'Veryrare Book' என்னும் முகநூலைத் தற்செயலாகப் பார்த்தேன். உண்மையிலேயே அரிய நூல்கள், வெகுசன இதழ்த்தொடர்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய பக்கமிது. இதற்கான இணைய இணைப்பு - https://www.facebook.com/veryrare.book
என் பால்ய பருவத்தில் , நான் வாசிக்கத்தொடங்கியிருந்த சமயம் , கலைமகள் இதழில் ஒரு தொடர்கதை வெளியானது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கல்பனா. அக்காலகட்டத்தில் கல்கியில் ஓவியர் கல்பனா என்பவர் ஓவியங்கள் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் இவர் கதைகள் எழுதுபவர். இவர் பெண்ணா அல்லது பெண்ணின் பெயரில் எழுதிய ஆணா? தெரியவில்லை. இவரைப்பற்றிய தகவல்களும் இணையுத்தில் கிடைக்கவில்லை.
ஆனால், இவரது 'யுகசந்தி' தொடர்கதை மட்டும் நினைவிலுள்ளது. அத்தொடரை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் முதலாவது அத்தியாயம் ஆற்றங்கரைக் காட்சியுடன் அல்லது வெள்ளப்பெருகுடன் ஆரம்பமானதாக நினைவிலுள்ளது. அத்தொடரைப் பின்னர் வாசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன், ஆனால் வாசிக்கவில்லை.
'யுகசந்தி' தொடர்கதையாக வெளியானபோது , அத்தியாயங்களைச் சேகரித்து, தொகுத்து , நூலாக்கி வைத்திருதேன். அவ்விதம் பல தொடர்கதைகளை நூல்களாக்கி வைத்திருந்தேன். அவையெல்லாவற்றையும் இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் அழித்து விட்டது.
அன்றிலிருந்து கல்பனாவின் 'யுகசந்தி' தொடர்கதையை வாசிப்பதென்பது நிறைவேறாத கனவாகவே ஆகிவிட்டது. ஆனால், தற்போது அக்கனவு நனவாகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது. இப்பொழுது வாசிக்கும்போது அப்பருவத்தில் இருந்த உணர்வுகள் இருக்கப்போவதில்லை. வாசிப்பும் பல படிகளைக் கடந்து வந்து விட்டது. ஆனால் இன்னும் அந்த நிறைவேறாத ஆசை மனத்தின் ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது.
அண்மையில் இணையத்தில் பழைய நூல்களைத் தேடிக்கொண்டிருக்கையில் யுகசந்தி தொடர்கதையின் பக்கங்கள் சிலவற்றைக் கண்டு பிரமித்தேன். மகிழ்ந்தேன். 'Veryrare Book' முகநூற் பக்கத்தில் அவை பகிரப்பட்டிருந்தன.
அப்பக்கங்களைக் கண்டதும் , அவை காலக்கப்பலாகி , என்னை அப்பருவத்துக்கே ஏற்றிச் சென்று விட்டன. எழுத்தாளர் கல்பனா பற்றிய மேலதிகத் தகவல்கள் தெரிந்தவர்கள் அவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment