Wednesday, July 2, 2025

நண்பர்களின் நால்வரின் ஒன்று கூடல்!

இடமிருந்து வலமாக: வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா & நான்.



இன்று நான் நண்பர்கள் வரதீஸ்வரன், வித்தியானந்தன், பிறேமச்சந்திரா ஆகியோரை , வரதீஸ்வரன் வீட்டில் சந்தித்து , மாலைப்பொழுதை இனிதாகக் கழித்தேன். இவர்களில் வரதீஸ்வரன், வித்தியானந்தன் ஆகியோருடனான அறிமுகம்  மொறட்டுவைப்பல்கலைககழகத்தின் மாணவர் விடுதியில் ஆரம்பமானது. நான் அங்கு கற்கச்சென்றபோது முதல்வருடம் மாணவர் விடுதி B இல் தங்கிப் படிப்பை ஆரம்பித்தேன். அந்த விடுதியில் அவ்விதம் தம் படிப்பை ஆரம்பித்தவர்கள்தாம் நண்பர்கள் வரதீஸ்வரனும், வித்தியானந்தனும்.  வித்தியானந்தன் கடல்துறைப் (Marine) பொறியியல் துறையிலும், வித்தியானந்தன் மின்சாரப்பொறியியல் துறையிலும், பிறேமச்சந்திரா மூலகப் (Materials) பொறியியல் துறையிலும் படிப்பதற்காக வந்திருந்தவர்கள். நான் கட்டடக்கலை படிப்பதற்காகச் சென்றிருந்தவன். வித்தியானந்தன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் 'நுட்பம்'  இதழாசிரியராக நான் இருந்தபோது மலர்க்குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தவர். 

நண்பர் பிறேமச்சந்திராவை முன்பே அறிந்திருந்தேன். முக்கிய காரணம் - அவரது தாயாரும் , என் தாயாரும் பழைய சிநேகிதிகள். ஆரம்பத்தில் ஒன்றாக ஆசிரியைகளாகத் தம் பணியை ஆரம்பித்தவர்கள்.  அதனால் அடிக்கடி அவரைப்பற்றி அம்மா நினைவு கூர்வதுண்டு. அதனாலும் அறிந்திருந்தேன். ஆனால் பெரிதாகப் பழகியதில்லை. காரணம் - யாழ் இந்துக்கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தாலும், ஒரே பிரிவில் படித்தவர்கள் அல்லர். அவருடனும் நன்கு பழகத்தொடங்கியது மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துக்குப் படிக்கச் சென்ற பின்னர்தான். பிறேமச்சந்திராவும் எங்களுடன் மாணவர் விடுதி B இல் தங்கிப்படித்தவர்தான்.

இங்கும் நண்பர்களை அவ்வப்போது சந்தித்து வந்தாலும், நாம் நால்வரும் ஒன்றாகச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் இன்று நிகழ்ந்தது. மாலை ஆறு மணியிலிருந்து இரவு பதினொன்று வரை , நேரம் சென்றதே தெரியாமல் சந்திப்பு தொடர்ந்தது. உரையாடல் பல்வேறு விடயங்களைத்  தொட்டுச் சென்றது. பல்கலைகக்ழக நாட்கள், ஒவ்வொருவரின் பல்வேறு நாட்டு அனுபவங்கள், வானியற்பியல் விடயங்கள், நாம் படித்த தமிழகத்து வெகுசனப் படைப்புகள், தமிழகத்தமிழ் ,இலங்கைத் தமிழ் பற்றிய பல்வகைக் கருத்துகள், பயண அனுபவங்கள் ( நண்பர் வரதீஸ்வரன் அதிகமாகப் பயணிக்குமொருவர்)   என உரையாடல் தொட்டுச் சென்ற விடயங்கள் பல.

இறுதியாக வரதீஸ்வரன் தியானம் , மனத்தை ஓய்வாக வைத்திருத்தல் ஆகியவற்றுக்காகப் பாவிக்கும் பாடும் கிண்ணம் (Singing Bowl) என்னும் கிண்ணத்தை எடுத்து  ஒலியெழுப்பிக் காட்டினார். ஐம்பொன்னினால் ஆனதென்றார். தீபெத்தியர்கள் பாவிக்கும் பாடும் கிண்ணம் என்றார். ஒலி ஆலய மணி ஒலிப்பதுபோலவும், ஓம்  என்னும் சொல்லைக் கூறும்பொழுது ஏற்படும் ஒலி போலவும் இருந்தது. கணகளை மூடிக்கொண்டு கேட்கையில் ஒருவிதமான இனிய, அமைதி தவழ் உணர்வு ஏற்பட்டது. 

இவ்விதமாக இன்று எம் மாலைப்பொழுது இன்பமாகக் கழிந்தது. மறக்க முடியாத  மாலைப்பொழுதுகளில் ஒன்றாகக் கழிந்த பொழுதுகளில் ஒன்று.

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்