* அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - வ.ந.கி
அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்'
இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றில் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' ஒரு மைல் கல். மதம் என்னும் கருத்தியலை அங்கதச் சுவையுடன் சாடும் வேறெந்த நாவலும் இலங்கையில் மேடையேறியதாக நான் அறியவில்லை. அப்படி இருந்தால் , அறிந்தவர்கள் அதனை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.
மதமாற்றம் முதலில் பேராசிரியர் கா.சிவத்தம்பியால் அறுபதுகளில் மேடையேற்றப்பட்டிருந்தாலும் அப்போது அது உரிய வரவேற்பைப் பெற்றதாகத் தெரியவில்லை. பின்னர் 1967இல் கொழும்பில் நாடகவியலாளர் லடீஸ் வீரமணியின் இயக்கத்தில், எழுத்தாளர் காவலூர் ராஜதுரையின் தயாரிப்பில் , ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன் போன்ற பலரின் நடிப்பில் மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நான்கு தடவைகள் அடுத்தடுத்து மேடையேறிச் சாதனை நிலை நாட்டியது.
அப்போது அது பற்றி நாடகாசிரியர் அ.ந.கந்தசாமி செய்தி (2.7.1967) பத்திரிகையில் சுய விமர்சனக் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். அதனையும், நாடகம் பற்றி வெளியான விமர்சனக் குறிப்புகளையும், நாடகம் நூலுருப்பெற்றபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசங்லிங்கன் எழுதிய முன்னுரையினையும் இங்கு நீங்கள் வாசிக்கலாம்.
![]() |
| - அ.ந.கந்தசாமி - |
கொழும்பில் எனது 'மதமாற்றம்' நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.
நல்ல முறையில் அரங்கேற்றுவதன் மூலம், தமிழ் நாடகத்துக்குப் புத்துணர்ச்சியும் புதுமலர்ச்சியும் கொடுக்க முடியும் என்று நம்பியவர்கள் இவர்கள். இலங்கையில் சிங்கள ஆங்கில நாடகங்களுக்குத் தரத்தில் குறைவில்லாத தமிழ் நாடகங்களைத் தயாரித்து அளிக்க வேண்டுமென்று துடித்தவர்கள். ஆகவே இப்போது விமர்சகனின் முன்னுள்ள ஒரே கேள்வி இதில் இவர்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார்கள் என்பதுதான்.
நாடகம் எழுதுவது, ரேடியோவில் விமர்சனம் செய்வது, நாடக இயல் பற்றி நான் ஆராய்வது-பேசுவது ஆகிய யாவற்றிலும் நான் சிறிது காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவை யாவற்றிலும் பார்க்க நான் செய்து வந்த முக்கியமான வேலை நாடகங்களைப் பார்ப்பதாகும். இதில் நான் எவருக்கும் சளைத்தவனல்ல. தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் கலாநிதி சு.வித்தியானந்தனின் 'கர்ணன் போர்' தொடக்கம் லடீஸ் வீரமணியின் 'சலோமியின் சபதம்' வரை அனேகமானவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஆங்கில நாடகங்களில் பெர்னாட்ஷாவின் 'மில்லியனரெஸ்' ('கோடிஸ்வரி') தொடக்கம் ஆர்தர் மில்லரின் 'டெத் ஒவ் ஏ சேல்ஸ்மேன்' ('விற்பனையாளனின் மரணம்') அனேக நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன். சிங்கள நாடகங்களில் தயானந்த குணவர்த்த்னாவின் 'நரிபேனா' தொடக்கம் சுகத பால டி சில்வாவின் 'ஹரிம படு ஹயக் ' வரை பல நாடகங்களை நான் பார்த்திருக்கிறேன்.


.png)
.png)





