Sunday, February 18, 2018

நூல் அறிமுகம்: ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் 'சிறுவர் கதைகள்' தொகுப்பும், அதன் சிறப்பும்!

- ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா -

நான் எப்பொழுதுமே ஒரு குழந்தையிலக்கிய நூலொன்றினை அணுகும்போது ஒரு குழந்தை தன் சொந்த அனுபவத்தில் எவ்விதம் அந்நூலினை அணுகுமோ அவ்விதமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகுவேன். என் பால்ய காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த குழந்தைக் கதைத் தொகுப்புகளில்  முக்கியமான அம்சம். அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியமும், அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும், உள்ளே ஆக்கங்களுக்குப் பாவிக்கப்பட்டுள்ள ஓவியங்களும் மற்றும் கூறப்படும் மொழியும்தாம். எனக்கு எப்பொழுதுமே நூலொன்று பிடிப்பதாகவிருந்தால் மேற்கூறப்பட்டுள்ள சகல அம்சங்களும்  முக்கியமானவை. எனக்கு மட்டுமல்ல குழந்தைகள் அனைவருக்கும் இக்கூற்று பொருந்தும். குழந்தைப்பருவத்தில் குழந்தையொன்றின் சிந்தையில் நூலொன்றின் அட்டைப்படம் கற்பனைச்சிட்டினைச் சிறகடிக்கப் பறக்க வைக்கின்றது. அந்நூலிலுள்ள ஓவியங்களிலுள்ள உருவங்கள் அவை மானுடர்களாகவிருக்கட்டும் அல்லது ஏனைய உயிரினங்களாகவிருக்கட்டும் அவற்றைப்பார்க்கும் குழந்தையொன்றின் உள்ளத்தில் களிப்பினைத தருகின்றன. சிறு வயதில் கண்ணன் சிறுவர் சஞ்சிகையில் வெளியாகும் சிட்டுக்கள் போன்ற உயிரினங்களைப்பற்றிய குழந்தைக் கவிதைகளை இரசிக்கும் அதே ஆர்வத்துடன் நான் அப்படைப்புகளுடன் வெளியாகும் ஓவியங்களையும் இரசிப்பேன். இவற்றைப்போல் அப்படைப்புகளை வெளிப்படுத்தும் எளிமையான மொழி நடையும் எனக்கு மிகவும் பிடித்தவை. வாண்டுமாமா, குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா போன்றோரின் படைப்புகளின் சிறப்புக்கு முக்கியக்காரணம் அவற்றை விபரிக்கும் எளிய, இனிய மொழிநடையே. இவ்விதமான என் மற்றும் குழந்தைகளின் பொதுவான உளவியலின் அடிப்படையிலேயே நான் இவ்வகையான குழந்தைப்படைப்புகளையும் சரி, நூல்களையும் சரி அணுகுவது வழக்கம். அதே அணுகல் முறையினைத்தான் அண்மையில் 'டொராண்டோ' நகரில் வெளியான எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் கையாண்டேன். அவற்றில் இங்கு நான் எடுத்துக்கொண்ட நூல் அவர் எழுதிய 'சிறுவர் கதைகள்' என்னும் நூலே.

மீள்பிரசுரம் ('ஞானம்' சஞ்சிகை): வ.ந.கிரிதரன் நேர்காணல். கண்டவர்: கே.எஸ்.சுதாகர்

நேர்காணல்: - இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'ஞானம்' மாத சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017  & செப்டெம்பர் இதழ்களில் இதழில் வெளியான நேர்காணலிது . ஒரு பதிவுக்காக அது இங்கு மீள்பிரசுரமாகின்றது.  வ.ந.கிரிதரன் நேர்காணல் (மின்னஞ்சல்வழி). கண்டவர்: கே.எஸ்.சுதாகர்

- (வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.) -

1. உங்கள் பெயரின் முதல் எழுத்துக்களான வ.ந என்பவை எதனைக் குறிக்கின்றன?

உண்மையைக் கூற வேண்டுமானால் நான் பால்யப் பருவத்தை வவுனியாவில் கழித்தேன். எனது ஆரம்பக் கல்வியை , ஏழாம் வகுப்பு வரை, வவுனியா மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டேன். எனது அம்மா , நவரத்தினம் டீச்சர், அங்கு ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் எங்கள் வீடு முழுவதும் தமிழகத்தில்  வெளியான பத்திரிகை, சஞ்சிகைகளால் குவிந்து கிடந்தது. ஈழத்துப்பத்திரிகைகளான ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளும் அவற்றில் அடங்கும். அப்பாவே என் பால்யகாலத்து வாசிப்புப் பழக்கத்துக்கு முக்கிய காரணம். எனக்கு எழுத வேண்டுமென்ற ஆர்வம் அதனாலேயே ஆரம்பமானது. வவுனியா குளங்கள் மலிந்த , இயற்கை வளம் மிக்க மண். நாங்கள் அப்பொழுது வசித்து வந்த குருமண்காடு பகுதி ஒற்றையடி பாதையுடன் கூடிய , வனப்பிரதேசம். பட்சிகளும், வானரங்களும் இன்னும் பல்வகைக் கானுயிர்களும் நிறைந்த பகுதி. அதன் காரணமாகவே ந.கிரிதரன், கிரிதரன் என்று மாணவப்பருவத்தில் எழுத்துலகில் காலடியெடுத்து வைத்த எனக்கு வன்னி மண்ணான வவுனியாவின் முதலெழுத்தை என் பெயருடன் சேர்க்க வேண்டுமென்ற ஆர்வமெழுந்தது. அதன் விளைவாகவே அக்காலகட்டத்தில் வ என்னும் எழுத்தை என் பெயரின் முன்னால் சேர்த்து எழுத ஆரம்பித்தேன். ந.என்பது என் தந்தையாரான நவரத்தினத்தைக் குறிக்கும். இதிலொரு ஆச்சரியம் என்னவென்றால் நான் பிறந்த இடம், என் தந்தையார் பிறந்த இடம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை. அதன் முதல் எழுத்தும் வ. அந்த வகையிலும் வ.ந. என்பது பொருந்திப் போகின்றது. இருந்தாலும் வ என்னும் எழுத்தை நான் தேர்வு செய்ததற்குக் காரணம் வவுனியாவும் இயற்கை வளம் மலிந்த வன்னி மண்ணுமே. அப்பொழுது நான் நான் பிறந்த இடம் வண்ணார்பண்ணை என்பதற்காகத் தெரிவு செய்யவில்லை. ஏனென்றால் அப்பெயரில் எழுதத்தொடங்கியபோது நான் பதின்ம வயதினைக்கூட அடைந்திருக்கவில்லை. நான் அப்பொழுது வாழ்ந்து கொண்டிருந்த , எனக்கு மிகவும் பிடித்த வன்னி மண்ணான வவுனியா என்பதால், அதன் முதல் எழுத்தினை என் பெயரில் முன் சேர்க்க வேணடுமென்ற எண்ணமே எனக்கு அப்போதிருந்தது. ஆனால் அவ்விதம் தேர்வு செய்த வ நான் பிறந்த, என் தந்தையார் பிறந்த ஊரின் பெயரின் முதலெழுத்துடன் இணைந்து போனது தற்செயலானது.

முகநூல் கலையுலகக் குறிப்புகள்: அயலவர் கலையுலகம் அறிவோம் - காமினி பொன்செகாவின் (Gamini Fonseka) நடிப்பில் சருங்கலய (Sarunggalaya)

- சருங்கலயத் திரைப்படக் காட்சி -
- அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு முகநூற் குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. -

சிங்களத்திரையுலகின் எம்ஜிஆராக இவரைத்தமிழர்கள் அறிந்திருந்தாலும், இவர் நடிப்பிலும் திறமை வாய்ந்தவர். இவர்தான் காமினி பொன்செகா. இவரது இயற்பெயர் டொன் செல்டன் காமினி பொன்செகா (Don Shelton Gamini Fonseka). நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி எனப்பல்பரிமாண ஆளுமை மிக்கவர் இவர். பின்னாள்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியாகத்திகழ்ந்த இவர் வட, கிழக்கின் ஆளுநராகவும் விளங்கியவர். 'நீலகடல் ஓரத்தில்',' நங்கூரம்' ஆகிய தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்தவர் இவர்.

'சருங்கலய' (சருங்கலய என்றால் பட்டம் என்று பொருள்) என்னும் சிங்களத்திரைப்படத்தில் நடராஜா என்னும் தமிழராகவும் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பல காட்சிகள் கரவெட்டியில் படமாக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. இத்திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற 1977 இனக்கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிங்களத்திரைப்படமாகும். இத்திரைப்படத்துக்கான தமிழ் வசனத்தை திருமதி யோகா பாலச்சந்திரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கிய சுனில் ஆரியரத்தின தமிழில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், விமர்சகர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமையாளர். யாழ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணி புரிந்திருக்கின்றார்.

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம்' - வ.ந.கிரிதரன் -

- 'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' இதழ் பன்னாட்டிதழாக மலர்ந்திருக்கின்றது. இச்சிறப்பிதழில் எனது கவிதையான 'காலவெளிப்பயணியின்  நெடும் பயணம்' கவிதை வெளியாகியுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -

என் வெப்ப மண்ணை, மேல் விரியும்
இரவுவானை, சுடரை, நிலவை
நான் நீங்கியது நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவசை போடுமொரு
மாடுமாகினேன்.
ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கானுயிராயுமாகினேன்.

முடிவற்ற நெடும் பயணம்!

தங்குதற்கும், ஆறுதற்கும்
தருணங்களற்ற நெடும் பயணம்!

என்று முடியும்? எங்கு முடியும்?

நம்பிக்கையினை
நானின்னும் இழக்கவில்லை.
வழிச்சோலைகள், நீர்நிலைகள்
துருவப்பாலை வசங்களாயின.
பேய்த்தேரெனவே போயின.
இருந்தும் சிந்தையின்னும்
இழக்கவில்லை நான்.

காலவெளிக் குழந்தை நான்
கண்ட கனவுகள்
நனவிடைதோய்தற் துளிகளாயின.
துருவப்பாலை ஒட்டகம் நான்.
இன்றோ சுடர் தேடுமொரு
துருவத்துப் பரதேசி!

அந்தமிலாவிருப்பு
நம்பிக்கைக் கனவுகள்
மிகப்பயணிக்குமொரு
காலவெளிப்பயணி
நான். பயணிக்கின்றேன்.
பயணிக்கின்றேன். பயணிக்கின்றேன்.


- 'மகாகவி' (திசம்பர் 2017 - பன்னாட்டுச் சிறப்பிதழ்)  சஞ்சிகையில் ..-
ngiri2704@rogers..com

நன்றி: பதிவுகள்.காம்







வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 6: 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)

- லட்விக் மீஸ் வான் டெர் ரோ -

ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe).  இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.

கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD  centre  (1964)
தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது சீகிரம் கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.
இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass)  போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'ட்தஓலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space)  முழுமையாக, தேவைக்கேற்ப  திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.

1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில்  பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல்,  இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக் குறிப்புகள் 5: சேதனக் கட்டடக்கலை (Organic Architecture).

- ஃப்ராங் லாயிட் ரைட்  -
நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.

சேதனக் கட்டடக்கலை என்றால் என்ன?
இதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப  , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க  வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.

வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 4: லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)


- லூயிஸ் சல்லிவன்-
ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.

இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.

தேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருகின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கு.மு. காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas & venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...