Monday, July 15, 2024

இது பாட்டுக் கேட்கும் நேரம் : 'அனுபவம் புதுமை'


'காதலிக்க நேரமில்லை' தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை என்றதும் நினைவுக்கு வரும் படங்களில் முதலில் நிற்பது. ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் திரைப்படம். இருவருமே தமிழ்த்திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள். ரவிச்சந்திரன் நான், இதயக்கமலம், காதலிக்க நேரமில்லை  என வெள்ளிவிழாப் படங்களைத் தந்தவர். ஒரு சமயம் குட்டி எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டார்.
 
நடிகர் ரவிச்சந்திரன் சிங்கப்பூரிலிருந்து நடிக்க வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். 'அனுபவம் புதுமை' என்னுமிந்தப்பாடலில் அவருடன் இணைந்து நடித்திருப்பவர் ராஜஶ்ரீ. சிறந்த நர்த்தகி.
இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் கண்ணதாசன். பாடியிருப்பவர்கள் - பி.பி.ஶ்ரீனிவாஸ் & பி.சுசீலா. இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி. 
 
உள்ளத்தை உருக்கும் காதல் கதைகளைத் திரையில் தந்த ஶ்ரீதர் அதற்குப் பிராயச்சித்தமாக அனைவரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்க தந்த முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.
இத்திரைப்படத்தில் வரும் நடிகர் நாகேஷ் , பாலையா நகைச்சுவைக் காட்சிகளை மறக்கவே முடியாது. நாகேஷ் பாலையாவுக்குக் கதை சொல்லும் காட்சியின் தாக்கத்தைச் சந்திரமுகிய்ல் ரஜனி , வடிவேலுக்குக் கதை சொல்வதிலும் காணலாம்.

இது பாட்டு கேட்கும் நேரம் : 'அன்புள்ள மான் விழியே. ஆசையில் ஓர் கடிதம்'


ஏ.வி.எம் தயாரிப்பான 'குழந்தையும் தெய்வமும்' சிறந்த தமிழ்த்திரைப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பேபி பத்மினியின் இரட்டை வேட நடிப்பு. The Parent Trap என்னும் அமெரிக்கத்திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். ஜேர்மன் நாவலான Lisa and Lottie என்னும் நாவலின் திரை வடிவம்தான் ' The Parent Trap'. கிருஷ்ணன்-பஞ்சுவின் (பஞ்சு அருணாசலமென்று தவறாக எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டிய நண்பர் கணேஷ்வரன் வீரகத்திக்கு நன்றி) இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருப்பவர் எழுத்தாளர் ஜாவர் சீதாராமன்.

நண்பர்களுடன் ஒரு சந்திப்பு!


அண்மையில்  நண்பர்கள் ஈஸ்வரமூர்த்தி, குருபரன், யோக வளவன் ஆகியோருடன் டிம் ஹோர்டன் கோப்பிக் கடையொன்றில் சந்தித்து சுமார் மூன்று மணி நேரம் உரையாடினோம். இலக்கியம், சமூக ஊடகம், அரசியல், பாடசாலை அனுபவங்கள் எனத்தொடங்கி தமிழகத்து டீ மாஸ்டர் வரை பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது. ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) , குருபரன் ஆகியோர் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து அறிமுகமான நண்பர்கள். யோக வளவன் எழுத்தாளர்களான வடகோவை வரதராஜன், அமரர் கோமகன் ஆகியோரின் சகோதரர். கனடாவில் அறிமுகமானவர். 
 
ஈஸ்வரமூர்த்தி, குருபரன் ஆகியோர் 84 காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ஈஸ்வரமூர்த்தி தான் பழகிய தமிழர்தம் ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். யோக வளவன் கோமகன் நடத்திய 'நடு' இணைய இதழை மீண்டும் கொண்டு வருவது பற்றிச் சிந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
 
நண்பர்களுடனான சந்திப்புகள் எப்போதும் மகிழ்ச்சியைத் தருவன. இதுவும் அத்தகைய சந்திப்புகளில் ஒன்று.

சிவப்புச் சூரியன்!



அண்மையில் ஒரு மாலை  'ஸ்கார்பரோ டவுன் சென்டர்' சென்று திரும்புகையில் அந்தி வானில் சிவப்புச் சூரியனை அவதானித்தேன். அப்பொழுது இளைய மகளிடம் அதைப்புகைப்படம் எடுக்கச் சொன்னேன்.அப்போது எடுத்த புகைப்படம்.

வ.ந.கிரிதரனின் 'காலவெளி' கண்ணம்மாக் கவிதைகள் (1) - காலவெளிக் கைதிகள்!


காலவெளியை மையமாக வைத்து நான் பல கண்ணம்மாக் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். இவை வெறும் காதல் கவிதைகள் மட்டும் அல்ல. இருப்பு பற்றிய தேடல் கவிதைகளும் கூடத்தான். வாசித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இக்கவிதைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவை. பதிவுகள்..காம் வெளியீடாக (2023) வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் என் கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியவை.


 

கவிதை: காலவெளிக் கைதிகள்! - வ.ந.கிரிதரன் -

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..

Friday, July 12, 2024

கவிதை; எங்கு போனார் என்னவர்? வ.ந.கிரிதரன் -


இங்குள்ள 'எங்கு போனார் என்னவர்?' என்னும் கவிதை எண்பதுகளில் மொன்ரியாலில் இருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. எனது கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
 
காணாமல் போன தன் போராளிக் கணவனை அல்லது காதலனை நினைத்து வாடுமொரு பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை. காணாமல் போனவன் பகைவனுடன் மோதி போர்க்களத்தில் மாய்ந்தானோ அல்லது உட்பகையால், உடல் நலிவால் , இராணுவ முகாமில் மறைந்தானோ என்று விடை தெரியா வினாக்களுடன் துயரில் ஆழ்ந்திருக்கின்றாள் அவள்.
இக்கவிதை ஒரு விதத்தில் அக்காலகட்ட நிகழ்வுகளை, வேதனையினை ஆவணப்படுத்துக்கின்றது என்றும் கூறலாம்.

Thursday, July 11, 2024

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி உரையாற்றியிருந்தால்...


எழுத்தாளர் அ.ந.கந்தசாமி  மனக்கண் நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் அந்நாவலை அவரது நண்பர் எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் இலங்கை வானொலியில் தொடர் நாடகமாக்கி ஒலிபரப்பினார். மனக்கண் நாவல் பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் தொடராக வெளியானது. மனக்கண் நாவல் தொடராக வெளியானபோது அமரர் ஓவியர் மூர்த்தியின் அழகான ஓவியங்களுடன் வெளியாகியது. நாவலின் முடிவில் அ.ந.க எழுதிய முடிவுரை சிறப்பானதோர் ஆய்வுக்கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளிலொன்று. ஓவியர் மனக்கண் நாவலுக்குத் தீட்டிய ஓவியங்கள் சிலவற்றையும், அ.ந.க மனக்கண்  நாவலுக்கு எழுதிய முடிவுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அ.ந.க மேற்படி முடிவுரையில் கூறிய  கருத்துகளின் சில வரிகளையே இங்குள்ள காணொளியில் பேசுகின்றார். அவர் தனது 44ஆவது  வயதில் மறைந்து போனது துர்ப்பாக்கியமானது. அக்காலகட்டத்தில் இன்றுள்ளதுபோல் அலைபேசியே, ஒலி, ஒளிப்பதிவு கருவிகளோ சாதாரணமாகப் பழக்கத்தில் இல்லை. எனவே அவர் பேசுவதைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் இருந்து பேசியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற என் அவாவின் விளைவே இக்காணொளி.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...