இன்று, ஏப்ரில் 23, உலகப்புத்தக நாள். என்னைப்பொறுத்தவரையில் வாசிப்பு என்பது என் மூச்சு போன்றது. எனக்கு வாசிக்கத்தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளுமே புத்தகநாள்தான். எண்ணிப்பார்க்கின்றேன். வாசிப்பும், யோசிப்பும் அற்று ஒரு நாள் கூடக் கழிந்ததில்லை.
ஆனால் வாசிப்புக்காக ஒரு நாளை ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரும்பாலானவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாமல் , புரியாமல் வாழ்கின்றார்கள். அவர்களைப்போன்றவர்களுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த இது போன்ற நாளொன்று அவசியமானது.
மானுடர்கள் வாசிப்பின் அவசியத்தை உணரவேண்டும். வாசிப்பு எத்தகையாதகவுமிருக்கலாம், ஆனால் அது தேவையான ஒன்று. புனைவாகவிருக்கலாம், அபுனைவாகவிருக்கலாம், கவிதையாகவிருக்கலாம் , இவ்விதம் எத்துறை சார்ந்ததாகவுமிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.
வாசிப்பு சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது. வாசிப்பு இன்பத்தைத்தருகின்றது. வாசிப்பு இருப்புக்கோர் அர்த்தத்தைத் தருகின்றது.
எழுத்து ஒரு கலையாகவிருக்கலாம், தொழில்நுட்ப வழிகாட்டியாகவிருக்கலாம். ஆனால் அது முக்கியமானது.
புத்தகத்தின் வடிவம் எத்தகையதாகவுமிருக்கலாம். அது அச்சு வடிவிலிருக்கலாம். டிஜிட்டல் வடிவிலுமிருக்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சி அதன் வடிவத்தை மாற்றினாலும், புத்தகம் புத்தகம்தான்.
புத்தகங்களை எந்நாளும் வாசிப்போம். புத்துணர்வினை, இன்பத்தினை அடைவோம். படைப்பாற்றலைப் பெருக்குவோம். சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்குவோம். சிந்தனைத் தெளிவை அடைவோம்.
புத்தகங்கள் எம் வழிகாட்டிகள் மட்டுமல்ல, ஆசிரியர்கள் மட்டுமல்ல, எம் தோழர்களும் கூடத்தான்.
இந்நாளில் நான் இதுவரை வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களை எண்ணிப்பார்க்கின்றேன். அவற்றுக்கு நான் தலை வணங்குகின்றேன். இதுவரை கால என் இருப்பில் என்னுடன் கூடப் பயணித்ததற்காக, என் வாழ்வில் ஓர் அர்த்தம் தந்ததற்காக.
இத்தருணத்தில் இந்நூல்களை எழுதிய எழுத்தாளர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். அவர்கள் சமூக, பொருளாதார,அரசியல் சவால்களுக்கு மத்தியில் இயங்கியவர்கள். தம் சிந்தனைகளை மானுடர்களின் வளர்ச்சிக்காக, இன்பத்துக்காக எழுத்தில் வடித்து வைத்தவர்கள்.






மறுநாள்
நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க
வேண்டுமென்று சில திட்டங்கள் வைத்திருந்தான். நண்பகல் வரையில் 'ஒன் லை'னில்
வேலை தேடுவது. கல்வித் தகமைகளை இணையத்தில் அதிகரிக்க உதவும் பயிற்சிக்
காணொளிகளை, கட்டுரைகளை ஆராய்வது எனத் திட்டமிட்டிருந்தான். தகவற் தொழில்
நுட்பத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைக்கும், அதே சமயம் பலரால் ,
நிறுவனங்களால் பாவிக்கப்படும் லினக்ஸ் 'ஒபரேட்டிங் சிஸ்டம்' பற்றிய அறிவை
வளர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்திருந்தான். தகவல் தொழில்
நுட்பத்துறையைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் நுட்பம் பற்றிய அறிவும்,
அனுபவமும் இருந்தால் அவை போதுமானவை அத்துறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு
என்பது அவனது எண்ணம்.