Monday, June 24, 2024

எனக்குப் பிடித்த கவிஞர் நீலாவணனின் 'விளக்கு'


ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமான ஒருவர் கிழக்கிலங்கை தந்த கவிஞர் நீலாவணன். அவரைப்பற்றி நல்லதொரு சுருக்கமான கட்டுரை 'கிழக்கின் கவித்துவ ஆளுமை நீலாவணன்'. எழுதியவர் மோகனதாஸ். அதற்கான இணைய இணைப்பினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அவரது கவிதைத்தொகுப்புகள் பலவற்றை 'நூலகம்' இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். இவரது 'விளக்கு' கவிதை எனக்கு பிடித்த கவிதைகளிலொன்று.  தினகரன் பத்திரிகையில்  31.5.69  அன்று வெளியான இக்கவிதை அவரது 'ஒத்திகை' கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ளது.  தொகுப்பு நூலகம் இணையத்தளத்திலுள்ளது. இணைப்பை இப்பதிவில் இறுதியில் தந்துள்ளேன். வாசிக்கவும்.

இருண்டு கிடக்கிறது வீடு. காடுகளூடு அலைந்து திரியும் கவிஞன் இருண்டிருக்கும் வீடு பற்றியும்  அதற்கு விளக்கேற்ற் வேண்டுமென்றும்  எண்ணித்திரும்புகின்றான்.  திரும்பியவன்  சாவி கொண்டு வீடு திறந்து உட்செல்கின்றான். உள்ளறையில் இருக்கும் தீப்பெட்டி எடுத்து விளகேற்றுகின்றான்.  'வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்' என்று தொடங்கும் கவிதை 'வீடிருண்டு கிடக்கவில்லை - விளக்கேற்றிவிட்டேன் வீதியிலே போவார்க்கும் ஒளிவிழுதல் கண்டேன்!' என்று முடிகின்றது.

இங்கு கவிஞர் விளக்கு என்று குறிப்பிடுவது எதனை? விளக்கேற்ற உதவும் எண்ணெய், தீப்பெட்டி , வீடு, உள்ளறை இவையெல்லாம் குறிப்பவை எவற்றை?  வீடு முழுவதும் கவிந்திருக்கும் இருள் எதனைக் குறிக்கின்றது? இவ்விதம் எண்ணி , இக்கவிதையைக் கட்டுடைத்து வாசிப்பதிலோர் அலாதியான இன்பமுண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் இருண்டிருக்கும் வீடொன்றுக்கு ஒளியேற்றுவதைக் குறித்தாலும், என் வாசிப்பில், அறியாமை இருளில் மூழ்கிக்கிடக்கும் மானுட  இருப்பின் இருள் அகற்ற அறிவென்னும் ஒளி  பாய்ச்சும் விளக்கு அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டக் கவிஞர் எண்ணினாரோ என்று எண்ணவைக்கின்றது.

அதே சமயம் இருண்டிருக்கும் வீடு என்னும் படிமம் , சூழ்ந்திருக்கும் இருள் பற்றிய பீதியினையும் எழுப்பும். கவிந்திருக்கும் இருளில் தனித்திருக்கும் வீடு நோக்கிச் செல்லும் கவிஞனின் வீடு நோக்கிய பயணம், விளக்கேற்ற அவன் செய்யும் செயல்கள், அதற்கு உதவும் சாதனங்கள் இவையெல்லாம் மனச்சித்திரங்களாகச் சிந்தையில் விரிகின்றன. 

எனக்குக் கவிதையில் வரும் வீடு, விளக்கு மற்றும் 'காலமெனும் கருங்கிழவன்' என்னும் உவமை ஆகியவற்றைப் பிடித்த படிமங்களாகக் கூறுவேன். நெஞ்சில் காலக்கிழவனின் தோற்றம் சித்திரமென விரிகின்றது. கவிஞர் நீலாவணனின் கவித்துவச் சிறப்பை வெளிப்படுத்தும் , நினைவில் நிலைத்து நிற்கும் தன்மை மிக்க உவமை. 

இக்கவிதையில் வரும் பின்வரும் வரியும் முக்கியமானது. 'இருட்டில் மெய்ப் பையின்பை துழாவுகிறேன்' என்னும் வரிதான் அது. பொதுவாகத் திறப்பைச் சட்டைப் பையில் தேடுவோம். மேலோட்டமாக இவ்வரியை வாசிப்பவர் கவிஞர் தன் சட்டைப் பையில் சாவி தேடி எடுத்ததாக எண்ணி விடுவர். ஆனா இங்கு குறிப்பிடுவது 'மெய்ப் பையின்பை' அவர் குறிப்பிடுவது உண்மையை, இன்பத்தை. அவர் குறிப்பிடும் பை வேறானது. அது 'மெய்ப்பை'. 'இன்பை'. இவ்விதம் விளங்கி வாசிக்கையில் கவிஞர் இக்கவிதையில் என்ன கூற வருகின்றார் என்பது பற்றி எண்ணமுடிகின்றது. 

ஈரிடங்களில் கவிஞர் தெரிந்தே இலக்கணம்  மீறி இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.  இலக்கணம் மீறுதலென்பது கவிஞர்களின் பிரத்தியேக உரிமைகளில் ஒன்று அல்லவா?

எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் நீலாவணனின் கவிதையான 'விளக்கு' இதோ:

விளக்கு - நீலாவணன்

வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
காடுகளின் ஊடே ஓர் காடாகிவீடும்
காட்சிதரும் மையிருட்டு! கள்வர்கள் - பேய் - பாம்பு!
ஓடோடித் திரும்புகிறேன். ஓர் துணையும் இல்லை!
உள்ளிருந்து பேசுவதும் யார்? உற்றுக்கேட்டேன்.....

வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!

காலமெனும் கருங்கிழவன் காத்திருந்தான். எண்ணெய்
கலங்களிலே ~~கலன்கலனாய் நிறைந்திருந்த துண்மை!
கோல எழில் விளக்குகளும் குறைவில்லை! குச்சி
குறையாத தீப்பெட்டி மூலையிலே தூங்கும்!
மூளவில்லை - விளக்கெரிய முடியவில்லை! உள்ளே
மூதேவி அரசுசெய்ய முயல்கின்றாள்! வல்லே.....

வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!

எண்ணெய் விளக் காய்விடுமா? எண்ணெயைவிட் டெரிக்கும்
ஏனந்தான் விளக்காமோ? எரிகின்ற திரியா?
மின்னி இரைந் தே புகைந்து எரியுந்தீக் குச்சி
விளக்காமோ? விளக்கென்னில் மேற்குறித்த யாவும்
ஒன்றுகுறை யாமலுள்ளே உள்ளனவே! ஏனும்
உள்ளுக்குள் ஒளியில்லை! வழிதெரியவில்லை!

வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!

இருட்டில் மெய்ப் பையின்பை துழாவுகிறேன்.  சாவி
எடுத்தில்லின் தலைவாசல் கதவுதிறக் கின்றேன்!
திருட்டொன்றும் போகவில்லை! உள்ளறையும் திறந்து.
தீப்பெட்டி எடுத்ததனைக் கிழித்து விளக்கேற்றித்
தெருப்பக்கச் சன்னல்களைத் திறந்துவைத்தேன்! தனியே -
திருடர், பிற பயமின்றித் தெம்பொடிருக் கின்றேன்!

வீடிருண்டு கிடக்கவில்லை - விளக்கேற்றிவிட்டேன்
வீதியிலே போவார்க்கும் ஒளிவிழுதல் கண்டேன்!


- தினகரன் 31.5.69 -


'ஒத்திகை' நீலாவணன் கவிதைகள்)  கவிதைத்தொகுப்புக்கான இணைய இணைப்பு -  http://noolaham.net/project/01/79/79.pdf

No comments:

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல். கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல் வாழும் வாழ்வுதனை வாழவிடு இய...

பிரபலமான பதிவுகள்