Wednesday, July 3, 2024

கவிதை: மழை பொழியும் நள்ளிரவில் படுக்கையில் நான்! - வ.ந.கிரிதரன் -


வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
படுக்கையில் புரண்டபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடியும், சிந்தித்தபடியும்,
நானிருக்கின்றேன்.
வெளிச்சம் நாடி வந்தமர்ந்து
இரையாகும் பூச்சிகளைப்
பார்க்கும்போதெழும் பல்வகை
சிந்தனைகளில் மூழ்கிக்கிடக்கின்றேன். 

நோக்கலில் இரக்கம்!

பல்லிகள்தம் பார்வையில்
நான் பார்க்கவில்லை.

இதனை நான் உணர்ந்துதானிருக்கின்றேன்.
உண்டு முடித்த ஏப்பம் மிக
அவை மீண்டும் அடுத்த இரைக்காய்த்
தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்கின்றன.
அவதானித்துக்கொண்டுதானிருக்கின்றேன்.

பல்லிகளை அவதானித்தல் ஒருகாலத்தில்
ஆம்! படுக்கையில் படுத்திருந்தபடிதான்,
பல்லிகளை அவதானித்தல் ஒரு காலத்தில்
என் பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது.
நன்கு கவனிக்கவும் பொழுதுபோக்கு என்னும்
சொற்பதத்தை.

இன்று என் அவதானிப்பு
பொழுதுபோக்குக்கு உரியதல்ல.
இருப்புக்கான தப்பிப்பிழைத்தல் பற்றியது.
இருப்பென்னும் படைப்புத்திறனில்
பொதிந்துள்ள தவறு பற்றியது.
இவ்விதமான தருணங்களில்
இருப்பில் ஏன் துயரங்கள் கவிந்துள்ளன
என்பது புரிவது போல் தெரிந்தாலும்
உண்மையில் புரிவதில்லை.

இடையில் கோடிழுக்கும் மின்னலை
சன்னலூடு நோக்குகின்றேன்.
இடியெனத் தொடரும் பேரோசை
கேட்டு நான் படுத்திருக்கின்றேன்.
மாகவிஞர் பலரைப் பாதித்த இயற்கை நிகழ்வு!
அவர்கள்தம் வரிகளில் இளகியிருந்திருக்கின்றேன்.
அவற்றையும் கூடவே எண்ணிக்கொள்கின்றேன்.
வயற்புறத்து மண்டூகங்களின் வாய்ப்பாட்டு
தொடங்கி விட்டது.
விடிய விடிய நடக்கும் இசைக்கச்சேரி.
இந்த மழை பொழியும் நள்ளிரவில்
நான்
துஞ்சாதிருக்கின்றேன்.
நெஞ்சார மழை பற்றிய
நினைவுகளில் மூழ்கிக்கிடக்கின்றேன்.
நள்மழை இன்று
நீண்டநேரம் பெய்யப்போகுதென்ற
உணர்வு.

நெடுமழை!
கடுமழை!
அடைமழை!

மண்டூகங்களே! நீவிர் உம்
மழைக்கச்சேரியை நிறுத்திவிடாதீர்.
இரசிகன் நானிருக்கின்றேன்
நள்மழை பற்றிய நும் கச்சேரியை
நெஞ்சில் வைத்து இரசிப்பதற்கு.
ஆம்! நானிருக்கின்றேன்.
விடிய விடிய இரசிப்பதற்கு
விடியும்வரை நானிருப்பேன்
மண்டூகங்களே!

வெளியே மழை பொழிந்து கொண்டிருக்கும்
இந்த நள்ளிரவில்
நான் படுக்கையில் புரண்டபடியும்,
சிந்தித்தபடியும்,
சுவர்ப் பல்லிகளின் அசைவுகளைப்
பார்த்தபடி நானிருக்கின்றேன்.

girinav@gmail.com

நன்றி: வ.ந.கிரிதரன் பக்கம் - https://vngiritharan230.blogspot.com/2024/07/blog-post_3.html#more


girinav@gmail.com

Tuesday, July 2, 2024

வ.ஐ.ச. ஜெயபாலனின் 'கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும்'


சிறந்த கவிஞர்களிலொருவராக அறியப்படும் வ.ஐ.ச. ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் 'ராசா' என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கினார். இவ்விதமே அவர் என் நினைவினிலிருக்கின்றார்.

'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான 'யாழ்ப்பாண வைபவமாலை'யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன. அதன் பின்னர் கொழும்பில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஏதோவொரு பாடத்திட்டத்தில் (அரசியல் சம்பந்தமானதாகவிருக்கலாம்) சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார்.

Friday, June 28, 2024

கவிதை; ஒண்டாரியோ அறிவியல் மையம்: கட்டடக்காட்டுக் குளிர் தென்றல்! - வ.ந.கிரிதரன் -


- அண்மையில் ஒண்டாரியோ உள்கட்டுமான அமைச்சர்  Kinga Surma திடீரென  ஒண்டாரியோ சயன்ஸ் சென்டரை, எவ்வித முன்னறிவித்தலுமின்றி, கூரைக் கட்டுமானத்ன் நிலை காரணமாக மூடினார். அதன் தாக்கம் இக்கவிதை. -


நீ வெறும் நில அடையாளம் மட்டுமல்ல.
நீ வெறும் கட்டடக்கலை அற்புதம் மட்டுமல்ல.
நீ
நகரத்து மக்களின்,
நாட்டு மக்களின்
வாழ்வுடன் பின்னிப் பிணைந்த
ஓர் அனுபவம்.
உணர்வுச்சித்திரம்.

நீ எங்களுக்கு ஆசானாக இருந்தாய்.
நீ எங்களுக்கு நண்பராக இருந்தாய்.
நீ எங்களுக்கு வித்தை காட்டும் மந்திரவாதியாகவிருந்தாய்.
நீ எங்களுக்கு இன்பத்தைத்தரும் கலைஞராக இருந்தாய்.

எனக்குப் பிடித்த கவிஞர் எம்.ஏ.நுஃமானின் 'நிலம் என்னும் நல்லாள்'



பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சிறந்த திறனாய்வாளர் மட்டுமல்லர். சிறந்த கவிஞரும் கூட. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், கவிதைத்துறையில் இவரது கவிதைகள் மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன.  இவரது கவிதைகள் பல எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. நடை. இனிய, நெஞ்சை அள்ளிச்செல்லும் நடை. சிலு சிலுவென்று வீசிச்செல்லும் தென்றலை அனுபவிப்பதுபோலிருக்கும் இவரது மொழியை வாசிக்கையில்.  ]

2. மரபுக் கவிதையின் அம்சங்கள், குறிப்பாக மோனை வெகு அழகாக இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும். வலிந்து திணிக்காத வகையில் , தேவைக்குரியதாக அவை பாவிக்கப்பட்டிருப்பதால் வாசிக்கையில் திகட்டுவதில்லை. இன்பமே பொங்கி வழியும்.

என்னைக் கவர்ந்த அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'


ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று.  மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது. இதனை கவிதையாக வெளிவந்த அறிவியற் புனைவாகவும் கருதலாம்.

அ.ந.க இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் தடம் பதித்தவர். குறைவாக எழுதியிருந்தாலும் அவரது கவிதைகள் இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள். எழுத்தாளர் இ.முருகையன் அ.ந.க.வின் இக்கவிதை பற்றிக்குறிப்பிடுகையில் "அ.ந.கந்தசாமியின் எதிர்காலச்சித்தன் பாடலைவிடக் கருத்தும் சிந்தனையும் பொதிந்த கவிதைகள் தமிழகத்தில் உள்ளனவா? இருந்தால் எடுத்துக் காட்டட்டும்" என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகின்றது.

அ.ந.க மார்க்சியத்தத்துவங்களின் அடிப்படையில் இயங்கிய சமூக,அரசியற் செயற்பாட்டாளரும் கூட. அதே சமயம் அவரது கவிதைகளில் இது போன்ற சிந்தனையாற்றலையும், தேடல்களையும் உள்ளடக்கிய கருத்துகளையும் காணலாம். இலங்கைத்தமிழ்க் கவிதைகள் மட்டுமல்ல உலகத்தமிழ்க் கவிதைகளை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்பிலும் நிச்சயம் இடம் பெற வேண்டிய கவிதை இது.  

Thursday, June 27, 2024

குதிக்க வைக்கும் வான் கேலன் இசைக்குழுவின் 'குதி' (Jump)!


வான் கேலன் இசைக்குழுவைப் பற்றி நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவர்களது புகழ்பெற்ற 'Jump' பாடல்தான். குழுவின் பிரதான பாடகர், கிட்டார் கலைஞர் இவர்களுடன் ஏனைய இசைக் கலைஞர்களும் சிறப்பாக இணைந்து அப்பாடலை உருவாக்கியிருப்பார்கள். 
 
எண்பதுகளில் கனடா வந்த சமயம் ஆரம்பத்தில் சிறிது காலம் என் மச்சான் குட்டியின் அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தேன். அவனுடன் வேறு நண்பர்களும் தங்கியிருந்தார்கள். அவர்க்ளில் ஒருவன் அசோக். இவன தாய், தந்தையர் இருவரும் யாழ் வைத்தியசாலையில் குழந்தை நல வைத்தியர்களாகப் பணியாற்றியவர்கள். அவர்கள் Toyota காரொன்றில் திரிவதைக் கண்டிருக்கின்றேன். அறிந்திருக்கின்றேன். ஆனால் அசோக்கை நான் சந்தித்தது இங்குதான். ஆரம்பத்தில் பல்வேறு தொழில்களையும் செய்து தனது துறையான கணக்கியல் துறையில் உரிய சான்றிதழ்கள் பெற்று கனடிய அரச நிறுவனமொன்றில் பணியாற்றியவன். 

Tuesday, June 25, 2024

'கிட்டார்க் கடவுள்' எரிக் கிளாப்டனின் ' 'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை')


எனது இசை பற்றிய பதிவுக்கு எதிர்வினையாற்றிய நண்பரும் , எழுத்தாளருமான ஜோர்ஜ்.இ.குருஷேவ் பிரபல 'கிட்டார்' கலைஞரும், பாடகருமான எரிக் கிளாப்டனின் 'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை') என்னும் பாடலுக்கான 'யு டியூப்' இணைப்பினைச் சுட்டிக்காட்டினார். டியூன், ரிதம், பீட் பற்றிய புரிதலுக்காக அவ்விணைப்பினைச் சுட்டிக் காட்டினார். அதற்காக அவருக்கு நன்றி. 
 
'I shot the sheriff, but I did not shoot the deputy' ( நான் காவல் அதிகாரியைச் சுட்டேன். ஆனால் துணைக்காவல் அதிகாரியைச் சுடவில்லை') பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் ரேகே பாடகர் பாப் மார்லி. 

புத்தாக்கம் செய்வோம்! பாதிப்புகளைக் குறைப்போம்! இணைந்து வாழ்வோம்!

  காலத்துக்குக் காலம் புதுப் புதுத்  தொழில் நுட்பங்கள் அறிமுகமாகும் தருணங்களில் சமூக, ஊடகங்களில் புதிய சூழலியற் போராளிகள் உருவாகிவிடுகின்றனர...