Friday, June 28, 2024

எனக்குப் பிடித்த கவிஞர் எம்.ஏ.நுஃமானின் 'நிலம் என்னும் நல்லாள்'



பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சிறந்த திறனாய்வாளர் மட்டுமல்லர். சிறந்த கவிஞரும் கூட. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், கவிதைத்துறையில் இவரது கவிதைகள் மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன.  இவரது கவிதைகள் பல எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. நடை. இனிய, நெஞ்சை அள்ளிச்செல்லும் நடை. சிலு சிலுவென்று வீசிச்செல்லும் தென்றலை அனுபவிப்பதுபோலிருக்கும் இவரது மொழியை வாசிக்கையில்.  ]

2. மரபுக் கவிதையின் அம்சங்கள், குறிப்பாக மோனை வெகு அழகாக இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும். வலிந்து திணிக்காத வகையில் , தேவைக்குரியதாக அவை பாவிக்கப்பட்டிருப்பதால் வாசிக்கையில் திகட்டுவதில்லை. இன்பமே பொங்கி வழியும்.

 

3. சொந்த அனுபவங்களின் அடிப்படையில் விரியும் வரிகளைப் படிக்கையில் நாமும் அவ்வனுபவங்களை அடைவோம். பொதுவாக நாம் அனைவரும் அவ்வப்போது அடையும் அனுபவங்களை அவற்றில் இனங்கண்டு மேலும் மகிழ்ச்சியடையோம். மீண்டுமொரு  தடவை அவ்வனுபவங்களில் எம்மை நனவிடை தோய வைத்து விடும் தன்மை மிக்கவை இவரது கவிதைகள்.

4. ,மானுட அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவை இவரது கவிதைகள்.

5. நான் இயற்கைப் பிரியன். இந் 'நிலம் என்னும் நல்லாள்' கவிதையில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வர்ணனை என்னை இயற்கை வளம் கொழிக்கும் வன்னி மண்ணில் வாழ்ந்த என் பால்ய  பருவத்துக்கே கொண்டு சென்று விட்டன.

இக்கவிதை சிறுவன் ஒருவனின் தன் தந்தையுடன் கழித்த பால்ய பருவத்து நினைவுகளை அசை போடுகிறது. குடும்பப் பழம் பெருமையைப் பேசுகிறது. மண் வாசனை தவழும் மொழியில் அனுபவங்கள் விபரிக்கப்படுகின்றன. வயற்காரர் இஸ்மாயில் காக்கா வின் பொருளியற் சூழல், அவரது குமர்ப்பெண்கள், அவர் அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதற்காக எதிர்கொள்ளும் சவால்கள், அவரது உழைப்பு எல்லாம் சிறுவனின் பார்வையில் கவிதையில் விபரிக்கப்படுகின்றன. அக்காலச் சமூகத்தை வெளிப்படுத்தும் வரிகள் அவை.

இந்நெடுங்க கவிதையை வாசிக்கும் எவரும் ஒரு போதுமே மறந்து விடமாட்டார்கள்.  அனுபவித்து, இன்பம் மிகுந்து வாசிக்கும் தன்மை மிக்க வரிகள் என்பதால் வாசிப்பவர்கள்தம் உள்ளங்களில் கவிதை நிலைத்து நின்று விடுகின்றது.

இந்நெடுங்கவிதை எனக்குப்பிடித்ததற்கு முக்கிய காரணங்கள்  இக்கவிதையை வாசிக்கையில் தன் தந்தையுடனான தன் பால்ய பருவத்து அனுபவங்களை விபரிக்கும் சிறுவனாக நானும் மாறி  விடுகின்றேன்.  வன்னி மண்ணின் இயற்கை வளத்தில் கழிந்த நாட்களை எண்ண வைத்து விடுகின்றன கவிதையின் மண் வாசனை மிக்க வரிகள். எளிய , பெரும்பாலும் ஈரசை அல்லது மூவசைச் சீர்களை உள்ளடக்கிய வரிகள், அவ்வப்போது வாசிப்பவர் உள்ளங்களை வருடிச் செல்லும் மோனைகள், எதுகைகள் கவிதையை மேலும் பிடிக்க வைத்து விடுகின்றன.


கவிதையில் வரும் என்னை என் பால்ய  பருவத்துக்கு இழுத்துச் சென்ற மண் வாசனை மிக்க வரிகள் சில வருமாறு:


1.

 விளக்குவைத்துக்
குந்தி இருந்து படிக்கத் தலைகுனிந்தால்
அந்துப் பூச் செல்லாம்
அநேகம் படை எடுத்து
வந்துவந்து மொய்க்கும்
வரியில் முகத்திலெல்லாம்.

தொல்லை தராது
சுவரில் இருந்து வரும்
பல்லி, அவற்றைப் பசியாறிச் செல்வதுண்டு!
அட்டூழியம் செய்யும்
எலியை அழிப்பதற்குப்
பட்டடையில் எங்களது
பூனை படுத் திருக்கும்!


2.

பள்ளவெளி தூரப் பயணம் தான்;
நாம் அங்கே
போகும் பொழுதே பொழுதேறிப் போயிருக்கும்
காலை வெயிலின் கதிர்கள்
மரம் செடிகள்
மேலே விழுந்து, மினுங்கி
வளைந்து வரும்
வாய்க்காலில் கொட்டி
வழி எங்கும் புன்னகைக்கும்.

வாய்க்கால் அருகே
வளர்ந்த மருதையெல்லாம்
காய்த்துக் கிடக்கும்
கிளிகள் கலகலகலப்பாய்க்
கத்திப் பறக்கும்
கிளைகள் சலசலக்கப்
பொத் தென்று வீழ்ந்து ஓடிப்
போகும் குரங்குகள்
சற்றெம்மை நோக்கிப் பின் தம்பாட்டில் ஓடிவிடும்.

புல்நுனிகள் எங்கும்
பனியின் பொழு பொழுப்புத்
தள்ளித் தெரியும்
சரிவில் எருமைசில
நின்று, தலையை நிமிர்த்தி எமைப்பார்க்கும்.

எட்டி அடிவைத்து நடக்கும் இடத்திருந்து
வெட்டுக் கிளிகள் சில
'விர்' என்று பாய்ந்து செல்லும்
கஞ்சான் தகரைகளில்
குந்திக் களித்திருக்கும்
பஞ்சான் எழுந்து பறந்து
திரும்ப வரும்.

அப்போது நான் சிறுவன்.
அந்த வயற் பாதை
இப்போதும் நன்றாய்
நினைவில் இருக்கிறது.

எங்கள் வயல் அருகில் எல்லாம்
மருதமரம்
செங்காய்ப் பருவத்தில்
தின்னவரும் கிளிகள் அத்தனையும் உண்டுதான்;
ஆனாலும் அங்கெல்லாம்
தொட்டாச் சுருங்கி
தொடர்ந்து வளர்ந்திருக்கும்
சட்டென்று காலின்
சதையைக் கிழித்துவிடும்.


இக்கவிதை நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' கவிதைத்தொகுப்பில் உள்ள கவிதைகளில்  ஒன்று.  தொகுப்பை வாசிக்க -  'https://noolaham.net/project/01/82/82.pdf


எம்.ஏ.நுஃமானின் 'நிலம் என்னும் நல்லாள்'

அப்போது நான் சிறுவன்
அப்பா வயலுக்குள்
எப்போதும் தன்னோடு
எனைக்கூட்டிச் செல்வதுண்டு.

பள்ளவெளிக் குள்ளே
பதினாலு ஏக்கர் எமக் குள்ளது.
மேலும் ஒரு பத்தேக்கர்ப் பூமியை
ஒத்திக்குச் செய்கின்றோம்.
மும்மாரி, அல்லிமுல்லை,
மாட்டுப் பழைக்குள்ளும்
எம்மாத்திரம் காணி
எங்களுக்குச் சொந்தம் என
ஊரே புகழ் பாடும்.
உண்மையும் தான்; நாங்கள் எல்லாம்
பாரம் பரியப் பணக்காரப் போடிகள்தான்.

சூடடித்த நெல்லைச் சுமந்து வருகின்ற
மாடுகளைக் கண்டால்
வருத்தப் படுவார்கள்.
எப்போதும்
எங்கள் வளவுக்குள் இடம் இன்றி
முப்பதுக்கு மேல் வண்டி
மூட்டை சுமந்து வரும்.

மண்டபத்துக் குள்ளேயும்
வாசல் விறாந்தையிலும்
கொண்டுவந்த நெல்லையெல்லாம்
கூரை வரை உயர்ந்த
பட்டடைகள் கட்டி, அவற்றுள்
பவித்திரமாய்க்
கொட்டிவைப்போம்.
பட்டடைகள் கொள்ளாத நெல்லையெல்லாம்
மூட்டைகளாய்க் கட்டி
அறைகள் முழுவதிலும்
மோட்டுயரத் துக்கே அடுக்கி முடித்து வைப்போம்.

வீட்டுக்குள் நெல்வாடை வீசும்
எனக் கென்றால்
தும்மல் பறக்கும் தொடர்ந்து.

விளக்குவைத்துக்
குந்தி இருந்து படிக்கத் தலைகுனிந்தால்
அந்துப் பூச் செல்லாம்
அநேகம் படை எடுத்து
வந்துவந்து மொய்க்கும்
வரியில் முகத்திலெல்லாம்.

தொல்லை தராது
சுவரில் இருந்து வரும்
பல்லி, அவற்றைப் பசியாறிச் செல்வதுண்டு!
அட்டூழியம் செய்யும்
எலியை அழிப்பதற்குப்
பட்டடையில் எங்களது
பூனை படுத் திருக்கும்!

2

அப்போது நான் சிறுவன்
ஆனாலும் எங்களது
அப்பா அழைப்பார்
'அட தம்பி நாளைக்கு
வட்டைக்குப் போகலாம்
நீயும் வா' என்று; எனக்குள்
மட்டுப் படாத மகிழ்ச்சி தலைதூக்கும்.

ஆயினும்
காலை அலர்ந்து வருவதன் முன்
தாய் வந்து நின்றபடி
'தம்பி எழும்பு' என்று
என்னை அரட்டி எழுப்ப முனைகையிலே
கோபம் தான் உண்டாகும்.

கொஞ்சம் பொறுத் தெழுந்து
போவதற் காகப் புறப்படுவேன்...

எங்களப்பா
நல்ல உயரம், நரைத்த சிறுதாடி,
வெள்ளை உடம்பு மினுங்கும்.
மிதியடிதான்
காலில் அணிவார்; கழுத்தை வளைத்து ஒரு
சாலுவை தொங்கும்
சரியாய் அலங்கரித்து
தொப்பி அணிந்து
சுருட்டொன்றை வாயில் வைத்து
அப்பா நடப்பார்
அவர்பின்னால் நான் நடப்பேன்.

அப்பாவின் பின்னால்
அவர்தோளில் தொங்குகிற
அந்தக் குடையின் அசைவில் லயித்தபடி
நான் நடந்து செல்வேன்.
பின் நாங்கள் மெயின் வீதி வந்து
சிறி திருந்து
வஸ் ஏறிப் போய் விடுவோம்.

3

பள்ளவெளி தூரப் பயணம் தான்;
நாம் அங்கே
போகும் பொழுதே பொழுதேறிப் போயிருக்கும்
காலை வெயிலின் கதிர்கள்
மரம் செடிகள்
மேலே விழுந்து, மினுங்கி
வளைந்து வரும்
வாய்க்காலில் கொட்டி
வழி எங்கும் புன்னகைக்கும்.

வாய்க்கால் அருகே
வளர்ந்த மருதையெல்லாம்
காய்த்துக் கிடக்கும்
கிளிகள் கலகலகலப்பாய்க்
கத்திப் பறக்கும்
கிளைகள் சலசலக்கப்
பொத் தென்று வீழ்ந்து ஓடிப்
போகும் குரங்குகள்
சற்றெம்மை நோக்கிப் பின் தம்பாட்டில் ஓடிவிடும்.

புல்நுனிகள் எங்கும்
பனியின் பொழு பொழுப்புத்
தள்ளித் தெரியும்
சரிவில் எருமைசில
நின்று, தலையை நிமிர்த்தி எமைப்பார்க்கும்.

எட்டி அடிவைத்து நடக்கும் இடத்திருந்து
வெட்டுக் கிளிகள் சில
'விர்' என்று பாய்ந்து செல்லும்
கஞ்சான் தகரைகளில்
குந்திக் களித்திருக்கும்
பஞ்சான் எழுந்து பறந்து
திரும்ப வரும்.

அப்போது நான் சிறுவன்.
அந்த வயற் பாதை
இப்போதும் நன்றாய்
நினைவில் இருக்கிறது.

எங்கள் வயல் அருகில் எல்லாம்
மருதமரம்
செங்காய்ப் பருவத்தில்
தின்னவரும் கிளிகள் அத்தனையும் உண்டுதான்;
ஆனாலும் அங்கெல்லாம்
தொட்டாச் சுருங்கி
தொடர்ந்து வளர்ந்திருக்கும்
சட்டென்று காலின்
சதையைக் கிழித்துவிடும்.

வாப்பா நடக்கும் வரம்புகளில்
தொட்டாவைக்
கண்டாலே போதும்
வயற்காரக் காக்காவைக்
கூப்பிட்டுக் காட்டி, ஒரு
கொம்பல் தொடங்கிடுவார்.

4

எங்கள் வயற்காரர்
இஸ்மாயில் காக்கா, ஓர்
தங்க மனிசன்; தலையைக் குனிந்தபடி
மண்வெட்டி கொண்டு
வரம்பை செதுக்கி வைப்பார்
மண்டை உருகும்
வயல் வெளியில் மட்டுமல்ல
வீட்டிலும் கூடஅவர் வேலைபல செய்வதுண்டு

காட்டில் தறித்த பெரும் கட்டைகளை
எங்களுக்காய்க்
கொத்தி அடுக்கிக் கொடுப்பார்.
பழுதான
வேலியினைக் கட்டுவதும்
வீட்டுக் குசினியின் தென்
னோலைக் கிடுகை ஒருக்கால் புதுக்குவதும்
எல்லாம் அவரேதான்.

எங்கள் குடும்பத்தார்
செல்லாத்தா என்று
சிறப்பாய் அழைக்கும் அவர்,
பெண்டாட்டி கூடப்
பெரிதும் உதவி செய்வாள்.

வெண்கலங்கள் எல்லாம்
மினுக்கிப் புதுக்கிடுவாள்
தின்பண்டம் எல்லாம்
தெவிட்டா ருசியோடு
கொண்டாட்ட காலத்தில்
சுட்டுக் கொடுத்திடுவாள்.

உண்டு முடிந்ததன்பின்
மிஞ்சி உளவற்றைக்
கொண்டு செல்வாள் தன்னுடைய
வீட்டுக் குழந்தைகட்கு.

5

எங்கள் வயற்காரர் மேனியிலே
எப்போதும்
பொங்கி வரும் வேர்வை
பொசிந்தபடி இருக்கும்.
உண்டு கொழுத்த உடலல்ல;
வேலைசெய்து
கட்டான தேகம்
வயலின் கரும் கரிபோல்
சுட்டுக் கறுத்திருக்கும் சூரியனின் வெம்மையினால்.

மொட்டைத் தலையில்
முளைத்த சில நரைகள்
மூடுண்டிருக்கும் அவர்
முண்டாசுக் கட்டினுள்ளே
ஓடித் திரிவார் வயலில் ஒருஇடமும்
நில்லாம,
வேலை நிகழ்ந்த படிஇருக்கும்.

எல்லோரும் போல இவரும்
இடுப்பிலே ஒரு
பச்சைவடச் சிறுவால் போட்டு
வழுவாமல்
அச்சிறுவால் மேலால்
அரைஞாணை விட்டிருப்பார்.
கூலிக் குழைக்கின்ற
ஆட்களினைக் கூட்டி வந்து
வேலைசெய் விப்பார்.

அவர்கள் வியர்வையினைக்
கையால் வழித்தெறிந்து விட்டுக்
கடும் வெயிலில்
செய்வார்கள் வேலை தினமும்.

6

அந்நாட்களிலே
மாடுகளைக் கொண்டே வயலை உழுவார்கள்.
பாடிக் குரல் கொடுத்துக் கொண்டு
பதமாக
மண்ணைப் புரட்டி
வயலைத் தயார் செய்வார்.
கண்ணைப் பறிக்கும் படியாய்க்
கசிவுள்ள
மண்ணாக மாற்றி வளப்படுத்தி வைப்பார்கள்.
பின்னர்,
பெரியகைப் பெட்டிகளின் உள்ளே
கொழுக்கிப் புழுப்போலக்
கூர்விழுந் துள்ள
முளையை நிறைத்து
முழங்கால் புதைசேற்றில்
நின்றபடி
கையால் நிலமெங்கும் வீசிடுவார்.

கொன்று விடும்போல் எரிக்கும்
கொடு வெயிலைத்
தாழாமல் அங்கே
சடைத்த மருதமர
நீழலிலே
என்தகப்பன் நிற்பார் குடைபிடித்து

சாலுவையால் வீசிடுவார்
சற்றைக் கொருதரம்
என்னை வெயிலில் இறங்க விடமாட்டார்.
உண்மையும் தான்
நாங்கள் உழைக்கப் பிறந்தவரோ!

7

விதைப்பு முடிந்துவிட்டால்
வெட்டும் வரைக்கும்
வயற்காரர் தான்அவ் வயலின்
முழுப் பொறுப்பும்.
எங்கள் வயலின் நடுவில்
இளைப்பாற,
தங்கி இருக்க,
சமைக்க,
படுக்க, என
வாடிஒன்று கட்டி உள்ளோம்
மண்ணால் சுவர்வைத்து.
வாடி இணக்கியதும்
வயற்காரக் காக்காதான்.

கூரையிலே நாடங் கொடிகள்
படர்ந் திருக்கும்.
பாரமாய்க் காய்கள் படுத்திருக்கும்.
வாடியினைச் சுற்றிவர உள்ள
சொற்ப நிலத்தில்
மரக்கறிகள் -
வெண்டி, வழுதுணங்காய் காய்க்கும்.
குரக்கனும் சோழனும்
கூட வளர்த்திருப்பார்.

வீட்டுக்கு நாங்கள்
திரும்ப விரும்புகையில்
சாக்கிலே கட்டித் தருவார்.
அவைகளினைத்
தூக்க முடியாமல் தூக்கிச் சுமப்பேன் நான்.

8

வாடியிலே காவல் அவரும் மகனும்தான்.
பாடிக் கொண்டே இருப்பான்
அந்தப் பயல். அவனும்
என்னைப்போல் சின்னவன் தான்
என்றாலும் என்னைவிடக்
கெட்டித் தனம் உடையான்
கேலிக் கதைபேசிச்
சட்டி கழுவிச் சமைப்பான் ருசியாக.

ஆற்றுக்குச் செல்வேன் அவனோடு,
நீர்குறைந்த
சேற்றைக் கடந்து, சிறிதுபோய்
அங்குவலை வீசிப் பிடிப்பான்
துடிக்கின்ற மீன்களினை

ஆசைப்படுவேன் அவன்போல் பிடிப்பதற்கு
ஆனாலும் என்னால்
அதைச் செய்ய ஏலாது.
மீனின் துடிப்புகளைப் பார்த்து வியந்திருப்பேன்.

முள்ளிக்காய் ஆய்ந்து தருவான்
முழுவதையும்
அள்ளிவருவேன்; அவனோ தடிபோன்று
சுள்ளி உருவம்,
எனைப்போல் தொடராகப்
பள்ளிக்குச் சென்று படிக்க விடவில்லை.

9

காற்றில் அலையடிக்கும் கம்பளம் போல்
பச்சைவயல்
தோற்றம் கொடுக்கும்.
தொலைவில் படுவானின்
அந்திப் பொழுதின் அழகு
வயலெங்கும்
சிந்திக் கிடக்கும்.
சிறுவன் வரம்புகளில்
வக்கடைகள் கட்டி வருவான் தகப்பனுடன்.

கொக்கும் குருவிகளும்
குறியிடங்கள் நோக்கி அந்திச்
செக்கர்வான் ஊடே பறந்துசெல்லும்.
ராமுழுதும்
உட்கார்ந்த வாறு
வயலை உழக்குதற்குப்
பன்றி வரும் என்று
பார்த்திருப்பார் அவ்விருவர்.

ஒன்றிரண்டு மூலைவெடி
ஓசை எழுப்பிடுவார்.
மூடி இருக்கும் உடம்பு முழுவதையும்,
தேடிக் கடிக்கும் சிறிய நுளம்புகளுக்
காக அவர்கள்
புகையுள் அமர்ந்தபடி
தூங்கா திருப்பார்கள்.

நெற்காய் தொடங்கியதும்
ஆங்கு வருமே
குருவிகள் ஓர் ஆயிரம்!
ஆம்
பாட்டமாய் வந்து
கதிரிற் படுத் தெழுந்தால்
எல்லாம் பதர்தான்.

இவர்கள் விடிந் தெழுந்து
வெய்யோன் சரிந்து விழுந்து விடும் வரையும்
"டய்யா...! டய்யா....!!" என்றே
சத்தம் எழுப்பிடுவார்.

கஞ்சான் தகடுகளைக் கட்டி அசைப்பார்கள்.
நெஞ்சைப் பிடித்தபடி
நீண்ட குரல் கொடுப்பார்.
கல்லைத் தகரத்துள் கட்டி அடிப்பார்கள்.

10

எல்லாம் முடிந்தால்
இனி வெட்டும் காலம்தான்
சூடடித்த நெல்வேறாய்த்
தூற்றி எடுக்கும் வரை
பாடு படுவார்கள் அவர்கள்
பதர்வேறாய்
கூட்டி எடுத்தே அளந்து குவிப்பார்கள்.

எல்லாம் விளைந்திருந்தால்
எண்பதுக்கு மேல் அவணம்
கொள்ளும்.
பிறகு செலவுக் குறிப்பேட்டை
எங்கள் தகப்பன் எடுத்துக்
கணக்குகளைக்
கூட்டிக் கணிப்பார்.
மறந்த குறைகளையும்
போட்டுக் கணித்தால் செலவு புலப்படும்.

எல்லாச் செலவும் கழித்தால்
இறுதியில்
உள்ள வற்றில் நான்கில் ஒருபங்கைக்
கொண்டு செல்வர்
எங்கள் வயற்காரர்
இஸ்மாயில் காக்கா - ஓர்
பத்தவணம் தேறும் அவருடைய பங்கு;
அதில்
அத்தனை நாளும் அவர் எங்கள் தந்தையிடம்
பெற்ற கடனைக் கழித்துப், பின்
மிஞ்சியதை
விற்றால் அவருடைய வேலைபல முடியும்.

வீட்டுக்குக் கூரைகட்டி
வேலி திருத்திடுவார்.
மூத்த குமர்ப் பெண்கள் மூவருக்கும்
ஏதேனும்
சீத்தைப் பிடவை சிலதை எடுத்தளிப்பார்.

சின்னவனின் கையில்
சிலரூபாய்த் தாள் கொடுப்பார்.
இன்னும் கடன்கள் இருக்கும்
இறுத்து - மறு
கன்னை வரைக்கும்
கடன்வாங்கிக் காத்திருப்பார்.

11

வீட்டில் குமர்கள்
பெருமூச்சு விட்டபடி
உட்கார்ந் திருப்பதனை உன்னி
உருகுவதும்
எந்நாளும் உண்டு.

ஒருநாள் என்தந்தையிடம்
'என்ன தம்பிசெய்யிறது
இப்பிடியே நாளெல்லாம்
போகுதே. இந்தப் பொடிச்சிகளுக்
கேதேனும்
ஆகுதும் இல்லை' என
அழுதார் அவர்; அதற்குப்

'பாப்பமே காக்கா
படைச்சவன் ஆரையெனும்
சேக்காமலா விடுவான்'
என்றார் எனதப்பா.

அப்போது நான் சிறுவன்.
அந்த நினை வென்னுள்
இப்போதும் நன்றாய் இருக்கிறது.

பின் ஒருநாள்
மூத்த குமரை முடித்துக் கொடுத்தார்கள்
காத்தான் குடியில்
கலியாணம் செய்து - பின்
விட்ட ஒருவனுக்கு.

வேலைகளில் ஒன்று முடி
வுற்றதனால் போலும் - ஒருநாள் அவர்படுத்து
விட்டார்
ஆட்கள் சிலபேர் அழுதார்கள்;
இஸ்மாயில்
காக்கா இறந்து கனகாலம் ஆகிறது.

காக்காவின் மற்றக் குமருள்
கடைசி மகள்
இன்னும் சும்மாதான் இருக்கின்றாள்.
மற்றவளைப்
பின்னர் ஒருநாள்
பிழைப்பதற்கு வந்த ஒரு
அத்தர் வியாபாரி அடைந்தான்.

சிலகாலம்
ஒத்திருந்து விட்டு
பிறகெங்கோ ஓடிவிட்டான்.

அந்தக் குடும்பம்
அலைக்கழிந்து போயிற்று.

'காக்கா குடும்பம் க்ஸ்டப் படுகிறதே
ஏன்?' என்று கேட்பேன் நான்.
'எல்லாம் அவர்கள் விதி'
என்பார் தகப்பன்.
இருக்கும் என நினைப்பேன்
அப்போது நான் சிறுவன்.

12

ஆனால்
அவர் உழைப்பால்
எப்போதும் எங்கள் வளவுக்குள் இடமின்றி
முப்பதுக்குமேல் வண்டி
மூட்டை சுமந்து வரும்.

மண்டபத்துக் குள்ளேயும்
வாசல் விறாந்தையிலும்
கொண்டுவந்த நெல்லையெல்லாம்
கூரை வரை உயர்ந்த
பட்டடைகள் கட்டி
அவற்றுள் பவித்திரமாய்க்
கொட்டிவைப் போம்.

பட்டடைகள் கொள்ளாத நெல்லை எல்லாம்
மூட்டைகளாய்க் கட்டி
அறைகள் முழுவதிலும்
மோட்டுயரத் துக்கே
அடுக்கி முடித்து வைப்போம்.

வீட்டுக்குள் நெல்வாடை வீசும்
எனக் கென்றால்
தும்மல் பறக்கும் தொடர்ந்து.

விழித்தபடி
அட்டூழியம் செய்யும்
எலியை அழிப்பதற்குப்
பட்டடையில் எங்களது
பூனை படுத் திருக்கும்.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: குதிரைத் திருடர்களே! உங்களுக்கொரு செய்தி.

இசை & குரல் - AI Suno ஓவியம் - AI நானொரு குதிரை வளர்ப்பாளன். நான் வியாபாரி அல்லன். நாணயமான குதிரை வளர்ப்பாளன். நான். என்னிடம் நல்ல குதிர...

பிரபலமான பதிவுகள்