Sunday, March 18, 2018

'பதிவுகள்' இணைய இதழில் வெளியான நூல் மதிப்புரைகள் சில! - வ.ந.கிரிதரன் -

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப காலகட்டத்தில் நூல் மதிப்பரைகளை வெளியிட்டு வந்தது. நூல் மதிஉப்புரைக்காக தமது படைப்புகளின் இரு பிரதிகளை அனுப்பி வைககவும் என்ற எமது வேண்டுகோளினையேற்று, எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைத்தார்கள். நூல் மதிப்புரை பகுதிக்காக அவ்வப்போது பல்வேறு புனைபெயர்களில் மதிப்புரைகள் எழுதுவதுண்டு. அவ்விதம் அவதானி, திருமூலம், மார்க்சியன், ஊர்க்குருவி, வானதி  போன்ற புனைபெயர்களில் எழுதிய நூல் மதிப்புரைககளில் சில  மீள்பிரசுரமாகின்றன ஒரு பதிவுக்காக.

பின்வரும் நூல்களுக்கான மதிப்புரைகளை இங்கு நீங்கள் வாசிக்கலாம்: கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள் , ஆழியாளின் 'உரத்துப் பேச..., ' நடேசனின் 'வாழும் சுவடுகள்', பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல்!,  அசை அரையாண்டிதழ், ஊடறு: பெண்படைப்பாளிகளின் தொகுப்பு, திலகபாமாவின் கவிதைகள்!, பா.அ. ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்'! , ஆசி. கந்தராஜாவின் 'பாவனை பேசலன்றி..', செ.க.வின் 'சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை', நடேசனின் வண்ணத்திக்குளம்: சில குறிப்புகள்! & காஞ்சனா தாமோதரனின் 'இக்கரையில்..'

மதிப்புரைகளுக்காக நூல்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதால் அப்பகுதியினை நிறுத்தி வைத்தோம். அதற்குப்பதிலாகத் தற்பொழுது பதிவுகள் இணைய இதழுக்கு நூல்கள் பற்றி அனுப்பப்படும் மதிப்புரைகளை 'நூல் அறிமுகம்' என்னும் பகுதியில் வெளியிட்டு வருகின்றோம். ஏற்கனவே 'பதிவுகளி'ல் வெளியான மதிப்புரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு பதிவுக்காக அவ்வப்போது மீள்பிரசுரமாகும்.


1. . கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்'
வெளியீடு: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு -06, இலங்கை. தொலைபேசி: 826336. விலை: 150 ரூபா | ஆசிரியரின் மின்னஞ்சல்: kssivan.1@juno.com. - பதிவுகள், ஜூன் 2003 இதழ் 42 -

தமிழில் திரைப்படங்கள் பற்றி அண்மைக் காலமாகத் தான் மிகவும் விரிவாக யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதி வருகின்றார்களெனெ நினைத்தேன். ஆனால் அண்மையில் கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்' நூலினை வாசித்த பொழுதுதான் புரிகின்றது சிவகுமாரன் அறுபதுகளிலிருந்தே திரைப்படக் கலை பற்றி அவ்வப்போது தமிழில் எழுதி வந்துள்ள விடயம். இதுவரை காலமும் இலக்கியப் படைப்புகள் பற்றியே இவர் அவ்வப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருவதாகக் கருதியிருந்த எனக்கு 'அசையும் படிமங்கள்' வியப்பினையே தந்தது.

கொழும்பிலிருந்து மீரா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'அசையும் படிமங்கள்' நூலில் திரைப்படக் கலை மற்றுந் திரைப்படத் திறனாய்வு பற்றிய கட்டுரைகள் காணப்படுகின்றன. மிகவும் எளிமையான தமிழில் சாதாரண ஒரு வாசகருக்குப் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள ஆரம்பக் கட்டுரைகளாக இவற்றைக் கொள்ளலாம். மிகவும் நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளல்ல இவை. ஆனால் திரைப்படக் கலை, திரைப்படத் திறனாய்வு பற்றி அறிய மற்றும் புரிய விரும்புவோருக்கு வழிகாட்டக் கூடியதொரு முதனூலாக 'அசையும் படிமங்கள்' நூலினக் கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை.

அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' - வ.ந.கிரிதரன் -

நூலகம் தளத்தினை மேய்ந்து கொண்டிருந்தபொழுது 'மல்லிகை' சஞ்சிகையின் 15.10.67 இதழ் ஆண்டு மலராக வெளிவந்திருந்தது கண்டேன். உள்ளடக்கத்தினைப் பார்த்தபொழுது அதில் எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் (கட்டுரைகள், கவிதைகள் என) வெளிவந்திருந்ததை அறிய முடிந்தது. மேலும் மலரின் சிறப்பினை அதில் வெளிவந்திருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வில்லூன்றி மயானம்' என்னும் கட்டுரை அதிகரித்துள்ளது என்றே கூறுவேன். அ.ந.க மறைந்தது 14.02.1968இல். ஆனால் இக்கட்டுரை அதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரை. அந்த வகையில் அவரது கடைசிக்காலத்தில் எழுதப்பட்ட படைப்புகளிலொன்றாக நான் இதனைக் கருதுகின்றேன். அ.ந.க.வின் இக்கட்டுரையை இப்பொழுதுதான் முதன் முறையாக அறிகின்றேன். அவரது படைப்புகளைச் சேகரித்துக்கொண்டிருக்கும் எனக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி. நூலகத்துக்கும், மல்லிகைக்கும் நன்றி நன்றி.

1944இல் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட 'வில்லூன்றி மயானப்படுகொலை' பற்றி 1944 நவம்பர் 9ந் தேதி 'தினகரன்' தினசரியில் அ.ந.க வில்லூன்றி மயானம் என்றொரு கவிதையை எழுதியிருக்கின்றார். அப்பொழுது அ.ந.க.வுக்கு வயது இருபது. அதன் பின்னர் மல்லிகையில் இக்கட்டுரையை எழுதும்போது அவருக்கு வயது 43.

அ.ந.க.வின் இக்கட்டுரை 'வில்லூன்றி மயானம்' மிகவும் முக்கியமானது பல விடயங்களில். அவரது அந்திமக் காலத்தில் வெளியான அவரது படைப்புகளில் ஒன்று என்ற வகையில், வில்லூன்றி மயானப் படுகொலையைப்பற்றிக் கவிதை எழுதிய அவர் அப்படுகொலை பற்றி எழுதிய கட்டுரை என்னும் வகையில் .. இவ்விதம் முக்கியம் வாய்ந்த கட்டுரை இது. இக்கட்டுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார்: 

'தேன்மொழி'க் கவிதைகள் - 1 - வ.ந.கிரிதரன் -

 நூலகம்' தளம் பல்வேறு வழிகளிலும் உதவி வருகின்றது. மிகவும் பயனுள்ள அரியதோர் ஆவணத்தளமாக 'நூலகம்' உருமாறி வந்திருக்கின்றது. அத்துடன் 'தேன்மொழி' சஞ்சிகையின் 'நூலகத்தில்' இதுவரை வலையேற்றப்படாத பிரதிகளையும் தந்துதவிய 'நூலகம்' கோபி அவர்களுக்கு நன்றி. 'தேன்மொழிக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைத்தொடரினை எழுதுவதற்கு அவரது இந்த உதவியே முக்கிய காரணம்.

தேன்மொழி சஞ்சிகை கவிதைக்காக வெளிவந்த முதலாவது சஞ்சிகை. மறுமலர்ச்சிக்காலப்படைப்பாளிகளே இச்சஞ்சிகைக்கும் தோற்றுவாய். மறுமலர்ச்சி சஞ்சிகையினை வெளியிட்ட எழுத்தாளர் தி.ச.வரதராஜனே தேன்மொழியின் நிர்வாக ஆசிரியராக விளங்கியவர். இணையாசிரியராக இருந்தவர் கவிஞர் மஹாகவி. 1955இல் நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதழ்கள் வெளியாகியுள்ளனவா என்பது ஆய்வுக்குரிய விடயம். அத்துடன் 'நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நினைவுச்சின்னம்' என்னும் தாரக மந்திரத்துடன் எழுத்தாளர் தி.ச.வரதராஜனை நிர்வாக ஆசிரியராகவும், கவிஞர் மஹாகவியை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளியான சஞ்சிகை. சஞ்சிகையின் அட்டைப்படம் ஒவ்வொன்றும்  'தங்கத்தாத்தா' சோமசுந்தரப்புலவரின் கவிதை வரிகளைத் தாங்கி வெளியாகியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. சஞ்சிகையின் கடைசிப்பக்கத்தில் தேன்மொழியில் எழுதும் படைப்பாளிகளில் ஒருவரைப்பற்றியச் சுருக்கமான குறிப்பும் காணப்படுகின்றது. மேலதிக விபரங்கள்: அச்சு - ஆனந்தா அச்சகம். தேன்மொழி அலுவலகம்: 226 , காங்கேசன் துறை வீதி, யாழ்ப்பாணம், இலங்கை.  ஆண்டுக்கட்டணம் - ரூ. 3.00. தனிப்பிரதி 23 சதம்.

மறுமலர்ச்சி இதழ் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தில் கால்பதித்த தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்கள் முதலாவது கவிதைகளுக்காக மட்டும் வெளிவந்த முதலாவது சஞ்சிகையான தேன்மொழியினையும்  வெளியிட்டவர் என்னும் பெருமைக்குள்ளாகின்றார்.

கே.எஸ்.சுதாகரின் 'சேர்ப்பிறைஸ் விசிட்' - வ.ந.கிரிதரன் -



புகலிட எழுத்தாளர்களில் நகைச்சுவை உணர்வு ததும்ப முக்கியமான பிரச்சினைகளைப்பற்றி எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர். வாசிக்கும்போது அவ்வப்போது இதழ்க்கோடியில் புன்னகையை வரவழைக்கும் எழுத்து அவருடையது. நான் வாசிக்கும்போது அனுபவித்து வாசிப்பது வழக்கம். அவருடைய சிறுகதைகளிலொன்று புகலிடத்தமிழ்க் குடும்பமொன்றின் உளவியலை நகைச்சுவை உணர்வு ததும்பச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றது. வாசிக்கும்போதும், வாசித்து முடித்த பின்பும் சிறிது நேரம் என்னால் எழுந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

கதை இதுதான். 'சேர்ப்பிறைஸ் விசிட்' என்பதுதான் கதையின் தலைப்பு. நீண்ட நாட்களாக வருகை தராமலிருந்த இராசலிங்கம்/சுலோசனா தம்பதியினர் திடீரென் சிறீதரன்/பவானி தம்பதியினர் இல்லத்துக்குச் 'சேர்ப்பிறைஸ் விசிட்' அடிக்கின்றனர் :-)

"கனகாலமா வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு" என்று 'சும்மா'வைச் சற்றே அழுத்திச்சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து , "அப்பிடியெண்டில்லை. இனி ஈஸ்வரன் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப்பதினைந்து டொலர் பெற்றோலுமில்லே செல்வாகுது" காசைக் காரணம் காட்டினாள் சுலோசனா.

"நாங்கள் நினைச்சோம்.. உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு" உதட்டுக்குள் சிரித்தாள் பவானி."

இவ்விதம் கதை செல்கின்றது. 'உதட்டுக்குள்' சிரித்தாள் என்னும் சொற்பதம் அழகாக பவானியின் உளவியற் போக்கினை வெளிப்படுத்துகின்றது.

வரதபாக்கியானின் (புதுவை இரத்தினதுரை) கவிதை ஒன்று: 'புலிகள் ஆவோம்' - வ.ந.கிரிதரன் -

ஈழத்துக் கவிஞர்களில் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது கவிதைகள் ஈட்டி போல் நெஞ்சினைக் குற்றுபவை. உணர்ச்சிமிக்க உரிமைக் குரலாக ஒலிப்பவை. அவரது எழுத்துப் பங்களிப்புக்கான காலகட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். வர்க்க விடுதலைப்போராட்டக் காலகட்டம். தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டம். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்துகளால், மார்க்சியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டுக் கவிதைகள் படைத்தவர் புதுவை. பின்னர் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். முள்ளிவாய்க்காலில் சரணடைந்து காணாமல் போனவர்களில் அவருமொருவர். அவரது அரசியற் கருத்துகளுக்கு அப்பால் ஈழத்துத தமிழ்க் கவிதையுலகில் தடம் பதித்த முக்கியமான கவிஞர்களில் அவருமொருவர். முக்கியமான கவிஞர் ஒருவர் சரணடைந்திருக்கின்றார். அவரைப்பற்றிய எவ்விதத்தகவல்களும் இதுவரை இல்லை. இலங்கை அரசாங்கம் இறுதியில் காணாமல் போனவர்கள் பற்றி வாய் திறப்பதற்கு இறுதியில் புதுவை இரத்தினதுரையின் காணாமல் போதல் வழி வகுக்கலாம். புதுவை இரத்தினதுரையை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகம் அவ்வளவு இலேசாக மறந்து விடப்போவதில்லை. தேசிய அரசியலுக்கு அப்பால் ஈழத்தின் வர்க்க விடுதலைக்காகப்போர்க்குரலாக ஒலித்த அவரது குரலை ஈழத்து முற்போக்கு இலக்கியம் அவ்வளவு இலேசில் மறந்து விடாது.

எழுபதுகளில் இலங்கையிலிருந்து வெளிவந்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் வெளியிட்ட 'குமரன்' இதழில் நிறைய கவிதைகளை வரதபாக்கியான் என்னும் பெயரில் எழுதியிருக்கின்றார். அவரது அக்காலகட்டத்துக் கவிதைகளினூடாக அவரை அணுகுவது அவரது கவிதைகள் பற்றிய திறனாய்வுக்கு , அவரது போர்ச்சுவாலைகளாகத் திகழ்ந்த கவிதைகளை அறிந்து கொள்வதற்குரிய நல்லதோர் அணுகுமுறை.

நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகள்: எழுத்தாளர் நந்தினி சேவியர் - வ.ந.கிரிதரன் -

அண்மைக்காலமாக எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூற் பதிவுகளை ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். அதிகமான இவரது முகநூல் பதிவுகள் இவரது கலை, இலக்கியம் மற்றும் சமூக நீதி, பொதுவுடமை சமுதாய அமைப்பு ஆகியவை பற்றிய, ஆளுமைகள் பற்றிய விமர்சனக் குறுங்குறிப்புகளாக அமைந்திருக்கின்றன. இலங்கை அரசின் சாகித்திய விருது, கொடகே அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளிலொருவர்.

இவரது படைப்புகள் பலவற்றை நான் இன்னும் விரிவாக வாசிக்கவில்லை. ஆயினும் அவற்றை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன இவரது முகநூற் குறிப்புகள். இவரது முகநூற் குறிப்புகள் மூலம் நான் இவரைப்பற்றி அறிந்து கொண்ட இவரது ஆளுமை பற்றிய பிரதான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. மானுட சமூக விடுதலைக்காக இவர் வரித்துக்கொண்ட கோட்பாடு மாரக்சியக் கோட்பாடு. இலங்கையில் சீனசார்புக் கம்யூனிச அமைப்பினூடு, மானுட சமூக, பொருளாதார விடுதலைக்காக, கட்சியில் இணைந்து செயற்பட்ட இலக்கியப்போராளிகளிலொருவர் இவர். இவ்விடயத்தில் , தான் பின்பற்றும் கோட்பாடு விடயத்தில் இவர் மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீண்டாமை போன்ற சமூகப்பிரச்சினைகளுக்கு மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட கட்சியொன்றினூடு இணைந்து போராடுவதே ஒரே வழி என்பதில், வர்க்கப்போராட்டமே ஒரே வழி என்பதில் உறுதியாக இருக்கின்றார். இந்த அடிப்படையில் இவர் அரசியல் ஸ்தாபனங்களைப்பற்றி, ஆளுமைகளைப்பற்றித் தன் விமர்சனங்களை முன் வைக்கின்றார்.

எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவின் தாயகம் (கனடா) புகலிடத்தமிழர்களின் முக்கியமான பத்திரிகை / சஞ்சிகைகளிலொன்று. - வ.ந.கிரிதரன்


புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இந்தப்பத்திரிகை /சஞ்சிகையினை நடத்தியவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ். விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளை விமர்சித்து எழுதியவர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் ஆயுதபோராட்டம் முடிந்து, மெளனித்ததன் பின்பு ஆக்ரோஷமாக விமர்சித்து வருவதைப்போல் அல்லாமல் , விடுதலைப்புலிகளின் காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதியவர். அதேசமயம் தான் ஆசிரியராக, பதிப்பாளராகவிருந்து வெளியிட்ட தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் அனைத்து அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் இடம் கொடுத்தார். அவர்கள்தம் படைப்புகளைப் பிரசுரித்தார். தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது.

தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா!' தொகுப்பினை அச்சிட்ட அச்சியந்திரமும் அதுவே. அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) )சுமார் ஐந்து வருடங்கள் வரையில் 'தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...