Tuesday, July 29, 2025

நடிகரும், எழுத்தாளரும், பேச்சாளருமான தமிழ் அரசியல்வாதி 'சொல்லின் செல்வர்' செ.இராசதுரை! - வ.ந.கிரிதரன் -


இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானதோர் ஆளுமை மட்டக்களப்பு மாநகர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக , முப்பத்து மூன்று வருடங்களிருந்த 'சொல்லின் செல்வர்' என்றழைக்கப்படும்  செல்லையா இராசதுரை அவர்கள். அவரது தொண்ணூற்றியெட்டாவது பிறந்தநாள் (ஜூலை 26)  அண்மையில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டிப் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் மனத்தைத் தொடும் முகநூற் பதிவொன்றினை அண்மையிலிட்டிருந்தார்.அதற்கான இணைப்பு

செ.இராசதுரை அவர்கள் வசீகரத்தோற்றம் மிக்கவர். நான் தமிழரசுக் கட்சி பற்றி அறிந்தபோது என்னைக் கவர்ந்த தமிழ் அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். அப்பாவுக்கு அவர் மேல் மிகுந்த மதிப்பு இருந்தது. தமிழகத்தில் திமுக அரசியல்வாதிகள் போல், இலங்கையில் சிறப்பான மொழியில் உரையாற்றுவதில் முதலிடத்தில் இருப்பவர் இராசதுரை அவர்கள் என்பார்.

 

அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு விடயம்தான் என்னைக் கவர்ந்தது. அது அவரோர் எழுத்தாளர் என்பதுதான். அதனால் அவர் மீதான என் அபிமானம் அதிகரித்தது. அவரது சிறுகதையான, முதற் பரிசு பெற்ற சரித்திரச் சிறுகதை கல்கியில் ஐம்பதுகளில் வெளியானதாகவும் அப்பா கூறினார். அச்சிறுகதையை,  'பழிக்குப்பழி' என்னும் பெயரில் வெளியானது,  அண்மையில்தான் இலங்கையிலிருந்து வெளியான தேனருவி சஞ்சிகையின் பெப்ருவரி 1963 இதழில் கண்டு , அது பற்றிய குறிப்பொன்றினையும் முகநூலில் எழுதியிருந்தேன். அட்டைப்படக் கதையாக இக்கதை வெளியாகியுள்ளது. அச்சிறுகதையை  வெளியான 'தேனருவி' சஞ்சிகைக்கான இணைய இணைப்பு: 


இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அவர்  தமிழர் போராட்ட அரசியற் செயற்பாடுகளுக்காகச் சிறை சென்றவர். தந்தை செல்வாவுக்குப் பின்னர் இவருக்குத்தான் தலைமைப்பொறுப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை.  இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் அதுவொரு கறையாக எப்போதுமிருக்கும்.  அரசியலில் இருந்தவரை ஒருபோதுமே  பாராளுமன்றத் தேர்தலில் இவர் தோற்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது நகரபிதாவும் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.  

1977 தேர்தலிலின்போது தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் மட்டக்களப்பு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் வெற்றியடையக்கூடாது என்பதற்காக , அதே தொகுதியில் கவிஞர் காசி ஆனந்தனும் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட வைக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் செ.இராசதுரை வெற்றிபெற , கவிஞர் காசி ஆனந்தன் தோல்வியைச் சந்தித்தார். 1977 தேர்தலின் பின்னர் 1979இல் , தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசில் இணைந்து  இந்துக் கலாச்சார அமைச்சராகவிருந்தார்.

'சுதந்திரன்' பத்திரிகையின் ஆசிரியர்களிலொருவராகவும் இருந்துள்ளார்.  'லங்கா முரசு' என்னும் மாத வெளியீட்டை வெளியிட்டிருக்கின்றார். அது பற்றி எழுத்தாளரும், திறனாய்வாளருமான இரசிகமணி  கனக செந்திநாதன் தனது 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 

 'இளைஞரின் துடிப்புக் கனன்று கொண்டிருந்தது. தற்பொழுது பாராளுமன்றத்தில் மட்டக்களப்பின் முதலாவது உறுப்பினராக இருக்கும் செ. இராசதுரையும், ஜனாப். கே. எம். ஷா (பித்தன்)வுஞ் சேர்ந்து ‘லங்காமுரசு’ என்ற பத்திரிகையை நடாத்தினார்கள். என்று கூறியுள்ளார்.  அத்துடன் 'மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியான செ. இராசதுரை அந்தக் காலத்தில் சிறுகதை எழுதுவதில் மிகுந்த ஆர்வங்காட்டினார். ‘மிஸ் கனகம்’ என்னுஞ் சிறுகதைத் தொகுதி வெளி வந்துள்ளது. ‘லங்காமுர’சைத் தொடர்ந்து, சொந்த அச்சு வசதிகளுடன் ‘தமிழகம்’ என்னும் பத்திரிகையை வெளியிட்டார். முழுநேர அரசியல் ஊழியராகிவிட்ட அவரால் அப்பத்திரிகையைத் தொடர்ந்து நடாத்த முடியவில்லை.' 

தமிழகம், முழக்கம் , சாந்தி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார் என்று குறிப்பிடும் விக்கிபீடியா இவரது வெளிவந்த நூல்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றது: :

1. ராசாத்தி – குறும் புதினம் - 1982
2. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு
3. அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984
4. மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு
5. இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

இவரது இலக்கியப்பங்களிப்பு ஆய்வுக்குரியது. ஆனால் 'நூலகம்' தளத்தில் கூட இவரது வெளியான நூல்கள் எவற்றையும் காணவில்லை. இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாறு முறையாக எழுதப்படும்போது இவரது இலக்கியப்பங்களிப்பும் முறையாக ஆராயப்பட வேண்டியது அவசியமாகும். எழுத்தாளர் முருகபூபதி இவரது இலக்கியப்பங்களிப்பு பற்றியொரு கட்டுரையொன்றினை 'தேனீ' இணைய இதழில் எழுதியிருக்கின்றார். 


இவர் ஒரு நடிகரும் கூட. மட்டக்களப்பில் மேடையேறிய சங்கிலியன் என்னும் நாடகத்துக்கான வசனங்களை எழுதியதுடன் , அந்நாடகத்தில் சங்கிலியனாகவும் நடித்துள்ளார். அந்நாடகக் காட்சியொன்றினையே சுதந்திரன் (23.6.1957)   பத்திரிகையில் வெளியான நாடகம் பற்றிய தேன்மொழி என்பவர் எழுதியிருக்கின்றார்.  மேற்படி விமர்சனத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

"வசனங்களை எழுதியது திரு.எஸ்.இராஜதுரை  எம்.பி.யென்றால் ,அதன் சிறப்பைக் கூறவும் வேண்டுமா என்ன? நாடகத்துறையில் மிகவும் அனுபவம் பெற்றதாயிற்றே அவரது பேனா.. முக்கியமாக சோகக் கட்டங்களில் வசனங்கள் சோபித்தன... நடிகர்கள்  என்றதும்  வெண் பற்களைக் காட்டி மோகனச் சிரிப்புக்குரிய ஒரு முகம் மனக்கண் முன் தோன்றுகின்றது. அதற்குரியவர் சங்கிலியனாக நடித்த மட்டக்களப்புப் பாராளுமன்றப் பிரதிநிதி திரு.செ.இராஜதுரை அவர்கள்தான்.  அவரது கணீரென்ற 'அழகுக் குரலும்'  'பளீ'ரென்ற சிரிப்பும் , காதலின் கனிவும், வீரத்தின் விறைப்பும் கலந்திருந்த சிறந்த நடிப்பும் ரசிகர்களைப் பிரமிக்க வைத்தன.  எல்லோரும் இராஜதுரை சிறந்த பேச்சாளர் என்றுதான் எண்ணியிருந்தார்கள்.  ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட என்பதைத்  தமது அற்புத நடிப்பால் நிரூபித்து விட்டார்."


திறனாய்வாளார் கனக செந்திநாதனின் 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி' பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது;  'நல்ல மேடைப் பேச்சாளராவர். பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்னுஞ் சிறு நூல் அவரது பேச்சு வன்மைக்குச் சான்று பகர்கின்றது. நல்ல நடிகருமான அவர் சங்கிலியன் நாடகத்தைத் தாமேஎழுதி, தயாரித்து, மேடையேற்றியுள்ளார்.' 

சொல்லின் செல்வர் இராஜதுரை மலர் 

உசாத்துணைப் பட்டியல்

சொல்லின் செல்வர் இராஜதுரை மலர்
தேனருவி சஞ்சிகை பெப்ருவரி 1963
சுதந்திரன் 23.6.1957
ஈழத்து இலக்கிய வளர்ச்சி - கனக செந்திநாதன்

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்