Tuesday, July 29, 2025

யுத்தத்தின் கோர விளைவுகளை வெளிப்படுத்தும் 'இரு பெண்கள்' (Two Women).


இத்தாலிய நடிகையான சோபியா லோரென் ஹாலிவூட்டினையும் கலக்கிய சிறந்த நடிகைகளிலொருவர். சோபியா லோரேன் என்றதும் அவரது கவர்ச்சிகரமான உடல்வாகினைத்தான் பலரும் முதலில் நினைவுக்குக்கொண்டு வருவார்கள். சோபியா லோரேன் அழகான உடல்வாகுகொண்டவர் மட்டுமல்லர் அற்புதமான நடிகைகளிலுமொருவர். முதல் முதலாக ஆஸ்காரின் சிறந்த நடிகைக்கான விருது ஆங்கிலமொழியிலில்லாத ஒரு திரைப்பபடத்தில் நடித்த நடிகையொருவருக்காகக் கொடுக்கப்பட்டதென்றால், அவ்விருதினைப் பெற்ற நடிகை சோபியா லோரென்தான். புகழ்பெற்ற இத்தாலிய நாவலாசிரியர்களிலொருவரான அல்பேர்ட்டோ மொராவியோ (இவரது படைப்புகளில் பாலியல் சம்பவங்கள் சிறிது தூக்கலாகவிருக்கும். அதனால் சிலர் எஸ்.பொ.வை இவருடன் ஒப்பிடுவதுமுண்டு) எழுதிய நாவலான 'இரு பெண்கள்' (Two Women) என்னும் நாவலினை மையமாக வைத்து உருவான Two Women கறுப்பு/வெள்ளைத் திரைப்படம் 22 சர்வதேச விருதுகளைச் சோபியா லோரென்னுக்கு அள்ளிக்கொடுத்த திரைப்படம்.. போர் மக்கள் மேல் ஏற்படுத்திய விளைவுகளைப் பார்ப்பவர் நெஞ்சினை அதிரவைக்கும் வகையில் விபரிக்கும் திரைப்படமிது. 'விட்டோரியோ டி சிகா'வின் (Vittorio De Sica) இயக்கத்தில் வெளியான ( Vittorio De Sica புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்பட இயக்குநர். இவரது திரைப்படங்கள் நான்கு தடவைகள் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற The Bicycle Thief திரைப்படத்தினை இயக்கியவர் இவர்தான்.) இத்திரைப்படத்தின் கதைச் சுருக்கமிதுதான்:விதவையான சிசிரா ரோம் நகரில் வசிக்கும் கடை உரிமையாளர். பன்னிரண்டு வயதுள்ள, சமய ஈடுபாடுமிக்க ரோசிட்டா என்னும் மகளுடன் வாழ்ந்து வந்தவர் சிசிரா. இரண்டாவது உலக மகா யுத்தக் காலகட்டத்தில் நேசப்படைகளின் ரோம் மீதான குண்டு வீச்சிலிருந்து தப்புவதற்காக சிசிரா தனது மகளுடன் தனது சொந்த இடமான , மலைப்பாங்கான கிராமப்புறமான மாநிலத்துக்குச் செல்கின்றார்.

அங்கு சிசிராவுக்கு கம்யூனிஸ்ட் கோட்பாடுகளில் ஈடுபாடுமிக்க இளைஞரான மைக்கல் என்பவர் மீது ஈடுபாடு ஏற்படுகின்றது. ரோசிட்டாவும் மைக்கலை அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பழகுவதுடன், இருவருக்குமிடையில் அப்பா - மகள் உறவு தீவிரமாக உருவாகின்றது. இதற்கிடையில் மைக்கலை ஜேர்மன் படையினர் கைது செய்து விடுகின்றார்கள். மலைப்பாங்கான அப்பிரதேசத்தினை அவர் அறிந்தவரென்பதால், அவர் தமக்கு உதவியாக இருக்கக்கூடுமென்ற நோக்கத்திலேயே ஜேர்மானியப் படையினர் அவரைக் கைது செய்கின்றார்கள்.

நேசப்படைகள் ரோம் மீதான ஜேர்மனியரின் ஆக்கிரமிப்பினை முடிவுக்குக் கொண்டுவந்ததும் , சிசிரா மகளையும் கூட்டிக்கொண்டு ரோம் நகர் நோக்கிச் செல்கின்றார். செல்லும் வழியில் பிரெஞ்சு இராணுவத்தின் மொராக்கோ வீரர்களால் , கிறிஸ்தவ ஆலயமொன்றில் வைத்துத் தாயும் , மகளும் கூட்டாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அந்நிகழ்வு சிறுமியான ரோசெட்டாவை உளவியல்ரீதியில் மாற்றி விடுகின்றது. சிறுமியான அவள் சிறுமித்தனத்தினை இழந்து விடுகின்றாள்.

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட தாயும், மகளும் அருகிலுள்ள கிராமமொன்றில் அடைக்கலம் புகுகின்றார்கள். அங்கு ரோசெட்டா இரவுகளில் தாய்க்குத் தெரியாமல் அவளைவிட வயதான பையனொருவனைச் சந்திக்கச் செல்கின்றாள். ஆரம்பத்தில் மைக்கலைத் தேடித்தான் மகள் செல்வதாகத் தாய் நினைக்கின்றாள். இதற்கிடையில் மைக்கலும் மொராக்கன் வீரர்களினால் (அவர்களைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய) கொல்லப்பட்ட விபரத்தை அறிந்துகொள்கின்றாள்.

வழக்கம்போல் இரவினில் தன் ஆண் நண்பனைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பும் மகளைத் தாய் கண்டிக்கின்றாள். அவளை முகத்திலும் அறைகின்றாள். மகளுக்கும் மைக்கல் இறந்த் விடயத்தைக் கூறுகின்றாள். பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதிலிருந்து உளவியல் ரீதியாக தன் குழந்தைத்தன உணர்வுகளிலிருந்து விலகிய நடத்தையைக் கொண்டிருந்த மகள், மைக்கலின் இறப்புச் செய்தியினைக் கேள்விப்பட்டதும், மீண்டும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவதற்கு முன்னர் இருந்த குழந்தைத்தனத்தை மீளப்பெறுகின்றாள்; குழந்தையாகி அழுகின்றாள். மகளைத் தாய் ஆறுதல் படுத்துவதுடன் படம் முடிகின்றது.

இத்திரைப்படத்தில் மைக்கலாக நடித்திருப்பவர் பிரபலமான பிரெஞ்சு நடிகர் Jean-Paul Belmondo. [ எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருப்பவர் போல் காணப்படும் தோற்றம் கொண்டவர். என் மாணவப் பருவத்தில் எனக்குப் பிடித்த நடிகர்களிலொருவராக விளங்கியவர். அக்காலகட்டத்தில் இவரது The Brain எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களிலொன்று. கொள்ளையர்களிலொருவராக நடித்திருப்பார். படம் முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். இவரது, நான் பார்த்த இன்னுமொரு திரைப்படம் 'போர்சலினோ'].

யுத்தங்கள், அதன் விளைவான போர்க்குற்றங்கள் எத்தகைய விளைவுகளை அப்பாவி மக்கள்மீது ஏற்படுத்தி விடுகின்றன என்பதை விபரிக்கும் 'இரு பெண்கள்' சர்வதேசத் திரையுலகின் முக்கியமான படைப்புகளிலொன்று. 

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்