வருடங்கள் மீதி இருக்கின்றன. அச்சமயம் மனித இனம் வேறு சுடர்க் கூட்டங்களிலுள்ள கோள்களிலொன்றில் அல்லது தானே உருவாக்குமொரு பிரமாண்டமான செயற்கைக் கோளொன்றில் தங்குவதற்குாிய ஆற்றலினைக் கொண்டிருக்க வேண்டும்.

இவ்விதமாக எரியும் நட்சத்திரங்கள் ஒரு நிலையில் எரிவதற்குரிய எரிபொருள் முடிவடைந்த நிலையில் குளிர்ந்து சுருங்கத் தொடங்கும். இவ்விதமாகச் சுருங்கும் சுடர்களின் எஞ்சியுள்ள திணிவின் அளவிற்கேற்ப அவற்றின் முடிவும் அமைந்து விடுகின்றன. இவ்விதமாக எரிந்த நிலையிலுள்ள நட்சத்திரங்களின் திணிவானது 1.44 சூரிய திணிவிற்கும் (Solar Mass) குறைவாகயிருப்பின் அந்நட்சத்திரங்கள் 'வெண் குள்ளர் ' (White Dwarf ) என்னும் நிலையினை அடைந்து விடுகின்றன. மேற்படி திணிவானது 1.44ற்கும் 3ற்குமிடையிலான சூரிய திணிவினைக் கொண்டிருந்தால் அவை 'நியூத்திரன் நட்சத்திரங்களாகவும், 3 சூரிய திணிவிற்குமதிகமானவையாக இருப்பின் அவ்விதமான நட்சத்திரங்கள் 'கரும் ஈர்ப்பு மையங்கள் ' ஆகவும் மாறிவிடுகின்றன. இந்தத் தொடர்பினைக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானியான சந்திரசேகர். இதனால் தான் மேற்படி எல்லை 'சந்திரசேகர் எல்லை' ( Chandrasekhar Limit) எனக் கூறப்படுகின்றது. இதற்காகவே பல வருடங்களின் பின்னால் நோபல் பரிசும் வழங்கப் பட்டது.

எந்தவொரு பொருளினையும் குறிப்பிட்ட அளவிற்கு அமுக்கிச் சிறுக்க வைப்பதன் மூலமும் கரும் ஈர்ப்பு மையங்களை உருவாக்க முடியுமென ஐன்ஸ்டனின் சூத்திரங்களின் உதவியுடன் கண்டறிந்து கூறியவர் ஜேர்மன் விஞ்ஞானியான 'கார்ல் சுவார்ஸ்சைல்ட்' ( Karal Schwarzschild ) என்பவர். இவரது ஆய்வின் படி நமது சூரியனை மூன்று கிலோ மீற்றர் ஆரையுள்ளதொரு கோளமாக ஆக்குமளவுக்கு அழுத்ததினைப் பிரயோகித்தால், அது போல் நமது பூமியினை 0.9 மீற்றர் அளவுள்ள கோளமாக மாற்றும் வகையில் அழுத்ததினைப் பிரயோகித்தால் சூரியனும் பூமியும் கூடக் கரும் ஈர்ப்பு மையங்களாக மாறிவிடுமென்பதை இவரது ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

கரும் ஈர்ப்பு மையங்களிற்குள் அகப்பட்ட எவையும் திரும்பி வரமுடியாமலிருப்பதால் அவற்றை அறிவதற்கு அவற்றிற்கு அண்மையிலிருக்கும் ஏனைய நட்சத்திரங்களில் அவை ஏற்படுத்தும் தாக்கங்களைக் கொண்டு அறிய முடியும்மென விஞ்ஞானிகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது பிரபஞ்சத்தில் அதிகமாகக் காணப்படும் 'இணை நட்சத்திரங்கள் ' ( Binari Stars ) இவ்விடயத்தில் உதவுகின்றன. இவ்விதமானதொரு இணை நட்சத்திரமான 'சைனஸ் ' நட்சத்திரக் கூட்டத்திலிருந்து பெருமளவில் x கதிர்கள் வருவது அவதானிக்கபட்டது. பிரபல விஞ்ஞானியான 'ஸ்டீபன் ஹார்கின்ஸ்'சின் ஆய்வுகளின்படி மேற்படி 'சைனஸ் ' இணை நட்சத்திரங்களிலுள்ள ஒரு நட்சத்திரமானது கரும் ஈர்ப்பு மையமாகும். அதன் ஈர்ப்பினால் அவ்விணையின் மற்ற நட்சத்திரத்திலிருந்து பொருளானது கரும் ஈர்ப்பு மையத்தினை நோக்கி ஈர்க்கபடுகின்றது. இதன் விளைவாக பொருளானது சூடேறி வெளிப்படும் கதிர்களே அவதானிக்கப்பட்ட x கதிர்களாகும். மேற்படி x கதிர்களின் இயல்பிலிருந்து ஈர்க்கும் நட்சத்திரத்தின் திணிவு ஆறு சூரிய திணிவு எனக் கணக்கிடப்பட்டது. 'சந்திரசேகரின் எல்லையின்' படி இந்நட்சத்திரம் இந்நட்சத்திரம் ஒரு கரும் ஈர்ப்பு மையமாகவிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.

இத்தகைய கரும் ஈர்ப்பு மையங்களின் அபரிதமான ஈர்ப்பு ஆற்றலினால் ஈர்க்கப்படும் பொருளானது இறுதியில் சிதைந்து அதனையுள்ளடக்கியுள்ள வெளிகூட இல்லாதொழிந்து விடுகின்றது. இந்நிலையில் கரும் ஈர்ப்பு மையத்தினுள் நமது பிரபஞ்சத்துப் பெளதிக விதிகள் எல்லாமே செயலிழந்து விடுகின்றன. கரும் ஈர்ப்பு மையங்களை ஐன்ஸ்டைனின் கணிதச் சூத்திரங்கள் எதிர்வு கூறுவதைப் போல் கரும் ஈர்ப்பு மையங்களிற்கு எதிரான 'வெண் துளைக 'ளினையும் (Whit Holes) எதிர்வு கூறுகின்றன. மேற்படி கரும் ஈர்ப்பு மையங்களையும் வெண்துளைகளையும் இணைக்கும் அமைப்புகளும் பிரபஞ்சத்தில் காணப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பெளதிக வானியல் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இவற்றை Worm Holes ' எனவும் அழைக்கின்றனர். தற்போதைய நிலையில் பிரபஞ்சத்தின் பிரமாண்டமான அளவு காரணமாகவும், மனித வாழ்வின் குறுகிய காலகட்டம் காரணமாகவும் பிரபஞ்சத்தினூடு ஊடறுத்து பல ஒளி வருடங்களைக் கடந்து பயணிப்பது முடியாத காரியமாகவிருந்து விடுகின்றது. இந்நிலையில் மேற்படி 'புழுத் துளைகள் ' பிரபஞ்சத்தின் தொலைவினை மனித இனமானது தனது வாழ்நாளிலேயே கடப்பதற்கான சாதனமோவெனவும் விஞ்ஞானிகள் ஐயுறுகின்றார்கள். பூமியின் ஈர்ப்புச் சக்தியினையும் மீறும் ' தப்பும் வேகத்தில் ' ( Escape Velocity ) செல்லும் ராக்கட்டினுள் பிரயாணிக்கும் மனிதர், தற்போதைய நிலையில் அசாத்தியமாகக் கருதப்படும் 'கரும் ஈர்ப்பு மையங்களி 'னூடான பயணம் சாத்தியமாகும் பட்சத்தில் மேற்படி 'புழுத் துளைகள் ' மூலம் பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்யும் காலம் வருமோவென வானியற் பெளதிகவியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.

உசாத்துணை நூல்கள்:
1. Frozen Star By George Greenstein
2. A Brief History of Time By Stephen Hawking
3. One Two Three infinity by George Camow
4. Relatively Speaking by Eric Chaisson
5. Black Holes and Warped Space Time by William J.Kaufmann
6. 'Stephen Hawking : quest for a theory of every thing ' By Kitty Fergusson

 நன்றி: வீரகேசரி (இலங்கை), திண்ணை.காம், பதிவுகள்.காம்

மீள்பிரசுரம்: பதிவுகள் - ஆகஸ்ட் 2007; இதழ்


48. நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனைவளம் மிக்க விஞ்ஞானப் புனைவுகள்! அறிஞர் ஆர்தர் சி.கிளார்க் பற்றிய சிந்தனைகள்.

 அண்மையில் மறைந்த விஞ்ஞானப் புனைகதையுலகில் முக்கிய படைப்பாளியாக விளங்கிய ஆர்தர் சி. கிளார்க்கை ஒருமுறை என் வாழ்வில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. என் வாழ்க்கைச் சரித்திரத்தில் அதுவொரு முக்கிய சந்திப்பாகவும் அமைந்து விட்டது. மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக்கலைப் பட்டப்படிப்பினை முடித்துப் அதற்குரிய சான்றிதழினை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்ற மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பெற்றது அவரது கைகளிலிருந்துதான். அவர்தான் அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்தார். அவரது நினைவாக இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.-  இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புனைகதையுலகில் கொடிகட்டிப் பறந்த முக்கியமான மூலவர்களாக மூவர் குறிப்பிடப்படுவார்கள். ஒருவர் ஐசக் அசிமோவ். ரஷிய நாட்டவர். அடுத்தவர் அமெரிக்கரான ரொபேட் ஏ றெய்ன்லெய்ன். இவர் மிசூரியைச் சேர்ந்தவர். அடுத்தவர் ஆர்தர் சி.கிளார்க். இவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்.

ஆர்தர் சி. கிளார்க் ஐம்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அண்மையில் மறையும் வரையில் இலங்கையில் வசித்து வந்தாலும் அவர் பிறந்தது இங்கிலாந்திலுள்ள 'மைன்ஹெட்' என்னுமிடத்தில்தான். 1917இல் பிறந்த அவர் இலண்டனிலுள்ள 'கிங் காலேஜ்'ஜில் இயற்பியல் மற்றும் கணித்தில் தனது பட்டப்படிப்பினை முதற்பிரிவுச் சித்தியுடன் நிறைவு செய்தவர். மிகவும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானப் புனை கதை எழுத்தாளராக விளங்கிய கிளார்க் ஒரு விஞ்ஞானியும் கூடத்தான். தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்களின் ஆட்சி கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்றைய யுகத்தின் பிதாமகரே இவரேதான். ஏனெனில் பூமிக்கான தகவல் பரிமாற்றத்திற்கான செயற்கைக் கோள்கள் பற்றிய கோட்பாட்டினை அன்றைய காலத்தில், நாற்பதுகளிலேயே, எதிர்வு கூறியவர் இவர். மேலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் ராடார் நிபுணராகவும் இவர் பணிபுரிந்திருக்கின்றார்.

விஞ்ஞானப் புனைகதையுலகின் முக்கியமான படைப்பாளியான ஆர்த்ர் சி. கிளார்க்கின் படைப்புகள் மானுட இனத்தைப் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொண்டிருப்பவை. அவரது படைப்புகள் அவற்றின் தெளிவுக்காகவும், கற்பனை வளமை மிக்க எதிர்வு கூறல்களுக்கும் பிரசித்தி பெற்றவை. ஏற்கனவே கிடைக்கப்பெற்ற அறிவியற் தகவல்களின் அடிப்படையில், அறிவுபூர்வமான, புதிய கண்டுபிடிப்புகளை எதிர்வு கூறின அவை. அத்தகையதொரு கண்டுபிடிப்பே மேற்படி 'பூமிக்கான தகவல் பரிமாற்றத்திற்குரிய செயற்கைக் கிரகமெ'ன்பதும். இப்பிரபஞ்சத்தில் மானுடர் எப்படியும் தப்பிப் பிழைத்து விடுவார்களென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையினைப் புலப்படுத்தும் படைப்புகளை அவர் படைத்தார். மானுடர்கள் ஒருகாலத்தில் அழிந்து விடுவார்களென்பதில் அவருக்கு நம்பிக்கையில்லை. சகலபிரச்சினைகளுக்கும் மத்தியில் அவர்கள் எப்படியும் தப்பிப் பிழைத்து விடுவார்களென்று அவர் உறுதியாக நம்பினார். அவர்கள் எப்படியும் தப்பிப் பிழைப்பதற்குரிய வழியொன்றினை கண்டு பிடித்து விடுவார்களென்பதில் அவருக்குத் திடமான நம்பிக்கையிருந்தது. அத்துடன் அவர் மானுடர் மட்டும்தான் இப்பிரபஞ்சத்தின் ஒரேயொரு நுண்ணறிவுமிக்க, புத்திசாதுரியம் மிக்க உயிரினமென்றும் நம்பவில்லை. பரந்து, விரிந்து கிடக்குமிந்தப் பிரபஞ்சத்தில், நம்மைப்போன்ற புத்திசாதுரியம் மிக்க உயிரினங்கள் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சாத்தியங்களை அவர் திடமாகவே நம்பினார். இத்தகைய காரணங்களினால் மானுடரின் எதிர்காலம் பற்றிய ஆக்கபூர்வமான நம்பிக்கை, தெளிவு, கற்பனை வளமிக்க அறிவுபூர்வமான எதிர்வு கூறல்கள், இவையே அவரது படைப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களாக விளங்குகின்றன.

அவரது 'பிள்ளைப் பிராயத்தின் முடிவு' ( Childhood's End) என்னும் விஞ்ஞானப் புனைகதையானது மானுடர் உளரீதியில் இன்னுமொரு தளத்துக்குப் (Overmind) வளர்ச்சியுறுவதை விபரிக்கும். அவரது 'பிள்ளைப் பிராயத்தின் முடிவு' ( Childhood's End) என்னும் விஞ்ஞானப் புனைகதையானது மானுடர் உளரீதியில் இன்னுமொரு தளத்துக்குப் (Overmind) வளர்ச்சியுறுவதை விபரிக்கும். 'பூமியொளி' (Earthlight) என்னும் 1951இல் வெளியான அவரது குறுநாவல் மானுட இனமானது தன்னைத்தானே அழித்துக் கொள்ளாதென்ற நம்பிக்கையினை வெளிப்படுத்தும்.. அன்றைய காலகட்டத்தில் வெளியான இவரது 'த சென்டினல்'  The Sentinel) இன்னுமொரு புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைகதையாகும். இது 1996இல் சந்திரனுக்குப் பயணிக்கும் வில்சனென்னும் நிலவியல் அறிஞரொருவரின் பயணத்தை அவரது கூற்றில் வெளிப்படுத்துமொரு புனைவாகும். சந்திரனில் வேற்றுலகத்து உயிரினமொன்றினால் பூமியில் மானுடர் தோன்றுவதற்குப் முன்பே அமைக்கப்பட்டிருந்த படிகத்திலான 'பிரமிட்'டினைப்பற்றி விபரிக்கும். மேற்படி படிகப் பிரமிட்டானது பூமியிலுள்ள ஒருவரால் அங்கு அமைக்கப்பட்டிருக்கக் கூடுமென்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்ட வில்சன் பின்னர் தன்னைப் போல் சந்திரனுக்கு முன்னர் பயணித்த வேற்றுலகத்து உயிரொன்றின் வேலையே அதுவென்று நம்பிக்கை கொள்கின்றார். மேற்படி 'படிகப் பிரமிட்டா'னது மானுடருக்கும், வேற்றுலகத்து வாசிகளுக்குமிடையில் எதிர்காலத்தில் நிகழக்கூடிய சந்திப்பொன்றினை எதிர்வு கூறுமொரு குறியீடாகவே கருதப்படுகிறது. மேலும் அந்தப் பிரமிட்டின் அமைப்பானது அவ்வகை உயிரினமொன்றினால் அமைக்கப்பட்டதொரு எசசரிக்கைக் கருவியே. அதனைக் கண்டு பிடிக்கும் உயிரினத்தைப் பற்றிய தகவல்களை அந்த வேற்றுலகத்துவாசிகளுக்கு அறிவிப்பதற்காக மேற்படி 'சென்டினல்' என்னும் அந்தப் படிகப் பிரமிட்டானது சந்திரனில் அமைக்கப்பட்டிருந்தது. இது போன்று மில்லியன் கணக்கில் இத்தகைய படிகப் பிரமிட்டுகள் பிரபஞ்சமெங்கும் அந்த வேற்றுலக வாசிகளினால் அமைக்கப்பட்டிருக்கவேண்டுமென்று மேற்படி புனைகதையில் ஆர்தர் சி கிளார்க் விபரிக்கின்றார். மேற்படி 'படிகப் பிரமிட்டி'னை மேற்படி வேற்றுலகவாசிகள் பூமியில் அமைக்காமல் சந்திரனில் எதற்காக அமைத்திருக்க வேண்டும்? அதற்குமொரு தர்க்கரீதியிலான காரணமொன்றினைக் கிளார்க் முன்வைக்கின்றார். சந்திரனை அடைவதற்கு பூமியில் வசிக்கும் மானுடர் வெற்றிடத்துடன் சூழ்ந்த விண்வெளியினைக் கடக்கும் வல்லமை பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஆற்றல் மிக்க இனமொன்றினால்தான் மேற்படி 'படிகப்பிரமிட்டி'னைக் கண்டுபிடிக்க முடியும்? அத்தகைய அறிவுள்ள உயிரினங்களுடன்தான் மேற்படி வேற்றுலகத்து வாசிகள் தொடர்பு கொள்ள விரும்பியிருக்க வேண்டும். மானுடர் அதனை அறியும்பொருட்டுத்தான் அதனைப் பூமியில் அமைக்காது சந்திரனில் அமைத்திருக்கவேண்டும். மேற்படி விஞ்ஞானப் புனைவு கிளார்க்கின் மானுடரின் தப்பிப் பிழைத்தலுக்கான ஆற்றலினையும், நுண்ணறிவு மிக்க வேற்றுலகத்துவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் பற்றியும், அததகைய உயிரினங்களுடனான தகவல் பரிமாற்றத்திற்கான சாத்தியம் பற்றிய அவரது அசைக்க முடியாத நம்பிக்கையினையும் வெளிப்படுத்துமொரு அறிவியற் புனைவாகும்.

மேலும் மேற்படி 'படிகப்பிரமிட்' பற்றிய சிந்தனை கிளார்க்கின் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அறிவுபூர்வமாகப் புனையப்படும் அவரது கற்பனையாற்றலினையும் புலப்படுத்துகிறது. எவ்விதம் பிரமிட்டானது பூமியில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்து, காலவெள்ளத்தில் மூழ்கிப் போன எகிப்திய நாகரிகத்தைப் பறைசாற்றுகிறதோ அவ்வாறே மேற்படி 'படிகப்பிரமிட்டும்' சந்திரனில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நாகரிகத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் மேற்படி 'படிகப்பிரமிட்'டானது 'சென்டினல்' (Sentnal) என்று அழைக்கப்படுகிறது. 'சென்டினல்' என்றால் அதற்கு அவதானிப்பவர் என்றொரு அர்த்தமும் உண்டு. தம்மையொத்த அறிவுபூர்வமான உயிரினமொன்றின வருகைக்காகக் காத்து நிற்கும், அவதானித்து நிற்கும் அந்தப் 'படிகப்பிரமிட்'டுக்கு 'சென்டினல்' என்னும் பெயர் நன்கு பொருத்தமானதே.

மேலுமொரு விடயத்தினையும் மேற்படி 'சென்டினல்' என்னும் விஞ்ஞானப் புனைகதை வெளிப்படுத்துகிறது. அது சந்திரனில் மனிதரால் காலடியெடுத்து வைக்கமுடியுமென்ற, சந்திரப் பயணத்துக்கான சாத்தியம் பற்றிய, அவரது நம்பிக்கைதானது. மேற்படி கதை எழுதப்பட்டது 1951இல். ஆனால் உண்மையிலேயே மனிதர் சந்திரனில் காலடியெடுத்து வைத்தது 1969இல். மேற்படி மானுடரின் எதிர்காலச் சாத்தியப்பாடுகள் பற்றிய நம்பிக்கையானது கிளார்க்கின் படைப்புகளில் காணப்படும் முக்கியமானதொரு அம்சமென்று விமர்சகர்கள் பலர் விதந்துரைத்திருக்கின்றார்கள்.

இவ்விதமான மானுடர் பற்றி, வேற்றுலகத்துவாசிகள் பற்றிய நம்பிக்கையினைக் கிளார்க் பெற்றது எவ்விதம்? இதற்கு அவரது 'பிரமிப்பூட்டும் நாட்கள்' (Astounding Days) என்னும் சுயசரிதை நூல் விடை பகர்கிறது. மேற்படி நூலில் தனது பதின்மூன்று வயதில் தான் முதன்முதலாக முதலாவது விஞ்ஞானப் புனைவுச் சஞ்சிகையொன்றினை வாசித்ததாகவும், அன்றிலிருந்து தனது வாழ்க்கை அடியோடு மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். தற்பொழுது 'அனலாக்' (Analog) என்று வெளிவரும் விஞ்ஞானப் புனைவுச் சஞ்சிகையானது அக்காலகட்டத்தில் 'பிரமிப்பூட்டும் உயர்தர விஞ்ஞானக் கதைகள்' ( Astounding Stories of Super Science) என்னும் பெயரில் வெளிவந்து கொண்டிருந்தது. அச்சஞ்சிகையே கிளார்க்கின் வாழ்க்கையினை அடியோடு மாற்றிய மேற்படி சஞ்சிகையாகும். தனது சுயசரிதையில் கிளார்க் மேறபடி சஞ்சிகை எவ்விதம் அவரது 'டீன்' வயதுப் பருவத்தில் அவர்மேல் ஆதிக்கம் செலுத்தியதென்பதை விபரிப்பார். மேற்படி சஞ்சிகையின் முதலாவது ஆசிரியத் தலையங்கத்தில் 'நாளை பிரமிப்பூட்டும் பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. உங்களது குழந்தைகள் அல்லது அவர்களின் குழந்தைகள் சந்திரனுக்கான பயணத்தை மேற்கொள்வார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டும் கிளார்க் அவை மிகவும் நம்பிக்கையான் சொற்களென்பார். உண்மையில் 1930இல் வாழ்ந்தவர்களின் பிள்ளைகளே சந்திரனில் காலடியெடுத்து வைத்தார்களென்பார்.

ஆர்தர் சி. கிளார்க்கின் மேற்படி விஞ்ஞானச் சஞ்சிகையுனான சிறுவயதுத் தொடர்பும், வாசிக்கும் பழக்கமுமே மானுடரின் எதிர்காலம் பற்றிய, நுண்ணறிவுமிக்க வேற்றுலகவாசிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் பற்றிய நம்பிக்கையினை அவருக்கேற்படுத்தின. அதுவே அவரது படைப்புகள் பலவற்றில் காணப்படும் முக்கியமான அம்சங்களிலொன்றாக விளங்குவதற்குக் காரணம். அதே சமயம் தெளிவும், எளிமையும், ஆழமும் மற்றும் அறிவுபூர்வமான கற்பனைச் சிறப்பும் அவரது படைப்புகளில் விரவிக் கிடப்பதற்கு முக்கியமான காரணங்களாக அவரது வாசிப்புப் பழக்கம், கல்விப் பின்புலம், மற்றும் அவரது தொழில்ரீதியிலான அனுபவங்களே காரணங்களெனக் குறிப்பிடலாம். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப, மேற்படி 'சென்டினல்' விஞ்ஞானப் புனைகதையானது அவரது படைப்புகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இன்னுமொரு விடயத்திற்கும் மேற்படி புனைகதையானது அடிப்படையாக விளங்குகின்றது. ஆர்தர் சி. கிளார்க்கென்றால் ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற '2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி' என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் ஞாபகம் அனைவருக்குமே வராமல் போகாது. ஸ்ரான்லி குப்ரிக்கின் இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படத்திற்கு குப்ரிக்குடன் இணைந்து திரைப்பட வசனமெழுதியவர் கிளார்க். 'சென்டினல்' என்னும் மேற்படி புனைகதையினை இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் வேண்டுகோளின்பேரில் விரிவாக்கி உருவாக்கிய நாவலே '2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி'. திரைப்படம் நாவல் வெளிவருவதற்கு முன்னர் வெளிவந்தாலும் நாவல் திரைப்படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே கிளார்க்கால் எழுதி முடிக்கப்பட்ட் விட்டது. ஆயினும் அந்நாவல் உருவாக்கத்திற்கு முக்கிய காரணம் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கேயென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவரது வேண்டுகோளின்பேரில்தான் கிளார்க் அந்நாவலை எழுதினார். அதற்கான பெயர் கூட ஸ்டான்லி குப்ரிக்கினால் வைக்கப்பட்டதாகக் கிளார்க் கூறியுள்ளார்.

மானுடரின் தப்பிப் பிழைக்கும் ஆற்றல் மிக்க எதிர்காலம், நுண்ணறிவு மிக்க வேற்றுலக வாசிகள் இருப்பதற்கான சாத்தியம் போன்றவற்றில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை , அறிவுபூர்வமான வளமான கற்பனையாற்றல், தெளிவு, எளிமை மற்றும் ஆழம் ஆகியவற்றைப் புலப்படுத்தும் விஞ்ஞானப் புனைகதைகளுக்காகவும் , அறிவுபூர்வமான எதிர்வு கூறல்களுக்காகவும் ஆர்தர் சி. கிளார்க் எப்பொழுதும் நினைவு கூரப்படுவார். அந்த நம்பிக்கையினால்தான் அவர் மக்களின் விண்வெளிப்பயணம் விரைவில் சாத்தியமாகுமென்றும், அப்பொழுது சாதாரண மக்கள் சந்திரனுக்கு மட்டுமல்ல அதற்கப்பாலும் இலகுவாகப் பயணிப்பார்களென்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். ஏற்கனவே சாத்தியமாகியுள்ள அவரது எதிர்வு கூறல்கள் பலவற்றைப் போலவே இந்த நம்பிக்கை மிக்க எதிர்வு கூறலும் சாத்தியமாகிவருவதையே தற்போதைய நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

மூலம்: பதிவுகள் ஏப்ரல் 2008; இதழ் 100, கணையாழி, அம்ருதா


49. அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்

நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம்' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசு கிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.

சரி. அப்படி இந்தச் சார்பியற் தத்துவம் அப்படி என்னதான் கூறிவிடுகின்றது?

விடை மிகவும் சுலபம். 'நேரம்', 'வெளி' பற்றிய கருதுகோள்களை , அதாவது இதுவரை காலம் 'வெளி', 'நேரம்' பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை, சார்பியற் தத்துவம் அடியோடு மாற்றியமைத்து விடுகின்றது. அதே சமயம் 'பொருள்' , 'சக்தி', 'புவியீர்ப்பு', பற்றியும் புதிய கருது கோள்களை முன்வைக்கின்றது. இச் சார்பியற் தத்துவக் கோட்பாடுகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1. சிறப்புச் சார்பியற் தத்துவம் (Special Theory of Relativity)
2. பொதுச் சார்பியற் தத்துவம் (General Theory of Relativity)

இவற்றில் 'சிறப்புச் சார்பியற்' தத்துவம் இதுவரை நிலவி வந்த 'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகளை அடியோடு மாற்றியமைத்து விடுகின்றதென்றால், பொதுச் சார்பியற் தத்துவமோ புவியீர்ப்பு பற்றிய கோட்பாட்டை மாற்றியமைத்து விடுகின்றது.


'வெளி' 'நேரம்' பற்றிய கோட்பாடுகள்.

ஆயிரக்கணக்கான வருடங்களாக நிலவி வந்த அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளைப் பரிசீலனைக்குட்படுத்தியவர்கள் கலிலியோவும் , சேர். ஜசக் நியூட்டனுமே. ஆனால் வெளி, நேரம் பற்றிய இவர்கள் யாவரினதும் கோட்பாடுகள் ஒன்றாகவேயிருந்தன. வெளியையும், நேரத்தையும் சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்பும் அடையாத சுயாதீனமானவைகளாகவே (absolute) இவர்கள் கருதினார்கள். சாதாரண மனித வாழ்வின் அனுபவங்களிலிருந்தே இவர்களும் வெளி, நேரம் பற்றிய கோட்பாடுகளை வகுத்திருந்தார்கள்.

எங்கும் எல்லையற்று விரிந்து பரந்து கிடப்பதுதான் வெளி. 'எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளி வானிலே..' என்று பாரதி பாடியதைப் போல் எங்கும் வியாபித்துக் கிடக்கின்றது வெளி. இந்த வெளியில் தான் சூரியன், கிரகங்கள் மற்றும் பல்வேறுபட்ட பொருட்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இயக்கங்கள் இந்த வெளியைப் பாதிப்பதில்லை. அது தன்பாட்டில் வியாபித்துக் கிடக்கின்றது. இவ்வாறுதான் நியூட்டன் வரையிலான் விஞ்ஞானிகள் கருதினார்கள். இது போன்றுதான் 'நேரமும்' சுற்றிவர நிகழும் இயக்கங்களால் எவ்விதப் பாதிப்புமற்று தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருப்பதாகப் பெள்தீக விஞ்ஞானிகள் கருதினார்கள்.

சிறப்புச் சார்பியற் தத்துவமும்,  வெளியும், நேரமும்...

இவ்விதம் சுயாதீனமாகக் கருத்தப்பட்டு வந்த 'வெளி'யோ 'நேர'மோ உண்மையில் சுயாதீனமானவையல்ல. அவையும் சுற்றி வர நிகழும் இயக்கங்களால் பாதிப்புறுபவையே, சார்பானவையே என்பதை ஜன்ஸ்டைன் 'சிறப்புச் சார்பியற் தத்துவம்' மூலம் வெளிக்காட்டினார். உதாரணமாக நேரத்தை எடுத்துக் கொண்டால்.. வேகமானது நேரத்துடன் மாறுதல் அடைகின்றது. ஒளி வேகத்தில் செல்லும் ராக்கட்டில் ஒரு மனிதனையும், பூமியில் நிற்கும் ஒருவனையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். இவர்கள் இருவருமே 'சீக்கோ' கடிகாரங்களைக் கைகளிலே கட்டியிருக்கின்றார்கள். இவர்கள் இருவரது கடிகாரங்களும் நேரம் சுயாதீனமானதாகவிருந்தால் ஒரே நேரத்தைக் காட்ட வேண்டும். ஆனால் நேரம் சார்பானதாகவிருப்பதால் , இருவரது கடிகாரங்களும் இரு வேறு நேரங்களையுமே காட்டும். உண்மையில் வேகம் கூடக்கூட நேரம் மாறுவதும் குறையவே தொடங்கும். ஒளிவேகத்தில் செல்லும் ராக்கட்டில் இருப்பவனிற்கு அவனிற்குச் சார்பாக ஒரு மணித்தியாலம் சென்றிருக்கும். அதே சமயம் பூமியிலிருப்பவனிற்கோ பல நூறு வருடங்கள் சென்றிருக்கும். இவ்விதம் நேரமானது வேகத்துடன் மாறுவது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை.

இதற்காக விஞ்ஞானிகள் இரும்பு அணுக்கருக்களுடன் காமாக் கதிர்களை இரு வேறு உயரங்களில் மோதவிட்டுப் பார்த்தார்கள். உயரத்தில் நேரம் வேகமாகச் செயற்படுகின்ற காரணத்தால் காமாக் கதிர்களை உறுஞ்சும் இரும்பு அணுக்கருக்களின் போக்கு வித்தியாசப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

வெளியும், பொருளும்..

இதுபோல் தான் சுயாதீனமாகக் கருதப்பட்டு வந்த வெளி (space) கூட நேரம் போல் பாதிப்படைகின்றது. ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் , அதன் பொருண்மை கூடக் கூட அப்பொருளானது தன்னைச் சுற்றியிருக்கும் வெளியை வளைக்கத் தொடங்கிவிடுகின்றது. 'வெளியை'யாவது வளைப்பதாவது.. வளைப்பதற்கு வெளியென்ன ஒரு பொருளா?.." என நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால் இவ்விதம் வெளியைப் பொருளின் பொருண்மை வளைப்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.

புதன் கிரகமானது சூரியனைச் சுற்றி வரும் ஒழுக்கில் ஒரு சிறு வித்தியாசம் இருந்து வந்தது. இந்த வித்தியாசத்தின் காரணத்தை நியூட்டனின்கோட்பாடுகளினால் விளக்க முடியவில்லை. ஜன்ஸ்டைனின் சார்பியற் கணித சூத்திரங்களோ இவ்வித ஒழுக்கில் காணப்படும் மாற்றத்திற்குக் காரணம் சூரியன் அதனைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்து விடுவதே என்பதை எடுத்துக் காட்டின. இது பின்னர் பிரிட்டனைச் சேர்ந்த வானியல் அறிஞரான சேர். ஆர்தர் எடிங்டனால் சூரிய கிரகணமொன்றை அவதானித்த பொழுது நிரூபிக்கப் பட்டது.

பொதுச் சார்பியற் தத்துவமும் புவியீர்ப்பும்...

புவியீர்ப்பைப் பொறுத்தவரையில் நியூட்டன் அதனை ஒரு விசையாகவே கருதினார். ஆனால் ஜன்ஸ்டனின் 'பொதுச் சார்பியற் தத்துவமோ' சூரியன் தன்னைச் சுற்றியுள்ள வெளியினை வளைத்து விடுகின்றதன் காரணமே பூமியினைச் சூரியனைச் சுற்ற வைத்து விடுகின்றதென்பதை எடுத்துக் காட்டியது.

இவ்விதமாக அரிஸ்ட்டாடிலின் கோட்பாடுகளையே ஆட்டங் காண வைத்த நியூட்டனின் கோட்பாடுகளையே ஆட்டங் காணவைத்து விட்டன ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகள். சாதாரண மனித அனுபவங்களிற்கப்பாற்பட்டு சம்பவங்கள் நடைபெறும் போதே ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகளைப் பூரணமாக உணர முடியும். மிகப் பிரமாண்டமான வேகத்தில் செல்லும் போதே நேரம் மாறுவதை இலகுவாக அவதானிக்க முடியும். அதனை , அம்மாற்றத்தினை. சாதாரண மனித சக்திக்குட்பட்ட வேகத்தில் அவதானிக்க முடியாது. ஏனென்றால்.. மாற்றம் அவ்வளவு சிறியதாக இருந்து விடுகின்றது.

மேலும் வெளியையும் நேரத்தையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்ப்பதையும் சார்பியற் கோட்பாடுகள் எதிர்க்கின்றன. 'வெளிநேரச்' (spacetime) சம்பவங்களின் தொகுப்பாகவே உண்மையில் , ஜன்ஸ்டனின் சார்பியற் கோட்பாடுகள் விளக்கு¢கின்றன.

இவ்விதமாக இப்பிரபஞ்சத்தை உண்மையில் தெளிவாகத் துல்லியமாகச் , சரியாக மேற்படி ஜன்ஸ்டைனின் சார்பியற் கோட்பாடுகள் விளக்கி வைக்கின்றன.

உசாத்துணை நூல்கள்:
1. 'A Brief History Of Time' By Stephen Hawkings
2. 'Black Holes and Baby Universes' By Stephen Hawkings
3. 'Relatively Speaking' By Eric Chaisson
4. 'Relativity' By Albert Einstein
5. 'Stephen Hawking : quest for a theory of every thing' By Kitty Fergusson

-நன்றி: கணையாழி February 1997- வீரகேசரி,  பதிவுகள், திண்ணை

50. அறிவியல் உலகம்: மனிதரின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்!
-
"மனிதன் சூழ்நிலையின் கைதி" என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதரின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின் தாக்கம் அல்லது பாதிப்பு ஒவ்வொரு மனிதரின் மீதும் ஒரே விதமான தாக்கத்தினை வெளிப்படுத்துவதில்லை. மாறாக அவரது உடனடிச் சூழலான குடும்பச் சூழல், அவரது அகச்சூழல், என்பவற்றிற்கேற்பவே இப்பாதிப்பும் அவரிடத்தில் ஏற்படுத்தும் விளைவுகளும் இருந்து விடுகின்றன. வர்க்கங்களால், ஏற்றத்தாழ்வுகளால் பிளவுண்டு கிடக்கும் புறச்சூழல் மனிதரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகவும் வலியவை. பெரும்பாலான தெளிவுள்ள மனிதர்களே இச்சூழலின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் கட்டையைப் போல் அள்ளுண்டு போகும்போது சாதாரணமனிதர்களின் நிலை என்ன? இத்தகைய பாதிப்புகளிலிருந்து தப்பிப் பிழைத்த ஒருசிலரே சூழலை மீறிய சரித்திர புருஷர்களாக, மானிட வழிகாட்டிகளாக உருவாகுகின்றார்கள்.

இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார்.

1. உணர்வு மனம் (அல்லது புற மனம்)

2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்)

மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை.

இன்றைய பெரும்பான்மையான சமய , அரசியல் தலைவர்களுட்பட சாதாரண மக்களீனதும் நிலை இதுதான். உணர்ச்சிகரமாகப் பேசுவதொன்று, செய்வதொன்றாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து அலுத்துக் கிடக்கின்றோமே.இந்நிலைக்குக் காரணம் இந்தப் புற , அக (ஆழ்)மனங்களிற்கிடையிலான போராட்டம்தான். புறச்சூழல், அகச்சூழலின் விளைவுகள் மனிதரில் புறமனதினில் ஏற்படுத்தும் பாதிப்பு செயலுருப் பெற வேண்டுமானால் அவரது ஆழ்மனமும் புறமனமும் ஒன்றாக இயங்க வேண்டியது அவசியம்.
மனிதரின் மனம் பற்றிய ஆய்வுகளில் பல புரட்சிகரமான கோட்பாடுகளைக் கண்டு பிடித்தவர் சிக்மண்ட் பிராய்ட். வீயன்னாவில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்து மருத்துவராகக் கடமையாற்றிய பிராய்ட்டினைப் பாதித்த முக்கிய விடயங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். இவையே இவரது மனம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் தோன்றுவதற்குக் காரணங்களாகவிருந்தன என்று துணிந்து கூறலாம்.

1. டார்வினின் கூர்ப்புக் கொள்கை. ( இக்கொள்கையின் முன்னர் ஏனைய மிருகங்களிருந்து பிரித்துப் பார்க்கப் பட்ட மனிதர் இதன் அறிமுகத்தின் பின்னரோ மிருகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதே சமயம் மனிதர் பற்றிய ஆய்வுகளை இயற்கை விஞ்ஞான முறைகளிற்கேற்ப மேற்கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகளை இக்கோட்பாடு உருவாக்கியது ).

2. கஷ்டாவ் பெச்னோவின் (Gustav Fechneo- பிரபல்யமான ஜேர்மானிய தத்துவஞானி) கண்டுபிடிப்பான உளவியல் விஞ்ஞானம் (Science of Psychology). இது மனமும் விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்யப்பட முடியுமென்பதை நிலை நாட்டியது.

3. நவீன பெளதிகத்தின் புதிய கண்டுபிடிப்புகளான சக்தி பற்றிய குவாண்டம் கொள்கைகளும் பிராய்டின் மனம் பற்றிய ஆய்வுகளிற்குப் பெரிதும் உதவின. இக்குவாண்டம் கொள்கையின் படி சக்தியும் பொருளைப் போல் அளக்கப்படக் கூடியதெனவும் அதே சமயம் சக்தி அழிக்கப் பட முடியாதெனவும் அறியப் பட்டது. மேலும் இப்புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக மனிதரும் சக்தியின் வடிவம் (Energy System) என்பதும், எந்த விதிகள் பெளதீகத்தில் உள்ளனவோ அதே விதிகளிற்கமையவே மனிதரும் இயங்குகின்றாரெனவும் நிரூபணமாயிற்று.

இதுதவிர பிராய்டின் வளர்ச்சிக்கு அவரது மருத்துவத் தொழிலும், அவரது ஆழ்ந்த அறிவும் பெரிதும் காரணங்களாகவிருந்தன. பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் (Personality) அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல்கல்லே. இயக்கவியல் உளவியல் மனிதரில் ஆளுமையிலேற்படுத்தும் மாற்றங்களை விளக்குவதாகும். இங்கு மனிதரின் ஆளுமையென நான் கூறுவது ஒரு மனிதரின் குணவியல்புகளையே குறிக்கின்றது.

பிராய்டின் கருத்துப்படி ஒரு மனிதரின் மன இயல்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன அல்லது அவரது மனவியல்புகள் மூன்று வடிவங்களில் செயற்படுவதாகக் கூறலாம்.

1. உணர்வு உந்தும் இயல்பு (id)
2. நான் என்னும் முனைப்பு (Ego)
3. அதியுயர் மனக் கூறு (Super Ego)

உணர்வு உந்தும் இயல்பு (id)

இந்த உணர்வு உந்தும் இயல்பென்றாலென்ன? மனிதரில் ஏற்படும் சகல விதமான ஆசைகள், உணர்வுகள் (உதாரணமாகப் பசி, பாலுணர்வு போன்றவற்றினைக் கூறலாம்) என்பவற்றிற்குக் காரணம் இந்த உணர்வு உந்தும் இயல்புதான். இவ்வாறு உருவாகும் உணர்வுகளிற்கு வடிகாலொன்றினைத் தேடுவதுதான் இந்த உணர்வு உந்தும் இயல்பினது பிரதான செயற்பாடாகும்.

பிராய்டின் கருத்துப்படி இந்த உணர்வு உந்தும் இயல்பின் செயற்பாடானது மனிதரின் வாழ்வின் பிரதான நோக்கமான இன்பத்தினை அடைதலைப் (Pleasure Principle) பூர்த்தி செய்வதாகவேயுள்ளது. ஆனால் மேற்படி உணர்வு உந்தும் இயல்பின் பிரதான குறைபாடென்னவென்றால்..இது வெளி உலகைப்பற்றி , யதார்த்த நிலைமைகளைப் பற்றிக் கவலைபடுவதேயில்லை. உதாரணமாகப் பசியினால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தையொன்றினை நோக்குவோம். முதலாவதாக இத்தகைய பசி உள் உணர்வு (Hungry Instinct) எவ்விதம் குழந்தையிடம் உருவாகின்றதென்ற கேள்விக்குப் பிராய்டின் விடை, இவ்விதமான உள்ளுணர்வுகள் மனிதரின் பிறவியிலேயே உருவாகின்றன என்பதுதான். பசியால் பீடிக்கப்பட்டுள்ள குழந்தை அதனைப் பூர்த்தி செய்வதற்காக அழுகின்றது. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் பாதிப்புகள் அதன் உணர்வுகள் உந்தும் இயல்பு (id) வளர்ச்சிக்கு மேலுமுதவுகின்றன. இவ்விதம் அழும் குழந்தையிலேற்படும் உணர்வு உந்துமியல்பானது இருவிதமான செயல்முறைகளில் அல்லது படிகளில் உருவாகுகின்றன.

ஆரம்பப் படிமுறை (Primary Process). இக்கட்டமானது குழந்தையின் மனதில் அப்பசி உணர்வினைத் தீர்க்கக் கூடிய உணவு பற்றிய பிம்பத்தினை (image) இனங்காட்டி விடுகின்றது. இவ்விதம் உணர்சிகளிற்கு வடிகாலான தீர்வினை பிம்பத்தின் மூலம்மனதில் உருவாக்கும் செயற்பாட்டினை பிராய்ட் ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடென்கின்றார் (Wish Fullfillement). பிராய்டின் கருத்துகளின்படி நாம் காணும் கனவுகளெல்லாம் இத்தகைய ஆசையைப் பூர்த்தி செய்யும் செயற்பாடுகளே. ஆனால் இவ்வுணர்வு உந்தும் இயல்பானது உள்ளத்தில் ஆசையினைப் பூர்த்தி செய்யத் தூண்டும் அக பிம்பத்தினையும்(Subjective memory image), அப்பிம்பத்தின் உண்மையான புற வடிவத்தினையும் (மேற்படி குழந்தை உதாரணத்தில் 'உணவினையும்') வேறுபடுத்திப் பார்க்கும் தனமையற்றதாகவே இருந்து விடுகின்றது. அதிலும் இத்தகைய ஆசையினைப் பூர்த்தி செய்யும் பொருளின் பிம்பத்தினை மனதினில் இனக்காணுவதால் மட்டும் அக்குழந்தையின் பசி தீர்ந்து போய்விடுவதில்லை. உண்மையான உணவினை அதற்கு ஊட்டுவதால் மட்டுமே அதன் பசி தீர்ந்து விடுகின்றது. பசியால் அழும் குழந்தையின் பசியினைத் தீர்க்கும் உணவின் விம்பம் உள்ளத்தில் உருவாகுவது ஆரம்பப் படியென்றால் அப்பசி உணர்வினை உண்மையில் பூர்த்தி செய்வதற்கு இரண்டாவது படியொன்றின் (Secondary Process) அவசியமும் தேவையாகின்றது. மனதின் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்புடன்' (Ego) அது சம்பந்தப் பட்டுள்ளது.

2. நான் என்னும் முனைப்பு (Ego)

உணர்வு உந்தும் இயல்பானது பாலியல் உணர்வு அல்லது பசி உணர்வு அல்லது வேறெதாவது உணர்வுகள் தோன்றும் பொழுது அதனைத் தீர்ப்பதற்கு தவிக்கின்றது. அது வெளியுலகைப் பற்றியோ வேறெதனைப் பற்றியோ கவலைப் படுவதில்லை. அதே சமயம் அது மேற்படி உணர்வுகளிற்கு தீர்வினைத் தரக்கூடிய வடிகாலின் உண்மை வடிவினையும், உள்ளத்தே உருவாகும் அது பற்றிய விம்பத்தினையும் வேறு படுத்திப் பார்க்கும் தன்மையினயும் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் பசியால் அழும் குழந்தை கைக்குக் கிடைத்ததை வாயினுள் போட்டு விடுகின்றது. இச்சமயத்தில் தான் மனதின் ஆளுமையினை உருவாக்கும் மற்றொரு இயல்பான 'நான் என்னும் முனைப்பு' (Ego) முக்கியத்துவம் பெறுகின்றது. இது உணர்வு உந்தும் இயல்பினைப் (id) போலல்லாது உலகினைப் பற்றிய யதார்த்த நிலையினைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றது. ஆனால் 'உணர்வு உந்தும் இயல்போ' இதற்கு மாறாக 'இன்பத்தை அடைதல்' பற்றியே கவனத்தில் எடுத்துக் கொள்கிறது. இந்த 'நான் என்னும் முனைப்பே' 'உணர்வு உந்தும் இயல்பினால்' உருவான ஆசைகள், அபிலாஷைகள் போன்ற உணர்வுகளிற்குத் தீர்வினை வடிகாலினைக் கூறுகின்றது. உண்மையில் 'இந்த நான் என்னும் முனைப்பு' வழிமுறைகளைத் தான் கூறுகின்றதேயொழிய அம்முறை சரியா அல்லது தவறா அல்லது நன்மை பயக்குமா தீமையினை ஏற்படுத்துமா என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையற்றதாகவே இருக்கின்றது. இத்தகையதொரு நிலையில் தான் மனம் செயற்படும் முறைகளில் மூன்றாவதான 'அதியுயர் மனக் கூறு' (Super Ego) முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்குகின்றது.

3. 'அதியுயர் மனக் கூறு' (Super Ego)

உதாரணமாகப் பாலியல் உணர்வுகளால் தீவிரமாக பாதிக்கப் பட்ட ஒரு மனிதன்ஒருவன் நிலையினைப் பார்ப்போம். அவனில் கிளர்ந்தெழும் உணர்வுகள் உணர்வு உந்தும் இயல்பின் விளைவினால் ஏற்படுவதாகும். அதனை அடைவதற்குரிய வழிமுறைகளை அடையாளம் கண்டு அவனைச் சிறிது தடுத்து வைப்பது 'நான் என்னும் முனைப்'பின் தன்மையாகும். அம்மனிதன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ள விழைகின்றான். அதனை அவன் பலாத்காரமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். அல்லது அவன் வாழும் சமூகத்தில் நிலவும் சட்ட திட்டங்களிற்கேற்பவும் அவனால் அவனது உணர்வுகளிற்கு வடிகாலினைத் தேட முடியும். இச்சமயத்தில் தான் 'அதியுயர் மனக்கூற்றின்' (Super Ego) பங்களிப்பு அவசியமாகின்றது.இவ்'வதியுயர் மனக்கூறான'து மேற்படி மனிதனின் குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் முதலான அவன் மேல் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களினூடாகவும், சமுதாயத்தில் நிலவும் சட்ட திட்டங்களின் விளைவாகவும் அவனடைந்த பாதிப்புகளிற்கேற்பவே நன்மை தீமைகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றது.

மனித ஆளுமை....

ஆக மொத்தத்தில் மனிதரின் ஆளுமையினை நிர்ணயிப்பவை உணர்வு உந்தும் இயல்பிற்கும், நான் என்னும் முனைப்பிற்கும், அதி யுயர் மனக் கூறிற்கும் இடையிலேற்படும் மோதல்களின் விளைவேயென்று துணிந்து கூறலாம்.

இவ்விதம் மனதின் செயற்பாடுகளைச் செய்வதற்குரிய சக்தியினை மனம் எவ்வாறு பெற்றுக் கொள்கின்றது? பிராய்ட் இச்சக்தியினை 'மனச் சக்தி ' என்கின்றார். மின்சக்தி காந்த சக்தி வெப்பச் சக்தி என்பதைப் போல் இம் மனச் சக்தியும் சக்தியின் ஒரு வடிவமே.உடலினை இயக்கும் உடற் சக்திதான் தேவைப்படும் போதெல்லாம் மனச் சக்தியாகவும் மாறிக்கொள்கின்றதென்று கருதினார் சிக்மண்ட் பிராய்ட். மின்சக்தி பல்வேறு வேலைகளைச் செய்யப் பயன்படுத்த்தப் படுவதைப் போல், மனச் சக்தியும் உளவியல் வேலைகளான் சிந்தித்தல், உணர்தல், ஞாபகப் படுத்துதல் முதலானவற்றை செய்வதற்கு உதவுகின்றது என அவர் நம்பினார்.

அன்றாடம் பல்வேறு வகைப் பட்ட நெருக்கடிகளிற்கிடையில் அகப்பட்டுத் தத்தளிக்கும் நாம் அந்நெருக்கடிகளிருந்து தப்புவதற்கு மூடத்தனமான கோட்பாடுகளையெல்லாம் துணைக்கழைத்து ஆறுதல் அடைகின்றோம். இத்தகையதொரு சூழலில்தான் எம்மன இயல்புகளை, அது செயற்படும் போக்குகளையெல்லாம் அறியவேண்டுவதன் அவசியம் அதிகமாகின்றது. இவ்விதம் எம்மை நாமே அறிந்து கொள்வதன் மூலம், சுத்திகரித்துக் கொள்வதன் மூலம்புறச் சூழலின் பாதிப்புகளிற்குச் சரியாக முகம் கொடுத்துச் செயற்படக் கூடிய அகச் சூழலை உருவாக்குவதன் மூலம் எம்வாழ்வு பயன் பெறுவது மட்டுமல்ல எம் சமுதாயப் பங்களிப்பினையும் செய்யக் கூடியதாகவிருக்கும்.

நன்றி: திண்ணை, பதிவுகள், தேடல்

மீள்பிரசுரம்: பதிவுகள் ஆகஸ்ட் 2007; இதழ் 92

No comments:

தொடர் நாவல் : மனக்கண் (4): அத்தியாயம் நான்கு - தங்கமணி - அ.ந.கந்தசாமி -

4-ம் அத்தியாயம்: தங்கமணி “வழமையான இடம்” என்று கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த இடம் பல்கலைக் கழக நூல் நிலையத்துக்குச் சமீபமாக அமைந்திருந்த ஒரு...

பிரபலமான பதிவுகள்