யாழ்ப்பாண இராச்சியத்தின் காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை கொழும்புத்துறை , பண்ணைத்துறை ஆகிய துறைமுகங்கள். பண்ணைத்துறை என்பதற்கான பெயருக்கான காரணம் எதுவாக இருக்கும்? அண்மையில் வெளியான கட்டடக்கலைஞர் மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' நூல் பற்றிய விமர்சனத்தில் கலாநிதி சிவ தியாகராஜா அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
".... யாழ்ப்பாணக் கோட்டை இருக்கும் பண்ணை என்ற இடப்பெயர் அவ்விடத்தில் முற்காலத்திலிருந்த ஓர் உலகப்பண்ணையின் ( World Market ) பெயரின் எச்சமாகவே தோன்றுகின்றது."
பண்ணை என்பது விவசாயம், பல்வகை மிருக வளர்ப்பு (கோழிப்பண்ணை, பாற் பண்ணை என) ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைக் குறிக்கப்பயன்படும் சொல். ஆங்கிலத்தில் Farm என்பார்கள். கலாநிதி சிவ தியாகராஜா கூறுவது போல் இவ்விதமான ஒரு பகுதி துறைமுகங்களுக்கு அருகில் இருப்பதில்லை. துறைமுகங்களுக்கு அருகில் பெரும் வர்த்தகச் சந்தைகள் இருப்பதுதான் வழமை.
இங்கு தனது நூலுக்கான விமர்சனத்தில் உலகப்பண்ணை என்று குறிப்பிடுகின்றார்? World Market என்று குறிப்பிடுகின்றார். அதாவது உலகச்சந்தை இருந்தது என்னும் அர்த்தத்தில் பயன்படுத்துகின்றார். பண்ணையைச் சந்தை என்னும் அர்த்தத்தில் பாவிக்கின்றார்.
ஆனால் பண்ணை என்னும் சொல்லைச் சந்தை என்னும் நேரடி அர்த்தத்தில் அல்லது வழக்கில் பாவிப்பதில்லை. சில சமயங்களில் அதனை ஒருவிதக் குறியீடாக வர்த்தகத்தில் பாவிப்பதுண்டு. உதாரணத்துக்கு யாழ்நகரில் அறுபதுகளில், எழுபதுகளில் புகழ்பெற்று விளங்கிய புத்தகக்கடையான 'தமிழ்ப்பண்ணை' என்பதைக் குறிப்பிடலாம். இங்கும் புத்தகங்களின் தோட்டம் என்னும் அர்த்தத்திலேயே பண்ணை என்னும் சொல் பாவிக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். 'தமிழ் இலக்கியத் தோட்டம்' என்று இன்றும் பாவிக்கின்றோம் அல்லவா. அதுபோன்றதோர் அர்த்தத்தில்தான் தமிழ்ப்பண்ணை என்னும் பெயர் அந்தப்புத்தகக் கடைக்குப் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
1918ஆம் ஆண்டு வெளியான தமிழறிஞர் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதியில் பண்ணை என்னும் சொல்லுக்குரிய அர்த்தங்களாகப்பின்வரும் சொற்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன:
"ஓரு கீரை, குளம், சமுசாரம், நீர்நிலை, படகு, மனை, மகளிர் கூட்டம், மகளிர் விளையாட்டு, மரக்கலம், மருதநிலம், வயல், விலங்கின் படுக்கை, விலங்கின மேற் சேணம், தோட்டம்'
இவற்றில் பண்ணை நீருடன் சம்பந்தப்பட்டதாக உள்ள சொற்களாகக் குளம், நீர்நிலை, படகு, மரக்கலம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
எட்டுத்தொகையில் ஒன்றான ஐங்குறுநூறில் பண்ணை என்னும் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது;
விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே.
இது பற்றி டாக்டர் உ.வே.சாமிதையர் பின்வருமாறு குறிப்பிடுவார்:
'குறிப்பு. விசும்பிழி தோகை-வானிலிருந்து இறங்குகின்ற மயி
லது. சீர்போன்றிசின்-அழகு போன்றது. இழை-ஆபரணம். நிழற்ற-
ஒளியைச் செய்ய. கரைசேர் மருதம்; ஐங். 7, குறிப்பு. பண்ணை பாய்
வோள்-நீர் விளையாட்டிடத்தே பாய்வோளது. கதுப்பு-கூந்தல். (ஐங்குறுநூறு - மூலமும் உரையும் )'
டாக்டர் உ.வே.சாமிநாதையர் , புலியூர்க் கேசிகன் போன்றவர்கள் நீர் விளையாட்டிடமாகப் பண்ணையைக் குறிப்பிடுவர்.
குளம் என்றும் அதனைக் குறிப்பிடலாம். இங்குள்ள பண்ணை என்னும் சொல் குளத்தைக் குறிக்கும் என்பார் தமிழறிஞர் நா.கணேசன்.
தொல்காப்பியம் "கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு" என பண்ணையை ஒரு விளையாட்டாகக் குறிக்கும், அதுவே நீர்விளையாட்டு என்று கருதலாம்.
பண்ணைத்துறைக்கான பெயருக்கான காரணத்தை பண்ணை என்னும் சொல்லுக்கான நீருடன் தொடர்பு படுத்தப்பட்ட அர்த்தங்களைத் தரும் சொற்களுடன் வைத்து ஆராய்வது சரியான நிலைப்பாடாகவிருக்கும். உதாரணத்துக்குப் பண்ணைக்கு மரக்கலம் , படகு என்னும் பொருளும் உண்டு என்கின்றார் தமிழறிஞர் நா.கதிரைவேற்பிள்ளை தனது 'தமிழ்மொழி அகராதி'யில். அவ்வர்த்தப்படி மரக்கலம் தங்கும் துறை அல்லது படகுத்துறை என்பதைக் குறிக்கப் பண்ணைத்துறை என்னும் பெயர் ஆரம்பத்தில் உருவாகியிருக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க தர்க்கமாக அமையும்.
உசாத்துணை நூல்கள்
1. யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி , வரலாறு (!621 - 1948) - இ.மயூரநாதன், குமரன், எழுநா & ஆதிரை 2025
2. ஐங்குறுநூறு - மூலமும் உரையும் - டாக்டர் உ.வே.சாமிநாதையர் -
3. தமிழ் மொழி அகராதி , தமிழறிஞர் நா.கதிரைவேற்பிள்ளை
4. தமிழறிஞர் நா.கணேசனின் இணையக் குறிப்பு
5. ஐங்குறுநூறு - மூலமும் உரையும் - புலியூர்க் கேசிகன
. தொல்காப்பியம்
girinav@gmail.com
No comments:
Post a Comment