![]() |
| அமரர் ஈழநாதன் |
எண்ணிம நூலகமான 'நூலகம்' தளம் மகத்தான வரலாற்றுப் பணியினை ஆற்றி வருகின்றது. இன்று பெரியதொரு நிறுவனமாக வளர்ந்து நிற்கும் நூலகம் நிறுவனத்தின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள இப்பதிவு துணை புரியும். பதிவுகள் இணைய இதழில் வெளியான இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்து கொள்கின்றேன். இப்பதிவுகள் நூலகம் நிறுவனத்தின் உருவாக்கத்துக்குப் பங்களித்தவர்கள் பற்றிய தகவல்களைத் தருவதால் முக்கியமானது. நூலகத்தின் வரலாறு முறையாகப் பதிவு செய்யப்பட இப்பதிவு உதவியாகவிருக்கும். மேலும் அமரர் ஈழநாதனின் ஆரம்பக் காலத்துப் பங்களிப்புகளை மறந்து விட முடியாது. இப்பதிவுகள் அவரது பங்களிப்பையும் எடுத்துக்காட்டும்.
1. பதிவுகள் - மே 2006 இதழ் 77 - நூலகக் குழுவிலோர் கருத்துப் பரிமாறலும், விளக்கமும்! - https://www.geotamil.com/pathivukal/noolagam_forum_discussion.html
2. பதிவுகள் - 15 ஜூலை 2020 - வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் -வரலாற்றுச் சுவடுகள்: 'நமது வரலாற்றை நாங்கள்தாம் ஆவணப்படுத்த வேண்டும்' - பதிவுகள் - - வ.ந.கிரிதரன் -
தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்'அண்மையில் நண்பர் தில்லைநாதன் கோபிநாத் எழுதிய 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலை வாசித்தேன். மேற்படி நூலின் தலைப்பு அவ்விதமிருப்பதால்தான் இப்பதிவை எழுத வேண்டிய தேவையேற்பட்டது. சில காரணங்களால் தவிர்க்கப்பட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி ஆவணப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்பதால்தானிந்த பதிவு. 'பதிவுகள்' இணைய இதழ் நூலகத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே அது பற்றிய செய்திகளை வெளியிட்டு அதன் முயற்சிகளுக்கு ஆதரவு வெளியிட்டு வருகின்றது. உலகளாவியரீதியில் தன் வாசகர்கள் மத்தியில் அது பற்றிய செய்திகளை எடுத்துச்செல்ல உதவி வருகின்றது. தனிப்பட்டரீதியிலும் எனது நூல்கள்,மின்னூல்கள் ,தனிப்பட்ட சேகரங்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளேன். என் நாவலான 'குடிவரவாளன்' நாவலையும் வழங்கியுள்ளேன். ஆனால் அவை தனிப்பட்ட ஒருவரின் பங்களிப்பு என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்றல்ல. இது போல் எழுத்தாளர்கள் பலர் , தனிப்பட்டவர்கள் பலர் தம்மிடமிருந்த நூல்களை நூலகத்திட்டத்துக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் 'பதிவுகள்' என்னும் இணைய இதழ் நூலகத்திட்டம் பற்றிய தகவல்களைப்பிரசுரித்து உலகளாவியரீதியில் அது பற்றிய விபரங்களை எடுத்துச் சென்றிருப்பதால் நூலில் அது பற்றிக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது.
நூலின் தலைப்பு 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்றிருப்பதால் , திண்ணை போன்ற இணைய இதழ்களெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதால் ,'பதிவுகள்' பற்றியும் ஒரு வரியாவது குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றியது. கோபி வேண்டுமென்றே தவிர்த்திருக்க மாட்டார். சில வேளை ஆரம்பகாலப் பதிவுகளில் வெளியான தகவல்கள் அவருக்கு முக்கியத்துவமில்லாமலிருந்திருக்கலாம் அல்லது ஞாபகத்திலில்லாமலிருந்திருக்கலாம். 'நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்' என்னும் நூலின் தலைப்புக்கேற்ப 'பதிவுகள்' இணைய இதழும் ஆவணப்படுத்தப்பட வேண்டிய தன்னைப்பற்றிய தகவலைத் தான் தான் ஆவணப்படுத்த வேண்டுமென்ற நிலையில் இப்பதிவை முன் வைக்கின்றது. அதற்கொப்ப 2000ஆம் ஆண்டிலிருந்து பதிவுகள் இணைய இதழில் நூலகம் பற்றி வெளியான தகவல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம்.
நூலகம் தளத்தின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. நூலகம் தளம் இல்லாவிடின் பல இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்கள் பலவற்றை என்னால் பெறவே முடியாது போயிருக்கும். இதன் வளர்ச்சிக்காக உழைத்த , உழைக்கும் அனைவரையும் வாழ்த்துகின்றேன்.


