Thursday, March 8, 2018

Jerzey kosinskiயின் Being There! - வ.ந.கிரிதரன் -

- இந்தக் கட்டுரை சுபமங்களா, மார்ச் 1995 இதழில் வெளிவந்தது. -

'போலிஸ் அமெரிக்க'ரான எழுத்தாளர் ஜேர்சி கொசின்ஸ்கியின் புகழ்பெற்ற நாவலான Being There பற்றிய அறிமுகக் கட்டுரை. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் மீள்பிரசுரம் செய்யப்பட்டது. ஜேர்சி கொசின்ஸ்கியின் இன்னுமொரு புகழ்பெற்ற நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்' (The Painted Birds). இது நவீன அமெரிக்க இலக்கியத்தின் முக்கியதொரு படைப்பாகக் கருதப்படுகிறது.  இரண்டாம் உலக யுத்தக் காலகட்டத்தில் , யூதச் சிறுவனான ஜேர்சி கொசின்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அலைந்து திரிந்திருக்கின்றார். அக்காலகட்டத்தில் அவரடைந்த அனுபவங்களை மையமாக வைத்து எழுதிய நாவல் 'நிறமூட்டப்பட்ட பறவைகள்'. ஜேர்சி கொசின்ஸ்ஜியின் வாழ்வும் தற்கொலையிலேயே முடிந்து போனது சோகமானது. - வ.ந.கி]  அண்மையில் Jerzy kosinski எழுதிய Being There என்ற கைக்கடக்கமான சிறியதொரு நாவலைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதற்கொப்ப அளவில் சிறியதானாலும் இந்நாவல் உள்ளடக்கத்தில் கனதியானது. மனிதனைப் பாதிக்கும் நிலைமைகளை ஒருவித கிண்டல் பாணியில் நோக்கி விமர்சிக்கும் வகையிலமைந்த நாவலை 'சட்டயர்' (Satire) என்போம். Being There அந்த வகையான நாவல்களில் குறிப்பிடத்தக்கதொன்று. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் இச்சிறுநாவல் இன்றைய மனிதனைப் பலமாகப் பாதிக்கும் உலக, உள்நாட்டு அரசியல் மற்றும் குறிப்பாகத் தொலைகாட்சி பற்றிப் பலமாகவே விமர்சனத்தை முன்வைக்கின்றது. உருவத்தைப் பொறுத்த வரையில் கிறிஸ்த்தவ தத்துவ சமயநூலான பைபிளினது பாதிப்பு மிக அதிகமாகவே தெரிகின்றது.

விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'! - வ.ந.கிரிதரன் -

அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள நாவல் அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் நாவல்களில் முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நாவல்களிலொன்று. மொழியில் எந்தவிதப் புதுமையுமில்லை. தமிழக வெகுசனப் பத்திரிகைகளை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு நன்கு பழகிய மொழிதான். இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவது இது கூறும் பொருளினால்தான். அப்படி எதனைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது? சுருக்கமாகக் கூறப்போனால் உலகமயமாதலுக்குத் தன்னைத் திறந்து விடும் வளர்ந்து வரும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விமர்சிக்கும் நாவலிதுவென்று கூறலாம். இத்தருணத்தில் கறுப்பு 'ஜூலை' 1983யினைத் தொடர்ந்து, உலகின் நானா பக்கங்களையும் நோக்கி, அகதிகளாகக்ப் படையெடுத்த ஈழத்தமிழர்களைப் பற்றி சில விடயங்களை எண்ணிப்பார்ப்பது 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் கூறும் பொருளைப்பொறுத்தவரையில் முக்கியமானது; பயன்மிக்கது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துப் புகுந்த நாடுகள் செல்வச்செழிப்புள்ள, முதலாளித்துவச் சமுதாய அமைப்பைக்கொண்ட மேற்கு நாடுகள். இந்த நாடுகளில் நிலவும் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கும், அதுவரை அவர்கள் வாழ்ந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வித்தியாசம். மேற்கு நாடுகளில் நிலவும் கடனட்டைக் கலாச்சாரம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் புதியது. உலக மயமாதலின் விளைவுகளால சமூக, பொருளியல் சூழல்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்த இந்திய மத்திய வர்க்கத்தினரின் நிலையும், மேற்கு நாடுகளின் பொருளியற் சூழல்களுக்குள் இறக்கி விடப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளின் நிலையும் இந்த வகையில் ஒரே மாதிரியானவை என்று கூறலாம். ஒரு வேலை இருந்தால் , தகுதிக்கு மீறிய கடன் தொகையுள்ள கடனட்டைகளைப் பெற்றபோது , ஆரம்பத்தில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு அது இன்பமளிப்பதாகவேயிருந்தது. அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை கடன் கலாச்சாரத்துள் முற்றாகவே மூழ்கி விட்டது. கடனுக்குக் கார் வேண்டலாம்; கடனுக்கு வீடு வாங்கலாம்; வீட்டுப் பெறுமானத்தின் உபரி மதிப்பிற்குச் சமமாக கடன் எடுக்கும் வசதியினைப் பெறலாம். இவ்விதமாகப் பல 'கடன்' நன்மைகளைச் சுகிக்கலானார்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். இவ்விதமான சமூக, கலாச்சார மாற்றங்களுக்குள்ளாகியவர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல காரணங்களுக்காக, மேற்கு நாடுகளை நோக்கிப் பல்வேறு நாடுகளிலிருந்தும் , வளர்முக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிலிருந்து  சென்ற அனைவருக்கும் பொருந்தும். இவ்விதமாகக் கடனட்டை, கடன் போன்றவற்றின் ஆதிக்கத்தின் கீழ் மக்களைக் கொண்டுவரும் முதலாளித்துவ சமுதாய அமைப்பானது, அதன் பின் அம்மக்களை அதன் பிடிக்குள் கொண்டுவந்து, செக்குமாடுகளாக்கி விடும். உழைப்பது கடன்களைக் கட்டுவதற்கே என்று வாழ்க்கை மாறிவிடும். பெரும்பாலானவர்கள் உதாரணத்துக்கு வாங்கிய வீட்டின் விலையைப்போல் இரு மடங்கு வரையிலான விலையை 25 வருட காலத்து வீட்டுக் கடனுக்குக் கட்டி முடிக்கும்போது அவர்களது வாழ்வின் பெரும்பகுதி முடிந்து விட்டிருக்கும். இவ்விதமான வாழ்க்கையானது குடும்பங்களுக்குள் பல்வேறு வகையான சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றது.

தொடர் நாவல்: குடிவரவாளன் (8-14) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் எட்டு: விருந்தோ நல்ல விருந்து!

பல்பொருள் அங்காடி நண்பர்களிருவருக்கும் பெரு வியப்பினை அளித்தது. முதன் முறையாகப் புலம் பெயர்ந்ததன் பின்னர் அவர்களிருவரும் இவ்விதமானதொரு வர்த்தக நிலையத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். மரக்கறி, மாமிசத்திலிருந்து பல்வேறு வகையான பலசரக்குப் பொருட்கள், பழங்கள், பியர் போன்ற குடிபான வகைகளென அனைத்தையும் அங்கு வாங்கும் வகையிலிருந்த வசதிகள் அவர்களைப் பிரமிக்க வைத்தன. நண்பர்களிருவருக்குமிடையில் சிறிது நேரம் எவற்றை வாங்குவது என்பது பற்றிய சிறியதொரு உரையாடல் பின்வருமாறு நிகழ்ந்தது:

இளங்கோ: "முதன் முறையாகப் புதிய இடத்தில் சமைக்கப் போகின்றோம். இதனைச் சிறிது வித்தியாசமாகச் செய்ய வேண்டும்? நீ என்ன சொல்லுகின்றாய் அருள்?"

அருள்ராசா: "எனக்கும் நீ கூறுவது போலையொரு எண்ணம்தான் வருகுது. அதுதான் சரியென்று படுகுது. வேண்டுமானால் இப்படிச் செய்தாலென்ன?"

இளங்கோ: "எப்படிச் செய்யலாமென்று நினைக்கிறாயோ?"

அருள்ராசா: "முதல் முறையாகச் சமைக்கப் போகிறம். அதுவும் புது இடத்திலை.. சின்னதொரு விருந்து அங்குள்ளவர்களுக்கும் சேர்த்து வைத்தாலென்ன? புது வாழ்வை விருந்துடன் ஆரம்பிப்போம். அவர்களுக்கும் சந்தோசமாகவிருக்கும். அவ்வளவு செலவும் வராது.."

இளங்கோ: "நீ தான் நல்லாச் சமைப்பாயே.. என்ன சமைக்கலாமென்று நினைக்கிறாய்?"

அருள்ராசா: "சுடச் சுடச் சோறும், நல்லதொரு கோழிக் கறியும், கோழிப் பொரியலும், உருளைக்கிழங்குப் பிரட்டல் கறியொன்றும், முட்டைப் பொரியலும், பருப்புக் கறியும், இன்னுமொரு மரக்கறியும், இறால் குழம்பொன்றும் வைக்கலாமென்று நினைக்கிறன். அங்கைதான் எல்லா வசதிகளுமிருக்கே. கெதியாகச் செய்து விடலாம்"

இளங்கோ:"என்ன எல்லாத்தையும் சொன்ன நீ, ஒன்றை மட்டும் மறந்திட்டியே?"

அருள்ராசா: "தண்ணியில்லாமல் விருந்தா? தண்ணியை நானாவது மறப்பதாவது.. அவசரப்படாதை. ஒரு 'டசின்' 'பட்வைசர்' பியர் காணுமென்று நினைக்கிறன். விஸ்கி வேண்டுமென்றால் 'ஓல்ட் ஸ்மக்கிளரி'ல் ஒன்றை வாங்கலாம். அவ்வளவு விலையுமில்லை. அருகில்தான் விஸ்கி கடையுமிருக்கு. வரும் போது பார்த்தனான்."

இவ்விதமாக நண்பர்களிருவரும் மிகவும் விரைவாகவே திட்டமிட்டு, அதிலொரு மகிழ்வெய்தி, தேவையான பொருட்களுடன், குடிவகைகளையும் வாங்கிக் கொண்டு தம்மிருப்பிடம் திரும்பினார்கள். அவர்கள் கைகளில் 'பட்வைசருடன்' திரும்புவதைக் கண்ட திருமதி பத்மா அஜித் பின்வருமாறு தன் கருத்தினை அவர்களுக்கு ஆத்திரப்படாமல், மிகவும் நாகரிகமாக, விநயத்துடன் கூறினாள்:

"அமைதியாக மற்றவ்ர்களுக்கு இடையூறெதுவுமில்லாமல் நீங்கள் விருந்து கொடுப்பதையிட்டு ,குடிப்பதையிட்டு எனக்குக் கவலையேதுமில்லை. புதுவாழ்வினை ஆரம்பிக்கப் போகின்றீர்கள். நல்லதாக அமைய எனது வாழ்த்துக்கள்."

கோஷ் மிகவும் மகிழ்ந்து போனான். இவ்விதம் நண்பர்களுடன் கூடிக் குலாவி , உண்டு, மகிழ்ந்துதான் எவ்வளவு நாட்களாகி விட்டன. அந்த மகிழ்ச்சி குரலிலும் தொனிக்க அவன் கூறினான்: " இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாகவிருக்கிறேன். இவ்விதம் நண்பர்களுடன் ஆடிப்பாடி விருந்துண்டுதான் எத்தனை நாட்களாகி விட்டன!". இதற்கிடையில் அருளராசா 'ஓல்ட் ஸ்மக்கிளரை'த் திறந்து கொண்டு சமையலறையிலிருந்த மேசையில் கொண்டு வைத்தான். தொட்டுக் கொள்வதற்காக வாங்கி வந்திருந்த உருளைக்கிழங்கு பொரியலைத் தட்டொன்றில் போட்டு வைத்தான். அத்துடன் கூறினான்: " நண்பர்களே! வெட்கப் படாமல் தேவையானதை எடுத்துச் சாப்பிடலாம்.  குடிக்கலாம்". அதனைத் தொடர்ந்து மூவருக்கும் அளவாக 'கிளாஸ்க'ளில் விஸ்கியினை ஊற்றினான். இச்சமயம் பார்த்து தூக்கத்தினின்றும் நீங்கியவனாக மான்சிங் எழுந்து வந்தான். வந்தவனின் பார்வை பரிமாறுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த விஸ்கியின் மேல் திரும்பியது. அவனது முரட்டு முகமும் முறுவலொன்றைப் பூத்தது.

மான்சிங்கைக் கண்டதும் கோஷ் இவ்விதம் அவனுக்கு அழைப்பு விடுத்தான்: "மான். நீயும் எங்களுடன் விருந்தில் இணைவதுதானே. ஆட்சேபணையேதுமுண்டா? நீயும் இணைந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.". மான்சிங்கும் மகிழ்ச்சியுடன் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். அவனது நிலையும் கோஷின் நிலையை ஒத்ததுதான். எத்தனை நாட்களாகி விட்டன இயந்திர மயமான மாநகரத்து வாழ்வில் இவ்விதம் கவலை நீங்கிக் களித்துக் கும்மாளமிட்டு; விட்டு விடுதலையாகிப் பறந்து. ஆனந்தமாக அவர்களது உரையாடல் குடியும் கும்மாளமுமாகக் கழிந்து கொண்டிருந்தது. அருள்ராசா மட்டும் சமையலை மறந்து விடாமல் கவனித்துக் கொண்டான். அவ்வப்போது நன்கு பொரிக்கப்பட்ட கோழிப் பொரியல்களைத் தொட்டுக் கொள்ள இன்னுமொரு தட்டொன்றில் போட்டு வைத்தான். இறாலையும் பொரித்துக் கொண்டு வந்தான். அவர்களனைவருக்கும் அவையெல்லாம் அளவற்ற மகிழ்வினைத் தந்தன. ஆர்வத்துடன் கோழி, இறால் பொரியல்களைச் சுவைத்தபடி 'ஓல்ட் ஸ்மக்கிள'ரை அருந்தினர். அது முடிந்ததும் 'பட்வைசரி'ல் நாக்கை நனைத்தனர். சோமபானம் உள்ளிறங்கியதும் மெல்லியதொரு கிறுகிறுப்பு பரவ இருப்பு மிகவும் மகிழ்ச்சியுடன் விரிந்தது.

கோஷ் கூறினான்: "எனது சிறிலங்கா நண்பர்களே! உங்களது விருந்தோம்பலுக்கு எமது நன்றி. அருள்ராசாவின் கை வண்ணமே தனி. உணவகமொன்றை ஆரம்பித்து விடலாம். இதெல்லாம் எங்கு பழகினாய் அருள்ராசா?"

அதற்கு அருள்ராசா கூறினான்: "வங்க நண்பனே. உனது பாராட்டுதல்களுக்கு எனது நன்றியும் கூட. எல்லாம் அனுபவம்தான். ஒரு சிறிது காலம் கிரேக்கத்துக் கப்பலொன்றிலும் சமையற்காரனாக வேலை பார்த்திருக்கின்றேன். அது தவிர என் மாமா ஒருவருடன் அவரது பெரியதொரு பண்ணையொன்றில் சிறிது காலம் என் பாடசாலை விடுமுறை நாட்களைக் கழித்திருக்கின்றேன். கானகச் சூழலில் அமைந்திருந்த அந்தப் பண்ணை வாழ்வில் நான் பலவற்றை அறிந்திருக்கின்றேன். அதிலிதுவுமொன்று. மாமா மான் வற்றலும்,  ஆட்டுக்கறியும் வைப்பதில் வல்லவர். அவரது கை வண்ணத்தின் ஒரு சிறு பகுதிதான் இது"

மான்சிங் பின்வருமாறு அவர்களது உரையாடலில் கலந்து கொண்டான்: "ஏய் நண்பனே! கோஷ் சொல்வது சரிதான். நீ நல்லாச் சமைக்கின்றாய். உனக்கு இங்கு உணவகங்களில் வேலை எடுப்பதில் அப்படியொன்றும் சிரமமிருக்காது."

இடையில் இடைமறித்த கோஷ் பின்வருமாறு உரையாடலினைத் தொடர்ந்தான்: "நான் வேலை பார்ப்பதும் மான்சிங் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் ஏற்றுமதி / இறக்குமதி நிறுவனத்தில்தான். ஆடைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து இங்குள்ள பிரபலமான ஜவுளிக் கடைகளுக்கெல்லாம் அனுப்புவது. அவன் ஆள் நல்ல கெட்டிக்காரன். நகரின் மத்தியிலுள்ள காட்சி அறைகளில் வெள்ளையினத்தவர்களையே வேலைக்கு அமர்த்தியிருக்கிறான். அவர்களைக் கொண்டே ஆடை வகைககளை வடிவமைத்து அவற்றை இந்தியாவிலிருந்து எடுப்பித்து இங்கு விற்பனை செய்கிறான். நல்ல வியாபாரம். அங்கிருந்து பெறப்படும் ஆடை வகைகளை இங்குள்ள பண்டகசாலையொன்றில் வைத்துப் பல்வேறு மாநிலங்களிலுள்ள கடைகளுக்கும் அனுப்புவான். பண்டகசாலையில் வேலை செய்வதெல்லாம் நம்மவர்கள்தான். தற்சமயம் அங்கு வேலை எதுவுமில்லை. விரைவில் நத்தார் பண்டிகையையிட்டு அங்கு மேலும் சிலருக்கு வேலை வாய்ப்புகள் வரலாம். அப்பொழுது உங்களிருவரையும் அங்கு சேர்த்துக் கொள்ள என்னாலான முயற்சிகளை நிச்சயமாகச் செய்வேன். என்னை நீங்கள் நம்பலாம்."

இதுவரை மெளனமாகவிருந்த இளங்கோ பின்வருமாறு தனது வினாவினைத் தொடுத்தான்: "கோஷ். உடனடியாக ஏதாவது வேலை செய்வதற்குரிய வழியேதுமுண்டா? என்னிடம் உரிய வேலை செய்வதற்குரிய ஆவணங்களெதுவும் இதுவரையிலில்லை. இனித்தான் சமூகக் காப்புறுதி இலக்த்தினை எடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்."

மான்சிங் இது பற்றிய தனது கருத்தினை இவ்விதம் விளக்கினான்: "நீங்களிருவரும் ஒரு மிகப்பெரிய தவ்றினைச் செய்து விட்டீர்கள்?"

இளங்கோ , அருள்ராசா இருவரும் ஒரே நேரத்தில் "என்ன மிகப்பெரிய தவறினை நாங்கள் செய்து விட்டோமா? என்ன சிங் சொல்லுகிறாய்?" என்றார்கள்.

அதற்கு மான்சிங் இவ்விதம் கூறினான்: "ஆம். நீங்கள் தான். நீங்கள் நியுயார்க் வந்திருக்கவே கூடாது. நியு ஜேர்சி அல்லது பாஸ்டன் போன்ற நகரங்களுக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கு சென்றவர்களுக்கெல்லாம் சமூகக் காப்புறுதி இலக்கம் போன்றவற்றை எடுப்பதில் சிரமமிருக்காது. ஆனால் நியூயார்க்கில் மில்லியன் கணக்கில் சட்டவிரோதக் குடிகாரர்கள் வசிக்கிறார்கள் அதனால் இங்குள்ள குடிவரவு திணக்களத்தினர் இத்தகைய விடயங்களில் மிகவும் கடுமையாக இருப்பார்கள். எனக்குத் தெரிந்து இவ்விதம் ஒருவன் இரண்டு வருடங்களாகக் களவாகவே, சட்டவிரோதமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறான்."

இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் மான்சிங் கூறுவதிலொருவித உண்மையிருப்பதாகவே பட்டது. இளங்கோ கூறினான்: "மான்சிங் கூறுவதிலும் உண்மை இருப்பதாகத்தான் படுகிறது. எங்களுடன் வந்தவர்களில் ஏனையோர் பாஸ்டனுக்கும், நியூ ஜேர்சிக்கும் சென்று உரிய ஆவணங்களையெல்லாம் பெற்றுக் கொண்டு வேலை பார்க்கின்றார்கள்."

கோஷ் இடை மறித்துப் பின்வருமாறு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்: "நண்பர்களே அவற்றைப் பற்றி இப்பொழுதே எதற்குக் கவலை. அவ்விதம் பிரச்சினையேதும் வந்தால் நியூஜேர்சியோ பாஸ்டனோ சென்று அங்கு உங்களது குடிவரவுக் கோப்புகளை அனுப்பும்படி சட்டரீதியாக விண்ணப்பித்து விட்டு, அங்கு உரிய ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு பின்னர் நல்ல வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். அதுவரையில் உணவகங்களிலோ, அல்லது தொழிற்சாலைகளிலோ வேலை ஏதாவதை பார்த்துக் கொண்டு கொஞ்சம் காசு சேர்க்கப் பாருங்கள். இங்கு அவ்விதமான வேலைகளை எடுப்பதில் அப்படியொன்றும் பெரிய சிரமமெதுவும் இருக்காதென்று நினைக்கிறேன். இங்கு எட்டாவது அவென்யுவில் நியூயார்க் பஸ் நிலையத்திற்கு அண்மையில் எனக்குத் தெரிந்து பீற்றர் என்றொரு கிரேக்கன் வேலை முகவர் நிலையம் நடத்துகின்றான். அவனது வேலையே இவ்விதம் சட்டவிரோதக் குடிகளுக்கு உணவகங்களிலோ அல்லது தொழிற்சாலைகளிலோ வேலைகள் பெற்றுக் கொடுப்பதுதான். நாளைக்கு அவனது முகவரியினைத் தருகிறேன். சென்று பாருங்கள். அவனுக்கு எண்பது டாலர்கள் கொடுக்க வேண்டும். அதனை அவன் வேலை எடுத்துத் தந்ததும் பெற்றுக் கொள்வான். நான் இங்கு வந்தபோது அவனூடாகத்தான் எனது முதலாவது வேலையினைப் பெற்றுக் கொண்டேன்."

கோஷ் இவ்விதம் கூறவும் மான்சிங் இவ்விதம் கூறினான்: "என்ன அவன் இன்னும் முகவர் நிலையத்தை நடத்துகின்றானா? நானும் அவனிடம்தான் என் முதல் வேலையினைப் பெற்றுக் கொண்டேன்."

இவ்விதமாக அனைவரும் உரையாடலினைத் தொடர்ந்தபடி, பல்வேறு விடயங்களைப் பற்றி அளவளாவியபடிப் பொழுதினை இன்பமாகக் கழித்னர். அவர்களது உரையாடலினைக் கீழிருந்து செவிமடுத்த வீட்டு உரிமையாளரான அஜீத்தும் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். அஜித் இயல்பிலேயே மிகவும் கலகலப்பானதொரு பேர்வழி. பிறகு கேட்கவும் வேண்டுமா அட்டகாசத்திற்கு. இவ்விதமாக அன்றைய இரவு விருந்தும் கேளிக்கையுமாகக் கழிந்தது.

அத்தியாயம் ஒன்பது: 42ஆம் வீதி மகாத்மியம்!

அன்றையப் பொழுதினை நியூயார்க் மாநகரத்தின் மான்ஹட்டன் பகுதியில் சுற்றித் திரிந்து கழிப்பதாக இளங்கோவும் அருள்ராசாவும் தீர்மானித்திருந்தனர். இளங்கோவைப் பொறுத்தவரையில் எந்த வேலையானாலும் உடனே செய்வதற்குத் தயாராகவிருந்தான். அருள்ராசா அதற்குத் தயாரில்லை. அதற்கு அன்று காலை அவர்களிருவருக்குமிடையில் நிகழ்ந்த பினவரும் உரையாடலே விளக்கம்தரப் போதுமானது.

இளங்கோ: கோஷ் கூறியபடி 'எம்பளாய்மெண்ட் ஏஜென்சிக்காரன்' பீற்றரிடம்தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

அருள்ராசா: பீற்றரிடம் எடுக்கக் கூடிய ஒரேயொரு வேலை 'கிட்டார்' அடிப்பதுதான்.

இளங்கோ: என்ன கிட்டார் அடிப்பதா? எனக்குத்தான் தெரியாதே.

இதற்கு இன்னுமொரு கேலிச் சிரிப்பினை உதிர்த்து விட்டு அருள்ராசா இவ்விதம் கூறினான்: அதுதான் கோப்பை கழுவுவதுதான். அதற்குரிய பரிபாசைதானிது.

இளங்கோ: அதிலென்ன வெட்கம். எந்த வேலையானாலும் கிடைத்தால் செய்வதுதானே.

அருள்ராசா: எனக்கு அதில் விருப்பமில்லை. நான் பீற்றரிடம் வேலை தேட மாட்டன். விரிந்து கிடக்கும் 'மான்ஹட்டனி'ல் அலைந்து திரிந்து வேறு ஏதாவது வேலை கிடைக்குமாவென்று பார்க்கப் போகிறன்.

இளங்கோ: எனக்கும் அதற்கு ஆசைதான். ஆனால் கையிலை கடிக்கேக்கை என்ன செய்யிறது. என்ற கையிலை இன்னும் நூற்றியம்பது டொலர்கள் வரையில் தானிருக்கு, அது முடியிறதுக்குள்ளை கொஞ்சக் காசைச் சேர்க்கப் பார்க்க வேணும். அப்ப நீ பீற்றரிடம் வரப் போவதில்லையென்று சொல்.

அருள்ராசா: அதுதான் எனது திட்டம். இன்றைக்கு மான்ஹட்டனைச் சுற்றிப் பார்ப்பம். நாளைக்கு முதல் வேலை தேடும் படலத்தை ஆரம்பிக்கலாம்.

இளங்கோ: பீற்றரிடம் போவதென்றால் நேரத்துடன் போக வேண்டுமென்று கோஷ் சொன்னவன். ஆறுமணிக்கே போய்க் காத்து நிற்க வேண்டுமென்று சொன்னவன். இன்றைக்கு அதற்குச் சரி வராது. இப்பொழுதே மணி ஒன்பதைத் தாண்டி விட்டது.

இதைக் கேட்டதும் அருள்ராசா இலேசாகச் சிரித்தான்.

இளங்கோ: என்ன சிரிக்கிறாய்?

அருள்ராசா: வேலையோ கோப்பை கழுவுவது. அதற்கு இவ்வளவு தூரம் கஷ்ட்டப்பட வேண்டியிருக்கு.

இளங்கோ: அது மட்டுமில்லை. ஒரு நாளிலை வேலை கிடைக்குமென்றுமில்லையாம். கோஷ் சொன்னதைப் பார்த்தால் சில சமயம் ஒரு கிழமை கூட ஒவ்வொரு நாளும் ஆறுமணிக்குப் போய் பின்னேரம் நாலு அல்லது ஐநு மணிவரை அவனது அலுவலகத்தில் காத்து நிற்க வேண்டுமாம். எப்ப வேலைக்குக் கூப்பிடுவாங்களென்று தெரியாதாம். கையிலையோ காசில்லை. வேலை பார்ப்பதற்குரிய 'லீகல் டாக்குமென்ற்ஸ்' இல்லை. இந்த நிலையிலை ஆட வெளிக்கிட்டாச்சு. எல்லாத்துக்கும் ஆடிப்பார்க்கத்தானே வேண்டும்.

அருள்ராசா: ஏதாவது கிடப்பதை வயிறுக்குள் தள்ளி விட்டு இறங்குவோம்.

கீழ் தளத்தில் பத்மா அஜித் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். 'பில்லி ஜோயெல்'  ''புற நகரத்துப் பெண்ணைப்' (Up Town Girl' ) பற்றிப் பாடிக் கொண்டிருந்தான். அண்மையில்தான் வெளிவந்திருந்த அவனது 'அப்பாவி மனிதன்' (An Innocent Man) தொகுப்பிலுள்ள ஒரு பாடல். வெளிவந்ததிலிருந்து இசை உலகினைக் கலக்கிக் கொண்டிருந்தது. நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்குமொரு பாடல்.

இளங்கோ: திருமதி அஜித் கொடுத்து வைத்த பிறவி. அவளைப் பார் எவ்வளவு ஆனந்தமாக 'நகரத்துப் பெண்ணை' இரசித்துக் கொண்டிருக்கின்றாள்.

அருள்ராசா: 'அளவற்ற சந்தர்ப்பங்களின் மண்'னென்று கூறும் மண்ணிலிருந்து கொண்டு முயற்சி செய்து பார்ப்பதை விட்டு விட்டு இப்படி அழுது வடியாதே.

இளங்கோ: அளவற்ற சந்தர்ப்பங்களை அள்ளி வழங்கும் மண்ணில் எமக்கென்ன சந்தர்ப்பங்களை அள்ளி வழங்கப் போகிறதோ. பார்க்கலாம்.

நண்பர்களிருவரும் எதோ இருந்ததை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு புறப்பட்ட பொழுது மணி காலை பத்தைத் தாண்டி விட்டிருந்தது. பாதாள இரயில் நிலையம் சென்று பயணத்துக்கான டோக்கன்களை வாங்கிக் கொண்டு உலகப் புகழ்பெற்ற 42வது வீதியின் 'டைம்ஸ்' சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

42ஆம் வீதி மகாத்மியம்:

இந்த நாற்பத்தியிரண்டாவது வீதியைப் போல் அமெரிக்காவில் இன்னுமொரு உலகப் புகழ் மிக்க வீதியைக் காண்பதரிது. நோக்குமிடமெங்கும் விளம்பரப் பலகைகளால் நிறைந்து கிடந்தது புகழ் பெற்ற 42வது வீதி. வருடா வரும் புதுவருடக் கொண்டாட்டம் நிகழும் மையமிதுதான். 1907இல் ஆரம்பிக்கப்பட்ட வழக்கமிது. உலகப் புகழ்மிக்க நாடக அரங்குகள் மிக்க 'பிராட்வே' வீதியும் வீதி 42உம், ஏழாவது 'அவெனயூ'விற்குமிடைப்பட்ட பகுதிதான் மேற்படி 'டைம்ஸ்' சதுக்கப் பகுதி. இந்த 42ஆம் வீதிக்கு 'டைம்ஸ் ஸ்குயர்' பெயர் வருவதற்குக் காரணமாக விருந்தது நியூயார்க்கிலிருந்து வெளிவரும் பழமை வாய்ந்த பிரபல நாளிதழனான 'நியூ யார்க் டைம்ஸ்' தான். 1904இல் 'நியூயார்க் டைம்ஸ்' 43வது வீதியில் தனக்கென்றொரு கட்டடத்தை கட்டியதன் காரணமாகவே அதனை அண்மித்திருந்த மேற்படி 42வது தெருவை உள்ளடக்கிய பகுதி 'டைம்ஸ் ஸ்குயர்' என்று அழைக்கப்பட ஆரம்பித்ததாக வரலாறு பகரும். அதற்கு முன்னர் இப்பகுதி மிகுந்த ஆபத்து நிறைந்த பகுதிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. 'லோங் ஸ்குயர்' (Longacre Square) என்றழைக்கப்பட்ட அப்பகுதியின் பெயரை 'டைம்ஸ் ஸ்குயர்' என்று மாற்றியமைத்தது 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை நிறுவனம்தான். அதனைத் தொடர்ந்து இதனை அண்மித்த பகுதிகள் தியேட்டர்கள், பலவகைக் களியாட்ட விடுதிகள், அரங்குகள், 'காபரே' நடன விடுதிகளென இப்பகுதி வளர்ச்சியடைந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளில் உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்கபுரியாக உருமாற்றமடைந்தது. 1929இல் ஏற்பட்ட பங்குச் சந்தைகளின் மாபெரும் வீழ்ச்சியினைத் தொடர்ந்து உருவான மிகப்பெரிய பொருளாதார மந்தச் சூழலைத் தொடர்ந்து மேற்படி பகுதியில் இயங்கிய பல்வேறு கேளிக்கைக் களியாட்ட விடுதிகள், நாடக அரங்குகள் எனப் பல வர்த்தக ஸ்தாபனங்களின் வருமானம் பெருமளவில் வீழ்ச்சியடைந்தது. அதனை நிவர்த்தி செய்ய அறுபது எழுபதுகளில் பெருமளவில் நிர்வாணக் காட்சிகளை உள்ளடக்கிய அரங்குகள், பாலியல் புனைவுகளை / பாலியற் செயல்களுக்கான காம சூத்திரங்களை / பெண்ணைப் பாலியல் ரீதியில் வெளிப்படுத்தும் / புணர்ச்சியை விளக்கும் வழிகாட்டுப் பிரதிகளை உள்ளடக்கிய காம இலக்கிய நூல்களைப் பெருமளவில் விறபனை செய்யும் புத்தகக் கடைகள், பாலியல் சாகசங்களைப் புரிவதற்குரிய சாதனங்களை விற்பனை செய்யும் அங்காடிகள், வயது வந்தோருக்கான சினிமாக்களைத் திரையிடும் திரையரங்குகள், நிர்வாண அழகிகளை 'எட்டிப் பார்க்க உதவும் துளைகளை' கொண்ட காட்சியறைகள் (Peep-Hole Shows), நேரடியாகவே உடலுறவுக் காட்சிகளைப் பார்ப்பதற்குரிய அரங்குகள் (Live Shows) எனக் காமக்களியாட்டு மையமொன்று 42ஆம் வீதும் எட்டாவது அவென்யூவும் சந்திக்கும் பகுதியினை அண்மித்திருந்த பகுதிகளை ஆக்கிரமித்தது. எழுபதுகளின் நடுப்பகுதியில் குற்றச்செயல்கள் மலிந்ததொரு பகுதியாக உருவெடுத்த மேற்படி பகுதியினை நகரத்துப் பத்திரிகைகள் 'மூழ்கடிக்கும் துளை' (Sink Hole) என்றழைத்தன. இதன் காரணமாக வீழ்ச்சியைடையத் தொடங்கிய உல்லாசத் துறையினை மீளக் கட்டியெழுப்புவதற்காக இப்பகுதியிலுள்ள வர்த்த நிறுவனங்கள் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து 42வது வீதி மீண்டும் தன் பழைய பெருமைக்கு மெல்ல மெல்ல மீண்டு கொண்டிருந்தது.

இந்த 42ஆம் வீதியும் , எட்டாவது அவென்யூவும் சந்திக்கும் பகுதியில்தான் நியூயார்க் மாநகரத்தின் பிரதான் பஸ் நிலையம் அமைந்திருந்தது. இவ்வீதியும் ஐந்தாவது அவென்யூவும் சந்திக்கும் பகுதியில்தான் நாட்டின் புகழ்பெற்ற நூலகங்களிலொன்றான 'நியூயார்க் நகரத்துப் பொதுசன நூலகம்' அமைந்திருந்தது.

ஒருபுறம் கல்வியின் உறைவிடம்; மறு புறமோ கலவியின் இருப்பிடம். அதிசயமான வீதி அமெரிக்காவின் இன்னுமொரு உலக அதிசயம். வருடா வருடம் 26 மில்லியன்களுக்கும் அதிகமானவர்களைக் கவர்ந்திழுக்கும் சொர்க்கபுரியல்லவா! அகிலத்தினைக் கவர்ந்ததில்தானென்ன வியப்பு!

நண்பர்களிருவரும் பாதாள இரயிலில் 'டைம்ஸ்' சதுக்கம் வரையில் வந்து , அங்கிருந்து சுரங்கப் பாதை வழியாக எட்டாவது அவென்யு பாதாள இரயில் நிலையத்துக்கு நடந்து வந்தார்கள். அங்கிருந்து 42வது தெருவும் எட்டாவது அவென்யூவும் சந்திக்குமிடத்திலமைந்திருந்த பிரதான பஸ் நிலையம் வழியாக வெளிவந்தவர்களை அமெரிக்காவின் சொர்க்கபுரி வரவேற்றது. மூலைக்கு மூலை காமக் களியாட்ட மாளிகைகளால், அங்காடிகளால், அரங்குகளால் நிறைந்திருந்த பகுதியில் அமைந்திருந்த வேலை வாய்ப்பு முகவன் பீற்றரின் அலுவலகம் நோக்கிச் சென்றார்கள். அன்றையதினம் அவனது இருப்பிடத்தை அறிந்து வைப்பதொன்றே அவர்களது நோக்கமாகவிருந்தது. அடுத்த நாளிலிருந்துதான் முறையான வேலை தேடும் படலத்தினை ஆரம்பிப்பதாக ஏற்கனவே தீர்மானித்திருந்தார்கள். அதற்கு முதற்படியாக அன்றைய தினத்தை நகர்வலம் வந்து இடத்தைப் பரிச்சயப்படுத்திக் கொள்வதற்குப் பாவிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்.

அத்தியாயம் பத்து: வழி தவறிய பாலைவனத்து ஒட்டகங்கள்!

நியூயார்க் பிரதான பஸ் நிலையத்திற்கு அண்மையிலிருந்த பழையதொரு ஆபிஸ் கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் அமைந்திருந்தது முகவன் பீற்றரின் வேலை காரியாலயம். அவன், அவனது அந்தரங்கக் காரியதரிசி கிறிஸ்டினா (கிறிஸ்டினா அவனது மனைவி கூட), காரியாலயப் பணியாளான வயது முதிர்ந்த கூன் முதுகுடன் கூடிய ஹென்றி இவர்கள் மூவரும்தான் அங்கு பணி புரியும் மூலவர்கள். கண்ணாடித் த்டுப்புடன் கூடிய ஆறையில் பீற்றரும், கிறிஸ்டினாவுமிருக்க, அறை வாசலில் வெளிப்புறமாக ஹென்றிக்கு மேசையும் கதிரையும் போடப் பட்டிருந்தது. வேலை தேடும் மூன்றாம் உலகத்துச் சட்டவிரோதக் குடிமக்கள் கூடத்தில் காலை ஆறு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரையில் பீற்றர் எடுத்துத்தரப்போகும் 'ஹிட்டார் அடி' வேலைக்காகக் காத்து நிற்பார்கள். அந்த ஒரு வேலையைத்தான் பீற்றரால் எடுத்துக் கொடுக்க முடியும். நியூயார்க், நியூ ஜேர்சி என்ற இரு மாநிலங்களிலும் அவனது சேவையினைப் பயன்படுத்துவதற்கு நூற்றுக் கணக்கான் கிரேக்க உணவகங்கள் காத்திருந்தன. அமெரிக்காவில் இத்தகைய வேலைகளெல்லாம் அங்கு வாழும் சட்டவிரோதக் குடிமக்களால்தான் செய்யப்படுகின்றன. இத்தகைய தொழிலாளர்களின் சட்டவிரோத நிலையினைத் தமக்குச் சாதகமாக்கிச் சில உணவக உரிமையாளர்கள் தொழிலாளர்களை வதக்கியெடுப்பதுமுண்டு. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு சட்டவிரோதக் குடிகாரர்களான மேற்படி மூன்றாமுலக நாயகர்கள் குழந்தை, மனைவி, குடும்பம் பற்றிய வருங்காலக் கனவுகளுடன் மாடுகளாக உழைப்பதற்கு எவ்வளவுதூரம் தயாராயிருக்கிறார்களென்பதை வேலை வாய்ப்பு முகவன் பீற்றரின் அலுவலகத்தின் ஒரு நாள் நடை முறையினை அவதானிப்பதன் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

காலை ஆறு மணிக்கெல்லாம் பணியாள் ஹென்றி வந்து விடுவான். காரியாலயத்தைத் திறந்து விடுவதெல்லாம் அவனது பணிகளிலொன்றுதான். வேலை தேடும் குடிமக்களெல்லாரும் அவனது வருகைக்காகக் காத்துநிற்பார்கள். காலை உணவை முடித்து விட்டுக் கைகளில் 'காப்பி'யுடன் காத்து நிற்பார்கள். எழு மணிக்கெல்லாம் முகவன் பீற்றர் வந்துவிடுவான். அதன்பிறகு எட்டு மணியளவில்தான் கிறிஸ்டினா வருவாள். பீற்றர் வந்து விட்டால் ஒருவருமே அடிக்கடி இயற்கையின் கட்டாயத் தேவைகளுக்காக,  உணவுக்காக அல்லது 'காப்பி'க்காகவென்று அடிக்கடி வெளியில் செல்ல விரும்புவதில்லை. அதற்கொரு காரணமும் இருக்கத்தான் செய்தது. பீற்றர் வேலைக்குத் தெரிவு செய்யும்போது சில நடைமுறைகளைக் கைக்கொள்வான். அவற்றில் அவனது அவர்கள் மீதான அவதானிப்பும் அடங்கும். நாள் முழுக்க வேலைக்கான அழைப்புக்காகக் காத்து நிற்கும்போது அவனது பார்வை அடிக்கடி கூடத்தில் காத்து நிற்கும் அவர்கள் மீது படிந்து செல்வது வழக்கம். அத்தகைய சமயங்களில் அவன் அவர்களது குணாதிசயங்களை எடை போட்டு வைத்துக் கொள்வான். அவனது சேவைக்காகக் குரல் கொடுக்கும் பலவேறு வகையான உணவகங்களின் உரிமையாளர்களைப் பற்றி அவர்களது குணாதிசயங்களைப் பற்றியெல்லாம் தனது அனுபவத்தின் வாயிலாக அறிந்து வைத்திருந்த அவனுக்கு அவர்களுக்கேற்ற பணியாட்களைத் தெரிவு செய்வதற்கு அவனது இத்தகைய அவதானிப்புகள் கை கொடுத்தன. யாரெவர் மிகவும் அமைதியாகப் பொறுமையுடன் எப்பொழுதும் கலகலப்பான முகவாகுடன் இருக்கிறாரோ அத்தகையவர்களுக்கு அவனது நல்ல உணவகங்களில் வேலை செய்வதற்குரிய அதிருஷ்ட்டம் அடிக்கும். அடிக்கடி பொறுமையிழந்து வெளியில் போய் வருவோருக்கு, எந்த நேரமும் பேசிக்கொண்டிருப்போருக்கு சிரமத்தைத் தரக்கூடியதென்று கருதப்படும் உணவகங்களில்தான் வேலை வாய்ப்பு கிடைப்பதற்குரிய சந்தர்ப்ம் அமைவது வழக்கம். இது பற்றி கோஷ் இளங்கோவுக்கு முன்னரே எச்சரித்திருந்தான். இதன்பொருட்டுத்தான் பீற்றரின் பார்வையில் நன்மதிப்பைப் பெறுவதன் பொருட்டு இயலுமானவரையில் பொறுமையாகக் காத்திருக்கப் பழகியிருந்தார்கள் அவனிடம் வேலை பெறுவதற்காகக் காத்திருக்கும் குடிமக்களில் பலர். ஒரு சிலர் ஒரு நாளுடன் பொறுமையிழந்து அவனும் அவனது வேலையுமென்று முயற்சி செய்வதை விட்டு விட்டுப் போய் விடுவார்கள். இன்னும் சிலர் இரண்டாம் நாளுடன் பொறுமையிழந்து விடுவார்கள். இவ்விதமாக நாளொன்றுக்கு ஆளாளுக்குக் கழன்றுவிடப் நிலைத்து நிற்பவர்களில் சிலருக்கு அதிருஷடம் அடிக்கும். ஒரு சிலருக்கு ஒரு நாளிலும் அவ்விதமான அதிருஷடம் அடிப்பதுமுண்டு. இவ்விதமான அதிருஷ்ட்ட தேவதையின் கடாட்சம் பெற்றவர்களைப் பஸ் நிலையத்தில் அல்லது பாதாள் இரயில் நிலையத்திற்குக் கொண்டு சென்று வழியனுப்புவது பணியாள் ஹென்றியின் பிரதான பணிகளிலொன்று. அத்தகைய சமயங்களில் சில சமயங்களில் வேலை பெற்றுச் செல்லும் பணியாளர்களுக்குத் தனது அறிவுரைக்ளைக் கூறுவான் ஹென்றி. அவன் அபூர்வமாக வாய் திறக்கும் சந்தர்ப்பங்களவை.

இளங்கோவைப் பொறுத்தவரையில் இவ்விதமாக முகவன் பீற்றரின் காரியாலயத்தில் வேலைக்காகக் காத்துநின்று மூன்று நாட்களைக் கடந்து விட்டன. அன்று நான்காவது நாள். இன்னும் ஒரு நாள் மட்டும் முயற்சி செய்வதற்கு முடிவு செய்து கொண்டிருந்தான். காலையிலிருந்து மாலை ஐந்து மணி வரையில் நீண்ட நேரமாக அவ்விதம் காத்துநிற்பது பெரிதும் சலிப்பினைத் தந்தது. இந்த வாரம் எவ்விதமாவது ஒரு வேலை எடுத்து விட வேண்டும். ஒரு சில வாரங்கள் செய்தாலே போதுமானது. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அடித்தளமாக வைத்து அடுத்த முயற்சியில் இறங்கி விடும் திட்டத்தில் அவனிருந்தான்.

இந்த மூன்று நாட்களில் அவனுக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்தபாவும், கானாவைச் சேர்ந்த மைக்கலும் பேசிப் பொழுதினைக் கழிப்பதற்குரிய நண்பர்களாகவிருந்தார்கள். முஸ்தபா ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக நாட்டை விட்டு நீங்கிப் பல்வேறு நாடுகளைக் கடந்து ஒரு வழியாக அமெரிக்க மண்ணில் சட்டவிரோதமாகக் காலடி எடுத்து வைத்திருந்தான். மைக்கல் படிப்பதற்காக வந்தவன் அது முடிந்த நிலையில் திரும்பிச் செல்ல விரும்பாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தான். எல்லோருக்குமே இப்புவியுலகின் சொர்க்கபுரியில் பணத்தை அள்ளிக் கோண்டு நாடு திரும்பவேண்டுமென்ற கனவிருந்தது.

மைக்கலும் சிறிது பொறுமையிழந்திருந்தான். அது அவர்களுடனான அவனது உரையாடலிலும் சிறிது தொனித்தது: "நண்பர்களே! இந்த மூன்று நாட்களாக இவ்விதம் காத்திருந்து இந்த வேலைக்குச் செல்ல வேண்டுமாவென்றிருக்கிறது. ஏதோ அவசரத்துக்கு விரைவாகக் கிடைக்குமென்று வந்தால்... இவ்விதம் நாட்களை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறானே. இவ்விதம் தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன்."

அதற்கு முஸ்தபா இவ்விதம் தனது கருத்தினை முன்வைத்தான்: " நீ சொல்வதும் சரிதான் மைக்கல். ஆனால் எங்கேயென்று வேலை தேடுவது. எங்கு போனாலும் சமூகக் காப்புறுதி இலக்கம் கேட்கிறார்களே.."

அதற்கு மைக்கல் இவ்விதம் கூறினான்: "இரு நூறு டாலர்கள் கொடுத்தால் கூறுகிற பெயரில் சமூகக் காப்புறுதி அட்டையையே இங்கு எடுத்து விடலாம். என் கையிலிருந்த காசெல்லாம் முடிந்து விட்டதால் குறுகிய காலத்தில் கொஞ்ச பணம் சம்பாதிக்கலாமென்று இவனிடம் வந்தேன். கையில் போதிய பணம் இருப்பில் வந்ததும் நான் அந்த வழியில்தான் செல்லப் போகின்றேன். இருப்பதே சட்ட விரோதமாக. அதில் இன்னுமொரு சட்டவிரோதச் செயலைச் செய்வதாலென்ன மேலதிக நஷ்ட்டம் வந்து விடப் போகிறது? சமூகக் காப்புறுதி இலக்கமிருந்தால் இப்பொழுது கூடத் தொழிற்சாலையொன்றில் மிகவும் இலகுவாக வேலையொன்றினை எடுத்து விடலாம்."

இளங்கோவில் நிலையில் அவ்விதம் வேலை செய்வதில் சிறிது சிக்கலிருந்தது. அவன் இவ்விதம் தன் நிலையினை அவர்களுக்கு எடுத்துரைத்தான்: "நானும் தற்பொழுது இங்கு சட்டவிரோதமாகத் தங்கியிருந்தாலும் சட்டரீதியாக நாட்டினுள் அடியெடுத்து வைத்தவன்.  அதனால் இப்பொழுது சட்டவிரோதச் செயலைச் செய்து தற்செயலாக அகப்பட்டு விட்டால் என் அகதிக் கோரிக்கை உடனடியாகவே நிராகரிக்கப்பட்டு விடலாம். ஆனால் அந்த வழி எனக்குச் சரி வந்து விடாது. ஆனால் மைக்கல் சொல்வது சரிதான். எனக்கும் தெரிந்த என் நாட்டவனொருவன் கப்பலில் வந்து இங்கு இறங்கியவன் இப்பொழுது அவ்விதம்தான் சமூகக் காப்புறுதி அட்டையெடுத்துத் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்றான்"

இவ்விதமாகச் சிலநேரம் அவர்கள் ஏனைய வழிமுறைகள பற்றித் தமக்கிடையில் உரையாடிக்கொண்டார்கள். இன்னுமொரு சமயம் முகவன் பீற்றரைப் பற்றி, கோப்பை கழுவும் பணி பற்றி, நியூயார்க் பற்றியெல்லாம் பல்வேறு விதமான தமது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். மேலும் சில சமயங்களில் பேசுவதற்குரிய பொருளெதுவுமின்றி சிநதனையில் ஆழ்ந்து கொள்வார்கள். அத்தகைய சமயங்களில் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய , ஊரில் விட்டு விட்டு வந்த குடும்பத்தவர், உற்றார் உறவினரைப் பற்றி, நாட்டு நிலைமையைப் பற்றி எனப் பல்வேறு விடயங்களைப் பற்றிய சிந்தனைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். ஆதிச் சமூகநிலை நிலவிய அன்றைய காலகட்டத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரையில் புலம்பெயர்தலென்பது மானுட சமுதாயத்தின் தப்பிப் பிழைத்தலுக்குரிய தவிர்க்க முடியாததொரு செயலாகத்தானிருந்து வருகிறது. சிலம்பு கூறும் 'கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்களி'லிருந்து இன்று வரையில் எத்தனையோ காரணங்களுக்காகப் புலம்பெயர்தல் தொடரத்தான் செய்கிறது. சமூக, அரசியல், பொருளியல் காரணங்களுக்காக
இன்றைய புலம்பெயர்தல் தொடர்கிறது. இவ்விதமான எண்ணங்கள் அவனை ஆக்கிரமித்தன. ஈழத்துக் கவிஞன் வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதையொன்றின் சில வரிகள் ஞாபகத்திலெழுந்தன.

'நானோ
வழிதவறி அலாஸ்கா
வந்து விட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்'

தற்போதைய அரசியல் சூழல்களால புலம்பெயர்ந்திருக்கும் அனைத்து நாட்டவர்களுக்கும் பொருந்தக் கூடிய கவிதை. முஸ்தபாவும் சரி, மைக்கலும் சரி ஏன் அவனும் சரி இத்தகைய வழி தவறி வந்து விட்ட ஒட்டகங்களாகத்தான் இளங்கோவுக்கு அச்சமயம் தென்பட்டார்கள். ஆனால் நிஜ வாழ்வில் வழிதப்பி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகங்கள் பிழைக்குமோ இல்லையோ இந்த மானுட ஒட்டகங்கள் நிச்சயம் பிழைத்துக் கொள்ளும். அல்லது பிழைத்துக் கொள்வதற்காவது வழிவகைகளை முடிந்த வரையில் முயன்று பார்க்கும்.

சிந்தனைகள் மேலும் மேலும் விரிந்தன. பால்ய காலத்து நினைவுகள் எப்பொழுதுமே அழியாதவை; பசுமையானவை. அதிகாலைகளில் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புப் பரீட்சைகளுக்காக நேரத்துடனெழுந்து படிப்பது நினைவுக்கு வந்தது. அப்பொழுதெல்லாம் அப்பா தவறாமல் தூக்கத்தினின்றும் எழுப்பி விடுவார். அம்மா சுடச்சுட பால் நிறைய விட்டுக் கலந்த தேநீர் கொண்டு வந்து தருவார். வளவிலிருந்த மாவிலிருந்து குயிலொன்று எப்பொழுதும் கூவும். புள்ளினங்களின் அதிகாலை ஆரவாரங்களால் சூழல் நிறைந்திருக்கும் இரம்மியமான காலைப் பொழுதுகள். அவ்வதிகாலைப் பொழுதுகளில் சுழன்றடிக்கும் காற்றில் அசைந்தாடும் பனைகளினோசைகள்
மெல்லக் காதில் வந்து விழும். மெல்லிய தென்றல் ஜன்னைலினூடு உள்ளே வந்து தாலாட்டும் தருணங்களில் தொலைவில் தெரியும் நிலாவின் தண்ணொளியில் நனைந்தபடி படிப்பதிலுள்ள சுகமிருக்கிறதே... இப்பொழுது அம்மா இங்கிருந்தால் என்ன நினைப்பாரென்றொரு எண்ணமும் எழுந்தது. இளங்கோவின் இதழ்க்கோடியில் மெல்லியதொரு சிரிப்பு எழுந்து மறைந்தது. கோப்பை கழுவும் வேலையொன்றை எடுப்பதற்காக ஆடுமிந்த ஆட்டத்தை நினைத்தால் சிரிக்காமல் என்ன செய்வது? இந்த இருப்பில் எதுவும் எப்பொழுதும் சாத்தியப்படலாம். நடக்க முடியாதென்று நினைப்பவற்றையெல்லாம் காலம் மிக இலகுவாக மாற்றி வைத்து விடுமாற்றல் மிக்கதென்பதைப் புரிய வைப்பதாக அவனது நிகழ்காலமிருந்தது.

ஒருவழியாக ஐந்தாவது நாள், வெள்ளிக் கிழமை நண்பகல், முகவன் பீற்றரின் கடாட்சம் அவன் பக்கம் வீழ்ந்தது. அவன் அழைத்தபோது இளங்கோவின் மனநிலையினை விபரிப்பதற்கு வார்த்தைகளேது. அந்தக் குறுகிய நேரத்தில் அவன் மனது பின்வருமாறு எதிர்காலத்திட்டம் பற்றிய கணக்குகளைப் போட்டது:

1. இந்த வேலையை இயலுமானவரையில் தக்க வைத்துக் கொள்வது.
2. ஆகக் குறைந்தது ஒருவாரமாவது செய்தால்தான் அடுத்த சில வாரங்களுக்குத் தப்பிப் பிழைக்கலாம்.

3. வேலை புரியும் சூழல் பிடிக்குமிடத்தில் சிறிது காலம் அங்கு வேலை செய்து இயலுமானவரையில் காசைக் கொஞ்சம் சேமிப்பது.
4. அதே சமயம் சமூகக் காப்புறுதி இலக்கத்தினை சட்டரீதியான முறையில் பெறுவதற்குத் தொடர்ந்தும் முயற்சி செய்வது.
5. அகதிக் கோரிக்கைக்கான வழக்கினை இலாபநோக்கற்று சட்ட உதவிகளை வழங்கும் அமைப்பொன்றிடம் கையளிக்க வேண்டும். அதன் மூலம் சிறிதளவு பணத்தினையாவது சேமிக்கலாம்.
6. சமூகக் காப்புறுதி இலக்கம் கிடைத்ததும் ஓரளவுக்கு அவனது கல்வித் தகைமைகளுக்குரிய வேலைகளை முடிந்தவரையில் தேடுவது.
7. குறைந்தது ஒரு வருடமாவது அமெரிக்காவில் தங்கி முடிந்தவரையில் பொருளியல் ரீதியாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
8. அவ்விதமான திட்டம் நிறைவேறாது விடும்பட்சத்தில் கனடாவுக்குச் சென்று விடவேண்டும்.
9. மீண்டும் அங்கு தப்பிப் பிழைத்தலுக்கான போராட்டத்தினைத் தொடங்க வேண்டும்.

இவ்விதமான எதிர்காலத்திட்டங்களுடன் முகவன் பீற்றரின் அறையினுள் நுழைந்தான் இளங்கோ. அவனை வரவேற்ற முகவன் பீற்றர் அருகிலிருந்த ஆசனத்தில் அமரும்படி வேண்டினான்: "எனது இளம் நண்பனே! இங்கு ஆறுதலாக அமருவாயாக"

இளங்கோ ஆசனத்திலமர்ந்தவனாக முகவன் பீற்றரை நோக்கிக் காத்திருந்தான்.

முகவன் பீற்றர் தொடர்ந்தான்: "நண்பனே! உனக்கு நல்லதிருஷ்ட்டம் அடிக்க ஆரம்பமாகி விட்டது. இனி உன்பாட்டில் இராஜ யோகம்தான்."

இவ்விதம் கூறிய முகவன் பீற்றர் மேலும் தொடர்ந்தான்: "நான் உன்னை நியூஜேர்சி நகரிலுள்ள உணவகமொன்றுக்கு அனுப்பப் போகின்றேன். நல்ல உணவகம். கடல் உணவு தயாரிப்பில் சிற்ந்து விளங்குமொரு உணவகம். அதன் உரிமையாளரான நெப்போலியனே அங்கு பிரதான சமையல்காரனாகவும் பணி புரிகின்றான். அவனுக்குக் கீழ்தான் நீ வேலை செய்யப் போகின்றாய்".

இளங்கோ: "அபப்டியா. மிகவும் நன்றி. என்னால் முடிந்த வரையில் நேர்மையாக, உங்களுக்கு விசுவாசமாக, உங்கள் பெயருக்குப் பங்கமெதுவும் ஏற்படாமல், கடுமையாக வேலை செய்ய முயற்சிப்பேன்"

முகவன் பீற்றர்: "உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குறிப்பாகக் 'கடுமையாக வேலை செய்ய முயற்சிப்பேன்' என்று கூறினாயே அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. செய்வேனென்று கூறாமல் முயற்சிப்பேன்று கூறுவதில் உண்மை அதிகம் கலந்திருக்கிறது. நீ பிழைத்துக் கொள்வாய். நெப்போலியன் மிகவும் நல்லவன். ஆனால் சிறிது கண்டிப்பானவன். நன்கு வேலை செய்யும் பணியாட்களை அவன் மிகவும் மதித்து நடப்பவன். இன்னுமொன்று..."

என்ன என்பது போல் முகவன் பீற்றரை நோக்கினான் இளங்கோ. முகவன் பீற்றர் தொடர்ந்தான்:

"மூன்று நேரச் சாப்பாடும், தங்குவதற்குரிய இருப்பிட வசதியும் இலவசம். நீ செல்லும்போது உனக்காக அங்கு நெப்போலியன் போதிய தயாரிப்புகளுடன் காத்திருப்பான். உன்னை உன்னிருப்பிடத்தில் கொண்டு சென்று விடுவான். வேலை பற்றிய அத்த்தனை விபரங்களையும் விரிவாக விளக்குவான். வேலையில் ஏதாவது பிரச்சினைகளென்றால் நீ அவனிடம் முரண்டு பிடிக்காதே. எனக்கு நேரடியாகத் தொலைபேசியில் அழை. வேறென்ன. எண்பது டொலர்களைக் கிறிஸ்டினாவிடம் கொடுத்துப் பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு நீ போகலாம். ஹென்றி உன்னைப் பஸ் நிலையம் அவரையில் வந்து வழியனுப்பி வைப்பான். உனக்கு என் வாழ்த்துக்கள். வேறு ஏதாவது
கேள்விகளிருந்தால் இப்பொழுதே கேட்டு விடு."

பதிலுக்கு இளங்கோ "தற்போது எதுவுமில்லை. பின்னர் ஏதாவது தேவைப்பட்டால் உங்களுடன் தொடர்பு கொள்வேன். இந்த வேலை எடுத்துத் தந்ததற்கு என் நன்றி" என்று கூறிவிட்டுக் கிறிஸ்டினாவிடம் எண்பது டொலர்கள் கொடுத்துப் பற்றுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு, ஹென்றியுடன் நியூயார்க் பஸ்நிலையத்தை நோக்கிப் புறப்பட்டான்.

அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!

அந்தக் கடலுணவுக்குப் பெயர்பெற்ற உணவகம் நியூஜேர்சி மாநிலத்தின் 'நிவார்க்' என்னும் நகரில் பிரதான கடைத்தெருக்கண்மையில் அமைந்திருந்தது. இளங்கோ அவ்விடத்தை அடைந்தபொழுது அப்பொழுது காலை நேரம் பத்தைத் தாண்டி விட்டிருந்தது. முன்னரே முகவன் பீற்றர் ஏற்பாடு செய்திருந்ததன்படி தலைமைச் சமையற்காரன் நெப்போலியன் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தான். முதல் வேலையாக உணவகத்திற்குக் கூட்டிச் சென்றவன் அங்கிருந்த உதவிச் சமையற்காரன் 'மார்க்'கை அறிமுகம் செய்து வைத்தான். நெப்போலியன் உருவத்தில் உண்மையான நெப்போலியனுக்கு எதிர்மாறான தோற்றத்திலிருந்தான். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில், அடர்த்தியான நரைத்த மீசையுடன் ஒரு காலத்தில் 'ஹாலிவூட்டி'னைக் கலக்கிய 'சார்ஸ் புரோன்சன்' போன்ற தோற்றத்திலிருந்தான். அவனுக்கு எதிர்மாறாக இளைஞனாக அகன்ற, சிரிப்புடன் கூடிய வட்ட முகத்துடன் காணப்பட்டான் மார்க். பணிப்பெண்கள் சிலர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

மார்க்கைப் பார்த்து நெப்போலியன் பின்வருமாறு இளங்கோவை அறிமுகம் செய்து வைத்தான்: "மார்க். உன் தலையிடி இன்றுடன் தொலைந்தது. இனிமேல் இவன்தான் உனக்கு உற்ற உதவியாளனாகவிருப்பான். இன்றைக்கே வேலையினை ஆரம்பிக்கின்றான். இவனுக்குரிய அன்றாட வேலைபற்றிய அனைத்துத் தகவல்களையும் தெளிவாக விளக்கி விடு. இவனுடைய பெயர் என் வாயில் நுழைவதற்குக் கஷ்ட்டமானது. உன் பெயர் என்ன என்பதை இவனுக்குக் கூறு?"

"இளங்கோ" என்றான் இளங்கோ.

"இலங்கா.." என்று இழுத்து ஒருமுறை உச்சரித்துப் பார்த்தான் மார்க்.

"இலங்கா இல்லை. இளங்கோ" என்றான் இளங்கோ.

மீண்டும் மார்க்கும், நெப்போலியனும் ஒருமுறை "இலங்கா" என்றிழுத்தார்கள

"அதுவும் ஒருவிதத்தில் சரிதான். ஏனென்றால் நான் இலங்கையைச் சேர்ந்தவன். இலங்காவென்பதும் ஒருவிதத்தில் பொருத்தமாயிருக்கிறது" என்று இலேசாகச் சிரித்தான் இளங்கோ.

அச்சமயம் அவ்விடத்துக்குப் பணிப்பெண்ணொருத்தி ஓடி வந்தாள். "எமிலி" என்று அவளை அழைத்த நெப்போலியன் இளங்கோவிடம் "இலங்கா, இவள்தான் பணிப்பெண் எமிலி. மிகவும் நல்லவள். கலகலப்பானவள். இவளுக்கும் உன் உதவி மிகவும் தேவைப்படும். இவளைப் போல் இன்னும் சிலர் வேலை செய்கின்றார்கள். மேலும் சிலர் மாலையில் தான் வருவார்கள்" என்றான்.

எமிலியும் பதிலுக்கு அவனைப் பார்த்து சிநேகிதமான பார்வையொன்றினை வீசி 'ஹாய்' என்று கூறி விட்டுத் தன் பணியில் மூழ்கி விட்டாள்.

நெப்போலியன் மார்க்கிடம் "மார்க். இலங்காவுக்கு வேலை பற்றிய எல்லா விடயங்களையும் விளக்கி விடு. வேலையை அவன் இப்பொழுதே ஆரம்பிக்கலாம்" இவ்விதம் கூறியவன் இளங்கோவிடம் 'இலங்கா, என் அறைக்கு வா. உன்னிடம் இன்னும் சில விடயங்களைப் பற்றிப் பேச வேண்டும்" என்றான்.

அவனைத் தொடர்ந்து இளங்கோவும் அவனது காரியாலய அறைக்குச் சென்றான்.

அருகிலிருந்த இருக்கையினைக் காட்டியவன் 'இருக்கலாம்' என்பதற்குரிய சைகையினைக் காட்டினான். இளங்கோ அமர்ந்ததும் இவ்விதம் கூறினான்: "இங்கு எல்லோரும் உனக்கு ஒத்துழைப்பார்கள். நீ மட்டும் உன் வேலையினை ஒழுங்காகச் செய்தால் போதுமானது. மூன்று நேரமும் இங்கு உன் சாப்பாட்டினை முடித்துக் கொள்ளலாம். இன்றிரவு வேலை முடிந்ததும் உன்னை உன்னிருப்பிடத்தில் கொண்டு சென்று விடுவேன். நாளை முதல் அங்கிருந்து நீ வேலைக்கு வரவேண்டும் நடந்தே வந்து விடலாம். அவ்வளவு தொலைவில்லை. எனக்குத் தெரிந்த வயது முதிர்ந்த தம்பதியின் வீடுதான். மாடியில் அறைகளை வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். உன்னைப் போல் வேறு சிலரும் அங்கு தங்கியிருக்கிறார்கள். நல்லவர்கள்"

இளங்கோ மெளனமாகவிருந்ததைப் பார்த்து நெப்போலியன் "இலங்கா! உனக்கு ஏதாவது கேள்விகள் இவ்விடயத்திலிருந்தால் இப்பொழுதே கேட்டு விடு" என்றான்.

அதற்கு இளங்கோ "வேலை நேரம், மற்றும் அதற்குரிய ஊதியம் பற்றியெதுவும் கூறவில்லையே.. " என்றிழுத்தான்.

அதற்குரிய நெப்போலியனின் பதில் இவ்விதமாக அமைந்திருந்தது: "காலை 10 மணியிலிருந்து மாலை 10 மணிவரைதான் உனது வேலைநேரம். அதற்குள் உனக்குரிய வேலைகளையெல்லாம் முடித்து விட வேண்டும். அவ்விதம் முடிக்காவிட்டால் எவ்வளவு நேரம் சென்றாலும் முடித்து விட்டுத்தான் செல்ல வேண்டும். ஆனால் மேலிடத்தால் எனக்கிடப்பட்ட கட்டளையின்படி உனக்கு காலை பத்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரையில்தான் ஊதியம் வழங்குவார்கள். ஊதியமாக மணித்தியாலத்திற்கு முன்று டாலர்கள் வழங்கப்படும். அதே சமயம் உனக்கு உணவு மற்றும் இருப்பிடம் எல்லாம் இலவசமாகக் கிடைப்பதையும் நீ எண்ணிப் பார்க்க வேண்டும். உனக்கு இவ்விடயத்தில் மேலதிகமாக ஏதாவது கேள்விகளிருந்தால் என்னிடம் அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம். இப்பொழுது நான் உன்னை மார்க்கிடம் ஒப்படைக்கப் போகின்றேன். அவன் உனக்கு உனது வேலை சம்பந்தமான எல்லா விடயங்களையும் விளக்குவான்."

அதன்பிறகு நெப்போலியன் இளங்கோவை உதவிச் சமையற்காரன் மார்க்கிடம் கொண்டு சென்று ஒப்படைத்தான். அத்துடன் " மார்க் இலங்காவை உன்னிடம் ஒப்படைக்கின்றேன். நீ முன்பே கூறியதுபோல் எல்லாவற்றையும் விளக்கிவிடு" என்று மேலும் கூறிவிட்டகன்றான்.

மார்க் இளங்கோவிடம் "இலங்கா, ஏதாவது சாப்பிட விரும்பினால் சாப்பிட்டுக் கொண்டே பேசலாம்" என்றவன் முட்டையும் வதக்கிய உப்பிடப்பட்ட பன்றியிறைச்சியும் கூடிய வெண்ணெயிடப்பட்ட வாட்டிய பாண் துண்டுகளைக் கொண்டு வந்து வைத்தான். அத்துடன் குடிப்பதற்கு ஆரஞ்சுப் பழச்சாறும் கொண்டு வந்தான். அத்துடன் தனக்குக் குடிப்பதற்குத் தேநீர் கொண்டு வந்தான். சிறிது நேரம் இளங்கோ உண்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இளங்கோவுக்குரிய நாளாந்தப் பணிகளை விபரிக்கத் தொடங்கினான்:

"இலங்கா, உன்னுடைய முக்கியமான வேலைகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். முதலாவது முக்கியமான வேலை பணிப்பெண்கள் அவ்வப்போது கொண்டு வரும் கோப்பைகளை அதற்குரிய கோப்பை கழுவும் இயந்திரத்தில் உடனடியாகக் கழுவி வைப்பது. அப்பொழுது கோப்பைகளில் பாவிக்காமல் வரும் வெண்ணெய்க் கட்டிகள், பழக்கூழ் ('ஜாம்') போன்றவற்றை எறியக் கூடாது. அவற்றை இன்னுமொரு கோப்பையில் சேகரிக்க வேண்டும். அத்துடன் சில சமயங்களில் திரும்ப வரும் பெரு இறால்களின் ('லாப்ஸ்டர்') கோதுகளையும் சேகரிக்க வேண்டும்.

அது முதலாவது முக்கியமான பணி. அதில் நீ தாமதித்தால் பணிப்பெண்கள் திணறிப் போவார்கள். எனவே ஒவ்வொரு முறை அவர்கள் கோப்பைகளைக் கொண்டு வந்ததுமே இயலுமானவரையில் உடனடியாகக் கழுவி வைத்து விட வேண்டும். இரண்டாவது முக்கியமான பணி எனக்கு நீ ஒத்துழைப்பதுதான். ஒவ்வொரு முறையும் மீன்கள், இறைச்சி வகைகள் போன்றவற்றைப் பொறித்து விட்டுக் கறிச்சட்டிகளை அதோ அந்தத் தொட்டிகளில் போட்டு விடுவேன். நீ கோப்பை கழுவும் சமயங்களில் அவ்வப்போது அந்தத் தொட்டியையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஓரளவு நிறைந்ததுமே அவற்றைக் கழுவி வைத்தால் உனக்கும் வேலை இலகுவாகிவிடும். எனக்கும் பெரிய உதவியாகவிருக்கும். அடுத்த முக்கியமான பணியாக அவ்வப்போது அசுத்தமாகி விடும் சமையலறைத் தரையினைச் சுத்தம் செய்வது. சமையலறை மட்டுமல்ல, உணவகத்தின் தரையையும் கேட்கப்படும் பட்சத்தில் துப்புரவாக்கி விட வேண்டும். இறுதியாக இரவு உணவகம் மூடியதும், உணவகம் முழுவதையும் கூட்டித் துப்புரவாக்கி விட வேண்டும். குப்பைகளைக் கட்டி வெளியில் எடுத்துச் சென்று வைத்து விட வேண்டும். இவ்வளவும்தான் உனது பிரதான நாளாந்தக் கடமைகள். வேலை சிறிது சிரமமானதுதான். ஆனால் அதனை இலகுவாக்குவது உனது கைகளில்தானுள்ளது"

மார்க்கின் விபரிப்பு இளங்கோவுக்குப் பிரமிப்பினைத் தந்தது. அவனது அதுவரையிலான வாழ்நாளில் அவன் உடல் உழைப்பினை வாழ்வுக்காகவென்று மேற்கொண்டதில்லை. இதுதான் முதலாவது தடவை அவ்விதம் மேற்கொள்ளப் போகின்றான். சிறு வயதிலிருந்தே அடிக்கடி வருத்தம் வந்து விடும் மெலிந்த உடல்வாகு அவனுடையது. உடல் பலகீனமாகிவிடும் சமயங்களிலெல்லாம் ஒருவிதமான மூட்டுவலியால் உபாதைப்படத் தொடங்கிவிடுவான். ஊரிலிருந்த காலகட்டத்தில் அவனது அம்மா தேங்காய் உரிப்பதற்குக் கூட அவனை அனுமதிக்க மாட்டாள். அவ்விதம் பொத்திப் பொத்தி அவனை வளர்த்திருந்தாள்.

அவனது மெளனத்தைக் கண்ட மார்க் கேட்டான்: "என்ன இலங்கா! பயந்து விட்டாயா? இதற்கு முன்பே உனக்கு இது போன்ற ஏதாவது அனுபவமிருக்கிறதா?"

இல்லையென்று கூறினால் ஒரேயடியாகக் அனுப்பி விட்டாலும் விடுவார்கள். எத்தனையோ நாட்கள் காத்திருந்து , 'ஓடு மீன் ஓடி, உறு மீன் வருமளவும் வாடிக் காத்து நின்ற கொக்காக' நின்று பெற்ற வேலையல்லவா. அவ்வளவு இலகுவில் நழுவ விட்டு விடலாமா? எனவே இளங்கோ பின்வருமாறு பதிலிறுத்தான்:

"பயமா! எனக்கா! இந்த வேலைக்கா! எனக்குப் இந்த வேலை பழைய ஞாபகங்களை நினைவூட்டி விட்டன" என்றான்.

"பழைய ஞாபகங்களா..!" என்று வியந்தான் மார்க்.

"முன்பு ஒருமுறை உன்னவர்களினொருவனின் கப்பலில் இது போன்ற வேலையினைச் செய்திருக்கின்றேன். ஏன் இலங்கையில் இருந்த காலகட்டத்தில் கூட என்னூர் சுபாஸ் கபேயில் இது போன்ற வேலைகளைச் செய்திருக்கின்றேன் (வாழ்க சுபாஸ் கபே என்று மனது வாழ்த்தியது). அந்த நாள் ஞாபகங்கள் வந்து விட்டன" என்றான்.

மார்க் சிரித்தபடியே "நீ சொல்வது சரிதான். பழசு எப்பொழுதுமே பொன்தான்" என்றவன் தனக்குள் 'ஆள் பார்வைக்குத்தான் மெலிந்து, ஒல்லியாகவிருக்கின்றான். உண்மையில் இந்த விடயத்தில் பழமும் தின்று கொட்டையையும் போட்டவனாகவிருக்க வேண்டும். முகவன் பீற்றர் சரியானவனைத்தான் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கின்றான். இவ்வளவு காலமும் கறிச்சட்டிக் கழுவ, கோப்பை கழுவவென்று இரண்டு பேரை வைத்துச் சிரமப்பட்டது போதும். அபபடியிருந்தே அந்தக் கள்ளன்களிருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டான்கள். நல்ல வேளை இவனுக்கு அந்த விடயம் தெரியாது. தெரிந்திருந்தால் உண்மையில் பயந்திருப்பான். இவனெப்படி இந்த இரண்டு வேலையையும் செய்கிறானென்று பார்ப்போம்' என்றெண்ணிக் கொண்டான்.

இவை எதுபற்றியும் தெரியாத 'இலங்கா'வென்கின்ற இளங்கோ பணிக்குரிய மேலங்கிகளை அணிந்து கொண்டு தன் பணியினை ஆரம்பித்தான்.

அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு!

அதிகாலை நேரத்திற்குரிய மெல்லிய குளிர் எங்கும் பரவிக் கிடந்தது. கீழ் வான் சிவந்து கிடந்தது அதிகாலைக் கருக்கிருளுக்கோர் அழகினை அளித்தது. விடிவெள்ளியும், முழு நிலவும் நட்சத்திரக் கன்னியர் சிலருடன் பிரிவதற்கஞ்சி இன்னும் உறவாடிக் கொண்டிருந்தார்கள். நியுயார்க் நகரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த இளங்கோவின் சிந்தனை கடந்த வார நிகழ்வுகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அவனால் அந்தக் கிரேக்கனின் கடலுணவு உணவகத்தில் ஒரு வாரம் வரையிலேயே தாக்குப் பிடிக்க முடிந்தது. வெள்ளிக் கிழமை மட்டும் தாக்குப் பிடிப்பதே அவனுக்குப் பெரும் சிரமமாகப் பட்டது. வெள்ளிக் கிழமை காலை வேலையினை ஆரம்பிப்பதற்கு முன் அவன் தன் முடிவினை நெப்போலியனுக்குக் கூறியபோது அவன் சிறிதும் இதனை , இவ்வளவு சீக்கிரத்தில், எதிர்பார்க்கவில்லையென்பதை அறிய முடிந்தது. அதனை அவனது வினாவும் நிரூபித்தது.

"உனக்கு வேலை பிடிக்கவில்லையா?"

அதற்கு இளங்கோ இயலுமானவரையில் தன் மனச்சாட்சியின்படியே பதிலிறுக்க முடீவு செய்தவனாக "வேலை பிடிக்கவில்லையென்று சொல்வதற்கில்லை..." என்று கூறிக் கொண்டிருக்கையில் நெப்போலியன் இடைமறித்துக் கேட்டான்:

"பின். வேலை சிரமமாயிருக்கிறதா?"

"அதுதான் முதற் காரணம். தொடர்ந்து நீண்ட மணி நேரம் வேலை செய்து விட்டு இருப்பிடம் திரும்பிப் படுக்கையில் சாய்ந்தால் மறுநாள் எழும்பியதுமே மீண்டும் வேலைக்கு வந்து விட வேண்டும். அது மிகவும் சிரமமாயிருக்கிறது. உடம்பும் முறிந்து போய் விடுகிறது. அடுத்தது..."

"அடுத்தது..."

"சிரமமப்படுகின்ற அளவுகேற்ற ஊதியமுமில்லை. இரண்டு பேருடைய வேலையை ஒரு ஆளே செய்வது அவ்வளவொன்றும்
எளிதாகவில்லை.."

இவ்விதம் இளங்கோ கூறியது நெப்போலியனுக்குச் சிறிது திகைப்பினை அளித்திருக்க வேண்டும். அதனை அவனது அடுத்த கேள்வி நிரூபித்தது: "இரண்டு பேருடைய வேலையா..? யார் உனக்குக் கூறினார்கள்?"

"யார் சொல்ல வேண்டும்.. வேலையின் அளவீனைப் பார்த்தாலே தெரியவில்லையா?"

இவ்விதம் இளங்கோ கூறியது நெப்போலியனுக்குச் சிறிது விசனத்தை அளித்திருக்க வேண்டும்.

"இருப்பதோ சட்டவிரோதம். இதை விட வேறென்ன வேலையினை நீ எதிர்பார்க்கிறாய்.?"

இவ்விதம் நெப்போலியன் அவனது நிலையினைச் சுட்டிக் காட்டிக் கூறியது இளங்கோவுக்கு ஆத்திரத்தை அளித்தது. அது குரலில் தொனிக்க அவன் இவ்விதம் கூறினான்: "நான் சட்டவிரோதமாகத் தற்போதிருந்தாலும் அதற்குரிய பத்திரங்களுடன்தான் இருக்கிறேன். சட்டரீதியாகத்தான் நாட்டினுள் நுழைந்தவன். தவிர்க்க முடியாத நிலையில் இங்கு தங்க வேண்டியதாயிற்று." அதே சமயம் இவ்விதம் இவனுடன் தன் சொந்த வாழ்வு பற்றிய விபரங்களையெல்லாம் தெரிவிக்கத்தான் வேண்டுமா என்றும் பட்டது. இவ்விதம் நினைத்தவன் "என்னால் இந்த வேலையைச் செய்யவில்லை என்று வைத்துக் கொள். என்னால் செய்யக் கூடிய வேலைகளைத் தேடிப்பார்க்கிறேன். இங்கிருந்து கொண்டு இந்த வேலையை இன்னும் ஒரு வாரம் செய்தேனென்றால் எனக்கு விசரே பிடித்து விடும். இப்பொழுது கூட என்னால் இந்த வேலையினைத் தொடர்ந்து செய்ய முடியும் நிபந்தனையொன்றின் அடிப்படையில்.." என்று இழுத்தான்.

அதற்கு நெப்போலியன் "என்ன நிபந்தனை விதிக்கிறாயா? இவ்விதம் நிபந்தனை விதிக்கும் முதல் ஆள் நீ தான். சரி உன் நிபந்தனையைத்தான் சொல்லேன்.." என்றான்.

"பத்து மணித்தியாயம் மட்டுமே வேலை செய்வேன். அதற்குரிய ஊதியம் தரவேண்டும். மேலதிகமாக வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்குமுரிய ஊதியம் தரவேண்டும். இலவசமாகச் செய்ய என்னால் முடியாது. சிரமப்படுகிற அளவுக்கு ஊதியம் கிடைத்தால் மனதைச் சமாதானப்படுத்தவாவது முடியும். சிரமத்திற்குரிய பலன் சிறிதாவதிருக்க வேண்டும்."

இளங்கோவின் பதில் உண்மையிலேயே நெப்போலியனுக்கு வியப்பினை அளித்தது.

"இங்கு பார் என் நண்பனே. நீ நன்கு வேலை செய்யும் ஆள். மிகவும் கடுமையான உழைப்பாளி. உன்னை இழப்பது எனக்கு மிகுந்த கவலையினை அளிக்கிறது. உன்னை மாதிரி இன்னுமொருவனைத் தேடிப் பிடிப்பது மிகவும் சிரமம். ஆனால் நீ கேட்பதைத் தர எனக்கு உரிமையில்லை. உணவக்ச் சொந்தக்காரன் நிச்சயம் இதற்குச் சம்மதிக்க மாட்டான். நியூயார்க்கில் மில்லியன் கணக்கில் இத்தகைய வேலைக்கு நாயாய் அழைந்து கொண்டிருக்கிறார்கள். பீற்றரிடம் கூறினால் இன்னொருவனை அவன் அனுப்பி விடுவான். இருந்தாலும் இவ்வாரம் நீ கடுமையாக உழைத்ததற்காக நன்றி. இன்று மாலை உனக்குரிய ஊதியத்தைக் கணகெடுத்துத் தந்து விடுகிறேன். உன் எதிர்கால நல்வாழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்."

இவ்விதம் நெப்போலியன் வெளிப்படையாகக் கூறியது அவன்பால் சிறிது மரியாதையினை இளங்கோவின் மனதிலேற்படுத்தியது. அவனைப் பொறுத்தவரையில் எந்த ஊதியத்திற்கும் வேலைக்கு ஆள் பிடிப்பது அவ்வளவு கஷ்ட்டமான காரியமில்லை. முகவன் பீற்றரின் அலுவலகத்தில் தவமிருக்கும் 'கொக்குக'ளின் ஞாபகம் நினைவிற்கு வந்தது.

அச்சமயம் அவனுக்கு எமிலியின் ஞாபகம் வந்தது. அங்கு பணி புரியும் பணிப்பெண்களில் அவள் சிறிது வித்தியாசமானவள். நியூஜேர்சியிலுள்ள கல்லூரியொன்றில் 'ஓட்டல் நிர்வாகம்' பற்றிய துறையில் படித்துக் கொண்டிருந்தாள். உண்மையில் அவள்தான் அவனுக்கு அந்த வேலையை அவனுக்கு முன்னர் இருவர் செய்து கொண்டிருந்த விபரத்தைக் கூறியவள். நாள் முழுவதும் அவன் படும் சிரமத்தைக் கண்டு அவ்வப்போது ஓய்வெடுக்கும் சமயங்களில் அவனுடன் உரையாடுமொரு சம்யம் கூறியிருந்தாள். அத்துடன் நியூயார்க்கிலேதாவது வேலையினை பாரென்று அறிவுரையும் கூறியிருந்தாள்.

உண்மையில் எமிலி சிறிது கண்டிப்பானவளும் கூட. உதவிச் சமையற்காரன் மார்க் ஒரு வேடிக்கையான பேர்வழி. பெண்களென்றால் வழியும் பிரிவினன். அவர்களுடன் சல்லாபிப்பதில், அங்க சேஷ்ட்டைகள் புரிவதில் ஆன்ந்தம் கொள்பவன். அவர்கள் அப்பால் நகர்ந்ததும்
'எளிய விபச்சாரிகளென்று' நையாண்டி செய்பவன். அங்கு பணிபுரியும் பணிப்பெண்கள் ஒவ்வொரு முறை சமையலறைக்குள் வரும்போதும் அவர்களுடன் ஒரு சில நிமிடங்களாவது சல்லாபிக்கவும், அவர்களது பிருஷ்டங்களை வருடவும் அவன் தவறுவதேயில்லை. ஆனால் எமிலியுடன் மட்டும் அவன் அவன் பருப்பு வேகாது. அவளுடன் மிகவும் பெளவ்வியமாக நடந்து கொள்வான்.

இளங்கோவின் சிந்தனை எமிலியிலிருந்து மீண்டும் நிகழ்கால வாழ்க்கைப் பிரச்சினைக்குத் திரும்பியது. அருள்ராசா அவன் உடனேயே திரும்பியதும் நிச்சயம் 'நக்கல'டிப்பான். 'இதுதான் நான் இந்த வேலைக்கே போகவில்லை. எனக்கு முதலிலையே தெரியும் நீ நின்று பிடிக்க மாட்டாயென்று. ஏன் சொல்லுவானென்று இருந்தனான்' என்பான். யார் என்ன சொன்னாலும் கவலைப்படுவத்ற்கில்லை. மீண்டும் முகவன் பீற்றரிடம் செல்வதில் பயனில்லை. அவன் இப்படித்தான் ஏதாவதொரு இடத்திற்கனுப்பப் போகின்றான். நியூயார்க்கிலேயே வேறெங்காவது தேடிப்பார்க்க வேண்டும். அதற்கிடையில் சமூகக் காப்புறுதி இலக்க அட்டையினை எடுக்க முடியுமாவென்று பார்க்க
வேண்டும். குறைந்தது ஒரு வாரமாவது தாக்குப் பிடித்ததால் கையில் கொஞ்சமாவது பணமாவதிருக்கு. இல்லாவிட்டால் கஷ்ட்டமாயிருந்திருக்கும். அடுத்த முயற்சியினை இன்னும் முனைப்புடன் செய்வதற்கு இந்தப் பணம் உதவும். இவ்வாறு பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியவனாகப் பயணித்துக் கொண்டிருந்தானவன்.

வெளியினூடு மிகவும் வேகத்துடன் விரைந்து கொண்டிருக்கும் இந்தக் கோளத்தினுள் அவனது இந்தச் சிறிய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எத்தனை விசித்திரமான உலகம்! எத்தனை விசித்திரமான இருப்பு! விரையும் வேகத்தைக் கூட உணர முடிவதில்லை.  உணராமல் எத்தனை கும்மாளங்களைப் போட்டுக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நிமிடமும் இந்தப் பூமிப பந்தின் எந்த மூலையிலாவது குண்டுகள் வெடிக்காமல் பொழுது கழிந்திருக்கிறதா? எத்தனை எததனை மோதல்களாலும், இரத்தக் களரிகளாலும் நிறைந்து போய்க் கிடக்கிறதிந்த உலகம். இவ்வளவும் இந்தப் பிரமாண்டமான வெளியினூடு விரையுமிந்தக் கோளத்தின் வாயுக் குமிழிக்குள் இருந்து கொண்டு ஆடும் கூத்தினால்தானே? இந்தக் குமிழியும் எந்தக் கணத்திலென்றாலும் உடைந்து விடலாம். ஏற்கனவே ஓட்டை போட்டாகி விட்டது. இன்னுமெத்தனை நாளைக்கோ இந்த இருப்புமிந்த உலகில்? அதனைக் கூட உணராமாலேனிந்த ஆட்டம்?

இத்தகைய தனித்த பயணங்களில், அதிகாலைகளில், அந்திப் பொழுதுகளில், இருண்ட நகரத்து வானை இரசித்து வருகையிலெல்லாம் அவனது மனம் இவ்விதமான இருப்பு பற்றிய தத்துவச் சிந்தனைகளிலாழ்ந்து விடுகிறது. அது அவனது வழக்கமாகியும் விட்டது. இவ்விதமே இந்தக் கணமே எல்லாவற்றையும் துறந்து ஓடி விடலாமாவென்றிருக்கும். மறுகணமே நடைமுறையின் வலைக்குள் சிக்கி அதிலாழ்ந்து விடுவான். இருத்தலிற்கான போராட்டத்தில் மூழ்கி விடுவான். வாழ்க்கை மீண்டுமொரு சுழலத் தொடங்கிவிடும். மகாகவியின் 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' கவிதை வரிகள் சில ஞாபகத்திற்கு வந்தன. 'மப்பன்றிக் காலமழை காணா மண்ணில் சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது. ஏர் ஏறாது. காளை இழுக்காது. இருந்தும் பாறை பிளந்து பயன் விளைப்பான் அந்த விவசாயி. ஆழத்து நீரகழ்ந்து நெல் வளர்ப்பான். அந்த் நெல்லோ... 'சோ'வென்று நள்ளிரவில் கொட்டுமொரு மழையில்..., ஆட்டத்து மங்கையராயாடிய அப்பயிரினமோ வீழ்ந்தழிந்து பாழாகிப் போம். வெள்ளம் வயலை விழுங்கும். இருந்துமென்ன அந்த விவசாயி தளர்ந்து விடுவானா? வெள்ளம் வற்றியதும் வலக்கரத்தில் மண்வெட்டியேற்றி மீண்டும் கிண்டத் தொடங்கி விடுவான். சேர்த்தவற்றை முற்றும் சிதற வைக்கும் வான் பார்த்து அவன் அயர்ந்து விடுவதில்லை. முதலில் இருந்து முன்னேறுதற்காய் மீண்டும் தொடங்கும் அவன் மிடுக்கு'. இருப்பின் சவால்களை எதிர்த்துத் துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கும் விவசாயி பற்றிய கவிதை மனித வர்க்கத்தின் சவால்களைக் குறிப்பாக நம்பிக்கையுடன் விபரிக்கும். இந்த வேலை போனாலென்ன? அவன் தளர்ந்தா போய் விடுவான். நிச்சயம் அவன் வாழ்வில் மீண்டும் தொடங்கும் மிடுக்கு! மீண்டும் தொடங்கும் மிடுக்கு! மீண்டும் தொடங்கும் மிடுக்கு

அத்தியாயம் பதின்மூன்று: வேலை வேண்டும்!

இன்னுமொரு பொழுது பூத்தது வழக்கம் போல் இருப்பியற் பிரச்சினைகளுடன். அருள்ராசாவும், இளங்கோவும் அன்றையப் பொழுதினை எப்படி ஆரம்பிப்பது, கழிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். இளங்கோ இவ்விதம் உரையாடலினை ஆரம்பித்தான்:

"அருள், எப்ப்டியாவது இன்னுமொரு வேலையைக் கெதியிலை எடுக்க வேணும். உன்னுடைய 'பிளான்' என்ன?"

"நானும் எனக்கேற்ற வேலையொன்றைத் தேடிக் கோண்டுதானிருக்கிறன. கிடைக்க மாட்டேனென்கிறதே. எங்கை போனாலும் 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்'டை அல்லவா கேட்கிறான்கள். எனக்கென்னென்றால் 'இமிகிரேஷன் ஓபிசு'க்குப் போய் அதை எடுக்கிற வழியை முதலிலை பார்த்தால் நல்லதென்று படுகுது. நீ என்ன சொல்லுறாய்?"

"அருள். நீ சொல்லுறதும் நல்ல 'ஐடியா'தான். இன்றைக்கு முதலிலை அங்கு போய் விசாரித்து விட்டுப் பிறகு அங்கிருந்தே வேலை தேடும் படலத்தைத் தொடங்குவோம்.."

"அதுவும் நல்ல 'ஐடியா'தான். அப்பிடியே செய்வம். அதுக்கொரு முடிவைக் கண்டு விட்டு, அது சரிப்படாதென்றால் நானும் உன்னைப் போல எந்த வேலையை என்றாலும் செய்ய என்னைத் தயார் படுத்த வேண்டும்."

"அது சரி. உனக்கு இமிகிரேசன் ஓபிஸ் எங்கையிருக்கிறதென்று தெரியுமே?'

"26 'பெடரல் பிளாசா'வில்தானொருக்கு. பிரச்சினையென்னவென்றால்..."

"என்ன பிரச்சினை..?

" 'சோசல் இன்சுரன்ஸ் காட்'டை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு வேறு சில அடையாள அட்டைகள் தேவை. முதலிலை எங்களுக்கு இன்னும் சட்டரீதியாக வேலை செய்கிறதுக்குரிய பத்திரங்களெதுவுமில்லை. 'பாஸ்போர்ட்' கூட கையிலை இல்லை.."

"'பாஸ்போர்ட்' ஏனில்லை. 'இமிகிரேசனி'டம்தானே குடுத்திருக்கிறம்தானே. அதை அவங்கள் சரிபிழை பார்க்கலாம்தானே"

"அடுத்தது... கோஷ் சொன்னவன்..."

"என்ன சொன்னவன்?"

"பாஸ்போர்ட் அதோடை வேலை தருபவடரிடமிருந்து வேலையை உறுதி செய்தொரு கடிதமும், மற்றது வேலை செய்வதற்குரிய அனுமதிப் பத்திரமும் தேவையாம். அவை இருந்தால்தான் 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்' எடுக்கலாமாம்."

"அடக் கோதாரி. இதுக்கு எங்கை போறது. சாணேற முழம் சறுக்கும் போலைக் கிடக்கே.."

"வேறை என்ன செய்யிறது. சும்மா இருக்கிறதை விட முயற்சி செய்யுறது நல்லதுதானே.."

"இது சரி வராட்டி என்ன செய்யிறதாம்..."

"இது சரிவராட்டி ஏதாவது சமூகசேவை செய்யும் அமைப்பொன்றிடமிருந்து சட்டரீதியான சேவையைப் பெற 'டிரை' பண்ணலாம். அபப்டிப் பட்ட பல அமைப்புகள் இங்கை இருக்காம்"

"எதுக்கும் முதலிலை இமிகிரேசன் ஓபிஸுக்குப் போய் அங்கையிருக்கிற ஒரு ஓபிசரைக் கண்டு கதைப்போம். எங்களிடமிருக்கிற நாட்டிலை சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிற 'இமிகிரேசன் டொக்குமன்றைக்' காட்டி கதைப்போம். தற்போதைக்கு அது ஒன்றதுதான் எங்களிடமிருக்கிற ஒரேயொரு 'டொக்குமென்ற்'. முதலிலை அதை வைத்து ஆரம்பிப்பிப்போம்"

"நீ சொல்லுறதும் சரிதான். 'ட்ரை' பண்ணாமல் என்ன நடக்குமென்று முதலிலையே முடிவெடுக்க முடியாது. கேட்காமல் எதுவுமே கிடைக்காதுதானே"

"அதுதான் ஒரு கிறித்தவ பாட்டுக் கூட இருக்குதே.."

"எந்த பாட்டை நீ சொல்லுறாய்?"

"கேளுங்கள் கிடைக்கப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். கேளுங்கள் கிடைக்குமென்றார் இயேசு கேளுங்கள் கிடைக்குமென்றார்"

"சரி கேட்டுப் பார்ப்பம் இமிகிரேசன் ஓபிசரிடம். கிடைத்தால் நல்லது. கிடைக்காவிட்டாலும் எதையாவது செய்து பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான்."

அத்துடன் அவன் மேலும் கூறினான்: " 'சோசல் இன்சுரன்ஸ் கார்ட்' கிடைக்குதோ இல்லையோ நாங்கள் தொடர்ந்தும் வாழத்தான் போறம். இங்கை இருக்கிற வரைக்கும் முடிந்த வரைக்கும் முயற்சி செய்யத்தான் போறம். அந்தக் கார்ட் கிடைத்தால் வாழ்க்கை இலகுவாகக் கழியும். நல்லதொரு வேலை எடுத்து முன்னேறலாம். இல்லையென்றால் எந்த தொட்டாட்டு வேலையையென்றாலும் செய்து இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதுதான்"

இவ்விதமாக அவர்களுக்கிடையில் உரையாடல் தொடர்ந்தது. எவ்விதமாவது குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவரிடம் தங்களது நிலையினை விளக்கிச் சமூகக் காப்புறுதி அட்டையினைப் பெறுவதற்கு இயலுமானவரையில் முயற்சி செய்ய வேண்டும். அவருக்கு இலங்கைத் தீவின் இன்றைய அரசியல் நிகழ்வுகளை, நிலைமைகளை, அண்மைக்காலத்து நிகழ்வுகளை குறிப்பாகக் கறுப்பு யூலை 83 நிகழ்வுகளை, தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மேல கட்டவித்து விடப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை, இவறையெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் அவருக்கு விபரிக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் சம்பந்தமாக மேற்கு நாட்டு வெகுசன ஊடகங்களில் வெளிவந்த செய்திக் குறிப்புகளின் போட்டோப் பிரதிகளை அறுக் சேர்த்து வைத்திருந்தது நல்லதாகப் போய் விட்டது. அவற்றை ஆதாரங்களாகக் காட்ட முடியும். இவ்விதமாக நண்பர்களிருவரும் உரையாடி முன்னெடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து அவை பற்றித் தீர்க்கமான முடிவினையெடுத்தார்கள். அதன் பின் அவர்கள் ஏற்கனவே தீர்மானித்தபடி 'பெடரல் பிளாசா'விலுள்ள குடிவரவுத் திணைக்களத்துக்குச் செல்ல முடிவு செய்து அன்றைய பயணத்தை அவ்விதமே ஆரம்பித்தார்கள்.!
 

அத்தியாயம் பதினான்கு: 'வேடிக்கையான குடிவரவுத் திணைக்கள அதிகாரி!'

வரவேற்புக் கூடத்தில் அமர்ந்திருந்த பெண் அதிகாரியிடம் முதலில் இளங்கோதான் தங்களை அறிமுகம் செய்தான்:

"இனிய காலை உங்களுக்கு உரித்தாகட்டும்"

அதற்கு அந்தப் பெண் அதிகாரி "உங்களுக்கும் எனது காலை வந்தனங்கள். இன்று நீங்கள் என்ன விடயமாக இங்கு வந்திருக்கின்றீர்கள்?" என்று வரவேற்றபடியே எதிர்வினாவொன்றினையும் தொடுத்தாள்.

"எனது பெயர் இளங்கோ. இவனது பெயர் அருள்ராசா. நாங்கள் இருவரும் இங்கு அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள்" என்று கூறிய இளங்கோ அவளுக்கு அமெரிக்கக் குடிவரவு திணைக்களத்தினால் கொடுக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தின் புகைப்படப் பிரதியினை எடுத்துக் கொடுத்தான்.

அதனை வாங்கிச் சிறிது நேரம் பார்த்த அந்தப் பெண் அதிகாரி பின்னர் இவ்விதம் கூறினாள்:

"இது நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பப் பத்திரத்தின் பிரதி. இதனை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து இது சம்பந்தமாக உங்களுக்குப் பதிலொன்று வரும். அதன் பின்னர் வாருங்கள்.."

"மேடம், அது சம்பந்தமாகத்தான் இங்குள்ள அதிகாரியொருவருடன் பேச விரும்புகின்றோம். இதற்கான பதில் எப்பொழுது வருமோ தெரியாது. இந்த நிலையில் 'சமூகக் காப்புறுதி இலக்க' அட்டைக்குக் கூட விண்ணப்பிக்க முடியாதுள்ளது. எங்களுடன் வந்துள்ள வேறு மாகாணங்களில் வசிக்கும் எல்லோருக்கும் 'சமூகக் காப்புறுதி இலக்க அட்டைகள்' வழங்கப்பட்டுவிட்டன. அதில்லாமல் எங்களால் எந்தவித வேலையும் செய்யமுடியாமலுள்ளது. அதுதான் அதுபற்றி இங்குள்ள அதிகாரியொருவருடன் கதைக்க விரும்புகின்றோம். இதற்கு உதவினால் நன்றியுள்ளவர்களாகவிருப்போம்."

இவ்விதம் இளங்கோ மிகவும் பணிவாகக் கூறியது அந்தப் பெண் அதிகாரியின் இதயத்தைத் தொட்டுவிட்டது. அதன் பிரதிபலிப்பு குரலில் சிறிது தெரிய அவள் "உங்கள் நிலை எனக்குப் புரிகிறது. என்னைப் பொறுத்தவரையில் உங்கள் கோரிக்கைக்கான பதில் வராமல் இங்குள்ளவர்களால் என்னதான் செய்ய முடியுமோ? எதற்கும் உங்கள் ஆசையை நான் தடுக்க விரும்பவில்லை. முயற்சி செய்து பாருங்கள். உங்களை அழைக்கும்வரையில் அங்குள்ள ஆசனங்களில் சென்றமர்ந்து அழைப்பு வரும்வரையில் காத்திருங்கள்" என்றாள்.

Friday, March 2, 2018

கட்டக்கலைக்குறிப்புகள் 7 : லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள்! - வ.ந.கிரிதரன் -

" A house is a machine to live in " - Le Corbusier -

நவீனக்கட்டடக்கலையின் முன்னோடிகளில் பன்முகத்திறமை வாய்ந்த ஆளுமைகளில் முதன்மையானவர் சுவிஸ்-பிரான்ஸ் கட்டடக்கலைஞரான லே கொபூசியே ( Le Corbusier ) . சுவிஸில் பிறந்து பிரான்சு நாட்டின் குடிமகனானவர் இவரின் இயற்பெயர் சார்ள்ஸ் எடுவார்ட் ஜென்னெரெ  ( Charles-Édouard Jeanneret) நகர அமைப்பு, கட்டடக்கலை, ஓவியம், தளபாட வடிவமைப்பு , எழுத்து எனப்பன்முகத்திறமை வாய்ந்த ஆளூமை மிக்கவர் இவர். உலகின் பல நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலெல்லாம் இவரது கை வண்ணம் மிளிர்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாகப் புதிதாக அமைக்கப்பட்ட சண்டிகார் நகர வடிவமைப்பினை அமைத்தவர் இவரே. அத்துடன் அந்நகரிலுள்ள பல முக்கியமான கட்டடங்களையும் வடிவமைத்தவரும் இவரே.

நவீனக் கட்டடக்கலையில் முன்னோடிகளில் முக்கியமான எனக்குப் பிடித்த ஆளுமைகளாக ஃப்ராங் லாயிட் ரை (Frank Lloyd Wright ) , மீஸ் வான்ட ரோ (Mies van der Rohe)  , லி கொபூசியே ஆகியோரையே குறிப்பிடுவேன். இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவராக நான் கருதுவது லி கோபுசியேயைத்தான். அதற்குக் காரணம் இவரது பன்முகத் திறமையும், படைப்பாக்கத்திறனும், சீரிய சிந்தனை மிக்க எழுத்துகளும்தாம். இம்மூவரும் முறையாகக் கல்விக்கூடங்களில் கட்டடக்கலைத்துறையில் கற்று கட்டடக்கலைஞராக வந்தவர்களல்லர். தம் சொந்தத் திறமையினால் , அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பயிற்சிகள் மூலம், இத்துறை சார்ந்த பாடங்கள் மூலம் தம் கட்டடக்கலையாற்றலை வளர்த்துச் சாதித்தவர்கள். முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்காமல் வந்து சிறந்த பாடகர்களாக விளங்கும் பாடகர் பாலசுப்பிரமணியம் போன்று , தம் சொந்தத்திறமை காரணமாகச் சிறந்து விளங்கியவர்கள்.

Thursday, February 22, 2018

கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -

- அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) -
ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள்

[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது  சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான 'வைகறை' மற்றும் வெளிவரும் 'சுதந்திரன்', ஈழநாடு' ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. - ]

1. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை

ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட்' 'சென்ற்கிளயர்' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித 'டென்ஷ'னுமின்றிப் பின்னால் 'ஹோர்ன்' அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் 'ஹோர்ன்' அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. 'நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை' இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். 'நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்' என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

'ஓல்ட்வெஸ்டன்' றோட்டைக் கடந்து 'கீல் இண்டர்செக்ஷ'னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் 'கனடாபக்கர்ஸி'ன் 'ஸ்லோட்டர்' ஹவுஸ்' பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.

பொன்னையா இயற்கையிலேயே சிறிது கருணை வாய்ந்தவன். ஏனைய உயிர்களின்மேல் அன்பு வைக்க நினைப்பவன். ஊரிலை இருக்கும் மட்டும் சுத்த சைவம்தான். இங்கு வந்ததும் கொஞ்சங்கொஞ்சமாக மாறி விட்டான். 'இங்கத்தைய கிளைமட்டிற்கு இதையும் சாப்பிடாட்டி மனுஷன் செத்துத் துலைக்க வேண்டியதுதான்'. திடீரென் ஊர்ந்து கொண்டிருந்த 'டிரபிக்' தடைப்பட்டது. பொன்னையா மணியைப் பார்த்தான். நேரம் பதினொன்றையும் தாண்டி விட்டிருந்தது. பஞ்சாப்காரன் பத்து மணிக்கே வரச்சொல்லியிருந்தான்.

தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!' - வ.ந.கிரிதரன் -

தமிழில் எனக்குப் பிடித்த முக்கியமான நாவலாசிரியர் தி.ஜானகிராமன். இவரது 'செம்பருத்தி', 'மோகமுள்', 'மலர் மஞ்சம்', மற்றும் 'அன்பே ஆரமுதே' ஆகிய நாவல்கள் இவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை. 'அன்பே ஆரமுதே' நாவலை என் பதின்ம வயதுகளில் வாசித்திருக்கின்றேன். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவலை அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட நிலையில், ஓவியங்களுடன் வாசித்திருக்கின்றேன். அன்று இந்த நாவலை வாசித்ததற்கும், இன்று வாசிப்பதற்குமிடையில் நாவலை அனுபவிப்பதில், புரிந்து கொள்வதில் நிறையவே வித்தியாசங்களுள்ளன. ஏனென்றால் இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் இளம் வயதினரல்லர். முதுமையை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வயதினர். இவ்வயதினரின் உளவியலை பதின்ம வயதுகளில் புரிந்து கொள்வது வேறு. பாத்திரங்களின் வயதில் புரிந்து கொள்வதென்பது வேறு :-)

கதை இதுதான். அனந்தசாமி என்னும் சன்யாசி, சென்னையில் வாழும் மக்களுக்கு வர்க்க, சமூக வேறுபாடுகளற்ற நிலையில் நாட்டு வைத்தியம் செய்பவர். பந்தங்களைத் தன் இளவயதில் துறந்தவருக்குப் பந்தங்கள் அவரிடம் வைத்தியம் பார்க்கும் சென்னைவாசிகள்தாம். நாவல் அனந்தசாமியின் தாயாரின் மரணத்துடன் ஆரம்பமாகின்றது. அவருக்குச் சகோதர, சகோதரிகள் நல்ல நிலையில் இருந்தாலும், யாருமே வயதான தாயாரைத் தம்முடன் வைத்துப்பார்க்கத்தயாரில்லை. அனந்தசாமியே தாயாரைத்தன்னுடன் கூட்டி வந்து பராமரிக்கின்றார். இந்நிலையில்தான் தாயாரும் இறந்து விடுகின்றார். இவரிடம் வைத்தியம் பார்க்கும் செல்வந்தப்பெண்மணியொருத்திதான் நாகம்மாள். அவளுக்கு ஒரு மகள் சந்திரா.  காதல் தோல்வியால் துயரத்துக்குள்ளாகியிருப்பவள் சந்திரா.

சாத்திரியின் 'ஆயுத எழுத்து' - வ.ந.கிரிதரன் -


அண்மையில் சாத்திரியின் 'ஆயுத எழுத்து' வாசித்தேன் அவ்வாசிப்பு பற்றிய என் கருத்துகளே இப்பதிவு. சாத்திரியின் 'ஆயுத எழுத்து' நூலின் முக்கியம் அது கூறும் தகவல்களில்தானுள்ளது.தமிழினியின் அபுனைவான 'கூர்வாளின் நிழலில்' நூலின் ஞாபகம் சாத்திரியின் புனைவான 'ஆயுத எழுத்து' நாவலை வாசிக்கும்போது எழுந்தது. தமிழினியின் அபுனைவு சுயசரிதையாக, தான் சார்ந்திருந்த அமைப்பின் மீதான சுய விமர்சனமென்றால், 'ஆயுத்த எழுத்து' தான் அமைப்பிலிருந்த அனுபவங்களின் அடிப்படையில் தன்அனுபவங்களை, தான் அறிந்த விபரங்களைக்கூறும் புனைவாகும். புனைவென்பதால் இந்நாவல் கூறும் விடயங்கள் சம்பந்தமாக யாரும் கேள்வி எழுப்பினால், 'இது அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட நாவல்' என்று கேள்வி கேட்டு தப்பிப்பதற்கு நிறையவே சாத்தியமுண்டு. தமிழினியின் 'கூர்வாளின் நிழலில்' ஆவணச்சிறப்பு மிக்கதாக, கவித்துவ மொழியில் ஆங்காங்கே மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக, மானுட நேயம் மிக்கதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக அமைந்திருக்கும் அபுனைவுஎன்றால், சாத்திரியின் 'ஆயுத எழுத்து'ம் தவிர்க்கப்படக்கூடியதல்ல. ஆவணச்சிறப்பு மிக்க புனைவான 'ஆயுத எழுத்து' நாவலில் ஆங்காங்கே அங்கதச்சுவை மிக்கதாக, மானுட உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

அங்கதச்சுவையுடன் ஆரம்பத்தில் 'டெலி' ஜெகன் பற்றிய பகுதி அமைந்திருக்கின்றது. அவ்விதமான அங்கதச்சுவை மிக்கதாகவே முழு நாவலும் அமைந்திருந்தால் 'ஆயுத எழுத்து' அற்புதமான, இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் அமைந்திருக்குமென்பது என் தனிப்பட்ட கருத்து. உண்மையில் அங்கதச்சுவை மிக்கதாக 'டெலி' ஜெகன் பற்றிய பகுது இருப்பதால், நூலினை படித்து முடிந்தும் கூட, நூலில் கூறப்பட்ட முக்கியமான பல தகவல்களையும் விட 'டெலி' ஜெகனின் இயக்க நடவடிக்கைகள் பற்றிய விபரிப்புகளும், அவரது துயரகரமான முடிவும் நெஞ்சில் நிற்கவே செய்கின்றன. அவரது இயக்க நடவடிக்கைகளை ஆசிரியர் அங்கதச்சுவை மிக்கதாக விபரித்திருந்தாலும்,வாசிக்கும் ஒருவருக்கு ஜெகனின் தாய் மண் மீதான பற்றும், அதற்கான விடாப்பிடியான போராட்ட முன்னெடுப்புகளும் நெஞ்சில் படமென விரிகின்றன. அதுவே ஆசிரியரின் எழுத்துச்சிறப்பு. அதனால்தான் கூறுகின்றேன் சாத்திரி அந்த நடையிலேயே முழு நாவலையும் படைத்திருக்கலாமே என்று.
'சாத்திரியின் நாவலின் நாயகனான அவனின் அண்ணனும் 'டெலி' ஜெகனின் இயக்கத்தைச்சேர்ந்தவர். அது பற்றி வரும் பகுதியிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

ஜெயமோகனின் ' கன்னியாகுமரி' - வ.ந.கிரிதரன் -

ஜெயமோகனின் 'கன்னியாகுமரி' நாவலின் கதைச்சுருக்கத்தினைப் பின்வருமாறு கூறலாம்: மிகவும் கேவலமான ஆசாபாசாங்களுடன் கூடிய கதாநாயகன் திரைப்பட இயக்குநர் ரவிகுமார்.எந் நேரமும் காமத்தில் உழன்று கொண்டேயிருக்கும் இவன் மிகவும் ஆழமாகவும் சிந்திப்பவன்.மிகவும் அற்பமாகவும் சிந்திப்பவன்.தன் கண் முன்னால் நான்கு முரடர்களால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்ட காதலி விமலாவைக் கோழையாகக் கைவிட்டவன். அவ்வுறவில் அவளும் ஆனந்தம் அடைந்திருக்க வேண்டுமெனக் கற்பனை செய்பவன். பல வருடங்களிற்குப் பின்னர் கன்னியாகுமரியில் படத் தயாரிப்பிற்கொன்றிற்காக தயாரிப்பாளர், கதாசிரியர், நடிகை பிரவீணாவுடன் தங்கியிருக்கும் இவன், நடிகையுடன் புணர்வதுடன், பெண்களைப் பாலியல் பண்டமாகவே கருதிய,கருதும் தனது மன உளைச்சல்களையெண்ணிப் போராட்டத்தில் சிக்கியிருக்கிறான். தனது பழைய காதலியான , தன்னால் கைவிடப்பட்ட படித்த விமலாவை கன்னியாகுமரியில் சந்திக்கிறான். அவளோ விடுமுறைகளில் படிக்காத ஆண்களாகத் தேர்ந்தெடுத்து ஊர் சுற்றுமொரு பெண்ணாக மாறியிருக்கிறாள். அமெரிக்காவிலிருந்து தனது கிரேக்க ஆண் நண்பனுடன் கன்னியாகுமரிக்கு வருகை தந்திருக்கின்றாள். அவளுடனான சந்திப்பு மீண்டும் இயக்குநர் ரவிகுமாரின் மனப் போராட்டங்களை அதிகரித்து விடுகின்றது.

பல பெண்களுடன் உறவு வைத்திருந்த இவன் திருப்தியடைந்தது சைலஜா என்னுமொரு பெண்ணுடன் தான். தனது மனைவியுடனான உறவிலோ அல்லது நடிகை பிரவீணாவுடனான் உறவிலோ இவனால் சைலஜாவுடன் அடைந்ததைப் போல் திருப்தியினை அடைய முடியவில்லை. தனது முன்னால் காதலியுடன் ஒருநாளாவது 'அவளைப் புணர்ந்து, ஒருமுறை உச்சத்தின் வெறுமையில் எகிறிச் சுழன்றிறங்கச் செய்தால் போதுமெ'ன நினப்பவன் இவன். விமலா தனது படித்த செருக்கினைத் தன்முன்னால் காட்டுவதாக வெதும்புமிவன் அவளை அதற்காக 'தேவடியா நாயே, நான் போடறேண்டி சூப்பர்ஜீன்ஸ். வேஷமா போடறே. வேஷம் போட்டா பயந்துடுவேன்னு நெனைச்சியா? என்னை என்ன கேணையன்னு நினைச்சியா? வேஷம் போடு ஜெயித்திடுவியா?நான் ஜெயிக்கிறேன் உன்னை. உன்னை ஜெயிச்சாத் தான் எனக்கு சினிமா,. என் சினிமா உன் மார்புக்குள்ள இருக்குடி நாயே. சயிண்டிஸ்ட்டு. ...த்தூ..அமெரிக்காக்காரிது..உன்னைப் பிளந்து என் சினிமாவ வெளியே எடுக்கிறேண்டி..பாம்ப பிதுக்கி நாகமணிய எடுக்கிறேண்டி..' எனப் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட நடிகை பிரவீணவிடம் புலம்புவன். அதே சமயம் நடிகை பிரவீணவையும் ' சீ விளக்கப் போடுடி தேவடியா நாயே. என் எச்சிலத் தின்னுட்டு எங்கிட்டே படுக்கிற நாயி. நீ என்ன கேக்காம விளக்க அணைக்கிறியா? விளக்க போடுறீ..நாயே..' எனத் திட்டுபவன். தனது முன்னால் காதலியின் மேல் இருந்த ஆத்திரத்தின் காரணமாக அவளைப் பாலுறவிற்குட்படுத்திய கேடிகளிலொருவனான ஸ்டீபனையே தனது போலிஸ்கார நண்பனொருவனின் உதவியுடன் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விமலாவின் முன்னால் நிறுத்துகின்றான். அவளோ இரு பெண் புத்திரிகளுடன் அல்லாடும் அவனது நிலைக்கு இரக்கப் பட்டு உதவி செய்யவும் முன்வருகின்றாள். இறுதியில் நடிகையும் கதாசிரியருடன் அவனை விட்டு ஓடிப் போய் விடுகின்றாள். காதலியும் அமெரிக்கா சென்று விடுகின்றாள். இவன் தனித்துப் போய் விடுகின்றான். இதுதான் கதைச் சுருக்கம்.

தொடர் நாவல்: குடிவரவாளன் (2 -7) - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்...


ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த இளங்கோ திடீரென விழித்துக் கொண்டான்.. அருகில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில், ஒரே ஒருவனைத் தவிர , மூழ்க்கிக் கிடந்தார்கள். பகல் முழுவதும் கற்பனைகளும், எதிர்காலக் கனவுகளும், சலிப்பும், விரக்தியுமாகக் காலத்தையோட்டியவர்களின் சிந்தைகளை எத்தனையெத்தனை கனவுகளும், கற்பனைகளும் ஆக்கிரமித்துக் கிடக்குமோ? அருகில் தூங்காமல் படுக்கையில் விழித்திருந்தான் ரஞ்சிற்சிங. சில நாட்களுக்கு முன்னர் ஜேர்மனியிலிருந்து வந்திருந்தான். அங்கு அவனுக்குச் சட்டரீதியான குடியுரிமை ஆவணங்களிருந்தன. இங்கு சட்டவிரோதமாக வந்து அகதி அந்தஸ்து கோரியிருந்தான். பிடித்து உள்ளே போட்டு விட்டார்கள். அதன்பின்தான் அவனுக்கு அமெரிக்கரின் அகதிக் கோரிக்கைபற்றிய சட்டதிட்டங்கள் ஓரளவுக்கு விளங்கின.

"நண்பனே. என்ன யோசனை?" என்றான் ஆங்கிலத்தில்.

இளங்கோவின் கேள்வியால் ரஞ்சிற்சிங்கின் சிந்தனை சிறிது கலைந்தது. "உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன். நாளைக்கே வெளியில் போய் விடுவாய்? என் நிலையைப் பார்த்தாயா?. இவர்களுடைய சட்டநுணுக்கங்களை அறியாமல் புறப்பட்டதால் வந்தவினையிது."

"உன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனையென்னவாம்?"

"உனக்குத் தெரிந்ததுதானே. அகதிக்கோரிக்கை பற்றிய வழக்கு முடியும் மட்டும் உள்ளுக்குள்தான் இருக்க வேண்டுமாம். எல்லாம் நாட்டுக்குள் அடியெடுத்த வைக்கமுதல் பிடிபட்டதால் வந்த நிலைதான்."

"உன்னுடைய திட்டமென்ன?"

"யார் உள்ளுக்குள் இருந்து தொலைப்பது. என்னை அனுப்புவதென்றாலும் ஜேர்மனிக்குத்தான் அனுப்புவார்கள். அங்கு திரும்பிப் போவதுதான் சரியான ஒரே வழி. தேவையில்லாமல் பணத்தை முகவர் பேச்சைக்கேட்டுக் கொட்டித் தொலைத்ததுதான் கண்ட பலன். எல்லாம் ஆசையால் வந்த வினை"

சிறுகதை: போரே! நீ போய் விடு! - வ.ந.கிரிதரன் -



-  வீரகேசரி நிறுவனம் ஒருமுறை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவாகக்குறுநாவல் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. எண்பதுகளின் இறுதிப்பகுதியில் 87/88 காலகட்டமென்று  நினைக்கின்றேன். என்னிடம் அது பற்றியுள்ள போட்டோ பிரதியில் திகதி விடுபட்டுப்போயுள்ளதால் அது பற்றி உடனடியாக நிச்சயமாகக்கூற முடியாதுள்ளது. அந்தபோட்டிக்கு அனுப்பப்பட்ட கதையிது. சிறுகதையாகக்கணிக்கப்பட்டு பிரசுரத்திற்குரியதாக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதையிது. நடுவர்களாக சிற்பி சரவணபவன் ,செங்கை ஆழியான் மற்றும் செம்பியன் செல்வன் ஆகியோரிருந்தனர். அக்காலகட்டத்து மனநிலையினைப் பிரதிபலிக்கும் எழுத்தென்பதால் ஒரு பதிவுக்காக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. -

1.

வெளியிலோ இலேசாகத்தூறிக்கொண்டிருந்த மழை பெருக்கத்தொடங்கிவிட்டிருந்தது. புழுதி படர்ந்த செம்மண் சாலைகளிலிருந்து மழைத்தூறல் பட்டதால் செம்பாட்டுமண்ணின் மணம் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. கோவைப்பழங்களைப்போட்டி போட்டு தின்றபடியிருந்த கிளிகள் மழை பெருப்பதைக்கண்டவுடன் நனைந்த இறகுகளை ஒருமுறை சிலிர்த்துவிட்டு , விண்ணில் வட்டமடித்துவிட்டு, உறைவிடங்களை நாடிப்பறக்கத்தொடங்கின. எங்கோ தொலைவில் பயணிகள் பஸ்ஸொன்று  குலுக்கலுடன் இரைந்து செல்லுமோசை காற்றில் மெல்லவந்து காதில் நுழைந்தது.  திடீரென அமைதியாகவிருந்த வானம் ஒருமுறை மின்னிவிட்டுப் பயங்கரமாக அதிர்ந்தது.  மழை பொத்துக்கொண்டு வரப்போகின்றது. மழைக்காலம் தொடங்கி விட்டது. மழை தொடங்கி விட்டாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். வயிரமென நிற்கும் பாலைகள், கருங்காலிகள், முதிரைகள் கூட ஒருவித நெகிழ்வுடன் நெகிழ்ந்து நிற்கையில் , மர அணில்களோ ஒருவித எக்களிப்புடன் மாரியை வரவேற்று, கொப்புகளில் தாவித்திரியும். மணிப்புறாக்கள், சிட்டுகள், குக்குறுபான்கள்,மாம்பழத்திகள், காடைகள், கவுதாரிகள், காட்டுக்கோழிகள், ஆலாக்கள், ஊருலாத்திகள், கொண்டை விரிச்சான்கள், மயில்கள், கொக்குகள்,நாரைகள்.. பறவைகள் யாவுமே புத்துணர்வுடன் மாரியை வரவேற்றுப்பாடித்திரிகையில் ... கட்டுமீறிப்பாய்ந்து பொங்கித்ததும்பும் குளங்கள், விரால் பிடிப்பதற்காக மீனவர்களுடன் போட்டிபோடும் வெங்கணாந்திப்பாம்புகள் உண்ட அசதியில் தவிக்கும் காட்சிகள்.. மரக்கொப்புகளில் வானரங்களுக்குப் போட்டியாகத்தாவிக்குளங்களில் பாயும் சிறுவர்கள்... மாரி என்றாலே வன்னி மண்ணின் பூரிப்பே தனிதான். சொதசொதவென்று சகதியும், இலைகளுமாகக் கிடக்கும் காட்டுப்பிரதேசங்களில் மெல்லப்பதுங்கிப்பாயும் முயல்கள், அசைவற்று நிற்கும் உடும்புகள், கொப்புகளோடு கொப்புகளாக ஆடும் கண்ணாடி விரியன்கள்... இம்மண்ணினழகே தனிதான்.

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று : கட்டடங்களும், தொழில் மயப்படுத்தலும்.

வளர்முக நாடுகளும் குடிமனைப் பிரச்சினைகளும்! - வ.ந.கிரிதரன் -[-பதிவுகள் இணைய இதழின் அக்டோபர் 2008 , இதழ் 106இல் வெளியான இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. இக்கட்டுரை ஏற்கனவே 'தாயகம் ' சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. -  பதிவுகள்] இலங்கை இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது? குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளர்முகநாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன. இத்தகைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மிகுந்த அவதானத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை அதிக அளவு பாவிக்கக்கூடியதாக, அதே சமயம் உருவாகக் கூடிய சேதங்களின் அளவைக் குறைக்கக் கூடியதாக, மேலும் கூடிய அளவு பயனைத் தரக்கூடியதாக, கட்டடம் கட்டுவதற்குரிய கால அளவைக் குறைக்கக் கூடியதாக இத்திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். வீட்டைக் கட்டுவதுடன் மட்டும் பிரச்சினை தீர்ந்து போய்விடுவதில்லை. அவற்றில் வாழப்போகும் மக்களுக்கேற்றபடி வீடுகள் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும்போது அவற்றில் வாழப்போகும் மக்களின் சமூக வாழ்க்கை முறை, அவர்களின் தேவைகள், மற்றும் வீடுகள் அமையவிருக்கின்ற பிரதேசங்களின் காலநிலை, அப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்கள் என்பன பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டே அத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும்.

கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி.... வ.ந.கிரிதரன் -


கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததது. குமரன் புத்தக இல்லம்' பதிப்பகத்தினரால் தமிழகத்தில்; 2009இல் வெளியான நூலது. இதுவரையில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்கள். இரசிகமணி கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் என்று பலர், அவர்களது நூல்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய பொதுவான அறிமுக நூல்களாகத்தான் அமைந்துள்ளன. அவற்றின் முக்கியம் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றீய தகவல்களை வழங்குகின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. ஆனால் கலாநிதி நா.சுப்பிரமணியனின் மேற்படி நூல் அவற்றிலிருந்தும் பெரிதும் வேறுபடுவது நூலாசிரியரின் ஈழத்து நாவல்கள் பற்றிய திறனாய்வில்தான். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய தகவல்களை வழங்கி நல்லதோர் ஆவணமாக விளங்கும் அதே சமயம் ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய நல்லதொரு திறனாய்வு நூலாகவும் இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையில் இந்த நூலின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களிலொன்று: நூலாசிரியரின் இந்த நூலானாது அவர் தனது முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தில் , ஈராண்டுகள் (1970- 1972) நடாத்திய ஆய்வின் விளைவாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். வெறும் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் அவரது கடும் உழைப்பினால் நல்லதொரு திறனாய்வு நூலாகவும் மேற்படி கட்டுரை வளர்ச்சியுற்றிருக்கின்றது.

இந்நூல் 1885ஆம் ஆண்டில் வெளியான அறிஞர் சித்திலெப்பையின் 'அசன்பேயினுடைய கதை' லிருந்து 1977ஆம் ஆண்டுவரை வெளிவந்த ஞானரதனின் 'ஞானபூமி' வரை சுமார் 450 நூல்களை ஆராய்கிறது. இந்நூலின் முதல் பதிப்பு 1978இல் வெளியானது. நான் வாசித்தது திருத்தி, விரிவாக்கப்பட்ட அண்மைய பதிப்பு, குமரன் புத்தக இல்லத்தினால் 2009இல்  வெளியான பதிப்பு. அதில் 1977ற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கிய பின்னிணைப்புகளுமுள்ளன.

கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்..... வ.ந.கிரிதரன் -

'கரமசோவ் சகோதரர்கள்' தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை 'நியூ செஞ்சுரி புக்ஸ்' பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து 'கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.

நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் ஏன் அவர்கள் குறிப்பிடும் படைப்பாளிகளால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.

மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.

வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள்.

ஆஷா பகேயின் 'பூமி'! பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -

மராத்திய எழுத்தாளரான ஆஷா பகேயின் முக்கியமான நாவல்களிலொன்று 'பூமி' பி.ஆர்.ராஜாராமின் மொழிபெயர்ப்பில் தமிழில் 'சாகித்திய அகாதெமி' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆஷா பகேயின் படைப்புகளில் நான் வாசித்த முதலாவது படைப்பு இந்த நாவல்தான். ஏற்கனவே சாகித்திய அகாதெமியினரால் வெளியிட்டப்பட்ட வங்க நாவலான 'நீலகண்டப் பறவையைத்தேடி', 'தகழி சிவசங்கரம்பிளையின்' ஏணிப்படிகள்' மற்றும் 'தோட்டி', சிவராம காரந்தின் 'மண்ணும் மனிதரும்', எஸ்.கே.பொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை', எம்.டி.வாசுதேவன் நாயரின் 'காலம்' போன்ற நாவல்களின் வரிசையில் என்னைக்கவர்ந்த இந்திய நாவல்களிலொன்றாக 'பூமி' நாவலும் அமைந்து விட்டது.

இந்த நாவலின் கதையும் வித்தியாசமானது. மராத்திய டாக்டர் ஒருவருக்கும், தமிழ் நர்ஸ் ஒருவருக்கும் மகளாகப்பிறந்தவளே நாவலின் நாயகி. சிறு வயதிலேயே அவள் தந்தையை இழந்து விடுகின்றாள். தாயாரே அவளைக் கண்ணுங்கருத்துமாக வளர்த்து வருகின்றார். நாயகியின் மாணவப்பருவத்திலேயே தாயாரும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகுகின்றது. தாயின் இறுதிக்காலம் மனதை அதிர வைக்கும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்கியமான பகுதிகளில் அதுவுமொன்று. தாயாரும் இறந்து விடவே தனித்து விடப்படும் சிறுமியான நாயகியை அவளது தந்தையின் மராத்தியச் சகோதரி பம்பாய்க்குத் தன்னுடன் அழைத்துபோகின்றாள்.

நாவல் தமிழ்நாடு, பம்பாய் என இரு நகரங்களில் நடைபோடுகிறது. அத்தையுடன் வாழும் தன் இளம் பருவத்தில் பகுதி நேர வேலையாக மறைந்த பேராசிரியர் ஒருவரின் செல்வந்த மனைவிக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண்ணாகவும் வேலை பார்க்கின்றாள். அச்சமயத்தில் பேராசிரியரின் வீட்டு நூலகத்து நூல்களெல்லாம் அவளது இலக்கியப்பசியைத்தீர்த்திட உதவுகின்றன.

அழியாத கோலங்கள்: சாண்டில்யனின் கடல் புறா, ஓவியர் லதாவின் ஓவியங்களுடன். - வ.ந.கிரிதரன் -

-ஓவியர் லதாவின் ஓவியம்: கடல்புறா அத்தியாயம் ஒன்றில்.-



அண்மையில் இணையத்தில் ஓரத்தநாடு கார்த்திக் என்னும் அன்பரின் வலைப்பதிவில் என் பால்ய காலத்தில் நான் வாசித்த பல வெகுசனப்படைப்புகளை மீண்டும் அவை தொடராக வெளிவந்தபோது வெளியான ஓவியங்களுடன் வாசிக்க முடிந்தது. அக்காலகட்டத்தில் கல்கி, விகடன், குமுதம், கலைமகள், தினமணிக்கதிரி, ராணி , கல்கண்டு என வெளியான வெகுசன இதழ்களில் தொடராக வெளிவந்த படைப்புகள் பலவற்றை நான் சேகரித்து, 'பைண்டு' செய்து வைத்திருந்தேன். அவையெல்லாம் 1983-2009 வரையில் ஈழத்தில் நிலவிய அரசியல் சூழலில் அழிந்து விட்டன. இந்நிலையில் அண்மையில் அன்பர் ஓரத்தநாடு கார்த்திக்கின் தளத்தில் பல படைப்புகளைக்கண்ட போது , அதுவும் வெளியானபோது வெளிவந்த ஓவியங்களுடன் பார்த்தபோது என் சிந்தனைக்குருவி மீண்டும் அந்தக்காலத்துக்கே சிறகடித்துச்சென்று விட்டது. அவ்விதம் வெளியான படைப்புகளில் ஒருபோதுமே சாண்டில்யனின் 'கடல்புறா'வினை என்னால் மறக்க முடியாது.

அழியாத கோலங்கள்: பூங்குழலி - அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? - வ.ந.கிரிதரன் -


எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் புனைவதிலும் வல்லவர்கள். அது மட்டுமல்ல இருவருமே தம் நாவல்களில் வரும் பாத்திரங்களுக்கேற்பக் கவிதைகள் எழுதி, தம் நாவல்களில் இணைப்பதில் வல்லவர்கள். கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் ஓடக்காரப்பெண் பூங்குழலியின் உணர்வுகளை மையமாக வைத்துக் கவிதையொன்று எழுதியிருப்பார். அந்தக் கவிதை ஒரு முறை வாசித்தாலும் வாசிப்பவர் நெஞ்சினை விட்டு அகலாத தன்மை மிக்கது.

'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்னும் அவரது கவிதையானது ஓடக்காரப்பெண் பூங்குழலியின் சோகம் ததும்பிய நிலையினைத்தெரிவிப்பது. பொன்னியின் செல்வன் நாவலில் வரும் அந்தக்கட்டத்தினையும், அந்தக்கவிதை வரிகளையும் என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. ஒரு படைப்பானது இது போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிச்சிறந்து விளங்குகின்றது.

அந்தப்பாடலும், அது பற்றி நாவலில் வரும் கல்கியின் வர்ணனையையும் இங்கு, தற்போது நீங்கள் வாசிக்கலாம். அது கீழே:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்