Sunday, October 25, 2026

செம்மணிப் புதைகுழி: இடைக்கால அறிக்கை மீதான சந்தேகங்களும், சர்வதேச விசாரணையின் அவசியமும்!


பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செம்மணிப் புதைகுழி பற்றிய இடைக்கால அறிக்கை இவ்விடயத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், திசை திருப்பும் வகையிலும் அமைந்திருப்பது வெளிப்படை. முதலில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்:

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச, 1995–1996 இல் யாழ்ப்பாணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றார். இது முக்கியமான விடயம். இதனடிப்படையில்தான் செம்மணிப் புதைகுழி தோண்டப்படுதல் ஆரம்பமானது. 

பேராசிரியர் ராஜ் சோமதேவா முதலில் இதுவரை  தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எக்காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதைத் தீர்மானித்திருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் கிடைக்கப்பெற்ற எலும்புக்கூடுகளில் பல அக்காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பது நிரூபணம் ஆகியிருந்தால்,  ஏன் அக்குறுகிய காலத்தில் அவ்வளவு எண்ணிக்கையில் அங்கு எலும்புக்கூடுகள் கிடைக்கப்பட்டன  என்னும் கேள்வி எழுந்திருக்கும். ஆனால் பேராசிரியர் இவ்விடயத்தில் மட்டுமல்ல, சோமரதன் ராஜ்பக்சவின் வாக்குமூலத்தைக் கூடக் கவனத்திலெடுக்கவில்லை என்று தெரிகிறது.

முதலில்  கார்பன் பரிசோதனை (Carbon Dating) மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள் போன்ற சர்வதேசத்  தரம் வாய்ந்த அறிவியல் சோதனைகள் எந்த நிலையிலிருக்கின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. பேராசிரியர் ராஜ் சோமதேவா எலும்புக்கூடுகளின் காலம் தெரியாத நிலையில் இவ்விதமான முடிவுக்கு வந்திருப்பது சரியான செயற்பாடல்ல. ஒரு கதைக்கு அவர் கூறுவது போல் இயற்கை அழிவு, தொற்று நோய் போன்றவற்றின் காரணமாக இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் அவை என்று வைத்துக்கொள்வோம். கார்பன் பரிசோதனை போன்றவை அவ்வெலும்ப்புக்கூடுகளின் காலகட்டம் 1995 -1996 காலகட்டம் என்று நிர்ணயம் செய்திருந்தால், அப்பொழுது எழும்  கேள்வி அக்காலகட்டத்தில் இயற்கை அழிவு அல்லது பெருந்தொற்று ஏதாவது நடந்ததா? அப்படி நடக்காவிட்டால்  ஏன் அவ்வளவு எண்ணிக்கையில் அங்கு எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. 

மேலும் செம்மணிப் புதைகுழிகளுக்குள் புதைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் ஆழமற்ற குழிகளில் , ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருந்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டவை. பல எழும்புக்கூடுகள் கைகள் கட்டப்பட்ட நிலையில், தாயும் குழந்தையுமாக என்றெல்லாம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் தொல்லியல் பேராசிரியர் அறிக்கையில் கருத்துத்  தெரிவித்துள்ளது சரியா என்பதை நம்பகமான சர்வதேச நிறுவனத்தினூடு மீளாய்வு செய்ய வேண்டும். பேராசிரியர் தவறான கருத்தால் இப்படுகொலை விடயத்தை மூடி மறைக்கப் பார்க்கின்றாரா என்பது கண்டறிப்பட்ட வேண்டும். அது உண்மையென்றால் அவர் தன் பதவியைத் துஸ்பிரயோகம் செய்திருக்கான சாத்தியங்கள் அதிகம். அவருக்கெதிராக நீதி மன்றத்தின் உதவியை நாட வேண்டும்.

இவ்விதமான பிரச்சனைகளில் வழக்கம்போல் நம்மவர்கள் இனவாதரீதியில் பிரச்சனையை அணுக முற்படுகின்றார்கள். இவ்விதம் அணுகுவது நீங்களே உங்கள் தலைகளில் மண்ணை அள்ளிப்போடுவது போன்றது. இனரீதியாக இப்பிரச்சனையை அணுகாமல், சட்டரீதியாக, உண்மை வெளிப்பட வேண்டும் என்னும் ரீதியில் அணுகுங்கள்.

அநுர குமார திசாநாயக்க அரசு சட்டம் அனைவருக்கும் சமம் என்று கூறி வருகிறது. சட்டத்தில் தாம் கை வைக்க மாட்டோம் என்று கூறி வருகிறது. அதை இவ்விடயத்தில் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சட்டரீதியாகத் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கை சான்றுகளை முறையாக ஆராய்ந்து உண்மையினை அறிவதற்குப் பதில் , மேலதிக ஆய்வுகளைத் தடுத்து , இவ்விடயத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோ என்னும் அச்சம் ஏற்படுகின்றது என்னும் நோக்கில் ,அவருக்கெதிராகச் சட்டத்தின் துணை நாடப்பட வேண்டும். அவருக்குப் பதில் இன்னுமொருவர் நியமிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விட வேண்டும்.

சட்டரீதியாக , சான்றுகளின் அடிப்படையில் , இனவாதரீதியில் இவ்விடயத்தை அணுகினால், நீங்களும் இவ்விடயத்தைத் தடம் மாறச் செய்யத்  துணை போகின்றீர்கள்.

உணர்ச்சிகளைத் தவிர்ப்பீர்.  பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கை தவறானது. ஏன் தவறானது என்பதைச் சான்றுகளுடன் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டுங்கள். அதே சமயம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச அமைப்புகளின் பங்களிப்புகளையும் வற்புறுத்துங்கள்.




No comments:

செம்மணிப் புதைகுழி: இடைக்கால அறிக்கை மீதான சந்தேகங்களும், சர்வதேச விசாரணையின் அவசியமும்!

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செம்மணிப் புதைகுழி பற்றிய இடைக்கால அறிக்கை இவ்விடயத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், திசை திருப்பும் வகை...