'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Thursday, July 10, 2025
அது ஒரு கனாக்காலம்!
இனி ஒருபோதுமே அக்காலம் திரும்பப் போவதில்லை. மானுடத் தொழில் நுட்ப வளர்ச்சி மானுட வாழ்க்கைக்குப் பல வசதிகளை உருவாக்கி விட்டது. புதிய பல பொழுது போக்குகளையும் உருவாக்கி விட்டது. இத்தொழில்நுட்பம் உருவாக்கிய வசதிகள் தொடர்ச்சியாக மானுடரைக் கூட்டு வாழ்க்கையிலிருந்து, சமூக வாழ்க்கையிலிருந்து மேலும் மேலும் பிரித்துக்கொண்டே செல்கின்றன. ஆதியில் மானுடர் குழுக்களாக, தாய் வழிச் சமுதாயங்களாக வாழ்ந்தார்கள். குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தாலும், குழுக்களுக்கிடையில் ஒருவிதப் பொதுவுடமை நிலவியது. சமூக வாழ்க்கை இருந்தது.
பின்னர் தொழில் நுட்ப வளர்ச்சி படிப்படியாக அம்மானுடரின் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே வந்தது. ஆற்றோர நாகரிகம், விவசாயம், பண்டமாற்றுப் பொருளாதாரம் ,தனியுடமை, ஒருதார மணமுறை, குடும்பம் என அது மேலும் பரிணாமம் அடைந்து வந்தது. நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், முதலாளித்துவ ஏகாதிபத்தியம் எனப் பிரிந்திருந்த உலகம் மேலும் மேலும் மாற்றங்களச் சந்தித்து வந்தது..இன்று, தொழில் நுட்பத்தின் குறுகிய காலத்து வளர்ச்சி, குறிப்பாகக் கணனித் தொழில் நுட்பம், இணையத்தின் வருகை, திறமைமிகு அலைபேசிகளின் வருகை, சமூக ஊடங்களின் வருகை என நம் காலத்து உலகம் வெகுவாக மாறி விட்டது.
எம் பெற்றோரின் இளமைப்பருவத்தில் முக்கிய பொழுதுபோக்குகள் நாடகம், சினிமா, மேடைக்கச்சேரிகள் , வெகுசன சஞ்சிகைகள், அவற்றில் வெளியாகும் தொடர்கதைகள்.. எம் காலத்தில் முக்கிய பொழுதுபோக்குகள் வானொலி, சினிமா, வெகுசன சஞ்சிகைகள், அவற்றில் வெளியாகும் தொடர்கதைகள் & சித்திரக் கதைகள். நாடகங்களின் தாக்கம் வெகுவாகக் குறைந்து போனது. அப்பொழுது சமூக வாழ்க்கையென்பது முக்கியமான மானுட வாழ்வின் அம்சம். வீடுகளின் திண்ணைகள் அதற்கான முக்கிய அடையாளங்களில் ஒன்று. ஆணாதிக்கச் சிந்தனை மிக்க சமுதாயமாகவிருந்தாலும், அதுவும் காலப்போக்கில் மேனாட்டுச் சிந்தனைகள், மேனாட்டார் வருகை காரணமாக பெரிதும் மாறியதெனலாம். வீட்டினுள் முடங்கிக் கிடந்த பெண்கள் வெளியில் இறங்கும் நிலை உருவானது.
எம் இளமைக்காலத்தில் அச்சமற்று இரவுகளிலும் நடந்து செல்லலாம். எம் பால்யப் பருவத்தில் அம்மா ஆசிரியையாக வவுனியா மகா வித்தியாலயத்தில் படிப்பித்துக்கொண்டிருந்தார். பல தடவைகள் முக்கியனான சரஸ்வதி பூசை, களியாட்ட நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளின்போது இரவு பாடசாலையிலிருந்து வீடு வரை அம்மாவுடன் தனியாக நடந்து வருவோம். ஊரே அமைதியில் , இருளில் மூழ்கிக் கிடக்கும், ஆங்காங்கே மாடுகள் அசை போட்டபடி இருக்கும் காட்சிகளைப் பார்த்தவாறு வீடு செல்வோம். அப்பொழுது அம்மாவுக்கு முப்பத்தைந்து முப்பத்தாறு வயதுதானிருக்கும். பாதுகாப்பாக வீடு செல்லும் நிலை நிலவியது. ஆனால் இன்று?
எட்டு வயதிலேயே சினிமா ஆதிக்கம் குழந்தைகளாகிய எம்மை ஆட்கொண்டு விட்டது. நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கம் எம்மை ஆட்கொண்டு விட்டது. அப்பொழுதெல்லாம் வருடா வருடம் வரும் முக்கியமான திரைப்படங்களையே இலங்கையில் திரையிடுவார்கள். அவற்றை இலகுவாக எண்ணி விடலாம். எம் அபிமான நடிகர்களின் படங்களுடன், ஏனைய முக்கியமான நடிகர்களின் படங்களையும் விரும்பிப் பார்ப்போம். ஆனால் இன்று? எண்ணவே முடியாத அளவில் , வாராவாரம் வெளியாகும் திரைப்படங்களின் பெயர்களும் தெரியாது. நடிகர்களின் பெயர்களும் தெரியாது. ஒரு காலத்தில் பத்திரிகை, சஞ்சி8கைகளில் ஆதிக்கம் செலுத்திய தொடர்கதைகளின் காலம் போய், தொலைக்காட்சிச் சீரியல்களின் ஆதிக்கம் நிலவும் காலத்தில் வாழ்கின்றோம்.
மக்களுக்கிடையிலான சமூக வாழ்க்கையென்பது அருகி விட்டது. முகநூலில் வாழ்த்தும், இரங்கலும் தெரிவிக்கும் தன்மை மிக்கதாக மாறிவிட்டது. இன்று ஒருவரால் , கணனியின் முன், அலைபேசியின் துணையுடன் நாள் அல்ல பல நாட்களையும் கழிக்க முடியும், நேரடியாக மனிதர்களை, நண்பர்களைச் சந்திக்கும் நிலையில்லை. எல்லாமே சைபர் உலகத்து உறவுகளாகி விட்டன. திருமணம் இல்லாமலேயே குழந்தைகளைப் பெறும் நிலை உருவாகி விட்டது.
தொழில் நுட்பம் மாறிவிட்டது. மானுட வாழ்க்கையும் மாறி விட்டது. இந்நிலையிலிருந்து பார்க்கும்போது எமக்கு அக்காலம் ஒரு கனாக்காலம்தான். ஒருபோதுமே திரும்பி வரவே முடியாத கனாக்காலம்தான். சைபர் உலகில் , நினைவுகளில் வாழ்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்...

பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment