Wednesday, March 27, 2024

கவிஞர் கண்ணதாசன் : நவீன கணியன் பூங்குன்றனார்!


'அதோ அந்த பறவை போல வாழவேண்டும்'

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். எவ்விதம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' உலக மக்களை விளித்துப்பாடப்பட்டதோ அவ்விதமே இப்பாடலையும் எடுக்கலாம். திரைப்படக்கதைக்குப் பொருந்தும் வகையில் வரிகள் இருந்தாலும், இப்பாடல் இவ்வுலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது. 'ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்' என்னும் வரிகள் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்' என்னும் வரிகளை ஒத்தவை.

எவ்விதம் அந்தப்பறவை சுதந்திரமாகப் பறக்கின்றதோ அவ்விதமே இம்மண்ணின் மக்களும் எவ்விதத்தளைகளுமற்று ,சுதந்திரமாக வாழ வேண்டும். இம்மண்ணின் மாந்தர்கள் வர்க்கம், மதம், மொழி, வர்ணம், இனமென்று பல்வேறு தளைகளால் பூட்டப்பட்டு , அடிமை வாழ்வு வாழ்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். வான் ஒன்று. நாம் வாழும் மண் ஒன்று. இதில் மனிதர் அனைவரும் சுதந்திரமாக விடுதலைக்கீதம் பாடும் நிலை ஏற்பட வேண்டும், அந்த ஒரு கீதமே மாந்தர் பாடும் நிலை வரவேண்டும். தளைகள் எவையுமற்ற, அடக்குமுறைகள் எவையுமற்ற பூரண விடுதலைச்சூழலில் மக்கள் வாழும் நிலை வரவேண்டும்.

Tuesday, March 26, 2024

அன்னை நினைவுகள்!


அன்னையே!
இருப்பில் நீ இருந்த இறுதி நாள்
இன்று உனை நாம்
இழந்த நாளும் கூடத்தான்.
இருப்பின் வடிவம் நீ நீங்கிடினும்
இருக்கின்றாய் எம்மில்
உணர்வாய், உயிரணுவாய் நிறைந்து.
இருக்கின்றவரையில்
இருப்பாய் எம் சிந்தையில்
இன் நினைவுகளாய்.
 
'நவரத்தினம் டீச்சர்' என்று ஊருனை அறியும்.
நமக்கோ பாசமிகு 'அம்மா'.
அம்புலி காட்டி , அதிலிருக்கும் ஆச்சி பற்றி
அன்று நீ அன்னமூட்டிய தருணங்கள்
இன்றும் பசுமையாய் இருக்கின்றன.
 
அவ்வப்போது நீ பாடி
அகம் மகிழ்வித்த பாரதி பாடல்கள்
இன்னும் ஒலித்துக்கொண்டுள்ளன.
 
இரவு நீங்கும் முன எழுந்து
உணவு சமைத்து, பொதிகளாக்கி
உன்னுடன் பாடசாலை கூட்டிச் செல்வாய்.
உன் அரவணைப்பில் நாம் நடந்த
உவகை மிகு நாட்களவை.
 
கண்டிப்பிலும் உன்னால் கோப உணர்வுகளைக்]
காட்ட முடிந்ததில்லை.
கனிவு தவிர எதை நீ காட்டினாய்?
 
பின்னர் வளர்ந்து பெரியவனாகி
பிற தேசம் படிக்கச் சென்று
அவ்வப்போது ஊர் திரும்பி மீள்கையில்
அதிகாலையெழுந்து , உணவு சமைத்து,
அகமகிழ்வுடன் பின்னர் உண்ண
அதனைப் பொதியாக்கித் தருவாய்.
தொடருந்து நிலையம் நோக்கிச் செல்கையில்
தொலைவு நோக்கிச் செல்லும் மகன் நோக்கித்
தொடர்ந்து வரும் உன் பார்வை.
வாசலில் நீ நிற்கும் கோலமும், உன்
வதனத்தில் படர்ந்திருக்கும் மெல்லிய சோகமும்,
அதிகாலை மெல்லிருளில் தலைவிரிக்கும் பனைப்பெண்களின்
சரசரப்பைக் கேட்டுச் செல்லும் என்னை இன்றும்
தொடர்ந்து வரும் விந்தையென்ன!
 
அன்னையே! எம் தெய்வம் நீ!
அன்னையே! எம் உயிர் நீ!
அன்னையே!
இருக்கும் வரை எம்
இருப்பின் வழிகாட்டி நீ.

Sunday, March 24, 2024

காலத்தால் அழியாத கானம்: 'காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது.'


எனக்குப் பிடித்த கவிஞர் உடுமலை நாராயண கவியின் பாடல்களிலொன்று. தேவரின் 'விவசாயி' படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு இசையமைத்திருப்பவர் 'திரையிசைத் திலகம்' கே.வி.மகாதேவன். நடிப்பு - எம்ஜிஆர் & கே.ஆர்.விஜயா. பாடியவர்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலா.
 
காதலர்கள் இருவரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் உரையாடல் இனிக்கின்றது. 'காதில் இனிக்கிறது'. அதனால்தான் கவிதையை இனிக்கும் செவிநுகர் கனிகள் என்றார்கள்.
 

மனத்தில் நிற்கும் மதுரை வீரன்!


1956 தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வெளியான தமிழ்த்திரைப்படம் 'மதுரை வீரன்'. 36 திரையரங்குகளில் 100 நாட்களையும், மதுரை சிந்தாமணியில் 200 நாட்களையும் கடந்து ஓடிப் பெருவெற்றியடைந்த திரைப்படம். எம்ஜிஆரைத் தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக்கிய திரைப்படம் மதுரை வீரன் என்பர் திரையுலக ஆய்வாளர்கள்.   அதுவரை வசூலில் சந்திரலேகா புரிந்திருந்த சாதனையை  மதுரை வீரன் முறியடித்ததாக அறியப்படுகிறது. இத்திரைப்படத்தில் எம்ஜிஆருடன் பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் எனப் பலர் , அந்நாளைய முன்னணி நடிகர்கள், நடித்திருக்கின்றார்கள்.

Friday, March 22, 2024

தொடர் நாவல்: மனக்கண் (3) மூன்றாம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்

 

மூன்றாம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்

ஸ்ரீதரின் திட்டப்படி அன்று மாலை தான் அவன் பத்மா வீட்டுக்குப் போக வேண்டும். அநேகமாக நாலரை மணிக்குப் பிறகு போனால் போதுமானது என்று அவன் முடிவு செய்திருந்தான். எனினும், காலையிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பித்துவிட்டான். அவன் இது சம்பந்தமாகச் செய்த முதல் வேலை, கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட்டில் 48/17ம் இலக்க வீடு எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்ததாகும். உண்மையில் ஸ்ரீதருக்கு அன்று இருப்பே கொள்ளவில்லை. பத்மா வீட்டுக்கு முதன் முதலாகப் போகப் போகிறோம். அவளுக்கும் தனக்குமுள்ள தொடர்புகள் இதன் மூலம் மேலும் வலுவடையும் என்ற எண்ணம், அவனுக்குப் பத்மா வீட்டுக்குச் செல்வதில் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணியது.  இருந்த போதிலும், அவன் மனதில் ஒரு பயமும் தயக்கமும் ஏற்படவே செய்தன. பரமானந்தர் முன்னால் நான் எப்படி நடந்து கொள்வது, என்ன பேசுவது, அவரது முன்னிலையில் தன்னம்பிக்கையுடன் தன்னால் நடந்து கொள்ள முடியுமா? ஒரு வேளை அவர் முன்னால் திக்கித் தடுமாறிப் பரிகசிக்கத் தக்க முறையில்  நான் நடந்து கொள்வேனோ என்பது போன்ற இளமைக்குரிய இயல்பான அச்சங்கள் பலவும் அவனிடத்தே தோன்றின. ஆனால் நாடக தினத்தன்று பரமானந்தர் திரைக்குப் பின்னால் வந்து தன்னுடன் பேசிய தோரணையை நினைவு படுத்திக் கொண்டதும், இந்த அச்சங்களில் பாதி மறைந்தது. சற்றேறக் குறைய அறுபது வயது போல் தோன்றிய பரமானந்தர், உயரம் பருமனில் அவனது தந்தை சிவநேசரை ஓரளவு ஞாபகமூட்டினார். ஆனால் சிவநேசரோ நல்ல சிவப்பு. பரமானந்தரோ பத்மாவைப் போலில்லாமல் சிறிது கறுப்பாக இருந்தார். மேலும், சிவநேசர் எப்பொழுதும் தன்னுடைய அந்தஸ்தில் அக்கறை கொண்டவராக, காற்சட்டையும், “குளோஸ் கோட்டும்” தலைப்பாகையும் அணிந்திருப்பார். அத்துடன் செல்வத்தின் பூரிப்பும் பொலிவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வித கர்வமும் அவர் முகத்தில் என்றும் கதிர் வீசிக்கொண்டிருக்கும். பரமானந்தரோ சாதாரண வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்து, அதற்கு மேல் ஒரு “டசூர்” கோட்டும் அணிந்திருப்பார். சட்டையை கழுத்து வரை மூடி ஒரு பித்தளைப் பொத்தானை அணிவதும் அவரது வழக்கமாகும். அவரது முகத்தில் ஒருவித அடக்கமும் அமைதியும் குடிகொண்டிருந்தன.

Thursday, March 21, 2024

உமாசந்திரனின் 'முழுநிலா'


என் பால்யப் பருவத்தில் விகடனில் தொடராக வெளியான நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று உமாசந்திரனின் 'முழு நிலா'. அதில் வரும் உப்பிலி, நளினா பாத்திரங்களை நான் இன்னும் மறக்கவில்லை. அப்பாவுக்கும் மிகவும் பிடித்த நாவல் அது . கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியான நாவலை அக்காலகட்டத்தில் மிகவும் விரும்பி வாசித்தோம். 

Tuesday, March 19, 2024

பெண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் பெயரில் குளிர்காயும் ஆண் எழுத்தாளர் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம். - வ.ந.கிரிதரன் -


அறுபதுகளில் ,எழுபதுகளில் எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கியவர். இவரது சிறுகதைகள் கல்கியில் சிறப்புச் சிறுகதைகளாக வெளிவந்துள்ளன.  இவரது நாவலான 'பொன்மாலைப்பொழுது ' தினமணிக்கதிரில் அறுபதுகளின் இறுதியில் அல்லது எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியானது. எனக்கு மிகவும் பிடித்த நாவலாக அப்போது இருந்தது. அதில் வரும் நடுத்தர வயது சோமு இன்னும் நினைவில் நிற்கின்றார். இவரை பெண் எழுத்தாளராகவே  அப்போது எண்ணியிருந்தேன். காலப்போக்கில் அவரை மறந்து விட்டேன். அவரது பெயரில் இதயம் சஞ்சிகையில் பல பயணக்கட்டுரைகள் வெளியாகின. ஆனால் அவரை ஆணாகச் சென்னை நூலகத் தளக்குறிப்பு கூறுகிறது:

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...