Sunday, July 20, 2025

நடிகரும், பாடகருமான மு.க.முத்து மறைந்தார்!


கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மறைவுச் செய்தியைத் தாங்கி வந்தது முகநூல். இவர் கலைஞருக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த முதலாவது குழந்தையே மு.க.முத்து. பத்மாவதி பிரபல பாடகர் சி.எஸ்.ஜெயராமனின் சகோதரி. மு.க.முத்துவின் திரைப்படங்களை நான் பார்த்ததில்லை,. ஆனால் அவரது திரைப்படப்பாடல்களை நான் இரசிப்பவன். குறிப்பாக அவரே பாடி நடித்த 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க' பாடலைக் கூறலாம்.


கலைஞரின் மகனாக நான் முதலில் அறிந்தது மு.க.முத்துவையே. குமுதத்தில் கலைஞரின் 'ரோமாபுரிப்பாண்டியன்' தொடராக வெளியான காலத்தில் , அல்லது அதற்குச் சிறிது முன்பாக அல்லது பின்பாக , ஒரு தடவை பிரபலங்களின் குழந்தைகள் எழுதிய ஓரிரு பக்கக் கதைகளை வெளியிட்டிருந்தார்கள். கட்டுரைகளாகவுமிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அவ்விதம் ஒரு கதையையோ அல்லது கட்டுரையையோ எழுதியிருந்தார் சிறுவனான மு.க.முத்து.அப்பொழுது நான் நினைத்தேன் - கலைஞரின் எதிர்கால வாரிசாக வருவாரென்று. ஆனால் அது நடைபெறவில்லை. கலைஞரும், எம்ஜிஆரும் பிரிவதற்கு முன்னரே மு.க.முத்து எம்ஜிஆர் பாணியில் நடிக்கத்தொடங்கிவிட்டார். பிள்ளையோ பிள்ளை திரைப்படத்தின் படப்பிடிப்புக்கே வந்து எம்ஜிஆர் முத்துவை வாழ்த்தியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

பின்னர் குடிக்கு அடிமையாகி , வீதியில் விழுந்து கிடந்ததாகவும், ஒரு தடவை அதிமுகவில் சேர எம்ஜிஆரைச் சந்தித்ததாகவு, அப்போது எம்ஜிஆர் அவரைத்தேற்றித் திருப்பி அனுப்பியதாகவும், மேலுமொரு தடவை ஜெயலலிதா அம்மையார் அவருக்குப் பண உதவி செய்ததாகவும் ஊடகங்கள் மூலம் அறிந்திருக்கின்றேன். ஆனால் அவரது கனவுகள் மட்டுமல்ல , முத்து விடயத்தில் கலைஞரின் கனவுகள் எல்லாமே நிறைவேறாமலேயே போய்விட்டன.

குடும்பபின்னணி, குரல் வளம் இருந்தும் ஏன் மு.க.முத்துவால் தமிழ்த்திரைவானில் ஒளிர முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் - கலைஞரின் அணுகுமுறைதான். தன் அரசியல் எதிரியான எம்ஜிஆரை எதிர்ப்பதற்கு ஒரு துருப்புச்சீட்டாக அவர் மு.க.முத்துவைத் தமிழ்த்திரையுலகில் பாவித்தார். தோல்வியில் முடிந்தது அவரது திரையுலக வாழ்க்கை மட்டுமல்ல, அரசியல் வாழ்க்கையும்தான். எம்ஜிஆர் இருந்த வரையில் கலைஞரால் அரசியலில் எழ முடியவில்லை. அவ்வளவுக்குத் தமிழகத்தில் எம்ஜிஆருக்கு மக்கள் மத்தியில் ஆதரவிருந்தது. இந்நிலையால் கலைஞரால் முடியாததை எவ்விதம் முத்துவால் சாதித்திருக்க முடியும்? ஆழ்ந்த இரங்கல்.

மு.க.முத்து நினைவாக அவரது திரைப்படப் பாடல்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொள்கின்றேன். எம்.ஜி.ஆர் பாணியில் நடித்த மு.க.முத்துவின் திரைப்படப்பாடல்களும் எம்ஜிஆரின் திரைப்படப்பாடல்கள் போலவே அமைந்திருந்தன.

சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க - https://www.youtube.com/watch?v=LmPifn0mIfQ&list=RDLmPifn0mIfQ&start_radio=1

காதலின் பொன்வீதியில் - https://www.youtube.com/watch?v=Evy7W7yXw6E&list=RDEvy7W7yXw6E&start_radio=1

மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ? - https://www.youtube.com/watch?v=l63beZmLlic&list=RDl63beZmLlic&start_radio=1

முத்துப் பல் சிரிப்பென்னவோ - https://www.youtube.com/watch?v=ineCgI1WNYg&list=PLFf1LWHK3JCskMlqhRj26sHokgRefyM1v

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்