'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, July 11, 2025
மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்திராவின் பெயரையும் பாவித்து, இந்திரா பார்த்தசாரதி என்னும் பெயரில் எழுதுபவர். எழுத்தாளர் ரங்கராஜன் தன் மனைவி சுஜாதா என்னும் பெயரில் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தது நினைவுக்கு வருகின்றது.
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எனக்கு முதலில் அறிமுகமானபோது நான் ஒருவித வெறியுடன் வாசிப்பில் மூழ்கிக்கிடந்த பால்ய பருவத்தினன். சொன்னால் நம்ப மாட்டீர்கள் அப்போது எனக்கு வயது பதினொன்றுதான். பத்து வயதிலேயே கல்கியில், விகடனில், குமுதத்தில், கலைமகளில், தினமணிக்கதிரி தொடர்களாக வெளியான தொடர்கதைகளை, சிறுகதைகளை , தீவிரமாக, வாசிக்கத்தொடங்கி விட்டிருந்தேன்.வெகுசனச் சஞ்சிகைகளில் எழுதி என் கவனத்தை ஈர்த்த, தீவிர இலக்கிய எழுத்தாளுமையாளர்களாக ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி . கு,அழகிரிசாமி போன்றோர் இருந்தனர். இவர்களது எழுத்துகள் பொதுவான வெகுசன எழுத்தாளர்களின் எழுத்துகளிலிருந்து வேறுபட்டவை. ஆனால் அது இவர்கள் மீதான என் ஈர்ப்புக்குத் தடையாக இருந்ததில்லை. என் வயதுக்கு மீறிய விடயங்களைப்பற்றியெல்லாம் இவர்கள்தம் படைப்புகள் இருந்தாலும், அனைவரையும் சென்றடையும் வகையில் , ஒரு வித எல்லை மீறாத எழுத்து நடையில் இவர்கள் எழுதினார்கள்.இவர்களில் இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகளில் கலந்திருக்கும் மானுட உளவியல் என்னை அன்றே ஈர்த்தது. இவர் எனக்கு முதலில் அறிமுகமானது கல்கி -பெர்க்கிலி இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் முதற் பரிசு பெற்ற சிறுகதையான 'அவள் என் மனைவி' மூலம் தான். அந்தக்கதை இன்றும் என் நினைவில் பதிந்து கிடக்கின்றது. அக்காலத்தில் இவர் டெல்கியில் பணி புரிந்துகொண்டிருந்ததால்,, கதைக்களங்கள் டெல்கியைச் சுற்றி அமைந்திருக்கும். குறிப்பாகக் கரோல் பார்க் அவற்றில் வரும். 'அவள் என் மனைவி' விளிம்பு நிலை மனிதர்களைப்பற்றி, அவர்களுக்கிடையில் நிலவும் மனித நேயம் பற்றி, நவகாலச் சமூக, அரசியல், பொருளியற் சூழல் அவர்கள் வாழ்வை எவ்விதம் தாக்குகின்றன என்பது பற்றிப் பேசும் கதை. வாழ்க்கைப்போராட்டத்தில் நிலைகுலைந்து தத்தளிக்கும் முத்து, ராசம்மா , எவ்விதம் அச்சூழல் அவனைப் பிக்பொக்கற் திருடனாகவும், அவளை விபச்சாரம் செய்தவளாகவும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றது இறுதியில் அவளை அவன் தன் மனைவு என்று கூறிக் காப்பாற்றுவதுடன் முடிவடைகின்றது என்பதை விபரிக்கும் கதை. மறக்க முடியாத அக்கதையே எழுத்தாளர் இந்திர பார்த்தசாரதியை எனக்கு அறிமுகப்படுத்தியது.
அதன் பின்னர நான் வாசித்த அவரது நாவல்கள் பெரியவை அல்ல. முதலாவது சிறு நாவலான 'வேஷங்கள்'. அடுத்தது 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன'. வேஷங்கள் தொடர்கதையாக வெளியானபோது அதற்கு ஓவியங்கள் வரைந்திருப்பவர் ஓவியர் எஸ்.பாலு. பாலுவின் ஓவியங்கள் தனித்துவமானவை. குறிப்பாக மானுடர்களின் முகங்கள் அவரது கைவண்ணத்தில் தனித்துவமாகத்தெரியும். ஊனமுற்ற சிறுவனான கோபு, அவனது , ஏமாற்றிப்பிழைக்கும் எத்தனான தந்தை, அழகான அம்மா, அவனைக் கரோல் பார்க்கில் சந்தித்து , அவனது வீட்டில் வாடகை அறை எடுத்துத் தங்கும் சங்கரன் என்னும் இளைஞன், அவனது கோபுவின் தாய் மீதான சலனம் , அதற்கு அவள் கொடுக்கும் கடுமையான பதிலடி எனச் சுழலும் சிறு நாவல். மானுட உளவியலை ஆராயும் வித்தியாசமான நடை. வழக்கமான வெகுசனத் தொடர்கதைகளிலிருந்து சிறிது மாறுபட்ட எழுத்து நடை. இவையே அத்தொடர்கதை என்னை ஈர்த்ததற்குக் காரணங்களில் ஒன்றாக இருந்தது.
அடுத்த நாவலும் கல்கியில் வெளியான் சிறு நாவல்தான். அதுதான் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன'. ஓவியர் கல்பனாவின் வனப்பு மிகு ஓவியங்களுடன் வெளியான தொடர்கதை. இதுவும் நினைவில் நிற்கும் கதைதான். நடுத்தர , திருமண வயதான ஒருவருக்கு, இளம் பெண் ஒருத்தியின் மேல் ஏற்படும் சலனத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதையாக நினைவில் நிற்கும் கதை.
இவை இந்திரா பார்த்தசாரதியின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள். இன்று பலருக்கு இவை பற்றித் தெரியவில்லை. அண்மையில்கூட தி இந்து பத்திரிகையில் வெளியான இந்திரா பார்த்தசாரதி பற்றிய கட்டுரையொன்றினை எழுதிய புதிய தலைமுறை எழுத்தாளர் ஒருவர் இ.பா.வின் ஆரம்பக் காலப் படைப்புகளாக அவர் பின்னர் எழுதிய படைப்புகளைக் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகின்றது.
எனக்கு இந்திரா பார்த்தசாரதியை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருபவை அவரை எனக்கு அறிமுகப்படுத்திய இப்படைப்புகளே. அடுத்து நினைவுக்கு வருவது எழுபதுகளின் இறுதியில் அவைக்காற்றுக் கழகத்தின் ஏற்பாட்டில் நாடகவியலாளர் பாலேந்திராவும், அவர் மனைவி ஆனந்தராணி பாலேந்திராவும் நடிப்பில் வரவேற்பைப்பெற்ற 'மழை' நாடகம்தான். அதுதான் எனக்கு அறிமுகமான அவரது முதல் நாடகம். அந்நாடகத்தின் உரையாடல்கள் தனித்துவமானவை. நவீன நாடகமாக மேடையேற்றிய பாலேந்திராவின் இயக்கமும், தம்பதியரின் நடிப்பும் அந்நாடகத்தை மறக்க முடியாத நாடகங்களில் ஒன்றாக ஆக்கிவிட்டன.
இவற்றுக்குப்பின்னர் இந்திரா பார்த்தசாரதி பல புகழ்பெற்ற நாவல்களை, நாடகங்களை எழுதி விட்டார். இந்திய மத்திய அரசின் சாகித்ய விருது உட்படப் பல விருதுகளைப் பெற்று விட்டார். ஆனால் அவரைப்பற்றி நினைத்ததும் எனக்கு முதலில் எப்போதும் நினைவுக்கு வருபவை அவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்திய இப்படைப்புகளே.
இன்னுமொரு விடயத்திலும் அவர் என் எழுத்துலக வாழ்க்கையில் பிணைந்திருக்கின்றார். எழுத்தாளர் எஸ்.பொவுடன் இணைந்து அவர் தொகுத்த, புகலிடத் தமிழ் எழுத்தாளர்களின் புகழ்பெற்ற தொகுப்பான 'பனியும் பனையும்' தொகுப்பில் , தாயகம் (கனடா) பத்திர்கையில் வெளியான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்னை'யும் இடம் பெற்றுள்ளது. அதற்காகவும் என் நன்றிக்குரியவர்களில் ஒருவராக அவர் இருக்கின்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
மறக்க முடியாத எழுத்துலக ஆளுமையாளர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்குப் பிறந்த நாள் ஜூலை 10. என் வாசிப்பனுவத்தில் மறக்க முடியாத எழுத்தாளுமைகளில் ஒருவர் இ.பா. தனது மனைவி இந்...

பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
* ஓவியம் ; இயந்திரன் என் நண்பன். இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுட...
No comments:
Post a Comment